இயேசுவின் சீஷர்கள் THE DISCIPLES OF JESUS CHRIST (Tamil Bible Study) Lesson - I சீஷர்களின் அழைப்பு 1 . இயேசுவை பின்பற்றிய முதலாவது சீஷர்கள் (யோவான் 1:35-51)

 

இயேசுவின் சீஷர்கள் THE DISCIPLES OF JESUS CHRIST (Tamil Bible Study)

Lesson - I சீஷர்களின் அழைப்பு


1 . இயேசுவை பின்பற்றிய முதலாவது சீஷர்கள் (யோவான் 1:35-51)


இதோ, தேவஆட்டுக்குட்டி


மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும் போது,  இயேசு நடந்து போகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான் (யோவா 1:35,36). 


மறுநாளிலே யோவான்ஸ்நானன் இயேசுகிறிஸ்துவைக்குறித்து மறுபடியும் சாட்சி கூறுகிறான். இயேசு நடந்துபோகிறதை அவன் காண்கிறான். தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேரோடு யோவான்ஸ்நானன்  பேசிக்கொண்டிருப்பதுபோல தெரிகிறது. அந்த சமயத்தில் இயேசுகிறிஸ்து நடந்து போகிறதை அவன் காண்கிறான். இது சாதாரணமாக பார்க்கும் பார்வையல்ல. நம்முடைய கண்களை ஒரு காரியத்தின்மீது  நிலைவரப்படுத்தி, கூர்ந்து கவனிப்பது போன்ற பார்வையாகும். இது போலவே யோவான்ஸ்நானன் தன் கண்களின் பார்வையை இயேசுவின்மீது பதிக்கிறான். மற்றவர்களை இயேசுகிறிஸ்துவிடம் வழிநடத்துகிறவர்கள் இயேசுவோடு நெருங்கிய ஐக்கியத்தில் இருக்கவேண்டும். தங்களுடைய ஆவியில்  அவருக்கு அருகாமையில் இருக்கவேண்டும். தங்களுடைய பிரகாசமுள்ள மனக்கண்களினால் அவரை எப்போதும் தரிசித்துக் கொண்டேயிருக்க வேண்டும். 


ஒரு நாளுக்கு முன்பு இயேசுகிறிஸ்துவைக்குறித்து யோவான்ஸ்நானன் கூறிய அதே சாட்சியை இப்போது இங்கு மறுபடியும் கூறுகிறான். உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பதற்காக இயேசுகிறிஸ்து பலியாக செலுத்தப்பட்டிருக்கிறார். கர்த்தருடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் இந்த சத்தியத்தை வலியுறுத்திக் கூறவேண்டும்.  இயேசுகிறிஸ்து தேவஆட்டுக்குட்டியாக இருக்கிறார். நம்முடைய பாவங்களை சுமந்து தீர்ப்பதற்காக அவர் கல்வாரி சிலுவையில் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார். நம்மை மீட்பதற்காக இயேசுகிறிஸ்து தம்முடைய சுயஇரத்தத்தை சிந்தினார். 


தன்னுடைய சீஷர்களில் இரண்டுபேர் இப்போது இயேசுகிறிஸ்துவோடு நிற்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசுகிறிஸ்துவைப்பற்றிய நற்சாட்சியை யோவான்ஸ்நானன் தன்னுடைய சீஷர்களிடம் கூறுகிறான். அவர்கள் இருவரையும் இயேசுகிறிஸ்துவின் ஆளுகைக்கும் வழிநடத்துதலுக்கும் ஒப்புக்கொடுக்க ஆயத்தமாக இருக்கிறான். தன்னுடைய சீஷர்கள் இயேசுவைப் பின்பற்றி போய்விட்டால் தனக்கு சீஷர்களின் எண்ணிக்கையில் இழப்பு நேரிடுமே என்று யோவான்ஸ்நானன் சிறிதும் வருத்தப்படவில்லை. 


தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மேற்படிப்புக்காக பெரிய கல்லூரிகளுக்கு செல்லும்போது, ஆசிரியர்கள் அவர்களை சந்தோஷமாக அனுப்பி வைப்பதுபோல, யோவான்ஸ்நானனும் தன்னுடைய இரண்டு சீஷர்களை இயேசுவோடுகூட அனுப்பி வைக்கிறான்.


யோவான்ஸ்நானன் தனக்காக சீஷர்களை  கூட்டிச்சேர்க்கவில்லை. இயேசுகிறிஸ்துவுக்காகவே அவன் தன்னிடத்தில் சீஷர்களை கூட்டிச்சேர்த்திருக்கிறான். ஆகையினால் வாய்ப்பு வரும்போது தன் சீஷர்களை இயேசுகிறிஸ்துவிடம் சந்தோஷமாக அனுப்பி      வைக்கிறான். இருதயத்தில் தாழ்மையுள்ளவர்கள் உதாரத்துவ குணமுள்ளவர்களாயிருப்பார்கள். எந்தவித பயமுமில்லாமல் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்பார்கள். இதனால் தங்களுக்கு இழப்பு நேரிட்டாலும் அதை இழப்பாக கருதமாட்டார்கள். 


யோவானுடைய சீஷரில் இரண்டுபேர்களில் ஒருவன் அந்திரேயா, மற்றவன் அப்போஸ்தலனாகிய யோவானாக இருக்க வேண்டும். இந்தப் புஸ்தகத்தில் இவனுடைய பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை.   


இயேசுவுக்குப் பின்சென்றார்கள்


அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்   (யோவா 1:37).


யோவான்ஸ்நானன் தங்களுடைய சீஷர்களில் இரண்டுபேரை இயேசுகிறிஸ்துவோடு அனுப்பி வைக்கிறான். அவர்களில் ஒருவன் மேலும் ஒரு சீஷரை இயேசுகிறிஸ்துவிடம் அழைத்து வருகிறான். இவர்களே இயேசுகிறிஸ்துவினுடைய சீஷர்களில் முதற்பலனாக இருக்கிறார்கள். 


அந்திரேயாவும், மற்றொரு சீஷனும் யோவான்ஸ்நானனுடைய சீஷர்களாக இருந்தார்கள். இவர்கள் இருவரையும் யோவான்ஸ்நானன் இயேசுவோடு அனுப்பி வைக்கிறான். மற்றொரு சீஷனுடைய பெயர் வேத வசனத்தில் குறிப்பிடப்படவில்லை. 


இயேசுகிறிஸ்துவைக்குறித்து யோவான்ஸ்நானன் ""இதோ, தேவஆட்டுக்குட்டி'' என்று கூறுகிறான். அப்படிச்சொன்னதை அவனுடைய சீஷர்களில் இவ்விரண்டு பேரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டி என்று யோவான்ஸ்நானன் அவரைக்குறித்து சாட்சியாக அறிவிக்கிறான்.  இதைக்கேட்ட அவனுடைய சீஷரில் இவ்விரண்டு பேரும் இயேசுவுக்குப் பின் செல்கிறார்கள். 


என்ன தேடுகிறீர்கள்


இயேசு திரும்பி, அவர்கள் பின் செல்லுகிறதைக் கண்டு: என்னை தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்  (யோவா 1:38). 


தம்மோடு இவ்விரண்டு சீஷர்களும் பின்வருவதை இயேசுகிறிஸ்து கவனிக்கிறார். திரும்பிப்பார்த்து அவர்கள் இருவரும் தமக்குப் பின்செல்கிறதைக் காண்கிறார். ஒரு ஆத்துமா தம்மை நோக்கி வரும்போது இயேசுகிறிஸ்து அதை உடனடியாக கவனிக்கிறார். நாம் அவரோடு முதலில் பேசவேண்டுமென்று அவர் ஒருபோதும் காத்திருக்கமாட்டார். அவரே நம்மிடத்தில் முதலாவதாகப் பேசுவதற்கு முன்வருவார். ஒரு ஆத்துமாவுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையே சம்பாஷணை நடைபெறும்போது, இதில் இயேசுகிறிஸ்துவே சம்பாஷணையை துவக்குகிறவராக இருப்பார்.  இங்கும் இதுபோன்ற பொதுவான நிலமையே காணப்படுகிறது. இயேசுகிறிஸ்து இவ்விரண்டு சீஷர்களையும் கண்டு ""என்ன தேடுகிறீர்கள்'' என்று கேட்கிறார்.


