கள்ள உபதேசத்திற்கு விரோதமாக இயேசுவின் எச்சரிக்கை

 

கள்ள உபதேசத்திற்கு விரோதமாக இயேசுவின் எச்சரிக்கை


கொண்டுவர மறந்துபோன அப்பங்கள்


அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள் (மத் 16:5).


இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் அக்கரைக்குப் போகிறார்கள். சீஷர்கள் தங்களுக்கு அப்பங்களை கொண்டுவரவில்லை. மறந்துவிடுகிறார்கள். இந்த சம்பாஷணையில் இயேசுகிறிஸ்து தமது சீஷர்களோடு அப்பத்தைக்குறித்து பேசுகிறார். இயேசுகிறிஸ்து பொதுவாக அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சாதாரண காரியங்களை உவமையாக கூறி ஆவிக்குரிய சத்தியங்களை விளக்குவார். ஆனால் சீஷர்களோ சில சமயங்களில் ஆவிக்குரிய சத்தியத்தை புரிந்துகொள்ளாமல் பூமிக்குரிய காரியங்களில் குழப்பமடைந்திருப்பார்கள். 


பொதுவாக சீஷர்கள் இயேசுகிறிஸ்துவோடு போகும்போது தங்கள் போஜனத்திற்காக அப்பங்களையும் தங்களோடு எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் இந்த சமயத்திலோ சீஷர்கள் அப்பங்களை கொண்டுவர மறந்துவிடுகிறார்கள். ஒரு வேளை அவர்களுடைய சிந்தையும் நினைவும் ஆவிக்குரிய மேன்மையான காரியங்களில் நிறைந்திருக்கவேண்டும். பல சமயங்களில் சீஷர்கள் உலகக்காரியங்களைக்குறித்து அதிக கவனம் செலுத்தாமல் இயேசுவின் அடிச்சுவடுகளே பிரதானம் என்று நினைத்து அவற்றை பணிவோடு பின்பற்றியிருக்கிறார்கள். 


புளித்தமாவைக்குறித்த எச்சரிப்பு


இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார் (மத் 16:6).


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு மாய்மாலக்காரர்கள் மூலமாக எப்போதுமே ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது. இவர்கள் சீஷர்களுக்கு விரோதமாக தீய சிந்தனைகளை சிந்தித்து தீமையான காரியங்களை திட்டமிடும் வஞ்சனை எண்ணமுள்ளவர்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்து சீஷர்களுக்கு தமது எச்சரிப்பின் வார்த்தைகளைக் கூறுகிறார். பரிசேயர், சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று அறிவுறுத்துகிறார். 


பரிசேயர் சதுசேயர் ஆகியோரின் கொள்கைகளும் பழக்க வழக்கங்களும்  துன்மார்க்கமானவை. இவை புளித்தமாவுக்கு ஒப்புமையாக கூறப்பட்டிருக்கிறது.  நல்ல மாவில் புளித்தமாவைக் கலந்தால், அது நல்லமாவையும் புளிக்க வைத்துவிடும். அதுபோல பரிசேயர் சதுசேயர் ஆகியோர் எங்கு சென்றாலும் புளித்தமாவைப்போன்ற தங்களுடைய துன்மார்க்கமான பழக்கவழக்கங்களை ஜனங்களுக்கு கற்றுக்கொடுத்துவிடுவார்கள்.


அப்பங்களைக்குறித்த யோசனை


நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள் (மத் 16:7).


இயேசுகிறிஸ்து அப்பங்களை உவமையாக கூறி பரிசேயரையும் சதுசேயரையும் குறித்து சீஷர்களிடம் எச்சரித்துக்கூறுகிறார். ஆவிக்குரிய சத்தியங்களை விளக்குகிறார். ஆனால் சீஷர்களோ ஆவிக்குரிய ரீதியாக சிந்திக்காமல் உலகப்பிரகாரமாக சிந்திக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் எச்சரிப்பின் வார்த்தைகளை சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. தங்களோடு சீஷர்கள் அப்பங்களை கொண்டுவரவில்லை. தங்களுடைய ஞாபகமறதிக்காக இயேசுகிறிஸ்து இவ்வாறு கடிந்து பேசுவதாக சீஷர்கள் தவறாக நினைக்கிறார்கள்.


