மத்தேயு சுவிசேஷம் - ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம் - 4
4. கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் மத் 7 : 7-11
நாம் ஜெபிக்கும்போது தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது. நமது தேவைகளை அவர் சந்திக்கிறார். நமது தேவைகளை பெற்றுக்கொள்வதற்கு ஜெபமே சரியான உபாயம்.
கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் ஆகிய மூன்றும் ஒரே நோக்கத்திற்காக செய்யப்படும் காரியங்களாகும். இம்மூன்று வார்த்தைகளுக்கும் ஒரே வார்த்தையில் பொருள் கூறவேண்டுமென்றால், ஜெபியுங்கள், ஜெபியுங்கள், மறுபடியும் ஜெபியுங்கள் என்று பொருள் கூறவேண்டும். நாம் கேட்கும்போது ஒரு பிச்சைக்காரன் தானதர்மம் கேட்பதுபோல கேட்கவேண்டும். நமது தேவன் கிருபையில் ஐசுவரியமுள்ளவர். அவரிடத்தில் உதவிக்காக கேட்கும்போது அவர் தமது ஐசுவரியத்திலிருந்து நமக்கு குறைவில்லாமல் தாராளமாக கொடுப்பார்.
நாம் கேட்கும்போது நமது தேவைகளையும், நமது பிரச்சனைகளையும் தேவனிடத்தில் தெரியப்படுத்துகிறோம். வெளியூரிலிருந்து பிரயாணமாக வரும் ஒருவர் சரியான பாதையை கேட்டுத் தெரிந்து கொள்வதுபோல நாமும் தேவனிடத்தில் கேட்கவேண்டும். ""இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகம் செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும்'' என்று கர்த்தர் கூறுகிறார் (எசே 36:37).
நாம் தொலைத்துவிட்ட விலைமதிப்புள்ள பொருளை தேடுவது போல கர்த்தரை தேடவேண்டும். தானியேலைப்போல அதை ஜெபத்தின் மூலமாக தேடவேண்டும். தானியேல் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட தன்னுடைய முகத்தை அவருக்கு நேராக்கினார் (தானி 9:3).
கர்த்தருடைய சமுகத்தில் தட்டவேண்டும். வீட்டிற்குள் போக விரும்புகிறவர்கள் கதவைத் தட்டுவார்கள். தேவனுடைய சமுகத்திற்குச் செல்லும் கதவை நமது பாவம் அடைத்துவிட்டது. ஜெபத்தின் மூலமாக நாம் தட்டவேண்டும். கர்த்தாவே உமது சமுகத்திற்கு வரும் கதவை எனக்கு திறந்தருளும் என்று விண்ணப்பம்பண்ண வேண்டும். இயேசுகிறிஸ்து வாசற்படியிலே நின்று நமது கதவைத் தட்டுகிறார் (வெளி 3:20). அவருடைய கதவை தட்டுவதற்கு நமக்கும் அனுமதிகொடுத்திருக்கிறார். இது தேவன் தமது பிள்ளைகளுக்கு கொடுத்திருக்கும் சிலாக்கியமாகும். பிச்சைக்காரர்கள் ஒரு வீட்டிற்கு சென்று அந்த வீட்டின் கதவைத் தட்டி பிச்சை கேட்க முடியாது. அந்த வீட்டிற்கு உள்ளே வர உரிமையுள்ளவர்கள் மாத்திரமே வீட்டின் கதவை தட்டமுடியும். நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறபடியினால் பரலோகத்தின் கதவை தட்டுவதற்கு தேவன் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
தேடுவதும் தட்டுவதும் கேட்பதையும் ஜெபிப்பதையும்விட முக்கியமானது. நாம் கேட்டால் மட்டும்போதாது. தேடவும் வேண்டும். நாம் ஜெபத்தில் கேட்டதை தேடவேண்டும். கேட்டதை பெற்றுக்கொள்ளும் வரையிலும் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கவேண்டும். கேட்பதோடு நிறுத்திவிடக்கூடாது. தட்டவும் வேண்டும். தேவனுடைய கதவுக்கு அருகில் வந்து இடைவிடாமல் அந்த கதவு திறக்கும் வரையிலும் தட்டிக்கொண்டிருக்க வேண்டும். நமது ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் வரையிலும் போராடி ஜெபிக்கவேண்டும்.
