இயேசுவை குறித்த பேதுருவின் சாட்சி
ஜனங்களின் கருத்து
பின்பு, இயேசு பி-ப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார் (மத் 16:13).
இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களோடு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்திருக்கிறார். பட்டணத்தைவிட்டு இது தூரமான பகுதி. ஆகையினால் மற்ற இடங்களில் இயேசுகிறிஸ்துவை சுற்றிலும் திரளான ஜனங்கள் இருந்ததுபோன்று இங்கு கூட்டமாக ஜனங்கள் வரவில்லை. தமது சீஷர்களோடு ஓய்வாக இருப்பதற்கும், ஆவிக்குரிய ரகசியங்களை தமது சீஷர்களுக்கு விசேஷமாக உபதேசம் பண்ணுவதற்கும் இந்த இடம் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. தமது சீஷர்களோடு தனிப்பட்ட முறையில் சம்பாஷணை பண்ணி தம்மைக்குறித்து அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
""மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்'' என்று இயேசுகிறிஸ்து தமது சீஷர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறார். இந்தக் கேள்வியைக் கேட்கும்போதே இயேசுகிறிஸ்து தம்மை ""மனுஷகுமாரன்'' என்று அறிவித்துவிடுகிறார். இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன். ஆயினும் ஜனங்கள் அவரைப் பொதுவாக மனுஷகுமாரன் என்றே அழைக்கிறார்கள்.
கன்னிமரியாளிடம் தேவதூதன் கர்த்தருடைய செய்தியை அறிவித்தபோது ""உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்'' (லூக் 1:35) என்று அறிவித்தார். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்மை மனுஷகுமாரன் என்று அழைத்துக்கொள்கிறார். இவர் மெய்யாகவே ஸ்திரீயினிடத்தில் பிறந்த குமாரன் தான். நம்முடைய மத்தியஸ்தராகிய இயேசுகிறிஸ்து மனுஷகுமாரன் என்றே அழைக்கப்படுகிறார்.
ஜனங்கள் தம்மைப்பற்றி எவ்வாறு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் இயேசுகிறிஸ்து விருப்பமாக இருக்கிறார். ""ஜனங்கள் தம்மை மேசியாவாக அங்கீகரிக்கிறார்களா'' என்று அறிந்துகொள்வதில் இயேசுகிறிஸ்து ஆவலாக இருக்கிறார். வேதபாரகரும் பரிசேயரும் தம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் இயேசுகிறிஸ்துவுக்கு அக்கறையில்லை.
சாதாரண ஜனங்களைக்குறித்தே இயேசுகிறிஸ்து மிகுந்த அக்கரையோடு இந்தக் கேள்வியைக்கேட்கிறார். வேதபாரகரும் பரிசேயரும் ஜனங்களோடு ஒத்துப்போவதில்லை. கலந்து ஜீவிப்பதில்லை. அவர்களை தனியாக ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்துவுக்கு ஜனங்களின் கருத்து முக்கியமானதாக இருக்கிறது.
ஜனங்களும் இயேசுகிறிஸ்துவிடம் வந்து தாராளமாக பேசுவதற்குப் பதிலாக, அவர்கள் சீஷர்களிடமே அதிகமாக பேசுகிறார்கள். தங்கள் கருத்துக்களையெல்லாம் சீஷர்களுக்கே அதிகமாக வெளிப்படுத்துகிறார்கள்.
தாம் யார் என்பதை இயேசுகிறிஸ்து தெளிவாக வெளிப்படுத்தவில்லை. தமது கிரியைகளைப்பார்த்து ஜனங்களே தம்மைக்குறித்து புரிந்து கொள்ளவேண்டுமென்று இயேசுகிறிஸ்து சித்தங்கொண்டிருக்கிறார்.
ஒரு சமயம் இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது என்றார் (யோவா 10:23-25). தற்போது தம்மைக்குறித்து ஜனங்கள் எவ்வாறு சாட்சி கொடுக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள இயேசுகிறிஸ்து விரும்புகிறார்.
""பி-ப்புச் செசரியாவின் திசைகள்'' என்பது கப்பர்நகூமிற்கு 25மைல் தூரத்திலுள்ள பட்டணம். இந்தப் பட்டணத்திற்கு ""பனேயாஸ்'' என்று வேறொரு பெயரும் உண்டு. ஏனெனில் இங்கு புறஜாதி தெய்வமான ""பான்'' தெய்வத்திற்கு ஒரு கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ஏரோது ராஜா இந்தக் கோயிலை மறுபடியும் புதுப்பித்துக் கட்டினான். அத்துடன் சீசருக்கும், இங்கு ஒரு கோயில் கட்டினான். இத்துரேயாவின் காற்பங்கு தேசாதிபதியாகிய பிலிப்பு இந்தக் கோயிலை விஸ்தாரம்பண்ணி, இந்தப் பட்டணத்திற்கு செசரியா என்று பெயர் கொடுத்தான். தன்னுடைய பெயரையும், சீசருடைய பெயரையும் இணைத்து, பிலிப்பி செசரியா என்று இந்தப் பட்டணத்திற்குப் பெயர் சூட்டினான். இந்தப் பட்டணத்தின் பழங்காலப்பெயர் தாண் (ஆதி 14:14) லாயீஷ் (நியா 18:7)
தமது சீஷர்கள் தம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள், என்ன கூறுகிறார்கள் என்று இயேசு கிறிஸ்து தெரிந்து கொள்ள விரும்பினார். (மத் 16:15; லூக்கா 9:18) விசுவாசிகளிடத்தில் இயேசு கிறிஸ்துவைக் குறித்து தெளிவான சிந்தை இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பல்வேறு விதமான மார்க்கப்பிரிவினைகள் உள்ளன. அவர்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து பல்வேறு விதமான உபதேசங்களைக் கூறுகிறார்கள். நாம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கூறும்போது ""ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'' என்று நமது இருதயத்தின் ஆழத்திலிருந்து முழு மனதோடும், முழு பலத்தோடும், முழு இருதயத்தோடும் கூறவேண்டும்.
சிலர், வேறுசிலர்
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எ-யா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள் (மத் 16:14).
ஜனங்கள் இயேசுகிறிஸ்துவைக்குறித்து பல்வேறு விதமாக சொல்கிறார்கள். அவர்களுடைய கருத்துக்கள் வெவ்வேறாக இருக்கிறது. சத்தியம் ஒன்றுதான். ஆனால் அது ஒருவருக்கொருவர் வேறுபட்டு காணப்படுகிறது. இரண்டுபேர் இருக்கும் இடத்தில் மூன்றுவிதமான கருத்துக்கள் காணப்படும். அதுபோல சிலர் இயேசுகிறிஸ்துவை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்.
இவையெல்லாமே நல்ல கருத்துக்கள் தான். இயேசுகிறிஸ்துவைப்பற்றி மேன்மையாகவும், உயர்வாகவும், கண்ணியமாகவும் கூறப்பட்டிருக்கும் வார்த்தைகள்தான். இயேசுகிறிஸ்துவைக்குறித்து நாம் உயர்வான எண்ணம் வைத்திருக்கலாம். ஆயினும் இயேசுகிறிஸ்துவை ஏற்ற பிரகாரம் நாம் அறிந்துகொள்ளவில்லையென்றால், அந்த எண்ணமும் குறைபாடுடையதாக இருக்கும்.
