இயேசு தமது 12 சீஷர்களை ஊழியத்திற்க்கு அனுப்புதல்

 

இயேசு தமது 12 சீஷர்களை ஊழியத்திற்க்கு அனுப்புதல்


 இயேசுகிறிஸ்து பன்னிரண்டு பேரை தம்முடைய அப்போஸ்தலர்களாக அபிஷேகம் பண்ணுகிறார். இவர்கள் எல்லோரும் இதுவரையிலும் இயேசுகிறிஸ்துவின்  சீஷர்களாக இருந்தவர்கள். சிறிதுகாலத்திற்கு முன்பு இயேசுகிறிஸ்து இவர்களை தமது சீஷர்களாக அழைத்தார். இவர்கள் இயேசுவைப் பின்பற்றுகிறார்கள். இவர்கள் மனுஷரைப் பிடிக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்று இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணினார். அந்த வாக்குத்தத்தம் இப்போது நிறைவேறுகிறது. இந்த பன்னிரண்டு பேரையும் சீஷர்கள் என்னும் ஸ்தானத்திலிருந்து அப்போஸ்தலர்கள் என்னும் கண்ணியமான  ஸ்தானத்திற்கு உயர்த்துகிறார். 


இயேசு தமது சீஷர்களுக்கு கொடுக்கும் அதிகாரம்


அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார் (மத் 10:1).


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் இப்போது தேர்வு நிலையில் இருக்கிறார்கள். மனுஷருக்குள் இருக்கிறதை இயேசுகிறிஸ்து அறிந்து வைத்திருக்கிறார். அதற்கு முன்பாக மனுஷருக்குள் இருந்ததையும் அவர் ஏற்கெனவே அறிந்திருக்கிறார் (யோவா 6:70).


இயேசுகிறிஸ்து தமது பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து அவர்களுக்கு ஊழியப் பயிற்சி கொடுக்கிறார்.  இது தேர்வு நிலை ஊழியமாகும். சபையில் இதை முன்மாதிரியாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக இயேசுகிறிஸ்து இந்த முறையை கையாளுகிறார். கர்த்தருடைய ஊழியம் பொறுப்பான ஊழியம். இந்த ஊழியத்தை தேவன் மனுஷருக்கு ஒப்புக்கொடுப்பதற்கு முன்பாக, அவர் ஊழியக்காரர்களை சோதிக்கிறார். இந்த காலத்தில் ஊழியக்காரர்கள் தேர்வு நிலையில் இருக்கிறார்கள். தமக்கு சித்தமான பிரகாரமாக ஊழியம் செய்கிறவர்களை தேர்ந்தெடுத்து தேவன் அவர்களை தமது ஊழியக்காரர்களாக அங்கீகரிக்கிறார். அவர்களிடம் தமது ஊழியத்தை பொறுப்பாக ஒப்படைக்கிறார்.


சீஷர்கள் தேர்வுநிலையில் ஊழியம் செய்தபின்பு அவர்கள் ஆயத்தநிலையில் ஊழியம் செய்கிறார்கள். கர்த்தருடைய பெரிதான ஊழியத்தை செய்வதற்கு தங்களை தகுதிப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்துவே இவர்களை தகுதிப்படுத்துகிறவர். தம்மோடு கூட இருக்குமாறு இயேசுகிறிஸ்து இவர்களை தெரிந்தெடுத்து, இவர்களுக்கு ஊழியப்பயிற்சியை கொடுத்து, இவர்களை ஊழியத்திற்கு ஆயத்தம்பண்ணுகிறார். கிறிஸ்தவ ஊழியத்தில் மிகவும் முக்கியமான பகுதி இயேசுகிறிஸ்துவோடு நெருங்கிய ஐக்கியத்தில்  இருப்பதாகும். 


இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவர்கள் முதலாவதாக அவரோடுகூட இருக்கவேண்டும். ""ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னை பின்பற்றக் கடவன்.  நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்'' என்று இயேசு கூறுகிறார் (யோவா 12:26).


பவுல் புறஜாதியாருக்கு கர்த்தருடைய சத்தியத்தை பிரசங்கம்பண்ணினார். ஊழியத்திற்குப் போவதற்கு முன்பாக அவர்  கர்த்தரை தனக்குள்ளாக வெளிப்படுத்தினார் (கலா 1:16).  


இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு ஊழியப்பயிற்சியை கொடுக்கும்போது அவர்களுக்கு உபதேசம் பண்ணினார். சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் பாதபடியில் அமர்ந்து கற்றுக்கொள்ளும் மாணாக்கர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு இயேசுகிறிஸ்து வேதவாக்கியங்களை திறந்து காண்பித்தார். வேதவசனங்களை புரிந்துகொள்ளும் ஞானத்தையும் அவர்களுக்கு கொடுத்தார். பரலோகத்தின் ரகசியங்களை அறியும் சிலாக்கியம் சீஷர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.


மற்றவர்களுக்கு போதிக்க வேண்டுமென்று விரும்புகிறவர்கள் முதலாவதாக கற்றுக்கொள்ளுகிறவர்களாக இருக்கவேண்டும்.  பிறருக்கு கொடுக்கவேண்டுமென்றால் அதற்கு முன்பாக பெற்றுக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்புவதற்கு முன்பாக அவர்களுக்கு உபதேசம் பண்ணுகிறார் (மத் 5:2). அப்போஸ்தலருடைய ஊழியம் விரிவடையும்போது இயேசுகிறிஸ்து அவர்களுக்கு தேவையான மேலும் பல சத்தியங்களை உபதேசம் பண்ணுகிறார்         (அப் 1:3).


இயேசுகிறிஸ்து தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைக்கிறார். இதற்கு முன்பு இயேசு அவர்களை தம்மை பின்பற்றி வருமாறு அழைத்தார். இப்போதோ அவர்களை தம்மிடத்தில் வருமாறு அழைக்கிறார். இயேசுகிறிஸ்துவினிடத்தில் சீஷர்கள் நெருங்கிச் சேரும்போது அவர்களுக்குள் நெருக்கமான ஐக்கியம் உண்டாகும். 


நியாயப்பிரமாணத்தின்படி  ஆசாரியர்கள் தேவனுடைய பிரகாரத்தில் உட்பிரவேசித்தார்கள். சாதாரண ஜனங்களுக்கு மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு அனுமதியில்லை. ஆசாரியர்கள் மாத்திரமே தேவனுடைய ஊழியத்தை செய்து, தேவனுக்கு நெருக்கமாக இருந்தார்கள். பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களைப்போல, புதிய ஏற்பாட்டுக்காலத்தில், இயேசுகிறிஸ்து  தம்முடைய சீஷர்களை தமக்கு நெருக்கமாக இருக்குமாறு அழைக்கிறார். சுவிசேஷ ஊழியர்கள் எப்போதுமே இயேசுகிறிஸ்துவுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து உபதேசம் பண்ணும்போது  அவருடைய சீஷர்கள் தாங்களாகவே அவரிடத்தில் வருகிறார்கள் (மத் 5:1). இப்போது இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை தம்மிடத்தில் அழைத்து அவர்களை அப்போஸ்தல ஊழியத்திற்கு அபிஷேகம் பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் இப்போது பிரசங்கம்பண்ணுவதைவிட கற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். நாமும் மற்றவர்களுக்கு பிரசங்கம் பண்ணுவதற்கு முன்பாக தேவனுடைய அழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு காத்திருக்கவேண்டும். தேவனுடைய தெளிவான அழைப்பை பெற்றுக்கொண்ட பின்பே மற்றவர்களுக்கு பிரசங்கம் பண்ணவேண்டும்.


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு அதிகாரங் கொடுக்கிறார்.  இயேசுவின் நாமத்தினால் சீஷர்களுக்கு அதிகாரங் கொடுக்கப்படுகிறது. கர்த்தருடைய சுவிசேஷத்திற்கு ஜனங்களை கீழ்ப்படியுமாறு கட்டளையிடும் அதிகாரத்தை இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கொடுக்கிறார். இந்த அதிகாரத்தை உறுதிபண்ணுவதற்கு அசுத்த ஆவிகளை துரத்தும் அதிகாரத்தையும் சகல நோய்களையும், சகல வியாதிகளையும் நீக்கும் அதிகாரத்தையும் இயேசு தமது சீஷர்களுக்கு கொடுக்கிறார். 


