மத்தேயு சுவிசேஷம் - ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம் - 5
5. பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் மத் 7 : 21-23
மலைப்பிரசங்கத்தின் முடிவுரையாக இயேசுகிறிஸ்து இந்த சத்தியத்தைக் கூறுகிறார். கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் வேறு ஏதாவது குறுக்கு வழியில் பரலோகத்திற்குப் போவதற்கு வாய்ப்பில்லை.
கர்த்தாவே கர்த்தாவே
பரலோகத்தி-ருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத் 7:21).
இயேசுகிறிஸ்து கர்த்தராக இருக்கிறார். அவரே நமது ஜீவியத்திற்கு எஜமான். அவரை அழைக்கும்போது கர்த்தாவே என்று தான் அழைக்கவேண்டும். ஆயினும் கர்த்தாவே, கர்த்தாவே என்று அழைப்பதினால் மாத்திரம் யாரும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை. தேவனுடைய ராஜ்யம் கிருபையுள்ளது. மகிமை நிறைந்தது. நமது வார்த்தையாலும், நாவினாலும் கிறிஸ்துவை கர்த்தாவே என்று அழைத்தால் மாத்திரம் பரலோகத்திற்கு சென்று விடலாம் என்று முடிவு பண்ணிவிடக்கூடாது. பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின் படி செய்தால் மாத்திரமே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.
நாம் இயேசுகிறிஸ்துவை கர்த்தாவே என்று தான் அழைக்கவேண்டும். அவரை கர்த்தாவே என்று அழைப்பதை இந்த வாக்கியம் தடைபண்ணவில்லை. ஆயினும் நமது வார்த்தை நாவிலிருந்து வராமல் இருதயத்திலிருந்து வரவேண்டும். கர்த்தர் என்பதன் மெய்ப்பொருளை நமது உள்ளம் உணர்ந்திருக்கவேண்டும்.
நாம் இயேசுகிறிஸ்துவின் சித்தத்தை செய்கிறவர்களாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சித்தமோ பரலோகப் பிதாவின் சித்தமாகும். நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்போமானால் நமது பாவங்களுக்கு மனந்திருந்தி பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்வோம். பரிசுத்த ஜீவியம் ஜீவிப்போம். பிறர் மீது அன்பாக இருப்போம். இதுவே தேவனுடைய சித்தம். நமது பரிசுத்தம். வாயினால் கூறுவதும் கிரியை நடப்பிப்பதும் இரண்டு வெவ்வேறு காரியங்கள். இவ்விரண்டையுமே நாம்தான் செய்கிறோம். நமது பேச்சும் செயலும் ஒன்றுக்கொன்று முரண்படாமல் இருக்கவேண்டும். ஒரு காரியத்தை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செய்யாமல் இருக்கக்கூடாது (மத் 21:30).
நாம் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமானால் ""நான் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். அவருடைய இரட்சிக்கும் கிருபை என்னை இரட்சிக்கும்'' என்று வாயால் சொன்னால் மட்டும் போதாது. பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்ய வேண்டும். இப்படிச் செய்கிறவன் மட்டுமே பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பான்.
உமது நாமத்தினால்
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள் (மத் 7:22) .
ஒரு சிலர் கர்த்தாவே கர்த்தாவே என்று கூறுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அத்துடன் கர்த்தருடைய நாமத்தினால் தாங்கள் செய்த ஊழியத்தையும் பெருமையாக கூறுகிறார்கள். உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா என்பார்கள். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பிலேயாமும் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் காய்பாவும் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். ஆனால் இவர்களுடைய தீர்க்கதரிசனத்தினால் இவர்கள் பக்திமான்கள் என்று நிரூபிக்கப்படவில்லை. தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவராக கருதப்பட்டார். ஆனால் இவர்களுடைய தீர்க்கதரிசன ஊழியங்கள் இவர்களை இரட்சிக்கவில்லை. இவர்கள் தேவனுடைய நாமத்தினால்தான் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். ஆனால் தேவன் இவர்களை அனுப்பவில்லை. தேவனுடைய நாமத்தை தங்களுடைய சுயலாபத்திற்காக இவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்.
ஒரு சிலர் தேவனுடைய நாமத்தினாலே பிசாசுகளை துரத்தினோம் அல்லவா என்று கூறுவார்கள். யூதாஸ்காரியாத்தும் பிசாசுகளைத் துரத்தினான். ஆனால் அவனும் கேட்டின் மகனாகவே இருந்தான். ஒருவர் மற்றவரிடத்திலுள்ள பிசாசுகளைத் துரத்தலாம். அதே சமயத்தில் அவனே ஒரு பிசாசாகவும் இருக்கலாம்.
