மனுஷருடைய ஜீவியத்தில் கானப்படவேண்டிய கனியை குறித்த இயேசுவின் உபதேசம்
கள்ளதீர்க்கதரிசிகளுக்கு நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். அவர்களால் நாம் வஞ்சிக்கப்பட்டு விடக்கூடாது. தீர்க்கதரிசிகள் வரப்போகிற காரியங்களை முன்னறிவிக்கிறவர்கள். பழைய ஏற்பாட்டில் பல தீர்க்கதரிசிகளைப்பற்றி கூறப்பட்டிருக்கிறது. சிலர் நல்ல தீர்க்கதரிசிகளாக இருந்தாலும், அவர்களுக்கு மத்தியில் சில கள்ளத்தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
கள்ளத்தீர்க்கதரிசிகள் கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்கு அழைக்கப்படாதவர்கள். கர்த்தருடைய வார்த்தை இவர்களுக்கு வெளிப்படுத்தப்படுவதில்லை. தங்களுடைய சொந்த வார்த்தைகளையே இவர்கள் தீர்க்கதரிசனம் என்று அறிவித்துவிடுகிறார்கள்.
தீர்க்கதரிசிகள் கர்த்தருடைய சத்தியத்தை ஜனங்களுக்கு உபதேசிப்பார்கள். கள்ளத்தீர்க்கதரிசிகளோ கள்ளப் போதகர்களாக இருக்கிறார்கள். கள்ளத்தீர்க்கதரிசிகளும் கள்ளப்போதகர்களும் ஜனங்களை வஞ்சிக்கிறார்கள்.
தீர்க்கதரிசன ஊழியத்திற்கு தேவன் தமது பரிசுத்தவான்களை தெரிந்தெடுக்கிறார். அவர்களை தமது வார்த்தையினால் அபிஷேகம் பண்ணுகிறார். தீர்க்கதரிசிகள் தேவனுடைய ஆவியானவரால் ஏவப்பட்டு அவருடைய வார்த்தைகளை ஜனங்களுக்கு அறிவிக்கிறார்கள். கள்ளத்தீர்க்கதரிசிகளோ தேவனால் அழைக்கப்படாதவர்கள். ஆவியானவர் இவர்களை ஏவுவதுமில்லை. ஆனால் தங்கள் வார்த்தைகளை ஆவியானவர் கூறுவதுபோல கள்ளத்தனமாக கூறிவிடுகிறார்கள்.
இயேசுகிறிஸ்துவிலுள்ள சத்தியத்தை போதகர்கள் ஜனங்களுக்கு விளக்கிக் கூறவேண்டும். ஆனால் சிலரோ கள்ள உபதேசங்களை போதிக்கிறார்கள். இவர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையோடிருக்கவேண்டும். இவர்களை சோதித்துப்பார்க்கவேண்டும். ஒருவர் கள்ளப்போதகர் என்று தெரியவந்தால் அவரை புறக்கணித்து ஒதுக்கிவிடவேண்டும்.
கள்ளத்தீர்க்கதரிசிகள்
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத் 7:15).
கள்ளத்தீர்க்கதரிசிகளின் உள்ளம் பட்சிக்கிற ஓநாய்களைப்போல உள்ளது. ஆகையினால் இவர்களைக் குறித்து மிகுந்த எச்சரிப்போடு இருக்கவேண்டும். இவர்கள் நம்மை வஞ்சித்துவிடுவார்கள். பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம்மை காத்துக்கொள்ள வில்லையென்றால் கள்ளத்தீர்க்கதரிசிகள் நம்மை அழித்துப்போடுவார்கள்.
இவர்கள் வரும்போது இவர்களுடைய சுயரூபத்தில் வரமாட்டார்கள். ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு வரும் ஓநாய்களைப்போல வருவார்கள். தங்களை தீர்க்கதரிசிகள் என்று அழைத்துக்கொள்வார்கள். ஆனால் தீர்க்கதரிசிகளின் குணாதிசயங்களோ, ஊழியங்களோ இவர்களிடத்தில் காணப்படாது.
