கண்மலையின் மேல் வீட்டை கட்டுவது பற்றிய இயேசுவின் உபதேசம்

 

கண்மலையின் மேல் வீட்டை கட்டுவது பற்றிய இயேசுவின் உபதேசம்


நாம் செய்யும் வேலைகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக்    காதுகளால் கேட்டால் மாத்திரம் போதாது. அவற்றின் பிரகாரம் ஞானமாக செயல்படவேண்டும். நாம் செய்யும் வேலைகளில் கவனமாக இராவிட்டால் தேவன் நம்மீது பிரியமாக இருக்கமாட்டார். 


தம்முடைய உபதேசத்தை கேட்கிறவர்களை இயேசுகிறிஸ்து இரண்டு பிரிவாக பிரிக்கிறார். ஒரு பிரிவினர் இயேசுவின் உபதேசத்தைக் கேட்டு அதன் பிரகாரமாக கிரியை செய்கிறவர்கள். மற்றொரு பிரிவினர் இயேசுவின் உபதேசத்தைக் கேட்டு அதன் பிரகாரமாக கிரியை செய்யாதவர்கள்.


கன்மலையின்மேல் தன் வீட்டை கட்டின புத்தியுள்ள மனுஷன்


ஆகையால் நான் சொல்-ய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.  பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது             (மத் 7:24,25) .


இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக் கேட்டு அதற்கு கீழ்ப்படிகிறவர்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கிறார்கள்.  அவருடைய உபதேசத்தை கேட்டால் மாத்திரம் போதாது. அவருக்கு கீழ்ப்படியவேண்டும். அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதே அவருக்கு கீழ்ப்படிவதாகும். ""உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.  அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்று இயேசு கூறுகிறார் (மத் 13:16,17).


இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக் கேட்டும் அதன் பிரகாரமாக கிரியை நடப்பிக்கவில்லையென்றால் நாம் தேவனுடைய கிருபையை விருதாவாகவே பெற்றிருக்கிறோம் என்றே பொருள். இயேசுகிறிஸ்து தமது உபதேசத்தில் நியாயப்பிரமாணத்தை விளக்கிக்கூறியதோடு, தமது தெய்வீக சத்தியத்தையும் வெளிப்படுத்துகிறார். நாம் கடைபிடிக்க வேண்டிய பிரமாணங்களை தெளிவுபடுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை கேட்டால் மாத்திரமோ,      நினைவில் வைத்திருந்தால் மாத்திரமோ, அதைப் புரிந்து வைத்திருந்தால் மாத்திரமோ, மனப்பாடமாக ஒப்பித்தால் மாத்திரமோ பிரயோஜனமில்லை. இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்டு அவற்றுக்கு கீழ்ப்படியவேண்டும். நடைமுறையில் அவற்றை செயல்படுத்தவேண்டும். இயேசுவின் உபதேசத்தின் பிரகாரமாக ஜீவிக்கிறவர்கள் ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள். 


தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் காத்துக்கொள்ளுகிறவர்கள் அதிக பாக்கியவான்கள் (லூக் 11:28). இயேசுவின் வார்த்தைகளை நாம் அறிந்திருக்கிறபடியினால்  இவைகளை செய்வோமானால் பாக்கியவான்களாக இருப்போம் (யோவா 13:17). பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே இயேசுகிறிஸ்துவுக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் (மத் 12:50).


கர்த்தருடைய வசனத்தைக் கேட்டால்மட்டும் போதாது. அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டும். அவைகளின்படி செய்ய வேண்டும். அவன் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டினவன்போல் இருப்பான். அவன் புத்தியுள்ளவன். கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவன் புத்தியில்லாதவன். தன் வீட்டை மணலின்மேல் கட்டியவனுக்கு ஒப்பானவன்.


மணலின் மேல் தன் வீட்டைக்கட்டின புத்தியில்லாத மனுஷன்


நான் சொல்-ய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மண-ன்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார் (மத் 7:26,27).


சிலர் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை கேட்கிறார்கள். ஆனால் அவருடைய வார்த்தைக்கு இவர்கள் கீழ்ப்படியவில்லை. தங்களுடைய நடைமுறை ஜீவியத்தில் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தின் பிரகாரமாக செயல்படுவதில்லை.  இயேசுவின் உபதேசத்தை கேட்டால் மாத்திரம் போதும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். இவர்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றம் அத்துடன் நின்றுவிடுகிறது. இயேசுவின் வழியை தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆவலில் அவருடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள். இயேசுவின் வழி நீதியானது. ஆனால் இவர்களோ அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நீதியின் பாதையில் செல்லுவதற்கு மனமற்றவர்களாக இருக்கிறார்கள்.


