ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 4:13-15 Tamil bible study pdf

 

ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 4:13-15


காயீனுக்கு தண்டனை ஆதி 4:13-15  


ஆதி 4:13. அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.


ஆதி 4:14. இன்று என்னை இந்தத் தேசத்தி-ருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான். 


ஆதி 4:15. அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்-; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். 


காயீன்  தன் சகோதரனாகிய ஆபேலை  கொலைசெய்து விடுகிறான். அவனுடைய கொலைபாதகத்தின் நிமித்தமாய், கர்த்தர் காயீனைத் தண்டிக்கிறார். காயீனோ, தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனை மிகவும் கடினமானது என்றும்,  அந்த தண்டனையை தன்னால் சகிக்க முடியாது என்றும் கர்த்தரிடத்தில் முறையிடுகிறான். காயீன் மனவேதனையோடும், மனவிரக்தியோடும் பேசுகிறான் என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். 


நம்முடைய பாவங்கள் எவ்வளவு பெரியதாகயிருந்தாலும், நாம் எவ்வளவு பெரிய பாவிகளாகயிருந்தாலும், நமக்கு தேவனுடைய சமுகத்திலே மன்னிப்பு   உண்டு. நம்முடைய பாவங்களுக்கு நாம் வருத்தப்படவேண்டும். கர்த்தருடைய சமுகத்திலே நம்முடைய பாவங்களை அறிக்கைசெய்யவேண்டும். அப்போது கர்த்தர் தம்முடைய கிருபையினால்  நம்முடைய பாவங்களை மன்னிப்பார். நம்முடைய வேதனையை அகற்றுவார். 


காயீனோ தன்னுடைய பாவத்தை அங்கீகரிக்கவில்லை. அவன் தன்னுடைய பாவங்களுக்கு மனந்திரும்பவுமில்லை.  கர்த்தரோ தம்முடைய நீதியினால் காயீனைத் தண்டிக்கிறார். காயீன் கர்த்தரிடத்தில் பாவஅறிக்கை செய்வதற்கு பதிலாக,  கர்த்தர் தனக்கு கொடுக்கும் தண்டனை கடினமானது என்று புலம்புகிறான்.


காயீனுடைய பாவம் அதிகரிக்கிறது.  தன் சகோதரனை கொலைசெய்தது காயீன் செய்த முதலாவது பாவம்.  அவன் கர்த்தருடைய சமுகத்திலே தன் பாவத்தை அறிக்கை செய்யாமலிருப்பதும்,  கர்த்தருடைய நீதியான தீர்ப்புக்கு எதிராக பேசுவதும் காயீன் மேலும் மேலும் செய்கிற பெரிய பாவங்களாகும்.


சாத்தான் காயீனை ஆளுகை செய்கிறான்.  இதுவரையிலும் காயீனுக்கு எரிச்சல் மாத்திரமே இருந்தது. இப்போது அவனுக்கு எரிச்சலோடு  விரக்தியும் சேர்ந்து வந்திருக்கிறது. சாத்தான் காயீனை மொத்தமாக வஞ்சித்து விடுகிறான்.  


காயீன் கர்த்தருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தாமல், தன்னை உயர்த்துகிறான். தன் சகோதரனைக் கொன்றுபோட்டது  பெரிய பாவமல்ல என்றும், ஆனால் கர்த்தரோ தனக்கு கடினமான தண்டனையைக் கொடுத்து அநியாயம் செய்கிறார் என்றும்,  இவ்வளவு பெரிதான தண்டனைக்குத்தக்க பாவம் எதுவும் தான் செய்யவில்லை என்றும் காயீன் கர்த்தரோடு விவாதம்பண்ணுகிறான்.


காயீன் நரகத்திற்குப் போகவேண்டியவன். நரகத்திற்கு  தப்பிக்கும் வழியை கர்த்தர் அவனுக்கு காண்பிக்கிறார். ஆனால் காயீனோ கர்த்தருடைய  கிருபையின் வழியைப் பயன்படுத்தாமல், தன்னுடைய சொந்த வழியிலே நரகத்திற்குப்போகிறான். அவன் கர்த்தருக்கு விரோதமாகப் பேசுகிறான். 


காயீன் கர்த்தரை நோக்கி, ""எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்க  முடியாது'' என்றும், ""இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்'' என்றும் சொல்லுகிறான். காயீன் தனக்குத்தானே  தீங்கு செய்து கொள்கிறான். கர்த்தருடைய சமுகத்தில் இராதபடிக்கு, காயீனே விலகிப்போகிறான். காயீன் இந்த தேசத்திலிருந்து விலகிப்போவதற்கு,   அவனுடைய பாவமே காரணம்.  


காயீன் கர்த்தரைவிட்டு விலகிக்போனால்,  அவனுக்கு கர்த்தருடைய கிருபையும், இரக்கமும், பாதுகாப்பும்,  பராமரிப்பும் கிடைக்காது. இந்த தேசத்திலிருந்து துரத்தப்பட்டால்,  தன்னுடைய நிலமை மிகவும் பரிதாபமாயிருக்கும் என்பதையும் காயீன் அறிந்திருக்கிறான். ""நான் உமது சமுகத்திற்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று  அலைகிறவனாயிருப்பேன்'' என்று காயீன் கர்த்தரிடத்தில் புலம்புகிறான்.


காயீன் கர்த்தருடைய சமுகத்திற்கு  விலகிப்போனால், அவனுக்கு பாதுகாப்பு இருக்காது. மனுஷருடைய கோபமும்,  விரோதமும் அவனுக்கு விரோதமாக எழும்பும். ""என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே'' என்று காயீன் கர்த்தரிடத்தில் சொல்லுகிறான்.  