ஒருவேளை பரிசேயரோடும் சதுசேயரோடும் நெருக்கமாக பழகக்கூடாது என்றும், அவர்களோடு அமர்ந்து போஜனம் பண்ணக்கூடாது என்றும் சீஷர்கள் நினைத்திருக்கலாம். அவர்களுடைய அப்பத்தில்தான் பிரச்சனை இருக்கிறதே தவிர, அவர்கள் பிரச்சனையானவர்களல்ல. சில சமயங்களில் இயேசுகிறிஸ்து அவர்களோடு போஜனம் பண்ணியிருக்கிறார் (லூக் 7:36; 11:37; 14:1). அவர்களோடு போஜனம்பண்ணினாலும் அவர்களுடைய உபதேசங்களை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கவில்லை.


அற்பவிசுவாசிகளே


இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக் குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?           (மத் 16:8).


இயேசுகிறிஸ்துவின் வல்லமையின்மீதும், தங்களுடைய தேவைகளை சந்திப்பதற்கு கிறிஸ்து ஆயத்தமாக இருக்கிறார் என்னும் சத்தியத்தின்மீதும்  சீஷர்கள் நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்கள். ஆகையினால் இயேசு அவர்களை ""அற்பவிசுவாசிகளே'' என்று கூறி கடிந்து கொள்கிறார். சீஷர்கள் அப்பத்தைக்குறித்து கவலையோடு இருக்கிறார்களேயல்லாமல், பரிசேயரின் புளித்த மாவைக்குறித்து அறிந்து கொள்ள ஆயத்தமாகயில்லை. தாங்கள் அப்பங்களை கொண்டு வராமற்போனதற்காக இயேசுகிறிஸ்து தங்கள்மீது கோபப்படுவாரோ என்று சீஷர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பிரகாரம் இயேசு அவர்கள்மீது கோபப்படவில்லை. 


ஞாபகமறதி எல்லோருக்கும் வரும். பிள்ளைகளுக்கு ஞாபகமறதி வரும்போது அவர்களை கடிந்து கொள்வதினால் பயன் ஒன்றுமில்லை. அவர்களுடைய மறதியை அவர்களுக்கு உணர்த்தி, மறுபடியும் மறந்து போகாதவாறு எச்சரித்துக் கூறவேண்டும். நமது கடமைகளில் ஞாபகமறதி இருக்கக்கூடாது. நமது கவனக்குறைவே ஞாபகமறதிக்கு காரணம். இயேசுகிறிஸ்து தமது சீஷர்களின் கவனக்குறைவை எளிதாக மன்னித்துவிடுகிறார். ஆயினும் அவர்களுடைய விசுவாசக் குறைவுக்காக அவர்களை ""அற்பவிசுவாசிகளே'' என்று கூறி கடிந்து கொள்கிறார்.


நம்முடைய தேவைகள் அனைத்திற்கும் நாம் கர்த்தரையே சார்ந்திருக்கவேண்டும். கிறிஸ்துவின் சீஷர்களுக்கும் தேவைகள் உண்டு. தங்களுடைய தேவைகளை இயேசுகிறிஸ்து கிருபையாக சந்திப்பார் என்று சீஷர்களும் விசுவாசிக்கவேண்டும். தங்களுடைய கவனக்குறைவினாலும், ஞாபகமறதியினாலும் சில தவறுகள் நிகழ்ந்தபோதிலும், கர்த்தர் அவற்றையெல்லாம் மன்னித்து தங்களுடைய தேவைகளை சந்திப்பார் என்று சீஷர்கள் விசுவாசிக்கவேண்டும். 


தேவனுடைய மன்னிப்பை நாம் அசட்டைபண்ணிவிடக்கூடாது. தரித்திரர்களுக்கு தேவனே எல்லா உதவிகளையும் செய்வார் என்று நினைத்து நாம் தரித்திரருக்கு உதவிபுரியாமல் அவர்களை புறக்கணித்துவிடக்கூடாது. தரித்திரருக்கு உதவிபுரிவது நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிரமாணம். தரித்திரரும் தங்களுடைய தரித்திரம் நீங்க கடினமாக உழைக்கவேண்டும். அதேவேளையில் தரித்திரர்கள் பசியோடும் பட்டினியோடும் இருக்கும்போது விசுவாசிகள் அவர்களுக்கு போஜனங்கொடுத்து ஆதரிக்க முன்வரவேண்டும்.


