பாடுகளை அனுபவிக்க இயேசு தமது சீஷர்களை ஆயத்தப் படுத்துதல்
சீஷர்களுக்கு ஊழிய உபதேசம் மத் 10 : 16-42
இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுக்கு அவர்களுடைய ஊழியப்பாதைகளில் பாடுகளும் பிரச்சனைகளும் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. தாங்கள் செய்யும் ஊழியத்தில் தங்களுக்கு பிரச்சனைகள் வரும் என்பதை ஊழியக்காரர்கள் எதிர்பார்த்து அதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். பிரச்சனைகளை எப்படி தாங்கிக்கொள்வது, பிரச்சனைகள் மத்தியிலும் எவ்வாறு தொடர்ந்து ஊழியத்தில் ஈடுபடுவது போன்ற காரியங்களை குறித்து இயேசுகிறிஸ்து இந்த வசனப்பகுதியில் உபதேசம் பண்ணுகிறார்.
இங்கு கூறப்பட்டிருக்கும் சத்தியம், அப்போஸ்தலர்கள் இப்போது செய்யப்போகும் ஊழியத்திற்கு மாத்திரமல்ல, இனிமேல் செய்யப்போகும் ஊழியத்திற்கும் ஆலோசனையாக உள்ளது. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு அப்போஸ்தலர்களின் ஊழியம் விவரிவடைந்தது. அவர்கள் உலக முழுவதும் சென்று இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷச் செய்தியை பிரசங்கித்தார்கள். ஊழியங்களில் பல பாடுகளையும் வேதனைகளையும் அனுபவித்தார்கள். சிலர் இரத்த சாட்சிகளாகவும் மரித்தார்கள். இவற்றையெல்லாம் எதிர்பார்த்து இயேசுகிறிஸ்து இந்த வசனப்பகுதியில் அவர்களுக்கு வரப்போகும் பிரச்சனைகளைக் குறித்து முன்னறிவிக்கிறார்.
அப்போஸ்தலர்கள் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஊழியத்திலோ பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. பிரச்சனைகள் வரும் முன்பே அவற்றைப் பற்றி எச்சரித்துக் கூறுவது மிகவும் நல்லது. ஒரு பிரச்சனையும் வராது என்று கூறிவிட்டு, திடீரென்று பிரச்சனைகள் வந்தால் அதிர்ச்சியாக இருக்கும். ஆகையினால் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை ஆரம்பத்திலேயே நல்ல அஸ்திபாரம் போட்டு கட்டியெழுப்புகிறார். பிரச்சனைகள் வரும்போது அப்போஸ்தலர்கள் இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களை நினைவுகூர்ந்து பிரச்சனைகளை தாங்கிக்கொள்வார்கள். பிரச்சனைகள் வழியாக கடந்து சென்று கர்த்தருக்காக தொடர்ந்து ஊழியம் செய்வார்கள்.
இந்த வசனப்பகுதியில் இயேசுகிறிஸ்து கூறியிருக்கும் உபதேசங்களை நான்கு பிரிவாக பிரிக்கலாம். அவையாவன :
1. ஊழியத்தில் எதிர்பார்க்க வேண்டிய பிரச்சனைகள்.
2. ஊழியத்தில் யார் மூலமாக பிரச்சனைகள் வரும்.
3. ஊழியத்தில் பிரச்சனைகள் வரும்போது கர்த்தர் கூறும் ஆலோசனைகள்.
4. ஊழியத்தில் பிரச்சனைகள் வரும்போது கர்த்தர் கூறும் ஆறுதல்கள்.
அப்போஸ்தலர்கள் கர்த்தருடைய ஊழியத்தை செய்யும்போது தங்களுக்கு பிரச்சனைகள் வருவதை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய பிரச்சனைகளை இயேசுகிறிஸ்து தமது தீர்க்கதரிசனத்தினால் காண்கிறார். பிரச்சனைகள் இருந்தாலும் அவர்களை ஊழியத்திற்கு அனுப்புகிறார். பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் இயேசுகிறிஸ்து இந்த பூமியில் ஊழியம் செய்தார்.
ஊழியம் செய்யும்போது தங்களுக்கு பிரச்சனைகள் வந்தால் அப்போஸ்தலர்கள் ஆச்சரியப்படக்கூடாது. அதிர்ச்சியடையக்கூடாது. பிரச்சனைகள் வரும் என்று ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்டிருப்பதினால் அப்போஸ்தலர்கள் தங்களுடைய விசுவாசத்தை கர்த்தருக்குள் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஓநாய்களுக்குள்ளே அனுப்பப்படும் ஆடுகள்
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள் (மத் 10:16).
அப்போஸ்தலர்களுக்கு பிரச்சனைகள் நிச்சயமாகவே வரப்போகிறது. ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புவதுபோல இவர்களை அனுப்புவதாக கூறுகிறார். ஆடுகள் சாதுவான பிராணி. இவற்றால் தங்களைத்தாங்களே பாதுகாத்துக் கொள்ளமுடியாது. திடீரென்று ஓநாய்கள் வரும்போது இவற்றால் தப்பித்து ஓடமுடியாது. பயந்து நடுங்கும். இந்த ஆடுகளைப்போலத்தான் ஊழியக்காரர்களும் உலகத்தார் மத்தியில் அனுப்பப்படுகிறார்கள். சூழ்நிலை பயப்படும்படியாக இருக்கிறது. ஓநாய்கள் ஆடுகளை பீறிப்போடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இவற்றின் மத்தியிலும் ஒரு ஆறுதலான சத்தியம் என்னவென்றால் நம்மை அனுப்புகிறவர் நம்மை அழைத்த கர்த்தரே. நம்மை அனுப்புகிறவர் நம்மை பாதுகாக்க வல்லவர். ஆகையினால் ஓநாய்கள் மத்தியில் ஊழியம் செய்யும்போது ஓநாய்களைப் பார்த்து பயப்படக்கூடாது. நம்மை பாதுகாக்கும் கர்த்தரையே நோக்கிப் பார்த்து பலப்பட வேண்டும்.
மாய்மாலக்காரர்கள், கள்ளத்தீர்க்கதரிசிகள், பேராசைப்பிடித்த அதிகாரிகள் ஆகியோருக்கு ஓநாய் அடையாளம்.
சர்ப்பம் யாரையும் நேரடியாகத் தாக்காது. உடல் முழுவதும் விஷம் நிறைந்தது. மறைந்திருந்து தாக்கும். ஆனால் புறாக்களோ கபடற்றவை. பழங்காலத்தில் சூது, சாதுரியம், ஞானம் ஆகியவற்றிற்குச் சர்ப்பங்களை அடையாளமாக சொல்வார்கள். (ஆதி 3:1; 2கொரி 11:3) சாத்தான் சர்ப்பத்தைப் போல மாய்மாலக்காரன். (மத் 23:33; வெளி 12:9)
ஆலோசனைச்சங்கத்திற்கு ஒப்புக்கொடுக்கும் மனுஷர்
மனுஷரைக்குறித்து எச்சரிக்கை யாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள். அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள் (மத் 10:17,18).
கர்த்தர் நம்மை மனுஷர் மத்தியில் ஊழியம் செய்யுமாறு அனுப்புகிறார். எல்லா மனுஷரும் நமது ஊழியத்திற்கு ஆதரவாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மனுஷர்களில் சிலர் நமக்கும் நம்முடைய ஊழியங்களுக்கு சத்துருக்களாக இருப்பார்கள். நமக்கு பிரச்சனைகளை உண்டுபண்ண முயற்சி பண்ணுவார்கள். அவர்களுடைய தீய முயற்சியில் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள். நம்மை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள். தங்களுடைய ஜெபாலயங்களில் நம்மை வாரினால் அடிப்பார்கள். இவையெல்லாமே நமக்கு எதிராக சத்துருக்கள் மேற்கொண்ட முயற்சிகளில் அவர்களுக்கு கிடைத்த வெற்றிகளாகும். சட்டம் என்னும் பெயரிலும், நீதி என்னும் போர்வையிலும் நல்லவர்கள் துன்புறுத்தப்படுவது பல்லாண்டு காலமாக நடைபெற்றுவருகிறது. இது ஒரு சரித்திர உண்மை.
நம்முடைய சத்துருக்கள் நம்மை அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோய் நம்மீது குற்றம் சுமத்துவார்கள். நாம் ஊழியம் செய்யும்போது நமக்கு சாதாரண ஜனங்களிடமிருந்து மாத்திரமே பிரச்சனைகள் வரும் என்று நினைக்கக்கூடாது. அதிகாரத்தில் உயர்பதவிகளை வகிப்பவர்கள் மூலமாகவும் நமக்கு பிரச்சனைகள் வரலாம். இந்த சம்பவங்களெல்லாம் நிறைவேறி உள்ளதை அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்திலிருந்து நாம் வாசித்து அறிந்து கொள்ளலாம்.
நீதிமன்றங்களிலும், ஆலோசனைச்சங்கங்களிலும் விசுவாசிகளுக்குப் பிரச்சனைகள் இருக்கும். (மத் 10:17-18) எல்லா ஜெபாலங்களிலும் ஆலோசனைச் சங்கங்கள் இருக்கும். ஒவ்வொரு சங்கத்திலும் 3 முதல் 23 புருஷர்கள் வரையிலும் ஆலோசனைக் காரர்களாக இருப்பார்கள். எல்லா வழக்குகளையும் இவர்களே விசாரிப்பார்கள். இவர்களுடைய விசாரிப்புக்குப் பின்பே, வழக்குகள் சனகெரிப் எனப்படும் பெரிய நீதிமன்றத்திற்குச் செல்லும். ஆலோசனைச் சங்கங்கள் விசுவாசிகளைப் புறம்பே தள்ளும். (யோவான் 9:22) வாரினால் அடிக்கும் (உபா 25:3; 2கொரி 11:24) கல்லால் அடித்துக் கொல்லும். (உபா 22:24; யோவான் 8:5; அப் 7:58; அப் 14:19)
பெற்றோரை கொலைசெய்யும் பிள்ளைகள்
சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள் (மத் 10:21).
தாங்கள் மரணத்திற்கு ஒப்புக் கொடுக்கப்படுவதையும் ஊழியக்காரர்கள் எதிர்பார்க்கவேண்டும். நம்முடைய சத்துருக்கள் நம்மை துன்புறுத்துவதோடு நிறுத்திக் கொள்ளமாட்டார்கள். அவர்களுடைய கோப வெறி சாதாரணமாக தணியாது. ஆகையினால் பரிசுத்தவான்களின் விசுவாசமும் பொறுமையும் கர்த்தருக்குள் உறுதியாக இருக்கவேண்டும். தங்களுடைய மரணத்தை எதிர்பார்ப்பதற்கும் ஆயத்தப்படவேண்டும். பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியாக மரிப்பதை தேவனுடைய தெய்வீக ஞானம் அனுமதிக்கிறது. பரிசுத்தவான்கள் இரத்த சாட்சியாக மரிக்கும்போது அவர்கள் சிந்தும் இரத்தம் சத்தியத்திற்கு முத்திரையிடுகிறது. சபைக்கு விதையாக விதைக்கப்படுகிறது.
கர்த்தருடைய ஊழியத்தை செய்யும் பரிசுத்தவான்கள் தங்களுடைய மரணத்திற்கு பயப்படக்கூடாது. மரணத்திற்கு பயந்து ஊழியத்தை விட்டு விலகிப்போய் விடக்கூடாது. மரணம் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று இயேசுகிறிஸ்து எச்சரித்திருக்கிறார். இந்த உபதேசத்தை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு கர்த்தருக்காக பணிவோடும் விசுவாசத்தோடும் ஊழியம் செய்யவேண்டும். ஊழியத்தின் நிமித்தமாக மரணம் வந்தாலும் அதை சந்தோஷமாக எதிர்கொள்ளவேண்டும். இந்த விசுவாசமும் உறுதியும் நம்மிடத்தில் இருக்கும்போது கர்த்தருடைய ஊழியத்திற்கு எதிராக சாத்தான் போடும் திட்டங்களெல்லாம் தோற்றுப்போகும். கிறிஸ்துவின் ராஜ்யம் விஸ்தாரமாகும்.
நம்மை பகைக்கிறவர்கள்
என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் (மத் 10:22).
இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் இந்த உலகத்தில் உள்ள ஜனங்கள் நம்மை பகைப்பார்கள். இந்த பகை உணர்வே எல்லா உபத்திரவங்களுக்கும் மூல காரணம். கிறிஸ்து யாரை நேசிக்கிறாரோ அவரை இந்த உலகம் பகைக்கிறது. இந்த உலகம் இயேசுகிறிஸ்துவையும் பகைத்தது. ""முகாந்தரமில்லாமல் இயேசுகிறிஸ்துவை பகைத்தார்கள்'' (யோவா 15:25). கர்த்தருக்காக ஊழியம் செய்யும் நாம் அவருடைய சாயலை பெற்றிருக்கிறோம். அவருடைய காரியமாக நாம் ஊழியம் செய்கிறோம். முகாந்தரமில்லாமல் இயேசுகிறிஸ்துவை பகைத்த இந்த உலகம், அவருடைய சாயலாக இருக்கிற நம்மையும் பகைப்பது அதிக நிச்சயம்.