காயீன் கர்த்தருடைய சமுகத்தைவிட்டு விலகி, எங்கே அலைந்து திரிந்தாலும்,  அவனுக்கு பாதுகாப்பு இல்லை. காயீனுடைய ஜீவனுக்கு எப்போதுமே ஆபத்து வரும். காயீன் தனக்கு வரும் ஆபத்தைப்பற்றி  சொல்லும்போது, இந்தப் பூமியிலே காயீனைத்தவிர, அவனுடைய பெற்றோரை தவிர வேறு மனுஷர் யாருமே இல்லை என்று வேதபண்டிதர்கள் சிலர் விளக்கம் சொல்லுகிறார்கள். ஆனாலும் அவன் தன்னுடைய ஜீவனைக்          குறித்து பயப்படுகிறான். தன்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் தன்னைக் கொன்றுபோடுவான் என்று புலம்புகிறான்.  


இந்தப் பூமியிலே, காயீனின் காலத்திலே, இப்போது மனுஷர் இல்லாவிட்டாலும், தேவனுடைய சிருஷ்டிகள் ஏராளமாயிருக்கிறது.  தேவனுடைய சர்வசிருஷ்டிகளும் தனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறது என்றும், அவை தனக்கு சத்துருவாயிருக்கிறது என்றும் நினைத்து  காயீன் பயப்படுகிறான். 


கர்த்தரோ காயீனுக்கு சொன்ன தம்முடைய  தண்டனையை மாற்றவில்லை. கர்த்தர் தாம் சொன்ன தண்டனையை உறுதிபண்ணுகிறார். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நீதியானது. காயீனை  தண்டிக்கவேண்டும் என்பது கர்த்தருடைய நீதி. அவனை பாதுகாக்கவேண்டும் என்பது கர்த்தருடைய கிருபை.  


கர்த்தர் காயீனை நோக்கி, ""காயீனைக் கொல்லுகிற  எவன்மேலும் ஏழு பழி சுமரும்'' என்று சொல்லுகிறார். கர்த்தருடைய வார்த்தையினால் காயீன்  மனுஷருடைய கோபத்திற்கு தப்பிக்கிறான். காயீன்மீது தேவனுடைய தண்டனை விதிக்கப்பட்டிருப்பதினால்,  அவனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும், அவனை எளிதாகக் கொன்றுபோடுவான். ஆகையினால் காயீன் எங்கே போனாலும் பயத்தோடும் நடுக்கத்தோடும் போகவேண்டியதாயிருக்கிறது.


காயீன் தன் சகோதரன் ஆபேலைக் கொன்றது மிகப்பெரிய பாவம்.  கர்த்தர் அதற்காக காயீனைத் தண்டிக்கிறார். பழிவாங்குதல் கர்த்தருக்குரியது.  கர்த்தரே காயீனுக்கு தண்டனை கொடுப்பார். கர்த்தருடைய கரத்தில் பட்டயம் இருக்கிறது.  கர்த்தருடைய பட்டயத்தை மனுஷர் தங்களுடைய கைகளில் பிடித்துக்கொண்டு, அதை தங்களுக்கு சித்தமானபடி பயன்படுத்தக்கூடாது. 


காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடக்கூடாது என்பது கர்த்தருடைய சித்தம். இதற்காக கர்த்தர்  காயீன்மேல் ஒரு அடையாளத்தைப் போடுகிறார். இந்த அடையாளத்தின் மூலமாக, காயீனுக்கும், மனுக்குலத்திலுள்ள மற்றவர்களுக்கும் ஒரு வித்தியாசம் காண்பிக்கப்படுகிறது.  காயீன் தன் சகோதரனைக் கொன்றவன் என்பதற்கு அவன்மீது போடப்பட்ட அடையாளம் சாட்சி சொல்லுகிறது. 


ஆதாமிற்கு இப்பொழுது 130 வயதாகிறது.   (ஆதி 4:25; ஆதி 5:3). இதுவரையிலுமுள்ள வேதவசனங்களில் ஆதாமிற்கும், ஏவாளுக்கும் காயீனும், ஆபேலும் பிள்ளைகளாக பிறந்தார்கள் என்று மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வசனத்தில் ""என்னைக் கண்டு பிடிக்கிறவன் எவனும்'' என்னும் வாக்கியம் இருப்பதினால் காயீனைத் தவிர இக்காலத்தில் மேலும் பலரும் பிறந்திருக்க வேண்டும். 


வேதபண்டிதர்களில் சிலர் ஆதாமின் சந்ததியைக் கணக்கிட்டு இந்த வசனத்தின்போது சுமார்  5 இலட்சம் ஜனங்கள் இருந்திருக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். 


காயீன் தனக்கு ஒரு பட்டணத்தைக் கட்டினான். பட்டணத்தைக் கட்டுவதற்கு பல ஆட்கள் தேவைப்படும் (ஆதி 4:17). ஆகையினால் ஒவ்வொரு மனுஷனுக்கும் குமாரரும், குமாரத்திகளும் பிறந்து தங்களுடைய இனத்தைப் பெருக்கியிருப்பார்கள். (ஆதி 4:15-24;         ஆதி 5:1-32; ஆதி 6:1-2).


கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். இது சரீரத்தில் போடப்பட்ட அடையாளமல்ல. காயீனைக் கொன்று போடுகிறவனைக் கர்த்தர் பழிவாங்குவார் என்னும் உறுதிமொழியை இந்த வாக்கியம் விளக்குகிறது.



You have to wait 15 seconds.

Download pdf

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.