இவர்கள் எல்லோருமே ஒரு கருத்தை மனதில் நினைத்து கூறுகிறார்கள். இவர்கள் அனைவரையுமே ஜனங்கள் மரித்தோரிலிருந்து உயர்த்தெழுந்தவராக காண்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்து ஜனங்களுக்கு தெளிவான சிந்னையில்லை. குழப்பத்தில் இருக்கிறார்கள். தங்கள் குழப்பத்தினால்தான் இவ்வாறு குழப்பமான பதிலை தருகிறார்கள். இவர்கள் கூறிய கருத்துக்கள் எல்லாமே தவறானவை. தங்களுடைய சொந்தக் கற்பனையின்மீது கட்டயெழுப்பப்பட்ட கட்டுக்கதைகள்.
சிலர் இயேசுகிறிஸ்துவை யோவான்ஸ்நானன் என்று கூறுகிறார்கள். ஏரோது ராஜாவும் அப்படித்தான் சொன்னான் (மத் 14:2). ஏரோது ராஜாவைப்போல ஏராளமான ஜனங்கள் அக்காலத்தில் இயேசுகிறிஸ்துவை யோவான்ஸ்நானன் என்றே நினைத்தார்கள். மரித்தோரிலிருந்து எழுந்து வந்த யோவான்ஸ்நானன் என்று இயேசுகிறிஸ்துவை குறித்து கூறினார்கள்.
இயேசுகிறிஸ்துவை சிலர் எலியா என்று கூறினார்கள். மல்கியா தீர்க்கதரிசி மேசியாவைக்குறித்து இவ்வாறு தீர்க்கதரிசனமாக கூறியிருக்கிறார். ""நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்'' (மல் 4:5) என்று மல்கியா கர்த்தருடைய வார்த்தையை முன்னறிவித்தார்.
வேறு சிலரோ இயேசுகிறிஸ்துவை எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று சொன்னார்கள். இயேசுகிறிஸ்து நாசரேத்து ஊரைச்சேர்ந்தவர். அவர் பல அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்கிறார். ஆகையினால் அவர் சாதாரண ஜனங்களைவிட மேலானவர் என்பது ஜனங்களுடைய பொதுவான கருத்தாகும். ஜனங்கள் மத்தியில் தீர்க்கதரிசிகளைக் குறித்த உயர்ந்த எண்ணம் இருக்கிறது. ஆகையினால் இவர் தீர்க்கதரிசிகளில் ஒருவராக இருக்கவேண்டும் என்று ஜனங்கள் கூறுகிறார்கள்.
சீஷர்களின் கருத்து
அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார் (மத் 16:15).
இயேசுகிறிஸ்துவை குறித்து ஜனங்கள் வெவ்வேறு விதமாக கூறுவதை சீஷர்கள் அவரிடம் கூறுகிறார்கள். தம்மைக்குறித்து சீஷர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இயேசுகிறிஸ்து விரும்புகிறார். மற்ற ஜனங்களைவிட இயேசுகிறிஸ்து சீஷர்களுக்கு அதிகமாக உபதேசம் பண்ணியிருக்கிறார். தெய்வீக சத்தியங்களை அதிகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சீஷர்கள் இயேசுவோடு நெருக்கமாக இருந்ததினால், மற்றவர்களைவிட இயேசுகிறிஸ்துவைப்பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகமாக உள்ளது.
மற்றவர்களுக்கு உபதேசம் பண்ணும் அளவிற்கு இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார். ஆகையினால் தாங்கள் உபதேசம்பண்ணும் சத்தியங்களைக் குறித்த தெளிவான வெளிப்பாடு சீஷர்களிடம் காணப்படவேண்டும். சாதாரண ஜனங்களைவிட சீஷர்கள் சத்தியங்களை தெளிவாக புரிந்து வைத்திருக்கவேண்டும். நம்முடைய உள்ளத்திலும் ""நாம் இயேசுகிறிஸ்துவை யார் என்று சொல்லுகிறோம்'' என்னும் கேள்வி எழும்பிக்கொண்டே இருக்கவேண்டும். நமது இருதயம் இந்த கேள்விக்குரிய சரியான பதிலை நமக்குள் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
இயேசுகிறிஸ்துவைக் குறித்து நமது சிந்தனை எப்படியிருக்கிறதோ அப்படித்தான் நமது ஆவிக்குரிய ஜீவியமும் இருக்கும். இயேசுவைக்குறித்த நமது சிந்தனைகள் சரியாக இருக்குமானால் நமது ஆவிக்குரிய ஜீவியமும் சரியாக இருக்கும்.
சீமோன் பேதுருவின் பிரதியுத்தரம்
சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான் (மத் 16:16).
மனுஷகுமாரனாகிய தம்மை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று ஒரு கேள்வியையும், நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று மற்றொரு கேள்வியையும் இயேசுகிறிஸ்து தமது சீஷர்களிடத்தில் கேட்கிறார். சீஷர்கள் சார்பாக சீமோன் பேதுரு பிரதியுத்தரம் கூறுகிறார். எல்லா சீஷர்களும் பேதுருவின் பிரதியுத்தரத்தை அங்கீகரித்திருக்கிறார்கள். எப்போதுமே பேதுரு எல்லோருக்கும் முன்பாக செல்லக்கூடியவர். துடிப்பாக செயல்படுகிறவர் சில சமயங்களில் ஞானமாக பேசுவார். சில சமயங்களிலோ ஞானமில்லாமல் பேசிவிடுவார். பேதுரு எதைப்பேசினாலும் தனது உள்ளத்தில் உள்ளதை உடனடியாக வெளிப்படுத்தும் சுபாவமுடையவர்.
நண்பர்கள் கூடியிருக்கும்போது அவர்கள் மத்தியில் இதுபோல துடிப்பான ஒருவர். எல்லாக் கூட்டத்திலும் இருப்பார். எல்லோருடைய சார்பாகவும் பேசுவார். எல்லாருக்காகவும் தானே முன்னின்று செயல்படுவார். பேதுரு அப்பேர்பட்ட ஒருவராக இங்கு வெளிப்படுத்தப்படுகிறார்.
சீமோன் பேதுருவின் பிரதியுத்தரம் சிறியது. ஆயினும் நிறைவானது. மெய்யானது. தெய்வீக நோக்கமுள்ளது. பேதுரு இயேசுகிறிஸ்துவை ""நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'' என்று அறிவிக்கிறார். ஜனங்கள் இயேசுகிறிஸ்துவை தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும், எலியா என்றும், எரேமியா என்றும் கூறுகிறார்கள். இயேசு செய்த அற்புதத்தை ஜனங்கள் கண்டு ""மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி'' என்றார்கள் (யோவா 6:14).
