இயேசுவின் சீஷர்கள் THE DISCIPLES OF JESUS CHRIST (Tamil Bible Study)
சீஷர்களின் அழைப்பு I
2 . நான்கு மீனவர்கள் இயேசுவை பின்பற்றி செல்கிறார்கள் (மத்தேயு 4:18-22; மாற்கு 1:16-20)
சீமோனும் அந்திரேயாவும்
இயேசு க-லேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கட-ல் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: (மத் 4:18)
இயேசுகிறிஸ்து தமது பிரசங்க ஊழியத்தை ஆரம்பிக்கும்போது தம்முடைய சீஷர்களை கூட்டிச் சேர்க்க ஆரம்பிக்கிறார். இவர்கள் இயேசுகிறிஸ்துவின் பிரசங்கத்தை இப்போது கேட்கவேண்டும். பின்பு இவர்களும் பிரசங்கம் பண்ணவேண்டும். இந்த வசனப்பகுதியில் இயேசுகிறிஸ்து தம்மோடு கூட இருக்கவும் தம்மை பின்பற்றவும் அழைத்த முதலாவது சீஷர்களைப்பற்றிய விவரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை தெரிந்தெடுக்கும்போது பொதுவான அழைப்பு கொடுக்காமல் தனிப்பட்ட முறையில் தனி நபர்களுக்கு அழைப்பு கொடுக்கிறார். மனந்திரும்புங்கள் என்னும் பிரசங்கம் எல்லோருக்கும் உரியது. ஆனால் என் பின்னே வாருங்கள் என்று இயேசு கூறியது அவருடைய சீஷர்களுக்கு மட்டுமே உரியது. இயேசுகிறிஸ்துவின் சீஷர்களாக இருக்குமாறு பிதாவானவர் அவர்களை குமாரனுக்கு கொடுத்திருக்கிறார். சுவிசேஷ பிரசங்கம் எல்லாருக்கும் உரியது. இரட்சிக்கப்பட வேண்டும் என்னும் அழைப்பு எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த சீஷர்களோ விசேஷமாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை அழைத்து, தமது ஊழியத்தை செய்வதற்காக அவர்களை நியமித்து பிரதிஷ்டை பண்ணுகிறார்.
இயேசுகிறிஸ்து நல்ல போதகர். உபதேசம் பண்ணுகிறவர். தமது ஊழியத்தின் கலாசாலையை இயேசுகிறிஸ்து ஆரம்பிக்கும்போது அதில் பயிற்சி பெறும் மாணவர்களையும் சேர்க்கிறார். இந்த மாணவர்கள் இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களை கவனமாக கேட்டு ஆவிக்குரிய பயிற்சி பெற்றுக்கொள்ளவேண்டும்.
இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை கலிலேயா கடலோரமாய் அழைக்கிறார். இயேசுகிறிஸ்து இந்த கடலோரமாய் நடந்து போகிறார். தமது சீஷர்களை அழைப்பதற்கு இயேசுகிறிஸ்து ஏரோதுவின் அரண்மனைக்கு போகவில்லை. பிரபுக்களும் முக்கியஸ்தர்களும் ராஜாவின் அரண்மனையில் இருப்பார்கள். இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை தேடி எருசலேமுக்கும் போகவில்லை. எருசலேமில்தான் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து இந்த பிலபல்யமான இடங்களுக்குப் போகாமல் கலிலேயா கடலோரமாக தமது சீஷர்களை தேடி நடந்து போகிறார். மனுஷர் பார்க்கிற பிரகாரமாக இயேசுகிறிஸ்து பார்ப்பதில்லை. மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். தேவனோ நமது இருதயத்தை பார்க்கிறார்.
யூதேயா தேசத்தின் ஓர் ஓரத்தில் கலிலேயா இருக்கிறது. இங்குள்ள ஜனங்கள் படிப்பறிவு பெற்ற ஞானிகளல்ல. இவர்களுடைய சுபாவங்களும் நாகரிகமானவையல்ல. இவர்களுடைய பேச்சுக்களும் தெளிவாகயிராது. இவர்களுடைய பேச்சே வித்தியாசமாக இருக்கும். இவர்கள் பேசுவதை வைத்து இவர்களை கலிலேயா ஊரைச்சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்துவிடலாம். முரட்டுத்தனமாக வேலை செய்யக்கூடியவர்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் வாழும் இடத்திற்குத்தான் இயேசுகிறிஸ்து செல்கிறார். அங்கு தமது சீஷர்களை அழைக்கிறார். இந்த உலகத்தின் ஞானத்தை வெட்கப்படுத்துவதற்காக பைத்தியமானவற்றை தேவன் தெரிந்துகொள்கிறார்.
