இயேசு தமது மரணத்தை குறித்து கூறும் முதல் முன்னரிவிப்பு

 

இயேசு தமது மரணத்தை குறித்து கூறும் முதல் முன்னரிவிப்பு


இயேசுவின் பாடுகள்


அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளிலே எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார் (மத் 16:21).


    இயேசுகிறிஸ்து தமது பாடுகளைக் குறித்து முன்னறிவிக்கிறார். ஏற்கெனவே தமது பாடுகளின் ஒரு பகுதியைக்குறித்து அவ்வப்போது இயேசு தமது சீஷர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் இப்போதோ அந்த பாடுகளை அவர்களுக்கு வெளிப்படையாக காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். அவற்றைப்பற்றி வெளிப்படையாக பேசுகிறார். இதுவரையிலும் அவர் தமது பாடுகளை மறைமுகமாகவே அவ்வப்போது கூறினார். 


    சீஷர்கள் இதுவரையிலும் விசுவாசத்தில் பலவீனமுள்ளவர்களாக இருந்தார்கள். ஆவிக்குரிய குழந்தைகளாக இருந்தார்கள். அந்த சமயத்தில் இயேசுகிறிஸ்து தமது பாடுகளைக்குறித்து அவர்களிடம் வெளிப்படையாக பேசினால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. சோர்ந்து போய்விடுவார்கள். ஆகையினால் அவர்கள் விசுவாசத்தில் ஓரளவு வளர்ந்த பின்பு தமது பாடுகளை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.


இயேசுகிறிஸ்து தம்முடைய சிந்தனையையும் சித்தத்தையும் தமது பிள்ளைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துவார். அவர்களால் எவ்வளவு தாங்கிக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு மாத்திரமே அவர்களுக்கு வெளிப்படுத்தி காண்பிப்பார். அவர்களால் எவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு மாத்திரமே தம்மைப்பற்றிய வெளிப்பாடுகளை அவர்களுக்கு தருவார்.


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் அவரைக்குறித்து பூரணமாக சாட்சி கொடுக்கிறார்கள். அவர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று அறிவிக்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு சத்தியம் தெரிந்தவுடன் கிறிஸ்து அவர்களுக்கு வேறொரு சத்தியத்தை விளக்குகிறார். அது முதல் இயேசுகிறிஸ்து தமது பாடுகளைக்குறித்து அவர்களிடம் சிறிது சிறிதாக வெளிப்படுத்தி காண்பிக்கிறார்.


இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று அவர்கள் விசுவாசிக்க வேண்டும். இந்த விசுவாசத்தில் அவர்கள் உறுதியாக தரித்திருக்க வேண்டும். இந்த விசுவாசம் வலுவாக இல்லையென்றால் அவர்களுடைய அடிப்படை விசுவாசமே ஆடிப்போய்விடும். எல்லா விசுவாசிகளுக்கும் எல்லா சத்தியத்தையும் எல்லா வேளைகளிலும் கூற முடியாது. அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப, விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களுக்கு சத்தியத்தை உபதேசம் பண்ணவேண்டும். 


இந்த சமயத்தில் இயேசுகிறிஸ்து தமது சீஷர்களிடம் தாம் அனுபவிக்கப்போகும் பல பாடுகளைக்குறித்து வெளிப்படுத்துகிறார். மிகவும் தெளிவாக எல்லாவற்றையும் அறிவிக்கிறார். தாம் பாடுகளை அனுபவிக்கப்போகும் ஸ்தலத்தைக்குறித்தும் மறைக்காமல் பேசுகிறார். அவர் எருசலேமுக்கு போகவேண்டும். அது பரிசுத்த நகரம். அந்த நகரத்தில்தான் இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கப் போகிறார். எருசலேம் நகரத்தில் தேவாலயம் இருக்கிறது. அங்கு ஆசாரியர்கள் எல்லாவிதமான பலிகளையும் செலுத்துவார்கள். அந்த ஊரில்தான் இயேசுகிறிஸ்து பிரதான பலியாக நமக்காக மரிக்கப்போகிறார். 


தம்மை பாடுகளுக்கு உட்படுத்தும் நபர்களைக் குறித்தும்  இயேசுகிறிஸ்து விவரிக்கிறார். மூப்பர், பிரதான ஆசாரியர், வேதபாரகர் ஆகியோர் இயேசுகிறிஸ்துவை பாடுகளுக்கு உட்படுத்துவார்கள். இயேசுகிறிஸ்துவைக்குறித்து இவர்கள் மிகுந்த ஆச்சரியமடைந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் தான் அவரை உபத்திரவப்படுத்துவதற்கு முன்வருகிறார்கள். 


தாம் எப்படிப்பட்ட பாடுகளை அனுபவிக்கப் போகிறார் என்பதையும்  கிறிஸ்து தெளிவுபடுத்துகிறார். இயேசு பல பாடுகள் படவேண்டும். கொலையுண்ணப்படவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சத்துருக்கள் அவரை பலபாடுகளுக்கு உட்படுத்தி கொலை செய்து விடுவார்கள். பல பாடுகளை அனுபவிக்கும்போது இயேசுகிறிஸ்து நீடிய பொறுமையோடிருப்பார். அவரை எவ்வளவுதான் துன்புறுத்தினாலும் யூத மார்க்கத் தலைவர்களுக்கு கொலைவெறி அடங்காது. அவரை கொலை செய்தால் மாத்திரமே அவர்களுக்கு திருப்தி உண்டாகும். ஆகையினால் அவர்கள் இயேசுவை கொலை செய்து விடுவார்கள். 


இயேசுவை கொலை செய்தால் அவர் மறுபடியும் உயிரோடு எழுந்திருப்பார். மரித்தப்பின்பு மூன்றாம் நாளில் தாம் உயிரோடு எழுந்திருக்க வேண்டுமென்பதையும் இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு முன்னறிவிக்கிறார். அவர் பல பாடுகளை அனுபவித்தாலும், அவர் மரித்து மூன்றாவது நாளில் உயிரோடு எழுந்திருப்பது சீஷர்களுக்கு சந்தோஷமான செய்தியாக இருந்திருக்க வேண்டும். கிறிஸ்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பது அவர் தேவனுடைய குமாரன் என்பதை உறுதிபண்ணுகிறது. 