சீஷர்களோ இயேசுகிறிஸ்துவை தீர்க்கதரிசியென்று வெளிப்படுத்தாமல் கிறிஸ்து என்று வெளிப்படுத்துகிறார்கள். கிறிஸ்து என்னும் பெயருக்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருள். யூதர்கள் மேசியாவைக்குறித்து தங்களுக்கென்று சில கருத்துக்களை வைத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த வெளித்தோற்றம் இயேசுகிறிஸ்துவுக்கு இல்லை. ஆயினும் சீஷர்களோ இயேசுவை கிறிஸ்து என்று காண்கிறார்கள். ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிட்டு இயேசுகிறிஸ்துவை தங்கள் உள்ளத்தில் விசுவாசிக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்து தம்மை மனுஷகுமாரன் என்று வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் சீஷர்களோ அவரை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று அறிவிக்கிறார்கள். சீஷர்கள் இயேசுகிறிஸ்துவை ஜீவனுள்ள தேவகுமாரனாகவே அறிந்திருந்து, அவ்வாறாகவே அவரை விசுவாசிக்கிறார்கள். சீஷர்கள் கூறிய பிரதியுத்தரத்தை இயேசுகிறிஸ்துவும் அங்கீகரிக்கிறார் (மத் 16:17-19).
""நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'' என்பது ஒரு விசுவாச வாக்கியம். நாம் மறுபடியும் இயேசு கிறிஸ்துவில் பிறந்திருக்கிறோம், புதிய ஜீவனைப் பெற்றிருக்கிறோம் என்பதை இந்த விசுவாச அறிக்கை உறுதிபண்ணும். ((1யோவான் 5:1)
""குமாரன்'' என்னும் வாக்கியம் பிதாவுடன் இயேசு கிறிஸ்துவிற்குள்ள உறவைக் காண்பிக்கிறது. திரித்துவத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவருமே வெவ்வேறு ஆள்தத்துவப் பண்புடையவர்கள் என்பதை இந்த வசனம் விவரிக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் குமாரத்துவத்திற்குச் சாட்சிகள்
1. தேவன் ""என் நேசகுமாரன்'' - (மத் 3:17; மத் 17:5).
2. இயேசு ""தேவகுமாரன்'' (யோவான் 10:36).
3. பிசாசுகள் (மத் 8:29; லூக்கா 4:41);
4. காபிரியேல் (லூக்கா 1:32-35);
5. சீஷர்கள் (மத் 14:33);
6. நூற்றுக்கதிபதி (மத் 27:54);
7. பேதுரு (மத் 16:16; யோவான் 6:69);
6. யோவான் ஸ்நானன் (யோவான் 1:34);
7. மார்த்தாள் (யோவான் 11:27);
8. மாற்கு (மாற்கு 1:1);
9. எகிப்திய அதிகாரி (அப் 8:26-38);
10. நாத்தான்வேல் (யோவான் 1:49);
11. பவுல் (அப் 9:20; கலா 2:20);
12. யோவான் (யோவான் 20:31)
13. அனைவரும் ""தேவகுமாரன்'' என்றார்கள்.
14. யோவான் ""ஒரேபேறான குமாரன்'' ""பிதாவின் குமாரன்'' (யோவான் 1:18; யோவான் 3:16-18; 1யோவான் 4:9; 2யோவான் 1:3).
சாத்தான், பரிசேயர் மேலும் அநேகர் இயேசு கிறிஸ்துவைத் தேவகுமாரன் என்று புரிந்து வைத்திருந்தார்கள். (மத் 4:3-6; மத் 27:40-43; யோவான் 19:7).
""தேவகுமாரன்'' என்னும் வாக்கியம் 47 இடங்களிலும், ""ஒரேபேறான குமாரன்'' என்னும் வாக்கியம் 5 இடங்களிலும், ""என் குமாரன்'' என்னும் வாக்கியம் 8 இடங்களிலும், ""குமாரன்'' என்னும் வாக்கியம் 34 இடங்களிலும், ""அவருடைய குமாரன்'' என்னும் வாக்கியம் 24 இடங்களிலும் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிற ஜீவனுள்ள நபர்களும், காரியங்களும்
1. தேவன் (உபா 5:26; தானி 6:20,26; மத் 16:16)
2. கிறிஸ்து (எபி 7:25; வெளி 1:18)
3. வார்த்தை (1பேதுரு 1:23)
4. சிருஷ்டிகள் - விலங்குகள் ஆதி 1:21-28; ஆதி 2:19)
5. சிருஷ்டிகள் - கேரூபீன்கள் (எசே 1)
6. ஆத்துமா (ஆதி 2:7; 1கொரி 15:45)
7. ஜந்துகள் (ஆதி 7:4,23)
8. அப்பம் (யோவான் 6:51)
9. பலி (ரோமர் 12:1-2)
10. வழி (எபி 10:20; யோவான் 14:6)
11. கற்கள் (1பேதுரு 2:4-5)
12. ஊற்றுக்கள் (வெளி 7:17)
13. நம்பிக்கை (1பேதுரு 1:3)
14. தண்ணீர்கள் (யோவான் 4:10-11; யோவான் 7:37-39)
சீமோனே, நீ பாக்கியவான்
இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்தி-ருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் (மத் 16:17).
பேதுருவின் பிரதியுத்தரத்தைக்கேட்டு இயேசுகிறிஸ்து சந்தோஷப்படுகிறார். பேதுருவின் பதிலுரை தெளிவாகவும் சத்தியமாகவும் இருக்கிறது. இந்த சத்தியத்தின் வெளிப்பாடுகளை சீஷர்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த சத்தியமே சுவிசேஷத்தின் ஆதாரம். இந்த வல்லமையான சத்தியத்தை விசுவாசிகள் அனைவரும் முழு மனதோடு விசுவாசிக்கவேண்டும்.
""யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்'' என்று இயேசுகிறிஸ்து கூறியது பேதுருவுக்கு சந்தோஷமாக இருந்திருக்கும். பேதுருவின் வாழ்க்கை வரலாற்றையே இயேசு ஒரே வாக்கியத்தில் வெளிப்படுத்துகிறார். அவர் யோனாவின் குமாரன். யோனா என்பதற்கு புறா என்று பொருள். தெய்வீக சத்தியம் பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சத்தியத்தை அவருடைய குடும்பத்தில் உள்ள முன்னோர்கள் யாரும் பேதுருவுக்கு வெளிப்படுத்தவில்லை. பேதுருவின் மாம்சமும் இரத்தமும் இந்த சத்தியத்தை அவருக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற பரமபிதாவே இந்த சத்தியத்தை பேதுருவுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த சத்தியத்தை பெற்றுக்கொள்ளும் சிலாக்கியத்திற்குரிய குடும்ப பின்னணியில் பேதுரு பிறக்கவில்லை. ஆயினும் தெய்வீக கிருபை பேதுருவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இலவசமாக கொடுக்கப்படும் தேவனுடைய கிருபையே பேதுருவை மாற்றியிருக்கிறது. தேவனுடைய ரகசியங்களை புரிந்து கொள்ளும் சிலாக்கியங்களை தேவகிருபையினால் பேதுரு பெற்றிருக்கிறார்.