சீமோனும் அந்திரேயாவும் சகோதரர்கள். இவர்களைப்போலவே யாக்கோபும் யோவானும் சகோதரர்கள். இவர்களெல்லாரும் யோவான்ஸ்நானனின் சீஷர்களாக இருந்தவர்கள். இவர்கள் ஏற்கெனவே யோவான்ஸ்நானனின் உபதேசத்தை கேட்டு அவனை பின்பற்றியவர்கள். மனந்திரும்புதலின் உபதேசத்தை கேட்டு மனந்திரும்பியவர்கள். தங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறவர்களை விசுவாசத்தின் சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அழைக்க வேண்டும்.
இவர்களெல்லாருமே சகோதரர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். தேவனுடைய ஊழியக்காரர்களெல்லாருமே கர்த்தருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள். கர்த்தருடைய குடும்பம் ஒரே குடும்பம்.
இவர்களெல்லாரும் மீன் பிடிக்கிறவர்கள். ஐசுவரியவான்களல்ல. சாதாரண ஏழைகள். இவர்களுக்கென்று அசையும் சொத்தோ, அசையா சொத்தோ அதிகஅளவில் சேர்த்து வைக்கப்படவில்லை. இவர்கள் ஐசுவரியவான்களாக இருந்திருந்தால் மீன் பிடிக்கும் தொழிலை செய்யமாட்டார்கள். எப்போதாவது பொழுதுபோக்குக்காக மீன் பிடிப்பார்கள். ஆனால் இவர்களோ மீன் பிடிப்பதையே தங்கள் தொழிலாக கொண்டிருக்கிறவர்கள். இயேசுகிறிஸ்து ஏழைகளை ஒதுக்கி தள்ளிவிடவில்லை. நாமும் ஏழைகளை ஒதுக்கிவிடக்கூடாது.
இயேசுவின் சீஷர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள். தமது ஊழியத்தை செய்வதற்கு இயேசுகிறிஸ்து கல்வியறிவு இல்லாதவர்களை தெரிந்தெடுக்கிறார். இவர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்யக்கூடியவர்கள். நமக்கு கொடுக்கப்படும் வேலையை உண்மையோடும் உத்திரவாதத்தோடும் செய்யும்பொழுது கர்த்தர் நம்மீது பிரியமாக இருக்கிறார். கண்ணியமான வேலை பரிசுத்த ஜீவியத்திற்கு எப்போதும் இடையூறாக இருப்பதில்லை. சோம்பேறியாக இருக்கிறவன் சாத்தானுடைய சோதனைகளில் சிக்கிக்கொள்ளுவான். தேவனுடைய அழைப்பு அவனுடைய காதுகளில் விழாது.
இயேசுவின் சீஷர்கள் செய்யும் வேலை மிகவும் கடினமானது. எல்லா வேலைகளை விட மீன் பிடிக்கும் வேலை கடினமான வேலையாகும். இவர்கள் எப்போதுமே தண்ணீரில் நனைந்தவர்களாக இருப்பார்கள். மீன் பிடிக்கும் போது வலைகளை வீசிவிட்டு மிகுந்த கவனத்தோடு காத்துக்கொண்டிருப்பார்கள். படகை கடலில் செலுத்துவது, வலையை வீசுவது, வலையை இழுப்பது ஆகிய இவர்களுடைய வேலைகள் எல்லாமே மிகவும் கடினமானவை. சில சமயங்களில் இவர்களுக்கு கடல் தண்ணீரினால் ஆபத்தும் உண்டாகும். கடினமான வேலைகளை செய்து பழக்கமுடையவர்கள் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தை செய்வதற்கு ஏற்றவர்கள். எந்த வேலையையும் தயங்காமல் செய்வார்கள். கடினமாக உழைக்கிறவர்களையே இயேசுகிறிஸ்து தமது சீஷர்களாக தெரிந்தெடுக்கிறார். இயேசுகிறிஸ்துவின் போர்வீரர்களாக இருக்கிறவர்கள் எல்லாவிதமான கடினமான வேலைகளையும் செய்வதற்கு ஆயத்தத்துடன் இருக்கவேண்டும்.