மற்றவர்கள் நம்மை வெறுக்கும்போது நமக்கு வேதனையாக இருக்கும். நமது சொந்த காரியமாக நம்மை யாராவது வெறுத்தால் அது உலகப்பிரகாரமான வெறுப்பு. ஆனால் நாம் இயேசுகிறிஸ்துவுக்காக ஊழியம் செய்யும்போது அவருடைய நாமத்தின் நிமித்தம் எல்லோரும் நம்மை வெறுப்பார்கள். இதுவே நம்முடைய சத்துருக்கள் நம்மை பகைப்பதற்கு மூல காரணம். அவர்கள் நம்மை வெறுக்கவில்லை. நம்மை அனுப்பிய இயேசுகிறிஸ்துவை வெறுக்கிறார்கள். நல்ல காரணத்திற்காக நாம் ஜனங்களுடைய கோபத்தை தாங்கிக்கொள்ளலாம். நம்முடைய பிரச்சனைகளை சக ஊழியர்களிடம் பகிர்ந்து கூறலாம். ƒவிசேஷமாக நம்முடைய எல்லாப் பிரச்சனைகளையும் தேவனுடைய சமுகத்தில் சமர்ப்பித்துவிட்டு, அவருக்காக தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டும்.
பெயல்செபூல்
சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா (மத் 10:25).
கர்த்தருக்காக நாம் ஊழியம் செய்யும்போது ஜனங்கள் நம்மை பகைக்கிறார்கள். வெறுக்கிறார்கள். அத்தோடு நின்றுவிடுவதில்லை. நம்மீது தாராளமாக குற்றம் சுமத்துகிறார்கள். நம்மை அவமானப்படுத்துவதற்காக நமக்கு அவப்பெயர்களையும் கொடுக்கிறார்கள். நம்முடைய நடத்தையை எப்படியெல்லாம் அவமானப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் அவமானப்படுத்துவதற்கு துடிக்கிறார்கள். நம்மை தூஷிக்கிறவர்களின் உண்மையான சுபாவம் அருவருப்பானது. தங்களுடைய உண்மையான குணத்தை அவர்கள் வெளிப்படுத்துவதில்லை. ஆட்டுத்தோல்களை போர்த்துக்கொண்டிருக்கும் ஓநாய்களைப்போல இந்த உலகத்தில் அலைகிறார்கள். அப்படிப்பட்ட அநியாயக்காரர்கள்தான் கர்த்தருக்காக ஜனங்களுக்கு நன்மைசெய்யும் ஊழியக்காரர்களை தூஷிக்கிறார்கள்.
இவர்கள் இயேசுகிறிஸ்துவை பெயல்செபூல் என்று அழைத்தார்கள். இந்த பெயர் பிசாசுகளின் தலைவனுக்கு கொடுக்கப்படும் பெயராகும். தேவனுடைய குமாரனை ஜனங்கள் பிசாசுகளின் தலைவன் என்று அழைத்து அவமானப்படுத்தினார்கள். இயேசுகிறிஸ்து பிசாசுக்கு எதிர்த்து நின்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். பிசாசுகள் மனுஷருக்கு தீங்கு செய்யும் என்பதும் ஜனங்களுக்குத் தெரியும். இயேசுகிறிஸ்துவை பிசாசுகளின் தலைவன் என்று கூறுவதினால், அவர் ஜனங்களுக்கு நன்மை செய்ய வந்தவரல்ல என்றும், ஜனங்களுக்கு தீமை செய்யவே வந்தவர் என்றும் பொய் விளம்பரம் செய்கிறார்கள்.
சாத்தானுக்கு சத்துருவாக இருக்கிறவரை இவர்கள் சாத்தானுடைய சிநேகிதர் என்று அறிவிக்கிறார்கள். சாத்தானுடைய பிசாசுகளை இயேசுகிறிஸ்துவின் சிநேகிதர்கள் என்று கூறுகிறார்கள். அப்போஸ்தலர்கள் பிசாசின் கோட்டையை தகர்த்தெரிந்தார்கள். அவர்களையும் இந்த உலகம் பிசாசுகள் என்றே அழைத்தது.
சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் தேவனுக்கு எதிராக யுத்தம்பண்ணுகின்றன. அவற்றால் வெற்றிகரமாக யுத்தம் பண்ண முடியாது. இருந்தாலும் பிசாசுகள் தாங்கள் வெற்றிபெறுவதுபோன்று பாசாங்கு பண்ணுகின்றன. யுத்தம்பண்ணுவதுபோன்று நடிக்கிறார்கள். பொய் பிரச்சாரம் பண்ணுகிறார்கள். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகத்தான் அவர்கள் தேவகுமாரனை பெயல்செபூல் என அழைத்தார்கள். கர்த்தருடைய அப்போஸ்தலர்களை இதைவிட மோசமான பெயரினால் அழைத்து அவமானப்படுத்துவார்கள்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் இயேசு கிறிஸ்துவைவிட மேன்மையடையலாம் என்று எதிர்பார்க்கக்கூடாது. கிறிஸ்து மட்டுமே கர்த்தரும், ஆண்டவருமாக இருக்கிறார். (அப் 2:36)
ஒரு சீஷனுடைய வாழ்வில் அவன் தன் போதகனைப்போல உயரலாம். விசுவாசிகளும் கிறிஸ்துவைப்போல ஆகவேண்டும். இதன் பொருள் இயேசு கிறிஸ்துவின் குணாதிசயங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். (1கொரி 11:1) இயேசுவைப் போன்று உயர்ந்துவிட்டதாக யாரும் பெருமைப்படக்கூடாது.
நாம் எந்தெந்த வழிகளில் இயேசுவைப் போல ஆகவேண்டும்
1. நீதியில் (1யோவான் 3:7; யோவான் 15:10-14; 1கொரி 1:30; எபே 1:4; எபே 5:27)
2. உலகக்காரியங்களிலிருந்து விடுதலை பெறுவதில் (யோவான் 17:14-16; ரோமர் 12:1; யாக் 4:4; 1யோவான் 2:15)
3. சுயத்தைச் சிலுவையில் அறைவதில் (ரோமர் 6; கலா 2:20)
4. புதிய ஜீவனில் ஜீவிப்பதில் (ரோமர் 6; கலா 5:16-26; எபே 4:1-24)
5. உபத்திரவங்களைச் சகித்துக்கொள்வதில் (மத் 10:25; யோவான் 15:18-20; மாற்கு 10:30)
6. கிரியைகளில் (யோவான் 14:12; மாற்கு 9:23; மாற்கு 16:17-18; மத் 17:20; மத் 21:22)
7. ஆவியின் கனியில் (கலா 5:22-23; யோவான் 13:34; யோவான் 15:11-13)
8. தேவனுடைய ஊழியத்திற்காக வேறுபிரிக்கப்பட்டு இருப்பதில் (யோவான் 10:36; யோவான் 17:17-19; யோவான் 20:21)
9. வெளிச்சத்தில் நடப்பதில் (1யோவான் 1:7)
10. தேவனோடு ஐக்கியமாக இருப்பதில் (யோவான் 17:11,21-23)
11. மற்றவர்களுக்காகப் பாடு அனுபவிப்பதில் (1பேதுரு 2:21-23; 1பேதுரு 3:18-4:1; பிலி 3:10)
12. ஜீவியத்திலும், நடத்தையிலும் (1யோவான் 2:6; 1யோவான் 4:17)
13. சோதனைகளைச் சகித்துக் கொள்வதில் (எபி 2:18; எபி 4:14-16; யாக் 1:2,12)
14. தேவனுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்துவதில் (யோவான் 3:34; யோவான் 7:37-39; யோவான் 14:12; எபே 3:19)
""பெயல்செபூல்'' என்பது பெலிஸ்திய தேவதை. இது ஈக்களின் தெய்வம். (2இராஜா 1:2) யூதர்கள் இதை பீல்சிபப் என்று மாற்றினார்கள். இது குப்பை மேட்டுத் தெய்வம் என்றும், பிசாசுகளின் தலைவன் என்றும் அழைக்கப்படுகிறது (மத் 12:24-32; மாற்கு 3:22; லூக்கா 11:15-19)
பட்டயமும் பிரிவினையும்
பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன் (மத் 10:34,35).
தாம் இந்த பூமியின் மேல் பட்டயத்தை அனுப்ப வந்ததாகவும் குடும்பத்தில் பிரிவினை உண்டாக்க வந்தாகவும் இயேசுகிறிஸ்து கூறுகிறார். இயேசுகிறிஸ்து இந்த பூமியின்மீது தற்காலிக சமாதானத்தை அனுப்ப வரவில்லை. இந்த உலகப்பிரகாரமான ஐசுவரியங்கள், பதவி சுகங்கள் ஆகியவையெல்லாம் தற்காலிகமான சமாதானங்களாகும். இயேசுகிறிஸ்து இதுபோன்ற சாதாரண சமாதானத்தை கொடுப்பதற்குப் பதிலாக, நமக்கு தேவனோடு மெய்யான சமாதானத்தைக் கொடுக்கிறார். இது நித்திய சமாதானம். இதனால் நமது மனச்சாட்சியில் மெய்யான சமாதானம் உண்டாகும். நமது சகோதரரோடு சமாதானமாக இருப்போம். ஆயினும், நாம் மற்றவர்களோடு சமாதானமாக இருந்தாலும் நமக்கு இந்த உலகத்தில் உபத்திரவம் உண்டு.
இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லோருமே இயேசுகிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் இந்த உலகம் முழுவதிலும் பூரண சமாதானம் நிரம்பியிருக்கும். ஆனால் இந்த உலகத்தில் ஒரு சிலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். வேறுசிலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் அவரை புறக்கணித்து விட்டார்கள். இவர்களுக்கு மத்தியில் கர்த்தருடைய ஊழியத்தை செய்யும் பரிசுத்தவான்கள் துன்மார்க்கருடைய உபத்திரவங்களை எதிர்பார்த்தும், சகித்தும் ஊழியம் செய்யவேண்டும்.
நாம் கிறிஸ்துவுக்காக இந்த உலகத்தில் ஊழியம் செய்யும்போது சமாதானத்தை எதிர்பார்க்காமல் பட்டயத்தை எதிர்பார்க்கவேண்டும். கிறிஸ்து இந்த உலகத்திற்கு சத்திய வசனம் என்னும் பட்டயத்தை கொடுப்பதற்காக வந்தார். விசுவாசிகள் சத்தியம் என்னும் பட்டயத்தைக் கொண்டே இந்த உலகத்தோடும், உபத்திரவம் என்னும் பட்டயத்தோடும் யுத்தம்பண்ண வேண்டும். உபத்திரவம் என்னும் பட்டயத்தினால்தான் இந்த உலகம் கர்த்தருடைய பரிசுத்தவான்களோடு யுத்தம்பண்ணுகிறது. ஸ்தேவான் இயேசுகிறிஸ்வுக்காக சாட்சி கூறியபோது அவனுடைய சாட்சியைக் கேட்டவர்கள் மூர்க்கமடைந்து அவனைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள் (அப் 7:54). இவர்களுடைய கொடூரமான இருதயங்களை கர்த்தருடைய வசனம் என்னும் பட்டயத்தினால் வெட்டவேண்டும். இயேசுகிறிஸ்து தமது சுவிசேஷத்தை இந்த உலகம் முழுவதும் அனுப்பியிருக்கிறார். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் சுவிசேஷம் என்னும் பட்டயத்தை தங்களுடைய ஆவிக்குரிய யுத்தத்தில் சாத்தானுக்கு விரோதமாக பயன்படுத்தவேண்டும். இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு பட்டயத்தை அனுப்ப வந்தேன் என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து அனுப்பியிருப்பது சுவிசேஷத்தின் பட்டயம். சுவிசேஷம் என்னும் அந்த பட்டயத்தை கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய நாம் பற்றிக்கொள்ள வேண்டும்.
நமது ஊழிய அனுபவத்தில் சமாதானத்தை எதிர்பார்க்காமல் பிரிவினையை எதிர்பார்க்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்து நமக்கு எச்சரித்துக் கூறுகிறார். இயேசுகிறிஸ்து மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தாக கூறுகிறார். சுவிசேஷத்தினால் குடும்பத்திற்குள் பிரிவினை வராது. சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கிறவர்கள் மூலமாகவே குடும்பத்தில் பிரிவினைகள் உண்டாகும். விசுவாசிக்கிறவர்கள் அவிசுவாசிகளை கடிந்து கூறுவார்கள். இதனால் விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளும் இடையில் பிரிவினை வரும்.
இந்த உலகத்தில் ஏராளமான யுத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த யுத்தங்களுக்கெல்லாம் மூல காரணம் மார்க்கங்களினால் உண்டாகும் கருத்து வேறுபாடுகளும், பிரிவினைகளுமாகத்தான் இருக்கும். உபத்திரவப்படுத்துகிறவர்கள் தங்களுடைய கோபத்தினால் உபத்திரவம் பண்ணினாலும், விசுவாசிகள் உபத்திரவப்படும்போது அதை பொறுமையோடு சகித்துக்கொள்ளவேண்டும்.
இயேசுகிறிஸ்து எதையும் மறைக்காமல், ஒழிவு மறைவாக வைக்காமல் எல்லாவற்றையும் தெளிவாக வெளிப்படுத்துகிறார். தம்முடைய ஊழியத்தை செய்கிறவர்களுக்கு என்னனென்ன பாடுகளெல்லாம் எதிர்நோக்கியுள்ளன என்பதை மறைக்காமல் கூறிவிடுகிறார். ஆகையினால் நாம் ஊழியத்திற்கு புறப்படும் முன்பாக, ஊழியத்தின் நிமித்தம் உண்டாகக்கூடிய பாடுகளையெல்லாம் தியானித்துப் பார்த்து, கர்த்தருக்குள் நமது விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்ளவேண்டும். முதலாவதாக அமர்ந்து செல்லும் செலவை கணக்குப் பார்க்கவேண்டும். கணக்குப் பார்க்காமல் புறப்பட்டுப்போய், ஒன்றும் செய்யமுடியாமல் தோல்வியடைந்து திரும்பி வரக்கூடாது.