இயேசுகிறிஸ்துவின் வார்த்தை அவர்களை தம்மிடத்தில் அன்போடு அழைப்பது போன்றுள்ளது. தம்மிடத்தில் நெருங்கி பழகுமாறும், தம்மோடு தயக்கமில்லாமல் பேசுமாறும் இயேசு அவர்களுக்கு அழைப்புக் கொடுக்கிறார். அவர்களுடைய மனதில் தோன்றும் எண்ணங்கள் எல்லாவற்றையும் அவர்கள் தயக்கமில்லாமல் இயேசுகிறிஸ்துவோடு  பகிர்ந்து கூறலாம். 


இயேசுகிறிஸ்துவுக்காக ஆத்தும ஆதாயம் செய்கிறவர்கள் இயேசுகிறிஸ்துவின் இந்த முன்மாதிரியைப் பின்பற்றவேண்டும். தங்களுடைய சுபாவங்களை தாழ்மையோடும், மென்மையாகவும், மற்றவர்கள் தங்களோடு எளிதில் நெருங்கிப் பழகும் விதத்திலும் அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்ற ஆத்துமாக்கள் நம்மிடத்தில் தயக்கமில்லாமல் வருவார்கள். 


இயேசுகிறிஸ்து இவ்விரண்டு சீஷர்களிடம்  ""என்ன தேடுகிறீர்கள்'' என்று கேட்டதுபோலவே,  நாமும் இயேசுகிறிஸ்துவை பின்பற்றும்போது இதே கேள்வியை நம்மிடத்தில் கேட்டுக்கொள்ள வேண்டும். ""நாம் என்ன தேடுகிறோம்'' என்னும் கேள்வியை நம்முடைய உள்ளத்தில் கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதினால் நம்முடைய நோக்கம் என்ன, நம்முடைய திட்டம் என்ன, நம்முடைய ஆவல் என்ன. நாம் ஒரு போதகரைத் தேடுகிறோமா, ஒரு ஆண்டவரைத் தேடுகிறோமா, நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு ஒரு இரட்சகரைத் தேடுகிறோமா? இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றும்போது தேவனுடைய ஆசீர்வாதங்களையும், கிருபைகளையும், சிலாக்கியங்களையும் தேடுகிறோமா, நம்முடைய ஆத்துமாக்களுக்கு நித்திய ஜீவனைத் தேடுகிறோமா? இது போன்ற கேள்விகளை நமக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டும். 


யோவானுடைய சீஷர்கள் இயேசுகிறிஸ்துவிடம் மிகவும் கண்ணியமாக அவருடைய வாசஸ்தலத்தைக் குறித்து கேட்கிறார்கள். ""ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்''  என்பது இவர்களுடைய கேள்வி. இவ்விரண்டு சீஷர்களும் இயேசுகிறிஸ்துவை ""ரபீ'' என்று அழைப்பதன் மூலமாக அவரை தங்களுடைய போதகராக அங்கீகரிக்கிறார்கள்.     அவருடைய உபதேசத்தை கேட்பதற்காகவும், அவரிடத்திலிருந்து கற்றுக்கொள்வதற்காகவும் தாங்கள் வந்திருப்பதாக அறிவிக்கிறார்கள். இயேசுவை ""ரபீ'' என்று அழைக்கும்போது அவரை தங்கள் ஆண்டவராகவும் அங்கீகரிக்கிறார்கள். இயேசுகிறிஸ்து அவர்களுக்கு போதகராகவும் ஆண்டவராகவும் இருக்கிறார். இவர்கள் இருவரும் இயேசுகிறிஸ்துவின் மாணாக்கராக  அவரிடம் வருகிறார்கள். இவர்களிடத்தில் கற்றுக்கொள்ளும் ஆவி இருக்கிறது. இவர்களைப்போலவே இயேசுகிறிஸ்துவிடம் வரும் நம் அனைவரிடத்திலும் கற்றுக்கொள்ளும் ஆவி இருக்கவேண்டும். நாம் அவருடைய மாணாக்கராக இருக்கவேண்டும். அவருடைய பாதபடியில் அமர்ந்திருந்து அவருடைய உபதேசங்களைக் கேட்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து எங்கே தங்கியிருக்கிறார் என்று இவர்கள் இருவரும் கேட்கும்போது, அவரோடு இவர்கள் நெருங்கிப் பழக ஆவலாக இருப்பது தெரியவருகிறது. அவர் அங்கீகரிக்கும் காலத்தில், இவ்விரண்டு சீஷர்களும் அவரோடுகூட தங்கியிருந்து, அவருடைய உபதேசத்தை கேட்டு, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். இவ்விருவரும் மிகவும் கண்ணியமாகவும், பணிவாகவும், நாகரீகமாகவும் பழகுகிறார்கள். இவர்களிடத்தில் நல்ல குணாதிசயங்கள் காணப்படுகிறது. இயேசுகிறிஸ்துவை பின்பற்றகிறவர்கள் இவர்களைப்போலவே நல்ல பண்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.


தாங்கள் தற்போது யோவான்ஸ்நானனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய சத்தியங்களைவிட, இயேசுகிறிஸ்துவிடமிருந்து அதிகமான சத்தியங்களை பெற்றுக்கொள்ளலாமென்று எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் இயேசுகிறிஸ்துவோடு, பொழுதுபோக்கிற்காக, ஏதோ பேசவேண்டுமே என்பதற்காக பேசவில்லை. தங்கள் உள்ளத்தில் ஒரு உன்னதமான குறிக்கோளோடு இவர்கள் இருவரும் இயேசுகிறிஸ்துவிடம் பேசிக்கொண்டு வருகிறார்கள். நாமும் இயேசுகிறிஸ்துவோடு  பேசும்போது தெளிந்த சிந்தனையோடு பேசவேண்டும். 


இயேசுகிறிஸ்துவிடமிருந்து ஆவிக்குரிய ரகசியங்களையும் வெளிப்பாடுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தோடு நம்முடைய ஐக்கியம் அமைந்திருக்க வேண்டும். அவரோடு இன்னும்  அதிக ஐக்கியத்தோடு இருக்கவேண்டுமென்று நாம் விரும்ப வேண்டும். இயேசுகிறிஸ்துவோடு பேசிக்கொண்டிருக்கும்போது, நம்முடைய சொந்த அலுவல்களை பார்த்துக்கொண்டிராமல், நம்முடைய மனதை அலைபாயவிடாமல், நம்முடைய கால்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிராமல், அவருடைய பாதபடியில் அமர்ந்திருந்து அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ சிறிது நேரம் பொழுது போவதற்காக இயேசுகிறிஸ்துவோடு கூடயிருந்துவிட்டு, அதன்பின்பு அவரை விட்டு  சீக்கிரமாக ஓடிப்போய்விடலாம் என்னும் சிந்தனை நமக்குள் வரவேகூடாது. நாம் இயேசுகிறிஸ்துவோடு நிலைத்திருக்க வேண்டும். ஒரு கொடியானது செடியோடு நிலைத்திருந்தால்தான் ஜீவனோடிருக்கும். அதுபோலவே நாமும் கிறிஸ்துவோடு நிலைத்திருக்க நாடவேண்டும்.   


வந்து பாருங்கள்


அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது (யோவா 1:39).


""ரபீ நீர் எங்கே தங்கியிருக்கிறீர்'' என்று கேட்ட சீஷர்களிடம் இயேசுகிறிஸ்து மிகவும் அன்போடு பேசுகிறார். தாம் தங்கியிருக்கும் இடத்திற்கு அவர்களை அன்புடன் அழைக்கிறார்.  ""வந்து பாருங்கள்'' என்று அவர்களுக்கு மெய்யான அழைப்புக் கொடுக்கிறார். தாம் தங்கியிருக்கும் இடத்திற்கே வந்து, அந்த இடத்தையும் தம்மையும் வந்து பார்க்குமாறு அழைக்கிறார். நாம் இயேசுகிறிஸ்துவோடு எவ்வளவு அருகாமையில் வருகிறோமோ, அவ்வளவு அதிகமாக அவருடைய அழகை நாம் காணமுடியும்.