தாம் அனுபவிக்கும் பாடுகளினால் தம்மை தேவனுடைய குமாரனென்று இயேசுகிறிஸ்து உறுதிபண்ணவில்லை. தமது உயிர்த்தெழுதலின் மூலமாகவே தாம் தேவனுடைய குமாரன் என்பதை கிறிஸ்து உறுதிபண்ணுகிறார். சீஷர்கள் தங்களுடைய விசுவாசத்தில் சோர்ந்து போய்விடக்கூடாது என்பதற்காக இயேசு தமது உயிர்த்தெழுதலைக் குறித்தும் அவர்களுக்கு விளக்குகிறார். தமது பாடுகளை மாத்திரம் இயேசுகிறிஸ்து வெளிப்படுத்தியிருந்தால் சீஷர்கள் சோர்ந்து போயிருப்பார்கள். பயந்திருப்பார்கள். 


நாமும் நமக்காக பாடுகளை அனுபவித்த இயேசுகிறிஸ்துவை நோக்கிப்பார்க்கும்போது, அநத் பாடுகளின் மத்தியிலும் அவர் மகிமை அடைந்ததையும் நோக்கிப் பார்க்கவேண்டும். கிறிஸ்துவுக்காக நாம் பாடுகளை அனுபவிக்கும்போது சோர்ந்து போகாமல், இந்த பாடுகளுக்குப்பின்பு தேவன் நமக்கு கொடுக்கப்போகும் வெகுமதிகளை எண்ணிப்பார்த்து உற்சாகப்படவேண்டும். நாம் அவரோடுகூட பாடுகளை அனுபவித்தால் அவரோடுகூட நாம் ஆளுகையும் செய்வோம்.


தாம் பாடுகளை அனுபவிக்கப்போவது இயேசுகிறிஸ்துவுக்கு ஆச்சரியமான காரியமல்ல. அந்த பாடுகள் அவருடைய வாழ்க்கையில் ஒரு கண்ணியாக வரவில்லை. அவர் அனுபவிக்கப்போகும் பாடுகளைக்குறித்து இயேசு ஏற்கனவே முன்னறிந்திருந்தார். அவருடைய பாடுகள் அவருக்கு முன்பாக தெளிவாக இருக்கிறது. தமது பாடுகளின் நிமித்தமாக இயேசுகிறிஸ்துவின் அன்பு பரிபூரணமாக வெளிப்படுகிறது.


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்தும், அதன் வல்லமையைக்குறித்தும் தவறான கருத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையான ஆடம்பரமும் அதிகாரமும் தேவனுடைய ராஜ்யத்தில் இருக்குமென்று தவறாக நினைக்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில் இருக்கும் தவறுகளை இயேசுகிறிஸ்து அகற்றிப்போட விரும்புகிறார். அவர்களுக்கு தேவனுடைய ராஜ்யத்தை குறித்த சத்தியத்தை கிறிஸ்து தெளிவுபடுத்த விரும்புகிறார். சிலுவையைக்குறித்தும், பாடுகளைக்குறித்தும் கிறிஸ்து தமது சீஷர்களுக்கு உபதேசம் பண்ணுகிறார்.


இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் உலக ஆசீர்வாதங்களுக்காக அவரைப் பின்பற்றக்கூடாது. இந்த உலகத்தில் உலகப்பிரகாரமான ஆசீர்வாதமும் ஐசுவரியமும், அதிகாரமும் தங்களுக்கு கிடைக்குமென்று எதிர்பார்க்கக்கூடாது. இயேசுகிறிஸ்துவோடு சேர்ந்து அவருடைய பாடுகளில் பங்கு பெறுவதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக்      கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்து பல பாடுகளை அனுபவிக்கும்போது அவருடைய சீஷர்கள் அவற்றில் ஒரு சில பாடுகளையாவது அனுபவிப்பதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களுக்கு முன் எச்சரிப்பாக தாம் அனுபவிக்கப்போகும் பாடுகளைக்குறித்து முன்னறிவிக்கிறார். முன் எச்சரிப்பு செய்யும்போது அதிர்ச்சியடையாமல் ஆயத்தமாக இருப்பார்கள்.  


இது உமக்கு நேரிடக்கூடாதே


அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான் (மத் 16:22).


இயேசுகிறிஸ்து தமது பாடுகளைக்குறித்து வெளிப்படுத்தியது பேதுருவுக்கு பிடிக்கவில்லை.  மனம் வருத்தப்படுகிறார். கிறிஸ்துவை முகத்திற்கு நேராக கடிந்துகொள்கிறார். ஆண்டவரே இது உமக்கு நேரிடக்கூடாதே என்று கூறுகிறார். இது உமக்கு சம்பவிப்பதில்லை என்று பேதுரு கிறிஸ்துவை கடிந்துகொள்கிறார். 


பேதுரு தம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முரண்பட்டு போகவில்லை.  அவருக்கு ஆலோசனை கூறும் அளவிற்கு பேதுரு வளர்ச்சி பெறவும் இல்லை. தேவனுடைய அநாதிதீர்மானத்தின் பிரகாரமாக தெய்வீக காரியங்ளெல்லாம் நடைபெற்று வருகின்றன. அவை நமக்கு சந்தோஷமாகவும், ஆசீர்வாதமாகவும் இருந்தால் அவற்றை நாம் ஆதரிப்போம். அவை நமக்கு பாடுகளாகவும் வருத்தமாகவும் இருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளமாட்டோம். தேவனுடைய கிரியைகளை வெளிப்படையாக எதிர்க்கவில்லை யென்றாலும், நமது மனதிற்குள் மௌனமாக அவற்றைக்குறித்து குறை கூறுவோம். நமது மனநிலை எப்படியிருந்தாலும் தேவனுடைய சித்தம் நிறைவேறும். நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்  தேவன் தம்முடைய காரியங்களை நிறைவேற்றுவார். நாம் அவருக்கு உபதேசம் பண்ணாமலேயே தம்முடைய காரியங்களை எப்படி செய்யவேண்டும் என்பது தேவனுக்குத் தெரியும். நாம் தேவனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் தேவனுக்கில்லை.


