மத்தேயு சுவிசேஷம் - ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம் 10
10. பிதாவிடம் வேண்டிக்கொள்வது மத்தேயு 26:51-54
காதறவெட்டுகிறான்
அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான் (மத் 26:51).
இயேசுவோடு இருந்தவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை காதறவெட்டுகிறான். சீஷர்களிடம் மொத்தம் இரண்டு பட்டயங்கள் உள்ளன (லூக் 22:38). அவற்றில் ஒன்று பேதுருவிடம் உள்ளது. பட்டயத்தை உருவுவதற்கு இது ஏற்ற தருணம் என்று பேதுரு நினைத்து, அதை உருவி வேலைக்காரனை காதறவெட்டிப்போடுகிறான். அவனுடைய காதை வெட்டவேண்டுமென்பது பேதுருவின் இலக்காக இருந்திருக்காது. அவனுடைய தலையை வெட்டவேண்டுமென்று குறிபார்த்திருப்பான். அந்த குறி தவறி அவனுடைய காதை வெட்டும்படி ஆயிற்று.
தன் ஆண்டவருக்காக பேதுரு அநேக காரியங்களை செய்ய ஆயத்தமாகயிருக்கிறான். இயேசுவோடுகூட மரிக்கவும் அவன் ஆயத்தமாக இருக்கிறான். தன்னுடைய ஆண்டவருக்கு ஆபத்துவரும்போது, தன்னுடைய பாதுகாப்பைப்பற்றி கவலைப்படாமல் தைரியமாக செயல்படுகிறான். இயேசுகிறிஸ்துவின்மீது பேதுரு பக்தி வைராக்கியமாக இருக்கிறான். அவருடைய மகிமையிலும், மேன்மையிலும், பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறையோடு இருக்கிறான். பேதுரு உற்சாகமாக இருந்தாலும் இந்த விஷயத்தில் அவன் ஞானத்தோடு செயல்படவில்லை. இயேசுகிறிஸ்துவின் அனுமதியில்லாமலேயே வேலைக்காரனுடைய காதை வெட்டிப்போடுகிறான்.
பட்டயத்தை உருவுவது கிறிஸ்துவின் சித்தமல்ல. நாம் பட்டயத்தை உருவுவதற்கு முன்பாக பலமுறை யோசிக்கவேண்டும். பட்டயத்தை எடுக்கிறவன் பட்டயத்தால் அழிந்துபோவான். இயேசுவைப் பிடிக்க திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கிறார்கள். சீஷர்களிடமோ இரண்டு பட்டயம் மாத்திரமே இருக்கிறது. இரண்டு பட்டயத்தைக்கொண்டு திரளான ஜனங்களோடு யுத்தம்பண்ணுவது இயலாத காரியம்.
உறையிலேபோடு
அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள் (மத் 26:52).
பேதுருவின் செய்கையை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கவில்லை. அவனை கடிந்துகொள்கிறார். ""உன் பட்டயத்தை திரும்ப அதன் உறையிலே போடு'' என்று கூறுகிறார். பேதுருவின் செய்கைக்காக இயேசு அவனை பாராட்டவில்லை. அவன் நல்லமனதோடு இந்தக் காரியத்தை செய்தாலும் இது கிறிஸ்துவின் சித்தமல்ல. தம்முடைய ராஜ்யத்தை பட்டயத்தினால் ஸ்தாபிக்கவேண்டுமென்பது இயேசுவின் நோக்கமல்ல. இந்த உலகத்திற்கு சமாதானத்தை கொடுப்பதற்காகவே இயேசுகிறிஸ்து வந்திருக்கிறார். அவர் யுத்தம்பண்ணுவதற்கு வந்தவரல்ல. அவருடைய நாமம் சமாதான பிரபு என்பதாகும்.
புறஜாதியாருடைய அதிகாரிகள் ஜனங்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள். பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் இறுமாப்பாய் ஆளுகை செய்யக்கூடாது. அவர்களில் எவனாகிலும் பெரியவனாக இருக்க விரும்பினால் அவன் மற்றவர்களுக்கு பணிவிடைக்காரனாயிருக்கவேண்டும் என்பதே இயேசுகிறிஸ்துவின் உபதேசம் (மத் 20:25,26). பட்டயத்தை திரும்ப அதன் உறையிலே போடுமாறு இயேசு பேதுருவிடம் கூறுகிறார். அதன்பின்பு பேதுரு தன் பட்டயத்தை உருவவேயில்லை.