பேதுருவைப் பார்த்து ""நீ பாக்கியவான்'' என்று இயேசு கூறுவதற்கு முன்பாகவே அவருடைய குடும்ப பின்னணியைப்பற்றி இயேசுகிறிஸ்து பேதுருவிற்கு ஞாபகப்படுத்துகிறார். குடும்ப பாரம்பரியம் சாதாரணமாக இருந்தாலும், தேவனுடைய கிருபையை பெற்றுக்கொள்ளும் பாக்கியம் பேதுருவுக்கு கிடைத்திருக்கிறது. ஆகையினால் பேதுரு ஒரு பாக்கியவான்.
பேதுருவைப்போலவே மெய்யான விசுவாசிகள் எல்லோரும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேவனுடைய சமுகத்தில் பாக்கியவான்களாக இருக்கிறார்கள். கிறிஸ்து ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அந்த ஆசீர்வாதம் மெய்யாகவே அவர்மீது வந்து தங்கும். கிறிஸ்துவைப்பற்றிய மெய்யான அறிவே நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம். நமது சந்தோஷம் எல்லாமே இயேசுகிறிஸ்துவை பற்றி வெளிப்பாடுகளை நாம் புரிந்து கொள்வதில் தான் அடங்கியுள்ளது.
தெய்வீக ரகசியம் பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்ட விதத்தை இயேசுகிறிஸ்து இங்கு கூறுகிறார். மாம்சமும் இரத்தமும் இந்த ரகசியத்தை பேதுருவுக்கு வெளிப்படுத்தவில்லை. பேதுருவின் கல்வியினாலோ, அவருடைய பயிற்சிகள் மூலமாகவோ, முன்னோர்கள் மூலமாகவோ இந்த ரகசியம் அவருக்கு வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கிற பரமபிதாவே தெய்வீக ரகசியத்தை பேதுருவுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரட்சிக்கும் விசுவாசம் தேவனுடைய ஈவு. யாரெல்லாம் இரட்சிக்கப்படுகிறார்களோ அவர்கள் எல்லோருமே தேவனுடைய கிருபையினாலேயே இரட்சிக்கப்படுகிறார்கள். தங்களுடைய இரட்சிப்பை தேவனிடத்திலிருந்து இலவச ஈவாக பெற்றுக்கொள்கிறார்கள். பேதுருவுக்கு பரலோக பிதா தெய்வீக ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தெய்வீக ரகசியத்தை புரிந்து கொள்ளும் விசேஷித்த சிலாக்கியம் பேதுருவுக்கு கிடைத்திருக்கிறது. ஆகையினால் பேதுரு பாக்கியவானாக இருக்கிறார். பேதுருவைப்போலவே தேவனுடைய விசேஷித்த சிலாக்கியங்களை பெற்றிருக்கும் எல்லா விசுவாசிகளும் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்.
ஆவிக்குரிய காரியங்களை மாம்சத்தால் புரிந்து கொள்ள முடியாது. பரலோகக் காரியங்கள் ஆவிக்குரியவை. பரலோகப் பிதாவினால் மட்டுமே ஆவிக்குரிய காரியங்களை வெளிப் படுத்திக் காண்பிக்க முடியும்.
நீ பேதுருவாய் இருக்கிறாய்
மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்-ன்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை (மத் 16:18).
""நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'' என்று இயேசுகிறிஸ்துவை பேதுரு மகிமைப்படுத்துகிறார். தம்மை கனப்படுத்தும் தமது பிள்ளைகளை தேவனும் கனப்படுத்துவார். தம்மை அறிக்கை செய்கிறவர்களை இயேசுகிறிஸ்துவும் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக அறிக்கை செய்வார்.
திருச்சபையின் அஸ்திபாரம் இந்த வாக்கியத்தில் ஸ்தாபிக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசுவாச அறிக்கையின்மீதே திருச்சபை கட்டியெழுப்பப்படுகிறது. கிறிஸ்துவே சபைக்கு தலையாக இருக்கிறவர். அவர் பேதுருவிடம் ""மேலும் நான் உனக்கு சொல்லுகிறேன்'' என்று அறிவிக்கிறார்.
திருச்சபையை ஸ்தாபிக்கும் பிரதிநிதியாக பேதுரு தெரிந்தெடுக்கப்படுகிறார். இந்த கல்லின்மீது தமது சபையை கட்டுவதாக இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணுகிறார். இந்த கல்லைக்குறித்து வேதபண்டிதர்கள் பலவிதமாக வியாக்கியானம் பண்ணுகிறார்கள். சபை ஸ்திரமாக இருக்கவேண்டுமென்றால் அதன் அஸ்திபாரம் ஸ்திரமாக இருக்கவேண்டும். கிறிஸ்துவின் சபை மணல்மீது கட்டப்பட்ட வீட்டைப்போன்றதல்ல. கற்பாறையின்மீது கட்டப்பட்டிருக்கும் வீட்டைப்போன்று ஸ்திரமாக இருக்கக்கூடியது.
இயேசுகிறிஸ்து சபையைப்பற்றி குறிப்பிடும்போது ""என் சபை'' என்று குறிப்பிடுகிறார். ஆகையால் சபையானது எப்போதுமே கிறிஸ்துவின் சபையாகவே இருக்கிறது. இந்த சபையில் இந்த உலகத்திலிருந்து கர்த்தருக்காக வேறு பிரிக்கப்பட்டிருக்கும் தேவனுடைய பிள்ளைகள் கூட்டிச்சேர்க்கப்பட்டு அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய ஜீவனை இயேசுகிறிஸ்துவுக்கு அர்ப்பணித்திருக்கிறவர்கள்.
""என் சபையை கட்டுவேன்'' என்று இயேசுகிறிஸ்து அறிவிக்கிறார். சபையும் கிறிஸ்துவின் சபை. இந்த சபையைக் கட்டுகிறவரும் கிறிஸ்துவே. நாம் எல்லோருமே கிறிஸ்துவின் மாளிகையாக இருக்கிறோம். ஒரு கட்டிடத்தைக் கட்டவேண்டுமென்றால் அஸ்திபாரத்திலிருந்து அதை தொடர்ந்து கட்டி கொண்டிருக்கவேண்டும். அதுபோலத்தான் சபையும் தொடர்ந்து கட்டப்பட்டு வருகிறது. இந்த உலகத்திலுள்ள ஸ்தல சபைகள் ஒரு கட்டிடத்திலுள்ள வீட்டைப்போன்றது. இந்த சபையை நாம் நமது சொந்த முயற்சியினால் கட்டமுடியாது. இயேசுகிறிஸ்துவே தமது தெய்வீக ஞானத்தினாலும் வல்லமையினாலும் தமது சபையை கட்டும் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த கல்லின்மேல் என் சபையை கட்டுவேன் என்று இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணுகிறார். அஸ்திபாரம் வலுவாக இருக்கவேண்டும். அஸ்திபாரம் வலுவிழந்து போனால் கட்டிடம் ஆட்டங்கண்டு விடும். ஆகையினால் கட்டிடம் கட்டுகிறவர் வலுவான அஸ்திபாரத்தின்மீதே கட்டிடத்தை கட்டுவார்.