பேதுருவின் பேச்சில் மாம்ச பிரகாரமான ஞானம் கலந்திருக்கிறது. நம்முடைய மாம்சத்திற்குரிய ஞானம் நமது சரீரத்திற்குள் உறங்கிக்கொண்டிருக்கிறது. நமக்கு பாடுகள் வரும்போது நாம் இம்மைக்குரிய ஜீவனை மாத்திரமே சிந்தித்துப்பார்க்கிறோம். இந்த ஜீவனை மாத்திரம் நினைத்துப் பார்த்தால் பாடுகளை சகிப்பது கடினமாக இருக்கும். நாம் பாடுகளை அனுபவிக்கும்போது நமது மறுமையையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


கிறிஸ்து இந்த பூமியில் பல பாடுகளை அனுபவித்தார். நமது மாம்ச எண்ணத்தின் பிரகாரம் அந்த பாடுகளை நிதானித்துப் பார்க்கிறோம். நமது சொந்த அன்பையும் பொறுமையையும் அளவுகோலாக வைத்து, கிறிஸ்துவின் அன்பையும் பொறுமையையும் அளந்து பார்க்கிறோம். ஆகையினால் கிறிஸ்துவின் பாடுகள் நமக்கு பெரிதாக தோன்றுகிறது. ஆனால் கிறிஸ்துவோ தாம் அனுபவித்த பாடுகளை நமக்காக சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். எந்தவிதமான முறுமுறுப்புமில்லாமல் அந்த பாடுகளை பொறுமையோடு சகித்துக்கொண்டார். 


மனுஷருக்கேற்ற சிந்தனை


அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தனே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு எற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார் (மத் 16:23).


பேதுருவின் ஆலோசனையில் கிறிஸ்து பிரியப்படவில்லை. பேதுருவை இயேசுகிறிஸ்து கடிந்துகொள்கிறார்.  ""எனக்கு பின்னாகப் போ, சாத்தானே'' என்று பேதுருவைப்பார்த்து கடிந்துகொள்கிறார். வேறு எந்த சந்தர்ப்பத்திலும்  கிறிஸ்து தமது சீஷர்களை இவ்வாறு கடிந்து கூறியதில்லை. சிறிது நேரத்திற்கு முன்புதான் இயேசுகிறிஸ்து பேதுருவை ""யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்'' என்று பாராட்டி கூறினார். இப்போதோ ""எனக்கு பின்னாகப் போ, சாத்தானே'' என்று  கடிந்து கூறுகிறார். இயேசுகிறிஸ்து பேதுருவை இவ்வாறு வித்தியாசமாக கூறுவதற்கு காரணங்கள் உள்ளன.


ஒரு நல்ல மனுஷன் கூட, தனக்கு திடீரென்று சோதனை வந்துவிட்டால், பேதுருவைப்போலதான் நடந்துகொள்வான். சாத்தானுக்கு இடங்கொடுத்துவிடுவான். இது சாத்தானுக்கும் தெரியும். ஆகையினால் சாத்தான் நமக்கு சோதனைகளை கொடுக்கும்போது நம்முடைய சத்துருக்கள் மூலமாக அவற்றை கொடுக்காமல், நமது நண்பர்கள் மூலமாகவும், நெருங்கிய உறவினர்கள் மூலமாகவும் அவற்றை கொடுப்பான். 


நம்மிடத்தில் மிகவும் நெருக்கமாக இருக்கும் சிநேகிதரைக்கூட நமக்கு விரோதமாக  தூண்டிவிடுவான். அவர்களுடைய நட்பையும் நமக்கு விரோதமாக பயன்படுத்துவான். நட்பே சோதனையாகிவிடும். ஆகையினால் பிசாசின் தந்திரங்களையும், அவனுடைய யோசனைகளையும் நாம் அறிந்து வைத்திருக்கவேண்டும். சாத்தான் எப்போது சர்ப்பத்தைப்போல சீறுவான் என்றும், எப்போது சிங்கத்தைப்போல கர்ச்சிப்பான் என்றும்  அவனுடைய குரலைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும். 


தேவைகள் ஏற்படும்போது நமக்கு நெருங்கிய சிநேகிதர்கள் மூலமாக சாத்தானுடைய சோதனை வருமென்றால் அதை விசுவாசத்தோடு கடிந்துகொள்ள ஆயத்தமாக இருக்கவேண்டும். இந்த வகையில்தான் இயேசுகிறிஸ்து தமக்கு பிரியமான பேதுருவை கடிந்து கூறுகிறார்.


""நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்'' என்று இயேசு பேதுருவிடம் கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் வழியில் பேதுரு இடறலாய் நிற்கிறார். நம்முடைய இரட்சிப்புக்காக செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் இயேசுகிறிஸ்து செய்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அவருடைய முழு இருதயமும் நமது இரட்சிப்புக்கான காரியங்களிலேயே கவனமாக இருக்கிறது. நமது இரட்சிப்புக்கு தடையாக இருக்கும் எந்த காரியத்தையும் அவர் அங்கீகரிப்பதில்லை. தமது பாதுகாப்பைவிட, தமது சரீர வேதனைகளைவிட இயேசுகிறிஸ்து நமது இரட்சிப்பின்மீதே கவனமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறார்.


பேதுரு நினைப்பதுபோல இந்த பூமியில் சந்தோஷமாக ஜீவிப்பதற்கு இயேசுகிறிஸ்து வரவில்லை. அவர் ஊழியம் கொள்வதற்காக வரவில்லை. ஊழியம் செய்வதற்காகவே வந்தவர். ஆகையினால் பேதுரு தனது கருத்தை கூறியவுடன் ""நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய்'' என்று இயேசுகிறிஸ்து கூறிவிடுகிறார். 


நல்ல காரியங்களை செய்கிறவர்களுக்கு தங்கள் நண்பர்கள் மூலமாகவும், உற்றார் உறவினர் மூலமாகவும் இடையூறுகள் வரும். தெரிந்தவர்கள் மூலமாகவும், தெரியாதவர்கள் மூலமாகவும் பிரச்சனைகள் வரும். நாம் தேவனுக்காக பாடுகளை அனுபவிப்பதை  விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுக்காக விரும்பி ஊழியம் செய்யவேண்டும். கர்த்தருடைய ஊழியத்திற்கு இடையூறாக இருக்கும் எல்லா காரியங்களும் சாத்தானுடைய வஞ்சகத்தினால் வந்தவையாகும். அவனுடைய தந்திரத்தை நாம் கண்டுபிடித்து மிகுந்த எச்சரிப்போடு கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும். 


தேவனுக்கு ஏற்ற காரியங்களும், மனுஷருக்கு ஏற்ற காரியங்களும் பல சமயங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கும். நம்முடைய சிந்தனை எப்போதுமே மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்தியாமல், தேவனுக்கு ஏற்றவைகளையே சிந்திப்பதற்கு பழகிக்கொள்ள வேண்டும். நம்முடைய ஐசுவரியம், சந்தோஷம், மதிப்பு, மரியாதை ஆகியவை மனுஷருக்கேற்ற சிந்தனைகளாகும்.


