மத்தேயு சுவிசேஷம் - ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம் 9

 மத்தேயு சுவிசேஷம் - ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம் 9


9. விழித்திருந்து ஜெபம் ஜெபம் பன்னுங்கள்


விழித்திருக்கக்கூடாதா 


 பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? (மத் 26:40).


இயேசு கெத்செமனே தோட்டத்தில் ஜெபம்பண்ணப்போகும்போது தம்மோடு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் கூட்டிக்கொண்டு போகிறார். இங்கே தங்கி என்னோடேகூட விழித்திருங்கள் என்று அவர்களிடம் கூறி, இயேசு சற்று அப்புறம்போய்  தனியாக ஜெபம்பண்ணுகிறார். ஆனால் இந்த மூன்று சீஷர்களோ ஜெபம்பண்ணாமல் நித்திரை பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து துக்கத்திலும் வியாகுலத்திலும் நிரம்பியிருக்கும்போது, சீஷர்கள் நித்திரை மயக்கத்தினால் நிறைந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் துக்கத்தையும் வியாகுலத்தையும் பற்றி இவர்களுக்கு கவலையில்லை. இயேசுவின் பாடுகள் அவர்களை விழித்திருக்கச் செய்யவில்லை. இயேசு இம்மூன்று சீஷர்களிடம் வரும்போது அவர்கள் நித்திரைபண்ணுகிறார்கள். 


இயேசு இம்மூன்று சீஷர்களுக்கும் மிகுந்த நன்மைகளை செய்திருக்கிறார். இவர்களைக்குறித்து அதிக கரிசனையோடு இருந்திருக்கிறார். மற்ற சீஷர்களைவிட இம்மூன்று பேரையும் தமக்கு மிகவும் அருகாமையில் சேர்த்திருக்கிறார். இவர்கள் இயேசுவின்மீது மிகுந்த அக்கரையோடு இருக்கவேண்டும். விழித்திருந்து ஜெபிக்கவேண்டும். நித்திரைபண்ணாமல் இவர்கள் இயேசுவுக்கு பணிவிடை செய்யவேண்டும். ஆனால் இவர்களோ நித்திரை மயக்கத்தில் இருக்கிறார்கள். விழித்திருந்து இவர்களால் ஜெபிக்கமுடியவில்லை.


இயேசுகிறிஸ்து நம்மையும் விழித்திருந்து ஜெபிக்கச் சொல்கிறார்.  ஆவி உற்சாகமுள்ளது. மாம்சமோ பலவீனமுள்ளது. ஆகையினால் நாம் விழித்திருந்து ஜெபித்து சோதனைகளுக்கு தப்பித்துக்கொள்ளவேண்டும். நாம் நித்திரை செய்வதுபோல இயேசுகிறிஸ்துவும் நமது ஜெபத்தைக் கேட்காமல் நித்திரை செய்தால் நமது நிலமை மிகவும் பரிதாபமாக இருக்கும். இஸ்ரவேலை காக்கிற தேவன் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும்     நித்திரை மயக்கமாகயிராமல் விழித்திருந்து ஜெபிக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து தமது சீஷர்கள் மூவருக்கும் விழித்திருக்கவேண்டுமென்று கட்டளை கொடுத்திருக்கிறார். தமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவர்கள் விழித்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவர்களோ நித்திரைபண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இயேசுவின்மீது அவர்களுக்கு அன்போ, அக்கறையோ இல்லை.  


இயேசுகிறிஸ்துவைப் பிடிக்கப்போகிறவர்கள் நித்திரை மயக்கமாகயில்லை. அவர்கள் விழித்திருந்து பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வருகிறார்கள் (மாற் 14:43).  ஆனால் இயேசுகிறிஸ்துவோடு விழித்திருக்க வேண்டுடியவர்களோ நித்திரையாயிருக்கிறார்கள். 


தம்முடைய பாடுகளும், வேதனைகளும் அதிகரிக்கும் வேளையிலும்  இயேசுகிறிஸ்து அமைதியாக இருக்கிறார். பொறுமையாகயிருக்கிறார். தமது சீஷரிடம் கோபப்படாமல் அன்பாகயிருக்கிறார்.  ""நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடே விழிதிருக்கக்கூடாதா'' என்று அவர்களிடம் கரிசனையோடு கேட்கிறார். பொதுவாக துன்பம் மிகுதியானால் பொறுமையிராது. பிரச்சனை அதிகரிக்கும்போது தேவையில்லாமல் கோபம் வரும். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தமது துன்பவேளையிலும் தாழ்மையோடிருக்கிறார். தமக்கு விரோதமாக எழும்பியிருக்கும் சூழ்நிலைகளை சகித்துக்கொள்கிறார். 