சீமோனும் அந்திரேயாவும் கடலில் வலை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். யாக்கோபும் யோவானும் தங்கள் வலைகளை பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய தொழில். தங்களுடைய வேலைகளை இவர்கள் ஓய்வில்லாமல் திறமையாக செய்துகொண்டிருக்கிறார்கள். வலைகள் பழுதடைந்தவுடன் யாக்கோபும் யோவானும் தங்கள் தகப்பனாராகிய செபதேயுவிடம் சென்று புதிய வலை வாங்குவதற்காக பணம் கேட்டு அவரை தொந்தரவு பண்ணவில்லை. தங்களுடைய பழைய வலைகளை பழுதுபார்த்து மறுபடியும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கடினமாக உழைக்கிறார்கள். நம்மிடம் உள்ள பொருட்களை நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும். சிறிய பழுதுகள் இருக்குமென்றால் அதை சரி செய்து பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
யாக்கோபும் யோவானும் அவர்களுடைய தகப்பனாகிய செபதேயுவோடு இருக்கிறார்கள். அவருக்கு உதவிபுரிகிறார்கள். பிள்ளைகள் பெற்றோருக்கு உதவிபுரிவது நல்ல சுபாவமாகும். பெற்றோரின் வேலைகளை பிள்ளைகள் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
இயேசுகிறிஸ்து கடினமாக உழைக்கும் இந்த நான்கு பேரையும் தமது சீஷர்களாக அழைக்கிறார். இவர்கள் நால்வருமே சும்மாயிருக்கும் சோம்பேறிகளல்ல. தங்களுடைய வேலைகளை கவனமாக பார்த்துக்கொண்டிருக்கிறவர்கள். இயேசுகிறிஸ்து மறுபடியும் இந்த பூமிக்கு வரும்போது நாமும் சும்மா இருக்கக்கூடாது. கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் ஊழியத்தை கவனமாக செய்து கொண்டிருக்கவேண்டும். இவர்கள் வெவ்வேறு வேலைகளை செய்கிறார்கள். சீமோனும் அந்திரேயாவும் கடலில் வலை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். யாக்கோபும் யோவானும் தங்கள் வலைகளை பழுதுபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப்போல கர்த்தருடைய ஊழியக்காரர்களும் கர்த்தர் தங்களுக்கு கொடுக்கும் ஊழியங்களை உண்மையோடு செய்யவேண்டும். உபதேசம் பண்ணவேண்டிய சமயத்தில் உபதேசம் பண்ணவேண்டும். வசனத்தை தியானம் பண்ணவேண்டிய சமயத்தில் தியானம் பண்ணவேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுள்ளது. வலையை பழுதுபார்க்காமல் மீன் பிடிக்கமுடியாது. வசனத்தை தியானம் பண்ணாமல் அதை பிரசங்கம் பண்ணமுடியாது.
""க-லேயாக் கடல்'' என்பதற்கு திபேரியாக்கடல், கெனேசரேத்துக்கடல் என்று மறுபெயர்களும் இதற்கு உண்டு. இதிலுள்ள தண்ணீர் சுத்தமாக இருக்கும்.
அந்திரேயா இயேசு கிறிஸ்துவின் முதலாவது சீஷன். (யோவான் 1:33-42) தன்னுடைய சகோதரன் பேதுருவை இயேசு சீஷனாக அழைக்கும் வரையிலும் அவன் மீன்பிடித்துக் கொண்டிருந்தான். (மத் 4:18; மாற்கு 1:17) பன்னிரெண்டு சீஷர்களில் ஒருவன். (மத் 10:2; மாற்கு 3:18; லூக்கா 6:14; அப் 1:13) அந்திரேயாவைப் பற்றி மாற்கு 1:29; மாற்கு 13:3; யோவான் 6:8; யோவான் 12:22 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. வரலாற்றின் பிரகாரம் இவன் ரூபன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். சீத்தியா என்னும் இரஷ்ய தேசத்துப் பகுதியில் கர்த்தருக்கு ஊழியம் செய்தான். இவனை அங்கு கல்லெறிந்தார்கள். கிரேக்கம், அல்லது சீத்தியாவில் அந்திரேயா சிலுவையில் அறையப்பட்டான் என்று வரலாறு கூறுகிறது.
