மாற்கு சுவிசேஷம் - ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம் 1

 மாற்கு சுவிசேஷம் - ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம் 1


1. உபவாசமும் ஜெபமும்


ஊமையான ஆவிபிடித்தவன் மாற்கு 9 : 14-29


மறுபடியும் சீஷரிடத்திற்கு


பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார். ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஒடிவந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள் (மாற்கு 9:14,15). 


இயேசுகிறிஸ்து மறுபடியும் சீஷர்களிடத்திற்கு வருகிறார். அங்கு சீஷர்கள் மிகப்பெரிய குழப்பத்திற்கு மத்தியில் இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து மறுரூபமலையில் மகிமையடைந்தவராக தமது சீஷர்களில் மூவருக்கு தரிசனம் கொடுத்தார். மலையின்மீது அவர் மகிமையாக தரிசனம் கொடுத்த போதிலும், மலைக்கு கீழே தமது சீஷர்களுக்கு ஏற்பட்ட குழப்பத்தையும் பிரச்சனைகளையும்  அவர் மறந்துவிடவில்லை. இயேசுகிறிஸ்து தற்போது மகிமையடைந்தவராக பரலோகத்திலிருந்தாலும், பூமியிலுள்ள தமது சபைகளைக்குறித்த காரியங்களிலும் மிகுந்த கரிசனையுடையவராக இருக்கிறார். 


இயேசுகிறிஸ்து மறுரூபமலையிலிருந்து கீழே இறங்கி தமது சீஷர்களிடத்திற்கு வரும்போது, சீஷர்கள் மிகப்பெரிய பிரச்சனையில்  சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு மனுஷன் தன்னுடைய மகனை சீஷரிடத்தில் கொண்டு வந்தான். அந்த மகனை ஊமையான ஓர் ஆவி பிடித்திருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் சீஷர்களால் அந்த அசுத்த ஆவியை  துரத்திவிட கூடாமற்போயிற்று. இந்த சம்பவத்தைப் பார்த்த வேதபாரகர் தங்களுக்கு ஏதோ ஒரு வெற்றி கிடைத்ததுபோல நினைத்து அவர்கள் சீஷர்களிடம் தர்க்கம்பண்ணுகிறார்கள். இந்த சூழ்நிலையில் இயேசுகிறிஸ்து அங்கு வருவது  சீஷர்களுக்கு மிகுந்த ஆதரவாக இருக்கிறது. அவருடைய வரவை நன்றியோடு வரவேற்கிறார்கள். ஆனால் வேதபாரகரோ இயேசுகிறிஸ்துவின் வரவை விரும்பவில்லை. அவர் அங்கு வருவதை அவர்கள் வரவேற்கவுமில்லை.


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் மறுபடியும் வருவதை கண்ட ஜனங்கள் எல்லோரும், அவரைக் கண்டவுடன் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். ஓடிவந்து அவருக்கு வந்தனம் செய்கிறார்கள். இயேசுகிறிஸ்து இப்போதுதான் மறுரூபமாகி மறுரூபமலையிலிருந்து இங்கு இறங்கி வந்திருக்கிறார்.  அவருடைய முகத்தில் மிகப்பெரிய பிரகாசமோ அல்லது வேறு ஏதோ ஒரு மாற்றமோ தெரிந்திருக்க வேண்டும். அதைக்கண்டு ஜனங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். இயேசு களைப்படைந்தவராக அங்கு வரவில்லை. மகிமை நிறைந்தவராக வருகிறார். அவருடைய பார்வையில் பிரகாசம் தெரிகிறது. இதைக் கண்டு ஜனங்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.


பிசாசு அலைக்கழிக்கிறது


அவர் வேதபாரகரை நோக்கி: நீங்கள் இவர்களோடே என்னத்தைக்குறித்துத் தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார். அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்  (மாற்கு 9:16-18).


இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் வருகிறார். அவரைச்சுற்றி திரளான ஜனங்கள் நிற்கிறார்கள். வேதபாரகர் இயேசுவின் சீஷரோடே தர்க்கிக்கிறார்கள். அதைப்பார்த்த இயேசு வேதபாரகரை நோக்கி ""நீங்கள் இவர்களோடே  என்னத்தைக்குறித்து தர்க்கம்பண்ணுகிறீர்கள்'' என்று கேட்கிறார். வேதபாரகரால் இயேசுவுக்கு பிரதியுத்தரம் கூறமுடியவில்லை. இயேசுவின் பிரசன்னத்தைக்கண்டு அவர்களும் ஆச்சரியப்பட்டு வாயடைத்துப் போயிருக்கிறார்கள். சீஷர்களாலும் ஒன்றும் பேசமுடியவில்லை. இயேசுகிறிஸ்துவின் வருகையினால் அவர்கள் ஆச்சரியமும் ஆறுதலும் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். இயேசுவின் கேள்விக்கு யாருமே பதில் கூறவில்லை. அப்பொழுது அந்தச் சிறுவனின் தகப்பன் இயேசுவிடம் வந்து தன்னுடைய காரியத்தைக் கூறுகிறான். 


இந்த மனுஷனுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனை ஊமையான ஒரு ஆவி பிடித்திருக்கிறது. அது அவனை அலைக்கழிக்கிறது. அவன் பேசமுடியாத ஊமையனாக இருக்கிறான். இந்த ஆவி அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது. அப்போது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து சோர்ந்துபோகிறான். பிசாசு அவனை விட்டுப் போனாலும் அவன் சோர்வடைந்தவனாக கீழே விழுந்துகிடக்கிறான். அந்த அசுத்த ஆவியை துரத்திவிடும்படி சிறுவனின் தகப்பன் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களிடம் கேட்கிறான். ஆனால் சீஷர்களால் அந்த அசுத்த ஆவியை துரத்திவிட  கூடாமற்போயிற்று. 


