மத்தேயு சுவிசேஷம் - ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம் - 6
6. உபவாசமும் ஜெபமும்
பிசாசு பிடித்திருந்த இளைஞன் மத் 17 : 14-21
ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும்
அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான் (மத் 17:14,15).
மறுரூபமலையிலிருந்து இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களில் மூன்றுபேரும் கீழே இறங்கி வருகிறார்கள். அங்கு ஒரு தகப்பன் சந்திரரோகியாய் கொடிய வேதனைப்படும் தன் குமாரனுக்காக இயேசுகிறிஸ்துவிடம் விண்ணப்பம் பண்ணுகிறான். இயேசுகிறிஸ்து மறுரூபமலையில் மகிமையடைந்த போதிலும், அவர் இன்னும் ஜனங்களுடைய துயரங்களையும், வேதனைகளையும், பாடுகளையும் குறித்து கரிசனையுள்ளவராகவே இருக்கிறார்.
இந்த மனுஷன் இயேசுகிறிஸ்துவினிடத்தில் முழங்கால் படியிட்டு பணிவாக விண்ணப்பம்பண்ணுகிறான். மனுஷருக்கு துன்பமும் துயரமும் வரும்போது அது அவர்களை அவர்களுடைய முழங்காலில் நிறுத்தும். முழங்காலில் நின்று யுத்தம்பண்ணினால் பிசாசை ஜெயிக்கலாம்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக்குறித்து அதிக கரிசனையோடிருப்பார்கள். பிள்ளைகள் பலவீனமாக இருக்கும்போதும், துன்மார்க்க ஜீவியத்தில் ஜீவிக்கும்போதும் பெற்றோர்கள் அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்பார்கள். இந்த இளைஞனுடைய வியாதி மிகவும் கொடியது. அவன் சந்திரரோகியாய் கொடிய வேதனைப்படுகிறான். இது மூளையில் ஏற்படும் வியாதியாகும். •மூளையிலுள்ள நரம்புகள் செயலிழந்து போகும்போது அவனால் சரியாக நிற்கமுடியாது. திடீரென்று கீழே விழுந்துவிடுவான்.
சாத்தான் இந்த இளைஞனை பிடித்திருக்கிறான். ஆகையினால் இவன் கீழே விழும்போது அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான். பிசாசுகள் மனுஷரை பிடித்து அவர்களுக்கு சரீர வியாதிகளை கொடுக்கின்றன. இந்த வியாதிகளில் பெரும்பாலானவை பிசாசு பிடித்தவர்களின் சிந்தையை பாதித்து விடுகிறது. ஆத்துமாவை பிடித்து அதை அலைக்கழிக்க வேண்டுமென்பதே சாத்தானுடைய பிரதான நோக்கம்.
இளைஞனுடைய தகப்பன் இயேசுகிறிஸ்துவிடம் தன் மகனுக்கு சந்திரரோக வியாதி என்று கூறுகிறான். அவனுக்கு அந்த வியாதியின் விளைவு மாத்திரமே தெரிகிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவோ இந்த வியாதிக்கு அடிப்படைக் காரணத்தை அறிந்து வைத்திருக்கிறார். பிசாசை அதட்டுகிறார். அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமாகிறான். இயேசுகிறிஸ்து சாத்தானுடைய அஸ்திபாரத்தையே அசைத்து அதை அகற்றிப்போடுகிறார்.
இயேசுகிறிஸ்து நமது சரீர வியாதிகளை குணப்படுத்துவதுபோலவே ஆவிக்குரிய வியாதிகளையும் குணப்படுத்துகிறார். இனிமேல் அந்த இளைஞன் தீயிலும் ஜலத்திலும் அடிக்கடி விழமாட்டான். நிதானமாக நிற்பான். நிதானமாக நடப்பான். அவனுடைய சரீரத்தில் பிசாசு இருந்தபோது, அந்த சரீரத்தை பிசாசு தனக்கு இஷ்டம்போல ஆளுகை செய்தது. இயேசுகிறிஸ்து அந்த பிசாசை துரத்திய பின்போ அந்த சரீரம் நிதானமாக செயல்படுகிறது.