""மேலும் மனுபுத்திரனே, உன் ஜனத்தின் புத்திரர் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப்பேசி, கர்த்தரிடத்தி-ருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனோடே சகோதரனும் சொல்-,   ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது. இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற் போகிறார்கள்'' என்று கர்த்தர் கூறுகிறார் (எசே 33:30-32).


தேவனுடைய நியாயத்தை விட்டு விலகாமல் நீதியை செய்து வருகிற ஜாதியார்  பாக்கியமுள்ளவர்கள். அவர்கள் நாடோரும் கர்த்தரைத் தேடி அவருடைய வழிகளை அறியவிரும்புகிறார்கள். நீதி நியாயங்களை கர்த்தரிடத்தில் விசாரித்து அவரிடத்தில் சேர விரும்புகிறார்கள்          (ஏசா 58:2). 


இயேசுவின் உபதேசத்தை கேட்கிறவர்களுடைய உள்ளத்தில் பரலோக ராஜ்யத்தின் விதை விதைக்கப்படுகிறது. இவர்கள் இயேசுவின் வார்த்தையின்படி கிரியை செய்யவில்லையென்றால், இவர்களுடைய உள்ளத்தில் விதைக்கப்பட்டிருக்கும் விதை முளைக்கவில்லை என்று பொருள். இயேசுவின்   வார்த்தைகளைக் கேட்டு அதன் பிரகாரமாக கிரியை செய்யாதவர்கள் பரலோகத்திற்குச் செல்லும் பாதையில் பாதி வழியில் உட்கார்ந்திருக்கிறவர்கள். இவர்கள் அந்த வழியில் உட்கார்ந்து கர்த்தருடைய வசனத்தை கேட்டுக்கொண்டேயிருப்பார்கள். ஒருபோதும் கிரியை செய்யமாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய பரலோகப் பிரயாணத்தை முடித்து பரலோகத்தை சென்றடைவதில்லை. 


இயேசுகிறிஸ்து இவ்விரண்டு பிரிவினரையும் ஒரு உவமையினால் விளக்குகிறார். தங்களுடைய வீடுகளை கட்டுகிறவர்களுக்கு இவர்களை ஒப்பிடுகிறார். ஒருவன் புத்தியுள்ள மனுஷன். இவன் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டினான்.  பெருமழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து அந்த வீட்டின் மேல் மோதிற்று. ஆனாலும் கன்மலையின்மேல் கட்டப்பட்டவனுடைய வீடு விழவில்லை. ஏனெனில் இது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. 


தன் வீட்டைக் கட்டின மற்றொருவன் புத்தியில்லாதவன். இவன் தன் வீட்டை மணலின்மீது கட்டினான். இவன் கட்டின வீட்டின்மீதும்  பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து அந்த வீட்டின் மேல் மோதிற்று. ஆனால் இந்த வீடோ விழுந்தது. விழுந்து முழுவதும் அழிந்தது. 


இயேசுகிறிஸ்து இந்த உவமையின் மூலமாக நமக்கு ஆவிக்குரிய நல்ல ஆலோசனையைக் கூறுகிறார். நமது ஆத்துமா நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இயேசுவின் உபதேசத்தைக் கேட்டு அதன் பிரகாரம் கிரியை நடபிக்கவேண்டும். 


மரியாளும் அவளுடைய சகோதரி மார்த்தாளும் இயேசுகிறிஸ்துவின்  உபதேசத்தைக் கேட்டார்கள். இவர்களில் மரியாள் மாத்திரமே நல்ல பங்கை தெரிந்துகொண்டாள். இயேசுவின் பாதபடியில் அமர்ந்திருந்து அவருடைய உபதேசங்களைக் கேட்டு அதற்கு கீழ்ப்படிந்தாள்.  கர்த்தாவே கூறும், அடியேன் கேட்கிறேன் என்று வாஞ்சையோடு அமர்ந்திருந்தாள். 