என் பின்னே வாருங்கள்
என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள் (மத் 4:19,20).
இயேசுகிறிஸ்து இவர்களை பார்த்து ""என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்துவை பின்பற்றுமாறு அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் அவருக்கு அருகில் செல்ல வேண்டும். மீன்களை பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களுக்கு மனுஷரைப் பிடிக்கும் புதிய வேலையை இயேசுகிறிஸ்து கொடுக்கிறார். புதிய ஊழியம் வந்தவுடன் மனதில் பெருமை உண்டாகக்கூடாது. இவர்கள் முன்பு மீன்களை பிடித்தார்கள். இனிமேல் மனுஷரைப் பிடிக்கப் போகிறார்கள். இரண்டுமே பிடிக்கிற வேலைதான் என்று நினைத்து பெருமையை அகற்றவேண்டும். புதிய வேலை வந்தவுடன் பயந்துவிடக்கூடாது. அந்த வேலையை நமக்கு செய்யத் தெரியாது என்று பயப்படக்கூடாது. இவர்களுக்கு ஏற்கெனவே மீன்பிடிப்பதில் பழக்கமுள்ளது. இனிமேல் மனுஷரைப் பிடிக்கப்போகிறார்கள். இரண்டுமே பிடிக்கும் வேலைதான் என்று நினைத்து தங்களுக்கு கொடுக்கப்படும் வேலையை உண்மையோடு செய்யவேண்டும்.
கர்த்தருடைய ஊழியக்காரர்கள் மனுஷரைப் பிடிக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மனுஷரை அழித்துப்போடக் கூடாது. அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு அவர்களை வழிநடத்தவேண்டும். பாவத்தில் விழுந்திருப்பவர்களை தூக்கியெடுக்கவேண்டும். சாத்தானின் ஆளுகைக்கு உட்பட்டிருப்பவர்களை கர்த்தருடைய ஆளுகைக்கு அழைத்து வரவேண்டும். மீன் பிடிக்கிறவர்கள் தங்கள் சொந்த முயற்சியினால் மனுஷரைப் பிடிக்கிறவர்களாக ஆகமுடியாது. இயேசுகிறிஸ்துவே அவர்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக ஆக்குகிறார். நம்மை அழைத்த தேவனே அவருடைய ஊழியத்தை செய்வதற்கு நம்மை தகுதிப்படுத்துகிறார். ஊழியத்தில் வெற்றியை தருகிறார்.
மீன் பிடிக்கிறவர்கள் மனுஷரைப் பிடிக்கவேண்டுமென்றால் முதலாவதாக இயேசுவின் பின்னே வரவேண்டும். தங்கள் கவனத்தை இயேசுவின் மீது செலுத்தவேண்டும். இயேசுவுக்காக ஊழியம் செய்ய விரும்புகிறவர்கள் முதலாவதாக அவரைப் பின்பற்ற பழகிக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவைப்பற்றி பிரசங்கம் பண்ணவிரும்புகிறவர்கள் முதலாவதாக அவரைப் பற்றி கற்றுக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவோடு நெருங்கிய ஐக்கியத்தில் இருக்கவேண்டுமென்று விரும்புகிறவர்கள், முதலாவதாக அவருக்கு அருகில் சென்று அவரைப் பின்பற்றவேண்டும். இயேசுகிறிஸ்துவை பின்பற்றும்போது சீஷர்கள் பல சத்தியங்களை கற்றுக்கொள்ளலாம். சத்தியங்களை கற்றுக்கொள்வதற்கு இயேசுவை பின்பற்றுவதை விட பெரிய வேதபாடசாலை வேறு எதுவுமில்லை. மனுஷரை பிடிக்கிறவர்கள் முதலாவதாக இயேசுவின் பின்னே வரவேண்டும். இயேசுகிறிஸ்துவைப் போல அவருடைய ஊழியக்காரர்களும் தங்களுக்கு கொடுக்கப்படும் ஊழியங்களில் உண்மையோடும், கரிசனையோடும் ஆர்வத்தோடும் ஈடுபடவேண்டும்.