ஒரு மனுஷன் இயேசுவினிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிடுகிறான். இது பழங்காலத்துப் பழக்கம். ஒருவருடைய தயவு நமக்கு தேவையென்றால் அவர் முன்பாக முழங்கால்படியிட்டு, நமது தாழ்மையை வெளிப்படுத்தி, நமது கோரிக்கையைப் பணிவோடு கேட்கும் வழக்கம். (யாத் 9:29)
""சந்திரரோகி'' என்பது போன்ற வியாதி அமாவாசையிலும், பௌர்ணமியிலும் வரும். சந்திரரோகி வியாதியுடையவர்கள் இவ்விரண்டு நாட்களிலும் அதிக வேதனைகளை அனுபவிப்பார்கள். சந்திரனுடைய தோற்றத்தினாலும், மறைவினாலும் ஏற்படக் கூடிய காலமாறுதலால் இந்த வியாதி வருவதாக ஜனங்கள் பொதுவாக நினைக்கிறார்கள். ஆனால் இது சாத்தானின் தந்திரம். இந்த வியாதி பிசாசின் கிரியையே. அவன் ஜனங்களைத் திசை திருப்பி, இந்த வியாதிக்கு சந்திரனே காரணம் என்று ஜனங்களைப் பொய்யாக நம்ப வைத்திருக்கிறான். (மத் 17:18; மாற்கு 9:17; லூக்கா 9:38)
அவன் அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான். பிசாசு இந்தச் சிறுவனைக் கொல்வதற்கு முயற்சி பண்ணிற்று. அவனைத் தீயிலும், ஜலத்திலும் தள்ளிற்று. அந்தக் குடும்பத்தில் அவனைப் பற்றிய மரணபயம் உண்டாயிற்று.
சீஷர்களால் கூடாமற்போயிற்று
அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்றான் (மத் 17:16).
தன்னுடைய மகனின் வியாதியை சுகமாக்கவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணியதோடு அந்த மனுஷன் நிறுத்திக்கொள்ளவில்லை. இதற்கு முன்பு நடந்த சம்பவத்தையும் அவன் இயேசுவிடம் விவரிக்கிறான். இந்த மனுஷன் தன் மகனை கிறிஸ்துவின் சீஷர்களிடத்தில் கொண்டுவந்தான். ஆனால் அவனை சொஸ்தமாக்க சீஷர்களால் கூடாமற்போயிற்று. இதை மறைக்காமல் அந்த மனுஷன் இயேசுகிறிஸ்துவிடம் அறிவித்துவிடுகிறான்.
இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு பிசாசுகளை துரத்தும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார் (மத் 10:1,8). அவர்கள் இதற்கு முன்பு அந்த அதிகாரத்தை பயன்படுத்தி பிசாசுகளை வெற்றிகரமாக துரத்தியிருக்கிறார்கள் (லூக் 10:17). ஆனால் இந்த சம்பவத்தில் சீஷர்களால் பிசாசை துரத்தக்கூடாமற்போயிற்று. மொத்தம் ஒன்பது சீஷர்கள் இருக்கிறார்கள். ஒன்பது சீஷர்களும் சேர்ந்து இந்த பிசாசை துரத்த முடியவில்லை.
மற்றவர்களால் சொஸ்தமாக்க முடியவிட்டாலும், கிறிஸ்துவால் கூடாத காரியம் ஒன்றுமேயில்லை. இது கிறிஸ்துவுக்கே உரிய மகிமையாகும். சில சமயங்களில் குளங்கள் வறண்டுபோனால் ஜனங்கள் நீரூற்றை தேடிவருவார்கள். இயேசுகிறிஸ்துவே நமது நீரூற்றாக இருக்கிறார். ஏதாவது சில சமயங்களில் ஊழியக்காரர்களால் நமக்கு உதவிபுரிய முடியவில்லையென்றால், வற்றாத ஜீவநீரூற்றாகிய இயேசுகிறிஸ்துவிடம் நாம் வந்து சேரவேண்டும்.