பிரச்சனைபண்ணுகிறவர்கள்
அப்போஸ்தலர்கள் கர்த்தருடைய ஊழியத்தை செய்யும்போது அவர்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் வரும். இந்த பிரச்சனைகள் யாரால், யார் மூலமாக வரும் என்று இயேசுகிறிஸ்து விவரித்துக் கூறுகிறார். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக சாத்தான் கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறான். நரகமும் பரிசுத்தவான்களுக்கு விரோதமாக கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது. சாத்தான் மூலமாக மனுஷருக்கு ஏராளமான பிரச்சனைகள் வருகிறது. ஊழியக்காரர்களுக்கும் பிரச்சனைகள் வருகிறது. என்றாலும் ஊழியக்காரர்கள் சந்திக்கும் எல்லாப் பிரச்சனைகளும் சாத்தான் மூலமாகவே வருகிறது என்று ஒட்டு மொத்தமாக கூறமுடியாது. யாருக்கு நாம் நற்செய்தியை அறிவித்து ஊழியம் செய்கிறோமோ, அவர்கள் மூலமாகவும் ஊழியக்காரர்களுக்கு பல பிரச்சனைகள் வரும்.
ஊழியக்காரர்களுக்கு யார் மூலமாக பிரச்சனைகள் வரும் என்பதை இவ்வாறு சுருக்கமாக கூறலாம்.
1. மனுஷர்கள் மூலமாக.
2. ஜெபாலயங்களிலுள்ள மார்க்கத் தலைவர்கள் மூலமாக.
3. அதிபதிகள் மூலமாகவும் ராஜாக்கள் மூலமாகவும். உயர்ந்த பதவி வகிக்கும் அதிகாரிகள் மூலமாக.
4. எல்லா மனுஷர் மூலமாக.
5. சொந்த குடும்பத்தார் மூலமாக.
மனுஷரைக் குறித்த எச்சரிப்பு
ஊழியக்காரர்கள் மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் ஊழியக்காரர்களை ஆலோசனைச்சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள். தங்கள் ஜெபாலங்களில் பரிசுத்தவான்களை வாரினால் அடிப்பார்கள். ஊழியக்காரர்கள் மீது மனுஷர்கள் கோபப்படும்போது அவர்கள் தங்களை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்துவிடுகிறார்கள். பிசாசின் குணம் இவர்களை ஆளுகை செய்கிறது. மனுஷர்கள் ஒருவருக்கொருவர் உறவினராகவும், சிநேகிதராகவும் இருக்கலாம். இருந்தாலும் நாம் மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்பது இயேசுகிறிஸ்துவின் உபதேசம்.
மனுஷர்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் எலும்பின் எலும்பாகவும், ஒரே இரத்தமாகவும் இருக்கிறார்கள். இருப்பினும் பரிசுத்தவான்களுக்கு இதே மனுஷர்கள் மூலமாகவே உபத்திரவம் உண்டாகிறது. மனுஷனுடைய உள்ளான சுபாவம் பரிசுத்தப்படவேண்டும். பழைய மனுஷன் புதுப்பிக்கப்படவேண்டும். இல்லையென்றால் மனுஷனுடைய பழைய சுபாவம் வெளிப்பட்டு அவர்கள் இந்த பூமியில் சாத்தானின் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள். தங்களுடைய பொல்லாத சுபாவங்களை வெளிப்படுத்துவார்கள். ஆகையினால் இப்படிப்பட்ட மனுஷரைக் குறித்து ஊழியக்காரர்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
எல்லா மனுஷருமே தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும் தேவ சாயலை உடைய மனுஷரே, தேவ சாயலை உடைய ஊழியக்காரரை ஆலோசனைச் சங்கத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். தங்களுடைய ஜெபாலங்களில் அவர்களை வாரினால் அடிக்கிறார்கள்.
ஜெபாலயம் என்பது யூதருடைய ஆராதனை ஸ்தலமாகும். தேவனை ஆராதிப்பதற்காக இங்கு பக்தியுள்ள யூதர்கள் கூடி வருகிறார்கள். பக்தியுள்ள இவர்களே கர்த்தருக்கு ஊழியம் செய்யும் அப்போஸ்தலர்களை வாரினால் அடிக்கிறார்கள். ஜெபாலயத்தின் கட்டுப்படுகளுக்கும், நிபந்தனைகளுக்கும், விதிகளுக்கும் உட்பட்டு இவர்கள் அப்போஸ்தலரை வாரினால் அடிப்பதாக கூறுகிறார்கள். இவர்களை அடிப்பது தங்களுடைய மார்க்கத்தின் ஒரு பகுதியாகவே இவர்கள் கருதுகிறார்கள். அப்போஸ்தலர் பவுல் யூதர்களால் ஒன்று குறைய நாற்பது அடிகளால் ஐந்து தரம் ஜெபாலயத்தில் அடிக்கப்பட்டார் (2கொரி 11:24).
கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலர்கள் இதுபோன்ற பாடுகளை மார்க்கத்தலைவர்கள் மூலமாக அனுபவிக்கவேண்டும். இவர்கள் ஜெபாலயங்களில் ஊழியக்காரர்களை அடிப்பதோடு தங்களுடைய தண்டனைகளை நிறுத்திவிடாமல், அவர்களை கொலை பண்ணுவதற்கும் புறம்பே தள்ளுகிறார்கள். அப்போஸ்தலர்களை கொலை செய்கிறவன் தான் தேவனுக்கு தொண்டு செய்கிறவன் என்று நினைக்கும் காலம் வரும் (யோவா 16:2).
அதிபதிகளும் ராஜாக்களும்
இவர்கள் அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கிறவர்கள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறவர்கள். ஜனங்களை ஆளும் பொறுப்பு வகிக்கிறவர்கள். யூதர்கள் அப்போஸ்தலர்களை தங்களுடைய ஜெபாலயங்களில் வாரினால் அடித்து, துன்புறுத்தி, அதன் பின்பு அவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக ரோம அரசாங்கத்தாரிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். இயேசுகிறிஸ்துவையும் ரோமப்பேரரசிடம் ஒப்புக்கொடுத்தார்கள் (யோவா 18:30). கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நம்மையும் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோவார்கள். இவர்களுக்கு நம்மை துன்புறுத்தும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும்.
எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்
எல்லோராலும் என்பதற்கு துன்மார்க்கர் எல்லோராலும் என்று பொருள். எல்லோராலும் என்னும் வார்த்தையை துன்மார்க்கரைக் குறிக்கும் பொதுவான வார்த்தையாக இயேசுகிறிஸ்து பயன்படுத்துகிறார். கிறிஸ்துவின் பரிசுத்தவான்களை ஒரு சிலரே நேசிக்கிறார்கள். கிறிஸ்துவின் சுவிசேஷ ஊழியத்திற்கு ஒரு சிலரே ஆதரவாக இருக்கிறார்கள். அநேகர் கிறிஸ்துவின் ஊழியத்திற்கு சத்துருக்களாகவே இருக்கிறார்கள். ஆகையினால் கிறிஸ்துவின் சிநேகிதர்களை எல்லோரும் பகைக்கிறார்கள். கர்த்தருடைய ஊழியம் நடைபெறும் காலம் வரையிலும் துன்மார்க்கர்கள் கர்த்தருடைய பரிசுத்தவான்களை பகைத்துக் கொண்டேயிருப்பார்கள். கீழ்ப்படியாமையின் பிள்ளைகளுடைய இருதயங்களில் கர்த்தருக்கு விரோதமான குணம் விஷத்தன்மை போல பரவியிருக்கிறது.
குடும்பத்திற்குள் விரோதம்
சகோதரன் தன் சகோதரனை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பான். தகப்பன் தன் பிள்ளையை மரணத்திற்கு ஒப்புக் கொடுப்பான். மகளுக்கும் தாய்க்கும் பிரிவினை உண்டாயிருக்கும். மருமகளுக்கும் மாமிக்கும் விரோதம் உண்டாயிருக்கும். பொதுவாக தாயும் மகளும் அன்பாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள். ஆனால் கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு விரோதமாக அவர்களுடைய பெற்றோரும், பிள்ளைகளும் அவர்களுக்கு விரோதமாக எழும்புவார்கள். ஒரு மனுஷனுக்கு சத்துருக்கள் அவனுடைய வீட்டாரே (மத் 10:36) என்னும் வாக்கியத்தின் பிரகாரமாக குடும்பத்திற்குள் பிரிவினை உண்டாகும்.
குடும்பத்திலுள்ள ஒரு நபர், இயேசுகிறிஸ்துவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டபின்பு, இதுவரையிலும் அவரை நேசித்து வந்த குடும்பத்தார், அவருடைய இரட்சிப்பின் நிமித்தமாக அவரை வெறுப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. நேசமாக இருக்கவேண்டியவர்கள் விசுவாசிகளுடைய பொதுவான சத்துருக்களோடு ஒன்றுசேர்ந்து, விசுவாசிகளை துன்புறுத்துவார்கள்.
சுவிசேஷ ஊழியத்தின் நிமித்தமாக அன்போடும் ஐக்கியமாகவும் இருக்கவேண்டிய குடும்ப உறவு பிரிந்து போவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. இந்த பிரிவினைக்கு இயேசுகிறிஸ்துவின் மீதும், அவருடைய உபதேசத்தின்மீதும் ஏற்பட்டுள்ள வெறுப்பே காரணம்.
""என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன், எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன். எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்'' (சங் 55:12,13) என்று தாவீது தன்னுடைய சத்துருவைக் குறித்து சங்கீதமாக பாடுகிறார். குடும்பத்தார் மூலமாக பிரச்சனை வரும்போது மனதிற்கு மிகுந்த வேதனையாக இருக்கும். குடும்பத்தினருடைய பகையை தீர்த்து வைப்பது மிகவும் சிரமம். ""அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப் பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது'' (நீதி 18:19) என்று வேதம் கூறுகிறது.
கர்த்தருடைய ஆலோசனைகள்
கர்த்தருடைய அப்போஸ்தலர்களுக்கு பிரச்சனைகள் வரும். அதிகமாக ஊழியம் செய்யும்போது பிரச்சனைகள் அதிகரிக்கும். பிரச்சனைகள் வரும்போது கர்த்தர் நம்மை தனியாக தவிக்க விட்டு விடமாட்டார். பிரச்சனைகள் உண்டாகும்போது நாம் என்ன செய்யவேண்டுமென்று நமக்கு தகுந்த ஆலோசனைகளைக் கூறுகிறார்.
சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்கள்
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள் (மத் 10:16).
இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது, அவர்கள் சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கூறுகிறார். தேவனுடைய வழியை புரிந்துகொள்ளும் ஞானம் ஊழியக்காரகளுக்கு இருக்கவேண்டும். தேவ ஞானம் எல்லா வேளைகளிலும் பிரயோஜனமுள்ளது. அதிலும் சிறப்பாக பாடுகளையும் உபத்திரவங்களையும் அனுபவிக்கும்போது தேவனுடைய வழியை புரிந்துகொள்ளும் ஞானம் ஊழியக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கர்த்தருடைய ஊழியக்காரர்கள் தேவையில்லாமல் பாடுகளை அனுபவிப்பதை கர்த்தர் விரும்பவில்லை. இந்த உலகத்தில் ஊழியக்காரர்களுக்கு உபத்திரவம் உண்டாகும். இது தேவனுடைய சித்தம். அதே வேளையில் ஊழியக்காரர்கள் தேவையில்லாமல் அதிக உபத்திரவங்களில் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படக்கூடாது. சட்டத்தின் பிரகாரமாகவும், நீதியின் பிரகாரமாகவும் ஊழியக்காரர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்கள் தங்களுடைய சொந்த ஜீவனை நேசிக்காமல், அதை வெறுத்து ஊழியம் செய்கிறார்கள். உலகத்தின் ஆசாபாசங்களையும், வசதிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு கர்த்தருடைய ஊழியத்தில் ஈடுபடுகிறார்கள் அதே வேளையில் ஊழியக்காரர்கள் தங்களுடைய சொந்த ஜீவன்களுக்கு சத்துருக்களாக மாறிவிடக்கூடாது. நமது தலைகளில் நாமே தேவையில்லாமல் பிரச்சனைகளை வரவழைத்துக்கொள்ளக்கூடாது. இந்த விஷயத்தில் ஊழியக்காரர்கள் மிகுந்த ஞானத்தோடு இருக்கவேண்டும்.
புறாக்களைப்போல கபடற்றவர்கள்
மற்றவர்களுக்கு நாம் ஒரு தீங்கும் செய்யவும் கூடாது, நினைக்கவும் கூடாது. மிகுந்த மனத்தாழ்மையோடும், சாந்தத்தோடும், அன்போடும் ஊழியம் செய்யவேண்டும். நமக்கு நாமே தீங்கு செய்துகொள்ளக்கூடாது. அதே வேளையில் நாம் மற்றவர்களுக்கும் தீங்கு செய்யக்கூடாது. ஒரு புறா வேறுயாருக்கும் தீங்கு நினைக்காது. தன்னுடைய பாடுகளையெல்லாம் அது சகித்துக்கொள்ளும். மற்றவர்களை தாக்க முன்வராது. அதுபோல கர்த்தருடைய ஊழிக்காரர்கள் மற்றவர்களுக்கு தீங்கு நினையாமல் புறாவைப்போல தீமையை சகித்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களை தாக்கும் விஷயத்தில் சர்ப்பங்களைப்போல ஊழியக்காரர்கள் செயல்படக்கூடாது. புறாக்களைப்போல இருக்கவேண்டும். இயேசு கிறிஸ்து யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்று கரையேறியபோது, தேவ ஆவியானவர் புறாவைப்போல அவர்மீது வந்து இறங்கினார். கிறிஸ்துவின் ஆவியில் பங்குபெற்றிருக்கிற எல்லா விசுவாசிகளிடத்திலும், புறாவைப் போன்ற சாந்தமான ஆவி இருக்கவேண்டும். பிறரை நேசிக்கவேண்டும். மற்றவர்களோடு சண்டைபோடுவதற்கு முந்திக் கொள்ளக்கூடாது.