கிறிஸ்துவின் சபையானது கல்லின்மீது கட்டப்பட்டிருக்கிறது. கல்லானது வலுவானது, உறுதியானது, நிலைத்து நிற்கும் அஸ்திபாரமாக இருக்கிறது. காலத்தினால் இந்த கல் கரைந்துபோவதில்லை. கட்டிடத்தின் பாரத்தினால் இந்த கல் அமுங்கிப்போவதில்லை. கிறிஸ்து தமது கட்டிடத்தை மணல்மீது கட்டமாட்டார். பெருங்காற்றும் பெருமழையும் சபையை தாக்கும் என்பது இயேசுவுக்கு நன்றாக தெரியும். ஆகையினால் அவர் தமது சபையை இந்த கல்லின்மீது கட்டுகிறார்.
""இந்தக்கல்'' என்னும் வார்த்தை யாரை குறிக்கிறது, அல்லது எதைக்குறிக்கிறது என்பதைப்பற்றி வேதபண்டிதர்கள் பலவிதமாக கருத்து கூறுகிறார்கள். கிறிஸ்துவின் சபைக்கு கிறிஸ்துவே அஸ்திபாரமாக இருக்கிறார். கிறிஸ்து என்னும் கல்லின்மீதே கிறிஸ்துவின் சபை கட்டியெழுப்பப்படுகிறது. இந்த கருத்தை பொதுவாக வேதபண்டிதர்கள் எல்லோருமே அங்கீகரிக்கிறார்கள்.
ஆயினும் இந்தக் கருத்துக்கு மாற்றாக சிலர் வேறு சில கருத்துக்களையும் கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்து முதன்முதலாக பேதுருவைப் பார்த்தபோது ""நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய்'' என்றார். கேபா என்பதற்கு பேதுரு அல்லது கற்பாறை என்று பொருள் (யோவா 1:42). இயேசுகிறிஸ்து இந்த கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் என்று கூறும்போது அவர் பேதுருவையே இந்தக் கல் என்று கூறுவதாக சிலர் கருத்து கூறுகிறார்கள்.
பேதுரு ஒரு அப்போஸ்தலர். சபையானது அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் சபையானது கட்டிப்பட்டிருக்கிறது என்றும் அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார் என்றும் அப்போஸ்தலர் பவுல் தனது நிருபத்தில் எழுதுகிறார் (எபே 2:20). பேதுருவும் ஒரு அப்போஸ்தலராக இருப்பதினால் ""இந்தக்கல்'' என்னும் வார்த்தை பேதுருவைக் குறிக்கலாம் என்று சிலர் கருத்து கூறுகிறார்கள். சபையின் அஸ்திபாரத்திலுள்ள முதலாவது கற்களை அப்போஸ்தலர்கள் தங்கள் ஊழியங்களினால் போட்டார்கள் என்பது இவர்களுடைய விவாதம்.
பேதுருவும் ஒரு அப்போஸ்தலராக இருந்தார். சபையினுடைய அஸ்திபாரத்தின் ஆரம்ப கற்களை யூதர்கள் மத்தியிலும் (அப் 2) புறஜாதியார் மத்தியிலும் (அப் 10) போட்டார் என்பது சிலருடைய கருத்து. பேதுரு என்னும் கல்லாகிய அஸ்திபாரத்தின்மீது யூதர்கள் மத்தியிலும், புறஜாதியார் மத்தியிலும் சபை கட்டப்பட்டது என்று சிலர் விவாதம்பண்ணுகிறார்கள்.
இயேசுகிறிஸ்து பேதுருவைப் பார்த்து "" நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து தம்மைக்குறித்தே ""இந்தக்கல்லின்மேல் என் சபையை கட்டுவேன்'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து என்னும் ஜீவனுள்ள கல்லின்மீதே கிறிஸ்துவின் சபை கட்டப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து பேதுருவிடம் தம்மை ஜீவனுள்ள கல்லாக வெளிப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்து சபையின் ஸ்தாபகராகவும், அதன் அஸ்திபாரமாகவும் இருக்கிறார். அவரே ஆத்துமாக்களை இரட்சித்து தம்மிடத்தில் அழைத்து வருகிறார். இயேசுகிறிஸ்துவில்தான் எல்லா விசுவாசிகளும் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள். கிறிஸ்துவின்மீதுதான் எல்லா விசுவாசிகளும் இளைப்பாறுதல் அடைகிறார்கள். கிறிஸ்துவையே விசுவாசிகள் எல்லோரும் பூரணமாக சார்ந்திருக்கிறார்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்து ""இந்தக்கல்'' என்று கூறும் வார்த்தை கிறிஸ்துவையே குறிக்கும் என்பது வேதபண்டிதர்களின் பொதுவான கருத்தாகும்.
வேறு சிலர் ""இந்தக்கல்'' என்னும் வார்த்தைக்கு வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்துவைக்குறித்து பேதுரு கூறிய விசுவாச அறிக்கையே ""இந்தக்கல்'' என்று சிலர் கூறுகிறார்கள். சீமோன் பேதுரு இயேசுகிறிஸ்துவை ""நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'' என்று கூறினார். இயேசுகிறிஸ்து கூறிய ""அந்தக்கல்'' பேதுரு கூறிய இந்த விசுவாச வாக்கியமே என்பது ஒரு சிலருடைய கருத்தாகும்.
பேதுரு கூறிய விசுவாச அறிக்கையை சபையிலிருந்து அகற்றிவிட்டால் சபை ஆட்டங்கண்டு கீழே விழுந்துவிடும். இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் இல்லையென்றால் கிறிஸ்தவ மார்க்கமே ஒரு மாய்மாலமான மார்க்கமாகவே இருக்கும். சபையிலிருந்து இந்த விசுவாச அறிக்கையையும், விசுவாசத்தையும் அகற்றிப்போட்டால், அந்த சபை கிறிஸ்துவின் சபையாகயிராது. அது வேறு ஏதாவது ஒரு கூட்டமாகவே இருக்கும். சபையின் இந்த விசுவாச அறிக்கையே சபைக்கு அஸ்திபாரமாக இருக்கிறது. சபை கட்டியெழுப்பப்படுவதற்கு இந்த விசுவாச அறிக்கை தேவை. இந்த விசுவாசம் இல்லையென்றால் சபை கீழே விழுந்துவிடும்.