நமது சிலுவை


அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்         (மத் 16:24).


இயேசுகிறிஸ்து தாம் அனுபவிக்கப்போகும் பாடுகளைக்குறித்து சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அதை தொடர்ந்து தமது சீஷர்களும் பாடுகளை அனுபவிக்கவேண்டும் என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்துகிறார். இயேசுகிறிஸ்துவை பின்பற்றி வருகிறவர்கள் தங்களை வெறுக்கவேண்டும். தங்களுடைய சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவை பின்பற்றி வரவேண்டும். இதுவே சீஷத்துவத்தின் பிரமாணமாகும். இந்தப் பிரமாணம் மாற்றப்படமாட்டாது. இந்த பிரமாணத்தை நாம் ஏற்றுக்கொண்டு மேன்மையடைய வேண்டும். இதன் மூலமாக வரும் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்துவின் மெய்யான சீஷன் தன்னுடைய எல்லாக் கடமைகளிலும் அவரை பின்பற்றி வருவான். மகிமையிலும்,  பாடுகளிலும், மேன்மையிலும், தாழ்மையிலும் சீஷன் இயேசுவை பின்பற்றுவான். சீஷன் எப்போதுமே இயேசுவுக்கு பின்பாக வருகிறவன். பேதுரு இயேசுகிறிஸ்துவிடம் ""இது உமக்கு நேரிடக்கூடாது, இது உமக்கு சம்பவிப்பதில்லை'' என்று கூறியதுபோல சீஷர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு கட்டளை கொடுக்கக்கூடாது. இயேசுகிறிஸ்து கொடுக்கும் கட்டளைகளை சீஷர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவரைப்பின்பற்றி வரவேண்டும். 


ஆடுகள் தங்களுடைய மேய்ப்பனுக்கு பின்னால் செல்வதுபோல சீஷர்களும் இயேசுவுக்கு பின்பாக செல்லவேண்டும். மேய்ப்பன் எந்த வழியிலெல்லாம் செல்லுகிறாரோ அந்த வழியிலெல்லாம் ஆடுகளும் அவரைப்பின்பற்றும். மேய்ப்பன் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் ஆடுகளும் அவரைப் பின்பற்றிப்போகும். அதுபோலவே இயேசுகிறிஸ்துவின் சீஷர்களும் அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றி வரவேண்டும்.


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் கூறும்போது ""ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால்'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்துவை பின்பற்ற வேண்டுமா என்று நாம் தான் முடிவு பண்ணவேண்டும். பின்பற்ற வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டால் முழு மனதோடு பூரணமாக பின்பற்ற வேண்டும்.  பாதியில் திரும்பி வந்துவிடக்கூடாது. அவரை பின்பற்றுவதில் நமக்கு சந்தோஷம் உண்டாகவேண்டும். தம்மை பின்பற்றுமாறு இயேசு யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார். இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் அனைவரும் தாங்களாகவே மனமுவந்து அவரைப் பின்பற்றுகிறார்கள்.


இயேசுவை பின்பற்றி வர விரும்புகிறவன் தன்னைத்தான் வெறுக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவுக்கு பாடுகள் வரக்கூடாது என்றும், அந்த பாடுகளிலிருந்து அவர் விலகிச் செல்லவேண்டுமென்றும் பேதுரு அவருக்கு ஆலோசனை கூறினார். ஆனால் இயேசுகிறிஸ்துவோ பாடுகளிலிருந்து தப்பி ஓடும் ஊழியத்தை செய்யவில்லை. தம்முடைய சீஷர்களை ஆபத்துக்களிலிருந்து தப்புவிப்பதற்கு இயேசுகிறிஸ்து உதவிபுரிகிறார். இப்போது சீஷர்களுக்கு கிறிஸ்துவின் பாடுகளில் பங்காளிகளாகும் சிலாக்கியம் கொடுக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் தங்களை தாங்களே வெறுக்கவேண்டும்.


ஒருவன் தன்னைத்தான் வெறுப்பது கடினமான காரியம். தன்னுடைய மாம்சம், இரத்தம் ஆகியவற்றின் ஆசைகளை அவன் வெறுக்கவேண்டும். இயேசுகிறிஸ்து தமது ஜீவியகாலம் முழுவதிலும் தம்மைத்தாமே வெறுத்தவராக இருந்திருக்கிறார். நமக்கு முன்பாக அவர் ஒரு முன்மாதிரியை வைத்திருக்கிறார்.  கிறிஸ்துவைப் போலவே அவரைப் பின்பற்றுகிற சீஷர்களும் விசுவாசிகளும் தங்களைத் தாங்களே வெறுக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் பாடசாலையில் பயிற்சி பெற சேருவதற்கு இதுவே அடிப்படை தகுதி. 


இயேசுகிறிஸ்துவின் பாடசாலை குறுகலான வாயிலாகவும், ஒடுக்கமான வழியாகவும் இருக்கிறது. இந்த வழியாக செல்லவேண்டுமென்றால் நம்மை நாமே  வெறுக்கவேண்டும். நமது சொந்த நிழலைப்பார்த்து சந்தோஷப்படக்கூடாது. நமது சுய காரியங்களுக்கும், சுய சந்தோஷங்களுக்கும், சுய திருப்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.  கிறிஸ்துவுக்காக நம்மை நாமே வெறுக்கவேண்டும்.


நமது சகோதரருக்காகவும், அவர்களுடைய நன்மைக்காகவும் நம்மை நாமே வெறுக்கவேண்டும். நமக்காகவும் நம்மை நாமே  வெறுக்கவேண்டும். ஆத்துமாவின் நன்மைக்காக சரீரத்தின் ஆசைகளை வெறுத்து ஒதுக்கவேண்டும்.  


இயேசுகிறிஸ்துவை பின்பற்றி வர விரும்புகிறவன் தன் சிலுவையை எடுத்துக்கொள்ளவேண்டும். சிலுவை என்பது எல்லா பாடுகளுக்கும் அடையாளமான வார்த்தையாகும். நன்மை செய்வதற்காகவும், தீமை செய்யாமல் இருப்பதற்காகவும் சில சமயங்களில் நாம் பாடுகளை அனுபவிக்க வேண்டியது வரலாம். நீதியின் நிமித்தமாக துன்பங்களும் சோதனைகளும் வரலாம். இவையெல்லாமே நம்முடைய சிலுவை என்று அழைக்கப்படுகிறது. 