இயேசு கொடுக்கும் அதிகாரத்தின் மூலமாக பிசாசுகள் சீஷர்களுக்கு கட்டுப்படுகின்றன. நீதியான எல்லா அதிகாரமும் இயேசுகிறிஸ்துவிடம் இருந்தே வருகிறது. இயேசுகிறிஸ்துவுக்கு எல்லா அதிகாரமும் அளவில்லாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 


தமது மகிமையில் ஒரு பகுதியை இயேசுகிறிஸ்து தமது ஊழியர்களுக்கும் கொடுக்கிறார். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் மோசே தன்னுடைய மகிமையில் ஒரு பகுதியை யோசுவாவிற்கு கொடுத்தார். அசுத்த ஆவிகளை துரத்தும் அதிகாரத்தையும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கும் அதிகாரத்தையும் இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு கொடுக்கிறார். பிசாசை மேற்கொள்வதும், உலகத்தை குணப்படுத்துவதுமே சுவிசேஷத்தின் திட்டமாகும். 


அசுத்த ஆவிகளை துரத்தும் அதிகாரத்தை சீஷர்கள் இயேசுவிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். கிறிஸ்துவின் ஊழியக்காரர்களுக்கு பிசாசுகளின் மீது அதிகாரம் கொடுக்கப்படுகிறது. பிசாசுக்கு எதிராகவும் அவனுடைய ராஜ்யத்திற்கு எதிராகவும் ஊழியக்காரர்கள் இந்த அதிகாரத்தை பயன்படுத்தவேண்டும். ஜனங்களுடைய சரீரத்தை பிடித்திருக்கும் அசுத்த ஆவிகளை துரத்தும் அதிகாரத்தை இயேசுகிறிஸ்து தமது ஊழியக்காரர்களுக்கு கொடுக்கிறார். சாத்தானுடைய ராஜ்யத்தை அழிக்கவும், அவனுடைய எல்லா கிரியைகளை  ஒழிக்கவும் தேவகுமாரன் இந்த பூமிக்கு வந்தார். 


இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். அற்புதங்கள் செய்வதற்கு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு அதிகாரங்கொடுக்கிறார். தங்களுடைய உபதேசத்தை உறுதிபண்ணுவதற்காகவும், இவை தேவனுடைய உபதேசங்கள் என்பதை நிரூபிப்பதற்காகவும் சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில்  அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பிக்கவேண்டும். அற்புதங்களும் அடையாளங்களும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமாக இருக்கிறது. 


குணப்படுத்துவதும் இரட்சிப்பதும் சுவிசேஷத்தின் திட்டமாகும். அற்புதங்களை நடப்பிக்குமாறு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு கொடுத்திருக்கும் அதிகாரம் இயேசுகிறிஸ்துவை உலக இரட்சகராக வெளிப்படுத்துகிறது. இயேசுகிறிஸ்து சாதாரண போதகர்  மாத்திரமல்ல. அவர் அற்புதர்.


இயேசுகிறிஸ்து தங்களுக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்தினால் சீஷர்கள் சகல வியாதிகளையும் சகல நோய்களையும் குணப்படுத்தவேண்டும். எப்படிப்பட்ட வியாதியாக இருந்தாலும், எத்தனை       நாள்பட்ட வியாதியாக இருந்தாலும் சீஷர்கள் அதை குணப்படுத்தவேண்டும். மருத்துவர்கள் வியாதியஸ்தரை கைவிட்டாலும் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் அவர்களை கைவிடக்கூடாது. சுவிசேஷத்தின் கிருபையில் எல்லோருக்குமே இரட்சிப்பு வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. எல்லா வேதனைகளுக்கும் சுவிசேஷத்தில் ஆறுதலும் பரிகாரமும் உள்ளது. 


இயேசுகிறிஸ்துவால் குணப்படுத்த முடியாத சரீரப்பிரகாரமான வியாதியோ அல்லது ஆவிக்குரிய வியாதியோ எதுவுமில்லை. எல்லாவிதமான வியாதிகளையும் குணப்படுத்துவதற்கு இயேசுகிறிஸ்துவின் வல்லமை போதுமானது. ஆகையினால் வியாதியஸ்தர்கள் யாரும் தங்களுக்கு நம்பிக்கையில்லையென்று புலம்ப வேண்டியதில்லை. இயேசுகிறிஸ்துவிடம் வந்தால் வியாதிகள் சொஸ்தமாகும். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.


இயேசு கிறிஸ்து தேவனுடைய சித்தத்தைத் தெரிந்து கொள்கிறதற்காக இரவு முழுவதும் ஜெபம் பண்ணிய பின்பு பன்னிரெண்டு சீஷர்களைத் தெரிந்தெடுத்தார். (மாற்கு 3:13;               லூக்கா 6:12-16)


இயேசுகிறிஸ்து அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.  இதுவே வல்லமையின் இரகசியம். கர்த்தர் கொடுக்காமல் யாரும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. கர்த்தர் கொடுத்த பின்புகூட நாம் விசுவாசத்தினால் அதைக்காத்துக் கொள்ளவில்லையென்றால் நம்மிடத்தில் அந்த அதிகாரம் தங்காது. (யோவான் 3:27; ரோமர் 8:25)


பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்கள்


அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தல ருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,      பி-ப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே  (மத் 10:2-4).


அப்போஸ்தலர் என்னும் பெயருக்கு அனுப்பப்பட்டவர் என்று பொருள். அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால், அவருடைய அதிகாரத்தினால் அசுத்த ஆவிகளை  துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அப்போஸ்தலர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். தேவதூதன் என்னும் வார்த்தைக்கும் அப்போஸ்தலர் என்னும் வார்த்தைக்கும் ஒரே பொருளே கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்விருவருமே அனுப்பப்பட்டவர்கள். 


உண்மையுள்ள ஊழியக்காரர்கள் எல்லோருமே இயேசுகிறிஸ்துவால் அனுப்பப்பட்டவர்கள்தான். ஆயினும் இயேசுகிறிஸ்து தமது ஊழியத்திற்காக அனுப்பிய பன்னிரண்டு சீஷர்களும் அப்போஸ்தலர்  என்னும் விசேஷித்த நாமத்தினால் அழைக்கப்படுகிறார்கள். இந்த அப்போஸ்தல ஊழியமும், அப்போஸ்தல ஸ்தானமும் விசேஷமானது. தேவனுடைய ராஜ்யத்தில் இந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் பிரதான ஸ்தானத்தில் இருக்கிறார்கள்.


இயேசுகிறிஸ்துவும் தம்மை அப்போஸ்தலராக வெளிப்படுத்தியிருக்கிறார் (எபி 3:1). பிதாவானவர் இயேசுகிறிஸ்துவை அனுப்பியிருக்கிறார். அதுபோல இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை அனுப்பியிருக்கிறார்.  ""பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்று இயேசுகிறிஸ்து தமது சீஷர்களிடம் கூறுகிறார் (யோவா 20:21). தீர்க்கதரிசிகள் தேவனுடைய நற்செய்தியாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 


இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலர்களின் எண்ணிக்கை  பன்னிரண்டு ஆகும். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தை நினைவுகூருவதற்காக இயேசுகிறிஸ்து தமக்கு பன்னிரண்டு அப்போஸ்தலர்களை தேர்ந்தெடுக்கிறார். சுவிசேஷ ஊழியம் செய்யும் சபையானது தேவனுடைய இஸ்ரவேலாக இருக்கவேண்டும் .  சபைக்கு முதலாவதாக யூதர்களை அழைத்து வரவேண்டும். 