ஒரு சிலர் உலகக்காரியங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். வேறு சிலரோ எந்தக் காரியத்தைக்குறித்தும் கவலைப்படவே மாட்டார்கள். இவ்விரண்டுமே தவறுதான். நாம் இவ்விரண்டிற்கும் இடையே உள்ள சமமான நிலையை தெரிந்துகொள்ளவேண்டும். நமது சூழ்நிலைகளை நாம் ஆராய்ந்து பார்த்து அதற்கு ஏற்றபிரகாரமாக நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் இங்கு உலகப்பிரகாரமான அப்பங்களைக்குறித்தே அதிக கரிசனையோடிருக்கிறார்கள். கிறிஸ்துவே ஜீவஅப்பம் என்பதை சீஷர்கள் புரிந்து கொள்ளவேண்டும். 


இன்னும் நீங்கள் உணரவில்லையா


 இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்; ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை          கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராம-ருக்கிறீர்களா? (மத் 16:9,10).


இயேசுகிறிஸ்து அற்புதமாக போஷிக்கிறவர். இதற்கு முன்பு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கும், ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்கும் பகிர்ந்து கொடுத்து அற்புதம் செய்திருக்கிறார். சீஷர்கள் தான் இந்த அப்பங்களையெல்லாம் ஜனங்களுக்கு கொடுத்து பந்திபரிமாறினார்கள். இந்த அற்புதத்தை சீஷர்கள் மறந்துவிடக்கூடாது. இயேசுகிறிஸ்துவின் தெய்வீக வல்லமையினால் இந்த அற்புதம் நடைபெற்றது. அவருடைய வல்லமையின்மீது சீஷர்களின் விசுவாசம் குறைந்துபோகக்கூடாது. 


இயேசுகிறிஸ்துவின் கரங்களிலிருந்து ஊற்றைப்போல ஆசீர்வாதங்கள் தொடர்ந்து நிரம்பி வழிந்துகொண்டேயிருக்கிறது. கிறிஸ்துவின் ஆசீர்வாதம் குளத்திலுள்ள தண்ணீரைப்போன்றதல்ல. குளத்திலுள்ள தண்ணீரை வெளியேற்றினால் தண்ணீரின் அளவு குறைந்துபோகும். குளம் வற்றிப்போகும். கிறிஸ்துவின் ஆசீர்வாதமோ நீரூற்றைப்போன்றது தொடர்ந்து ஆசீர்வாதம் வந்துகொண்டேயிருக்கும். நீரூற்று வற்றிப்போகாது.


இயேசுகிறிஸ்து அற்புதமாக போஜனம் கொடுத்த சம்பவத்தை சீஷர்கள் உணராதிருக்கிறார்கள். அதைக்குறித்து இயேசு ""உணராதிருக்கிறது எப்படி'' என்று தம்முடைய சீஷர்களிடம் கேட்கிறார். கிறிஸ்துவின் சீஷர்கள் ஞாபகமறதி உடையவர்கள். சத்தியங்களை புரிந்துகொள்வதில் தாமதம் பண்ணுகிறவர்கள்.  


ஆகையினால் இயேசுகிறிஸ்து  அவர்களிடம் ""மீதியானதை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்'' என்று கேள்வி கேட்கிறார். இந்த கூடைகள் அவர்களுக்கு நினைவுகூருவதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூடைகளை பார்க்கும்போது தேவனுடைய கிருபையையும் இரக்கத்தையும் சீஷர்கள் நினைவுகூரவேண்டும்.


ஜனங்களுடைய தேவைகளை சந்தித்ததுபோக மீதியானதை கூடைகள் நிறைய எடுக்கும் அளவிற்கு இயேசுகிறிஸ்து ஆசீர்வதிக்கிறவர். அப்படிப்பட்ட தாராள குணமுடைய தேவன், தற்போது தங்களுடைய தேவைகளையும் சந்திப்பார் என்று சீஷர்கள் அவருடைய வல்லமையின்மீது நம்பிக்கை வைக்கவேண்டும். அந்த நம்பிக்கையில்லாமல்  தங்களிடத்தில் தற்போது அப்பங்கள் இல்லையே என்று சீஷர்கள் வருத்தப்படுகிறார்கள்.