பாதாளத்தின் வாசல்கள்
இயேசுகிறிஸ்து தமது சபையைப்பற்றிய சத்தியத்தை மேலும் தெளிவுபடுத்துகிறார். சபையை பாதுகாத்து பராமரிப்பதாக வாக்குபண்ணுகிறார். பாதாளத்தின் வாசல்கள் கிறிஸ்துவின் சபையை மேற்கொள்வதில்லை. கிறிஸ்துவின் சபைக்கு சத்துருக்கள் இருக்கிறார்கள் என்பதும், அந்த சத்துருக்கள் சபைக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகிறார்கள் என்பதும் இந்த வாக்கியத்திலிருந்து தெளிவாகிறது. சபையின் விசுவாசிகள் இந்த சத்துருக்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணவேண்டும். சபையின் சத்துருக்களுக்கு ""பாதாளத்தின் வாசல்கள்'' என்னும் பெயரை இயேசுகிறிஸ்து கொடுக்கிறார். பாதாளத்தின் வாசல் என்பது நரகத்தை குறிக்கும் வார்த்தையாகும். ஜீவனுள்ள தேவன் பரலோகத்தில் இருக்கிறார். பரலோகம் தேவனுடைய நகரம். பாதாளமோ சாத்தானின் நகரம்.
சாத்தான் இந்த பூமியிலுள்ள ஜனங்களை தன்னுடைய நகரமாகிய பாதாளத்திற்கு கட்டி இழுத்துச்செல்ல முனைப்போடு செயல்படுகிறான். இதற்காக அவன் சபையிலுள்ள தேவனுடைய பிள்ளைகளோடு யுத்தம்பண்ணுகிறான். இந்த யுத்தத்தில் சாத்தானால் சபையை மேற்கொள்ள முடியாது. இது இயேசுகிறிஸ்து நமக்கு கொடுத்திருக்கும் ஆசீர்வாதமான வாக்குத்தத்தம்.
இந்த உலகம் இருக்கும் வரையிலும் இந்த உலகத்தில் கிறிஸ்துவின் சபையும் இருக்கும். சாத்தானால் கிறிஸ்துவின் சபையை மேற்கொண்டு அதை அழிக்க முடியாது. சில இடங்களில் கிறிஸ்துவின் சபை பெரியதாகவோ, அல்லது சிறியதாகவோ இருக்கலாம். சில இடங்களில் சபைகள் மிகுந்த வல்லமையோடு இருக்கலாம். சில இடங்களில் சபையின் விசுவாசிகள் பலவீனமாகவும் இருக்கலாம். சில சபைகளில் விசுவாசிகள் அதிக பரிசுத்தமாகவோ அல்லது பரிசுத்த குரைச்சலாகவோ இருக்கலாம். சபையிலுள்ள விசுவாசிகளின் நிலமையும், அவர்களுடைய எண்ணிக்கையும் எப்படியிருந்தாலும், பாதாளத்தின் வாசல்களால் கிறிஸ்துவின் சபையை மேற்கொள்ள முடியாது. அழிக்க முடியாது.
ஆவிக்குரிய யுத்தங்கள் சிலவற்றில், விசுவாசிகளில் சிலர் அங்கும் இங்குமாக சாத்தானிடம் தோல்வி அடைந்திருக்கலாம். ஆயினும் கிறிஸ்துவோடு இணைந்து நாம் சாத்தானுக்கு விரோதமாக யுத்தம்பண்ணும்போது நாம் ஜெயம் பெறுகிறவர்களாகவே இருப்போம். தோல்வி நமக்கு இருக்காது. சாத்தானால் நம்மை மேற்கொள்ள முடியாது.
""இந்தக்கல்'' என்பது கிறிஸ்துவைக் குறிக்கும். யோவான் 2:19; யோவான் 6:53,58 பேதுருவைக் குறிக்காது. இயேசு கிறிஸ்து மட்டுமே சபையின் அஸ்திபாரமாக இருக்கிறார். அவர் அசைக்க முடியாத கல். (1கொரி 3:11; ஏசா 28:16; சங் 118:22) பேதுரு கிறிஸ்துவின் சபையைக் கட்டுகிற ஊழியக்காரர்களில் ஒருவர். (எபே 2:20-22) பேதுருவின் கிரேக்கச்சொல் பெத்ரோஸ் இங்கு கூறப்பட்டிருக்கிற கல் பெத்ரா என்பது கன்மலை.
""கட்டுவேன்'' என்னும் வார்த்தைக்கு கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டுதல். சபையிலுள்ள விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய போஜனம் கொடுத்தல். விசுவாசிகளைச் சீஷர்களாக்குதல். சபையைக் கட்டி எழுப்புதல். (எபே 1:20-23) என்பது பொருளாகும்.
""என் சபை'' என்பது ஒரே ஒரு சபையைக்குறிக்கும். இது கிறிஸ்துவின் சரீரமாகிய சபை. இரட்சிக்கப்பட்ட எல்லா விசுவாசிகளும் இந்தச் சபையில் இருக்கிறார்கள் (1கொரி 12:13).
பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்கள்
பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார் (மத் 16:19).
சபையின் ஆளுகையைக் குறித்து இயேசுகிறிஸ்து இந்த வசனத்தில் தெளிவாக விளக்குகிறார். ஆளுகை செய்யப்படாத பட்டணத்தில் குழப்பம் மிகுந்திருக்கும். சபையிலும் ஆளுகை தேவைப்படுகிறது. சபையின் ஆளுகையை குறிப்பதற்கு திறவுகோல்களை தருவது என்பது அடையாளமான வாக்கியமாகும். இந்த திறவுகோல்களினால் கட்டவும், கட்டவிழ்க்கவும் முடியும். அப்போஸ்தலர்கள் எல்லோருக்கும், அவர்களுக்குப் பின்பு இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தை செய்யும் அனைவருக்கும் இந்த அதிகாரம் கொடுக்கப்படுகிறது.
சுவிசேஷ உபதேசத்தின் பிரகாரம் சபையை ஆளுகை செய்யவேண்டும். சபையிலுள்ள விசுவாசிகள் சபையின் ஆளுகைக்கு உட்படவேண்டும். சபையை ஆளுகை செய்யும் திறவுகோல்களை தேவன் முதன்முதலாக பேதுருவிடம் ஒப்படைத்திருக்கிறார். ஏனெனில் இவரே விசுவாசத்தின் கதவை புறஜாதியாருக்கு முதன்முதலாக திறந்தவர். எந்த மனுஷனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தன் என்றும் சொல்லாதபடிக்கு தேவன் பேதுருவுக்கு காண்பித்திருக்கிறார் (அப் 10:28).
இயேசுகிறிஸ்துவே தமது சபையை ஸ்தாபித்திருக்கிறார். சபையில் ஒழுங்கையும், கிரமத்தையும், ஊழியத்தையும், ஆளுகையையும் ஒழுங்குபடுத்துவதற்காக பல்வேறு விதமான ஊழியங்களை சபைக்கு நியமித்திருக்கிறார். தம்முடைய பிரமாணம் சபையில் சரியாக செயல்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவே இயேசுகிறிஸ்து பல்வேறு ஊழியங்களையும், ஊழியர்களையும் நியமித்திருக்கிறார்.
பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை தரும்போது ""இந்த திறவுகோல்கள் கொடுக்கப்படும்'' என்று பொதுவாக கூறாமல் ""பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்கு தருவேன்'' என்று விசேஷமாக கூறுகிறார். இயேசுகிறிஸ்துவிடமிருந்து அவருடைய ஊழியக்காரர்கள் இந்த அதிகாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள். இயேசுகிறிஸ்வின் நாமத்தினால் இந்த அதிகாரங்கள் அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
இயேசுகிறிஸ்து தமது ஊழியக்காரர்களுக்கு கொடுத்திருக்கும் அதிகாரம் ஆவிக்குரிய அதிகாரமாகும். இது பரலோக ராஜ்யத்திற்கு ஏற்ற அதிகாரம். சபையின் ஆளுகைக்காக இயேசுகிறிஸ்து கொடுத்திருக்கும் தெய்வீக அதிகாரம். இந்த அதிகாரங்களின் திறவுகோல்களை இயேசுகிறிஸ்து தமது ஊழியக்காரர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
ஒருவரை ஒரு பொறுப்பில் நியமிக்கும்போது அந்த பொறுப்பிற்குரிய ஆவணங்களையும், திறவுகோல்களையும் அவரிடம் கொடுப்பது வழக்கம். அதுபோலவே இயேசுகிறிஸ்து தமது ஊழியக்காரர்களிடம், ஊழியம் செய்யும் அதிகாரத்தை கொடுப்பதற்கு அடையாளமாக, பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களைக் கொடுக்கிறார்.
ஒரு வீட்டு எஜமான் தன் வீட்டின் திறவுகோல்களை தன்னுடைய உக்கிராணக்காரனிடத்தில் கொடுப்பான். தன்னுடைய பொருட்களெல்லாம் எந்தெந்த அறைகளில் வைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றின் திறவுகோல்களையெல்லாம் அவனிடம் கொடுப்பான். எல்லாவற்றையும் பராமரித்து பாதுகாக்க வேண்டியது உக்கிராணக்காரனின் பொறுப்பு.
கட்டுவதற்கும் கட்டவிழ்ப்பதற்கும் வல்லமை தேவைப்படுகிறது. கதவுகளை திறப்பதற்கும், அடைப்பதற்கும் அதற்குரிய திறவுகோல்கள் தேவைப்படுகின்றன. இந்த ஆளுகையை ஊழியக்காரர்கள் செய்யவேண்டும்.
அதற்குரிய அதிகாரத்தை இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியக்காரர்களுக்கு கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் பூலோகத்தில் கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். அவர்கள் பூலோகத்தில் கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.
இயேசுகிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியக்காரர்களின் நாவில் சுவிசேஷ வார்த்தைகள் நிரம்பியிருக்கும். இது மனுஷருடைய வார்த்தையல்ல. இதை தேவனுடைய வார்த்தையாகவே பார்க்கவேண்டும். ஊழியக்காரர்களின் வார்த்தைகளை மனுஷருடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ளாமல், தேவனுடைய வார்த்தையாகவே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களில் பலவிதங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று உபதேசத்தின் திறவுகோல். இதை அறிவின் திறவுகோல் எனவும் அழைக்கலாம். இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலர்களிடத்தில் தெய்வீக வல்லமை தாராளமாக இருந்தது. இவர்கள் உபதேசத்தின் திறவுகோல்களை தேவநாம மகிமைக்காக பயன்படுத்தினார்கள். மோசேயின் பிரமாணத்தில் தடைபண்ணப்பட்டிருந்தவைகளை, அப்போஸ்தலர்கள் மறுபடியும் அனுமதித்தார்கள். அதுபோல மோசேயின் பிரமாணத்தில் அங்கீகரிக்கப்பட்டவைகளை அப்போஸ்தலர்கள் தடைபண்ணினார்கள். ஒரு காரியத்தை தடை பண்ணவும், அங்கீகரிக்கவும் அப்போஸ்தலர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இயேசுகிறிஸ்து பேதுருவுக்கு சத்தியத்தை உபதேசம் பண்ணினார். எந்த மனுஷனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தன் என்றும் சொல்லாதபடிக்கு தேவன் பேதுருவுக்கு கற்றுக்கொடுத்தார். இந்த சத்தியத்தை பேதுரு முதலாவதாக கற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். தனக்கு கொடுக்கப்பட்டிருந்த பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை பேதுரு பயன்படுத்தினார்.
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் அனைவருக்கும் பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. நன்மையான காரியங்களையும், தேவன் எதிர்பார்க்கும் காரியங்களையும் செய்வதற்கு அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தை பயன்படுத்துகிறார்கள். சுவிசேஷ புஸ்தகத்தை ஜனங்களுக்கு திறந்து கொடுக்கும் அதிகாரத்தையும், மூடிப்போடும் அதிகாரத்தையும் இயேசுகிறிஸ்து அப்போஸ்தலர்களுக்கு கொடுத்திருக்கிறார். அப்போஸ்தலர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் மன்னிப்பையும் சமாதானத்தையும் ஜனங்களுக்கு பிரசங்கிக்கிறார்கள். அதே இயேசுவின் நாமத்தினாலே அவர்கள் தேவகோபாக்கினையையும் சாபத்தையும் ஜனங்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறாக இயேசுகிறிஸ்து தங்களுக்கு கொடுத்திருக்கும் தெய்வீக அதிகாரத்தினால் பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை பயன்படுத்தி கட்டவும் கட்டவிழ்க்கவும் செய்கிறார்கள். திறக்கவும் மூடவும் செய்கிறார்கள்.
பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களில் கட்டுப்பாடு என்னும் திறவுகோலும் உள்ளது. ஒருவருடைய கிரியைகளை நிதானித்துப் பார்க்கும் அதிகாரம் அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்த நீதிபதியும் சட்டத்தை இயற்றமாட்டார். ஆனால் தன்னிடத்தில் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுகிறவர், சட்டத்தின் பிரகாரம் நடந்து கொண்டாரா என்று ஆராய்ந்து பார்த்து, அதற்கேற்ற பிரகாரம் தீர்ப்பு கூறுவார்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்களுக்கு ஜனங்களை சபைக்குள் அழைத்து வரும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லா தேசங்களுக்கும் புறப்பட்டுப்போய், சுவிசேஷத்தை பிரசங்கித்து, ஜனங்களை சீஷராக்கி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள தங்களுடைய விசுவாசத்தை அறிக்கை செய்து கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்து ஜீவிக்கிறார்கள்.
அழைக்கப்பட்டவர்களை திருமண விருந்தின் பந்தியில் சேர்த்துக்கொள்ளும் உரிமையும், பந்தியில் அங்கீகரியாமல் அவர்களை விலக்கி வைக்கும் உரிமையும் ஊழியக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய பந்தியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்களை நிதானித்துப்பார்த்து, ஊழியக்காரர்கள் கர்த்தருடைய பந்தியை நடத்தவேண்டும். ஒருவரை சபைக்குள் சேர்த்துக்கொள்ளவும், சபையை விட்டு விலகி வைக்கவும் ஊழியக்காரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அப்போஸ்தல அதிகாரத்தை பயன்படுத்தவேண்டும்.