மனுஷரைக் குறித்த எச்சரிப்பு
நம்மை காத்துக்கொள்வதில் எப்போதும் மிகுந்த எச்சரிப்போடு இருக்கவேண்டும். ஆபத்தான சகவாசங்களை விலக்கி ஒதுக்கவேண்டும். நம்முடைய பேச்சிலும், செய்கையிலும் மிகுந்த எச்சரிப்போடும், ஞானத்தோடும் செயல்படவேண்டும். கிருபையுள்ளவர்கள் எப்போதுமே எச்சரிப்போடு இருப்பார்கள். ஏனெனில் இந்த உலகத்தில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்று நமக்கு தெரியாது. இயேசு கிறிஸ்து தமது சீஷர்கள் எல்லோரையும் நம்பினார். ஆனால் அவருடைய சீஷர்களில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்தே இயேசு கிறிஸ்துவை காட்டிக்கொடுத்தான். ஆகையினால் மனுஷரைக்குறித்து நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து நமக்கு உபதேசம் பண்ணுகிறார்.
எப்படிபேசுவோம், என்னத்தை பேசுவோம்
அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும் (மத் 10:19).
ஊழியம் செய்கிறவர்களுக்கு பல உபத்திரங்கள் வரும். இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் ஊழியக்காரர்களை அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் ஒப்புக்கொடுப்பார்கள். உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களுக்கு முன்பாக நாம் நிறுத்தப்படும்போது, மிகுந்த கண்ணியத்தோடு நடந்துகொள்ளவேண்டும். அவர்களிடத்தில் எப்படி பேசுவது என்றும், என்னத்தை பேசுவது என்றும் நாம் கவலைப்படக்கூடாது. நமது இருதயம் விவேகமுள்ளதாக இருக்கவேண்டும். மனதை குழப்பிக் கொள்ளக்கூடாது. ஆறுதலான சிந்தனைகளும், சமாதானமுள்ள சாந்த சிந்தனைகளும் நமது உள்ளத்தில் நிரம்பி இருக்கவேண்டும். நம்முடைய பிரச்சனைகளை கர்த்தர் மீது வைத்துவிட வேண்டும்.
நாம் விசாரிக்கப்படும்போது நமது சுய புத்தியின்மேல் சாராமல், நமது சாதுரிய வார்த்தைகளின்மீது நம்பிக்கை வைக்காமல், கர்த்தர் மீதே நம்பிக்கை வைக்கவேண்டும். இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் என்னத்தைபேசுவது என்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, என்னத்தை செய்வது என்பதில் கவனம் செலுத்தவேண்டும். நமது ஜீவியம் பெறுமையுள்ள வார்த்தைகளினால் நிரம்பியிராமல், கிருபையுள்ள வார்த்தைகளினால் நிரம்பி இருக்கவேண்டும். நாம் எப்போதுமே சமாதானத்தையே நாடவேண்டும். குழப்பத்தையும், சண்டையையும், பிரிவினையையும் நாடக்கூடாது. பேசவேண்டிய சூழ்நிலைகளில், பேசவேண்டிய வார்த்தைகளை தருமாறு, நாம் பரிசுத்த ஆவியானவரிடம் விண்ணப்பம் பண்ணவேண்டும்.
மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்
ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறுபட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றி முடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 10:23).
நம்மையும் நம்முடைய உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கிறவர்களை, நாம் புறக்கணிக்கவேண்டும். ஒரு பிரிவினர் நம்மை ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும், மற்றவர்கள் நம்மை ஏற்றுகொள்வார்களா என்று முயற்சிபண்ணி பார்க்கவேண்டும். நமது பாதுகாப்பிற்காக நாம் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடந்துபோவது மிகவும் நல்லது.
கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு ஊழியத்தில் மிகுந்த பாடுகளும், உபத்திரவங்களும் உண்டாகும்போது, அவர்கள் தப்பித்துச்செல்வதற்கு தேவன் ஒரு வழியை திறந்துகொடுத்தால், அந்த வழியாக ஊழியக்காரர்கள் தப்பித்துச்செல்ல தயங்கக்கூடாது. பதிவிருந்து ஓடுகிறவன் மறுபடியும் யுத்தம்பண்ணவருவான். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் ஆபத்து வேளைகளில் தங்கள் ஊழிய ஸ்தலங்களை விட்டு வேறுஇடங்களுக்கு ஊழியம்செய்யப்போவது அவமானமான செயலல்ல. மறுபட்டணத்திற்கு தேவைப்பட்டால் ஓடிப்போகவேண்டுமென்று இயேசுகிறிஸ்துவே ஊழியக்காரர்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்.
நாம் ஓடிப்போகும்போது நமது விசுவாசத்தை விட்டு விலகி ஓடிப்போகவில்லை. இனிமேல் ஊழியம் செய்யக்கூடாது என்று தோற்றுப்போய் ஓடிப்போகவில்லை. ஓரிடத்தில் ஊழியம்செய்வதற்கு பதிலாக, ஆபத்துக்களின் நிமித்தமாக, மற்றொரு இடத்திற்கு ஊழியம்செய்வதற்காகவே ஓடிப்போகிறோம். ஓடிப்போனாலும் நமது கடமைகளிலிருந்து நாம் தவறுவதில்லை.
நமக்குத் துன்பம் வரும்போது அந்தத் துன்பத்தில் நாம் பின்பற்ற வேண்டிய மாற்று வழிகளையும் ஆண்டவர் நமக்குக் கூறுகிறார். சான்றாக மத் 10:16-18 ஆகிய வசனங்களில் எச்சரிப்புக்களும், மத் 10:19-20 ஆகிய வசனங்களில் அவற்றுக்கு மாற்று வழியும் உள்ளன. அதுபோலவே மத் 10:21-22 ஆகிய வசனங்களில் எச்சரிப்புக்களும், மத் 10: 23-26 ஆகிய வசனங்களில் அவற்றிற்கு மாற்று வழிகளையும் இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார்.
ஒரு பட்டணத்திலிருந்து ஒரு ஊழியக்காரர் ஓடிப்போவதினால் அவர் கோழையோ அல்லது மோளையோ அல்ல. அது ஞானமான செயல். சுவிசேஷப் பிரபலியத்திற்கு இது உதவி புரியும். துன்மார்க்கரின் கண்ணிகளிலிருந்து நாம் தப்பி பலருக்குச் சத்தியத்தை அறிவித்து தொடர்ந்து ஊழியம் செய்யலாம். ஒரு ஊழியக்காரர் துன்பப்படுத்தப்படும் இடத்தில் தொடர்ந்து தங்கியிருந்து கொலைசெய்யப்படுவாரானால், அவருடைய ஊழியம் அவருடைய மரணத்தோடு முடிந்து விடும். அவரால் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க முடியாது.
""மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றி முடியாது'' என்பது சத்தியமான வாக்கியம். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக இஸ்ரவேல் பட்டணங்கள் எல்லாவற்றிலும் சுவிசேஷத்தை அறிவித்து, சுற்றி முடிக்க முடியாது. ஆதித்திருச்சபை உலகத்திற்கு முழுவதுமாக சுவிசேஷத்தை அறிவிக்கவில்லை. கி.பி. 70-ஆம் ஆண்டில் ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டதும், எருசலேம் அழிக்கப்பட்டதும் இதற்கு முக்கியமான காரணம். திருச்சபை இன்னும் பூரணமாக முழு உலகத்திற்கும் சுவிசேஷத்தை அறிவிக்கவில்லை. ஆயிர வருஷ அரசாட்சி வரையிலும் இந்தப் பிரச்சனை தொடரும்.
சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்கள்
அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் (மத் 10:26, 28).
கர்த்தருக்கு உண்மையாக பயப்படுகிறவர்கள், மனுஷருக்கு பயப்படவேண்டியதில்லை. பாவத்திற்கு பயப்படாமல் அதை வெறுக்கிறவர்கள், உபத்திரவத்திற்கு பயப்படவேண்டியதில்லை. இந்த பூமி அகன்றுபோனாலும் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் அதற்கு பயப்படக்கூடாது. ஏனெனில் நமது தேவன் நல்லவர். அவருடைய சித்தமில்லாமல் ஒரு காரியமும் நடைபெறாது. அவர் எதைச்செய்தாலும் நல்ல காரணத்திற்காகத்தான் செய்வார். தேவனுடைய கிருபையின் மூலமாக இந்த நல்ல நம்பிக்கையை நம்முடைய இருதயத்தில் பெற்றிருக்கவேண்டும்.
நம்முடைய சத்துருக்களுக்கு நம்மீது பூரணமான அதிகாரம் இல்லை. சத்துருவின் அதிகாரம் ஒரு வரம்புக்கு உட்பட்டது. அவர்களால் நமது சரீரத்தை மாத்திரமே கொல்லமுடியும். இதுவே இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அதிகாரம். இவர்களால் நமது ஆத்துமாவை கொல்ல முடியாது. ஆத்துமாவிற்கு நம்முடைய சத்துருக்களால் எந்த சேதத்தையும் உண்டுபண்ண முடியாது.
நாம் தேவனையும் அவருடைய அன்பையும் விட்டு பிரிக்கப்படும்போது நமது ஆத்துமா மரித்துப்போகிறது. தேவனும் அவருடைய அன்புமே நமது ஆத்துமாவிற்கு ஜீவனாக இருக்கிறது. சத்துருக்களினால் ஆத்துமாவை ஒன்றும் செய்யமுடியாது.
உபத்திரவங்களும், பாடுகளும், வேதனைகளும் இந்த உலகத்திலிருந்து நம்மை பிரிக்கலாம். இவற்றால் தேவனிடமிருந்து நம்மை பிரிக்க முடியாது. உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ ஆகிய இவற்றால் கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிக்க முடியாது. இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக இருக்கிறோம் (ரோம 8:36,37). நமது ஆத்துமாவை பொக்கிஷங்களைப் பாதுகாப்பதுபோல பாதுகாக்கவேண்டும். மனுஷரைக் குறித்த பயம் நமக்குள் உண்டாகக்கூடாது. நம்முடைய சத்துருக்களால் நம்முடைய எலும்புகளைத்தான் நொறுக்க முடியும். நம்முடைய ஆத்துமாக்களை தொட முடியாது.
மனுஷரைக் குறித்து நாம் பயப்படக்கூடாது. அதேவேளையில் நாம் தேவனுக்கு பயப்படவேண்டும். தேவன் நம்முடைய ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவர். நரகம் ஆத்துமாவும் சரீரமும் அழிக்கப்படும் இடமாகும். தேவனுடைய வல்லமையினாலேயே இந்த அழிவு வருகிறது. தேவன் சரீரத்தையும் ஆத்துமாவையும் அழிக்க வல்லவர். ஆகையினால் இந்த உலகத்திலுள்ள யாவரும் தேவனுக்கு பயப்படவேண்டும். எல்லா பரிசுத்தவான்களும் தேவனிடத்தில் பயபக்தியாய் இருக்கவேண்டும்.
மனுஷருக்கு கீழ்ப்படியாமல் தேவனுக்கு கீழ்ப்படிவதே நமக்கு பாதுகாப்பானது. பேதுருவும் யோவானும் கர்த்தரை குறித்து பேசக்கூடாது என்று யூதமார்க்கத்துத் தலைவர்கள் தடைபண்ணினார்கள். ஆனால் இவர்கள் இருவரும் மனுஷருக்கு கீழ்ப்படியவில்லை. ""தேவனுக்கு செவிகொடுக்கிறதைப் பார்க்கிலும் உங்களுக்கு செவி கொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாய் இருக்குமோ என்று நீங்களே நிதானித்துப் பாருங்கள்'' (அப் 4:19) என்று இவர்கள் இருவரும் யூதமார்க்கத்துத் தலைவர்களிடம் கூறினார்கள். மனுஷருக்கு கீழ்ப்படிவதைவிட தேவனுக்கு கீழ்ப்படிவதே நல்லது.
வெளிச்சத்திலே சொல்லுங்கள்
நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள் (மத் 10:27).
ஊழியத்தில் நமக்கு உண்டாகும் உபத்திரவத்தின் நிமித்தம், ஒரு பட்டணத்திலிருந்து மற்றொரு பட்டணத்திற்கு ஓடிப்போனாலும், நமது சுவிசேஷ ஊழியத்தை விட்டு விலகி ஓடி விடக்கூடாது. உலகம் முழுவதும் சென்று நித்திய சுவிசேஷத்தை நாம் அறிவிக்கவேண்டும். இதுவே தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஊழியம். இந்த ஊழியத்திலிருந்து பின்வாங்கிப்போய்விடக் கூடாது.
சுவிசேஷ ஊழியத்தை நாம் செய்யாதவாறு நம்மை தடைபண்ணுவதற்கு சாத்தான் பல பிரச்சனைகளைக் கொண்டுவருவான். மோசமான பல திட்டங்களை தீட்டியிருப்பான். கர்த்தருக்காக நாம் செயல்படாதவாறு நம்மை அடக்கி வைக்க முயற்சிபண்ணுவான். ஆனால் நாம் அடங்கிப்போய்விடக்கூடாது. கர்த்தர் நமக்கு இருளில் சொல்லுகிறதை ஜனங்களுக்கு வெளிச்சத்தில் சொல்லவேண்டும்.
இயேசுகிறிஸ்து தமது ஊழியத்தை இரகசியமாக செய்யவில்லை. எல்லோருக்கும் தெரியும்படியாக வெளிப்படையாகவே செய்தார். தாம் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினதாகவும், ஜெபாலயங்களிலேயும், யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்து வந்ததாகவும், அந்தரங்கத்திலே தாம் ஒன்றும் பேசவில்லையென்றும் (யோவா 18:20) என்று இயேசு தமது ஊழியத்தைப்பற்றிக் கூறுகிறார்.