 ஏமாற்றுக்காரர்களும் மாய்மாலக்காரர்களும் தங்களுடைய சீஷர்களை  தங்களுக்கு அருகாமையில் வர அனுமதிக்கமாட்டார்கள். தங்களுக்கு நெருக்கமாக வந்தால் தங்களுடைய ஏமாற்றுத்தனமும், மாய்மாலமும் வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்து, தங்களுடைய சீஷர்களை சற்று தூரத்தில் விலக்கியே வைத்திருப்பார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவிடமோ ஒளிவு மறைவு எதுவுமில்லை. அவர் உள்ளதை உள்ளது என்றும், இல்லாததை இல்லாதது என்றும் அறிவிக்கிறவர். தாம் சொல்வதை செய்கிறவர். செய்வதை சொல்கிறவர். தம்மிடத்தில் ஒளிவு மறைவு எதுவுமில்லாததினால், சீஷர்களை தம்மிடத்திற்கு வந்து பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறார். 


அவர்கள்மீது தமக்குள்ள அன்பை இயேசுகிறிஸ்து வெளிப்படுத்துகிறார். காலதாமதம் பண்ணாமல் தம்மோடு உடனடியாக வருமாறு அழைக்கிறார். இயேசுகிறிஸ்துவோடு கூடயிருக்கும் நேரம் நல்லநேரமாகவே இருக்கிறது. அவரை கிட்டிச் சேர்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும் நேரம் நல்லநேரமாகவே இருக்கும். அதைவிட வேறு நல்லநேரம் இனிமேல் வரப்போவதில்லை. ஆகையினால் இயேசுகிறிஸ்து நமக்குக் கொடுக்கும் வாய்ப்பை  காலதாமதம்பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


ஆத்தும ஆதாயம் செய்கிறவர்கள், ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கும்போதே அவர்களை இரட்சிப்புக்குள் வழிநடத்திவிடவேண்டும். இரும்பை சூடாக இருக்கும்போதே அடித்து வளைப்பதுபோல, ஒவ்வொரு காரியத்தையும் காலதாமதம் பண்ணாது அதற்குரிய நேரத்தில் செய்து முடித்துவிடவேண்டும். தற்போது நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புக்களை நல்லமுறையில்  பயன்படுத்திக்கொள்வது ஞானமுள்ள செயல். இதுவே அநுக்கிரக காலம். 


இயேசுகிறிஸ்துவின் அழைப்பை இவ்விரண்டு சீஷர்களும் அன்போடு ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றைய தினம் அவரோடு தங்குகிறார்கள். இயேசுகிறிஸ்துவோடு உடன் செல்வதற்கு இவ்விருவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். கிருபையுள்ள ஆத்துமாக்கள் இயேசுகிறிஸ்துவின் கிருபையுள்ள அழைப்புக்களை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும். இயேசுகிறிஸ்து எங்கே இருந்தாலும் அவர் இருக்கும் இடமே நமக்கு நல்ல இடம்.  


இவ்விரு சீஷர்களும் அன்றைய தினம் இயேசுகிறிஸ்துவிடம் தங்குகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் அழைப்பின் பேரில் இவ்விருவரும் அவரிடத்தில் தங்கியிருக்கிறார்கள். அவரோடு தங்கும்போது, அவரோடு கூடயிருப்பது நல்லது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அப்போது ஏறக்குறைய  பத்துமணி வேளையாயிருந்தது. 


மேசியாவைக் கண்டோம்


யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்  (யோவா 1:40,41). 


இயேசுவுக்குப் பின்சென்ற யோவான்ஸ்நானனுடைய இரண்டு சீஷர்களில் ஒருவனுடைய பெயர் அந்திரேயா. அவனுடைய  சகோதரனின் பெயர் சீமோன் பேதுரு. இவன் தன் சகோதரன் சீமோனை இயேசுகிறிஸ்துவிடம் அழைத்து வருகிறான். இயேசுகிறிஸ்துவோடு முதலாவதாக பழகும் வாய்ப்பு அந்திரேயாவுக்குக் கிடைத்தது. பேதுருவை இயேசுகிறிஸ்துவிடம் அழைத்து வருவதற்கு அந்திரேயா ஒரு கருவியாக செயல்படுகிறான்.


அந்திரேயா முதலாவதாக தன் சகோதரனாகிய சீமோனை கண்டுபிடிக்கிறான்.  ""கண்டுபிடிக்கிறான்'' என்னும் வார்த்தைக்கு அவனைத் ""தேடிக்கண்டுபிடிக்கிறான்'' என்று பொருள். சீமோன் ஒருவேளை யோவான்ஸ்நானனுடைய உபதேசத்தைக் கேட்பதற்காக அங்கு வந்திருக்கலாம். அந்த கூட்டத்திற்கு மத்தியில் அந்திரேயா தன் சகோதரன் சீமோனை தேடிக் கண்டுபிடிக்கிறான். அந்திரேயா யோவானைப்பார்ப்பதற்கு வந்திருந்தாலும், இப்போது இயேசுகிறிஸ்துவைக் கண்டுகொண்டான். 


தான் இயேசுகிறிஸ்துவைக் கண்டதை அந்திரேயா தனக்குள் மறைத்து வைக்க விரும்பவில்லை. தன் சகோதரன் சீமோனைக் கண்டுபிடித்து, மிகவும் மனத்தாழ்மையோடு, ""மேசியாவைக் கண்டோம்'' என்று கூறுகிறான். ""நான் மேசியாவைக் கண்டேன்'' என்று சுயபெருமையில், ஒருமை வார்த்தையில் பேசவில்லை. ""கண்டோம்'' என்று தன்னோடு கூடயிருந்த மற்றொரு சீஷனையும் சேர்த்து சொல்கிறான். தாங்கள் பெற்றுக்கொண்ட சந்தோஷத்தை, அந்திரேயா மற்றவரிடமும் பகிர்ந்து கூறவிரும்புகிறான். 


தன் சகோதரனிடத்தில் பேசும்போது அந்திரேயாவின் வார்த்தையில் உறுதியும் சந்தோஷமும் வெளிப்படுகிறது. தான் பேசும் வார்த்தை மிகவும் ƒபிரயோஜனமுள்ளது என்னும் எண்ணம் அவனுக்குள் உண்டாயிற்று.  அவன் உலககாரியத்தைக் குறித்து பேசவில்லை. ஆவிக்குரிய காரியத்தையும், அதற்கு ஆதாரமாக இருக்கும் இயேசுகிறிஸ்துவையும் குறித்துப் பேசுகிறான். மிகவும் ஞானமாக பேசுகிறான். ""நாங்கள் மேசியாவைக் கண்டோம்'' என்று கூறுகிறான். இக்காலத்தில்     எல்லோரும் மேசியாவைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். யோவான்ஸ்நானன் கூட தன்னுடைய சீஷர்களுக்கு மேசியாவைக் குறித்து இவ்வளவு தெளிவாக உபதேசம்பண்ணவில்லை. ஆனால் அந்திரேயாவோ தன் சகோதரனிடத்தில் மேசியாவைக் குறித்து மிகவும் தெளிவாக பேசுகிறான். 


மேசியாவைக் கண்டவர்களுடைய ஜீவியம் மாற்றமடையும்.         (2கொரி 5:17#18) மேசியாவைக் கண்டவர்கள் மற்றவர்களை மேசியாவிடம் அழைத்து வருவார்கள். சபையிலும், பழைய விசுவாசிகள் புதிய விசுவாசிகளை அழைத்துக் கொண்டு வரவேண்டும்.


""மேசியா''  என்னும் பெயருக்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பது பொருள். இது ஒரு எபிரெய வார்த்தை. ஆசாரியர்களைக் குறிப்பதற்கு இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது இராஜாக்கள்,  தீர்க்கதரிசிகள் ஆகியோரையும் இந்தச் சொல் குறிப்பிடுகிறது. பாபிலோனை அகற்றுவதற்குத் தேவன் தெரிந்தெடுத்த புறஜாதி ராஜாவிற்கும், இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. லூசிபரைக் குறிப்பதற்குக் கூட         இத்துடன் தொடர்புடைய ஒரு வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (எசே 28:14) மேசியா என்னும் எபிரெயச் சொல் புதிய ஏற்பாட்டின் கிரேக்க மொழியிலும், மேசியா என்றே எழுதப்பட்டிருக்கிறது. (மத் 1:1)


நீ கேபா என்னப்படுவாய்


பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக் கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம் (யோவா 1:42).