ஊழியக்காரர்களால் சொஸ்தமாக்க முடியவில்லையென்றால் இயேசுகிறிஸ்துவின் குணமாக்கும் வல்லமை குறைந்துபோயிற்று என்பது பொருளல்ல. இயேசுகிறிஸ்துவால் தமது ஊழியர்களை பயன்படுத்தி வியாதிகளை குணமாக்கவும் முடியும், யாரையும் பயன்படுத்தாமல் தாமாகவே வந்து வியாதிகளை குணமாக்கவும் முடியும்.
இயேசு கிறிஸ்துவிற்கு பிசாசுகளின்மீது அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை அவர் தமது பிள்ளைகளுக்கும் கொடுத்திருக்கிறார். நாம் இந்த அதிகாரத்தை விசுவாசத்தோடு பயன்படுத்த வேண்டும். (மாற்கு 16:17-18; லூக்கா 10:19; யோவான் 14:12).
என்னிடத்தில் கொண்டுவாருங்கள்
இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியோ, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார் (மத் 17:17).
சீஷர்களால் இளைஞனை சொஸ்தமாக்க கூடாமற்போயிற்று என்று அந்த மனுஷன் சொன்னவுடன் இயேசு பிரதியுத்தரமாக ""விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே'' என்று கடிந்து கூறுகிறார். இந்த வார்த்தையை இயேசு தமது சீஷர்களைப்பார்த்து கூறவில்லை. ஜனங்களைப்பார்த்து கூறுகிறார். அதிலும் விசேஷமாக வேதபாரகரைப்பார்த்து ""விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே'' என்று கூறி அவர்களை கடிந்துகொள்கிறார்.
இயேசுகிறிஸ்துவினால்கூட சில சமயங்களில் ஜனங்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தமாக அநேக அற்புதங்களை செய்ய கூடாமற்போயிற்று. அதேபோல இப்போதும் அந்த சந்ததியாருக்கு விசுவாசம் இல்லாமல் போனதினால் அவர்களால் தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களிடம் விசுவாசம் இருந்திருக்குமென்றால் அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றிருப்பார்கள். இந்த இளைஞனும் சொஸ்மாகியிருப்பான்.
தங்களுக்கு விசுவாசமில்லாமல், இந்த ஜனங்கள் சீஷர்களுக்கு வல்லமையில்லை என்று அவர்களை குறை கூறுகிறார்கள்.
இயேசுகிறிஸ்து அந்த ஜனங்களிடம் மேலும் இரண்டு காரியங்களை கூறுகிறார். அவையாவன : 1. எதுவரைக்கும் நான் உங்களோடிருப்பேன் 2. எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்.
தம்முடைய சரீரப்பிரகாரமான பிரசன்னம் இந்த ஜனங்களுக்கு எப்போதுமே தேவையாக இருக்கிறது. அவர்கள் இன்னும் தங்கள் விசுவாசத்தில் வளரவில்லை. முதிர்ச்சியடையவில்லை. ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களோடுகூடவே இருக்கவேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு சிறு குழந்தையை ஆரம்பத்தில் தூக்கி சுமக்கலாம். அதை எப்போதுமே தூக்கி சுமக்கமுடியாது. அந்த குழந்தையும் ஒரு காலத்தில் நடக்கப்பழகவேண்டும். யாருடைய உதவியும் இல்லாமல் தானாக நடக்க கற்றுக்கொள்ளவேண்டும்.
இயேசுகிறிஸ்து இந்த ஜனங்களோடு நீடிய பொறுமையோடிருக்கிறார். ஆயினும் எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன் என்று கேட்கிறார். அவர்களுடைய அவிசுவாசம் இயேசுகிறிஸ்துவை துக்கப்படுத்துகிறது. கிறிஸ்துவின் கிருபையை ஜனங்கள் அசட்டைபண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து மனுஷனல்ல. அவர் மெய்யான தேவன். அவருடைய பொறுமைக்கும் ஒரு வரையறை உண்டு. அவருடைய ஆவி மனுஷனோடு எப்போதும் போராடிக் கொண்டிருப்பதில்லை.