சிலுவையின் பாடுகளைக் குறித்தும் வேதனைகளைக் குறித்தும் நாம் பயப்படக்கூடாது. இயேசுகிறிஸ்து நமக்கு முன்பாகவே தமது சிலுவையை சுமந்திருக்கிறார். நம்முடைய சிலுவையை நாம்         சுமக்கும்போது தனியாக சுமப்பதில்லை. இயேசுகிறிஸ்துவோடுகூட சேர்ந்து சுமக்கிறோம்.


ஒவ்வொரு விசுவாசிக்கும்  ஒரு சிலுவை இருக்கிறது. தன்னுடைய சிலுவையை ஒவ்வொருவரும் எண்ணி பார்க்கவேண்டும். கிறிஸ்துவுக்காக நாம் அனுபவிக்கும் பாடுகளும் வேதனைகளுமே நமது சிலுவை. தேவனுடைய பிள்ளைகளுக்கு எல்லாவிதமான சிலுவைகளும் கொடுக்கப்படும். நாம் கிறிஸ்துவின் சிலுவையை சுமக்க வேண்டாம். நம்முடைய சிலுவையையே நாம் சுமக்கவேண்டும். நமக்கு பாடுகள் வரும்போது இவை நம்முடைய பாடுகளென்றும், இது நம்முடைய சிலுவையென்றும் நினைவுகூரவேண்டும். 


மற்றவர்களுடைய பாடுகளைவிட நம்முடைய பாடுகள் அதிகமாக இருப்பதாக நாம் பொதுவாக நினைப்போம். எப்போதுமே மற்றவர்களுடைய சிலுவையின் பாரத்தைவிட நமது சிலுவையின் பாரம் அதிக பாரமானது போல இருக்கும். நமது சிலுவை எவ்வளவு பாரமானதாக இருந்தாலும், அதை மனதார சுமக்கும்போது இயேசுகிறிஸ்து நம்மை ஆசீர்வதிப்பார். சிலுவையின் மூலமாக நமக்கு பாடுகளும் வேதனைகளும் வந்தாலும், அவற்றை தொடர்ந்து நமக்கு தேவ ஆசீர்வாதமும் வரும். 


தம்முடைய விசுவாசிகள் ஒவ்வொருவருக்கும் இயேசுகிறிஸ்து அவரவர்களுக்குரிய சிலுவையை வைத்திருக்கிறார். நம்முடைய சிலுவையை நாமே செய்து கொள்ளக்கூடாது. தேவன் நமக்காக நியமித்து வைத்திருக்கும் சிலுவைக்கு நம்மை ஆதாயப்படுத்திக் கொள்ளவேண்டும். அனுசரித்துக் கொள்ளவேண்டும். தேவன் நமக்கு அனுமதிக்கும் பாடுகளை மாத்திரமே நாம் அனுபவிக்கவேண்டும். நமது சொந்த தவறுகளினால் நமக்கு பாடுகள் வந்துவிடாதவாறு மிகுந்த எச்சரிப்போடு இருக்கவேண்டும்.


கிறிஸ்துவ ஊழியத்தில் தேவன் நமக்கு கொடுக்கும் ஊழியத்தை மாத்திரமே செய்யவேண்டும். அவர் நமக்கு நியமித்து வைத்திருக்கும் கடமைகளை மாத்திரமே நிறைவேற்றவேண்டும். இயேசுகிறிஸ்து நமக்கு சிலுவையை வைத்திருந்தால் அதை சுமப்பதற்கு  முன்வரவேண்டும். அவர் நமக்கு சிலுவையை வைத்திருக்கவில்லையென்றால், எங்காவது ஒரு சிலுவையை தேடி கண்டுபிடித்து, அதை நமது தோளின்மீது சுமந்துகொண்டு அவஸ்தைப்படக்கூடாது. நமது அவசரத்தினாலும், சுயதீர்மானங்களினாலும், கர்த்தர் நமக்கு நியமித்திராத சிலுவைகளை, நமது தலையின்மீது பாரமாக சுமத்தக்கூடாது. அதேவேளையில் கிறிஸ்து நமக்காக சிலுவையை வைத்திருக்கும்போது, அதன் பாரத்தை சுமக்காமல், தப்பித்து ஓடிவிடக்கூடாது.


நமது ஆவிக்குரிய பாதையில் ஏதாவது சிலுவை இருக்குமென்றால் அந்த சிலுவையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் செல்லும் பாதையில் அந்த சிலுவையை கீழே வைத்துவிடாமல், யார் மீதாவது சுமத்திவிடாமல், நாமே எடுத்துச் செல்லவேண்டும். சிலுவை பாரமாக இருந்தாலும், அதை ஒதுக்கி தள்ளிவிடாதவாறு, அதை  நாமே எடுத்துச் செல்லவேண்டும் என்பது இயேசுகிறிஸ்துவின் உபதேசம்.


நாம் சிலுவையை சுமப்பது மாத்திரமல்ல அதை எடுத்துச் செல்லவும் வேண்டும். நமது ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்காக அந்த சிலுவையை பயன்படுத்த வேண்டும். வேறு வழி இல்லாமல் சிலுவை சுமக்கிறேன் என்று புலம்பக்கூடாது. இந்த சிலுவை நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று உள்ளத்தில் விசுவாசித்து அந்த சிலுவையை சுமக்க வேண்டும். நமது பாடுகளிலும் துன்பங்களிலும் நாம் சந்தோஷப்படுவோமென்றால், கிறிஸ்து நமக்கு அனுமதித்திருக்கும் சிலுவையை சந்தோஷமாக சுமப்போம்.