அப்போஸ்தலர்கள் ஆவிக்குரிய தகப்பனைப்போல இருக்கிறார்கள். இவர்கள் கிறிஸ்துவின் சந்ததியை பெற்றெடுக்கவேண்டும். இஸ்ரவேல் ஜனத்தார் தங்கள் மாம்சத்திற்கு அடிமைகளாக இருந்தார்கள். தங்களுடைய மீறுதல்களினாலும் பாவங்களினாலும் அவர்கள் தேவனை விட்டு விலகிப்போனார்கள். தேவனும் அவர்களை புறக்கணித்துவிட்டார். 


இங்கு பிரதிஷ்டை பண்ணப்பட்டிருக்கும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் மற்றொரு இஸ்ரவேலுக்கு ஆவிக்குரிய பெற்றோராக இருக்கிறார்கள். இந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் தங்களுடைய உபதேசங்களினால் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களை நியாயம் விசாரிப்பார்கள். இயேசுகிறிஸ்து  தம்முடைய சீஷர்களிடம் ""நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள்'' என்று கூறுகிறார் (லூக் 22:30). 


மத்தேயு அப்போஸ்தலர்களின் பெயர்களை வரிசையாக எழுதுகிறார். அப்போஸ்தலருடைய அட்டவணையில் தங்களுடைய பெயர் இடம்பெற்றிருப்பது சீஷர்களுக்கு பெருமையான காரியம். இதற்காக அவர்கள் சந்தோஷப்படலாம்.  நம்முடைய நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காக நாமும் சந்தோஷப்படவேண்டும் (லூக் 10:20). 


பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒரு சில அப்போஸ்தலர்களைப்பற்றி அதிக விபரம் தெரியவில்லை. கானானியனாகிய சீமோன், பர்த்தொலொமேயு  ஆகியோரைப்பற்றி வேறு விவரம் எதுவும் வேதவசனங்களின் மூலமாக தெரியவில்லை. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் எல்லோரும் ஒன்றுபோல பிரபல்யமாக இருப்பதில்லை. எல்லா ஊழியக்காரர்களின் ஊழியங்களையும் ஜனங்கள் ஒன்றுபோல் அங்கீகரிப்பதில்லை.


அப்போஸ்தலருடைய பெயர்கள் இரண்டு இரண்டாக சேர்த்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து தமது ஊழியத்திற்கு இரண்டு இரண்டு பேராக அனுப்புகிறார். ஊழியத்திற்கு இரண்டுபேராக போகும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள். இருவரும் சேர்ந்து கிறிஸ்துவுக்கும் ஆத்துமாக்களுக்கும் சிறப்பாக ஊழியம் செய்வார்கள். ஒருவர் மறந்து போனதை மற்றொருவர் நினைவுகூருவார். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் ஆறுபேர் சகோதரர்கள். பேதுரு, அந்திரேயா என்பவர்களும், யாக்கோபு, யோவான் என்பவர்களும், மற்றொரு யாக்கோபு, லெபேயு  என்பவர்களும் சகோதரர்கள் ஆவார்கள். சரீரப்பிரகாரமாக சகோதரர்களாக இருக்கிறவர்கள் இப்போது இயேசுகிறிஸ்துவின் கிருபையினால் ஆவிக்குரிய சகோதரர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்துவின் அன்பினால் இவர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 


அப்போஸ்தலர்களுடைய பெயர்களில் பேதுருவின் பெயர் முதலாவதாக கூறப்பட்டிருக்கிறது. ஏனெனில் இவரே முதலாவதாக அழைக்கப்பட்டவர். ஒருவேளை பேதுரு மற்ற சீஷர்களுக்கு ஒரு தலைவரைப்போல முன் சென்றிருக்கலாம்.   மற்ற சீஷருடைய காரியங்களை பேதுரு இயேசுகிறிஸ்துவிடம் எடுத்துக் கூறுபவராக இருக்கலாம். பல சமயங்களில் பேதுரு மற்ற சீஷர்களுக்கு வாயாக செயல்பட்டிருக்கிறார். பேதுருவின் பெயர் முதலாவதாக கூறப்பட்டிருக்கிற போதிலும் இவருக்கென்று விசேஷித்த அதிகாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை. மற்ற அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்ட       அதே அதிகாரமே பேதுருவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் ஊழிய அழைப்பு புனிதமானது. இயேசுவின் ஊழியம் மனுஷரை மேன்மைப்படுத்துவதற்காக நடைபெறுவதில்லை. கர்த்தருடைய ஊழியம் தேவ நாம மகிமைக்காகவும் பரிசுத்தவான்களின் பிரயோஜனத்திற்காகவும் மாத்திரமே நடைபெறவேண்டும்.


மத்தேயுவின் பெயர் தோமாவின் பெயரோடு இங்கு சேர்த்து கூறப்பட்டிருக்கிறது (மத் 10:5). இந்த சுவிசேஷத்தில் முதலாவது தோமாவின் பெயரும் அதன்பின்பு மத்தேயுவின் பெயரும் வருகிறது. இந்த சுவிசேஷத்தின் ஆசிரியர் மத்தேயு. இவர் தான் எழுதின சுவிசேஷத்தில் தன்னை தாழ்த்தி தோமாவின் பெயருக்கு அடுத்ததாக தன் பெயரை எழுதுகிறார். மாற்கு, லூக்கா ஆகியோர் எழுதின சுவிசேஷங்களில் மத்தேயுவின் பெயர் தோமாவின் பெயருக்கு முன்பாக வருகிறது (மாற் 3:18; லூக் 6:15). கிறிஸ்துவின்    சீஷர்கள் மற்ற சீஷர்களின் நன்மைகளை விசாரிக்கிறவர்களாக இருக்கிறார்கள். ஒருவரையொருவர் கனப்படுத்துகிறார்கள். 


மற்ற சுவிசேஷங்களில் இவருடைய பெயர் மத்தேயு என்று மாத்திரமே கூறப்பட்டிருந்தாலும், இந்த சுவிசேஷத்தில் ஆயக்காரனாகிய மத்தேயு என்று கூறப்பட்டிருப்பது ஒரு விசேஷமாகும். ஆயக்காரன் என்னும் வேலை யூதர்களுக்கு அவமரியாதையான வேலை. மத்தேயு தன் பெயரோடு இந்த அவமானத்தையும் சேர்த்துக்கொள்கிறார். 


இயேசுகிறிஸ்து என்னும் கற்பாறையின்மீது இந்த அப்போஸ்தலர்கள் கட்டியெழுப்பப்படுகிறார்கள். கிறிஸ்து    தங்களை ஊழியத்திற்கு அழைத்ததற்கு முன்பு தங்களுடைய நிலமையை இவர்கள் மறவாமல் நினைவுகூருகிறார்கள். பழையதை நினைவுகூர்ந்தால் நாம் இன்று இருக்கும் நிலைக்காக தேவனுடைய கிருபையை நினைவுகூர்ந்து அவரை துதிப்போம். இன்று அப்போஸ்தலராக இருக்கும் மத்தேயு இதற்கு முன்பு ஆயக்காரனாக இருந்தார். 


கானானியனாகிய சீமோனுக்கு செலோத்தே என்னப்பட்ட சீமோன் என்னும் மறுபெயருமுள்ளது (லூக் 6:15). 


இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்தின் பெயர் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவனுடைய பெயரை கூறும்போதெல்லாம் இயேசுகிறிஸ்துவை காட்டிக்கொடுத்தவன் என்னும் அவப்பெயரும் சேர்ந்தே வருகிறது. இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுக்கு மத்தியில் யூதாஸ்காரியோத்தும் இருக்கிறான்.           நமது அன்பின் விருந்துகளிலும் யூதாஸ்காரியோத்தைப் போன்ற கறைகள் இருக்கலாம். கோதுமைகளின் மத்தியில் களைகள் இருக்கலாம். ஆடுகளின் மத்தியில் ஓநாய்கள் இருக்கலாம். இவற்றை வேறு பிரிக்கும் காலம் விரையில் வரப்போகிறது. அப்போது மாய்மாலக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு அவமானப்படுவார்கள்.