இயேசுகிறிஸ்து கூறிய உவமையின் மூலமாக நாம் ஒரு சத்தியத்தைக் கற்றுக்கொள்கிறோம். நாம் எல்லோருமே வீட்டைக் கட்டவேண்டும். இது இந்த பூமிக்குரிய வீடு அல்ல. பரலோகத்திற்குரிய நம்பிக்கையே நமது வீடு. நமது அழைப்பை புரிந்துகொண்டு, அதை உறுதிப்படுத்தி தேவனுடைய சமுகத்தில் பணிவோடு அமர்ந்திருந்து அவருடைய உபதேசங்களுக்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும். ஆனால் சிலர் இயேசுகிறிஸ்து உபதேசம் பண்ணும்போது அவருடைய வார்த்தைகளை சரியாக கவனிப்பதில்லை. தங்களுடைய கவனத்தை எல்லா திசைகளிலும் அலைபாயவிடுகிறார்கள். இவர்கள் ஆவிக்குரிய வீட்டைக் கட்டுவதற்குப் பதிலாக மாம்சத்திற்குரிய வீட்டைக் கட்டுவதிலேயே அக்கறையோடிருக்கிறார்கள். இந்த பூமியிலேயே இவர்கள் நிரந்தரமாக தங்கிவிடுவதுபோல பூமிக்குரிய காரியங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இந்த உலக வாழ்க்கை நித்தியமானதல்ல. ஆகையினால் நமது மறுமையைக் குறித்து கவனத்தோடிருக்க வேண்டும். 


ஆவிக்குரிய வீட்டைக் கட்டும்போது நமது வீட்டின் அஸ்திபாரம் கன்மலையின் மேல் போடப்பட்டிருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவே அந்த கன்மலையாக இருக்கிறார். அவரே நம்முடைய நம்பிக்கையாக இருக்கிறார் (1தீமோ 1:1). நமது நம்பிக்கை கன்மலையாகிய இயேசுகிறிஸ்துவின் மீது இல்லையென்றால் நமது வாழ்வில் பெருவெள்ளமும், காற்றும் போல  பிரச்சனைகள் வரும்போது நாம் விழுந்துவிடுவோம். விழுந்து முழுவதும் அழிந்து விடுவோம்.


நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார். கிறிஸ்துவின்  நிறைவான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு பரலோக ஜீவியத்திற்கு நாம் ஆயத்தமடையவேண்டும். நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை பெற்றுக்கொள்ளவேண்டும். நமது சுபாவம் பரிசுத்தமாக்கப்படவேண்டும். தமது சொந்த இரத்தத்தினாலே இயேசுகிறிஸ்து நம்மை நமது பாவத்திலிருந்து மீட்டு இரட்சித்திருக்கிறார். தமது சுய இரத்தத்தையே நம்மை மீட்கும் கிரயமாக செலுத்தியிருக்கிறார்.  நமக்காக தமது ஜீவனையே கொடுத்த இயேசுகிறிஸ்துவை நமது அஸ்திபாரமாக்கிக் கொள்ளவேண்டும். அவருடைய அஸ்திபாரத்தின்மீது நமது ஆவிக்குரிய ஜீவியத்தை கட்டி எழுப்ப வேண்டும். 


கன்மலையாகிய இயேசுகிறிஸ்துவே சபையின் அஸ்திபாரமாக இருக்கிறார்.  சபை இயேசுகிறிஸ்துவின்மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து வலிமையான கற்பாறையாக இருக்கிறார். அவரை எந்த வல்லமையாலும் அசைக்க முடியாது. நமது எல்லா பாரத்தையும் அவர் மீது வைத்துவிடலாம். நமது நம்பிக்கை ஒரு நாளும் வீணாகாது. நமது நம்பிக்கையை வெட்கப்படுத்த அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். 


 இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக்கேட்டு  அதன் பிரகாரமாக ஜீவிக்கிறவர்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கிறார்கள்.  இவர்களே மீதமுள்ளவர்கள். இவர்கள் கற்பாறையின்மீது தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள். தங்களுடைய ஜீவியத்திற்கு இயேசுகிறிஸ்துவையே வழிகாட்டியாகவும், எஜமானனாகவும், கர்த்தராகவும் அங்கீரிக்கிறார்கள். தங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளுக்கும் இவர்கள் இயேசுகிறிஸ்துவையே சார்ந்திருக்கிறார்கள். கிறிஸ்துவுக்காக இவர்கள் எல்லாவற்றையும் நஷ்டமும் குப்பையும் என்று எண்ணி, அவற்றை விட்டுவிட்டு, இயேசுகிறிஸ்துவை பின்பற்றி வருகிறார்கள். 