இந்த உலகத்தில் மனுஷருடைய உடையையும் பகட்டையும் பார்த்து நாம் ஏமாந்து விடக்கூடாது. வெளித்தோற்றத்திற்கும் உள் மனத்திற்கும் சிலர் சம்மந்தமில்லாமல் இருப்பார்கள். வெளித்தோற்றத்தில் ஒரு பாவமும் அறியாதவர்கள் போலவும், சாந்தமுள்ளவர்கள் போலவும், பிரயோஜனமுள்ளவர்கள் போலவும் தங்களை காண்பிப்பார்கள். எல்லோரையும்விட தாங்களே உயர்ந்தவர்கள் என்று நடிப்பார்கள். இப்படிப்பட்டவர்களைக் குறித்து நாம் எச்சரிப்போடு இருக்கவேண்டும். சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்துக் கொண்டிருக்கிறான் (2கொரி 13:14). கள்ள அப்போஸ்தலர்கள் கபடமுள்ள வேலையாட்கள். இவர்கள் கிறிஸ்துவினுடைய அப்போஸ்தரின் வேஷத்தை தரித்துக்கொண்டவர்களாக இருக்கிறார்கள் (2கொரி 13:13).
கள்ளத் தீர்க்கதரிசிகள் வெளித்தோற்றத்திற்கு தங்களை தீர்க்கதரிசிகளாக காண்பித்தாலும், தங்கள் உள்ளத்திலோ இவர்கள் பட்சிக்கிற ஓநாய்களாக இருக்கிறார்கள். மாய்மாலக்காரர்கள் எல்லோருமே ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு அலைகிறவர்கள்தான். ஆனால் கள்ளத் தீர்க்கதரிசிகளோ ஆட்டுத்தோலை போர்த்துக்கொள்வதோடு, தங்கள் உள்ளத்தில் பட்சிக்கிற ஓநாய்களாகவும் இருக்கிறார்கள். தவறான உபதேசங்களை போதிக்கிறவர்கள், தவறான சத்தியங்களுக்கு நேராக நம்மை வழிநடத்துகிறவர்கள் ஆகிய எல்லோருமே நம்முடைய ஆத்துமாக்களுக்கு சத்துருக்களாக இருக்கிறார்கள். அப்போஸ்தலர் பவுல் இவர்களை மந்தையை தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் என்று கூறுகிறார் (அப் 20:21). கள்ளத்தீர்க்கதரிசிகள் நம்மை எளிதாக பட்சித்துப்போடுவதற்கு வாய்ப்பு உள்ளதினால் மிகுந்த எச்சரிப்போடு இருக்கவேண்டும்.
உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். (1யோவான் 4:1)
கள்ளத்தீர்க்கதரிசிகளைச் சோதித்தறியும் வழிகள்
1. அவர்களுடைய வெளியரங்கமான நடத்தையினால் (மத் 7:15; மத் 5:20)
2. அவர்களுடைய உள்ளான சுபாவங்களினால் (மத் 7:15)
3. அவர்கள் கொடுக்கும் கனிகளினால் (மத் 7:16#20; மத் 23:1#24)
4. அவர்களுடைய உபதேசங்களினால் (மத் 7:16#20; மத் 12:33#37; மத் 15:1#9)
5. தேவனுடைய சித்தத்தைச் செய்வதாகக்கூறி அதைச் செய்யாமல் இருப்பதினால் (மத் 7:21; மத் 5:20)
6. பிசாசின் கிரியைகளை அவர்கள் செய்வதினால் (மத் 7:22; மத் 24:24)
7. அவர்களுடைய முடிவு (மத் 7:23)
நல்ல கனியும் கெட்ட கனியும்
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது (மத் 7:16-18).
நல்ல தீர்க்கதரிசிகள் யார், கள்ளத்தீர்க்கதரிசிகள் யார் என்பதை சோதித்துப் பார்க்கவேண்டும். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதை பிடித்துக் கொள்ளுங்கள் என்றும், பொல்லாங்காய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள் என்றும் அப்போஸ்தலர் பவுல் ஆலோசனை கூறுகிறார் (1தெச 5:21,22). தீர்க்கதரிசிகளை அவர்களுடைய கனிகளினாலே அறியலாம்.