அப்போஸ்தலர்கள் சுவிசேஷச் செய்தியை வெளிச்சத்திலே சொல்லவேண்டும். மறைவிடத்தில் கூறாமல் வீடுகளின் மேல் நின்று பிரசித்தம் பண்ணவேண்டும். சுவிசேஷத்தின் உபதேசம் ஒரு சிலருக்கு மட்டும் உரியதல்ல. அது எல்லோருக்கும் பொதுவானது. எல்லோருக்கும் பொதுவானதை எல்லோருக்கும் முன்பாக ஒழிவு மறைவில்லாமல் அறிவிக்கவேண்டும்.
பேதுரு ஆறாம் மணிநேரத்தில் ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான் (அப் 10:9). அந்த மேல் வீட்டில்தான் புறஜாதியாருக்கு ஊழியம் செய்யவேண்டிய தரிசனத்தை ஆவியானவர் அவனுக்கு கொடுத்தார்.
சுவிசேஷத்தின் எந்தப் பகுதியையும் மூடி வைக்கவேண்டிய அவசியம் எதுவுமில்லை. தேவனுடைய பூரணமான ஆலோசனையை எல்லோருக்கும் வெளிப்படுத்த வேண்டும். சுவிசேஷத்தை ஜனங்களுக்கு சப்தமாகவும், தெளிவாகவும், முழுமையாகவும் அறிவிக்க வேண்டும்.
அப்போஸ்தலர்களுக்கு ஊழியத்திலே பாடுகளும் பிரச்சனைகளும் வந்தாலும், இயேசுகிறிஸ்து அவர்களுக்கு உற்சாக மூட்டும் சில ஆலோசனைகளையும் கூறுகிறார். பாடுகள் மத்தியிலும் கர்த்தருடைய கிருபை நமக்கு போதுமானதாக இருக்கிறது. நமது பலவீனத்தில் அவருடைய பெலன் நம்மை பூரணமாக தாங்குகிறது.
கிழக்கு தேசங்களில் வீடுகளில் கூரை தட்டையாக இருக்கும். ஜனங்கள் அதன்மீது குடும்ப விழாக்களைக் கொண்டாடுவார்கள். முக்கியமான அறிவிப்புகளையும், வீட்டின் மேல்மாடியில் கூறுவார்கள்.
கர்த்தருடைய ஊழியக்காரர்கள் மனுஷனுக்குப் பயப்படக்கூடாது. சத்தியத்தை மறைக்கக்கூடாது. சத்தியத்தை வெளிச்சத்திலும், வீட்டின் கூரைமீதும் தைரியமாகப் பேசவேண்டும்.
மனுஷகுமாரன் வருகிறார்
ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறுபட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றி முடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 10:23).
நாம் ஒரு பட்டணத்தில் ஊழியம் செய்யும்போது அங்குள்ளவர்கள் நம்மை துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போகவேண்டும். நாம் இப்படி ஒவ்வொரு பட்டணமாக ஓடிக்கொண்டேயிருப்போம். இப்படி தொடர்ந்து ஓடுவது நமக்கு ஆறுதலான செய்தியல்ல. மனுஷகுமாரன் வருவதற்குள் நாம் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றி முடியாது என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். மனுஷ குமாரன் மறுபடியும் வரப்போகிறார். மனுஷ குமாரன் வரும்போது நம்முடைய பாடுகளெல்லாம் அகன்றுபோகும். பாடுகளை அனுபவிக்கும் ஊழியக்காரர்களுக்கு மனுஷ குமாரன் வருவது ஆறுதலான செய்தியாகும்.
இயேசுகிறிஸ்து தம்முடைய வசனங்களை அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிபடுத்துகிறார். அப்போஸ்தலர்கள் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை உபதேசம் பண்ணும்போது தேவன் அந்த வசனங்களை உறுதிபண்ணுகிறார். நமக்கு ஊழியம் செய்ய ஒரு காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது. மனுஷ குமாரன் வரும்வரையில்தான் நாம் ஊழியம் செய்யமுடியும். நமக்கு பாடுகள் வந்தாலும் மனுஷகுமாரன் வரும்வரையில்தான் அந்த பாடுகள் நம்மை தொடரும். மனுஷகுமாரன் வரும்போது நமது ஊழியமும் முடிந்துபோகும். நமது பாடுகளும் முடிந்துபோகும்.
இந்த உலகத்தில் ஊழியத்தின் நிமித்தமாக நாம் அனுபவிக்கும் பாடுகள் தற்காலிகமானவை. நமக்கு ஊழியம் செய்வதற்கு குறுகிய காலமே நியமிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் எல்லாம் முடிந்து போகும். யுத்தம்பண்ணுவது சிறிது காலத்திற்கே நியமிக்கப்பட்டிருக்கிறது. மனுஷ குமாரன் வரும்போது நாம் உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படுவோம்.
யூதருக்கும் புறஜாதியாருக்கும் சாட்சி
அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள் (மத் 10:18).
அப்போஸ்தலர்கள் யூதருக்கும் புறஜாதியாருக்கும் விரோதமாக தேவனுடைய சத்தியத்தை சாட்சியாக அறிவிக்கிறார்கள். இதனால் அவர்கள் அப்போஸ்தலர்கள்மீது கோபப்படுகிறார்கள். ஊழியக்காரர்களை அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டு போகிறார்கள். தங்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் யூதமார்க்கத்துத் தலைவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களை முதலாவதாக விசாரிக்கிறார்கள். வாரினால் அடித்து துன்புறுத்துகிறார்கள். யூதர்களுக்கு இந்த அதிகாரம் மாத்திரமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு மரண தண்டனை கொடுக்கும் அதிகாரம் யூதமார்க்கத் தலைவருக்கு கொடுக்கப்படவில்லை. ஊழியக்காரர்களை இன்னும் அதிகமாக தண்டிக்கவேண்டும் என்னும் கோபத்தில் மார்க்கத்தலைவர்கள் இவர்களை ரோமப்பேரரசின் அதிபதிகளுக்கு முன்பாகவும் ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டு போகிறார்கள். ரோமப்பேரரசாருக்கு மாத்திரமே மரண தண்டனை கொடுக்கும் அதிகாரம் உள்ளது.
ஊழியக்காரர்கள் ஒவ்வொரு நியாயஸ்தலமாக மாறி மாறி விசாரிக்கப்படுகிறார்கள். போகும் இடங்களிலெல்லாம் கர்த்தருக்காக சாட்சி பகருகிறார்கள். அதிபதிகளுக்கு முன்பாகவும் ராஜாக்களுக்கு முன்பாகவும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சாட்சியாக அறிவிக்கிறார்கள். யூதருக்கு மாத்திரமல்ல, புறஜாதியாருக்கும் சுவிசேஷம் அறிவிக்கும் வாய்ப்பு ஊழியக்காரர்களுக்கு கிடைக்கிறது. இரகசியமாக சுவிசேஷச் செய்தியை அறிவிக்காமல், எல்லோருக்கும் முன்பாக வெளிப்படையாக சுவிசேஷத்தை அறிவிக்கும் சிலாக்கியம் ஊழியக்காரர்களுக்கு கிடைக்கிறது.
தேவனுடைய ஊழியக்காரர்கள் தங்களுடைய வார்த்தைகளினாலும், கிரியைகளினாலும் கர்த்தருக்கு சாட்சியாக இருக்கிறார்கள். அத்துடன் தாங்கள் அனுபவிக்கும் பாடுகளினாலும் தேவனுக்கு சாட்சி பகருகிறார்கள். இரத்த சாட்சியாக மரித்தாலும், அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவுக்காக தங்களுடைய இரத்தத்தை சிந்தி சாட்சிகளாக மரிக்கிறார்கள். கிறிஸ்துவுக்காக பாடுகளை அனுபவித்து மரிக்கிறவர்களை இரத்த சாட்சிகள் என அழைக்கிறோம். நாம் ஊழியம் செய்தாலும், ஊழியம் செய்யமுடியாமல் பாடுகளை அனுபவித்தாலும் கர்த்தருக்கு சாட்சியாக இருக்கிறோம்.
எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய பிரசன்னம் நம்மோடுகூட இருக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் நமக்கு எப்போதுமே கிடைக்கவேண்டும். நாம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் விசாரிக்கப்படும்போது எப்படி பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படவேண்டியதில்லை. நாம் பேச வேண்டுவது அந்தந்த நேரங்களில் நமக்கு அருளப்படும். பேசும் வார்த்தைகளை கொடுப்பது ஆவியானவருடைய ஊழியம்.
இயேசுகிறிஸ்து தம்முடைய சத்தியத்தை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து சாதாரண ஜனங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். கிறிஸ்துவின் சீஷர்கள் அதிக கல்வி கற்றவர்களல்ல. சாதாரண ஜனங்கள். இவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும்போது தங்களுடைய சுய ஞானத்தில் சார்ந்திருப்பதற்கு இவர்களிடம் உலகப்பிரகாரமான ஞானமுமில்லை. ஆகையினால் தேவனுடைய ஞானத்தையே பூரணமாக சார்ந்திருக்கிறார்கள். அதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் முன்பாக அப்போஸ்தலர் நிற்கும்போது அவர்களுக்கு என்ன பேசவேண்டும் என்றே தெரியாது. ஆனால் தேவ ஆவியானவர் இவர்களுக்கு வார்த்தைகளைக் கொடுத்து இவர்களை பேசச்செய்கிறார்.
தம்முடைய ஊழியக்காரர்களுக்கு பேச வேண்டிய வார்த்தைகளை அந்தந்த நேரத்தில் அருளுவார். ஏற்கெனவே வார்த்தைகளை கொடுத்து அவர்களை ஆயத்தம்பண்ண மாட்டார். ஊழியக்காரர்கள் ஆயத்தம் இல்லாமலேயே பேசுவார்கள். ஆயினும் இவர்களுடைய பேச்சில் ஒரு தெளிவு இருக்கும். நோக்கம் இருக்கும். உண்மை இருக்கும். ஊழியக்காரரின் வார்த்தைகள் அபிஷேகம் நிறைந்ததாக இருக்கும்.
தமக்காக பேசுமாறு தேவன் நம்மை அழைக்கும்போது அவர் நமக்கு பேசவேண்டிய வார்த்தைகளையும் கொடுப்பார். நாம் பேசவேண்டியவற்றை நமக்கு போதிக்குமாறு நாம் தேவனையே சார்ந்திருக்கவேண்டும். பேசும்போது பேசுகிறவர்கள் நாம் அல்ல. நம் பிதாவின் ஆவியானவரே நம்மிலிருந்து பேசுகிறார். பரிசுத்த ஆவியானவரே நம்மூலமாக பேசுகிறார்.
பிரச்சனையான வேளைகளில் தேவன் நம்மை கைவிட்டு ஓடிவிடுவதில்லை. நம்மோடு கூட இருந்து நம்மை ஆதரிக்கிறார். ஆவியானவருடைய ஞானம் நம்மூலமாக வெளிப்படும். தேவனுடைய வார்த்தையை பேசும் ஆற்றல் நமக்கு கொடுக்கப்படும். அதைவிட விசேஷமாக நம்முடைய வார்த்தைகளில் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நிறைந்திருக்கும். பிரசங்க மேடைகளில் பிரசங்கம்பண்ணுவதற்கு உதவிபுரியும் பரிசுத்த ஆவியானவர், நீதிமன்றங்களில் வழக்காடுவதற்கும் நமக்கு உதவிபுரிவார். நமக்காக பரிந்து பேசுகிற பரிசுத்த ஆவியானவர் நம்மோடுகூட இருக்கிறார். ஆகையினால் எப்படி பேசுவோம் என்றும், என்னத்தை பேசுவோம் என்றும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவன்
என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் (மத் 10:22).
கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு இது ஒரு ஆறுதலான வாக்கியமாகும். இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் எல்லா பாடுகளுக்கும் ஒரு முடிவு உள்ளது. சில சமயங்களில் பாடுகள் அநேக நாட்களுக்கு நீடிக்கலாம். என்றாலும் அது நிரந்தரமானது அல்ல. எல்லா பாடுகளும் ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும்.
இயேசுகிறிஸ்து இந்த வாக்கியத்தினால் தம்மையும் ஆறுதல்படுத்துகிறார். தம்முடைய அப்போஸ்தலர்களையும் ஆறுதல்படுத்துகிறார். ""என்னைப் பற்றிய காரியங்கள் முடிவு பெறும் காலம் வந்திருக்கிறது'' (லூக் 22:37) என்று இயேசுகிறிஸ்து அறிவிக்கிறார்.
பாடுகளை அனுபவிக்கும்போது நமக்கு வேதனையாக இருக்கும். பாடுகளும் வேதனைகளும் நமக்கு நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை. நாம் பாடுகள் வழியாக சென்றாலும் கர்த்தருக்குள் நிலைத்திருக்க வேண்டும். கர்த்தருடைய ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தவர்கள் பாடுகள் நிமித்தமாக தங்களுடைய ஊழியத்தை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடி விடக்கூடாது. நமக்கு பாடுகளைக் கொடுக்கிறவர்களை கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்னும் நம்பிக்கையில் நாம் பாடுகளை பொறுமையோடு சகித்து முன்னேறிச்செல்ல வேண்டும்.
நாம் கர்த்தருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருக்கிறோம். துன்மார்க்கருக்கு கர்த்தருடைய நித்திய புயங்கள் மூலமாக நியாயத்தீர்ப்பு உண்டாகும். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை எதுவும் நமக்கு நேரிடாது. தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். நமது திராணிக்கு மேலாக நாம் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்க மாட்டார். சோதனையை தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்கு தப்பிக் கொள்ளும் படியான போக்கையும் நமக்கு உண்டாக்குவார் (1கொரி 10:13).