கற்பாறையின்மேல் வீட்டைக்கட்டும்போது அதிக கவனம் தேவை. வேதனைகள் உண்டாகும். இயேசுகிறிஸ்துவின் அழைப்பைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள்  தங்கள் அழைப்பில் கவனமாக இருக்கவேண்டும். புத்தியுள்ள மனுஷன் வீட்டைக் கட்டி முடிப்பான். தன்னுடைய வீட்டை கட்டத்தொடங்கும்போதே அதைக் கட்டிமுடிக்க தனக்கு திராணி உண்டா என்று  தன்னைத்தானே சோதித்துப்பார்ப்பான். தன் வீட்டை கட்டி தீர்க்கிறதற்கு தனக்கு நிர்வாகமுண்டோ, இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லும் செலவை கணக்குப்பார்ப்பான் (லூக் 14:30). இவனே புத்தியுள்ள மனுஷன். கன்மலையின்மேல் அஸ்திபாரம் போட்டு தன் வீட்டைக் கட்டுகிறவன்.


இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை கேட்டுகிறவர்களில் சிலர் தாங்கள் எப்படியாவது பரலோகம் போய்விடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அஸ்திபாரமான கன்மலையை இவர்கள் மறுதலித்து விடுகிறார்கள். தங்கள் நம்பிக்கையை மணலின் மீது வைக்கிறார்கள். கிறிஸ்து இல்லாத மற்ற எல்லாமே மணல் போன்றதுதான். ஒரு சிலர் தங்கள் நம்பிக்கையை உலகப்பிரகாரமான ஆசீர்வாதத்தின்மீது வைத்து தங்கள் வீட்டை கட்டியெழுப்புகிறார்கள். ""நான் ஐசுவரியவானேன். நான் பொருளை சம்பாதித்தேன். நான் பிரயாசப்பட்டு தேடின எல்லாவற்றிலும் பாவமான அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லை'' (ஓசி 12:8) என்று எப்பிராயீம் கூறுவதுபோல இவர்கள் கூறுகிறார்கள்.


ஒரு சிலர் வெளிப்பார்வைக்கு பக்திமான்களாக இருக்கிறார்கள். ஞானஸ்நானம் பெறுகிறார்கள். சபைக்கு செல்கிறார்கள். பிரசங்கச் செய்தியைக் கேட்கிறார்கள். எல்லோரோடும் சேர்ந்து ஜெபிக்கிறார்கள். மற்றவர்களுக்கு ஒரு கெடுதலும் செய்யாமலிருக்கிறார்கள். இவையெல்லாமே நல்ல குணங்கள்தான். ஆயினும் இவர்களுடைய அஸ்திபாரம் இயேசுகிறிஸ்துவின்மீது கட்டப்படவில்லை யென்றால், இந்த காரியங்கள் எல்லாமே மணலைப்போலத்தான் இருக்கும். 


எல்லோருடைய வாழ்விலும்  பெருவெள்ளம் வரும். காற்று அடிக்கும் நம்மீதும் மோதும். நமது நம்பிக்கை எதன்மீது வைத்திருக்கிறோம் என்பதை இது உறுதி செய்யும். நமது அஸ்திபாரம் எது என்பதை இது வெளிப்படுத்தும். மழையும், வெள்ளமும், காற்றும் வீட்டின் மீது மோதிற்று. இதுபோல நமது ஜீவியத்திலும் பிரச்சனைகளும் போராட்டங்களும் வரும். இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தின் மூலமாக நமது ஜீவியத்தில் பாடுகளும் உபத்திரவங்களும் உண்டாகலாம். பிரச்சனை வரும்போதுதான் உண்மையான விசுவாசி யார் என்பது தெளிவாகும். ஒருவர் வசனத்தை கேட்பதோடு நிறுத்திக்கொண்டாரா அல்லது வசனத்தைக்கேட்டு அதற்கு   கீழ்ப்படிந்து ஜீவிக்கிறாரா என்பது நம்முடைய பாடுகளின் மத்தியில் வெளிப்படுத்தப்படும். 