பட்டயத்தை எடுப்பதினால் ஆபத்து உண்டாகும். பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள். பலாத்காரத்தை கையாளுகிறவர்கள் பலாத்காரத்தினால் அழிந்துபோவார்கள். மற்றவருடைய இரத்தத்தை சிந்தி மனுஷன் அமைதி இழந்துபோகிறான். தன்னுடைய சத்துருக்களின் எண்ணிக்கைகளை அதிகரிக்கிறான். சுயபாதுகாப்பாக இருந்தாலும் மற்றவர்களுடைய இரத்தத்தை சிந்துவது சரியான முறையல்ல.
பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பிய திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்கள் பட்டயங்களையும் தடிகளையும் நம்புகிறார்கள். பட்டயத்தை எடுக்கிறவர்கள் பட்யத்தால் மடிந்துபோவார்கள். இயேசுகிறிஸ்துவை அழிப்பதற்கு யூதர்கள் ரோமப்பேரரசின் பட்டயத்தை எடுத்தார்கள். முடிவில் ரோமப்பேரரசின் பட்டயமே யூதர்களை அழித்துப்போட்டது. யூதருடைய தேசத்தையும், யூததேசத்தாரையும், யூதருடைய தேவாலயத்தையும் ரோமப்பேரரசின் பட்டயம் அழித்துப்போட்டதாக வரலாறு கூறுகிறது.
பிதாவை வேண்டிக்கொண்டால்
நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? (மத் 26:53).
இயேசுகிறிஸ்துவை பாதுகாக்க வேண்டும் என்னும் அவசியம் பேதுருவுக்கு இல்லை. இயேசு பேதுருவின் பாதுகாப்பில் இந்த பூமியில் ஊழியம் செய்யவில்லை. இயேசு தமது பிதாவை வேண்டிக்கொண்டால் அவர் பரலோகத்திலிருந்து ஏராளமான தூதரை அவருக்கு அனுப்பி தருவார். இயேசு தாமாகவே இந்த பாடுகளை தம்மீது ஏற்றுக்கொள்கிறார். பேதுருவினுடைய பட்டயத்தின் உதவியில்லாமலேயே இயேசுகிறிஸ்துவால் தமது சித்தத்தை நிறைவேற்ற முடியும்.
தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு அவருக்கு நாமோ அல்லது நமது ஊழியமோ தேவையில்லை. நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காகவே தேவன் நமக்கு ஊழியம் செய்கிறார். தம்முடைய ஊழியத்தை நம்முடைய உதவியில்லாமலேயே தேவனால் செய்யமுடியும். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறைப்பட்டபோதிலும், சிலுவையில் அறையப்படுவதற்கு அவர் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்திருக்கிறார். சிலுவையில் அறைந்தாலும் இயேசுவை எந்த மனுஷனாலும் கொல்ல முடியாது. அவர் தாமே சிலுவையில் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தார். இனிமேல் ஜீவிக்க முடியாது என்று இயேசு மரித்துப்போகவில்லை. நமக்காக அவர் மரிப்பதற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
இயேசுகிறிஸ்து பிதாவை வேண்டிக்கொண்டால் அவர் தமது குமாரனுக்கு உதவிபுரிவார். தேவனுடைய பிள்ளைகளுக்கு இது ஆறுதலான சத்தியம். நம்மை சுற்றிலும் சத்துருக்கள் சூழ்ந்திருக்கும்போது, நமக்கு உதவிபுரியுமாறு நமது பிதாவை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும். நமது உதவிக்காக பட்டயங்களை நோக்கிப் பார்க்கக்கூடாது. மனுஷர்களை நோக்கிப் பார்க்கக்கூடாது. பரலோகத்திலிருக்கும் தேவனையை நோக்கிப்பார்க்கவேண்டும்.