கிறிஸ்துவின் சீஷர்கள் தங்களுடைய சிலுவையை எடுத்துக்கொண்டு அவரை பின்பற்றவேண்டும். நமது சிலுவையை நாம் எடுத்துக்கொண்டால் மாத்திரம் போதாது. அந்த சிலுவையோடு நாம் கிறிஸ்துவை பின்பற்றவேண்டும். இயேசுகிறிஸ்து நமக்கு முன்பாக சிலுவை சுமந்து செல்கிறார். அவர் நமக்காக சிலுவை சுமக்கிறார். அந்த சிலுவையில் கனமான பகுதியை அவர் சுமந்து செல்கிறார். கனமான பகுதி சாபமான பகுதி. அந்த சாபமான, கனமான பகுதியை கிறிஸ்து தம்மீது சுமந்து கொள்கிறார். சிலுவையின் மற்றொரு பகுதி இலகுவான பகுதி. அதையே கிறிஸ்து நமக்கு கொடுத்திருக்கிறார். சிலுவையின் இலகுவான பகுதியை நாம் எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றினாலே போதுமானது. இயேசுகிறிஸ்வோடு சிலுவையை சுமக்கும்போது நாம் பரிசுத்தத்தோடும், பணிவோடும் அவரைப் பின்பற்றவேண்டும். கிறிஸ்துவின் அடிச்சுவடுகள் எங்கெல்லாம் போகிறதோ அங்கெல்லாம் நாம் அவரை பின்பற்றிச் செல்லவேண்டும். கிறிஸ்துவுக்காக பாடுகளின் சிலுவையை சுமப்பது நமக்கு கிடைத்திருக்கும் ஆசீர்வாதம்.


ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன்


தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான் (மத் 16:25).    


நமது சுயத்தை வெறுப்பது, பாடுகளை பொறுமையோடு சகித்துக்கொள்வது ஆகிய எல்லாமே கடினமான காரியங்களாகும். இதைப் பெற்றுக்கொள்வதற்கு நமது மாம்சத்தையும் இரத்தத்தையும் கலந்து ஆலோசித்தால், நம்மால் ஒருபோதும் சுயத்தை வெறுக்க முடியாது, பாடுகளை பொறுமையோடு சகித்துக்கொள்ள முடியாது. சுயத்தை வெறுப்பதற்கு நமது மாம்சத்தை கலந்து ஆலோசிக்காமல், இயேசுகிறிஸ்துவையே கலந்து ஆலோசிக்க வேண்டும். இது சம்பந்தமாக பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் இயேசுகிறிஸ்துவுக்காகவே நமது சுயத்தை வெறுக்கிறோம். பாடுகளை அனுபவிக்கிறோம். 


நமக்கு தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் ஜீவியத்தில் நாம் எடுக்கும் தீர்மானத்தை பொறுத்தே நமது நித்திய ஜீவன் அமைந்திருக்கும். இயேசுகிறிஸ்துவை மறுதலித்து தங்களுடைய ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவர்கள் அதை இழந்துபோவார்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்காக தங்களுடைய ஜீவனை இழந்து போகிறவர்கள் அதைக் கண்டுகொள்வார்கள். இங்கு நமக்கு முன்பாக மரணமும் ஜீவனும், நன்மையும் தீமையும், ஆசீர்வாதமும் சாபமும் வைக்கப்பட்டிருக்கிறது. தீர்மானம் பண்ணவேண்டியது நாமே.


கிறிஸ்துவை மறுதலித்து, பாவத்தில் ஜீவித்து இந்த உலகத்தில் தன்னுடைய ஜீவனை இரட்சித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறவன், தன்னுடைய நித்திய ஜீவனை இழந்துபோவான். தற்காலிகமான ஜீவனைக் காத்துக்கொள்ளவேண்டும் என்றும், தற்காலிகமான மரணத்தை தவிர்க்கவேண்டும் என்றும் தீர்மானம்பண்ணி, இயேசுகிறிஸ்துவை விட்டு விலகிப்போகிறவர்கள், தங்களுடைய நித்திய ஜீவனை இழந்துபோவார்கள். இவர்கள் காத்துக் கொள்ளும் ஜீவன் தற்காலிகமானது. இவர்களுடைய சரீர மரணம் ஒரு தூக்கத்தைப் போன்றது. இந்த மரணத்திற்கு பின்பு மற்றொரு ஜீவன் உள்ளது. அந்த ஜீவன் நித்தியமானது . அந்த நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது மாத்திரமே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்துவின் நிமித்தமாக தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். இந்த உலகத்தில் ஒருவன் கிறிஸ்துவுக்காக எதையாவது இழந்துபோனால் அவன் அதை பல மடங்கு அதிகமாக திரும்பப்பெறுவான். இந்த உலக வரலாற்றில் ஏராளமானோர் கிறிஸ்துவுக்காக தங்களுடைய ஜீவனையே கொடுத்திருக்கிறார்கள். கிறிஸ்துவின் உபதேசத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்காக ஏராளமான ஊழியக்காரர்கள் இரத்த சாட்சிகளாக மரித்திருக்கிறார்கள். கிறிஸ்தவ மார்க்கம் ஆயிரக்கணக்கானோருடைய இரத்தத்தினால் முத்திரையிடப்பட்டிருக்கிறது.


கிறிஸ்துவை பின்பற்றுவதினால், ஒரு சிலர் தங்கள் ஜீவனையே இழக்க நேரிடலாம். அவர்களுடைய இழப்பு நித்திய இழப்பு அல்ல. அது தற்காலிகமான இழப்பு. இந்த ஜீவனை நாம் இழந்தாலும் கிறிஸ்து நமக்கு            நித்திய ஜீவனை கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். ஆகையினால் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் தங்களுடைய சரீர மரணத்திற்காக பயப்படக்கூடாது. தங்களுடைய ஜீவனைக் காக்கவேண்டும் என்பதற்காக கர்த்தர் தங்களுக்கு நியமித்து வைத்திருக்கும் சத்திய பாதையை விட்டு விலகிச் சென்றுவிடக்கூடாது. நமது பாதையில் துன்பங்கள் வந்தாலும், சோதனைகளும் பாடுகளும் வந்தாலும், அவற்றை பொறுமையோடு சகித்துக்கொண்டு சந்தோஷமாக முன்னேறிச் செல்லவேண்டும். 


லாபம் என்ன


மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?            (மத் 16:26).


ஆத்துமாவின் மதிப்பு விலையேறப்பெற்றது.  இந்த முழு உலகத்தின் மதிப்பைவிட ஓர் ஆத்துமாவின் மதிப்பு பெரியது.  ஒரு மனுஷன் இந்த உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு ஒரு லாபமும் இல்லை. எல்லாமே நஷ்டம் தான். தன் ஜீவனுக்கு ஈடாக மனுஷனால் எதையும் கொடுக்கமுடியாது. தான் ஆதாயப்படுத்திக்கொண்ட இந்த உலகம் முழுவதையும் கொடுத்தாலும் அது அவன்  ஜீவனுக்கு ஈடாகாது.