அந்திரேயா மேசியாவைக்குறித்து பேசிக்கொள்வதோடு நிறுத்திவிடவில்லை. மிகவும் ஞானமாக செயல்படுகிறான். தன் சகோதரனை, தான் கண்ட மேசியாவிடத்தில் அழைத்து வருகிறான். தன் சகோதரனை கர்த்தரிடத்தில் அழைத்து வருவதே மெய்யான சகோதர அன்பாகும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் பிறர்மீது இது போலவே  அன்புகூரவேண்டும். நம்முடைய உற்றார் உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார்கள் ஆகியோரை இயேசுகிறிஸ்துவிடம் அழைத்து வந்து, அவர்களுக்கு ஆவிக்குரிய நன்மை கிடைக்க உதவிபுரியவேண்டும். பிறருடைய ஆத்துமாக்களுக்கு நன்மை செய்ய வாய்ப்பு கிடைக்கும்போது அந்த வாய்ப்பை பயன்படுத்துவது நமது கடமை. 


இயேசுகிறிஸ்து இந்த பூமியில் ஊழியம் செய்து வந்த நாட்களில் அவரோடு சம்பாஷணை பண்ணும் சிலாக்கியம் சீஷர்களுக்கு உண்டாயிற்று.  அந்திரேயா இயேசுகிறிஸ்துவோடு கூடயிருப்பதினால், அவனுடைய உள்ளம் முழுவதும் இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சிந்தனையினால் நிறைந்திருக்கிறது. இயேசுகிறிஸ்து அவனுக்கு போதுமானவராக இருக்கிறார். தன்னுடைய ஜீவியத்தின் எல்லா அம்சங்களுக்கும் அவர் போதுமானவர் என்பதை  அந்திரேயா புரிந்துகொள்கிறான். 


தான் பெற்ற இந்த ஆசீர்வாதத்தை தனக்கு நெருக்கமானவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறான். இவன் சுயநலவாதியல்ல. மெய்யான அன்புக்கு சுயநலமில்லை. பிறரிடத்தில் நாம் மெய்யாகவே அன்பு கூரும்போது, நாம் பெற்றிருக்கிற ஆசீர்வாதங்களை அவர்களிடத்தில் பகிர்ந்துகொள்வோம். பிறர் பசியாக இருக்கும்போது நாம் மாத்திரம் தனித்து திருப்தியாக புசிப்பது சுயநலம்.


அந்திரேயா தன் சகோதரன் சீமோனை  இயேசுகிறிஸ்துவினிடத்தில் கூட்டிக்கொண்டு வருகிறான். இயேசுகிறிஸ்து அவனை பார்த்தபோது ""நீ யோனாவின் மகனாகிய சீமோன்''  என்று கூறுகிறார். அவனை பெயர் சொல்லி அழைக்கிறார். ஒரு சிலர் இந்த பெயரிலுள்ள அர்த்தத்திற்கு ஆவிக்குரிய வியாக்கியானம் கூறுகிறார்கள். ""சீமோன்'' என்னும் பெயருக்கு ""கீழ்ப்படிதலுள்ளவன்'' என்று பொருள். ""யோனா'' என்னும் பெயருக்கு ""புறா'' என்று பொருள். நம்மிடத்தில் புறாவைப்போல கீழ்ப்படிதலுள்ள ஆவி இருக்கவேண்டும். நம்முடைய கீழ்ப்படிதலே இயேசுகிறிஸ்துவின் சீஷராக இருப்பதற்கு நம்மைத் தகுதிப்படுத்தும்.  


இயேசுகிறிஸ்து சீமோனைப்பார்த்தபோது, அவனுக்குப் புதிய பெயர் கொடுக்கிறார். ""நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய்'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்து இவனுக்கு புதிய பெயர் கொடுப்பதினால் தம்முடைய விசேஷித்த அன்பையும், சிலாக்கியத்தையும் இவனுக்குத் தெரியப்படுத்துகிறார். தம்முடைய ஆவிக்குரிய குடும்பத்தில் சீமோனையும் ஒரு அங்கத்தினாராக ஏற்றுக்கொள்கிறார். ""கேபா'' என்னும் பெயர் இயேசுகிறிஸ்துவின்மீது சீமோன் வைத்திருக்கும் உறுதியுள்ள விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. ""கேபா'' என்பது எபிரெய வார்த்தை இதற்கு ""கல்'' என்று பொருள்.   கேபா என்னும் பெயருக்கு பேதுரு என்று இயேசுகிறிஸ்து வியாக்கியானம் கொடுக்கிறார்.


பேதுரு இயற்கையாகவே கடின சுபாவம் கொண்டவன். தான் எடுத்த காரியத்தில் வைராக்கியமாக இருந்து அதை நிறைவேற்றுகிறவன். அவனை எந்த காரியமும்  எளிதில் அசைத்துவிடாது. ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து சீமோனை ""கல்'' என்று அர்த்தங்கொள்ளும் ""கேபா'' என்னும் பெயரினால் அழைக்கிறார்.


இதற்கு பின்பு இயேசுகிறிஸ்து இவனுக்காக ஜெபித்தபோது, இயேசுகிறிஸ்துவில்  இவன் வைத்திருக்கும் விசுவாசம் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறார்.  இவனை ""கேபா'' என்று இயேசுகிறிஸ்து அழைத்து, அவனை ""கேபாவாகவே'' அதாவது கல்லைப்போன்று உறுதியான விசுவாசமுள்ளவனாகவே ஆக்குகிறார். இயேசுகிறிஸ்துவினிடத்தில் வருகிறவர்களின் நடை தள்ளாடக்கூடாது. அவர்களுடைய நடை உறுதியாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின்மீது பக்திவைராக்கியத்தோடு  இருக்கவேண்டும். இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் தள்ளாடுகிறான். கர்த்தரைப் பின்பற்றுகிற மெய்யான விசுவாசி ஒரு கல்லைப்போல அசைக்க முடியாமல் உறுதியாக இருக்கவேண்டும். மனுஷருடைய முயற்சியினால் இந்த சுபாவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. தேவனால் கூடாதகாரியம் ஒன்றுமில்லை. இயேசுகிறிஸ்துவின் கிருபையினால் இந்த திவ்வியசுபாவத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம். 


""யோனா''  என்பது யோவான் என்னும் பெயரின் அரமாயிக் மொழிவடிவம். ""கேபா'' என்னும் பெயர் கல் என்னும் பொருளைக் குறிக்கும் அரமாயிக் மொழிச்சொல். ஒரு மனுஷனை இயேசு கிறிஸ்து முதன் முறையாகப் பார்க்கும் போதே அவன் எப்பேர்ப்பட்டவன் என்பதைத் தீர்மானம் பண்ணி விடுகிறார். பேதுரு உறுதியானவன். ஆத்துமாவில் பெலமுள்ளவன். 


பிலிப்பு


மறுநாளிலே இயேசு க-லேயாவுக்குப் போக மனதாயிருந்து, பி-ப்புவைக் கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார். பி-ப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான் (யோவா 1:43,44). 


இயேசுகிறிஸ்து பிலிப்புவைக் கண்டு அவனை தமக்குப் பின்சென்று வருமாறு அழைக்கிறார். நாத்தாவேலின் அழைப்பு வித்தியாசமானது. யோவான்ஸ்நானன் நாத்தான் வேலை இயேசுகிறிஸ்துவிடம் வழிநடத்துகிறான். பேதுருவை அவனுடைய சகோதரனாகிய அந்திரேயா இயேசுகிறிஸ்துவிடம் அழைத்து வருகிறான். தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை தம்மிடத்தில் அழைத்து வருவதற்கு இயேசுகிறிஸ்து பல்வேறு உபாயங்களை பயன்படுத்துகிறார்.