இயேசுகிறிஸ்து முகங்குப்புற விழுந்து பிதாவை நோக்கி ஜெபித்த பின்பு அவர் தமது சீஷர்களிடம் வருகிறார். அவர்களிடமிருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்ப்போடு வருகிறார். ஆனால் சீஷர்களோ அவருக்கு ஆறுதலைக் கொடுக்காமல், அவருடைய துன்பத்தை அதிகரிக்கச் செய்கிறார்கள். தமக்கு ஆறுதல் கொடுக்காவிட்டாலும், அவர்களிடம் இயேசு மறுபடியும் வருகிறார். அவர்களைக் குறித்த கரிசனை இயேசுவுக்கு அதிகமாக இருக்கிறது.  


தாம் பிதாவிடத்தில் ஊக்கமாக ஜெபிக்கும் வேளையிலும் அவர் தமது சீஷர்களைப் புறக்கணித்து விடாமல் அவர்களிடமாக வருகிறார். பிதாவாகிய தேவன் இந்த சீஷர்களை இயேசுவுக்கு கொடுத்திருக்கிறார்.  இவர்கள் இயேசுவின் இருதயத்தில் நிரம்பியிருக்கிறார்கள். சீஷர்களே இயேசுவுக்கு ஜீவனும் மரணமுமாக இருக்கிறார்கள்.


சீஷர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு  இயேசு அவர்களை மென்மையாக கண்டிக்கிறார். சீஷர்கள் சார்பாக பொதுவாக பேதுருவே பேசுவார். அந்த பேதுருவிடம் இயேசு தமது வார்த்தைகளை அறிவிக்கிறார். மற்ற சீஷர்களுக்காக பேசுகிற பேதுரு, இப்போது அவர்களுக்காக இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை பெற்றுக்கொள்கிறான். ""நீங்கள்  ஒருமணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா'' என்று மென்மையாக கண்டிக்கிறார். இந்த சூழ்நிலையிலும் சீஷர்கள் நித்திரையாயிருப்பது இயேசுவுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 


இயேசு தமது சீஷர்களிடம் நன்மையான காரியங்களை எதிர்பார்க்கிறார். அவர்கள் விழித்திருந்து ஜெபிக்க வேண்டியவர்கள். அவர்கள் விழித்திருக்க வேண்டுமென்று இயேசு அவர்களுக்கு  கட்டளை கொடுத்த பின்பும், அவர்கள் நித்திரையாயிருக்கிறார்கள். 


அவர்கள் இயேசுகிறிஸ்துவோடுகூட விழித்திருக்க வேண்டும். இயேசுகிறிஸ்து நித்திரை செய்யாமல் விழித்திருக்கிறார். ஒரு சமயம் கடலில் பெருங்காற்று வீசியபோது இயேசு அவர்களுக்காக நித்திரை செய்யாமல் விழித்திருந்தார். அந்த நன்றியை சீஷர்கள் மறந்துவிடுகிறார்கள். விழித்திருந்து இயேசுவின்மீது தங்கள் நன்றியை காண்பிப்பதற்குப் பதிலாக சீஷர்கள் நித்திரையாயிருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்து தமது சீஷர்களிடம் பெரிய காரியங்களை எதிர்பார்க்கவில்லை. மிகவும் சிறிய சாதாரணமான காரியத்தையே எதிர்பார்க்கிறார். தம்மோடேகூட சீஷர்கள் விழித்திருக்கவேண்டும் என்று இயேசு எதிர்பார்ப்பது மிகவும் சாதாரணமான காரியம்.  இயேசு அவர்களை பெரிய காரியத்தை செய்யச் சொல்லியிருந்தால் அவர்கள் ஒருவேளை அதை செய்திருப்பார்கள். தமக்காக மரிக்கவேண்டும் என்று இயேசு சீஷர்களிடம் சொல்லியிருந்தால் தாங்கள் மரிப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாக அறிவித்திருப்பார்கள். ஆனால் இங்கோ மிகவும் சிறிய காரியத்தை இயேசு தம்முடைய சீஷரிடம் எதிர்பார்க்கிறார். ஆனால் அவர்களோ சிறிய காரியத்தில்கூட இயேசுவுக்கு உண்மையாகயில்லை. 


சீஷர்கள் தம்மோடு அதிகநேரம் விழித்திருக்கவேண்டுமென்று இயேசு எதிர்பார்க்கவில்லை. இரவு முழுவதும் இயேசு அவர்களை விழித்திருக்கச் சொல்லவில்லை.  ஒரு மணி நேரம் மாத்திரமே தம்மோடு விழித்திருக்குமாறு இயேசு தமது சீஷர்களுக்கு கூறுகிறார். ஆனால் அவர்களோ அந்த ஒரு மணி நேரம்கூட விழித்திராமல் நித்திரையாயிருக்கிறார்கள்.


சோதனைக்குட்படாதபடிக்கு


 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார் (மத் 26:41).