ஆத்துமாவின் முக்கியத்துவத்தைப்பற்றி இயேசுகிறிஸ்துவின் உபதேசம் மிகவும் எளிமையானது. ஒரு மனுஷன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், தான் சம்பாதித்ததை அனுபவிக்க வேண்டுமென்றால் அவனுக்கு ஜீவன் இருக்கவேண்டும். அவன் தன் ஜீவனை இழந்துபோகக்கூடாது. ஜீவன் இழந்துபோனால் அவன் சம்பாதித்ததினால் அவனுக்கு ஒரு பயனுமில்லை. அவனுடைய சம்பாத்தியத்தை அனுபவிப்பதற்கு அவனிடம் ஜீவன் இருக்க வேண்டும். 


இயேசுகிறிஸ்து இங்கு மனுஷருடைய சாதாரண ஜீவனைக் குறிப்பிடவில்லை. அதைவிட மேலாக மனுஷருடைய ஆத்துமாவைப் பற்றி குறிப்பிடுகிறார். மனுஷருடைய ஆத்துமா நித்தியமானது. சரீரம் மரித்துப்போனாலும் ஆத்துமா ஜீவனோடிருக்கும். இந்த ஆத்துமா விலையேறப்பெற்றது. முழு உலகத்தின் கிரயத்தைவிட ஆத்துமாவின் கிரயம் அதிகம்.  நம்முடைய ஆத்துமா நமக்கே உரியது. இந்த ஆத்துமாவிற்குக்கூட சில சமயங்களில் ஆபத்து வருவதற்கு வாய்ப்புள்ளது. மனுஷனுடைய ஆத்துமாவிற்கு தேவனைவிட்டு பிரிந்துபோகும் ஆபத்து இருக்கிறது. 


மனுஷருடைய ஆத்துமா நன்மையைவிட்டு விலகி, தீமையை பற்றிக்கொண்டால், அந்த ஆத்துமா தேவனைவிட்டு நித்தியமாக பிரிக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட ஆத்துமாவுக்கு தேவனுடைய கிருபையும், சிலாக்கியமும் கிடைக்காது. ஒருவருடைய ஆத்துமா தேவனைவிட்டு பிரிந்துபோனால் அதற்கு அந்த நபரே பொறுப்பு ஏற்றவேண்டும். பாவிகள் தங்கள் துன்மார்க்கத்தினால் தேவனைவிட்டு பிரிந்து போகிறார்கள். 


ஒரு மனுஷனுடைய ஆத்துமா தேவனைவிட்டு பிரிந்து போகுமென்றால் அது  அழிந்துபோகும். மனுஷன் அழிவுக்கேதுவான கிரியைகளை செய்யும்போது அவன் தன் ஆத்துமாவை அழித்துப்போடுகிறான். ஆத்துமாவை இரட்சிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலோ, அல்லது தெரிந்தும் அதை செய்யாமல் புறக்கணிப்பதினாலோ, மனுஷருடைய    ஆத்துமா அழிவுக்கு நேராக ஆபத்தில் இருக்கிறது. 


ஓர் ஆத்துமாவின் கிரயம் முழு உலகத்தின் கிரயத்தைவிட அதிகமானது. நமது எல்லா ஐசுவரியங்களையும்விட  நமது ஆத்துமாவே விலையேறப்பெற்றது. இந்த உலகத்தில் நமது கல்வி, அந்தஸ்து, மதிப்பு, மரியாதை ஆகிய எல்லாவற்றையும்விட நமது ஆத்துமாவே முக்கியமானது. ஒருவன் இந்த உலகத்தை ஆதாயம் பண்ணவேண்டுமென்று தீர்மானம்பண்ணி முயற்சி பண்ணினால், அவன் தன் ஆத்துமாவை இழந்துபோவான். இந்த உலகத்தில் செல்வந்தராகவும், பலம் பொருந்தியவராகவும் இருக்க வேண்டும் என்பதற்காக பலர் தங்களுடைய ஆத்துமாக்களை கெடுத்துப்போட்டிருக்கிறார்கள். 


தன்னுடைய ஆத்துமாவை இழந்துபோகிற மனுஷன் எல்லாவற்றையும் இழந்து போகிறான். ஆத்தும இழப்பு என்பது பேரிழப்பாகும். இந்த உலகம் முழுவதையும் நாம் கிரயமாக செலுத்தினாலும் இழந்து போன ஆத்துமாவை திரும்ப பெறமுடியாது. ஆத்துமா இழந்து போகும்போது அதை மறுபடியும் சரி செய்ய முடியாது. இந்த உலகத்தில் நாம் எல்லோருமே உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுக்காக பிரயாசப்படுகிறோம். நமது வாழ்க்கையின் முடிவில் இந்த உலக ஆசீர்வாதங்களையும், நமது ஆத்துமாவின் நிலமையையும் சீர்தூக்கி பார்க்கவேண்டும். 


வணிகர்கள் ஆண்டு இறுதியில் லாப நஷ்ட கணக்குப் பார்ப்பதுபோல  நாமும் நமது ஜீவனை கணக்குப் பார்க்கவேண்டும். நாம் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை அதிகமாக பெற்றிருந்து, நமது ஆத்துமாவை நஷ்டப்படுத்திவிட்டால், நமக்கு லாபம் ஒன்றுமில்லை. எல்லாமே நஷ்டம்தான். நாம் சம்பாதித்த ஐசுவரியத்தினால் நஷ்டப்படுத்தின ஆத்துமாவை திரும்ப சரிசெய்ய முடியாது. ஆகையினால் நமது ஆத்துமாவைக் குறித்து மிகுந்த எச்சரிப்போடு இருக்கவேண்டும். 


ஒரு மனுஷனுடைய ஆத்துமா நஷ்டப்பட்டுப்போனால் அது நித்திய நஷ்டமாகவே இருக்கும். இந்த நஷ்டத்தை சரிசெய்யவோ, ஈடு செய்யவோ முடியாது. ஆகையினால் நமது ஆத்துமாவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கும்போது, ஞானத்தோடு செயல்பட்டு,  நமது நன்மைக்காக நமது ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும்.  


மகிமை பொருந்தியவர்


மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார் (மத் 16:27). 


இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகை விசுவாசிகளுக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். கிறிஸ்து தமது இரண்டாவது வருகையின்போது தம்முடைய தூதரோடுகூட வருவார். தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய் வருவார். 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் ஊழியம் செய்து வந்த காலத்தில் தாழ்மையுள்ளவராகவும், பாடுகளை அனுபவிப்பவராகவும், வேதனைகளை சகித்துக்கொள்பவராகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு இந்த பூமியில் பாடுகளும் வேதனைகளும் வரும்போது அவர்கள் சோர்ந்து போகிறார்கள். பாடுகளை அனுபவித்த இயேசுவை மாத்திரமே அவர்கள் நோக்கிப்பார்த்தால் அவர்களுடைய சோர்வு அதிகரிக்கும். ஆகையினால் இயேசுகிறிஸ்து தமது இரண்டாவது வருகையையும், தமது மகிமையையும் சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார். 