இயேசுகிறிஸ்து பிலிப்புவை காண்கிறார்.  இயேசுகிறிஸ்து நம்மைத் தேடிக்கண்டுபிடிக்கிறார். அவரைப்பற்றி நாம் விசாரித்து அறிந்துகொள்வதற்கு முன்பாக, அவர் நம்மைத் தேடிகண்டுபிடிக்கிறார். ""பிலிப்பு'' என்னும் பெயர் கிரேக்க வார்த்தையாகும். புறஜாதியார் மத்தியில் ""பிலிப்பு'' என்னும் பெயர் பிரசித்திப்பெற்ற பொதுவான பெயர். ஆயினும் இயேசுகிறிஸ்து பிலிப்புவின் பெயரை மாற்றவில்லை. 


பேதுரு இயேசுகிறிஸ்துவிடம் வந்து சேர்ந்த மறுநாளிலே, பிலிப்புவை கண்டு, தம்மை பின்பற்றி வருமாறு அழைக்கிறார். இயேசுகிறிஸ்து தமக்கு நியமிக்கப்பட்ட சிறிது நேரத்தைக்கூட விரயம் செய்யவில்லை. மறுநாளிலே உடனடியாக பிலிப்புவை தம்மோடு சேர்த்துக்கொள்கிறார். கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நாமும் எந்த ஒரு நாளையும் வீணாக்கிவிடக்கூடாது. ஏனெனில் கர்த்தருக்காக செய்யவேண்டிய ஊழியம் ஏராளமாய் இருக்கிறது. 


இயேசுகிறிஸ்து கலிலேயாவுக்குப்போக மனதாயிருக்கிறார். தமக்கு கொடுக்கப்பட்ட எல்லோரையும் இயேசுகிறிஸ்து தேடிகண்டுபிடிக்கிறார். ""நீ எனக்கு பின் சென்றுவா'' என்னும் வார்த்தையை இயேசுகிறிஸ்து பிலிப்புவிடம் கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் வார்த்தை வல்லமையுள்ளது.  அவருடைய வல்லமையினால் பிலிப்பு இயேசுவினிடத்தில் வந்து சேருகிறான். 


இவன் பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன். பேதுருவும் அந்திரேயாவும் இதே பட்டணத்தைச் சேர்ந்தவர்கள். பெத்சாயிதா துன்மார்க்கம் நிறைந்த பட்டணம். இயேசுகிறிஸ்து இந்தப் பட்டணத்தில் அநேக பலத்த செய்கைகளை செய்தார். இந்த பட்டணத்து ஜனங்கள் இவற்றையெல்லாம் கண்டு மனந்திரும்பாமல் போனார்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்து இந்தப் பட்டணத்தைப் பார்த்து ""பெத்சாயிதாவே உனக்கு ஐயோ'' என்று சபித்துவிடுகிறார் (மத் 11:21). பெத்சாயிதா பட்டணம் துன்மார்க்கம் நிறைந்ததாக இருந்தாலும், தேவனுடைய கிருபையினால் கர்த்தருக்காக ஒரு கூட்டம் ஜனம் இந்த பட்டணத்திலும் மீதமாக இருக்கிறார்கள். இதுவே தேவனுடைய தெரிந்தெடுக்கும் கிருபை. 


நாத்தான்வேல்


பி-ப்பு நாத்தான் வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக்கண்டோம்: அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்  (யோவா 1:45). 


பிலிப்பு நாத்தான்வேலை இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழைத்து வருகிறான். தான் இயேசுகிறிஸ்துவைக் கண்டுகொண்ட நற்செய்தியை பிலிப்பு நாத்தான்வேலிடம் அறிவிக்கிறான். பிலிப்பு ஒரு புதிய விசுவாசி. இப்போதுதான் இயேசுகிறிஸ்துவோடு நெருக்கமாக வர ஆரம்பித்திருக்கிறான். இவன் புதிய விசுவாசியாக இருந்தாலும் ஆத்தும ஆதாயம் செய்வதற்கு விரும்புகிறான். நாத்தான்வேலை தேடி கண்டுபிடித்து  ""நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்'' என்று இயேசுகிறிஸ்துவைப்பற்றி சாட்சியாக அறிவிக்கிறான். 


இயேசுகிறிஸ்துவோடு கூடயிருப்பது பிலிப்புவுக்கு மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருக்கிறது. தான் இதுவரையிலும் பார்க்க வேண்டுமென்று ஆசையோடு காத்திருந்தவரை இப்போது பார்த்துவிட்டதாக கூறுகிறான். பிலிப்புவுக்கு பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருக்கும் நியாயப்பிரமாணம் தெரிந்திருக்கிறது. அதன் அர்த்தத்தை புரிந்து வைத்திருக்கிறான். இயேசுகிறிஸ்துவோடு நெருங்கி வந்தவுடன், வேதவாக்கியத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சத்தியங்களை அவன் இயேசுகிறிஸ்துவில் காண்கிறான்.


இவனுக்கு நியாயப்பிரமாணத்தில் ஞானம் இருந்தாலும், இவனிடத்தில் பெருமையில்லை. ""நியாயப்பிரமாணத்திலே எழுதியிருக்கிறவரை  கண்டேன்'' என்று தன்னுடைய வேத அறிவை மிகைப்படுத்திக் கூறுவதற்குப் பதிலாக, மிகவும் மனத்தாழ்மையாக ""நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறவரை கண்டோம்'' என்று தன்னோடு கூடஇருக்கும் சீஷனையும் சேர்த்துக் கூறுகிறான். ஆனால் மெய்யாகவே இவர்கள் இயேசுகிறிஸ்துவை காண்பதற்கு முன்பாகவே, இயேசுகிறிஸ்து இவர்களை கண்டார். இயேசு நம்மைக் காணும்போது நம்முடைய மனக்கண்களை பிரகாசமுள்ள மனக்கண்களாக மாற்றுகிறார். அந்தக் கண்களால் இயேசுகிறிஸ்துவை நம்மால் காணமுடிகிறது.


""நாத்தான்வேல்'' என்னும் பெயருக்கு தேவனுடைய வெகுமதி என்று பொருள். பர்த்தொலொமேயுவும் நாத்தான்வேலும் ஒரே நபராக இருக்கலாம். அப்போஸ்தலர்களின் பெயர் பட்டியலில் இவனுடைய பெயர் பிலிப்புடன் சேர்ந்து வருகிறது.  நாத்தான்வேலின் சுபாவம், அவன் இயேசுவைச் சந்தேகப்பட்டது, கேள்விக் கேட்டது, விசுவாச அறிக்கை செய்தது ஆகியவற்றை யோவான் 1:45#51 ஆகிய வசனங்களில் நாம் வாசித்தறியலாம். அக்காலத்து ஜனங்கள் இயேசுவை யோசேப்பின் குமாரன் என்றே கூறினார்கள். (மத் 13:55)


வந்து பார்


அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்தி-ருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பி-ப்பு: வந்து பார் என்றான் (யோவா 1:46).   


பிலிப்புவின் வார்த்தை நாத்தான்வேலுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவர், யோசேப்பின் குமாரனும் நாசேரத்து ஊரானுமாகிய இயேசுவே என்று பிலிப்பு கூறுகிறான். நாத்தான்வேலுக்கு நாசரேத்து ஊரைப்பற்றியும், அந்த ஊரிலுள்ள ஜனங்களைப்பற்றியும் நன்றாகத் தெரியும். ஆகையினால் நாத்தான்வேல் பிலிப்புவிடம் ""நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமோ'' என்று கேட்கிறான். எல்லாவற்றையும் சோதித்து நிரூபிக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். தன்னுடைய அறியாமையினாலேயே நாத்தான்வேல் இந்தக் கேள்வியைக் கேட்கிறான். மேசியா மெய்யாகவே நாசரேத்து ஊரிலிருந்து வரமாட்டார். அவர் நாசரேத்தில் பிறந்தவரல்ல. இயேசுகிறிஸ்து பெத்லகேமில் பிறந்தவர். பிலிப்பு இயேசுகிறிஸ்துவைப்பற்றி சரியாகத் தெரிந்துகொள்ளாமல், தன் அறியாமையினால் அவரை நாசரேத்து ஊரானாகிய இயேசு என்று கூறுகிறான். இயேசுகிறிஸ்து மெய்யாகவே பெத்லகேம் ஊரைச் சேர்ந்தவர். 