இயேசுகிறிஸ்து ஜனங்களோடு தொடர்ந்து விவாதம்பண்ணிக் கொண்டிருக்கவில்லை. கொடிய வேதனைப்படும் அந்த இளைஞனை சொஸ்தமாக்க வேண்டுமென்று விரும்புகிறார். ""அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்'' என்று அன்போடும் கரிசனையோடும், அதிகாரத்தோடும், வல்லமையோடும் கூறுகிறார். ஜனங்கள் அவிசுவாசத்தில் சோர்ந்து போயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவும் அவர்கள்மீது கோபமாக இருக்கிறார். இவற்றின் மத்தியிலும் இந்த இளைஞன்மீது இயேசுகிறிஸ்துவின் கிருபை குறைந்து போகவில்லை. அவர் கோபமாக இருந்தாலும் அன்பாகவே இருப்பார். இந்த இளைஞனுக்கு இங்குள்ள சூழ்நிலை சாதகமாகயில்லை. ஆயினும் இயேசு அவனை தம்மிடத்தில் கொண்டுவருமாறு கூறுகிறார். நமக்கும் எல்லா உதவிகளும் நின்றுபோனாலும், நம்மை தம்மிடத்தில் வருமாறு இயேசுகிறிஸ்து அன்போடு அழைக்கிறார்.
""விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியோ, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்?'' என்னும் இந்த வசனம் சீஷர்களையும் குறிக்கும். (மத் 17:20) அந்தச் சிறுவனின் தந்தையையும் குறிக்கும். (மாற்கு 9:17-24) சீஷர்களைக் குற்றப்படுத்திய வேதபாரகரையும் குறிக்கும். (மாற்கு 9:16)
இயேசு பிசாசை அதட்டுகிறார்
இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான் (மத் 17:18).
இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அந்த இளைஞனை அவரிடம் அழைத்து வருகிறார்கள். இயேசு அவனிடத்திலுள்ள பிசாசை அதட்டுகிறார். பிசாசின்மீது அதிகாரமுள்ளவராக இயேசு அதை அதட்டுகிறார். தம்முடைய வார்த்தையின் வல்லமையினால் இயேசுகிறிஸ்து பிசாசின்மீது வெற்றி சிறந்திருக்கிறார். கிறிஸ்து அதட்டும்போது சாத்தானால் அதற்கு எதிர்த்து நிற்கமுடியாது. பிசாசு ஒருவனை எவ்வளவு நீண்டகாலமாக பிடித்து வைத்திருந்தாலும், இயேசுகிறிஸ்து அதை அதட்டினால் போதும், உடனே பிசாசு அவனை விட்டு ஓடிப்போகும்.
இயேசுகிறிஸ்து பிசாசை அதட்டியவுடனே அது அவனை விட்டு புறப்பட்டுப்போயிற்று. அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமாகிறான். பரிபூரணமான சுகமாதல் உடனடியாக உண்டாயிற்று. இந்த சம்பவத்தை வாசிக்கும்போது பெற்றோர்களுக்கு தங்களுடைய பிள்ளைகளை இயேசுகிறிஸ்துவிடம் அழைத்து வரவேண்டும் என்னும் உற்சாகம் உண்டாகும். பிள்ளைகளை இயேசுகிறிஸ்துவிடம் ஜெபத்தில் அழைத்து வரவேண்டும். கிறிஸ்துவின் வார்த்தைக்கு நேராக அழைத்து வரவேண்டும். இயேசுகிறிஸ்து பிசாசை அதட்டும்போது சாத்தானுடைய அதிகாரம் அழிந்துபோகிறது.
