இயேசு கிறிஸ்து சீஷர்களுக்கு சொன்ன உபதேசம் பகுதி 3

 

இயேசு கிறிஸ்து சீஷர்களுக்கு சொன்ன உபதேசம் பகுதி 3


உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்


எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள் (லூக் 6:27).


மத்தேயு எழுதின சுவிசேஷம் 5:38-ஆவது வசனத்தோடு லூக்கா சுவிசேஷத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த உபதேசங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. இயேசுகிறிஸ்து தமக்கு செவிகொடுக்கிறவர்களுக்கு உபதேசம்பண்ணுகிறார். காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று கூறியவர், காதுள்ளோர் அனைவரும் தம்முடைய உபதேசத்தை கேட்டு அவற்றிற்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டுமென்று உபதேசம்பண்ணுகிறார். 


உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்


உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.  உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே  (லூக் 6:28,29).


நமக்கு விரோதமாக குற்றம் செய்கிறவர்களை மன்னிப்பதில் நாம் தாராள மனப்பான்மையோடு நடந்துகொள்ளவேண்டும்.  நமக்கு தீங்கு செய்தவர்களையும், நம்மை காயப்படுத்தியவர்களை நாம் மன்னிக்க வேண்டும். நமது உரிமை பரிக்கப்படும்போது, அந்த உரிமையை நிலைநாட்டுவதில் வைராக்கியமாக இருக்கக்கூடாது. நம்முடைய அங்கியை எடுத்துக்கொள்கிறவனுக்கு நம்முடைய வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ள  தடைபண்ணக்கூடாது. அவனோடு சண்டை போடுவதற்குப் பதிலாக விட்டுக்கொடுக்க வேண்டும். நம்மிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடுக்கவேண்டும். நம்முடையதை எடுத்துக்கொள்கிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்கக்கூடாது. 


நம்மிடத்தில் யாராவது கடன்பட்டு அவன்  தரித்திரனாகப் போய்விட்டால், கடனைத் திரும்பக் கொடுப்பதற்கு அவனுக்கு திராணியில்லாமல் போய்விட்டால், அவனுடைய தொண்டையை நெரித்து கடனை நமக்கு கொடுத்துத் தீர்க்க வேண்டுமென்று கேட்கக்கூடாது (மத் 18:28).


நம்மை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால்  மறுகன்னத்தையும் அவனுக்கு அறைவதற்கு திருப்பி கொடுக்கவேண்டும்.  பழிவாங்கக்கூடாது. நம்மை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டால் அவனை திரும்ப  அடிக்கக்கூடாது. அவனிடமிருந்து மற்றொரு அடியை வாங்குவதற்கு நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும். நம்முடைய பிரச்சனைகளையும் நம்முடைய காரியங்களையும் நாம் கர்த்தருடைய பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மனுஷருக்கு அடிமையாவதைவிட, மனுஷரோடு போராடுவதைவிட தேவனுடைய பாதத்தில் அவருக்கு அடிமையாவது நமக்கு ஆசீர்வாதமானது.


நமக்கு தீங்கு செய்தவர்களுக்கு நாம் பதிலுக்கு தீமை செய்யாமல், அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். இயேசுகிறிஸ்துவின் உபதேசம் மிகவும் மென்மையானது. அதே சமயத்தில் வல்லமையுள்ளது. நாம் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது. எல்லோரிடத்திலும் அன்பாகவும்  கரிசனையாகவும் இருக்கவேண்டும். நமக்கு யாராவது காயம் உண்டாக்கினால்கூட அவர்களையும் பகைக்கக்கூடாது. அவர்களை சிநேகிக்க வேண்டும். 


நம்முடைய சத்துருக்களை சிநேகித்தால் மாத்திரம் போதாது. நாம் அவர்களுக்கு நன்மையும் செய்யவேண்டும். பழிவாங்கும் உணர்வு நம்முடைய உள்ளத்தில் சிறிதும் காணப்படக்கூடாது. நம்மை சபிக்கிறவர்களையும் நாம் ஆசீர்வதிக்க வேண்டும். நம்மைப்பற்றி குறைவாக பேசுகிறவர்களையும் நாம் உயர்வாக பேசவேண்டும். 