நமக்கு மரணமும் நியாயத்தீர்ப்பும் வரும்போது நமது வாழ்வில் பெருங்காற்று வருகிறது என்று பொருள். நமது அஸ்திபாரம் இயேசுகிறிஸ்துவின்மீது இல்லையென்றால், பெருங்காற்றுபோல நமக்கு மரணம் உண்டாகும்போது, நாம் இந்த பூமியிலேயே விழுந்து அழிந்துபோவோம். நித்திய ஜீவனுக்கு இயேசுகிறிஸ்து என்னும் கன்மலையாகிய அஸ்திபாரமேயல்லாமல் வேறு எந்த அஸ்திபாரமும் நமக்கு உதவிபுரியாது.


இயேசுகிறிஸ்துவாகிய கன்மலையின்மேல் நாம் அஸ்திபாரம் போட்டிருந்தால் நமது ஆவிக்குரிய ஜீவியம் கீழே விழாது. நிமிர்ந்து நிற்கும். பெருமழையும், பெருங்காற்றும், பெருவெள்ளமும் நம்மீது மோதினாலும் நாம் கீழே விழாமல் உறுதியாக நிற்போம். இயேசுவை நம்புகிறவர்களுக்கு அவருடைய ஆறுதல்கள் எப்போதும் உண்டாயிருக்கும். அவரே நமக்கு பெலனாகவும், நமது ஆத்துமாவிற்கு ஆறுதலாகவும் இருப்பவர். 


மெய்யான விசுவாசிகளுக்கு மரணம் உண்டாகும்போது தேவன் அவர்களை தமது சமுகத்தில் அழைத்துக்கொள்வார். நியாயத்தீர்ப்பின் நாளில் இவர்கள் தண்டிக்கப்படாமல் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வார்கள்.


""மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ் சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது'' என்று பவுல் கூறுகிறார் (2கொரி 1:12). 


""நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்'' என்று பவுல் நம்பிக்கையோடு கூறுகிறார் (2தீமோ 4:7,8).


இயேசுகிறிஸ்துவாகிய கன்மலையின்மீது அஸ்திபாரம் போடாமல், மணலின் மீது அஸ்திபாரம் போட்டு தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தைக் கட்டுகிறவர்கள் புத்தியில்லாதவர்கள். பெருமழையும், பெருங்காற்றும், பெருவெள்ளமும் வந்து இவர்கள்மீது மோதும்போது இவர்கள் விழுந்து அழிந்துபோவார்கள். சோதனை காலத்தில் இவர்கள் தங்கள் வீட்டின் மேல் சாய்வார்கள். ஆனால் அந்த வீடு நிலைக்கமாட்டாது. அந்த வீட்டைப் பிடித்தால் அது நிற்காது             (யோபு 8:14,15). 


வீடு கட்டுகிறவனுக்கு வீடு தேவைப்படும்போது இந்த வீடு கீழே விழுந்து அழிந்துபோகும். காற்றும், மழையும்,    வெள்ளமும் வரும்போது இவன் வீட்டிற்குள் வந்து புகலிடம் தேடுவான். ஆனால் இந்த வீடோ இவனுக்கு உதவி செய்யாமல் அழிந்து போகும். இவனுடைய நம்பிக்கையெல்லாம் வீணாகும். இவனுக்கு மிகுந்த ஏமாற்றமே உண்டாகும். தேவைப்படும்போது பயன்படாத இந்த வீட்டை இவன் பலகாலமாக கட்டிக்கொண்டிருந்தான். 


பிரயோஜனமற்ற இந்த வீட்டை தன்னுடைய ஆதரவு என்று நம்பினான். இவனுடைய நம்பிக்கை வீணாயிற்று. இதற்கு காரணம் இவனுடைய அஸ்திபாரம் கன்மலையாக இல்லாமல் மணலாக இருந்ததுதான். இயேசுகிறிஸ்துவின்மீது அஸ்திபாரம் போடாமல்  தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தை கட்டியெழுப்புகிறவர்களுக்கு இதேப்போன்ற ஏமாற்றமே உண்டாகும். இவர்கள் எவ்வளவுதான் உயர எழும்பினாலும் கீழே விழும்போது அழிந்துபோவார்கள். இவர்களுடைய நம்பிக்கை வீணாகும். இவர்களுடைய பிரயாசம் பிரயோஜனமற்றதாகும். இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.