நாத்தான்வேல் தன்னிடத்தில் கேள்வி கேட்கும்போது அவனுக்கு உரிய பதில்கூறி விளக்கம் கொடுக்க பிலிப்புவிற்கு விருப்பமில்லை.  ஆகையினால் அவன் நாத்தான்வேலிடம் ""வந்து பார்'' என்று கூறுகிறான். சில சமயங்களில் சில சத்தியங்களைப்பற்றி நமக்கு ஓரளவு திருப்தியாகத் தெரியும். ஆயினும் நமக்குத் தெரிந்த சத்தியத்தை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்திக் கூற நமக்குத் தெரியாமல் போகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ஆவிக்குரிய காரியங்களில் சரியான விளக்கம் கொடுப்பதற்கு ஜனங்களை சபையின் போதகரிடத்தில்  அழைத்து வரவேண்டும்.


தன்னிடம் கேள்வி கேட்ட நாத்தான்வேலுக்கு பிலிப்பு ஞானத்தோடு பதில் கூறுகிறான். தனக்குத் தெரிந்த பதிலை சொல்லி  அவனுக்கு விளக்கம் கொடுக்கப்பதற்குப் பதிலாக, அவனை இயேசுகிறிஸ்துவிடம் நேரடியாக வருமாறு அழைக்கிறான். தம்மிடத்தில் வருகிற யாரையும் இயேசுகிறிஸ்து புறம்பே தள்ளவில்லை.  நாத்தான்வேல் மீது பிலிப்பு அன்பு கூருகிறான் ஆகையினால்தான் ""போய் பார்'' என்று கூறுவதற்குப் பதிலாக, ""வந்து பார்'' என்று அழைக்கிறான். ""வா, நானும் உன்னோடு கூடவருகிறேன்'' என்று பொருள்படுமாறு கூறுகிறான். நாத்தான்வேல் இயேசுகிறிஸ்துவைப்பார்க்க வரவிரும்பினால், தானும் அவனோடு கூடவந்து அவனை இயேசுகிறிஸ்துவிடம் அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக கூறுகிறான். 


கர்த்தருடைய ஊழியக்காரர்கள் ஆத்துமாக்களை கர்த்தரிடத்தில் அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ஒரு சில சுயநலத்திற்காகவோ அல்லது தேவையில்லாத பெருமையினாலோ இந்த பொறுப்பை தட்டிக்கழித்துவிடக்கூடாது. இதனால் நமக்கு என்ன லாபம் என்று லாபநஷ்ட கணக்கு  பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. ஒரு சில புறஜாதியார்கள் சில காரணங்களுக்காக சபைக்கு வர தயங்குவார்கள். சமுதாய சூழ்நிலைகளினிமித்தம் தாங்களாகவே சபைக்கு வரமாட்டார்கள். தங்களுடைய புறஜாதி சமுதாயத்தில் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று யோசிப்பார்கள். சபைக்குப் போவது கிறிஸ்தவர்களுடைய வேலை என்றும், அங்கு நமக்கு என்ன வேலையென்றும் நினைத்து சபைக்குப் போகாமல் ஒதுங்கியே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை சபைக்கு வருவதற்கு அழைக்கும்போது, அவர்களை சபைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும். 


கபடற்ற உத்தம இஸ்ரவேலன்


இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக் குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார் (யோவா 1:47). 


இயேசுகிறிஸ்துவிடம் வருகிறவர்கள் யாரும் வெறுமையாக திரும்பிப்போவதில்லை. தம்மிடத்தில் வரும் நாத்தான்வேலை இயேசுகிறிஸ்துவும் காண்கிறார். அவனைப்பற்றி  கூறும்போது ""இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்'' என்று அறிவிக்கிறார். அவனை ஒரு இஸ்ரவேலனாகவே பார்க்கிறார். இந்த வார்த்தை நாத்தான்வேலை புகழும் வார்த்தையாகும். இயேசுகிறிஸ்து அவனை இஸ்ரவேலன் என்று கூறி அவமதிக்கவில்லை.  அவன் கபடற்றவன் என்பது இயேசுகிறிஸ்துவுக்குத் தெரியும். 


சற்று நேரத்திற்கு முன்புதான் நாத்தான்வேல் இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக பேசினான். ""நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா'' என்று கேட்டான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அவனுடைய தப்பிதத்தை மன்னிக்கிறார். அவனுடைய வார்த்தை தப்பிதமானதுதான். ஆயினும் அவனுடைய இருதயம் கபடற்றதாகவும்  உத்தமமானதாகவும் இருக்கிறது. மனுஷன் நம்முடைய முகத்தையும் வார்த்தையையும் பார்க்கிறான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ நம்முடைய இருதயத்தைப் பார்க்கிறார். 


நாத்தான்வேலின் நற்குணத்தை இயேசுகிறிஸ்து புகழ்ந்து கூறுகிறார். அவனை கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்று அழைக்கிறார். இஸ்ரவேல் தேசத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் இஸ்ரவேலர்களல்ல. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை ஆராதித்து, அவருடைய உடன்படிக்கைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே மெய்யான இஸ்ரவேலர்கள்.  நாத்தான்வேல் ஒரு மெய்யான இஸ்ரவேலனாக இருக்கிறான். ஒரு இஸ்ரவேல் தேசத்தான் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருந்து அதற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறான். இவன் யாக்கோபின் குமாரரில் ஒருவன். யாக்கோபின் சந்ததியைச் சேர்ந்தவன். இஸ்ரவேலின் விசுவாசத்தை மெய்யாகவே கைக்கொள்கிறவன். பார்ப்பதற்கு நல்லவனாக தெரிகிறதுபோல இவனுடைய இருதயமும் உத்தமமாக இருக்கிறது. இவனுடைய கையின் பிரயாசங்கள் சமாதானத்தை உண்டுபண்ணுகிறது.


இஸ்ரவேலர்கள் யூதமார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவன் உள்ளாக யூதனாக இருந்தாலும், இவனுடைய இருதயமோ இயேசுகிறிஸ்துவை பின்பற்ற வேண்டும் என்னும் வாஞ்சையுடன் இருக்கிறது. இவனிடத்தில் கபடம் எதுவும் காணப்படவில்லை. எந்த மனுஷனுக்கும் இவன் கபடு செய்யவில்லை. இவனை நம்பலாம்.  யாருக்கும் தீங்கு செய்யமாட்டான். தேவனுக்கு விரோதமாக தீங்கு நினைக்கமாட்டான். தன்னுடைய பாவங்களுக்காக இவன் மெய்யாகவே மனம்வருந்தி, கர்த்தருடைய சமுகத்தில் உத்தமனாக இருக்கிறான். இவனிடத்தில் சில குற்றவுணர்வுகள் காணப்படலாம். இது இவனுடைய உள்ளான எண்ணம். ஆனால் இயேசுகிறிஸ்து இவனைப்பார்த்தபோது, இவனை கபடற்றவனாகவும் உத்தமனாகவும் காண்கிறார்.  ஒருவன் கபடற்ற உத்தம இஸ்ரவேலனாக இருக்கவேண்டுமானால் அது தேவனுடைய தெய்வீக கிருபையினால் மாத்திரமே ஆகும்.


""இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்'' என்று இயேசுகிறிஸ்து  நாத்தான் வேலைப்பற்றிச் சொல்லுகிறார். நாத்தான்வேலை இயேசு கிறிஸ்து பார்த்தவுடன் அவனுடைய சுபாவத்தை அப்படியே வெளிப்படுத்துகிறார். யாக்கோபு ஜெபத்தில் ஜெயம் பெற்றதினால் கபடற்றவன் என்னும் பெயரைப் பெற்றான். கபடற்றவன் என்பதற்கு ஏமாற்றாதவன் என்று பொருள். பரிசுத்த ஆவியானவரின் வரத்தினால் இயேசு கிறிஸ்து நாத்தான்வேலை அறிகிறார்.  


நீர் என்னை எப்படி அறிவீர்


அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பி-ப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்   (யோவா 1:48). 