ஒரு மரம் நல்லதா அல்லது கெட்டதா என்பதை அதன் கனியை வைத்துத்தான் பார்க்கவேண்டும். மரத்தின் இலைகளையோ, அல்லது அதன் பட்டைகளையோ வைத்து மரத்தின் தன்மையை உறுதிபண்ணமுடியாது. சில மரங்கள் பார்ப்பதற்கு பசுமையாக இருக்கும். ஆனால் இந்த மரங்களினால் எந்தப் பிரயோஜனமும் இராது. மரங்களை அதன் கனிகளாலேயே அறியவேண்டும். நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கும். மரத்திற்கும் அதன் கனிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஒரு மரம் நல்லதென்றால் அது நல்ல கனியை கொடுக்கிறது. நல்ல மரத்தில் நாம் நல்ல கனிகளை எதிர்பார்க்கலாம். முட்செடிகளில் நாம் திராட்சப்பழங்களை பறிக்க முடியாது. அதுபோல முட்பூண்டுகளில் அத்திப்பழங்களை பறிக்க இயலாது. அந்தந்த மரம் அதனதின் கனியைத்தான் கொடுக்கும்.
கபடும் திருக்கும் உள்ள இருதயம் முட்செடிகளையும், முட்பூண்டுகளையும் போன்றது. இந்த இருதயம் பாவம் நிறைந்தது. பிரயோஜனமற்றது. முட்செடிகளை வெட்டி அக்கினியில்தான் போடவேண்டும். அதுபோல துன்மார்க்கருக்கு அக்கினியில்தான் முடிவு உண்டாகும்.
நல்ல கிரியைகள் நல்ல கனிக்கு ஒப்பானது. திராட்சப்பழங்களும், அத்திப்பழங்களும் கர்த்தருக்குப் பிரியமானது. மனுஷருக்கு பிரயோஜனமானது. திராட்சப்பழங்களை திராட்சச்செடிகளில்தான் பறிக்க முடியும். அதுபோல அத்திப்பழங்களை அத்தி மரத்தில்தான் பறிக்கமுடியும்.
துன்மார்க்கரிடமிருந்து நல்ல சுபாவங்களை எதிர்பார்க்கமுடியாது. அசுத்தத்திலிருந்து சுத்தம் வெளிப்படாது. ஒரு கனி எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொண்டால் அதன் மரம் எப்படிப்பட்டது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். நல்ல மரம் கெட்ட கனிகளை கொடுக்கமாட்டாது. அதுபோல கெட்ட மரம் நல்ல கனிகளை கொடுக்க மாட்டாது.
ஒரு மரம் ஒரு முறை மாத்திரம் பழத்தைக்கொடுத்து விட்டு, அதன்பின்பு கனி தராமல் பட்டுப்போவதில்லை. மரம் இயற்கையாகவே தாராளமாக கனி கொடுக்கும். தொடர்ந்து கனி கொடுக்கும் அதுபோல நல்லவர்கள் நல்ல சுபாவங்களை எப்போதும் வெளிப்படுத்துவார்கள். தாரளமாகவும் வெளிப்படுத்துவார்கள். ஒரு குறிப்பிட்ட செயலை மாத்திரம் வைத்து ஒரு மனுஷனை நிதானிக்க முடியாது. அவனுடைய எல்லா குணாதிசயங்களையும் ஆராய்ந்து பார்த்தப் பின்பு தான் அவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்று முடிவு பண்ணமுடியும்.
பாவி பாவமான காரியங்களைச் செய்வான். நீதிமான் நற்கிரியைகளைச் செய்வான். ஒரு மனுஷன் ஒரே சமயத்தில் பாவியாகவும், பரிசுத்தவானாகவும் இருக்க முடியாது. ஒன்று அவன் பாவியாக இருப்பான் அல்லது பரிசுத்தவானாக இருப்பான்.
அக்கினியிலே போடப்படும்
நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (மத் 7:19).
யோவான்ஸ்நானன் இதே சத்தியத்தை ஏற்கெனவே உபதேசம் பண்ணியிருக்கிறார். ""இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்'' என்று யோவான்ஸ்நானன் கூறினார் (மத் 3:10). யோவான்ஸ்நானன் சொன்ன அதே கருத்தைத்தான் இயேசுகிறிஸ்து இங்கு கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு பயன்படுத்துகிறார். ஒரே சத்தியத்தை மறுபடியும் சொல்வதினால் தவறில்லை. ஒரே காரியத்தை மறுபடியும் எழுதுவதினாலும், கூறுவதினாலும் அந்தக் காரியம் உறுதிபண்ணப்படுகிறது.