நான்கு இடங்களில் அப்போஸ்தலர்களின் பெயர்கள் வரிசையாக அட்டவணை கொடுக்கப் பட்டிருக்கிறது. இவை அனைத்திலும் சீமோன் பேதுருவின் பெயரே முதலாவது வருகிறது. (மத் 10:2; மாற்கு 3:16; லூக்கா 6:14; அப் 1:13) 


""பர்த்தொலொமேயு'' என்பவன் பிலிப்புவின் சகோதரன். நாத்தான்வேலின் மூதாதையருடைய பெயர். (யோவான் 1: 45-51; யோவான் 21:2) பன்னிரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவன். (மத் 10:3; மாற்கு 3:18; மாற்கு 6:14; அப் 1:13) வரலாற்றின் பிரகாரம் சீரியா, பிரிக்கியா, இந்தியா ஆகிய தேசங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணினான். அதன்பின்பு இவனைச் சிலுவையில் தலைகீழாகத் தொங்கவிட்டு, அடித்துக் கொன்றார்கள். அர்மேனியாவில் அஸ்திகாஸ் இராஜா இவனைச் சிரச்சேதம் பண்ணினான் என்றும் வரலாறு கூறுகிறது.


""தோமா'' இந்தியாவில் இரத்தச்சாட்சியாக மரித்தவர். ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு   பெர்சியாவில் ஊழியம் செய்தான் என்றும் அங்கிருந்த புறஜாதி ஆசாரியர்கள் இவனை அடித்துக் கொன்று விட்டார்கள் என்றும் வரலாறு கூறுகிறது.


நீங்கள் போகவேண்டாத நாடுகளும் பட்டணங்களும்


இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச்               சொன்னதுஎன்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும் (மத் 10:5).


இயேசுகிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் புறஜாதியார் நாடுகளுக்கோ அல்லது சமாரியரின் பட்டணங்களுக்கோ போகவேண்டாம். சமாரியருடைய நாடு யூதேயா தேசத்திற்கும் கலிலேயாதேசத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது. ஆகையினால் சமாரியா தேசத்தின் வழியாக போகாமல் யூதேயா தேசத்திற்குப் போக முடியாது. சமாரியா தேசத்தின் வழியாக போனாலும் சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்கவேண்டாமென்று இயேசுகிறிஸ்து கட்டளையிடுகிறார். அப்போஸ்தலர்கள் முதன்முறையாக ஊழியத்திற்கு புறப்பட்டுப் போகிறார்கள். இந்த சமயத்தில் மாத்திரமே அவர்களை புறஜாதியார் நாடுகளுக்கும் சமாரியரின் பட்டணங்களுக்கும் போகவேண்டாம் என்று இயேசு கட்டளையிடுகிறார். இதற்கு பின்பு அப்போஸ்தலர்கள் எல்லோரும் உலகம் முழுவதற்கும் சென்று எல்லா ஜாதியாருக்கும் சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணவேண்டு மென்னும் கட்டளையை இயேசுகிறிஸ்து கொடுக்கிறார் (மத் 28:19,20).


யூதர்கள் மத்தியில் மட்டும் ஊழியம் செய்யுமாறு இயேசு இவர்களை முதலாவதாக அனுப்பினார். (மத் 10:5-6; யோவான் 1:11; ரோமர் 1:16) அதன்பின்பு இயேசு பரமேறுகையில் முழு உலகத்திற்கும் சுவிசேஷத்தை அறிவிக்குமாறு கட்டளையிட்டார். (மத் 28:19-20;  மாற்கு 16:15-20; லூக்கா 24:47; அப் 1:8)


சீஷர்கள் போகவேண்டிய வீட்டார்


காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் (மத் 10:6).


அப்போஸ்தலர்கள் இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போய் அங்கு சுவிசேஷ ஊழியம் செய்யவேண்டும். இஸ்ரவேலர்கள் காணாமல் போன ஆடுகளைப் போல இருக்கிறார்கள். இரட்சிப்பு முதலாவதாக யூதருக்கு அறிவிக்கப்படவேண்டும். தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி முதலாவதாக யூதரிடத்திற்கே அவரை அனுப்பினார் (அப் 3:26). இஸ்ரவேல் வீட்டார் மீது இயேசுகிறிஸ்துவுக்கு விசேஷித்த கரிசனையிருக்கிறது. காணாமல்போன ஆடுகளைப் பார்த்து இயேசுகிறிஸ்து மனதுருகுகிறார். இஸ்ரவேல் புத்திரர்கள் பாவத்தின் தாறுமாறான பாதைகளில்   சென்று தேவனை விட்டு வழிவிலகிப் போய்விட்டார்கள். இப்போது எந்த வழியில் செல்கிறோம் என்பது தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து காணாமல்போன இஸ்ரவேலரை கூட்டிச்சேர்த்து தேவனுடைய சமுகத்திற்கு அழைத்து வரும் ஊழியத்தை செய்கிறார். இவர்கள் தேவனிடத்தில் அழைத்து வரப்படவில்லை யென்றால் அவர்கள் முடிவில்லாமல் அலைந்து கொண்டேயிருப்பார்கள். 


இயேசுகிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு இஸ்ரவேல் வீட்டாருக்கு ஊழியம் செய்வதன் அவசியத்தை எடுத்துக்கூறுகிறார். சீஷர்கள் தங்களுடைய ஊழியங்களில் மிகுந்த கவனத்தோடும் அக்கறையோடும் ஈடுபடவேண்டும். இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் பலர் யூதர்கள். அவர்களை யூதர்கள் மத்தியிலேயே ஊழியம் செய்வதற்கு அனுப்புகிறார். இவர்கள் தங்களுடைய சொந்த ஜனமாகிய இஸ்ரவேலருக்கு உதவி புரியும் ஆவலில் அக்கறையோடு ஊழியம் செய்வார்கள்.


பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது


போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள் (மத் 10:7).


தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு இயேசுகிறிஸ்து பிரசங்கச் செய்தியை கொடுத்து அனுப்புகிறார். அப்போஸ்தலர் என்னும் பெயருக்கு அனுப்பப்பட்டவர் என்று பொருள். இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை காரணமில்லாமல் எங்கும் அனுப்புவதில்லை.   ஒரு முக்கியமான செய்தியை கொடுத்தே அனுப்புகிறார். இவர்கள் புறப்பட்டுப்போய் பிரசங்கம்பண்ணவேண்டும். பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்பது இவர்களுடைய பிரசங்கச் செய்தியாக இருக்கவேண்டும். இந்த வாக்கியத்தைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் இதோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்னும் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. அவர்களுடைய பிரசங்கத்தின் மையக்கருத்து பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்பதாகவே இருக்கவேண்டும். இந்த மையக்கருத்தை அவர்கள் விரிவுபடுத்தி பிரசங்கம்பண்ணலாம்.  


சீஷர்கள்ƒபுறப்பட்டுப்போய் மனந்திரும்புங்கள் என்று பிரசங்கம் பண்ணினார்கள் (மாற் 6:12).  மனந்திரும்புங்கள் என்று பிரசங்கம்பண்ணுவதும், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணுவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய செய்தியாகும். பரலோகராஜ்யம் சமீபமாக இருப்பதினால், ஜனங்கள் மனந்திரும்பி  அதில் பிரவேசிப்பதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். காலையில் கிழக்கு வெளுக்கும்போது சூரியன் உதிக்கும். கிழக்கு வெளுப்பது சூரியன் உதிப்பதற்கு அடையாளம்.


""நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்கு சமீபமாயிருக்கிறது. கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்'' (சங் 85:9,10) என்று சங்கீதக்காரன் கூறுகிறான். தேவனுடைய ராஜ்யம் பூமிக்குரிய ராஜ்யத்தைப் போன்றதல்ல. பூமிக்குரிய ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்படுகிறது. தேவனுடைய ராஜ்யம் மனுஷருடைய இருதயங்களில் ஸ்தாபிக்கப்படவேண்டும்.


யோவான்ஸ்நானனும், இயேசுகிறிஸ்துவும் ""மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது'' என்னும் இதே செய்தியை ஏற்கெனவே பிரசங்கம்பண்ணியிருக்கிறார்கள். ஜனங்களுக்கு நற்செய்தி திரும்ப திரும்ப அறிவிக்கப்படவேண்டும். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் தேவனுடைய செய்தி மனுஷருடைய உள்ளத்தில் பசுமையாக  இருக்கும். மகிமையின் ராஜ்யம் வரப்போகிறது. அது மிகவும் சமீபமாய் இருக்கிறது. ஜனங்கள் இதைக்குறித்த சிந்தனையோடு ஜீவிக்கவேண்டும்.


இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்


வியாதியுள்ளவர்களைச் சொஸ்த மாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம் பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள் (மத் 10:8).


இயேசுகிறிஸ்துவின் வார்த்தை அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் உறுதிபண்ணப்படுகிறது. அற்புதங்களை நடப்பித்து தங்களுடைய பிரசங்கச் செய்தியை உறுதிபண்ணும் அதிகாரத்தை, இயேசுகிறிஸ்து தமது அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கிறார். தாம் பிரசங்கம்பண்ணிய அதே செய்தியையே  பிரசங்கம்பண்ணுவதற்காக அவர்களை அனுப்புகிறார். சீஷர்கள் அதைப் பிரசங்கம்பண்ணும்போது அதை உறுதிபண்ணும் அதிகாரமும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. சீஷர்களின் பிரசங்கச்செய்தி தெய்வீக அதிகாரத்தினால் முத்திரையிடப்பட்டு உறுதிபண்ணப்படுகிறது. உறுதிபண்ணப்பட்ட சத்தியம் எப்போதுமே மெய்யாகவே இருக்கும். ஒருபோதும் பொய்யாகாது.


சீஷர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தெய்வீக வல்லமையை நன்மைசெய்வதற்காக பயன்படுத்தவேண்டும். அவர்கள் வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்க வேண்டும். குஷ்டரோகிகளை சுத்தம்பண்ண வேண்டும். ஜனங்களை ஆசீர்வதிப்பதற்காக இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை அனுப்புகிறார்.  ஆவியானவருடைய அன்பையும் நன்மையையும் சீஷர்கள் தங்களுடைய பிரசங்கச்செய்தியில் தெளிவுபடுத்தி, அதை அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிபண்ணுகிறார்கள். தேவனுடைய ராஜ்யம் எப்படியிருக்கும் என்பதற்கு அடையாளமாக இவர்கள் வியாதியஸ்தரை குணப்படுத்துகிறார்கள்.  தேவனுடைய ராஜ்யத்தில் வியாதியஸ்தர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். எல்லோருக்கும் பூரண ஆரோக்கியம் உண்டாயிருக்கும்.


அப்போஸ்தலர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள். தேவன் நல்லவராகவும் நன்மைசெய்கிறவராகவும் இருக்கிறார். இவரைப்போலவே இவருடைய அப்போஸ்தலர்களும் இருக்கவேண்டும். தேவனுடைய எல்லா கிரியைகளிலும்   தேவனுடைய கிருபையும் இரக்கமும் வெளிப்படுகிறது. அப்போஸ்தலர்களும் தங்களுடைய கிரியைகளில் தேவகிருபையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும். ஆவிக்குரிய ஜீவியத்தில் மரித்துப்போய் இருக்கிறவர்களை புதிய ஜீவனை பெற்றுக்கொள்ளுமாறு எழுப்பவேண்டும்.


கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் ஆதாயத்திற்காக ஊழியம் செய்கிறவர்களல்ல. அவர்கள் இலவசமாகவே நன்மை செய்யவேண்டும். இயேசுகிறிஸ்து நமக்கு செய்திருக்கும் நன்மைகள் அனைத்தையும் இலவசமாகவே செய்திருக்கிறார். அவரிடமிருந்து இலவசமாக நன்மைகளை பெற்றிருக்கும் நாம், மற்றவர்களுக்கு இலவசமாகவே நன்மைகளை செய்யவேண்டும். நமது இரட்சிப்பு தேவன் நமக்கு இலவசமாக கொடுத்திருக்கும் ஈவு. கர்த்தருடைய ஊழியத்தை நாம் விலைக்கு விற்கும் வியாபாரமாக்கி விடக்கூடாது.  நாம் பிறருக்கு நன்மை செய்யும்போது, இயேசு நமக்கு இலவசமாக செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு இலவசமாகவே நன்மை செய்யவேண்டும். 


பொன்னும், வெள்ளியும், பணமும்


உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் (மத் 10:9,10).


கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்களுக்கு பல தேவைகள் இருக்கும். இந்த தேவைகள் எல்லாம் எப்படி சந்திக்கப்படும் என்று இயேசுகிறிஸ்து விவரிக்கிறார். அப்போஸ்தலர்கள் தங்கள் கச்சைகளில் பொன்னையும் வெள்ளியையும் சேர்த்து வைக்கக்கூடாது. தங்களுடைய ஊழியத்தின் மூலமாக ஊழியக்காரர்கள் தங்களுக்கு சொத்து சுகங்களை சேர்த்து வைக்கக்கூடாது. அதே வேளையில் ஊழியக்காரர்கள் தங்களை சார்ந்திருக்கும் குடும்பத்தாரையும் பராமரிக்கவேண்டும். 


இந்த வசனப்பகுதியில் இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை ஒரு சிறிய ஊழியப்பிரயாணத்திற்கு அனுப்புகிறார். இந்த ஊழியப்பிரயாணத்தில் இவர்களுக்கு ஏராளமான பொன்னும் வெள்ளியும் தேவைப்படாது. இவை இருந்தாலும் இவற்றை செலவு பண்ணுவதற்கு இவர்களுக்கு வாய்ப்பிருக்காது. ஆகையினால் ஊழியம் செய்கிறவர்கள் தங்களுடைய தேவைக்கு அதிகமான சொத்துக்களை சேர்த்து குவிப்பதில் அதிக கவனம் செலுத்தக்கூடாது. 


ஊழியக்காரர்களுக்கும் தேவைகள் உள்ளது. தங்களுடைய தேவைகளை தேவன் பராமரிப்பார் என்று விசுவாசித்து தேவனுடைய தெய்வீக பராமரிப்பை சார்ந்து ஊழியம் செய்யவேண்டும். நாம் என்னத்தை உண்போம்,  என்னத்தை குடிப்போம் என்று நமது ஜீவனுக்காக கவலைப்படக்கூடாது. ஏனெனில் ஆகாரத்தைப்பார்க்கிலும் நமது ஜீவன் விசேஷித்தது. ஊழியக்காரர்கள் ஜீவனுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். போஜனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது (மத் 6:25,26). 


இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தை செய்கிறவர்களுக்கும் பசிக்கும். இவர்களுக்கும் போஜனம் தேவைப்படுகிறது. தங்களை  தேவனே போஷிக்கவேண்டுமென்று தேவனை சார்ந்து ஜீவிக்கவேண்டும். வேலையாள் தன் ஆகாரத்திற்கு பாத்திரனாக இருக்கிறான். கர்த்தரே ஊழியக்காரர்களுக்கு எஜமானாக இருக்கிறார். எஜமான் தம்முடைய வேலைக்காரருக்கு போஜனம் கொடுப்பார். பட்டினி போட்டுவிடமாட்டார். மற்றவர்களுக்கு விசுவாசத்தைக்குறித்து பிரசங்கிக்கிற நாம், நம்முடைய ஜீவியத்திலும் கர்த்தரை விசுவாசித்து ஜீவிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.


கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்களுக்கு கர்த்தர் போதுமான அளவு போஜனம் கொடுப்பார். அவர்களுடைய தேவைகளை சந்திப்பதோடு, அவர்கள் மூலமாக மற்றவர்களையும் போஷிப்பதற்கு அவர்களை ஆசீர்வதிப்பார். நமது ஊழியத்தில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக ஊழியம் செய்யவேண்டும். கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் ஊழியத்தை உண்மையோடும் உத்திரவாதத்தோடும் செய்யவேண்டும். நாம் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தால், நமது பாரத்தையெல்லாம் கர்த்தர்மீது வைத்துவிடலாம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.