எங்களால் ஏன் கூடாமற்போயிற்று
அப்பொழுது. சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள் (மத் 17:19).
கிறிஸ்துவின் சீஷர்கள் இங்கு நடைபெறும் சம்பவங்களையெல்லாம் கூர்மையாக கவனித்துக்கொண்டு வருகிறார்கள். சீஷர்கள் பிசாசை துரத்தியபோது அது அந்த இளைஞனை விட்டு போகவில்லை. இதற்கான காரணமும் புரியவில்லை. இதன் காரணத்தை இயேசுவிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் இயேசுவினிடத்தில் தனித்து வருகிறார்கள்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் ஜனங்கள் மத்தியில் வெளியிலே ஊழியம் செய்யவேண்டியவர்கள். எவ்வளவுதான் வெளி ஊழியம் செய்தாலும் அவர்களும் இயேசுகிறிஸ்துவிடம் தனித்து வந்து அவரோடு ஐக்கியமாக இருந்து ஜெபிக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவை கிட்டிச் சேரும் சிலாக்கியம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை நாம் பயன்படுத்தி அவருடைய சமுகத்திற்கு அருகில் வரவேண்டும். நமது சூழ்நிலைகளையெல்லாம் மறந்து, நமது பாரத்தையெல்லாம் அவர்மீது இறக்கி வைத்துவிட்டு ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும்.
உங்கள் அவிசுவாசத்தினாலேதான்
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 17:20).
சீஷர்களால் பிசாசை துரத்திவிட கூடாமற்போயிற்று. இதற்கான காரணத்தை சீஷர்கள் இயேசுவிடம் தனித்து வந்து கேட்கிறார்கள். இயேசு சீஷர்களுக்கு இரண்டு காரணங்களை கூறுகிறார். அவையாவன: 1. உங்கள் அவிசுவாசத்தினாலேதான் 2. இந்த ஜாதி பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி வேறெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது.
இயேசுகிறிஸ்து அங்கு கூடியிருந்த ஜனங்களைப்பார்த்து விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே என்று கூறி அவர்களுடைய அவிசுவாசத்தை கடிந்து கொண்டார். இப்போது தமது சீஷர்களிடம் தனியாக பேசும்போதும் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து பேசுகிறார். சீஷர்களிடமும் அவிசுவாசம் இருக்கிறது. ஜனங்களிடமும் அவிசுவாசம் இருக்கிறது. சில சமயங்களில் ஊழியம் வெற்றிகரமாக நடைபெறவில்லையென்றால் ஜனங்கள் அந்த பழியை ஊழியக்காரர் மீது போட்டுவிடுகிறார்கள். ஊழியக்காரர்களோ அந்த பழியை ஜனங்கள்மீது போட்டுவிடுகிறார்கள். ஊழியம் வெற்றிகரமாக இல்லையென்றால் ஊழியக்காரர்களிடத்திலும் தவறுள்ளது, ஜனங்களிடமும் தவறுள்ளது என்பதை இருவருமே அங்கீகரிக்கவேண்டும்.
இந்த சம்பவத்தில் சீஷர்களுக்கும் விசுவாசமுள்ளது. ஜனங்களுக்கும் விசுவாசமுள்ளது. ஆனால் இந்த விசுவாசம் பலவீனமானது. குறைவுள்ளது. ஆற்றல் இல்லாதது. விசுவாசத்தில் வல்லமையும், கிரியையும், ஆற்றலும், பெலனும் இல்லையென்றால் அதை அவிசுவாசம் என்றே அழைக்கவேண்டும்.
இயேசுகிறிஸ்து சில சமயங்களில் தம்மை பின்பற்றி வருகிறவர்களை அவிசுவாசிகளே என அழைக்கிறார். ஆனால் உண்மையில் அவர்கள் அவிசுவாசிகளல்ல. விசுவாசிகள்தான். விசுவாசத்தில் குறைவுள்ளவர்கள். நம்மிடத்தில் விசுவாச குறைவு காணப்படுவதினால் நமது ஊழியத்தில் நாம் எதிர்பார்க்கும் வெற்றியும் வளர்ச்சியும் காணப்படுவதில்லை.