தேவன் ஜெபிக்கும் இருதயங்களை தேடிக்கொண்டிருக்கிறார். ஜெபிக்கும் இருதயம் உள்ளவர்கள் ஜெபத்தை கேட்கும் தேவனை கண்டுபிடிப்பார்கள். இவர்களுக்கு சமாதானத்தின் உத்தரவை தேவன் அருளுவார்.
கேளுங்கள்
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் (மத் 7:7).
நாம் கேட்கும்பொழுது நமக்கு கொடுக்கப்படும். நாம் கேட்பதை தேவன் நமக்கு கடனாக கொடுப்பதில்லை. கேட்பதை அவர் நமக்கு விற்பனை செய்வதில்லை. அதை அவர் நமக்கு இலவச ஈவாக கொடுக்கிறார். நாம் விசுவாசத்தோடு கேட்டால் பெற்றுக்கொள்வோம். நாம் கர்த்தரிடத்தில் சில காரியங்களை கேட்காமல் இருப்பதினால்தான் அவற்றை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறோம். கேட்பதில் பிரயோஜனமில்லை என்று நாம் நினைத்தால் அதை நமக்கு கொடுப்பதில் பிரயோஜனமில்லை யென்று கர்த்தரும் கொடுக்கமாட்டார்.
தேடுகிறவர்கள் கர்த்தரை கண்டடைவார்கள். தம்மை தேடுகிறவர்கள் மீது கர்த்தர் பிரியமாக இருக்கிறார். கர்த்தரை கண்டுபிடித்தால் அதுவே நமக்கு போதுமானது. தட்டுகிறவனுக்கு கர்த்தர் கதவை திறந்து கொடுப்பார். இரக்கத்தின் கதவையும், கிருபையின் கதவையும் தட்டுகிறவர்களுக்கு பூட்டி வைக்காமல் திறந்து கொடுப்பார். சத்துருக்களுக்கும் பாவிகளுக்கும் கர்த்தருடைய கிருபையின் கதவு பூட்டப்பட்டிருக்கும். அவருடைய சிநேகிதருக்கும் பிள்ளைகளுக்கும் இந்த கதவு திறக்கப்படும்.
நாம் தட்டியவுடன் கதவு திறக்கப்படவில்லையென்றால், தட்டுவதை நிறுத்திவிடக்கூடாது. தொடர்ந்து தட்டிக்கொண்டிருக்கவேண்டும். நாம் கேட்பது உடனே கிடைக்கவில்லையென்றால், நமது ஜெபத்தை நிறுத்திவிடக்கூடாது. கேட்பதைப் பெற்றுக்கொள்ளும் வரையிலும் ஜெபத்தில் தொடர்ந்து தட்டிக்கொண்டிருக்கவேண்டும்.
இரட்சிக்கப்பட்டிருக்கிற நாம் கர்த்தருடைய பிள்ளைகள். தேவனுடைய சுதந்தரவாளிகள். தமது குடும்பத்தில் கர்த்தர் நமக்கு ஒருசில சிலாக்கியங்களைக் கொடுத்திருக்கிறார். அவற்றை நாம் தேவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். மத் 7:7-11 ஆகிய வசனங்களில் 5 இடங்களில் ""கேளுங்கள்'' என்னும் வாக்கியம் வருகிறது. நாம் தேவனிடத்தில் கேட்பதைப் பெற்றுக்கொள்வோம் என்பது தேவனுடைய சித்தம்.
ஜெபத்திற்குப் பதில் கிடைக்க வேண்டுமென்றால் நாம் கேட்கவேண்டும், தேடவேண்டும், தட்ட வேண்டும். (லூக்கா 11:5-13; லூக்கா 18:1-18) நாம் விரும்புவதைத் தேவனிடம் கேட்கிறோம். நாம் இழந்துபோனதைத் தேடுகிறோம். நமக்கு தேவையானதைத் தருமாறு தேவனிடம் தட்டுகிறோம். தேவனிடத்தில் நாம் நம்பிக்கையுடனும், தாழ்மையுடனும் கேட்க வேண்டும். மிகுந்த கவனத்தோடு தேடவேண்டும். உண்மையான மனதுடனும், நீடிய பொறுமையுடனும் தட்ட வேண்டும். (லூக்கா 11:4-8)
கேட்கிறவன் பெற்றுக்கொள்கிறான்
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும் (மத் 7:8).