கர்த்தருடைய ஊழியக்காரர்கள் யாருக்கு ஊழியம் செய்கிறார்களோ அவர்கள் ஊழியக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். தங்களால் ஆவிக்குரிய ரீதியாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய போஜனத்திற்கு  உதவியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவேண்டும். எலியாவை தேவன் அற்புதமாக போஷித்தது போல நம்மையும் எல்லா வேளையிலும் அற்புதமாக போஷிப்பார் என்று காகங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. நமது இருதயம் கர்த்தரையே சார்ந்திருக்கவேண்டும்.  


தங்கள் மூலமாக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்கிறவர்கள் தங்களை அன்புடனும் கரிசனையுடனும் கவனிக்கவேண்டும் என்று கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்கிறவர்கள் சரீரப்பிரகாரமான நன்மைகளை கொடுப்பதற்கு உத்தரவாதம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.  ஆகையினால் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் எப்போதுமே சோம்பற்காரராகயிராமல், சுறுசுறுப்பாக ஊழியம் செய்கிறவர்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட வேலைக்காரர்கள் தங்களுடைய ஆகாரத்திற்கு பாத்திரவான்களாக இருப்பதாக இயேசு கூறுகிறார். 


ஜனங்கள் ஊழியக்காரர்களை போஷிப்பார்கள் என்று கூறும்போது, கர்த்தர் ஊழியக்காரர்களை போஷிக்கமாட்டார் என்பது பொருளல்ல. தங்களுடைய ஆகாரத்திற்கு ஜனங்களை நம்பவேண்டும் என்று கூறும்போது, அதற்காக கர்த்தரை நம்பக்கூடாது என்று பொருளல்ல. அதேவேளையில் கர்த்தரை நம்பவேண்டும் என்று கூறும்போது, ஆகாரத்திற்காக ஜனங்களை நம்பக்கூடாது என்றும் பொருளல்ல. நமது தேவைகள் சந்திக்கப்படுவதற்காக நாம் கர்த்தரையே சார்ந்திருக்கவேண்டும். கர்த்தர் தமது பிள்ளைகள் மூலமாக ஊழியக்காரர்களின் தேவைகளை சந்திப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. 


நாம் ஜனங்களுக்கு நற்செய்தியை அறிவித்து, அவர்களுக்கு இலவசமாக நன்மை செய்தால், அவர்கள் நம்மை போஷிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். நமக்கு அவர்கள் ஆடம்பர விருந்துகளை கொடுக்கவில்லை யென்றாலும், நமது பசியை போக்குவதற்காக ஏதாவது அடிப்படை ஆகாரங்களைத் தருவார்கள். கர்த்தருக்காக நாம் செய்யும் ஊழியத்தை தேவன் ஒரு வேலையாக அங்கீகரித்து, அதற்குரிய கூலியை நமக்கு ஏற்றவேளையில் தருவார்.


தேவனுடைய அழைப்பிற்குக் கீழ்ப்படிவதற்கு முன்பாக நமது பராமரிப்பிற்காக எதையும் சேர்த்து வைக்க வேண்டியதில்லை. தேவனுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டு அதற்குக் கீழ்ப்படியும்போது கர்த்தர் நம்மைப் பராமரிப்பார். அதிகமான பாதரட்சைகளையும், அதிகமான அங்கிகளையும் தேடி வைத்த பின்பு கர்த்தருக்கு ஊழியம் செய்யலாம் என்று காத்திருக்கக்கூடாது. நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர். அவர் நம்மைக் கைவிடமாட்டார். நம்மைப் போஷித்து வழிநடத்துவார். நம்மைப் பராமரிப்பார் என்னும் விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும். (மத் 10:9-10)


நம்முடைய முக்கியமான பொருட்களை வைத்துக் கொள்வதற்குப் பயன்படும் பைகள் கச்சை என்று அழைக்கப்படுகிறது  ""பை'' என்பது மேய்ப்பரின் பையைக்குறிக்கும். தனக்குத் தேவையான பொருட்களை மேய்ப்பன் இதில் எடுத்துச் செல்வான்.


""இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்''  நம்மை அலங்கரிப்பதற்காக அல்லது நம்மைப் பராமரிப்பதற்காக ஏராளமான காரியங்களைச் சேர்த்து வைப்பதில் நமது காலத்தைச் செலவு செய்யக்கூடாது. (லூக்கா 9:3; மாற்கு 6:8)


""வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்''.  இது கர்த்தர் தமது ஊழியக்காரருக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தம். தமது ஊழியக்காரர்களைக் கர்த்தர் போஷிப்பார். நம்மை அபிஷேகம் பண்ணினவர் நம்மைப் பராமரித்து வழிநடத்துவார்.  


வாழ்த்துங்கள்


எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள். ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.  அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது (மத் 10:11-13).


அப்போஸ்தலர்கள் ஊழியக்காரியமாக  பல பட்டணங்களுக்கும், கிராமங்களுக்கும் பிரவேசிக்கும்போது அங்கு பலவிதமான ஜனங்களை சந்திப்பார்கள். அவர்களோடு எப்படி பழகவேண்டும் என்று இயேசுகிறிஸ்து ஆலோசனை கூறுகிறார். இந்த பட்டணத்து ஜனங்கள் இதுவரையிலும் அப்போஸ்தலர்களுக்கு அந்நியராக இருக்கிறார்கள். அவர்களை கிறிஸ்துவின் காணியாட்சிக்குள் அழைத்து வருவதே அப்போஸ்தலருடைய ஊழியமாகும்.


அப்போஸ்தலர்கள் ஏதாவது ஒரு பட்டணத்திலோ அல்லது கிராமத்திலோ பிரவேசிக்கும்போது அதிலே பாத்திரமானவன் யார் என்று விசாரிக்கவேண்டும். ஒவ்வொரு இடத்திலும் நாம் சுவிசேஷ ஊழியம் செய்யும்போது ஒரு சிலர் சுவிசேஷத்திற்கு  செவி கொடுப்பார்கள். நமது உபதேசத்தை கருத்தோடு கேட்பார்கள். அப்படிப்பட்டவர்களே நமக்கு பாத்திரவான்கள். இவர்களுடைய வீடுகளில் அப்போஸ்தலர்கள் அந்த பட்டணத்தை விட்டு புறப்பட்டு போகும் வரையிலும் தங்கியிருக்கலாம். ஒரு சிலர் சுவிசேஷத்திற்கு எதிர்த்து நிற்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நம்மை கவனிப்பதற்கு பாத்திரவான்களல்ல.


ஒவ்வொரு பட்டணத்திலும் நாம்      ஊழியம் செய்யும்போது, அந்த பட்டணத்தில் ஏராளமான களைகள் முளைத்திருந்தாலும் அங்கு கோதுமை மணிகளும் முளைத்திருக்கும் என்று விசுவாசத்தோடு எதிர்பார்க்கவேண்டும்.  ரோமப்பேரரசன் நீரோவின் அரண்மனையில்கூட பரிசுத்தவான்கள் இருந்தார்கள். நாம் ஒவ்வொரு பட்டணத்திற்கும் அல்லது கிராமத்திற்கும் ஊழியத்திற்கு போகும்போது, அங்கு தேவனிடத்தில் பக்தியாய் இருக்கிறவர்கள். யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்து தெரிந்து கொள்ளவேண்டும்.  


நமது ஊழியத்திற்கு ஒத்தாசையாக இருக்கிறவர்களை கண்டுபிடிப்பது நமக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இருக்கும். ஒரு சிலர் சத்தியத்தை பிரசங்கம்பண்ணினவுடனே  அதை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுடைய உள்ளம் இரட்சிப்புக்கு ஏற்கெனவே பக்குவப்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஏராளமானோர் இல்லாவிட்டாலும், இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு  சிலராவது இருப்பார்கள். 


நாம் ஒரு பட்டணத்திற்கு ஊழியத்திற்கு போகும்போது தங்குவதற்கு நல்ல விடுதிகளை தேடிப்போகாமல், விசுவாசிகளை தேடிப் போகவேண்டும். அப்போஸ்தலர்களுக்கு  தங்கும் விடுதிகள் உகந்ததல்ல. ஏனெனில் அவர்கள் தங்கள் கச்சைகளில் பொன்னையும், பொருளையும், பைகளில் பணத்தையும் எடுத்துக் கொண்டு போகவேண்டாமென்று இயேசுகிறிஸ்து கட்டளையிடுகிறார். அது மாத்திரமல்ல, நாம் தேவனிடத்தில் இலவசமாக பெற்றதை ஜனங்களுக்கு இலவசமாக கொடுக்கவேண்டும்.  ஜனங்களிடத்திலிருந்து பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்கக்கூடாது.


கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு தங்க இடமும், புசிக்க போஜனமும் கொடுக்கிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார். இவர்கள் தேவனுடைய அன்பின் நிமித்தம் ஊழியக்காரர்களை உபசரிக்கிறார்கள். ஊழியக்காரர்களிடமிருந்து இவர்கள்   பிரதிபலன் எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஊழியக்காரரின் ஜெபத்தையும், பிரசங்கச் செய்தியையும் மாத்திரமே இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியத்தின் நிமித்தமாக எந்த பட்டணத்திற்குச் சென்றாலும் அங்கு பாத்திரவான்கள் யார் என்று விசாரித்தறிந்து அவர்களுடைய வீடுகளில் தங்குகிறார்கள். அவர்களோடு அன்போடு பேசி அவர்களுக்காக ஜெபிக்கிறார்கள். நம்முடைய தேவன் அவர்களுடைய தேவனாக இருக்கும்போது நாம் எல்லோரும் ஒரே தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம். ஒரே ஆவிக்குரிய குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறோம். இந்த ஐக்கியத்தில் ஒரு விசேஷித்த சந்தோஷம் உண்டாகும்.


நாம் ஊழியத்திற்குப் போகும்போது அந்த ஸ்தலத்திலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்துப் பார்த்தால்தான், பாத்திரவான்களை கண்டுபிடிக்க முடியும். விசாரித்துப் பார்க்கும்போது அந்த ஊரின் ஜனங்களைப் பற்றிய உண்மையான குணம் வெளிப்படும்.  நல்ல நபர்களுடைய கண்ணியம், நற்குணம், சாந்தம், நேர்மை ஆகியவை ஒருபோதும் மறைந்திருக்காது. நறுமணத்தைலம் சுற்றிலும் நறுமணம் வீசுவதுபோல, நற்குணமுள்ளவர்கள் தங்களுடைய நற்குணங்களை தங்கள் ஊர் முழுவதிலும் வெளிப்படுத்துவார்கள்.


ஊழியக்காரர்கள் ஓரிடத்தில் ஊழியம் செய்யும்போது அங்கு பாத்திரமானவர் யாரென்று விசாரித்து அங்கு தங்குகிறார்.  அந்த வீட்டிற்கு போனபின்பு அந்த நபர் பாத்திரவானல்ல என்பது தெரியவந்தால் உடனடியாக அந்த வீட்டை காலிசெய்து விட்டு, வேறு பாத்திரவானுடைய வீட்டில் போய் தங்கிவிடவேண்டும். வசதியில்லை    என்பதற்காக ஊழியக்காரர்கள் தாங்கள் தங்கியிருக்கும் பாத்திரமான விருந்தினரின் வீடுகளை மாற்றக்கூடாது. வசதி உள்ளது என்பதற்காக அபாத்திரமானவரின் வீடுகளிலும் தங்கக்கூடாது. தங்களுடைய ஊழியத்திற்கு அந்த விருந்தினரின் வீட்டில் தங்கினால் களங்கமும் இளப்பும் உண்டாகும் என்று தெரியவந்தால் விருந்தினரின் வீட்டை மாற்றுவதில் தவறில்லை.  ஊழியக்காரர்கள் தங்களுடைய சாட்சியை காத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 


தாங்கள் தங்கும் வீட்டிற்குள் ஊழியக்காரர்கள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்தவேண்டும். அந்த வீட்டிலுள்ள குடும்பத்தாரை வாழ்த்தவேண்டும். அவர்களுக்கு சுவிசேஷச் செய்தியை கூறி அவர்களை ஆவிக்குரிய ரீதியாக ஆசீர்வதிக்கவேண்டும்.  பக்தி விருத்திக்கு ஏதுவான காரியங்கள் அவர்களோடு அதிகமாக பகிர்ந்து பேசவேண்டும்.


நம்முடைய வாழ்த்துதல்களை விருந்தினர்கள் புறக்கணித்தால் அவர்கள் நம்முடைய உபதேசத்தையும் கேட்கமாட்டார்கள்.   அவர்கள் நம்மை புறக்கணித்தாலும் அவர்கள்மீது நாம் கோபப்படக்கூடாது. அவர்களுடைய பேச்சுக்களின் மூலமாக விருந்தினருடைய உள்ளத்தின் கருத்துக்களை புரிந்துகொள்ளலாம்.


தேவனுடைய அன்பு இல்லாமல் யாராலும் செம்மையாக ஊழியம் செய்யமுடியாது. ஊழியக்காரருக்கு அன்பு மிகவும் அவசியம். ஆகையினால் ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அந்த வீட்டை சபித்து விடக்கூடாது. அந்த வீட்டாருக்கு கட்டளைகளை கொடுக்கக்கூடாது. முதலாவதாக அவர்களை வாழ்த்தவேண்டும் என்பது கிறிஸ்துவின் உபதேசம். நாம் சத்தியத்தை விருந்தினருடைய வீட்டாருக்கு கூறும்போது அன்பின் நிமித்தம் மன்றாடவேண்டும் (பிலே 8,9).


ஆத்துமாக்களை அன்பினால் மாத்திரமே  கட்டி இழுக்க முடியும். மனுஷரை கட்டியிழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன் என்று ஓசியா மூலமாக கர்த்தருடைய வார்த்தை உண்டாயிருக்கிறது (ஓசி 11:4). 


ஊழியக்காரர்கள் தாங்கள் பிரவேசிக்கும் வீட்டாரை வாழ்த்தியபின்பு, அந்த வீட்டைக் குறித்து நிதானித்து அறியவேண்டும். அந்த வீடு பாத்திரமாய் இருந்தால் நாம் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரும். அவர்கள் அபாத்திரமாய் இருந்தால் நாம் கூறின சமாதானம் நம்மிடத்திற்கே திரும்பி வந்துவிடும்.  


ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போதே அந்த வீட்டிலுள்ளவர்கள் பாத்திரமானவர்களா என்று விசாரித்துதான் அப்போஸ்தலர்கள் பிரவேசிக்கிறார்கள். அப்போஸ்தலருடைய பார்வையில் சிலர் பாத்திரவான்களாக இருந்தாலும், அவர்களில் சிலர் தேவனுடைய பார்வையில் அபாத்திரராக இருக்கிறார்கள். விசாரிப்பது வேறு, நிதானித்துப் பார்ப்பது வேறு. ஒருவரைப்பற்றி விசாரித்துப் பார்க்கும்போது நமக்கு கிடைக்கும் செய்தியை நாம்   நிதானித்துப் பார்க்கவேண்டும். பிறர் கூறுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அவசியமில்லை. பரிசுத்த ஆவியானவரின் பகுத்தறியும் வரத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். 


அப்போஸ்தலர்கள் ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது ""உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக'' என்று கூறி வாழ்த்துகிறார்கள்.    இந்த வீட்டார் பாத்திரவான்களாக இருந்தால் ஊழியக்காரர் கூறிய சமாதானம் அந்த வீட்டிற்குள் தங்கியிருக்கும். அவர்கள் சமாதானத்தின் கனியை அனுபவிப்பார்கள். அந்த வீட்டார் பாத்திரவான்களாக இல்லையென்றால், இதனால் ஊழியக்காரருக்கு இழப்பு ஒன்றுமில்லை. அவர் கூறிய சமாதான வார்த்தை அவரிடமே திரும்பி வந்துவிடும். 