சுவிசேஷ ஊழியம் செய்வது மீன்களைப் பிடிப்பதற்கு ஒப்பிட்டுக் கூறப்பட்டிருக்கிறது. பின்னே வாருங்கள் என்பது சீஷத்துவத்தைக் குறிக்கும் வாக்கியம். (2இராஜா 6:19) சீஷர்கள் உடனே தங்கள் வலைகளை விட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். தங்களுடைய சொத்துக்களை, தாங்கள் நம்பியிருந்த உபகரணங்களை விட்டுவிட்டு, இயேசுவிற்குப் பின்சென்றார்கள். தங்கள் ஜீவியத்தில் கர்த்தருக்கு முதலிடம் கொடுத்தார்கள். (மத் 19:27-30; லூக்கா 14:33)
யாக்கோபும் யோவானும்
அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவி-ருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள் (மத் 4:21,22).
பேதுருவையும் அந்திரேயாவையும் இயேசுகிறிஸ்து அழைத்தவுடன் அவர்கள் தங்களுடைய வலைகளை விட்டு விட்டு அவருக்குப் பின் சென்றார்கள் (மத் 4:20). யாக்கோபையும் யோவானையும் இயேசுகிறிஸ்து அழைத்தவுடன் அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு விட்டு அவருக்குப் பின் சென்றார்கள் (மத் 4:22). இந்த நான்குபேருமே இயேசுகிறிஸ்துவின் அழைப்பை ஏற்று அவரைப் பின்பற்றினார்கள். இயேசுவை பின்பற்ற விரும்புகிறவர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றவேண்டும்.
இயேசுவை பின்பற்றும்போது அவருடைய கிருபை நமக்குப் போதுமென்று நினைக்கவேண்டும். அவருடைய கிருபையையே நாம் சார்ந்திருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து அழைத்தவுடன் நான்கு மீனவர்களும் அவருக்குப் பின் செல்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் வார்த்தை வல்லமையுள்ளது. கிறிஸ்துவின் கட்டளைக்கு இவர்கள் கீழ்ப்படிகிறார்கள். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் அவருடைய அழைப்புக்கு எப்போதும் கீழ்ப்படியவேண்டும். எங்கு வழிநடத்தினாலும், எந்த ஊழியத்தை செய்யுமாறு கட்டளையிட்டாலும் கீழ்ப்படியவேண்டும். ஆபிரகாமை தேவன் அழைத்தபோது, தான் போகும் இடம் எது என்று தெரியாமலேயே அவர் கர்த்தரை நம்பி புறப்பட்டுப்போனார். கர்த்தருடைய ஊழியக்காரர்களிடம் இப்படிப்பட்ட விசுவாசமும் கீழ்ப்படிதலும் காணப்படவேண்டும்.
""யாக்கோபு'' யோவானின் சகோதரன். செபெதேயுவின் மகன். (மத் 4:21; மத் 20:20; மாற்கு 1:19; லூக்கா 5:10-11) பன்னிரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவன். (மத் 10:2; மாற்கு 3:17; லூக்கா 6:14; அப் 1:13) இயேசு கிறிஸ்துவிடம் மிகவும் நெருக்கமாக இருந்த மூவரில் ஒருவன். (மாற்கு 5:37; மத் 17:1-8; மத் 26:36-46, மாற்கு 13:3-4; லூக்கா 9:54; யோவான் 21:1-14)) அப்போஸ்தலர்களில் இரத்தச்சாட்சியாக முதலாவது மரித்தவன். (அப் 12:1-2) வரலாற்றின் பிரகாரம் தன் தந்தை வழியில் இவன் லேவி கோத்திரத்தான். தன் தாயார் வழியில் யூதா கோத்திரத்தான். இவனும் பேதுருவும், இந்தியாவில் சிறிது காலம் ஊழியம் செய்ததாகவும், பின்பு ஸ்பெயின் தேசத்தில் ஊழியம் செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.