சபையைவிட்டு விலக்கப்பட்டவர்கள், மனந்திரும்பி பரிசுத்த ஜீவியம் செய்யும்போது அவர்களை மறுபடியும் சபைக்குள் சேர்த்துக்கொள்ளும் உரிமை ஊழியக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஊழியக்காரர்கள் கட்டப்பட்டிருக்கிறவர்களை கட்டவிழ்க்க வேண்டும். ஆவிகளை பகுத்தறியும் அற்புதமான வரத்தை ஊழியக்காரர்கள் பெற்றிருக்கிறார்கள். சில சமயங்களில் இந்த வரங்களை பயன்படுத்தாமல் சில ஊழியக்காரர்கள் சபையின் அங்கத்தினர்கள் சிலரை வெளித்தோற்றத்தை வைத்து நிதானித்து விடுகிறார்கள். அவ்வாறு செய்யாமல் தேவன் தங்களுக்கு கொடுத்திருக்கும் வரத்தை பயன்படுத்தி ஞானத்தோடும், விசுவாசத்தோடும் சபையை ஆளுகை செய்யவேண்டும்.
""பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்'' என்னும் இந்த வாக்குத்தத்தம் பேதுருவிற்கு மட்டும் என்று கூறப்படாமல் எல்லா விசுவாசிகளுக்கும் வாக்குத்தத்தமாகக் கூறப்பட்டிருக்கிறது.
""பரலோகராஜ்யத்தின் திறவுகோல்கள்'' என்பது அதிகாரத்தின் அடையாளம். (ஏசா 22:22; வெளி 3:7) இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்வதற்கு அதிகாரமும், வல்லமையும் என்று பொருள்படும். (மத் 18:18; மத் 16:15-20; யோவான் 14:12-15).
கட்டப்படும் காரியங்கள்
1. சங்கிலிகளால் மனுஷர் (மத் 12:29; மத் 14:3; மத் 22:13; மாற்கு 5:3; அப் 9:2,14,21)
2. களைகள் கட்டுகளாகக் கட்டப்படும் (மத் 13:30)
3. சாத்தானின் வல்லமையினால் மனுஷர் (லூக்கா 13:16)
4. பொறுப்புகளினால் மனுஷர் (அப் 20:22)
5. திருமண உடன்படிக்கையில் மனுஷர் (ரோமர் 7:2; 1கொரி 7:27,39)
6. சங்கிலிகளால் சாத்தானும் அவனுடைய தூதர்களும் (வெளி 9:14; வெளி 20:2)
7. சங்கிலிகளால் மிருகங்கள் (மத் 21:2)
8. தேவனுடைய வல்லமையினால் மனுஷர் (மத் 16:19; மத் 18:18)
கட்டவிழ்க்கப்படும் காரியங்கள்
1. பலவீனங்கள் (லூக்கா 13:12-16; மாற்கு 7:35)
2. சங்கிலிகளிலிருந்து சாத்தானும், அவனுடைய தூதர்களும் (வெளி 9:14; வெளி 20:3,7)
3. சங்கிலிகளிலிருந்தும் சிறைச் சாலைகளிலிருந்தும் மனுஷர்கள் (அப் 16:26; அப் 22:30; அப் 24:26)
4. பாவத்திலிருந்து மனுஷர் (வெளி 1:5)
5. கட்டுகளிலிருந்து மனுஷர் (அப் 2:24)
6. திருமண உடன்படிக்கைகள் (1கொரி 7:27)
7. சாத்தானுடைய வல்லமைகள் (1யோவான் 3:8)
8. விலங்குகள் (மாற்கு 11:2-4)
9. சாபத்திலிருந்து பூமி (2பேதுரு 3:10-13; ரோமர் 8:21)
10. தேவனுடைய வல்லமையினால் மனுஷர் (மத் 16:19; மத் 18:18)
கிறிஸ்துவாகிய இயேசு
அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார் (மத் 16:20).ஞ
இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு தம்மை கிறிஸ்துவாகிய இயேசு என்று வெளிப்படுத்துகிறார். இந்த ரகசியத்தை அவர்கள் உடனடியாக வெளியே சொல்லிவிடக்கூடாது. அதற்குரிய காலம் வரும் வரையிலும் அவர்கள் இந்த சத்தியத்தை ஒருவருக்கும் சொல்லாமல் தங்களுக்குள் அடக்கி வைத்திருக்கவேண்டும். பல காரணங்களுக்காக இயேசுகிறிஸ்து இந்த சத்தியத்தை சீஷர்கள் பிறருக்கு சொல்ல அனுமதிக்கவில்லை.
பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று இயேசுகிறிஸ்து பிரசங்கம்பண்ணினார். அவருடைய ராஜ்யம் இந்த காலத்தில் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்குமே ஒரு காலமுண்டு. ஒவ்வொன்றும் அதனதன் காலத்தில் அழகாக இருக்கும். வெளியில் நம் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு நம் வீட்டைக்கட்டவேண்டும் (நீதி 14:27). முதலாவது செய்யவேண்டியதை முதலாவது செய்யவேண்டும். அடுத்து செய்யவேண்டியதை அதன்பின்பு செய்து கொள்ளலாம். ஒவ்வொன்றையும் ஏற்ற காலத்தில் செய்யவேண்டும்.
இயேசுகிறிஸ்து தமது கிரியைகளினால் தாமே மேசியா என்பதை உறுதிபண்ணுகிறார். பல அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து தம்மை தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவாக வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போஸ்தலர்கள் பிரசங்கம்பண்ணினால்தான் இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் என்னும் சத்தியம் ஜனங்களுக்குத் தெரியும் என்னும் அவசியம் எதுவுமில்லை. அவர் தமது வார்த்தைகளை அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிபண்ணி, தம்முடைய கர்த்தத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு சத்தியத்தை பூரணமாக நிரூபிக்கவேண்டும். அதுவரையிலும் அந்த சத்தியத்திற்கு அதற்குரிய மேன்மை கிடைக்காது. இயேசுகிறிஸ்துவே மேசியா என்பதை தெளிவாக நிரூப்பிக்க வேண்டுமென்றால் அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழவேண்டும். இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களும், கிறிஸ்துவின் ரகசியங்களை அறிவிப்பதற்கு முன்பாக, அவர்களை பரிசுத்த ஆவியானவர் அபிஷேகிக்கவேண்டும். அந்த வேளை வரும்வரையிலும் தாமே கிறிஸ்துவாகிய இயேசு என்னும் ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு இயேசு தமது சீஷர்களுக்கு கட்டளையிட்டார்.
காலம் நிறைவேறிற்று. இயேசுகிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். மகிமையடைந்தார். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் மாம்சமான யாவர் மீதும் ஊற்றப்பட்டது. அப்போது அதுவரையிலும் மூலையில் பேசிய சத்தியங்களை பேதுரு வீட்டின் கூரையின்மீது ஏறி எல்லோருக்கும் அறிவித்தார். அமைதியாக இருக்கவும் ஒரு காலமுண்டு. பேசவும் ஒரு காலமுண்டு. சீஷர்களுக்கு இது அமைதியாக இருக்கவேண்டிய காலம்.