சத்துருக்கள் நம்மை எல்லா திசையிலும் சுற்றி சூழ்ந்துகொண்டாலும், பரலோகத்தின் வாசலை அவர்களால் அடைக்க முடியாது. பரலோகத்தின் பாதை நமக்கு எப்போதுமே திறந்திருக்கும். தேவனுடைய சித்தமில்லாமல் நம்முடைய சத்துருக்களால் நமக்கு ஒரு தீங்கும் செய்யமுடியாது. நமக்கு யாரும் உதவி செய்யாத சூழ்நிலையில்கூட, நாம் தேவனிடம் விண்ணப்பம்பண்ணி அவருடைய உதவியை பெற்றுக்கொள்ள முடியும். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
நாம் எல்லா வேளைகளிலும் விழித்திருந்து ஜெபிக்கிறவர்களாக இருந்தால், நமது சோதனை வேளைகளில் நம்மால் எளிதாக ஜெபிக்க முடியும். பாடுகளின் மத்தியில் நாம் தேவனை நோக்கி ஜெபிக்கும்போது பரலோகத்தின் அமைதி நமக்கு கொடுக்கப்படும்.
பரலோகத்தில் ஏராளமான தேவதூதர்கள் இருக்கிறார்கள். நாம் பரலோகத்திற்கு போகும்போது அங்கு ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்கள் இருப்பார்கள் (எபி 12:22). பரலோகத்திலுள்ள தூதர்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு அவருடைய வசனத்தின்படி செயல்படுகிறார்கள். அவர்கள் கர்த்தருக்கு பிரியமானதை செய்து அவருடைய பணிவிடைக்காரராயிருக்கிறார்கள் (சங் 103:20,21).
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கும்போது, அவருக்கு உதவி தேவைப்பட்டால், ஆயிரமாயிரம் தேவதூதர்கள் வந்து அவருக்கு பணிவிடை செய்வார்கள். பிதாவாகிய தேவன் ஏராளமான தேவதூதரை இயேசுகிறிஸ்துவினிடத்தில் அனுப்பி வைப்பார். நமக்கு உதவிபுரியும் தேவதூதர்களை நாம் ஆராதிக்கக்கூடாது. தூதர்களுக்கும் ஆண்டவராக இருக்கும் தேவனையே நாம் ஆராதிக்கவேண்டும். தூதர்களும் கர்த்தரை ஆராதிக்கிறார்கள். குமாரனுடைய விண்ணப்பத்திற்கு பிதாவானவர் எப்போதும் செவிகொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும்
அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார் (மத் 26:54).
தம்மை பாதுக்காத்துக்கொள்ள வேண்டுமென்று இயேசுகிறிஸ்து எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தம்மை பிடிக்க வருகிறவர்களிடம் தம்மையே ஒப்புக்கொடுக்கிறார். இவ்விதமாய் சம்பவிக்கவேண்டுமென்று வேதவாக்கியத்தில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது. வேதவாக்கியம் நிறைவேறும் விதமாக ஒவ்வொரு காரியமும் சம்பவிக்கிறது. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை, அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார் என்று ஏசாயா இயேசுவைப்பற்றி முன்னறிவித்திருக்கிறார் (ஏசா 53:7). இந்த வாக்கியத்தின் பிரகாரமாக அவர் தம்மையே ஒப்புக்கொடுக்கிறார்.
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு துன்பமான வேளைகள் வரும்போது தேவனுடைய வார்த்தையே நமக்கு ஆறுதல் தரும். நாம் எடுக்கவேண்டிய இறுதித் தீர்மானத்தை கர்த்தருடைய வார்த்தையே முடிவுபண்ணவேண்டும். எந்தக் காரியம் நடைபெற்றாலும் அது வேதவாக்கியத்தின்படியே நடைபெறும். நம்முடைய சுயசித்தத்தின்படி நாம் நடந்துகொள்ளாமல், தேவனுடைய சித்தம் என்ன என்பதை வேதவாக்கியத்தின் பிரகாரம் அறிந்துகொண்டு, அதற்கு நம்மை ஒப்புக்கொடுத்து ஜீவிக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் ஜீவியத்தில் சம்பவிக்கும் ஒவ்வொரு காரியமும் வேதவாக்கியத்தில் ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. வேதவாக்கியங்கள் நிறைவேறுவதற்கு இயேசுகிறிஸ்து தம்மையே ஒப்புக்கொடுக்கிறார்.
லேகியோன் என்றால் 6000 பேர். பன்னிரெண்டு லேகியோன் என்பது 72,000 தூதரைக் குறிக்கும். ஏசாயா 37:36-இல் நாம் வாசிக்கிற பிரகாரம் ஒரு தூதன் ஒரே இரவில் 185,000 பேரைச் சங்காரம்பண்ணக்கூடியவன்.