சில மரம் எந்தக் கனியும் கொடுக்காது. இந்த மரத்தினால் ஒரு பயனுமில்லை. ஒரு கனியும் கொடுக்காத மரம் நல்ல கனி கொடுக்காத மரத்திற்கு சமம். இதுவும் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். மரமென்றால் கனி கொடுக்க வேண்டும். அந்த கனியும் நல்ல கனியாக இருக்கவேண்டும். நல்ல கனிகொடாத மரத்திற்கு அழிவு நியமிக்கப்பட்டிருக்கிறது. வெட்டப்பட்டு அக்கினியில் போடப்படுவதே அதன் முடிவு. அதுபோலவே கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் நல்ல கனிகளைக் கொடுப்பதில் மிகுந்த கவனத்தோடு இருக்கவேண்டும். இல்லையெனில் நாமும் வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படுவோம்.
விசுவாசியின் ஜீவியத்தில் ஆவியின் கனி வெளிப்படவேண்டும். ஆவியின் கனி வெளிப்படாத ஜீவியம் நல்ல கனிகொடாத மரத்தைப்போன்றது. அப்படிப்பட்டவர்கள் வெட்டப்பட்டு, அக்கினியிலே போடப்படுவார்கள் என்னும் ஆவிக்குரிய எச்சரிப்பு நமக்குள் எப்போதும் இருக்க வேண்டும். (யோவான் 15:1#8)
கனிகளினால் அவர்களை அறியலாம்
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் (மத் 7:20).
மனுஷருடைய கனிகள் என்பது அவர்களுடைய வார்த்தைகளையும் கிரியைகளையும் குறிக்கும். ஒருவர் நல்லவரா அல்லது தீயவரா என்பது நமக்கு தெரியாவிட்டால் அவருடைய ஜீவியத்தை கவனித்துப் பார்க்கவேண்டும். அவர்களுடைய கிரியைகள் அவர்களைப் பற்றி சாட்சி பகரும். தேவனுடைய சத்தியத்தை போதிக்காதவர்கள் தேவனால் அனுப்பப்பட்டவர்கள் அல்ல. தேவனுடைய சத்தியத்திற்கும் தங்களுடைய ஜீவியத்திற்கும் முரண்பட்டு ஜீவிக்கிறவர்கள் மாயக்காரர்கள். இவர்கள் அசுத்த ஆவிகளினால் ஆளுகை செய்யப்படுகிறார்கள். தேவன் தமது பொக்கிஷத்தை மண்பாண்டங்களாகிய நம்மிடத்தில் கொடுத்து வைத்திருக்கிறார். ஆனால், அவர் தமது பொக்கிஷத்தை ஒருபோதும் துன்மார்க்கமான பாத்திரங்களில் கொடுத்து வைப்பதில்லை.
தீர்க்கதரிசிகளின் கனிகள் என்பது அவர்களுடைய உபதேசங்களாகும். இவர்களுடைய உபதேசம் தேவனுடையதாக இருக்குமென்றால், இவர்கள் உபதேசத்தின் மூலமாக அன்பும், மனத்தாழ்மையும், பரிசுத்தமும், பயபக்தியும் பெருகும். உபதேசத்தைக் கேட்பவர்கள் கர்த்தருடைய கிருபையில் பெருகுவார்கள். தீர்க்கதரிசிகளின் உபதேசம் கள்ளப்போதகமாக இருந்தால் இதைக் கேட்பவர்களிடத்தில் பக்தி பெருகுவதற்குப் பதிலாக, பெருமையும், உலகக் காரியங்களும், துன்மார்க்கமும் பெருகும். கள்ளத்தீர்க்கதரிசிகள் ஜனங்களை தந்திரமாக வஞ்சிப்பார்கள். கள்ளத்தீர்க்கதரிசிகளின் போதனை தேவனால் உண்டானதல்ல (கலா 5:8). கள்ளத்தீர்க்கதரிசிகளின் ஞானம் பரத்திலிருந்து இறங்கி வருகிற ஞானமாயிராமல், லௌகீக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்திற்குரியதும், பேய்த்தனத்திற்கு அடுத்ததுமாக இருக்கிறது (யாக் 3:15). தீர்க்கதரிசிகள் விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவர்களாக இருக்கவேண்டும். கள்ளத்தீர்க்கதரிசிகளோ நல்மனச்சாட்சியை தள்ளிவிட்டு விசுவாசமாகிய கப்பலை சேதப்படுத்துகிறார்கள் (1தீமோ 1:19). தீர்க்கதரிசிகள் விசுவாசத்தில் இரகசியத்தை சுத்த மனச்சாட்சியாலே காத்துக் கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும் (1தீமோ 3:9).