தன்னைப்பற்றி இயேசுகிறிஸ்து கூறுவது நாத்தான்வேலுக்கு மிகுந்த ஆச்சரியமாயிற்று.  சந்தோஷத்தினாலும், ஆச்சரியத்தினாலும், மிகவும் மனத்தாழ்மையோடும் கண்ணியத்தோடும் ""நீர் என்னை எப்படி அறிவீர்'' என்று இயேசுகிறிஸ்துவிடம் கேட்கிறான். நீர் என்னைக் காணுமளவுக்கு நான் பாத்திரவானல்ல. உம்முடைய பாராட்டை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு நான் கபடற்றவனோ அல்லது உத்தமனோ அல்ல என்று தன்னை தாழ்த்துகிறான். இதுவே இவனுடைய நற்குணத்திற்கு எடுத்துக்காட்டு.  தன்னை இயேசுகிறிஸ்து புகழ்ந்து கூறும்போது தான் அந்த புகழ்ச்சிக்கு பாத்திரவானல்ல என்று தன்னையே தாழ்த்துகிறான். இயேசுகிறிஸ்து நம்மையும் அறிந்து வைத்திருக்கிறார். ஆகையினால் நாமும் அவரை அறிந்துகொள்ள விருப்பப்படவேண்டும். 


இயேசுகிறிஸ்து நாத்தான்வேலிடம் அவனைப்பற்றி மேலும் சில காரியங்களைக் கூறுகிறார். ""பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே நான் உன்னைக் கண்டேன்'' என்று  இயேசு அவனிடம் கூறுகிறார். முதலாவதாக தமக்கு அவனை தெரியும் என்பதை அவனுக்கு வெளிப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்துவுக்கு மறைவான காரியம் எதுவுமில்லை. இது அவருடைய தேவத்துவத்தின் சுபாவம். தம்முடைய தெய்வீகதன்மையை இயேசுகிறிஸ்து இதன்மூலமாக வெளிப்படுத்துகிறார். 


பிலிப்பு நாத்தான்வேலை இயேசுகிறிஸ்துவிடம் வருமாறு அழைத்தான். அவனை பிலிப்பு அழைக்கிறதற்கு முன்னே, அவன் ஒரு அத்திமரத்தின் கீழ் இருந்தான். இயேசுகிறிஸ்து அப்போதே அவனைக் கண்டார். இயேசுகிறிஸ்துவைப்பற்றி நாம் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே அவர் நம்மைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறார். நாத்தான்வேல் அத்திமரத்தின் கீழ் இருக்கும்போதே இயேசுகிறிஸ்துவின் கண்கள் அவனை நோக்கிப்பார்க்கிறது. தான் அத்திமரத்தின் கீழ் இருந்தது தனக்கு மாத்திரமே தெரியும் என்று நாத்தான்வேல் நினைக்கிறான். அவனுக்கு மாத்திரமே தெரிந்த இந்த ரகசியத்தை இயேசுகிறிஸ்து அவனுக்கு வெளிப்படுத்துகிறார். அவன் அத்திமரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, இயேசுகிறிஸ்துவின் கண்கள் அவனை நோக்கிப் பார்த்தது. அவன் ஒரு கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்பதை இயேசுகிறிஸ்து அப்போதே தெரிந்துகொண்டார். 


நாத்தான்வேல் அத்திமரத்தின் கீழ் ஒருவேளை வேதவாக்கியத்தை தியானம் பண்ணுவதற்காகவோ, அல்லது ஜெபம்பண்ணுவதற்காகவோ இருந்திருக்கலாம். அத்திமரத்தின்கீழ் இருப்பது அமைதியான ஆவியையும் ஜெபசிந்தனையையும் குறிப்பிடுகிறது. தேவனோடு ஜெபத்தில் ஐக்கியமாக  இருப்பதற்கு அத்திமரத்தின் கீழுள்ள நிழல் நிறைந்த இடம் சாதகமான இடமாக இருக்கும். 


ரபீ, நீர் தேவனுடைய குமாரன் 


அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவே-ன் ராஜா என்றான்          (யோவா 1:49). 


இயேசுகிறிஸ்து நாத்தான்வேலை கண்டவிதத்தை அவனுக்குக் கூறுகிறார். பிலிப்பு அவனை அழைக்கிறதற்கு முன்னே, அவன் அத்திமரத்தின் கீழிருக்கும்போது, இயேசுகிறிஸ்து அவனைக் கண்டதாக கூறுகிறார். இதைக் கேட்டவுடன் நாத்தான்வேலுக்கு இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசம் உறுதியாயிற்று. அவன் இயேசுவை                நோக்கி ""ரபீ நீர் தேவனுடைய குமாரன், நீர்இஸ்ரவேலின் ராஜா'' என்று அறிக்கை செய்கிறான். இந்த வாக்கியத்தை சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ""நீர் மெய்யான மேசியா'' என்று கூறலாம். 


நாத்தான்வேல் தன்னுடைய இருதயத்தில்  இயேசுகிறிஸ்துவே மெய்யான மேசியா என்பதை  உறுதியாக நம்புகிறான். இயேசுகிறிஸ்து இவனை கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்று கூறுகிறார். இவனோ இயேசுகிறிஸ்துவை       ""நீர் இஸ்ரவேலின் ராஜா'' என்று கூறி அவரை மகிமைப்படுத்துகிறான். 


சற்று நேரத்திற்கு முன்பு ""நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா'' என்று கேள்வி கேட்டவன், இப்போது எந்தக் கேள்வியும் கேட்காமல்  அமைதியாக இருக்கிறான். இயேசுகிறிஸ்து தம்மை அவனுக்கு வெளிப்படுத்துகிறார். இப்போது ""அவர் யார்'' என்பதை நாத்தான்வேல் தன் வாயினாலே அறிக்கை செய்கிறான். 


இயேசுகிறிஸ்துவின் தீர்க்கதரிசன ஊழியத்தை அறிக்கையிடும் விதமாக, அவரை ""ரபீ'' என்று அழைக்கிறான். அவருடைய தெய்வீக சுபாவத்தையும், தெய்வீக ஊழியத்தையும் அங்கீகரிக்கும் விதமாக அவரை ""நீர் தேவனுடைய குமாரன்'' என்று அறிக்கையிடுகிறான். இயேசுகிறிஸ்துவைப்பற்றி தான் அறிக்கையிடுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், ""நீர் இஸ்ரவேலின் ராஜா'' என்று மேலும் கூறுகிறான். இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருக்கிறாரென்றால், அவர் இஸ்ரவேலின் ராஜாவாகவும் இருக்கிறார்.


பெரிதானவைகளைக் காண்பாய்


     இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னாதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்தி-ருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (யோவா 1:50,51).


இயேசுகிறிஸ்து நாத்தான்வேலுடைய விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார். தம்மைப்பற்றி இதுவரையிலும் அவன்கண்டதை விட, இன்னும் பெரிதானவைகளை அவன் காண்பான் என்று கூறி அவனை உற்சாகப்படுத்துகிறார். நாத்தான்வேல் இயேசுகிறிஸ்துவை தன்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்கிறான். இயேசுகிறிஸ்துவும் நாத்தான்வேலின் விசுவாசத்தை அங்கீகரிக்கிறார். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு நாத்தான்வேலின் இருதயம் ஏற்கெனவே ஆயத்தமாக இருக்கிறது. 


இயேசுகிறிஸ்து தன்னை அத்திமரத்தின் கீழிருக்கும்போது கண்டதாக கூறியது நாத்தான்வேலுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  அந்த ஆச்சரியத்தினால் இவனுடைய விசுவாசம் மேலும் அதிகரிக்கிறது. ஒருவருக்கு இயேசுகிறிஸ்துவின்மீது ஒரளவு விசுவாசம் இருக்கும்போது, அவருடைய விசுவாசத்தை வர்த்திக்கச் செய்வது எளிதாக இருக்கும். தேவனுடைய மகத்துவமான கிரியை விசுவாசமேயில்லாத ஒருவருக்கு திடீரென்று வெளிப்படுத்தப்படும்போது, அந்த நபரிடத்தில் ஆச்சரியமும் அதிர்ச்சியுமே அதிகரிக்கும். 


நாத்தான்வேலின் விசுவாசத்தை உறுதிபண்ணவும், வர்த்திக்கப்பண்ணவும் இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணுகிறார். ""இதிலும்  பெரிதானவைகளைக் காண்பாய்'' என்று அவனிடத்தில் கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் அற்புதங்களையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் நாத்தான்வேல் இனிமேல் காணப்போகிறான். இவற்றையே இயேசுகிறிஸ்து ""பெரிதானவைகள்'' என்று குறிப்பிடுகிறார். சுவிசேஷத்தை மெய்யாக விசுவாசிக்கிறவர்களுக்கு, கர்த்தருடைய வார்த்தை அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிபண்ணப்படும்.  


இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்து தம்மை  பல உபாயங்கள் மூலமாக வெளிப்படுத்துவதற்கு சித்தங்கொண்டிருக்கிறார். இந்த உபாயங்களைவிட இன்னும் பெரிதான உபாயங்கள் மூலமாக அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்த பிரியமுள்ளவராக இருக்கிறார்.


இயேசுகிறிஸ்து இந்த வார்த்தைகளைக் கூறும்போது, அதை நாத்தான்வேலுக்கு என்று தனிப்பட்ட முறையில் கூறினாலும், எல்லா சீஷருக்கும்  இதை பொதுவானதாகவும் கூறுகிறார். வானம் திறந்திருக்கிறதை, நாத்தான்வேல் மாத்திரமல்ல, தம்முடைய சீஷர்கள் எல்லோருமே காண்பார்கள் என்று அறிவிக்கிறார். இயேசுகிறிஸ்து இந்த சத்தியத்தை கூறும்போது ""மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்'' என்னும் வாக்கியத்தை பயன்படுத்துகிறார். அவருடைய வார்த்தை உறுதியானது என்பதையும், சந்தேகத்திற்கு இடமில்லாமல் இது மெய்யாகவே நிறைவேறும் என்பதையும் இந்த வாக்கியம் தெளிவுபடுத்துகிறது. இயேசுகிறிஸ்துவைத் தவிர  வேறு யாரும் இது போன்ற வாக்கியத்தை இதுவரையிலும் பயன்படுத்தியதில்லை. சில சமயங்களில் யூதர்கள் தங்களுடைய ஜெபத்தின் முடிவில் ""மெய்யாகவே மெய்யாகவே'' என்னும் வாக்கியத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த வாக்கியம் நாம் சொன்னதை உறுதிப்படுத்தும் வார்த்தையாகும்.  


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு சில காரியங்களை உறுதிப்படுத்திக் கூறுகிறார்.  தம்முடைய சீஷர்கள் இதுமுதல் வானம் திறந்திருக்கிறதைக் காண்பார்கள். இயேசுகிறிஸ்து தேவகுமாரனாக இருக்கிறார். யோவான் எழுதின சுவிசேஷத்தில் இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றி குறிப்பிடும்போது ""மனுஷகுமாரன்'' என்றே குறிப்பிடுகிறார். இந்த சுவிசேஷத்தில் தேவகுமாரன் என்னும் வார்த்தையைவிட, மனுஷகுமாரன் என்னும் வார்த்தையே அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லா சமயங்களிலும் இயேசுகிறிஸ்து மாத்திரமே, தம்மை மனுஷகுமாரன் என்று குறிப்பிடுகிறார். வேறுயாரும் அவரை மனுஷகுமாரன் என்று கூறவில்லை. 


 நாத்தான்வேல் இயேசுகிறிஸ்துவைப்பற்றி கூறும்போது, அவரை தேவனுடைய குமாரனென்றும், இஸ்ரவேலின் ராஜா என்றும் கூறுகிறான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்மைப்பற்றி கூறும்போது ""மனுஷகுமாரன்'' என்றே குறிப்பிடுகிறார். இது அவருடைய தாழ்மையைக் காண்பிக்கிறது. தம்முடைய மனுஷத்துவத்தை இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்த விரும்புவதைக் காண்பிக்கிறது.


இதுமுதல் அவர்கள் காணப்போகும் பெரிதான காரியங்களைப்பற்றி இயேசுகிறிஸ்து இங்கு முன்னறிவிக்கிறார். ""வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள்  இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறுகிறார். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு தேவதூதர்கள் பல சமயங்களில் பணிவிடை செய்தார்கள். அந்த சமயத்திலும், இயேசுகிறிஸ்து  பரமேறிப்போன சமயத்திலும் வானம் அவரை ஏற்றுக்கொள்வதற்காக திறக்கப்பட்டது. தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறினார்கள், இறங்கினார்கள். இயேசுகிறிஸ்து முன்னறிவித்த இந்த பெரிதான காரியங்களை அவருடைய சீஷர்கள் தங்கள் கண்களால் பிரத்தியட்சமாக கண்டார்கள். 


இயேசுகிறிஸ்து பரமேறிப்போனது அவருடைய தெய்வீக ஊழியத்திற்கு மிகப்பெரிய சான்றாகும். சீஷர்களுடைய விசுவாசத்தை இயேசுகிறிஸ்து பரமேறிப்போன சம்பவம் உறுதிபண்ணிற்று. கிறிஸ்துவின் அற்புதங்கள் எல்லாமே அவருடைய சீஷர்களின் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணிற்று. இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றி வெளிப்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அற்புதங்களைச் செய்ய ஆரம்பிக்கிறார். 


இயேசு கிறிஸ்து தமது கண்களால் நாத்தான்வேலைக் காண்பதற்கு முன்பாக அவனை ஆவியில் காண்கிறார். அதைத் தெரிந்தவுடன் நாத்தான்வேல் இயேசுவைத் தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுகிறான்.


நாத்தான்வேல் தேவனுடைய மகத்துவமான கிரியைகளைக் கண்டான். மூன்று வருஷங்களாக அவன் இயேசு கிறிஸ்துவோடு கூடஇருந்து, அவர் செய்த அற்புதங்களையெல்லாம் தன் கண்களால் பார்த்தான்.  எப்பொழுது நிறைவேறிற்று என்று கூறப்படவில்லை. இயேசு கிறிஸ்துவின் நித்திய ராஜ்ஜியத்தில் இது நிறைவேறலாம். அப்போது வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்தி-ருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் தேவனுடைய நித்திய ராஜ்ஜியத்தில் காணலாம். 


""மெய்யாகவே மெய்யாகவே'' என்னும் வாக்கியம் நிச்சயமாக என்றும் பொருள்படும். ""ஆமென்'' என்றும் இதற்குப் பொருள்கூறலாம். மெய்யாகவே மெய்யாகவே என்று யோவான் 25 இடங்களில் கூறியிருக்கிறார்.   இயேசு கிறிஸ்து சத்தியத்தைக் கூறுகிறார். அவரால் மட்டுமே ஒரு காரியத்தை இவ்வாறு வலியுறுத்திக் கூறமுடியும். மற்ற இடங்களிலெல்லாம் ""மெய்யாகவே'' என்று ஒரு தடவை மட்டுமே இந்த வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில்                   16 தடவைகளும், மத்தேயுவில் 30 தடவைகளும், மாற்குவில் 15 தடவைகளும், லூக்காவில் 8 தடவைகளும் இந்த வாக்கியம் வந்திருக்கிறது. சுவிசேஷப் புஸ்தகங்களில் இயேசு கிறிஸ்து மட்டுமே ""மெய்யாகவே'' என்னும் வாக்கியத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். சுவிசேஷப் புஸ்தகங்கள் தவிர புதிய ஏற்பாட்டில் 21 தடவைகள் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சுவிசேஷப் புஸ்தகத்தில் இயேசு கிறிஸ்து ""மெய்யாகவே'' என்னும் வாக்கியத்தை 103 தடவைகள் பயன்படுத்தியிருக்கிறார். மற்ற 62 புஸ்தகங்களில் இதர ஆசிரியர்கள் இந்த வாக்கியத்தை 36 தடவைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.


 மனுஷகுமாரன் என்னும் வார்த்தை இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. புதிய ஏற்பாட்டில் 88 தடவைகளும், தானி 7:13 #இல் ஒரு தடவையும், இந்த வார்த்தை இயேசு கிறிஸ்துவைக் குறிக்குமாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து தேவனுடைய மனுஷன். மனுஷரை மீட்கிறவர். சாதாரண மனுஷருக்கும், இயேசுகிறிஸ்துவிற்கும் வித்தியாசம் ஏராளம் உள்ளன. இயேசு கிறிஸ்து மட்டுமே தேவனுடைய ஒரேபேறான குமாரன். மனுஷகுமாரன். 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.