ஊழியக்காரர்கள் மிகுந்த கிருபையோடும் கரிசனையோடும், அன்போடும் எல்லோரையும் வாழ்த்தவேண்டும், எல்லோருக்கும் ஜெபம் பண்ணவேண்டும். இது மாத்திரமே ஊழியக்காரரின் ஊழியம். ஊழியக்காரர் ஆசீர்வாதத்தைக் கூறினாலும்,    ஆசீர்வதிப்பது தேவனே. நாம் நமது பங்கை செய்யும்போது, தேவன் தமது பங்கை அவருடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக ஏற்றவேளையில் செய்து முடிப்பார். 


விருந்தினர்கள் ஊழியக்காரர்களை ஏற்றுக்கொள்ளும்போது, அவர்களுடைய ஆவிக்குரிய உபதேசங்களுக்கும் செவி கொடுப்பார்கள். இதனால் அவர்களுக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக உண்டாகும் சமாதானமும் வரும். ஊழியக்காரரின் பிரசங்கத்தை கேட்காமல், தங்களுடைய இருதயத்தின் கதவுகளை அடைத்துக் கொண்டால், இயேசுகிறிஸ்துவின் சமாதானம் அவர்களை சென்றடையாது.


ஒருவன் ஊழியக்காரரை ஏற்றுக்கொள்ளாமல், அவர் கூறிய சமாதான வார்த்தைகளை கேளாமல் போனால், அந்த குடும்பத்தாரை வாழ்த்த வேண்டியதில்லை. அவர்கள் மிகப்பெரிய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை இழந்துவிடுகிறார்கள். பல சமயங்களில் நாமும் தேவனுக்கும், தேவனுடைய ஊழியக்காரர்களுக்கும் நமது இருதயத்தின் கதவுகளை அடைத்துக் கொள்வதினால், மிகப்பெரிய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளத் தவறிவிடுகிறோம். 


ஒரு சிலர் ஊழியக்காரரின் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளாமல், அந்த உபதேசத்திற்கு எதிர்த்துப்பேசுவார்கள். ஊழியக்காரர்களையும் அவர்களுடைய உபதேசச் செய்திகளையும் குற்றப்படுத்துவார்கள். எவ்வளவு பெரிய ஊழியக்காரர்களாக இருந்தாலும் அவர்களும் தங்களுடைய ஊழிய அனுபவங்களில் இப்படிப்பட்ட நபர்களை சந்திக்க வேண்டியது வரும். இவர்கள் சந்தோஷத்தின் இசைக்கு தங்களுடைய செவிகளை மூடிக்கொள்கிறார்கள். 


சுவிசேஷச் செய்தியை குறை கூறுவதும், ஊழியக்காரர்களை குறை கூறுவதும் பொதுவாக சேர்ந்தே வரும். ஊழியக்காரர்களையும், அவர்களுடைய உபதேசச் செய்திகளையும் ஒரு வீட்டாரோ அல்லது பட்டணத்தாரோ கேளாமல் போனால் அந்த வீட்டைவிட்டு அல்லது       அந்த பட்டணத்தை விட்டு புறப்பட்டுப் போய்விடவேண்டும். சுவிசேஷத்தை செவிகொடுத்து கேட்காதவர்களுக்கு சுவிசேஷம் காத்திருக்காது. காலம் வரும்போது அதை பயன்படுத்தவேண்டும். இரட்சிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கும்போது இரட்சிப்பை பெற்றுக்கொள்ளவேண்டும். 


தங்களையும் தங்களுடைய உபதேசச் செய்தியையும் ஏற்றுக்கொள்ளாதவர்களை விட்டுப் போகும்போது தங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடவேண்டுமென்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். தேவனுடைய கோபம் அவர்கள் மேல் வரும் என்பதற்கு தூசியை உதறிப்போடுவது ஓர் அடையாளமாகும். தங்களைப்போலவே தேவனும் அவர்களை உதறிப்போடுவார் என்றும் இந்த வாக்கியம் பொருள்படும். தேவனையும் அவருடைய சுவிசேஷத்தையும் ஏற்றுக்கொள்ளாத  ஜனங்கள் வாழ்வில் மேன்மையடையமாட்டார்கள்.


பாத்திரமானவன் நல்ல பண்புடையவன், அவன் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவன். ஊழியக்காரன் ஒருவனுடைய வீட்டில் தங்கும்போது அந்த வீட்டில் தங்குவதினால் தேவநாமம் தூஷிக்கப்படாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும்.


நாம் தங்குவதற்காக வீடுவீடாக அலைய வேண்டாம். நோக்கமில்லாமல் ஊர் ஊராகச் சுற்றித்திரிய வேண்டாம். (லூக்கா 10:7) காலத்தைத் திட்டமிட்டு ஜெபம் பண்ணுங்கள். வேதவசனங்களைத் தியானியுங்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். வீடுவீடாகச் சுற்றித்திரிந்தால் நாம் தேவையில்லாத காரியங்களைப் பேசிப் புறங்கூறுகிறவர்களாக இருப்போம். விருந்துகளிலும், கேளிக்கைகளிலும் அதிகளவில் பங்குபெற்று தேவனுடைய அபிஷேகத்தைச் சிறிதுசிறிதாக இழந்து போவோம்.


நாம் ஒரு வீட்டை வாழ்த்தும் போது கர்த்தர் அந்த வீட்டை ஆசீர்வதிப்பார். அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு ஆசீர்வாதம் உண்டாகும்.


கால்களில் படிந்த தூசி


எவனாகிலும் உங்களை ஏற்றுக் கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப் போடுங்கள் (மத் 10:14).


 யூதர்கள் புறஜாதி தேசத்திலுள்ள தூசிகளை அசுத்தமாக எண்ணினார்கள்.       (எசே 45:1; ஆமோ 7:17) கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுவது என்பது தேவன் அவர்களைப் புறக்கணித்துவிட்டார் என்பதற்கு அடையாளம். (மாற்கு 6:11; லூக்கா 9:5; அப் 13:51)


சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது


நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 10:15).


சோதோம் கொமோரா ஒரு துன்மார்க்கமான நாடு. நியாயத்தீர்ப்பு நாளிலே இந்த நாடு நியாயம் விசாரிக்கப்படும். இதன் துன்மார்க்கத்திற்கேற்ற தண்டனை இதற்கு கொடுக்கப்படும். இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களையும் அவர்களுடைய உபதேசச் செய்திகளையும் ஏற்றுக்கொள்ளாத ஜனங்கள்மீதும் தண்டனை கொடுக்கப்படும். இந்த தண்டனை சோதோம் கொமோராவின்மீது கொடுக்கப்படும் தண்டனையைவிட அதிகமாக இருக்கும். சுவிசேஷச்செய்தி மனுஷரை இரட்சிக்கிறது. இரட்சிக்கப்படாத ஆத்துமா அழிந்துபோகும். 


நியாயத்தீர்ப்பு நாளில் தண்டனையின் அளவுகளில் வித்தியாசம் இருக்கும். சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாக இருந்தார்கள் (ஆதி 13:13). அவர்களிடத்தில் அனுப்பப்பட்ட தேவதூதர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவதூதர்களிடத்தில் அவர்கள் அக்கிரமம் பண்ணினார்கள் (ஆதி 19:4,5).  அந்த ஊர் ஜனங்கள் தேவதூதரின் எச்சரிப்பின் சப்தத்திற்கு செவிகொடுக்கவில்லை. கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப் போகிறார் என்னும் செய்தி அவர்களுடைய பார்வைக்கு பரியாசமாக தோன்றிற்று.


சோதோம் கொமோரா பட்டணத்து ஜனங்களைப்போலவே இக்காலத்திலும் சிலர் துன்மார்க்கமாக இருக்கிறார்கள். கர்த்தருடைய ஊழியக்காரர்களையும் அவர்கள் மூலமாக கொடுக்கப்படும் உபதேசச்செய்திகளையும்  செவி கொடுத்து கேட்க மறுக்கிறார்கள். நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வதற்கு இவர்களுக்கு கொடுக்கப்படும் வாய்ப்பை அசட்டை பண்ணுகிறார்கள். பரியாசம் பண்ணுகிறார்கள். இவர்களுக்கு ஆவிக்குரிய மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை சோதோம் கொமோரா பட்டணத்திற்கு கொடுக்கப்படும் தண்டனையைவிட அதிகமாக இருக்கும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.