முடிவுபரியந்தம் நிலைத்திருக்கிறவர்களுக்கு இரட்சிப்பு உறுதி பண்ணப்பட்டிருக்கிறது. சூழ்நிலை புயல் காற்றைப்போல இருக்கலாம். பாதை சரியாக தெரியாமல் மேகமூட்டமாக இருக்கலாம். தற்போதுள்ள பிரச்சனை எப்படி இருந்தாலும் நமக்காக ஒரு நித்திய வீட்டை கர்த்தர் ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். பாதையில் பல கஷ்டங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு, சமாளித்து, வீட்டிற்கு வந்து சேரும்போது நமக்கு ஆறுதலாகவும் உற்சாகமாவும் இருக்கும். அதுபோலவே நம்முடைய ஊழியங்களில் பாடுகளை சகித்துக்கொண்டு பரலோகத்திற்கு நாம் சென்றடையும்போது, அங்கு நமக்கு ஆனந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.
ஒரு சிலர் சோதனைகளை சிறிது காலம் மாத்திரமே தாங்கிக்கொண்டு, பின்பு விழுந்து விடுவார்கள். கர்த்தரைவிட்டு பின்வாங்கிப் போய்விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய ஓட்டத்தை வீணாக ஓடுகிறார்கள். இவர்கள் பந்தயப் பொருளை பெற்றுக்கொள்ள மாட்டார்கள். பந்தயத்தில் ஓடுகிறவன் பந்தயப்பொருளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்னும் குறிக்கோளோடு ஓடவேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். ஏனோதானோவென்று ஓடினால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. நமது ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் மரணம் வரையிலும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவர் ஜீவக்கிரீடத்தை நம்மீது தரிப்பிப்பார்.
வேலைக்காரனும் எஜமானும்
சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல. சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா (மத் 10:24,25).
அப்போஸ்தலர்கள் தங்களுடைய ஊழியத்தில் அனுபவிக்கும் எல்லா பாடுகளையும் இயேசுகிறிஸ்து ஏற்கெனவே அனுபவித்திருக்கிறார். இந்த பாடுகளும், பிரச்சனைகளும் இயேசுகிறிஸ்துவுக்கு புதியவை அல்ல. வேலைக்காரன் தன் எஜமானைவிட மேற்பட்டவன் அல்ல. அதுபோல சீஷன் தன்னுடைய போதகரைவிட மேற்பட்டவன் அல்ல.
அப்போஸ்தலர்களுக்கு பாடுகள் வரும்போது அவர்கள் கலக்கமடைந்து சோர்ந்து போய் விடக்கூடாது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல என்று இயேசுகிறிஸ்து நமக்குச் சொன்ன வார்த்தையை நாம் நினைத்துக்கொள்ளவேண்டும். ஜனங்கள் இயேசுகிறிஸ்துவையே துன்பப்படுத்தினார்கள். ஆகையினால் நம்மையும் அவர்கள் துன்பப்படுத்துவது நிச்சயம் (யோவா 15:20).
வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல என்பது யூதருடைய பழமொழியாகும். இந்த வாக்கியத்தின் பிரகாரம் இயேசுகிறிஸ்துவுக்கு வந்த பாடுகளைவிட, அவருடைய சீஷர்களுக்கு அதிகமான பாடுகள் எதுவும் வராது என்பது வலியுறுத்தப்படுகிறது.
நமது கர்த்தரும் ஆண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவுக்கு இந்த உலகத்தில் பல பாடுகள் வந்தன. அவரை பிசாசுகளின் தலைவன் என்று பொருள்படும் பெயல்செபூல் என்னும் பெயரால் அழைத்தார்கள். தேவனுடைய குமாரன் மனுஷர்களால் பிசாசுகளின் தலைவனென்று அழைக்கப்படுகிறார். பிசாசுகளோடு இயேசுகிறிஸ்து தொடர்பு வைத்திருப்பதாக அவர்மீது குற்றம் சுமத்தினார்கள். எந்த அளவிற்கு இயேசுகிறிஸ்துவை அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அவரை அவமானப்படுத்தினார்கள். இவையெல்லாவற்றையும் இயேசுகிறிஸ்து மிகுந்த பொறுமையோடு சகித்துக்கொண்டார்.
பாவிகள் இயேசுகிறிஸ்துவைக் குறித்து முரண்பாடாக பேசுகிறார்கள். இந்த உலகத்தை இரட்சிக்க வந்த இயேசுகிறிஸ்துவைப் பார்த்து, இவர் உலகத்தை அழிக்க வந்தவர் என்று கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்து அனுபவித்த அவமானங்களைப்போல அவருடைய ஊழியக்காரர்களும் அவமானங்களை அனுபவிக்க வேண்டியது வரலாம். இந்த உலகம் பொல்லாதது. இயேசுகிறிஸ்துவை தூஷணமான வார்த்தைகளினால் தூஷித்த இந்த உலகம், அவருடைய அப்போஸ்தலர்களையும் தூஷிக்கலாம். இதுபோன்ற பாடுகளை சகித்துக்கொள்வதற்கு அப்போஸ்தலர்கள் ஆயத்தமாக இருக்கவேண்டும்.
பாடுகள் வரும்போது அவற்றை பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தின் பாடுகளெல்லாம் தற்காலிகமானவையே. விரைவில் நாம் மகிமையில் இயேசுகிறிஸ்துவோடுகூட மகிமையின்மேல் மகிமையடைவோம். இந்த மகிமை இனிமேல் வரப்போகிற ஆசீர்வாதம். அதேவேளையில் அந்த மகிமைக்கு முன்பாக தற்பொழுது நமக்கு பாடுகள் நியமிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து பாடுபட்டதுபோல நாமும் இந்த ஜீவியத்தில் பாடுபடுவதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். வேதனையில்லாமல் வெற்றியில்லை. தேவனுடைய ஆசீர்வாதம் மாத்திரம் வேண்டும், அவர் அனுபவித்த பாடுகள் எதுவும் நமக்கு வரக்கூடாது என்று எதிர்பார்ப்பது நியாயமானதல்ல. கிறிஸ்துவோடு அவருடைய எல்லா அம்சங்களையும் நாம் பகிர்ந்து கொள்ளவேண்டும். அவர் கொடுக்கும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய நாமத்தின் நிமித்தமாக வரும் பாடுகளையும் சகித்துக்கொள்ள வேண்டும்.
இயேசுகிறிஸ்து தமது ஊழியத்தை கசப்பான பாத்திரத்தில் ஆரம்பம்பண்ணினார். நாமும் கசப்பான பாத்திரத்தில் பானம்பண்ணுவதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். கிறிஸ்துவோடு சேர்ந்து பாடுகளை அனுபவிப்பதற்கு நாம் நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் எல்லா பாடுகளையும், வேதனைகளையும் சகித்துக்கொண்டார். ஆகையினால் நமக்கு வரும் பாடுகள் மிகவும் இலகுவாகவே இருக்கும்.
வெளியாக்கப்படாத மறைபொருள் இல்லை
அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள் (மத் 10:26,27).
கிறிஸ்துவின் சுவிசேஷம் மறைபொருளுமல்ல, இரகசியமுமல்ல. இந்த உலகத்திற்கு நாம் சுவிசேஷச் செய்தியை பிரசித்தம் பண்ணவேண்டும். தற்போது சுவிசேஷத்தின் இரகசியம் ஒரு சிலருக்கு மறைபொருளாக இருக்கலாம். ஆனால் எல்லா காலத்திலும் சுவிசேஷம் மறைபொருளாக இராது. எல்லா தேசங்களிலும், எல்லா ஜாதியார் மத்தியிலும், கிறிஸ்துவின் சுவிசேஷம் அவர்களுடைய சொந்த பாஷைகளில் பிரசித்தம் பண்ணப்படும் (அப் 2:11). இந்த உலகத்தின் கடைசி பரியந்தங்கள் இரட்சிப்பைக் காணும்.
கிறிஸ்துவின் சுவிசேஷ ஊழியம் அவசியம் செய்யப்பட வேண்டிய ஊழியமாகும். இது நிலத்தை உழுவது போன்றது. தேவன் வேகமாக உழுவதற்கு உதவிபுரிவார். இருளில் மறைந்திருக்கிறவைகளை இயேசுகிறிஸ்து வெளியரங்கமாக்கி, இருதயங்களில் யோசனைகளை வெளிப்படுத்துவார் (1கொரி 4:5). தேவன் தம்முடைய ஊழியக்காரர்களுடைய உள்ளத்தில் சுவிசேஷத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த இரகசியத்தை தேவனே தம்முடைய ஊழியக்காரர்கள் மூலமாக உலகம் முழுவதிலும் உள்ள ஜனங்களுக்கு வெளிப்படுத்துவார்.
தேவனுடைய மறைபொருளை வெளியாக்கும் ஊழியத்தை அப்போஸ்தலர்கள் உண்மையோடு செய்யவேண்டும். கர்த்தருடைய இரட்சிப்பின் இரகசியத்தை ஊழியக்காரர்கள் தெளிவுபடுத்தி பிரசித்தம் பண்ணவேண்டும். இந்த ஊழியத்தில் பாடுகள் வந்தாலும் அவை கர்த்தருடைய கிருபையினால் விரைவில் நீங்கிப்போகும் என்று விசுவாசித்து, சுவிசேஷ ஊழியத்தை தொடர்ந்து செய்ய வேண்டும்.
நாம் விசேஷித்தவர்கள்
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள் (மத் 10:29-31).
இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தை செய்கிற நாம் அவருடைய பார்வையில் விசேஷித்தவர்கள். நமக்கு பாடுகள் வரும்போது தேவன் நம்மை விசேஷித்த பிரகாரமாக பாதுகாத்து பராமரிப்பார். தேவனுடைய பராமரிப்பு சர்வ சிருஷ்டிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. சாதாரண அடைக்கலான் குருவிகளை போஷித்து, பாதுகாத்து பராமரிக்கிற கர்த்தர், அவருடைய ஊழியக்காரர்களாகிய நம்மையும் பாதுகாத்து பராமரிப்பது அதிக நிச்சயம்.
அடைக்கலான் குருவிகள் உருவத்தில் சிறியவை. இதன் கிரயமும் அதிகமல்ல. இரண்டு குருவி கொடுத்தால்தான் அதை ஒரு காசுக்கு வாங்குவார்கள். ஒரு குருவி மாத்திரம் இருந்தால் அதை இலவசமாகத் தான் கொடுக்கவேண்டும். இதை காசு கொடுத்து வாங்குவதற்கு ஆள் இராது. சில சமயங்களில் இரண்டு காசுக்கு நான்கு அடைக்கலான் குருவிகளுக்குப் பதிலாக, ஒரு குருவியை இலவசமாக சேர்த்து, ஐந்து அடைக்கலான் குருவிகளாக கொடுப்பார்கள் (லூக் 12:6). அடைக்கலான் குருவி சந்தையில் விலைபோகாத பொருள். இப்படிப்பட்ட சாதாரண குருவியைக் கூட கர்த்தர் பாதுகாக்கிறார். அவருடைய சித்தமில்லாமல் இந்த குருவியைக்கூட யாராலும் வேட்டையாடி பிடிக்க முடியாது.
அடைக்கலான் குருவிகள் தங்களுடைய தானியக்கதிர்களை பொறுக்கி புசிப்பதற்காக தரையில் வந்து விழும். பிதாவின் சித்தம் இருந்தால்தான் அடைக்கலான் குருவி தரையில் வந்து விழுந்து தானியத்தை புசிக்கும். பிதாவின் சித்தம் இல்லையென்றால் அடைக்கலான் குருவி தரையில் விழாது. தேவன் இந்த குருவிகளை தரையில் போஷிக்காமல் ஆகாயத்திலேயே போஷித்துவிடுகிறார். தேவனுடைய பராமரிப்பு தெய்வீகமானது. அடைக்கலான் குருவிகளை போஷிக்கும் தேவன் தம்முடைய பரிசுத்தவான்களை பட்டினியாக விட்டுவிடமாட்டார்.
பிதாவின் சித்தமில்லாமல் அடைக்கலான் குருவிகளை வேட்டையாடி கீழே விழ வைக்கவும் முடியாது. பிதாவின் சித்தமில்லாமல் இந்த குருவிகள் தானாக மரித்தும் கீழே விழாது. இந்த குருவிகளின் ஜீவனும் மரணமும் கர்த்தருடைய கரத்தில் உள்ளது. அதுபோலவே கர்த்தருடைய பரிசுத்தவான்களின் ஜீவனும் மரணமும் அவருடைய பலத்த கரத்தில் உள்ளது. அவருடைய அனுமதியில்லாமல் கர்த்தருடைய பிள்ளைகளை யாரும் தொடமுடியாது.
தேவனே அடைக்கலான் குருவிகளை சிருஷ்டித்தவர். ஆகையினால் இந்த குருவிகள் மீது அவர் எப்போதும் கண்ணோக்கமாக இருக்கிறார். குருவிகளை பாதுகாக்கும் கர்த்தர் அவருடைய பிள்ளைகளாகிய நம்மீதும் கண்ணோக்கமாக இருந்து நம்மை பாதுகாப்பார். பிதாவின் சித்தம் இல்லாமல் அடைக்கலான் குருவிக்கு மரணம் நேரிடாது. அதுபோலவே தேவனுடைய சித்தம் இல்லாமல் அவருடைய ஊழியக்காரர்களுக்கும் மரணம் வராது. ஆகையினால் இந்த சத்தியத்தை நினைவுகூர்ந்து கர்த்தருக்காக ஊழியம் செய்கிறவர்கள் தங்கள் இருதயத்திலிருந்து மரணபயத்தை அகற்றிப்போடவேண்டும். கர்த்தருடைய பார்வையில் நாம் அடைக்கலான் குருவிகளைவிட விசேஷித்தவர்கள் என்னும் எண்ணம் நமது உள்ளத்தில் இருக்கவேண்டும்.