இயேசுகிறிஸ்து அதிகாரமுடையவராய் போதிக்கிறார்


இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்- முடித்த போது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல்,  அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள் (மத் 7:28,29).


இயேசுகிறிஸ்துவின் போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். தாங்கள் எல்லோருமே பரலோகத்திற்குப் போய்விடலாம் என்று இதுவரையிலும் ஜனங்கள் கற்பனை பண்ணிக்கொண்டிருந்தார்கள். இயேசுகிறிஸ்துவின் போதகத்தை கேட்டபொழுது  ஒவ்வொருவரும் தங்களுடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்தார்கள். ஜனங்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்தவர்கள்கூட தங்களுடைய உள்ளத்தை ஆராய்ந்து பார்த்து, தாங்கள் பரலோகத்திற்குப் போக தகுதியற்றவர்கள் என்பதை புரிந்து கொண்டார்கள்.  ஆகையினால் ஜனங்களுக்குள்ளே இயேசுவின் போதகத்தைக் குறித்து மிகுந்த ஆச்சரியம் உண்டாயிற்று. 


ஒருவர் நன்றாக பிரசங்கம் பண்ணினால்  அந்தப் பிரசங்கத்தைக்குறித்து நாம் ஆச்சரியப்படுவோம். நல்ல பிரசங்கம் என்று பாராட்டுவோம். பிரசங்கம் எப்படியிருந்தது என்பது முக்கியமல்ல. பிரசங்கச் செய்தி நமது உள்ளத்திற்குள் சென்று நமது இருதயத்தில் மாற்றம் உண்டாக்கிற்றா என்பதே முக்கியம். பிரசங்கத்தைக் கேட்டு ஆச்சரியப்பட்டுவிட்டு, தங்கள் உள்ளத்தில் மனந்திரும்பாமல் போகிறவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் பிரசங்கத்தைக் கேட்கும்போது அவிசுவாசிகளாகத்தான் இருக்கிறார்கள், பிரசங்கத்தைக் கேட்டபின்பும் அவிசுவாசிகளாகவே அந்த இடத்தை விட்டு கடந்து செல்கிறார்கள். இவர்களைப் போலத்தான் இயேசுகிறிஸ்துவின் போதகத்தை கேட்ட ஜனங்களும் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் தங்கள் உள்ளத்தில் பரிசுத்தமாக்கப்படவில்லை. 


இயேசுகிறிஸ்து வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தார். வேதபாரகர்கள் போதிக்கும்போது அதிகாரமுடையவர்களாக போதிக்கமாட்டார்கள். இவர்களுடைய போதகத்திற்கும் ஜீவியத்திற்கும் சம்பந்தமிராது. தாங்கள் போதிக்கிறபடி ஜீவிக்கமாட்டார்கள். ஆகையினால் இவர்களுடைய போதக வார்த்தைகள் இருதயத்திலிருந்து வராமல் உதடுகளிலிருந்து வருகிறது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன் ஒரு பாடத்தை மனப்பாடமாக ஒப்பிப்பதுபோல வேதபாரகர்கள் வேதவாக்கியங்களை ஒப்பிப்பார்கள்.


இயேசுகிறிஸ்துவோ அதிகாரமுள்ளவராக போதித்தார். ஒரு நியாயாதிபதி தன்னுடைய நீதியான நியாயத்தீர்ப்பை தனக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அறிவிப்பதுபோல இயேசுகிறிஸ்து அதிகாரமுள்ளவராக போதகம் பண்ணினார். இயேசுவின் வார்த்தைகள் கட்டளைகளாக இருந்தது. அவருடைய போதகம் நியாயப்பிரமாணமாக இருந்தது.  மலைப்பிரசங்கத்தில் இயேசுகிறிஸ்து பிரசங்கம் பண்ணியபோது அங்கு வேதபாரகர்களும் இருந்தார்கள். இயேசுவின் போதகத்திற்கும் வேதபாரகர்களின் போதகத்திற்கும் ஏராளமான வித்தியாசம் இருப்பதை அங்கு கூடியிருக்கும் ஜனங்கள் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இயேசுவின் வார்த்தையில் வல்லமை இருக்கிறது. வெளிச்சம் உண்டாகக்கடவது என்று அவர் கூறிய உடனே அங்கு வெளிச்சம் உண்டாயிற்று.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.