கேட்கிறவர்கள் யூதராக இருந்தாலும், புறஜாதியாராக இருந்தாலும் இயேசுகிறிஸ்துவிடம் பெற்றுக்கொள்கிறார்கள். சமுதாயத்தில் அவர்கள் உயர்ந்தவர்களா, தாழ்ந்தவர்களா என்னும் வேறுபாடு இயேசுகிறிஸ்துவிடம் இல்லை. தம்மிடத்தில் கேட்கிறவர்கள் ஐசுவரியவான்களா அல்லது தரித்திரர்களா என்று இயேசுகிறிஸ்து வேறு பிரித்து பார்ப்பதில்லை. கிருபாசனத்தண்டையில் வருவதற்கு எல்லோருக்குமே வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. வருகிறவர்கள் விசுவாசத்தோடு வரவேண்டும். தேவன் பட்சபாதம் பண்ணுகிறவரல்ல.
கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான் என்று நிகழ்கால வினைவடிவத்தில் இந்த வாக்கியம் கூறப்பட்டிருக்கிறது. வருங்காலத்திற்குரிய வாக்குத்தத்தத்தைவிட இது மேன்மையானது. கேட்கிறவர்கள் இனிமேல் எப்போதாவது பெற்றுக்கொள்வார்கள் என்று கூறுவதற்குப் பதிலாக, அவர்கள் இப்போதே பெற்றுக்கொள்கிறார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிச்சயமாகவே நிறைவேறும். அது இப்போதே நிறைவேறுகிறது.
தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பிரகாரம் நாம் நம்பிக்கொண்டிருக்கிற காரியங்கள் நிச்சயமாகவே ஏற்ற காலங்களில் நிறைவேறும். ஒரு சில வாக்குத்தத்தங்களை பெற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் நாம் கேட்கவேண்டும். கர்த்தரிடத்தில் கேட்பது ஒரு நிபந்தனை. நாம் கேட்காமல் பெற்றுக்கொள்ள முடியாது.
""கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்'' என்பது கர்த்தருடைய பிரமாணம். நாம் பெற்றுக் கொள்ளவில்லையென்றால் கேட்கும் நம்மிடம் விசுவாசம் குறைவாக இருக்கலாம். ஏனோதானோவென்று கவனமில்லாமல் தேடலாம்.
நமது அவிசுவாசத்தினால் நமது விண்ணப்பங்களுக்குப் பதில் கிடைப்பதில்லை. தவறான உபதேசித்தினாலேயே ஒருவனுக்குள் அவிசுவாசம் முளைக்கிறது. (ரோமர் 10:17) தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு அளவேயில்லை. (சங் 34:9-10)
கிழக்கு தேசத்திலுள்ள வீடுகளில் கதவு அடைக்கப்பட்டிருக்கும். வீட்டிற்குள் போகவேண்டுமென்றால் அந்த வீட்டின் கதவைத் தட்ட வேண்டும். வீட்டிற்குள் இருப்பவர் கதவைத் தட்டுபவரிடம் அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்பார். அந்த நபர் வீட்டிற்குள் வரவேண்டுமென்று வீட்டுக்காரர் நினைத்தால் மட்டுமே கதவு திறக்கப்படும். (லூக்கா 11:5-8)
அப்பத்திற்குப் பதிலாக
உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? (மத் 7:9,10).
பூமிக்குரிய ஒரு எடுத்துக்காட்டின் மூலமாக இயேசுகிறிஸ்து இந்த சத்தியத்தை விளக்குகிறார். பூமிக்குரிய பிதாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நன்மையான காரியங்களை கொடுக்கிறார்கள். அவர்கள் கேட்பதை கொடுத்து சந்தோஷப்படுகிறார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் அப்பத்தைக் கேட்டால் அவர்கள் பிள்ளைகளுக்கு கல்லைக் கொடுப்பதில்லை. பெற்றோரிடம் மீனைக்கேட்டால் அவர்கள் பிள்ளைகளுக்கு பாம்பைக் கொடுப்பதில்லை.
