மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் என்ற இயேசுவின் உபதேசம் (மத்தேயு 7:1-6)

 

மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் என்ற இயேசுவின் உபதேசம் (மத்தேயு 7:1-6)


நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்               (மத் 7:1).


நம்மை நாமே நியாயந்தீர்க்கவேண்டும். நம்முடைய கிரியைகளுக்கு நாமே நியாயாதிபதிகளாக இருக்கவேண்டும். மற்றவர்களை குற்றவாளிகளென்று நாம் நியாயந்தீர்க்கக்கூடாது. நியாயத்தீர்ப்பின் ஆசனத்தில் நாமாகப்போய் அமர்ந்து கொள்ளக்கூடாது. நமது வார்த்தை எல்லோருக்கும் சட்டமாக இருக்கவேண்டுமென்று அதிகாரம் பண்ணக்கூடாது. நம் சகோதரரை குற்றவாளியென்று தீர்க்கக்கூடாது. அவர்களை அற்பமாய் எண்ணக்கூடாது. நாம் எல்லோரும் கிறிஸ்துவினுடைய நியாயசனத்திற்கு முன்பாக  நிற்கவேண்டியவர்களே (ரோம 14:10).


நாம் அவசரப்பட்டு மற்றவர்களை நியாயந்தீர்க்கக்கூடாது. தயவில்லாமலும், கிருபையில்லாமலும், இரக்கமில்லாமலும், பழிவாங்கும் எண்ணத்தோடும், தவறான நோக்கத்தோடும் மற்றவர்களை நியாயந்தீர்க்கக்கூடாது. மற்றவர்களுடைய இருதயங்களையோ, அவர்களுடைய எண்ணங்களையோ நாம் நியாயந்தீர்ப்பது தவறு.  ஏனெனில் இருதயங்களை ஆராய்ந்து பார்த்து நியாயந்தீர்ப்பது தேவனுடைய கிரியை. ஒருவர் பரலோகத்திற்கு போவாரா அல்லது நரகத்திற்கு போவாரா என்றும் நாம் முடிவு பண்ணக்கூடாது. நமது நித்திய வாழ்வை தேவனே தீர்மானம் பண்ணுகிறவர். மற்றவர்களை மாய்மாலக்காரரே எனவும், பயனற்றவர்கள் எனவும், மோசமானவர்கள் எனவும் நியாயந்தீர்ப்பது முறையல்ல. இது நமது வரம்பு மீறிய செயல். 


நாம் நியாயந்தீர்க்கக் கூடாது என்றால், மற்றவர்களுடைய தவறுகளை எவ்வாறு திருத்துவது? அவர்களுக்கு ஆலோசனை கூறவேண்டும். அவர்களுக்கு உதவிபுரிய வேண்டும். நாம் மற்றவர்களை தீர்க்கிற தீர்ப்பின்படியே நாமும் தீர்க்கப்படுவோம். நாம் மற்றவர்களை நியாயந்தீர்த்தால் அவர்களும் நம்மை நியாயந்தீர்ப்பார்கள். எல்லோருமே மற்றவர்களுடைய விஷயங்களில் தலையிடுவதற்கு ஆயத்தமாகவே இருப்பார்கள். இரக்கம் காண்பிக்கிறவர்களுக்குத்தான் இரக்கம் காண்பிக்கப்படும். கோபத்தை காண்பிக்கிறவர்களுக்கு கோபமே காண்பிக்கப்படும். நாம் மற்றவர்களை நியாயந்தீர்க்கும்போது அவர்களும் நம்மை நியாயந்தீர்ப்பார்கள். அத்துடன் நமது பிரச்சனை முடிந்துவிடுவதில்லை. நம்மை தேவனும் நியாயந்தீர்ப்பார். ""அதிக ஆக்கினை அடைவோம் என்றறிந்து உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக'' என்று யாக்கோபு கூறுகிறார் (யாக் 3:1). தேவனுடைய நியாயசனத்திற்கு முன்பாக நாம் எல்லோரும் நிற்க வேண்டும். மற்றவர்களை நியாயந்தீர்த்த நாமும் நிற்போம். நம்மால் நியாயந்தீர்க்கப்பட்ட மற்றவர்களும் நிற்பார்கள். தேவன் நம்மையும் மற்றவர்களையும் நீதியாய் நியாயம் விசாரித்து நியாயந்தீர்ப்பார்        (ரோம 14:10). 


தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபை அளிக்கிறார். பெருமையுள்ளவர்களுக்கோ எதிர்த்து நிற்கிறார். நமது மனதின் பெருமையினால் மற்றவர்களை நியாயந்தீர்த்தால் தேவன் நம்மை குற்றவாளியாக நியாயந்தீர்ப்பார். ஆகையினால் நாம் மற்றவர்களை நியாயந்தீர்க்காமல், பிறரோடு அன்பாகவும், நேசமாகவும், கிருபையோடும் பழக வேண்டும். மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக நம்மை நாமே நியாயந்தீர்த்துக் கொள்ளவேண்டும். மற்றவர்களை குற்றவாளிகளென்று நாம் தீர்க்காதிருந்தால், நாமும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்போம். தங்களுடைய சகோதரர்களை மன்னிக்கிறவர்களை தேவனும் மன்னிப்பார். மற்றவர்களை நியாயந்தீர்க்காதவர்களை தேவனும் நியாயந்தீர்க்கமாட்டார். இரக்கம் செய்கிறவர்கள் இரக்கம் பெறுவார்கள். 


நாம் நம்மிடத்தில் மட்டுமே குற்றம் காணவேண்டும். நமது இருதயத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பிறருடைய காரியங்களில் தலையிட்டு, மற்றவர்களை ஆராய்ச்சி பண்ணக்கூடாது. நம்மை நாமே ஆராய்ந்து பார்க்கும்போது நம்முடைய பாவங்கள் உணர்த்தப்படும், தேவனுடைய சமூகத்தில் நாம் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளலாம். நாம் மற்றவர்களை எப்படி நியாயம் தீர்க்கிறோமோ அப்படியே நாமும் தீர்க்கப்படுவோம். ""நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்''.


மற்றவர்களை தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்


ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும் (மத் 7:2).


மற்றவர்களை நியாயந்தீர்க்கிறவர்கள் மீது பழிவாங்குதலின் பிரமாணம் கிரியை செய்யும். தேவன் நீதியுள்ளவர். நீதியாய் விசாரித்து நீதி செய்கிறவர். தேவன் ஒவ்வொரு மனுஷனையும் அவன் செய்த கிரியைகளின் அளவுக்குப் பிரகாரம் அவனை ஆசீர்வதிக்கவோ, தண்டிக்கவோ செய்கிறார்.  நாம் மற்றவர்களுக்கு எந்த அளவின்படி அளக்கிறோமோ அந்த அளவின்படியே நமக்கு அளக்கப்படும். இது இந்த உலகத்தின் பிரமாணம். ஒவ்வொரு மனுஷனும் தண்டிக்கப்படும்போது தன்னுடைய தண்டனையில் தான் செய்த பாவத்தின் அளவை அளந்து கொள்ளலாம். நாம் மற்றவர்களை தீர்க்கிற தீர்ப்பின்படியே, கர்த்தர் நம்மையும் நியாயந்தீர்த்தால் நாம் அதிகமாக தண்டிக்கப்படுவோம். நம்மையும் மற்றவர்களையும் தேவன் ஒரே தராசில் நிறுத்துப் பார்த்தால், நமக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் எதுவும் இருக்காது. நாமும் மற்றவர்களைப்போல பாவிகளாகத்தான் இருப்போம். 


நீதியான நியாயாதிபதியினிடத்தில் நீதியான நியாயத்தீர்ப்பை நாம் எதிர்பார்க்கலாம்.  நமது சகோதரனுக்கு நாம் தீங்கு செய்தால் தேவன் நமக்கு நன்மை செய்யமாட்டார். நாம் மற்றவர்களுக்கு செய்யும் தீமைகள் நமது தலையின் மீதே வந்துவிழும். ஆகையினால் மற்றவர்களைக் குறித்து நியாயந்தீர்க்கும் விஷயத்தில் நாம் மிகுந்த எச்சரிப்போடு இருக்கவேண்டும்.  மற்றவர்களை நியாயந்தீர்ப்பது பாவம். ஆயினும் மற்றவர்களுடைய பாவத்தைக் குறித்து கண்டித்து உணர்த்தி அவர்களை இரட்சிப்புக்கு நேராக வழிநடத்த நாம் தயங்கக்கூடாது. அழிந்துபோகும் ஆத்துமாவை மரணப்பாதையிலிருந்து இரட்சித்து நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்தவேண்டும்.