தலையிலுள்ள மயிர்
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது (மத் 10:30).
இந்த வாக்கியம் யூதருடைய பழமொழியாகும். ஒரு மனுஷனுக்கு தன் தலையில் எத்தனை மயிர்கள் இருக்கும் என்னும் எண்ணிக்கை அவனுக்கே தெரியாது. ஆனால் நம்முடைய தேவன் இதை தெரிந்து வைத்திருக்கிறார். நம்முடைய ஒவ்வொரு காரியமும் கர்த்தருக்குத் தெரியும். அது சிறிய காரியமாக இருந்தாலும், நம் கவனிக்காமல் புறக்கணிக்கும் காரியமாக இருந்தாலும், கர்த்தர் அதை தெரிந்து வைத்திருக்கிறார். தம்முடைய ஜனத்தைக் குறித்து எல்லாக் காரியங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.
தேவன் நம்முடைய தலையிலுள்ள மயிரையெல்லாம் எண்ணுகிறார் என்றால், அவர் நிச்சயமாகவே தம்முடைய பிள்ளைகளின் தலைகளை எண்ணியிருப்பார். அவர்களுடைய ஜீவியங்களை பராமரிப்பார். அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு ஆறுதல் அளிப்பார். ஒவ்வொருவரும் தன்னைத்தானே கவனித்துக் கொள்வார்கள். நாம் நம்மை கவனித்துக் கொள்வதைவிட, தேவன் நம்மை அதிகமாக கவனிக்கிறார்.
இயேசுவின் நாமத்தினிமித்தம் நாம் எல்லோராலும் பகைக்கப்படுவோம். ஆனாலும் நம்முடைய தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது. நம்முடைய பொறுமையினால் நமது ஆத்துமாக்களை நாம் காத்துக்கொள்ள வேண்டும் (லூக் 21:17-19). கர்த்தருடைய பரிசுத்தவான்கள் அவருக்கு விசேஷித்தவர்கள். பரிசுத்தவான்களின் சரீரத்திலுள்ள சிறிய பகுதியைக்கூட கர்த்தருடைய அனுமதியில்லாமல் அழிக்க முடியாது. பரிசுத்தவான்களின் ஜீவியமும், மரணமும் கர்த்தருக்கு விசேஷித்தது.
கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிறவன்
மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்தி-ருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுத-க்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்தி-ருக்கிற என் பிதாவின் முன்பாக மறுத-ப்பேன் (மத் 10:32,33).
இயேசுகிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களை, கர்த்தர் தம்முடைய மகிமையில் தமது பிள்ளைகளாக ஏற்றுக்கொள்வார். உபத்திரவ நாட்களில் கர்த்தருக்கு உண்மையாக இருந்தவர்களை தம்முடைய மகிமையின் நாட்களில் கனப்படுத்துவார். இந்த பூமியில் உண்டாகும் பாடுகளினால் மனுஷர் முன்பாக தம்மை மறுதலிக்கிறவர்களை கர்த்தரும் மறுதலித்து விடுவார்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் எல்லோருமே கிறிஸ்துவை மனுஷர் முன்பாக அறிக்கைபண்ணவேண்டும். இயேசுகிறிஸ்துவை நமது இரட்சகர் என்று விசுவாசித்தால் மாத்திரம் போதாது. நமது விசுவாசத்தை மனுஷர் முன்பாக அறிக்கை பண்ணவும் வேண்டும். அவருக்காக பாடுகளை சகிக்கவும் ஆயத்தமாயிருக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவுக்காக ஊழியம் செய்வது என்பதில், அவரோடுகூட அவருக்காக பாடு அனுபவிப்பதும் அடங்கியிருக்கிறது.
இந்த பூமியில் நாம் கர்த்தருக்காக ஊழியம் செய்யும்போது பாடுகளையும் வேதனைகளையும் சகித்துக்கொண்டு, அவரை மனுஷர் முன்பாக அறிக்கைபண்ணினால், நீதிமான்களின் உயிர்த்தெழுதலின்போது அவர் தமது கிருபையை நமக்கு வெளிப்படுத்துவார். பரலோகத்திலிருக்கிற தம்முடைய பிதாவின் முன்பாக கிறிஸ்து நம்மை தம்முடைய உண்மையுள்ள ஊழியக்காரர்களாக அறிக்கை பண்ணுவார்.
நாம் இயேசுகிறிஸ்துவை மனுஷர் முன்பாக அறிக்கைபண்ணுவதும், அவரை மனுஷர் முன்பாக கனப்படுத்துவதும் சாதாரணமான காரியம். அதேவேளையில் கிறிஸ்து நம்மை தம்முடைய பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவதும் கனப்படுத்துவதும் நமக்கு விசேஷித்த காரியமாகும்.
மனுஷர் முன்பாக நாம் கிறிஸ்துவை மறுதலிக்கக்கூடாது. கிறிஸ்துவை மறுதலிப்பது மிகவும் ஆபத்தானது. அவரை நாம் மறுதலித்தால் பரலோகத்தில் இருக்கிற தம்முடைய பிதாவின் முன்பாக நம்மையும் அவர் மறுதலிப்பார். நியாயத்தீர்ப்பு நாளின்போது கிறிஸ்து நம்மை மறுதலித்துவிட்டால் நமது நிலமை மிகவும் பரிதாபமாக இருக்கும். மகா நியாயத்தீர்ப்பு நாளின்போது நமக்கு கிறிஸ்துவின் சகாயமும் கிருபையும் தேவைப்படும். அவருடைய கிருபையில்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது.
இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டு அவைகளின்படி நாம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் நம்மை ஒருக்காலும் அறியவில்லையென்றும், அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்றுபோங்கள் என்றும் கூறிவிடுவார் (மத் 7:23).
கிறிஸ்துவுக்கு பாத்திரன் அல்லாதவன்
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான் (மத் 10:37-39).
இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு ஊழியத்தின் அஸ்திபாரத்தை வலுப்படுத்துகிறார். உபத்திரவங்கள் உண்டு, பாடுகள் உண்டு என்று ஆரம்பத்திலேயே அவர்களுக்கு தெரிவித்து விடுகிறார். தம்முடைய சீஷர்களாக அவர்கள் இயேசுவை பின்பற்றி வரவேண்டுமென்றால் பாடுகளை சகிக்கிறவர்களாக இருக்கவேண்டும். தங்களுடைய சுயநலன்களை தேடுகிறவர்களாக இருக்கக்கூடாது. ஆரம்பத்திலேயே உபதேசம் வலுவாக இருப்பதினால், சீஷர்களுக்கு பாடுகள் வரும்போது அவர்கள் கலங்கமாட்டார்கள். அவற்றை எளிதாக மேற்கொள்வார்கள்.
தம்முடைய சிலுவையை எடுத்துக்கொண்டு தம்மைப் பின்பற்றாதவன் தமக்கு பாத்திரனல்ல என்று இயேசுகிறிஸ்து தமது சீஷர்களிடம் ஆரம்பத்திலேயே அறிவிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் தங்களுடைய தகப்பனையோ, தாயையோ, மகனையோ, மகளையோ அவரைவிட அதிகமாக நேசிக்கக்கூடாது. இயேசுகிறிஸ்துவைவிட தங்கள் குடும்பத்தாரை அதிகமாக நேசிக்கிறவர்கள் இயேசுகிறிஸ்துவை பின்பற்றுவதற்கு பாத்திரவான்களல்ல.
இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தில் உலகத்தின் ஆசாபாசங்களுக்கு இடமேயில்லை. இயேசுவும் அவருடைய சுவிசேஷ ஊழியமுமே பிரதானம் என்று நினைக்கிறவர்கள் மாத்திரமே அவருடைய ஊழியத்தை உண்மையோடு செய்யமுடியும். யார்மீது அதிக அன்பு வைக்கவேண்டும் என்பதை நாம்தான் முடிவு பண்ணவேண்டும். கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டுமானால் நாம் கர்த்தர்மீதுதான் அதிக அன்பு வைக்கவேண்டும். இதில் பேரம்பேசி சலுகையை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பேயில்லை. இயேசுகிறிஸ்துவின் உபதேசம் தெளிவாக உள்ளது.
இயேசுகிறிஸ்துவின் உபதேசம் எல்லாமே முக்கியமானது என்று நாம் நினைக்கவேண்டும். கிறிஸ்துவின் உபதேசத்தில் சிலவற்றை ஏற்றுக்கொண்டு, சிலவற்றை புறக்கணிக்கிறவர்கள் கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக இருக்கமாட்டார்கள். கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு என்ன கிரயம் செலுத்த வேண்டியது இருந்தாலும் அதை செலுத்துவதற்கு நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும்.
ஊழியப்பாதையில் உபத்திரவம், பாடுகள், வேதனைகள், துன்பங்கள், கண்ணீர்கள் ஆகிய எதுவந்தாலும் இயேசுகிறிஸ்துவை இந்த பாடுகளுக்கு மத்தியிலும் மனுஷருக்கு உண்மையோடு அறிவிக்கவேண்டும். நாம் இந்த உலகத்தில் படும் எல்லா பாடுகளைவிட, கிறிஸ்துவுக்காக பாடுகளை அனுபவிப்பது மிகவும் மேன்மையானது. கிறிஸ்துவுக்காக நாம் எதையாவது இழந்தாலும் அது நமக்கு நஷ்டமாக இராது. எல்லா சூழ்நிலைகளிலும் கிறிஸ்துவே நமக்கு போதும் என்னும் மனப்பக்குவம் நம்முடைய உள்ளத்தில் காணப்படவேண்டும்.
சிறு பிள்ளைகள் தங்கள் பெற்றோரை நேசிக்கவேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நேசிக்கவேண்டும். இது வேதத்தின் உபதேசம். அதே வேளையில் இவர்கள் தங்கள் உறவினரை நேசிப்பதைவிட இயேசுகிறிஸ்துவை அதிகமாக நேசிக்க வேண்டும். அவ்வாறு நேசிக்கவில்லையென்றால் அவர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு பாத்திரவான்களல்ல. கிறிஸ்வை பின்பற்றுவதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள்.
ஒரு மனுஷனுக்கு சத்துருக்கள் அவனுடைய வீட்டாரே. குடும்பத்தாரின் பாசமும் நேசமும் சில சமயம் நம்மை கிறிஸ்துவிடம் நெருங்கிச் சேருவதை தடைபண்ணிவிடும். பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடத்திலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்பாக இருக்க வேண்டும். ஆனால் அந்த அன்பு அவர்கள் இயேசுகிறிஸ்துவிடம் நெருங்கிச் சேருவதற்கு தடையாக இருக்கக்கூடாது. ஆகையினால் இயேசுகிறிஸ்து குடும்பத்தின் பாசத்தையும் அன்பையும் குறித்து எச்சரித்துக் கூறியிருக்கிறார் (மத் 10:21,35,36).
நம்முடைய சிலுவை
நம்முடைய சிலுவையை எடுத்துக்கொண்டு நாம் இயேசுகிறிஸ்துவை பின்பற்றவில்லையென்றால் நாம் அவருக்கு பாத்திரவான்களல்ல. கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் தங்களுடைய ஊழியப் பாதையில் சிலுவை உண்டு என்பதை எதிர்பார்க்கவேண்டும். அந்த சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றவும் நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து சிலுவையை சுமந்ததுபோல நாமும் சிலுவையை சுமக்க வேண்டும். இந்த வாக்கியத்திற்கு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவேண்டும் என்று பொருள். அவர் நமக்கு வைத்து சென்றிருக்கும் முன்மாதிரியை கடைபிடிக்கவேண்டும்.
நம்முடைய சிலுவைகளை சுமப்பது ஒருவேளை நமக்கு வேதனையான அனுபவமாக இருக்கலாம். கிறிஸ்துவை பின்பற்றும்போது நமது சிலுவையை சுமந்து கொண்டு பின்பற்றுவது நமக்கு ஆசீர்வாதமான காரியம். இயேசுகிறிஸ்து நமக்கு வழியை காண்பித்திருக்கிறார். அந்த வழியில் நாம் கிறிஸ்துவை உண்மையாகவே பின்பற்றுவோமானால், வேதனைகளை சகித்துக்கொள்ள அவர் நம்மை பழக்குவிப்பார். சிலுவையை சுமந்து செல்லும் நமது அனுபவித்தில் தேவனுடைய நாமம் மகிமைப்படும். நமது பாடுகளை நாம் நினையாமல், தேவனுடைய மகிமையையே நாம் நோக்கிப் பார்த்து, சிலுவையை சுமக்க பழக்கிக்கொள்வோம்.
தன் ஜீவனைக்காக்கிறவன்
கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு தங்களுடைய ஜீவனைக் காத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறவர்கள். தங்களுடைய ஜீவனை இழந்துபோவார்கள். கிறிஸ்துவை விட்டு விலகிப்போகிறவர்கள் தங்கள் ஜீவனை இழந்துபோவார்கள். அவர்கள் நித்திய ஜீவனை இழந்து, நித்திய மரணத்தை பெற்றுக்கொள்வார்கள்.
கிறிஸ்துவின் நிமித்தம் தன்னுடைய ஜீவனை இழந்துபோகிறவன் அதை காப்பான். கிறிஸ்துவை மறுதலியாமல், பாடுகளை சகித்துக்கொண்டு, அந்த வேதனையில் தன் சரீரப்பிரகாரமான ஜீவன் செத்துப்போனாலும், அவன் நித்திய ஜீவனைப்பெற்றுக்கொள்வான். இந்த உலகப்பிரகாரமான ஜீவனைவிட நித்திய ஜீவன் மகிமையானது. கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் வரப்போகிற நித்திய ஜீவனுக்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். எப்போது பார்த்தாலும் இந்த உலகப்பிரகாரமான ஜீவனையே நினைத்து கவலைப்பட்டு கலங்கிக்கொண்டிருக்கக்கூடாது.