இயேசுகிறிஸ்து இந்த சம்பவத்தை பயன்படுத்தி விசுவாசத்தின் வல்லமையை அவர்களுக்கு தெளிவுபடுத்துகிறார். ""கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால்'' என்று ஒரு வாக்கியத்தை கூறுகிறார். வேதபண்டிதர்கள் இதற்கு வெவ்வேறு விதமாக வியாக்கியானம் கூறுகிறார்கள். கடுகு விதையின் சாரத்தைக்குறித்து கிறிஸ்து இங்கு கூறுவதாக சிலர் அர்த்தங்கூறுகிறார்கள். கடுகு விதையானது கூர்மையானது, சாரமுள்ளது. சிறிய இடத்திலும் உட்புகக்கூடியது. அதுபோல நமது விசுவாசமும் மரித்துப்போயிராமல் ஆற்றலுள்ளதாக இருக்கவேண்டும் என்பது சிலருடைய வியாக்கியானம்.
மற்றவர்கள் கடுகளவு விதையைப்பற்றி கூறும்போது அதன் அளவைக் குறிப்பிடுகிறார்கள். எல்லா விதைகளிலும் கடுகு விதையே அளவில் சிறியது. நம்மிடத்தில் உள்ள விசுவாசம் அளவில் சிறியதாக இருந்தாலும் அது மெய்யான விசுவாசமாக இருக்கவேண்டும் என்பது இவர்களுடைய வியாக்கியானம்.
தமது நாமத்தினாலே அற்புதங்களை செய்யும் வல்லமையை இயேசுகிறிஸ்து சீஷர்களுக்கு கொடுத்திருக்கிறார். இதை இவர்கள் விசுவாசித்து நடைமுறையில் செயல்படுத்தவேண்டும். இந்த சம்பவம் நடைபெற்ற போது இயேசுகிறிஸ்து அவர்களோடு இல்லை. சீஷர்களில் முக்கியமான மூன்று சீஷர்களும் அவர்களோடு இல்லை. ஆகையினால் தாங்கள் குறைபாடுள்ளவர்கள் போல சீஷர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். இயேசுவின் நாமத்தினால் அற்புதத்தை செய்வதற்கு, இயேசுவும் மூன்று சீஷர்களும் இல்லாத சமயத்திலும், தங்களுக்கு வல்லமை உண்டு என்னும் விசுவாசம் சீஷர்களுக்கு குறைந்து போயிற்று.
நாம் ஊழியம் செய்யும்போது நமது சுயத்தை சார்ந்திருக்கக்கூடாது. நமது சுயபலனை சார்ந்திருக்கக்கூடாது. சூழ்நிலையை நோக்கிப் பார்க்கக்கூடாது. இயேசுகிறிஸ்துவால் எல்லாம் ஆகும் என்று விசுவாசிக்கவேண்டும். தேவன் நமக்கு கொடுத்திருக்கும் வல்லமையை சந்தேகப்படுவது பாவம். நமது அவிசுவாசம் தேவனைப் பிரியப்படுத்தாமல் வருத்தப்படுத்தும்.
நம்மிடத்தில் கடுகளவு விசுவாசம் நமக்கு இருந்தால், ஒரு மலையைப் பார்த்து இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம்போகும். இது ஒரு வழக்குச்சொல்லாகும். நம்மால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்பதே இதன் பொருள். தாங்கள் பெற்றிருக்கும் வல்லமையை சீஷர்கள் விசுவாசியாமற் போனதினால், அவர்களால் பிசாசை துரத்தக்கூடாமற்போயிற்று. மெய்யான விசுவாசம் மலையை பெயர்க்கும். தெய்வீக வல்லமையை, தெய்வீக வாக்குத்தத்தத்தோடு இணைத்து, அதை விசுவாசத்தினால் செயல்படுத்தும்போது நம்மால் கூடாத காரியம் ஒன்றுமிராது.