நம் கண்ணிலிருக்கிற உத்திரமும் பிறர் கண்ணிலிருக்கிற துரும்பும்


நீ உன் கண்ணி-ருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணி-ருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணி-ருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? (மத் 7:3,4).


மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்கு எல்லோருக்கும் தகுதியிருப்பதில்லை. ஒரு சிலர் மற்றவர்கள் செய்யும் பாவங்களை தாங்களே செய்து கொண்டு, மற்றவர்களுக்கு அவர்களுடைய குற்றங்களை உணர்த்துகிறார்.  இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களை கண்டித்து உணர்த்துவது இயலாத காரியம். இவர்களுடைய கண்டித்து உணர்த்துதலினால் எவ்விதபயனும் உண்டாகப்போவதில்லை. இவர்களுக்கு அவமானமே உண்டாகும். 


ஒரு சிலர் மற்றவர்களோடு சிறிய காரியங்களுக்குக்கூட சண்டைபோடுவார்கள். இவர்கள் மற்றவர்கள் சண்டைபோடும்போது அவர்களை சண்டைபோடக்கூடாது என்று சமாதானம் பண்ண முயற்சி செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல் மற்றவர் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறவர்கள்.  


பாவங்கள் எல்லாமே பாவங்கள்தான். ஆயினும் அதிலும் சில பாவங்கள் சிறியதென்றும், பெரியதென்றும் உள்ளன. சில பாவங்கள் உத்திரத்தைப்போல பெரியவை. சில பாவங்கள் துரும்பைப் போல சிறியவை. சில பாவங்கள் பூச்சியைப்போன்று சிறியவைகள். வேறுசில பாவங்களோ ஒட்டகத்தைப்போன்று பெரியவைகள். பாவம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் பாவம் பாவமே. தேவனுக்கு விரோதமானது எல்லாமே பாவம்தான். மற்றவர்களுடைய பாவங்களோடு ஒப்பிடும்போது நம்முடைய பாவம் நமக்கு பெரிதாக தெரியவேண்டும். மற்றவர்களுடைய பாவங்களை நாம் பெரிதுபடுத்துவதற்குப் பதிலாக நம்முடைய பாவங்களையே நாம் பெரிதுபடுத்திப் பார்க்கவேண்டும். 


ஒரு சிலர் தங்கள் கண்களில் உத்திரத்தோடு இருப்பார்கள். ஆனால் இந்த உத்திரத்தை அவர்கள் கவனிக்கமாட்டார்கள்.  பாவத்தின் சாபத்தில் இவர்கள் வீழ்ந்திருப்பார்கள். ஆயினும் அந்த சாபத்தைக் குறித்தும் உணர்வற்றவர்களாக இருப்பார்கள். தங்களை தாங்களே நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு தங்களுடைய பாவங்களுக்கு மனம் வருந்தாமல் இருப்பார்கள்.  மற்றவர்களைப் பார்க்கிலும் இவர்களே முதலாவதாக மனந்திரும்பவேண்டும். பெரிய பாவங்களுக்கு சொந்தக்காரரான இவர்கள் மற்றவர்களை எளிதாக நியாயந்தீர்க்க முன்வருவார்கள். 


பெருமையும் கிருபையின்மையும் இவர்களுடைய கண்களில் உத்திரத்தைப்போல இருக்கும். இவர்கள் மற்றவர்களை கூர்ந்து கவனித்து அவர்களை குற்றப்படுத்துவதில் வல்லவர்கள். பலர் இரகசிய பாவங்களில் ஈடுபடுகிறார்கள். இவை வெளிப்படும்போது  இந்த பாவங்களை உணர்த்தலாம். ஆயினும் பாவங்களை உணர்த்துகிறவனுக்கு ஒரு தகுதியிருக்கவேண்டும். தன்னுடைய பாவங்களுக்கு மனந்திருந்தாமல், மற்றவர்களுடைய பாவங்களை நியாயந்தீர்க்கிறவன் மாய்மாலக்காரன். இயேசுகிறிஸ்து இப்படிப்பட்டவர்களை மாயக்காரனே என அழைக்கிறார். 


முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு


மாயக்காரனே! முன்பு உன் கண்ணி-ருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணி-ருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய் (மத் 7:5). 


ஒருவன் எவ்வளவுதான் மாயக்காரனாக இருந்தாலும் அவன் செய்த பாவம் அவனை சும்மாவிடாது. அவனுடைய பாவத்திற்குரிய தண்டனை அவனுக்குக் கிடைக்கும். மாய்மாலம் பண்ணி மற்றவர்களுடைய புகழ்ச்சியை பெற்றுக்கொண்டாலும், தேவன் அவனுடைய அந்தரங்கத்தைக் காண்கிறார். தன்னுடைய கண்ணில் உத்திரம் இருக்கையில் இவன் தன் சகோதரனை நோக்கி அவன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுத்துப் போடட்டும் என்று  இவனால் சொல்ல முடியாது. தன்னைத்தான் திருத்திக்கொள்ளாமல் இவன் மற்றவர்களை திருத்த முடியாது. மற்றவர்கள் செய்யும் பாவத்தைக் கண்டு அவர்களை நட்போடு கடிந்து கூறலாம். ஆனால் அவர்களை நியாயாதிபதியைப்போல நியாயந்தீர்ப்பது நமக்கு நியமிக்கப்படவில்லை.


மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்கு முன்பாக நம்மை நாமே நியாயந்தீர்த்துக் கொள்ளவேண்டும். நம்முடைய கண்ணில் இருக்கிற உத்திரத்தை முதலாவதாக எடுத்துப் போடவேண்டும். அதன்பின்பு நம்முடைய சகோதரர் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்க்கலாம்.   நம்முடைய பாவங்களை நாம் கடிந்து கொள்ளாமல் நம்மை நாமே மன்னித்துக்கொள்கிறோம். ஆனால் மற்றவர்கள் செய்யும் பாவங்களை நாம் மன்னியாமல் அவர்களை எளிதில் நியாயந்தீர்த்து விடுகிறோம். எல்லோரும் பாவம் செய்கிறார்களென்று நாமும் பாவம் செய்யக்கூடாது. நாம் பாவம் செய்வதற்கு மற்றவர்களுடைய பாவங்களை சாக்குப்போக்காக சொல்லக்கூடாது. நாமும் திருந்தவேண்டும். மற்றவர்களையும் திருத்த வேண்டும். நமது பாவங்களைக் குறித்து நம்மை நாமே கண்டித்து உணர்த்தவேண்டும். மற்றவர்களுடைய பாவங்களைக் குறித்தும் கண்டித்த உணர்த்தவேண்டும். மற்றவர்களை குற்றப்படுத்துகிற நாம் குற்றமற்றவர்களாக இருக்கவேண்டும். ஆசரிப்புக்கூடாரத்தில் தூபம் காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட  தூபகரண்டி பசும்பொன்னால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.


பரிசுத்தமானதை நாய்களுக்கு கொடாதேயுங்கள்


பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும் (மத் 7:6).


எல்லோரையும் கடிந்து கொள்ள வேண்டும் என்னும் அவசியமில்லை. கடிந்து கொள்ளப்படுவதற்கு எல்லோரும் பாத்திரவான்களுமல்ல. பரிசுத்தமானதை நாய்களுக்கு கொடுக்கக்கூடாது. பாவத்தைக்குறித்து கண்டித்து உணர்த்தும்போது பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலை நாம் நாடவேண்டும். வழியில் போவோரையும் வருவோரையும் கண்டித்து உணர்த்திக் கொண்டிருக்கக்கூடாது. பன்றிகள் முன் முத்துக்களைப் போட்டால்  தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக் கொண்டு நம்மைப் பீறிப்போடும். நாய்களும் பன்றிகளும் அசுத்தமானவை. அவைகளுக்கு பரிசுத்தமானவைகளை கொடுக்கக்கூடாது. நல்ல ஆலோசனைகளும், பாவத்தைக்குறித்து கடிந்து கொள்வதும் பரிசுத்தமான காரியம். இது முத்தைப்போன்றது. இவை தேவனுடைய பிரமாணங்கள். 