பெற்றோர்கள் பொல்லாதவர்களாக இருந்தாலும் தங்களுடைய பிள்ளைகளின் வேண்டுதலுக்கு செவி கொடுத்து அவர்களுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்கிறார்கள். பொல்லாதவர்களாகிய மனுஷரே தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற நமது பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறதற்கு நன்மையானவைகளை கொடுப்பது அதிக நிச்சயம்.
நாம் ஜெபத்தில் வேண்டிக் கொள்ளும்போது, கேட்டதைப் பெற்றுக் கொள்வோம் என்னும் எதிர்பார்ப்போடு கேட்கவேண்டும். பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடத்தில் பிரியத்தோடு வருவதுபோலநாமும் தேவனிடத்தில் நேசத்தோடு வரவேண்டும். தனக்கு ஏதாவது பிரச்சனைகள் இருக்குமென்றால் பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் ஓடோடி வந்து அவற்றை அறிவிப்பார்கள். நமது பரலோகப் பிதாவிடம் அவருடைய பிள்ளைகளாகிய நாம் நன்மையான காரியங்களுக்காக தேடி வரவேண்டும். அவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு கொடுக்கிறவர். நமக்கு நன்மையானது எது என்று அவருக்குத் தெரியும். ஆகையினால் நமக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானம் பண்ணும் உரிமையை தேவனிடத்திலேயே விட்டுவிடவேண்டும். உமது சித்தம் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கவேண்டும்.
சில சமயங்களில் நம்மை பாதிக்கும் சில காரியங்களை தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறோம். அதைப் பெற்றுக்கொண்டால், அதினால் நமக்கு நன்மை உண்டாவதற்குப் பதிலாக தீமை உண்டாகும் என்பது தேவனுக்குத் தெரியும். ஆகையினால் அவர் தமது தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக நாம் கேட்டுக்கொள்வதை நமக்கு கொடுக்க மறுத்துவிடுகிறார். அவர் கோபத்தினால் மறுப்பதில்லை. நம்மீதுள்ள அன்பினாலே மறுக்கிறார். அன்போடு மறுப்பது கோபத்தோடு கொடுப்பதைவிட மேன்மையானது. ஆகையினால் நாம் ஜெபத்தில் கேட்டது எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளவில்லையென்றால் சோர்ந்து போய் விடக்கூடாது.
நாம் ஜெபிக்கும்போது ஜெபத்தில் நாம் கேட்டவை நமக்கு கொடுக்கப்படும். தேவன் நம்மை ஏமாற்றுவதில்லை. அப்பத்தைக் கேட்டால் தேவன் நமக்கு அப்பத்தையே கொடுப்பார். கல்லைக் கொடுக்கமாட்டார். கல்லை வாயில் போட்டால் அது நமது பற்களை உடைத்துவிடும். மீனைக்கேட்டால் பாம்பைக் கொடுக்கமாட்டார். பாம்பைக் கையில் பிடித்தால் அது நம்மைக் கடித்துவிடும்.
பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகள்
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்தி-ருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத் 7:11)
நமது பெற்றோருக்கு பிள்ளைகள் மீது பாசத்தையும் நேசத்தையும் தேவனே கொடுக்கிறார். பிள்ளைகளுடைய தேவைகளை நிதானித்து அறிந்து கொடுக்கும் சிலாக்கியத்தை தேவன் பெற்றோருக்கு கொடுக்கிறார். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பராமரிக்க வேண்டும். பரலோகப் பிதாவாகிய நமது தேவன், தமது பிள்ளைகளாகிய நம்மை பராமரிக்கிறார். அவரே நம்மை பிள்ளைகளாக அங்கீகரித்திருக்கிறவர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கவனிப்பதுபோல நமது பரலோகப் பிதா நம்மை அன்போடு கவனிக்கிறார்.
""தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார்'' (சங் 103:13). ஒரு தாய் தன் பிள்ளையினிடத்தில் காண்பிக்கும் அன்பைப்போல தேவனும் தம்முடைய பிள்ளைகளாகிய நம்மிடத்தில் அன்பு கூறுகிறார். ""ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல நான் உங்களை தேற்றுவேன்'' என்று கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார் (ஏசா 66:13). ""ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை. இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன். உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது'' என்று கர்த்தர் அன்போடு கூறுகிறார் (ஏசா 49:15,16).
நமது பரலோகப் பிதாவின் அன்பும், நேசமும், நன்மையும், கிருபையும், பராமரிப்பும் உலகப் பிரகாரமான பெற்றோரின் அன்பைவிட மேன்மையானது. அதிகமானது. இந்த பூமிக்குரிய பெற்றோர்கள் நம்மை பராமரிக்கிறார்கள். நமது பிள்ளைகளை நாம் பராமரிக்கிறோம். நம்மைவிட நமது பரலோகப்பிதா தமது பிள்ளைகளாகிய நம்மை பராமரிக்கிறார்.
நம்மைவிட நமது பரலோகப் பிதாவுக்கு நம்மைப் பற்றி அதிகமாக தெரியும். சில சமயங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கேட்பதையெல்லாம் கொடுத்து அவர்களை பலவீனர்களாக்கிவிடுவார்கள். அவர்களுக்கு நன்மையானதை கொடுப்பதாக நினைத்து சில சமயங்களில் தீமையானதை கொடுத்துவிடுவார்கள். ஆனால் நமது பரலோகப் பிதாவோ சர்வஞானமுள்ளவர் நமக்கு நன்மையானது எது என்று அவருக்குத் தெரியும். அவர் நமக்கு நன்மையான ஈவுகளை மாத்திரமே தருவார்.
உலகப்பிரகாரமான பெற்றோரின் பராமரிப்பையும் நமது பரலோகப் பிதாவின் கிருபையுள்ள இரக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் இவ்விரண்டிற்கும் அதிக வித்தியாசத்தைக் காணலாம். தேவனுடைய கிருபை சூரியனைப்போன்று பிரகாசமுள்ளது. உலகப் பெற்றோரின் அன்போ ஒரு மெழுகுவர்த்தியைப்போன்று சிறியது. தேவனுடைய அன்பு சமுத்திரத்தைப் போன்று பெரியது. மனுஷருடைய அன்பு அந்த சமுத்திரத்திலுள்ள ஒரு துளி தண்ணீர் போன்றது. நமது தேவன் ஐசுவரிய சம்பன்னர். அவரால் நமது தேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை தமது ஐசுவரியத்திலிருந்து தாராளமாக கொடுக்கமுடியும். ஆனால் பூமிக்குரிய பெற்றோரோ சில சமயங்களில் தங்கள் பிள்ளைகளுக்கு தாங்கள் விரும்பியதை கொடுப்பதற்கு வசதியற்றவர்களாக இருப்பார்கள்.
பொல்லாத தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்கிறார்கள். தங்களால் முடிந்த எல்லா நன்மைகளையும் செய்கிறார்கள். பிள்ளைகளும், பெற்றோர்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்றுக் கொள்கிறார்கள். உணவு, உடை, மற்றும் தேவையான எல்லா பொருள்களையும் உலகப்பிரகாரமான தந்தைமார்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தாராளமாகக் கொடுக்கிறார்கள். அவர்களே இப்படிக் கொடுக்கும்போது நம்மீது கரிசனையுள்ள நமது பரலோகப்பிதா, நமது தேவைகளை அறிந்திருக்கிறவர், நிச்சயமாகவே நமக்குத் தேவையானவற்றை கொடுப்பார். கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பார் என்று லூக்கா கூறுகிறார். (லூக்கா 11:13)
ஆபத்துக்களிலிருந்து விடுதலை, தீமையிலிருந்து பாதுகாப்பு, சரீர சுகம், வாழ்வில் வளம், சந்தோஷம், சமாதானம் இவை எல்லாமே நன்மையானவைகளே. இவற்றை நமது பரலோகப்பிதாவிடம் நாம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். கர்த்தர் நமது தேவைகளைச் சந்திக்க விரும்புகிறார். (மத் 7:7-11)