நம்முடைய இரட்சகர் பாடுகளை அனுபவிக்கிறவர் மாத்திரமல்ல. மகிமை நிறைந்தவர். பிதாவின் மகிமை பொருந்தினவராக அவர் மறுபடியும் இந்த பூமிக்கு வரப்போகிறவர். நமது விசுவாசக் கண்களினால் அவருடைய இரண்டாம் வருகையை நோக்கிப் பார்க்கவேண்டும். அப்போது தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் பாடுகள் நமக்கு இலகுவாக இருக்கும். 


இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு தமது இரண்டாம் வருகையில் வரும்போது அவனவன் கிரியைக்கு தக்கதாக அவனவனுக்கு பலனளிப்பார். இயேசுகிறிஸ்து ஒரு நியாயதிபதியாக இந்த பூமிக்கு மறுபடியும் வருவார். நன்மை செய்தவர்களுக்கு வெகுமதிகளை கொடுப்பதற்காகவும், தீமை செய்தவர்களுக்கு தண்டனைகளை கொடுப்பதற்காகவும் இந்த பூமிக்கு மறுபடியும் வருவார். 


இந்த பூமியில் தாங்கள் சேமித்து வைத்திருக்கும் ஐசுவரியத்திற்கு தக்க பிரகாரம் மனுஷர்களுக்கு வெகுமதி கொடுக்கபடமாட்டாது.  அவனவனுடைய கிரியைக்குத்தக்கதாகவே பலனளிப்படும். தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, இயேசுகிறிஸ்துவை பின்பற்றி வந்தவர்களுக்கு நித்திய ஜீவன் வெகுமதியாக கொடுக்கப்படும். பாவம் செய்தவர்களுக்கு நியாயாதிபதியை பார்க்கும்போது பயமாக இருக்கும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கோ நியாயாதிபதி நம்முடைய சிநேகிதராக இருக்கிறார். நமக்கு பலனளிக்கிறவராக இருக்கிறார். நாம் செய்யும் நற்காரியங்களுக்கு ஒருவேளை தற்போது பலனில்லாமல் போகலாம். ஆனால் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போதோ, அவருக்காக நாம் செய்த எல்லா நற்கிரியைகளையும் அவர் எண்ணிப்பார்த்து நமக்கு பலனளிப்பார். 


இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது தேசங்கள் நியாயந்தீர்க்கப்படும். (மத் 25:31-46) மரித்துப்போன நீதிமான்கள் இதற்கு முன்பாகவே நியாயந்தீர்க்கப்படுவார்கள். (1கொரி 3:11-15; ரோமர் 14:10; 2கொரி 5:10) துன்மார்க்கர் இதற்கு ஆயிரம் வருஷங்களுக்குப் பின்பு நியாயந்தீர்க்கப்படுவார்கள். (வெளி 20)


ஆண்டவர் நம்மை நம்முடைய வயசுக்குத்தக்கதாகவோ, நமது கல்வி, செல்வம், அந்தஸ்து, புகழ்ச்சி ஆகியவற்றிற்குத் தக்கதாகவோ, நியாயந்தீர்க்க மாட்டார். நமது கிரியைக்குத்தக்கதாக நம்மை நியாயந்தீர்ப்பார்.


தேவனுடைய ராஜ்யம்


இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்ஜியத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 16:28).


தேவனுடைய ராஜ்யம் இந்த பூமிக்கு சமீபமாக வந்துகொண்டிருக்கிறது. இது மிகவும் சமீபமாக இருப்பதினால், இந்த பூமியில் தற்போது ஜீவனோடு இருக்கிறவர்கள்கூட, தேவனுடைய ராஜ்யத்தை தரிசிப்பார்கள். காலத்தின் முடிவில் இயேசுகிறிஸ்து தமது பிதாவின் மகிமை பொருந்தினவராக இந்த பூமிக்கு திரும்பி வருவார். இப்போது, காலம் நிறைவேறினபோது, தமது சொந்த ராஜ்யத்தில் கிறிஸ்து இயேசு வந்திருக்கிறார். 


இயேசுகிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தை பற்றி தமது சீஷருக்கு வெளிப்படுத்தி கூறினபின்பு, மறுரூபமலையில் மறுரூபமானார் (மத் 17:1). இயேசுகிறிஸ்துவின் மறுரூபமான அனுபவம் தேவனுடைய ராஜ்யத்தின் மகிமையில் ஒரு சிறிய பகுதி மாத்திரமே ஆகும்.


கிறிஸ்துவின் ராஜ்யத்தை இந்த பூமியில் ஸ்தாபிப்பதற்கு அப்போஸ்தலர்கள் ஊழியம் செய்கிறார்கள். ஊழியத்தில் அவர்களுக்கு எதிர்ப்புக்கள் வரலாம். பாடுகளும் பிரச்சனைகளும் உண்டாகலாம். இவையெல்லாம் நித்தியமானவை அல்ல. இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது இந்த பாடுகளெல்லாம் முடிவுக்கு வந்துவிடும். 


பாடுகளை அனுபவித்த பரிசுத்தவான்களுக்கெல்லாம் இயேசுகிறிஸ்து தமது இரண்டாம் வருகையில் பலனளிப்பார். அப்பேர்பட்ட மகிமையுள்ள தேவனுடைய ராஜ்யம் விரைவில் வரப்போகிறது. தற்போதுள்ள காலம் மேகம் நிறைந்ததாக இருக்கலாம். மந்தாரமாக இருக்கலாம். கர்த்தர் நமக்கு ஒரு தெளிவான காலத்தை வைத்திருக்கிறார். தற்போது நாம் செய்யும் ஊழியத்தில் பல வேதனைகளும் பாடுகளும் இருக்கலாம். இந்த பாடுகளுக்கெல்லாம் தேவன் ஒரு முடிவை நியமித்திருக்கிறார். நமது கண்ணீரை துடைப்பதற்காகவும், நமது பாடுகளுக்காக வெகுமதிகளை கொடுப்பதற்காகவும் இயேசுகிறிஸ்து சீக்கிரமாக வரப்போகிறார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.