நம்முடைய வாழ்க்கையிலும் தற்போது நம்மிடத்தில் இல்லாத காரியங்களுக்காக வருத்தப்படுகிறோம். தேவைகள் சந்திக்கப்படுமா என்று சந்தேகப்படுகிறோம். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் தேவன் நமக்கு செய்த நன்மைகளையும், தமது தெய்வீக வல்லமையை தேவன் வெளிப்படுத்திய சம்பவங்களையும், அவருடைய நன்மைகளை நாம்          அனுபவித்த சம்பவங்களையும் மறவாமல் நினைவுகூரவேண்டும். அவ்வாறு நினைவுகூர்ந்தால் நமது தற்காலத்து தேவைகளை சந்திப்பதற்கு நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து போதுமானவர் என்னும் நிச்சயம் நம்முடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்திருக்கும். 


நீங்கள் உணராதிருக்கிறது எப்படி


பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார் (மத் 16:11).


பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு எச்சரிக்கிறார். ஆனால் அவர்களோ தாங்கள் அப்பங்களை கொண்டு வராதபடியினால் தங்களை எச்சரிப்பதாக தங்களுக்குள்ளே யோசனை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் எச்சரிப்பை சீஷர்கள் தவறுதலாக புரிந்து கொள்கிறார்கள். அவர்களுடைய முரண்பாட்டை இயேசுகிறிஸ்து கடிந்து கூறுகிறார். ""நீங்கள் உணராதிருக்கிறது எப்படி'' என்று அவர்களிடம் கேட்கிறார்.


தெய்வீக காரியங்களை இயேசுகிறிஸ்து உபதேசம்பண்ணும்போது அந்த சத்தியங்களை சீஷர்கள் விரைவாக புரிந்துகொள்வதில்லை. மிகவும் தாமதமாகவே புரிந்துகொள்கிறார்கள். இயேசுகிறிஸ்து அப்பத்தைக்குறித்து சொல்லவில்லை. பிதாவின் சித்தத்தை  செய்வதே இயேசுகிறிஸ்துவுக்கு போஜனமாகவும் பானமாகவும் இருக்கிறது. ஆனால் சீஷர்களுடைய மனதில் உலகப்பிரகாரமான அப்பமே இருக்கிறது. ஆவிக்குரிய சத்தியங்களை விளக்குவதற்கு இயேசுகிறிஸ்து உலகப்பிரகாரமான காரியங்களை உவமையாக பயன்படுத்துகிறார். சீஷர்கள் உலகப்பிரகாரமான உவமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆவிக்குரிய சத்தியத்தையோ புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். 


சீஷர்கள் அறிந்துகொள்கிறார்கள்


அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்         (மத் 16:12).


நீண்ட சம்பாஷணைக்குப் பின்பு  சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை அறிந்துகொள்கிறார்கள். இயேசுகிறிஸ்து பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக் குறித்தே தமது சீஷர்களை எச்சரிக்கிறார். அவர்களுடைய உபதேசம் புளித்தமாவைப் போன்றது. நல்ல மாவையும் புளித்தமாவானது ƒபுளிப்பாக்குவதுபோல, பரிசேயரும் சதுசேயரும் தங்கள் தீய உபதேசத்தினால் நல்லவர்களையும் கெடுத்துவிடுவார்கள். ஆகையினால் அவர்களுடைய உபதேசங்களைக்குறித்து எச்சரிக்கையோடிருக்க வேண்டும்.


தமது உபதேசத்தை சீஷர்கள் புரிந்துகொள்ளும் வரையிலும் இயேசுகிறிஸ்து தமது  சத்தியத்தை திரும்ப திரும்ப உபதேசிக்கிறார். தங்களுடைய உள்ளத்தில் சீஷர்கள் ஆவிக்குரிய சத்தியத்தை உணர்ந்து கொள்ளவேண்டும். ஞானத்தின் ஆவியினால் இயேசுகிறிஸ்து உபதேசம் பண்ணுகிறார். சீஷர்களுடைய இருதயத்தில் ஆவியானவர் கிரியை செய்து அவர்களுக்கு சத்தியத்தை விளங்கப்பண்ணுகிறார். சத்தியத்தை வெளிப்படுத்தும் ஆவியானவர் வார்த்தையின் ரகசியத்தையும் சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.  சத்தியம் பொக்கிஷத்தைப்போன்றது. பூமியிலுள்ள பொக்கிஷத்தை தேடி தோண்டியெடுப்பது போன்று, சத்தியத்தின் பொக்கிஷத்தை பிரயாசப்பட்டு புரிந்துகொள்ளவேண்டும்.  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.