ஒரு சிலர் துன்மார்க்கரின் பாதைகளில் நடக்கிறார்கள். பாவிகள் உட்காரும் இடத்தில் உட்காருகிறார்கள். இவர்கள் பாவத்தைக் குறித்து கடிந்து கூறுவதை ஏற்றுக் கொள்வதுமில்லை. விரும்புவதுமில்லை. தங்களுடைய சொந்த வழிகளில் ஜீவிக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். பாவத்தைக் குறித்து கடிந்து கூறுவது இவர்களுக்கு அருவருப்பாக இருக்கும். ஒரு நாயையோ, அல்லது ஒரு பன்றியையோ கடிந்து கூறினால் அது திருப்பி நம்மைக் கடிக்க வரும்.  துன்மார்க்கரிடம் பாவத்தைக்குறித்து கடிந்து கூறும்போது அவர்கள் பதிலுக்கு நம்மைத் தாக்குவார்கள். திருந்தமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களிடம் பாவத்தைக் குறித்து கடிந்து கூறவேண்டிய அவசியமில்லை. இவர்களுடைய வியாதியை குணமாக்கும் மருந்து இல்லை. இவர்களுக்கு யாரும் வைத்தியமும் பார்க்கமுடியாது. வைத்தியம் பார்க்கிறவரையே காயப்படுத்திவிடுவார்கள். பிள்ளைகளின் அப்பங்களை எடுத்து நாய்களுக்கு போடக்கூடாது. 


நாம் பாவத்தைக் குறித்து கடிந்து கூறும்போது யாரிடம் கூறுகிறோம் என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும். மனந்திருந்தக்கூடியவர்களிடம் அவர்களுடைய பாவங்களைக் குறித்து உணர்த்தவேண்டும். எத்தனை தரம் உணர்த்தினாலும் தங்களுடைய பாவங்களுக்கு மனந்திருந்தாதவர்களை கர்த்தரிடத்தில் ஒப்படைத்துவிடவேண்டும். தம்முடைய பிள்ளைகளை நாய்களும் பன்றிகளும் பீறிப்போடுவதை கர்த்தர் விரும்பவில்லை. அவர் தமது பிள்ளைகள் மீது கிருபையுள்ளவராகவும் அன்புள்ளவராகவும் இருக்கிறார். தமது பிள்ளைகளை பாதுகாக்க விரும்புகிறார். ஆகையினால் கர்த்தருடைய வழிநடத்துதல் இல்லாமல் யாரிடத்திலும் போய் அவர்களுடைய பாவங்களை உணர்த்துகிறேன் என்று கூறி உபத்திரவத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது.


சத்தியத்திற்கு எதிராக கலகம் பண்ணுகிறவர்களிடம் சத்தியத்தை வலியுறுத்தக்கூடாது. பரிசுத்தமான காரியங்களில் குற்றம் கண்டு பிடிக்கிறவர்களிடத்திலும், தீமையான காரியங்களைப் பேசுகிறவர்களிடத்திலும் பரிசுத்தமானவற்றைக் கொடுக்கக்கூடாது.


""நாய்கள்'' உருவகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிற இடங்கள்


    1. வேசிப்பணையம் (உபா 23:18)


    2. ஏமாற்றுதல் (1சாமு  17:43; 1சாமு 24:14; 2சாமு 9:8; 2சாமு 16:9;          2இராஜா 8:13)


    3. சாத்தானின் வல்லமை (சங் 22:20)


    4. துன்மார்க்கன் (சங் 22:16; சங் 59:6,14)


    5. கள்ளத்தீர்க்கதரிசி (ஏசா 56:10; பிலி 3:2)


    6. ஏமாற்றும் ஜனங்கள் (மத் 7:6; வெளி 22:15)


    7. மூடர் (நீதி 26:11)


    8. புறஜாதியார் (மத் 15:26-27; மாற்கு 7:27-28)


    9. பின்மாறிப்போனவர்கள் (2பேதுரு 2:20-23)


""பன்றிகள்'' உருவகமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிற இடங்கள்


    1. மதிகேடாய் நடக்கிற ஸ்திரீ (நீதி 11:22)


    2. ஏமாற்றும் ஜனங்கள் (மத் 7:6)


    3. பின்மாறிப்போனவர்கள்.  (2பேதுரு 2:20-22)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.