 நித்திரையாயிருக்கும் சீஷர்களை எழுப்பி  இயேசு அவர்களுக்கு நல்ல ஆலோசனை கூறுகிறார். ""நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்'' என்று ஆலோசனை கூறுகிறார். சோதனையின் வேளை அவர்களை  நெருங்கி வருகிறது. இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கப்போவது அவருடைய சீஷர்களுக்கு சோதனையாக இருக்கும். இயேசு வேதனைகளை அனுபவிக்கும்போது சீஷர்கள் அவரை விசுவாசியாமல் மறுதலித்துவிடுவார்கள். இயேசுவையே தங்களுக்குத் தெரியாது என்று ஒரே வார்த்தையில் மறுதலித்துவிட்டு அவரைவிட்டு ஓடிப்போய்விடுவார்கள். இப்படிப்பட்ட சோதனையில் சிக்கக்கூடிய வாய்ப்பு அவர்களை நெருங்கி வருகிறது. ஒரு கண்ணியில் சிக்கிக்கொள்ளப்போவதுபோல அவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். 


ஆகையினால் சோதனைக்குட்படாதபடிக்கு அவர்கள் விழித்திருந்து ஜெபிக்கவேண்டுமென்று இயேசு அவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார்.  என்னோடு விழித்திருங்கள் என்றும், என்னோடு ஜெபம்பண்ணுங்கள் என்றும் இயேசு தமது சீஷர்களுக்கு நல்ல ஆலோசனை கூறுகிறார். அவர்கள் நித்திரையாக இருப்பதினால் இயேசுகிறிஸ்துவோடு சேர்ந்து ஜெபிக்கும் சிலாக்கியத்தை இழந்துபோகிறார்கள். சீஷர்கள்  தங்களுக்காக ஜெபிக்கவேண்டும். தங்களுக்காக விழித்திருக்கவேண்டும். நித்திரை செய்துவிடாமல் விழிப்பாய் இருப்பதற்கு தேவன் தங்களுக்கு கிருபை தரவேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். இது அவர்கள் ஜெபிக்க வேண்டிய வேளை. தங்கள் ஜெபவேளையில் சீஷர்கள் நித்திரையாயிருக்கிறார்கள். 


இயேசு தமது சீஷர்களிடம் ""ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது'' என்று மேலும் ஆலோசனை கூறுகிறார். நித்திரை மயக்கத்திலிருக்கும் சீஷர்கள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர்களுக்காக இயேசுவே கிருபையுள்ள வார்த்தைகளை பேசுகிறார். தமது அன்பை வெளிப்படுத்துகிறார். அன்பு திரளான பாவங்களை மூடும். 


தமது சீஷர்களும் மாம்சமானவர்கள் என்பதை இயேசு நினைவுகூருகிறார். ஆவி உற்சாகமுள்ளதாக இருந்தாலும் மாம்சம் பலவீனமுள்ளதாக இருக்கிறது. சீஷர்களுடைய ஆத்துமாவும் சரீரமும் ஒத்துப்போகவில்லை. ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கிறது. அவர்களுடைய ஆவி உற்சாகமாக இருந்தாலும், அவர்களுடைய சரீரம் பலவீனமுள்ளதாக இருக்கிறது. அவர்களுடைய ஆத்துமா ஜெபிக்க விரும்பியும், அவர்களுடைய சரீரமோ நித்திரையாயிருக்கிறது. அவர்களுடைய ஆவி நன்மையான காரியங்களை செய்யவேண்டுமென்று உற்சாகமாக இருக்கிறது.  ஆனால் அவர்களுடைய சரீரமோ எந்த நற்காரியத்தையும் செய்யவிடாமல் பலவீனமாக இருக்கிறது. 


மனுஷருக்குள் இப்படிப்பட்ட முரண்பாடு காணப்பட்டாலும், இயேசு நமது பாவங்களையெல்லாம் மன்னித்து நம்மீது அன்பாகவும் கிருபையாகவும் இருக்கிறார். நம்மோடு ஆறுதலாக பேசுகிறார். நம்மைப்பற்றி  அறிந்து வைத்திருக்கிறார். மாம்சத்தின் பலவீனத்திற்காக இயேசு பரிதாபப்படுகிறார். மாம்சத்தின் குறைபாடுகளை இயேசு கிருபையாக மன்னிக்கிறார். நாம் நமது கிரியையினால் இரட்சிக்கப்படாமல் தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்படாமல், தேவனுடைய கிருபைக்கு உட்பட்டிருக்கிறோம். 


ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது. மாம்சத்தைச் சிலுவையில் அறைய வேண்டும். தேவனுடைய சித்தத்திற்கு மாம்சத்தைக் கட்டுப்படுத்தி ஒப்புக்கொடுக்க வேண்டும். ஆவி உற்சாகத்தோடு கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியும். மாம்சத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.