வார்த்தையினாலும், செய்கையினாலும் நமக்கு யாராவது தீங்கு செய்துவிட்டால் அவர்களை பழிவாங்கவேண்டுமென்று துடிக்கக்கூடாது. அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும். அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.  நம்மால் முடிந்த வரையிலும் அவர்களைப்பற்றி நன்றாக பேசி அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். அவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று தேவனுடைய சமுகத்தில் அவர்களுக்காக பரிந்து பேசவேண்டும்.  


""அங்கி''  என்பது பிரயாணம் செய்யும் போது அல்லது வேலையில்லாமல் ஓய்வாக இருக்கும் போது சரீரத்திற்கு வெளியே அணியும் வஸ்திரமாகும்.


உங்களிடத்தில் கேட்கிற எவனுக்கும்


உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே  (லூக் 6:30).  


தேவையுள்ளவர்களுக்கு நாம் கொடுத்து உதவிபுரியவேண்டும். நம்மிடத்தில் கேட்கிற எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களுடைய தேவை எதுவாக இருந்தாலும்  அவர்களுக்கு உதவிபுரிய நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும். தங்களுடைய தேவைகளை சந்திக்க முடியாதபடி இருக்கும் ஜனங்களுக்கு நம்மால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்ய  நாம் முன்வரவேண்டும். 


இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு ஊழியப் பயிற்சி கொடுக்கும்போது, திரளான ஜனங்களை புல்தரையில் வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு பரிமாறுவது எப்படியென்று கற்றுக்கொடுத்தார். சாதாரண சமயங்களில் நாம் நம்முடைய திராணிக்குத்தக்கவாறு உதவிபுரியவேண்டும். சில விசேஷித்த சமயங்களில், நமது திராணிக்கு அதிகமாகவும் உதவிபுரிய முன்வரவேண்டும். 


""உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே''  என்னும் இந்த வாக்கியம் போர்ச் சேவகர்களையும், வரிவசூலிக்கும் ஆயக்காரர்களையும் குறிக்கிறது. அவர்கள் ஜனங்களிடத்திலே எந்தவித இரக்கமும் காண்பிக்காமல் பலாத்காரத்தோடு அபகரித்துக் கொள்வார்கள். வரிக்கட்டுவதற்காக ஏழை ஜனங்கள் தங்களிடமுள்ள உடமைகளை எல்லாம் சில வேளைகளில் விற்று விடுவதுமுண்டு.      (மத் 18:25,28-30,34) இராஜாவின் சேவர்கள் தங்களுக்குத் தேவையானதைப் பொது ஜனங்களிடம் பலாத்காரமாக அபகரித்துக் கொள்வார்கள். ஜனங்களுடைய பொருட்களை மட்டுமல்ல தங்களுக்குத் தேவையானால், ஜனங்கள் தங்களுக்குச் சேவை புரிய வேண்டுமென்றும் வற்புறுத்துவார்கள். (மத் 5:41) ராஜாவின் சேவகருக்குப் பணிபுரிய மறுப்பது ராஜாவை அவமதிக்கும் செயலாகக் கருதப்பட்டது.


நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ


 மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (லூக் 6:31).


ஒவ்வொருவருக்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகளை நாம் சரியாகச் செய்யவேண்டும். நம்முடைய பேச்சிலும் செய்கையிலும் கண்ணியமும் நியாயமும் இருக்கவேண்டும். யாரையும் வஞ்சிக்கக்கூடாது. மனுஷர் நமக்கு எப்படி செய்யவேண்டுமென்று விரும்புகிறோமோ அப்படியே நாமும் அவர்களுக்குச் செய்யவேண்டும். 


அவர்களுடைய ஆத்துமாக்களை நம்முடைய ஆத்துமாக்களைப்போல பாவிக்கவேண்டும். பிறர்மீது இரக்கம் காண்பிக்கவேண்டும். நம்முடைய தேவையில் மற்றவர்கள் நமக்கு உதவிபுரிய வேண்டும் என்று  விரும்புகிறோம். நமது விருப்பம்போலவே நாமும் மற்றவர்களுடைய தேவையில் உதவிபுரியவேண்டும். மற்றவர்கள் நம்மிடம் நீதியாக நடந்துகொள்ளவேண்டுமென்றும், நமக்கு இரக்கம் காண்பிக்க வேண்டுமென்றும்  விரும்புகிறோம். நாமும் மற்றவர்களிடம் நீதியாக நடந்துகொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு இரக்கம் காண்பிக்க வேண்டும். 


""மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்'' என்னும் இந்த வாக்கியம் தங்கச்சட்டம்   என்று அழைக்கப்படுகிறது. லேவி 19:18 ஆவது வசனம் கூறும் உபதேசமும், தங்கச்சட்டம் என்று அழைக்கப்படுகிறது. ""பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவது போல் பிறனிலும் அன்புகூருவாயாக''. நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்பது இதன் பொருளல்ல. ஏனெனில் மற்றவர்கள் தங்களிடம் உள்ள எல்லாப் பொருள்களையும் நமக்குக் கொடுத்துவிட வேண்டுமென்று நாமும் எதிர்பார்ப்பதில்லை. அப்படி எதிர்பார்ப்பது பேராசையாகும். நாம் பிறருடைய பொருளை இச்சிக்கக்கூடாது. இந்த வசனத்தின் மையக்கருத்து, நாம் இரக்கமுள்ளவர்களாகவும், அன்புள்ளவர்களாகவும், நீதியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.


உங்களை சிநேகிக்கிறவர்களையே


 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேக்கிறார்களே.  உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே.  உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன்கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே (லூக் 6:32-35).


நம்முடைய சத்துருக்களை சிநேகித்து அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். இந்த உபதேசத்தை நடைமுறையில் செயல்படுத்துவது நமக்கு சற்று கடினமானது. நம்மிடத்தில் தாராள குணமும், இரக்க சிந்தையும் இருந்தால்தான்  இந்த உபதேசத்தை நம்மால் செயல்படுத்த முடியும். கேட்கிற எல்லோருக்குமே இந்த உபதேசம் போதிக்கப்பட்டாலும், ஒரு சிலர் மாத்திரமே இந்த உபதேசத்தை தங்கள் ஜீவியத்தில் செயல்படுத்துகிறார்கள். 


நம்மை சிநேகிக்கிறவர்களை நாம் சிநேகிக்கிறோம். இதில் விசேஷித்த காரியம் எதுவுமில்லை. கிறிஸ்துவின் சீஷர்களுக்கு இந்த உபதேசத்திற்கு கீழ்ப்படிவது மிகவும் சுலபம். பாவிகள்கூட தங்களை சிநேகிக்கிறவர்களை சிநேகிக்கிறார்கள். நாம் விசேஷித்தவர்கள். நம்முடைய ஜீவியத்தில் விசேஷித்த காரியங்கள் காணப்படவேண்டும். ஆகையினால் நம்மை சிநேகிக்கிறவர்களை சிநேகிப்பதோடு, நம்முடைய சத்துருக்களையும் சிநேகிக்க வேண்டும்.


நமக்கு நன்மை செய்கிறவர்களுக்கு நாம்  பதிலுக்கு நன்மை செய்கிறோம். இதனால் நமக்கு  விசேஷித்த பலன் எதுவுமில்லை. பாவிகளும் தங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கு பதிலுக்கு நன்மை செய்கிறார்கள். நாம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் விசேஷித்த காரியங்களைச் செய்ய வேண்டும். பாவிகளைப்போல நமது செய்கையிராமல், பரிசுத்தவான்களைப்போல நமது செய்கை இருக்கவேண்டும். 


நமக்கு தீமை செய்கிறவர்களுக்கும் நாம் நன்மை செய்தால் நம்முடைய செய்கை விசேஷித்ததாக இருக்கும். நமது செய்கையின் மூலமாக நமது தேவனுடைய நாமம் மகிமைப்படும். நன்மையைப் பெற்றுக்கொண்டவர்கள் நம்முடைய தேவனை துதிப்பார்கள். கைம்மாறு கருதாமல் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அப்போது நம்முடைய பலன் மிகுதியாயிருக்கும்.  


பிறருக்கு கடன் கொடுக்கும்போது அவர்களிடத்திலிருந்து அதைத் திரும்ப பெற்றுக்கொள்வோம் என்னும் எண்ணத்தில் கடன்கொடுக்கக்கூடாது. நம்முடைய பொருளை  தானமாக கொடுக்கிறோம் என்னும் எண்ணத்திலேயே மற்றவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும். தரித்திரருக்கு கடன் கொடுக்கவேண்டும். அவர்களால் திரும்ப செலுத்த முடியாவிட்டாலும் மனம் கோணாமல் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். 


கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்யும்போது நமக்கு இரண்டுவிதமான ஆசீர்வாதங்கள் கிடைக்கும். முதலாவதாக நமது பலன் மிகுதியாக இருக்கும். இரண்டாவதாக நாம் உன்னதமானவருக்கு பிள்ளைகளாக இருப்போம். இந்த பூமியில் நல்ல எண்ணத்தோடு நாம் செய்த உதவிகளும், தரித்திரருக்கு கடன் கொடுத்த சம்பவங்களும் பரலோகத்தில் நம்முடைய கணக்கில் எழுதி வைக்கப்படும். நாம் கடனாக கொடுத்தது நமக்குத் திரும்ப கிடைக்க வில்லையென்றாலும் நம்முடைய பலன் மிகுதியாக இருக்கும். நியாயத்தீர்ப்பு நாளின்போது நாம் தேவனுடைய சமுகத்தில் நிற்போம். அப்போது ""ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள், தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்'' என்று கூறி கர்த்தர் நம்மை வரவேற்பார். 


மற்றவருக்கு உதவிசெய்யும்போது தேவனுடைய சுபாவத்தை நமது ஜீவியத்தில் வெளிப்படுத்துகிறோம். அவர் நன்றி அறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும்  நன்மை செய்கிறார். தேவனுடைய உள்ளத்தை பிரியப்படுத்தும்படி நாம் கிரியை செய்யும்போது, நாமும் உன்னதமானவருக்கு பிள்ளைகளாக இருப்போம். 


 இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் தங்கச்சட்டத்தை மூன்று விதமாக வியாக்கியானம் பண்ணுகிறார்.


    • 1. பாவிகள் சிநேகிப்பதுபோல சிநேகிக்காமல், தேவனுடைய பிள்ளைகளாகச் சிநேகியுங்கள்


    • 2. பாவிகள் நன்மை செய்கிறதுபோல நன்மை செய்யாமல், தேவனுடைய பிள்ளைகளாக நன்மை செய்யுங்கள்.


    • 3. பாவிகள் கடன்கொடுப்பதுபோல கடன் கொடுக்காமல் தேவனுடைய பிள்ளைகளாகக் கடன்கொடுங்கள்.


தங்கச்சட்டத்தில் நான்கு விதமான காரியங்கள் அடங்கியுள்ளன. அவையாவன:


    • 1. அன்பின் நான்கு பிரமாணங்கள் (லூக்கா 6:27-28)


    • 2. எதிர்த்து நிற்கும் நான்கு பிரமாணங்கள் (லூக்கா 6:29-30)


    • 3. இரக்கத்தின் நான்கு பிரமாணங்கள்  (லூக்கா 6:35-36)


    • 4. நீதியின் நான்கு பிரமாணங்கள் (லூக்கா 6:37-38)


 லூக்கா 6:32-34 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிற அன்பு, நன்மைசெய்தல், கடன்கொடுத்தல் ஆகிய பிரமாணங்கள் மறுபடியுமாகக் கூறப் பட்டிருக்கிறது. இவற்றோடு இரக்கத்தின் பிரமாணம் சேர்க்கப்பட்டிருக்கிறது. (லூக்கா 6:35-36)


கடன்கொடுப்பது


""திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப் படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. இவர்களுக்கு தேவனிடத்தில் ஒரு பலனும் இல்லை. கைம்மாறு கருதாமல் கடன்கொடுங்கள்'' (லூக்கா 6:34-35)


நியாயப்பிரமாணத்தின் பிரகாரம் சகோதரரிடம் வட்டி வாங்கக்கூடாது. பலாத்காரமாக கடன் கொடுத்ததற்கு அடமானமாக எதையும் அபகரிக்கக்கூடாது. (உபா 24:6-17) மனுஷருக்கு உதவி புரியும் நோக்கத்தோடு கடன் கொடுக்க வேண்டும்.  (சங் 37:25-26; சங் 112:5). ஏழைக்கு இறங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான். (நீதி 19:17) கடன் வாங்குகிறவன் கடன் கொடுக்கிறவனுக்கு அடிமையாகிறான். (நீதி 22:7)


விசுவாசிகள் தேவையுள்ளவர்களுக்கு உதவி புரிய வேண்டும். கைம்மாறு கருதாமல், பிரதிபலன் எதிர்பாராமல், உதவிபுரிய வேண்டும். (மத் 5:42; லூக்கா 6:34-35) கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையென்றால் அவர்களுடைய பொருட்கள் எதையும் அபகரிக்கக்கூடாது. அவ்வாறு அபகரித்தால் தேவனிடத்தில் அவர்களுக்குப் பலன் இல்லை. கடன் வாங்கியவன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்புள்ளவன். (யாத்  22:14-15; சங் 37:21) வாங்கிய எல்லாக் கடன்களையும் உரிய நேரத்தில் செலுத்தி விடவேண்டும்.  