இயேசு கிறிஸ்துவின் சீஷருக்குப் பரீட்சைகள்
1. உலக உபத்திரவம் (மத் 10:25; யோவான் 15:18)
2. பயமில்லாமல் பிரசங்கம் பண்ணுதல் (மத் 10:26-27)
3. பயமில்லாமல் பிரதிஷ்டை பண்ணுதல் (மத் 10:28)
4. பயமில்லாத விசுவாசம் (மத் 10:29-31; எபி 11)
5. கிறிஸ்துவைக் குறித்துத் தைரியமாகச் சாட்சி பகருதல் (மத் 10:32-33)
6. குடும்பத்தில் உபத்திரவம் (மத் 10:34-36; மத் 19:29)
7. தேவனுக்கு முதலிடம் கொடுத்தல் (மத் 10:37; மத் 22:37)
8. அனுதினமும் சிலுவையைச் சுமத்தல் (மத் 10:38; லூக்கா 9:23)
9. கிறிஸ்துவைப் பின்பற்றுதல் (மத் 10:38; யோவான் 10:27)
10. தன்னைத் தானே வெறுத்தல் (மத் 10:39; ரோமர் 8:1-13)
மத்தேயு 10:39-42 ஆகிய வசனங்களில் நான்கு தீர்க்கதரிசன வாக்குத்தத்தங்கள் கூறப்பட்டிருக்கிறது. இவை தற்காலத்தில் நிறைவேறி வருகின்றன. கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு நாளின்போது இவை முழுவதுமாக நிறைவேறும். (ரோமர் 14:10; 2கொரி 5:10).
தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; இயேசுகிறிஸ்துவினிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். தன்னுடைய சொந்த முயற்சியினால் தன் ஜீவனைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவன் அதை இழந்துபோவான். தன்னுடைய சரீரத்தின் பாவமான காரியங்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறவன் தன் ஜீவனைக் காத்துக் கொள்வான்.
உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன்
உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 10:40-42).
இயேசுகிறிஸ்து தம்மை நமது சிநேகிதராக அறிமுகப்படுத்துகிறார். தம்முடைய சிநேகிதர்களுக்கு நம்மை அவர்களுடைய சிநேகிதராகவும் அறிமுகம் செய்து வைக்கிறார். நம்மை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் இயேசுகிறிஸ்துவையே ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கிறார்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்களுக்கு இந்த உலகத்தில் பாடுகளும் உபத்திரவங்களும் உண்டு. மனுஷர் ஊழியக்காரர்களையும் அவர்களுடைய சுவிசேஷச் செய்தியையும் புறக்கணித்து ஒதுக்கிவிடுவார்கள். இவர்களுக்கு மத்தியிலும் ஊழியக்காரர்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் தங்கள் இருதயங்களில் கிறிஸ்துவின் சுவிசேஷச் செய்தியை ஏற்றுக்கொள்கிறார்கள். கிறிஸ்துவின் செய்தியை அறிவிக்கும் அவருடைய ஊழியக்காரர்களைத் தங்களுடைய சிநேகிதராக ஏற்றுக்கொள்கிறார்கள். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் ஒருபோதும் வீணாக பிரயாசப்படுவதில்லை. ஊழியக்காரர்களின் பிரயாசத்திற்கு ஏற்ற பலன் உரிய காலத்தில் கொடுக்கப்படும்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்களை ஏற்றுக்கொண்டாலும் அல்லது புறக்கணித்தாலும் அதை தம்மையே ஏற்றுக்கொள்வதற்கும் அல்லது புறக்கணிப்பதற்கும் சமமானது என்று இயேசுகிறிஸ்து அறிவிக்கிறார். கிறிஸ்துவின் ஊழியக்காரர்களுக்கு நன்மை பாராட்டினாலும் அல்லது தீமை பாராட்டினாலும் அது தமக்கே பாராட்டப்படும் நன்மையாகவும் அல்லது தீமையாகவும் இயேசுகிறிஸ்து கூறுகிறார்.
இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்தினிமித்தம் நம்மை ஏற்றுக்கொள்கிறவர்கள். அவரையே ஏற்றுக்கொள்கிறார்கள். இயேசு நம்மோடு எப்போதும்கூடவே இருக்கிறார். ஆகையினால் நம்மை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதினால் உண்டாகும் ஆசீர்வாதம் கிடைக்கிறது. இந்த உலகத்தின் முடிவுபரியந்தம் இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளோடுகூட இருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் கிறிஸ்துவையே ஏற்றுக்கொள்கிறார்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவர்கள் அவரை அனுப்பினவரை ஏற்றுக்கொள்கிறார்கள்.
சில சமயங்களில் கிறிஸ்துவினுடைய ஊழியக்காரர்களை உபசரிக்கிறவர்கள் தாங்கள் அறியாமலேயே தேவதூதரை உபசரிக்கிறார்கள். இயேசுகிறிஸ்து தேவதூதரைவிட பெரியவர். கிறிஸ்துவின் ஊழியக்காரர்களுக்கு போஜனம் கொடுக்கிறர்கள் கிறிஸ்துவுக்கே போஜனம் கொடுக்கிறார்கள். அவர்களுடைய தாகத்தை தீர்க்கிறவர்கள் கிறிஸ்துவுடைய தாகத்தையே தீர்க்கிறார்கள் (மத் 25:37).
கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் எல்லா உபசரிப்புக்களுக்கும் பாத்திரவான்களாக இருக்கிறார்கள். சில சமயங்களில் ஊழியக்காரர்களை உபசரிக்கக்கூடிய வசதி ஜனங்களுக்கு இல்லாமல் போகலாம். அவர்களுக்கு சாதாரணமாக ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்க கொடுக்கிறவனும் அதற்குரிய பலனை அடைவான். ஊழியக்காரர்களுக்கு கொடுப்பது எதுவும் வீணாக போய்விடாது.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்களுக்கு காண்பிக்கப்படும் அன்பை கிறிஸ்து தமது ஞாபகபுஸ்தகத்தில் எழுதி வைத்து அதற்கேற்ற பலனை கொடுப்பார். நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் கொடுப்பதை எவ்வளவு அன்போடு கொடுக்கிறோம் என்பதே முக்கியம். நாம் எதை செய்தாலும் அன்போடு செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.
காணிக்கைப் பெட்டியிலே ஒரு ஏழை விதவை இரண்டு காசைப்போட்டாள். அதை கண்ட இயேசுகிறிஸ்து இந்த ஏழை விதவை மற்ற எல்லாரைப்பார்க்கிலும் அதிகமாக போட்டாள் என்று கூறுகிறார். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள். இந்த ஏழை விதவையோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்திற்கு உண்டாயிருந்தது எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் (லூக் 21:3,4). இயேசுகிறிஸ்துவின் பார்வை எப்போதுமே இப்படித்தான் இருக்கும்.
இயேசு நம்முடைய முகத்தைப் பார்க்காமல் நமது இருதயத்தைப் பார்க்கிறார். நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதைவிட அதை எந்த மனதுடன் கொடுக்கிறோம் என்பதே கிறிஸ்துவுக்கு முக்கியம். நமக்கு உலகப்பிரகாரமான ஐசுவரியம் அதிகமாக இல்லாவிட்டாலும், நாம் கிருபைகளிலும், நற்கிரியைகளிலும் ஐசுவரியவான்களாக இருக்கவேண்டும்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்மீது அன்பு செலுத்தும்போது நாம் கிறிஸ்துவையே நோக்கிப் பார்க்கவேண்டும். கிறிஸ்துவுக்காகவே அவருடைய ஊழியக்காரர்களை அங்கீகரிக்க வேண்டும். கிறிஸ்துவின் தீர்க்கதரிசிகள் அவருடைய சாயலைப் பெற்றிருக்கிறார்கள். ஆகையினால் நாம் தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுபோலவே நீதிமான்களும் தேவனுடைய சாயலைப் பெற்றவர்கள். நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நாம் நீதிமான்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். இவர்களை ஏற்றுக்கொள்வதுபோலவே சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் கிறிஸ்துவின் சீஷர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஊழியக்காரர்களை ஏற்றுக்கொள்ளும்போது அவர்களுடைய பெயர் பிரஸ்தாபத்திற்காக அவர்களை ஏற்றுக்கொள்ளாமல், இயேசுகிறிஸ்துவையே நோக்கிப்பார்த்து அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். முகஸ்துதி பண்ணுவது கர்த்தருக்கு விரோதமானது. கிறிஸ்துவைவிட கிறிஸ்துவின் ஊழியக்காரர்களை மேன்மைப்படுத்துவதும் நல்லதல்ல. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை சிறியர் என்றே அழைக்கிறார்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்களுக்கு செய்யப்படும் உதவிகளுக்கு தேவன் தாராளமாக பலன் கொடுப்பார். ஊழியக்காரர்களுக்கு உதவி செய்கிறவர்கள் வெகுமதிக்கு பாத்திரவான்கள் என்று இயேசுகிறிஸ்து கூறவில்லை. அவர்கள் வெகுமதியை அடைவார்கள் என்று தீர்மானமாக கூறுகிறார். நாம் தேவனுடைய கரத்திலிருந்து சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது. அதைவிட மேலாக அவர் நமக்கு தமது கிருபையையும், வெகுமதியையும் தாராளமாக தருகிறார். தேவனுடைய வெகுமதி எப்போதுமே இலவச ஈவாக கொடுக்கப்படுகிறது. தேவன் கொடுக்கும் ஈவை இழந்துபோவது ஞானமான செயலல்ல.
வெகுமதிகள் பலவகைப்படும். சில வெகுமதிகள் சிறியதாகவும், வேறு சில வெகுமதிகள் பெரியதாகவும் இருக்கும். வெகுமதி எப்படியிருந்தாலும் அது தேவனிடத்திலிருந்து வருவதினால் அது மிகவும் விசேஷமானது. தேவன் கொடுக்கும் வெகுமதிகளை நாம் இழந்துவிடக்கூடாது.
தீர்க்கதரிசிகளையும், நீதிமான்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நாம் ஏற்றுக்கொள்ளும்போது தீர்க்கதரிசிக்கேற்ற பலனும், நீதிமானுக்கேற்ற பலனும் நமக்கு கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆசீர்வாதங்கள் அவர்களை ஏற்றுக்கொண்ட நமக்கும் கொடுக்கப்படுகிறது.
தீர்க்கதரிசியானவர் நாம் பிழைக்கும்படி நமக்காக வேண்டுதல் செய்வார் (ஆதி 20:7). நாம் தீர்க்கதரிசியை இயேசுகிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளும்போது அவர் நமக்காக கர்த்தரிடத்தில் வேண்டுதல் செய்வார். அதுவே தீர்க்கதரிசிக்கேற்ற பலன். தீர்க்கதரிசிகள் ஏறெடுக்கும் விண்ணப்பங்கள் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் புரிந்து கொண்டால், நாம் தீர்க்கதரிசிகளை ஏற்றுக்கொள்ள தயங்கமாட்டோம்.
ஆவிக்குரிய காரியங்கள் வேறு. உலகப்பிரகாரமான காரியங்கள் வேறு. தீர்க்கதரிசிக்கேற்ற பலன் என்பது நமக்கு கொடுக்கப்படும் ஆவிக்குரிய ஆசீர்வாதமாகும். இதைப் புரிந்து கொள்ளுகிறவர்கள் தீர்க்கதரிசிகளையும், நீதிமான்களையும், கிறிஸ்துவின் சீஷர்களையும் ஏற்றுக்கொண்டு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வார்கள். நாம் பிழைக்கும்படி அவர்களும் நமக்காக கர்த்தரிடத்தில் வேண்டுதல் செய்வார்கள்.
ஜனங்கள் ஊழியக்காரரை ஏற்றுக் கொள்ளும்போது, அவர் உபதேசம் பண்ணும் சத்தியத்தையும் அங்கீகரிப்பார்கள். இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கம் பண்ணும் ஊழியக்காரரை ஜனங்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றால் அவர்கள் இயேசு கிறிஸ்துவையும் ஏற்றுக் கொள்வார்கள். ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லாதவர்கள் என்றால் இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரரையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
ஒரு கள்ளத்தீர்க்கதரிசியை நல்ல தீர்க்கதரிசி போன்று ஏற்றுக் கொள்வதினாலோ, துன்மார்க்கனை நீதிமான்போல ஏற்றுக் கொள்வதினாலோ நமக்குப் பிரயோஜனமில்லை. கள்ளத்தீர்க்கதரிசிகளையும், துன்மார்க்கரையும் ஏற்றுக் கொள்கிறவர்கள் அவர்களுடைய பாவங்களில் பங்காளிகளாக இருப்பார்கள். (2 யோவான் 1:9-11) நாம் எல்லா மார்க்கப் போதகர்களையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. கர்த்தருடைய மெய்யான ஊழியக்காரர்களை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். யாரையாவது ஏற்றுக்கொண்டு, ஆண்டவர் என்னை ஆசீர்வதிக்கவில்லையே என்று புலம்பக்கூடாது. நாம் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப நாம் நியாயம் தீர்க்கப்படுவோம். அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்களே என்று ஆண்டவர் நமக்கு தெளிவாகக் கூறியிருக்கிறார். (மத் 7:15-20) இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி வருபவருக்கு பொருளாதார உதவியும், இதர வசதிகளும் செய்து கொடுப்பதற்கு முன்பாக அந்த ஊழியக்காரரைப் பற்றி நிதானித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.