ஒரு சிலர் தேவனுடைய நாமத்தினாலே அநேக அற்புதங்களை செய்தோம் அல்லவா என்று கூறுவார்கள். அற்புதங்களை செய்வது ஊழியத்திற்கு அவசியம். ஆயினும் இந்த அற்புதங்கள் தேவனால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். அற்புதங்களை செய்வதைவிட அன்பே பிரதானமானது.
""நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப்பேர்க்கத்தக்க சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை'' என்று பவுல் கூறுகிறார் (1கொரி 1:1-3).
ஒருவன் அற்புதங்களை செய்யாவிட்டாலும் தேவனுடைய கிருபை அவனை பரலோகத்திற்கு அழைத்து வரும். அதே வேளையில் ஒருவன் அற்புதங்களை செய்தாலும் தேவனுடைய கிருபை இல்லையென்றால், அவன் செய்த அற்புதங்கள் அவனை பரலோகத்திற்கு அழைத்து வராது. கர்த்தருடைய சமுகத்தில் அற்புதமான கிரியைகளைவிட, ஆவிக்குரிய பயபக்தியான கிரியைகளே மேன்மையானது. அற்புதங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து, தேவனுடைய கிருபையை புறக்கணிப்போம் என்றால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம்.
அக்கிரமச்செய்கைக்காரரே
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன் (மத் 7:23).
கர்த்தரே நியாயப்பிரமாணத்தின் ஸ்தாபகர். அவரே நியாயப்பிரமாணத்தின் பிரகாரம் நம்மை நீதியாய் நியாயம் விசாரிக்கிறவர். அவரிடத்தில் நாம் விண்ணப்பம் பண்ணும்போது அவர் நம்மை ஒருக்காலும் அறியவில்லை என்று கூறி, தம்மைவிட்டு அகன்று போங்கள் என்று கூறி நம்மை புறக்கணிக்கும்போது நமக்கு மிகுந்த ஏமாற்றமாகவும், பேரிழப்பாகவும் இருக்கும். ஒரு சிலர் மிகப்பெரிய ஊழியக்காரராக எல்லோராலும் போற்றப்படுவார்கள். இவர்களை மிகுந்த பக்திமான்கள் என்று ஜனங்கள் நினைப்பார்கள். ஆயினும் இவர்கள் கூட அக்கிரமசெய்கை செய்வதற்கு வாய்ப்புள்ளது. இப்படிப்பட்டவர்களைத்தான் தேவன் அக்கிரம செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று கூறி புறக்கணிக்கிறார்.
இயேசுகிறிஸ்து அக்கிரம செய்கைக்காரரைப் பார்த்து நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை என்று கூறிவிடுவார். கர்த்தர் தமக்கு உரியவர்களை அறிந்திருக்கிறார். அவருக்கு உரியவர்களும் அவரை அறிந்திருக்கிறார்கள். தமக்கு உரியவர்கள் மீது அன்பு பாராட்டி கர்த்தர் அவர்களை பாதுகாத்து பராமரிக்கிறார். முடிவுபரியந்தம் அவர்களை வழி நடத்துகிறார். ஆனால் அக்கிரம செய்கைக்காரரையும், மாயக்காரரையும் கர்த்தர் தமக்கு உரியவர்களாக அங்கீகரிப்பதில்லை. அவர்களை ஒருக்காலும் தாம் அறியவில்லையென்று கூறி புறக்கணித்துவிடுகிறார்.
அக்கிரம செய்கைக்காரர்கள் கிறிஸ்துவின் ஊழியத்தை ஊழியமாக செய்யாமல் தங்களுக்கு வருமானம் தரும் தொழிலாக செய்கிறார்கள். இயேசுகிறிஸ்து இவர்களுடைய வேலைகளை தம்முடைய ஊழியமாக அங்கீகரிப்பதில்லை. மகா நாளில் தேவன் இவர்களை புறக்கணித்து ஒதுக்கிவிடுவார். அக்கிரம செய்கைகளில் ஒருவன் எவ்வளவு தான் உயர்ந்திருந்தாலும் அவன் பரிதாபமான பள்ளத்தில் தள்ளப்படுவது உறுதி. இவர்கள் பரலோகத்தின் வாசல் வரையிலும் சென்றுவிட்டார்கள். ஆனால் இவர்கள் போய்ச் சேர்ந்த இடமோ நரகம். தேவனுடைய நீதிமன்றத்தில் யாரும் தங்களுடைய சுய கிரியைகளை மேன்மைப்படுத்த முடியாது. அங்கு தேவனுடைய கிருபையும் இரக்கமுமே பிரதானமாக ஆளுகை செய்யும். அக்கிரம செய்கைக்காரரை தேவன் கண்டுபிடித்து அவர்களை நரகத்திற்கு அனுப்பிவிடுவார். ஆகையினால் நாம் கர்த்தாவே கர்த்தாவே என்று வாயினால் மாத்திரம் சொல்லாமல், அவருடைய சித்தத்தின்படி செய்கிறவர்களாகவும் இருக்கவேண்டும்