இயேசு தமது மரணத்தை குறித்து கூறும் இரண்டாம் முன்னரிவிப்பு
சீஷர்களின் துக்கம் மத் 17 : 22,23
அவர்கள் க-லேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள் (மத் 17:22 ,23).
இயேசுகிறிஸ்து தம்முடைய பாடுகளை ஏற்கெனவே முன்னறிவித்த பிரகாரம் இங்கும் முன்னறிவிக்கிறார் (மத் 16:21). தம்முடைய சீஷர்கள் இந்த சத்தியத்தைக் கேட்க விரும்பாத போதிலும், இயேசு அவர்களுக்கு இதைத் திரும்பவும் கூறுகிறார்.
இயேசுகிறிஸ்து மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரை கொலை செய்வார்கள். இயேசு தேவனுடைய குமாரனாக இருக்கிறபோதிலும் அவர் மனுஷகுமாரனாக அவதரித்திருக்கிறார். மனுஷர்கள் தங்களைப்போன்ற சக மனுஷர்களிடம் அன்பாகவும், கண்ணியமாகவும், கிருபையாகவும் நடந்து கொள்ளவேண்டும். இது இயல்பு. இதே இயல்பையே இயேசுகிறிஸ்து மனுஷர்களிடம் எதிர்பார்க்கிறார். ஆனால் அவர்களோ இயேசுவைத் துன்புறுத்தி கொலை செய்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் விலையேறப்பெற்றது. அவரை கொலை செய்யவேண்டும் என்னும் வெறியில் மனுஷர்கள் அலைந்து திரிகிறார்கள். அவரை கொலை செய்தால் மாத்திரமே அவர்களுடைய கொலை வெறி அடங்கும். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை. அவர் நம்முடைய பாவநிவாரணத்திற்கு பலியாக இருக்கிறார். நமது பாவநிவாரண பலியாகிய அவர் கொல்லப்படவேண்டும்.
இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் தமது மரணத்தைக் குறித்து முன்னறிவிக்கும்போது, தம்முடைய உயிர்த்தெழுதலைக்குறித்தும் கூறுகிறார். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுவார் என்னும் செய்தி அவருடைய சீஷர்களுக்கு ஆறுதலானது, உற்சாகம் தரக்கூடியது. அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார். மிகவும் குறுகிய காலமாகிய மூன்று நாட்களுக்கு மாத்திரமே சீஷர்கள் இயேசுகிறிஸ்துவை பிரிந்திருப்பார்கள். இது அவர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அவர் மறுபடியும் உயிர்த்தெழுவது ஒரு மகிமையுள்ள அனுபவம்.
இயேசுகிறிஸ்து தமது பாடுகளையும், மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் முன்னறிவிக்கிறார். அதை கேட்ட சீஷர்களோ மிகுந்த துக்கமடைகிறார்கள். சீஷர்கள் தங்களுடைய ஆண்டவர்மீது அந்த அளவிற்கு அன்பு கூருகிறார்கள். வேதவாக்கியத்தின் பிரகாரம் அவர் மரிக்கவேண்டும். அதை அறியாதவர்களாக சீஷர்கள் துக்கமடைகிறார்கள். தேவனுடைய தெய்வீக சித்தம் நிறைவேறும்போது அதை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். துக்கப்படக்கூடாது.