லூக்கா 6:27-38 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியும்போது இரண்டு ஆசீர்வாதங்கள் கிடைக்கும். அவையாவன:


    • 1. பலன் மிகுதியாயிருக்கும். (லூக்கா 6:35; லூக்கா 6:23)


    • 2. உன்னதமான தேவனுக்கு பிள்ளைகளாக இருப்பார்கள். (லூக்கா 6:35) 


இரக்கமுள்ளவர்களாயிருங்கள்


ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள் (லூக் 6:36).


நம்முடைய பரலோக பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல நாமும் இரக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டும். பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல நாமும் பூரண சற்குணராயிருக்க வேண்டும் (மத் 5:48). நமது பேச்சும் செய்கையும் பரலோக பிதாவைப்போல இருக்கவேண்டும். அப்போதுதான் உன்னதமான அவருக்கு நாம் பிள்ளைகளாக இருப்போம். 


தேவன் இரக்கமுள்ளவராயிருக்கிறார். நாமும் இரக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.  நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் அவர் நன்மை செய்கிறார். நாமும் அவரைப்போல  நன்றி அறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்யவேண்டும். அவர் பூரண சற்குணராயிருக்கிறார். நாமும் பூரண சற்குணராக இருக்கவேண்டும்.


பல சமயங்களில் நம்முடைய பேச்சு, செய்கை ஆகியவற்றின் மூலமாக நாமும் தேவனுக்கு துரோகிகளாகவும் நன்றி அறியாதவர்களாகவும் இருக்கிறோம். அப்படியிருந்தபோதிலும் நம்முடைய பரலோக பிதா நம்மீது இரக்கமுள்ளவராக இருக்கிறார்.  நாம் நிர்மூலமாகாதிருப்பது அவருடைய சுத்தக்கிருபை. இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு நாம் மற்றவர்ளோடு பேசவேண்டும். பழகவேண்டும். 


நற்குணத்திற்கு எடுத்துக்காட்டுக்கள்


    • 1. தேவன் (சங் 25:8; சங் 107:1; லூக்கா 6:35) 


    • 2. இயேசு (அப் 10:38) 


    • 3. யாக்கோபிடம் பார்வோன் (ஆதி 47:5-6) 


    • 4. வேவுகாரரிடம் ராகாப் (யோசு 2:6-16) 


    • 5. சவுலிடம் தாவீது (1சாமு 24)


    • 6. பெனாதாத்திடம் ஆகாப் (1இராஜா 20:31)


    • 7. மரியாளிடம் யோசேப்பு (மத் 1:19)


இரக்கமுள்ளவர்கள் மற்றவர்களைக் கேட்காமலேயே மன்னித்து விடுவார்கள். தங்களுக்குத் தீங்கு நேர்ந்தாலும் தொடர்ந்து பிறருக்கு நன்மையையே செய்வார்கள். தங்களுக்கு ஏற்பட்ட மனக்காயங்களை விரைவில் மறந்து விடுவார்கள். இரக்கமுள்ளவர்களுக்கு வேத வாக்கியத்தில் பல ஆசீர்வாதங்கள் கூறப்பட்டிருக்கிறது.  


இரக்கமுள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டு


    • 1. தேவன் (லூக்கா 6:36; லூக்கா 18:13-14; சங் 103:13)


    • 2. இயேசு (மத் 9:36; மத் 14:14) 


    • 3. யோசேப்பிடம் சிறைச்சாலைக்காவல்காரன் (ஆதி 39:21-23)


    • 4. ராகாபிடம் யோசுவா (யோசு 6:25)


    • 5. சவுலிடம் தாவீது  (1சாமு 24:10-17)


    • 6. ஆண்டவன் ஊழியக்காரனிடம் (மத் 18:27) 


    • 7. இஸ்ரவேலின் இராஜாக்கள் (1இராஜா 20:31)





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.