சீஷர்கள் தங்களுடைய உண்மையான நிலைமையைப் புரிந்து கொள்கிறார்கள். தங்களுடைய தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து பார்க்க மனப்பூர்வமாக முன்வருகிறார்கள்.
""உங்கள் அவிசுவாசத்தினாலேதான்'' என்று இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் கேள்விக்கு பதில் சொல்லுகிறார். இயேசுவின் பதில் எளிமையானது. அதே சமயத்தில் முழுமையானது. நம்முடைய ஊழியங்களில் தோல்விகள் வருவதற்கும், பிசாசுகளைத் துரத்தமுடியாமற்போவதற்கும், ஜெபத்திற்கு பதில் கிடைக்காமல் இருப்பதற்கும் அவிசுவாசமே காரணம். தேவனுடைய வாக்குத்தத்தம் எல்லோருக்கும் உரியது. இதில் நிபந்தனை என்னவென்றால், நாம்கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும். நம்மிடத்தில் தேவனைப் பற்றியும், அவருடைய வல்லமையைப் பற்றியும் அவிசுவாசம் இருக்கக்கூடாது.
நம்மிடத்தில் விசுவாசம் இருந்தால் நமக்குக் காரியம் வாய்க்கும். விசுவாசம் இல்லையென்றால் ஒரு காரியமும் வாய்க்காது.
கடுகுவிதை அளவில் சிறியது. ஆனால் சுத்தமானது. ஆற்றல் உடையது. கலப்படம் இல்லாதது. நமது விசுவாசமும் கலப்படமில்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட விசுவாசம் மலையைக்கூட அப்புறம்போக வைக்கும்.
பிசாசுகள் பலவிதம். அவைகளின் வல்லமையும் பலவிதம். அவற்றை விரட்டும்போது நாம் ஜெபத்தோடும், உபவாசத்தோடும் விரட்ட வேண்டும். (யோவான் 3:34)
ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்
இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார் (மத் 17:21).
சில பிசாசுகள் சாதாரணமாக துரத்தினால் போகாது. சில வியாதிகளை சொஸ்தமாக்குவது எளிதாகயிராது. கடினமாக இருக்கும். இயேசுகிறிஸ்து இந்த சம்பவத்தை ""இந்த ஜாதி பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி, மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது'' என்று கூறுகிறார். சாத்தானுக்கும் வல்லமையுள்ளது. அவனுடைய வல்லமை நமது விசுவாசத்தை சோர்வடைய வைத்துவிடக்கூடாது. சாத்தானுடைய வல்லமையைப்பார்த்து அவனை துரத்தும் வல்லமை நமக்கும் வேண்டுமென்று தேவனிடத்தில் ஜெபிக்கவேண்டும். சோர்வடையாமல் அதிக உற்சாகமாக ஜெபத்தில் தரித்திருக்கவேண்டும். தேவனிடத்தில் ஜெபித்து அவரை துதிக்க துதிக்க, அவருடைய கிருபையும் வல்லமையும் நமக்கு அதிகமாக கொடுக்கப்படும்.
ஜெபமும் உபவாசமும் நாம் தெய்வீக வல்லமையை பெற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய உபாயங்களாகும். உபவாசத்தோடு ஜெபம்பண்ணும்போது நமது ஜெபம் அதிக ஆற்றலுள்ளதாக இருக்கும். உபவாசிக்கும்போது ஜெபத்தில் நம்மை தாழ்த்துகிறோம். ஜெபிக்காமல் உபவாசிப்பதினால் பயனில்லை. இவ்விரண்டும் சேர்ந்து வரவேண்டும். அப்போதுதான் இவை நமது சரீரத்தை கட்டுப்படுத்தி ஆளுகை செய்து, நமது ஆத்துமாவையும் ஆவியையும் தேவனுடைய பாதத்தில் சமர்ப்பிக்கும். நமக்கு தேவனுடைய வல்லமை கிடைக்கும்.