இயேசுகிறிஸ்து அங்கு வந்திருப்பது அந்த தகப்பனுக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.  ஏனெனில் சீஷர்களால் துரத்த முடியாத அந்த அசுத்தஆவியை இயேசுவால் துரத்த முடியும். இந்த நம்பிக்கையோடு அவன் தன் மகனை இயேசுவிடம் கொண்டு வருகிறான். 


பிசாசின் கிரியைகளினால் ஏற்படும் விளைவுகள்


    1. ஊமை (மாற்கு 9:17,25)

    2. செவிடு (மாற்கு 9:25)

    3. வாயில் நுரை தள்ளுதல் (மாற்கு 9:25)

    4. இழுப்பு (மாற்கு 9:18,20,26)

    5. பற்களைக் கடித்தல் (மாற்கு 9:18)

    6. செத்தவன்போல மயங்கி விழுதல் (மாற்கு 9:18,26)

    7. தரையில் விழுதல் (மாற்கு 9:20)

    8. தற்கொலை முயற்சிகள் (மாற்கு 9:22)

    9. கத்தி ஓலமிடுதல் (மாற்கு 9:26)

    10. சந்திரரோகி (மத் 17:15)


விசுவாசமில்லாத சந்ததியே


அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார் (மாற்கு 9:19). 


சீஷர்களிடத்தில் விசுவாசமில்லை. அங்கு கூடியிருக்கும் ஜனங்களிடத்திலும் விசுவாசமில்லை. ஆகையினால் இயேசு அவர்கள் எல்லோரையும் பார்த்து ""விசுவாசமில்லாத சந்ததியே'' என்று கூப்பிட்டு ""எதுவரைக்கும் நான் உங்களோடு கூடயிருப்பேன்? எது வரைக்கும் உங்களிடத்தில்  பொறுமையாயிருப்பேன்'' என்று கூறி அவர்கள் எல்லோரையும் கடிந்து கொள்கிறார். விசுவாசமில்லாத சந்ததியாரோடு இயேசுகிறிஸ்து அதிக காலம் தங்கியிருக்கமாட்டார். இயேசு நம்மோடு இருக்கவேண்டுமென்றால் நாம் அவரை விசுவாசிக்க வேண்டும். 


விசுவாசமில்லாத மனுஷரை இயேசு கிறிஸ்து  கடிந்து கூறியிருக்கும் சம்பவங்கள்


    1. தெய்வீக பராமரிப்பில் (மத் 6:30)

    2. தெய்வீக பாதுகாப்பில் (மத் 14:31)

    3. தெய்வீக வல்லமையில் (மத் 16:6-12)

    4. கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்வதற்கு அபிஷேகம் பண்ணுகையில் (மத் 17:17-21; மாற்கு 9:19-23; மாற்கு 16:17-18; யோவான் 14:12)

    5. அற்புதங்களை நடப்பிக்கும் வல்லமையில் (மாற்கு 11:21-24)

    6. உயிர்த்தெழுதலில் (மாற்கு 16:14)


சிறு வயது முதல்


அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது, அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். அவன் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதுமுதற்கொண்டே உண்டாயிருக்கிறது;  (மாற்கு 9:20,21)


சீஷர்களிடத்திலும், ஜனங்களிடத்திலும் போதுமான அளவு விசுவாசமில்லை. ஆகையினால் இயேசு அவர்களை விசுவாசமில்லாத சந்ததியே என்று கடிந்து கூறுகிறார். அதன்பின்பு அந்த சிறுவனை தம்மிடத்தில் கொண்டு வருமாறு கூறுகிறார். அவர்களும் அவனை இயேசுவினிடத்தில் கொண்டு வருகிறார்கள். அந்த சிறுவன் இயேசுவைப் பார்க்கிறான். அவனைப் பிடித்திருக்கும் அசுத்த ஆவியும் இயேசுவைப் பார்க்கிறது. அந்த அசுத்த ஆவி இயேசுவைக் கண்டவுடனே அந்த சிறுவனை அலைக்கழிக்கிறது. அவன் தரையிலே விழுந்து  நுரைதள்ளி புரளுகிறான். அவனுடைய தகப்பன் சொன்ன பிரகாரமாகவே அந்த சிறுவனுக்கு சம்பவிக்கிறது. இயேசுவைப் பார்த்தவுடன் அசுத்த ஆவியால் சும்மாயிருக்க முடியவில்லை. தன்னை துரத்துவது கடினமான காரியம் என்று காண்பிப்பதுபோல அசுத்த ஆவி அந்த சிறுவனை அலைக்கழிக்கிறது. 


இந்த சம்பவத்தை பார்த்தவுடன் இயேசு  அவனுடைய தகப்பனை நோக்கி ""இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று'' என்று கேட்கிறார். அதற்கு அந்த தகப்பன் ""சிறு வயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது'' என்று பதில் கூறுகிறான். அசுத்தஆவி அவனை அலைக்கழிக்கிறது. அவன் தரையிலே விழுந்து நுரைதள்ளி புரண்டதைப் பார்த்த இயேசு, இது  சமீபத்தில் உண்டான பிரச்சனை அல்ல என்றும், நீண்டகாலமாக அசுத்த ஆவி இவனை பிடித்திருக்கிறது என்றும், இயேசு தமது ஆவியில் உணருகிறார். நீண்டகாலமாக குணமாகாமல் இருக்கும் வியாதியை குணப்படுத்துவது கடினம். ஆயினும் இயேசுகிறிஸ்துவுக்கோ எல்லா வியாதியையும் குணப்படுத்த முடியும். மனுஷரால் கூடாதது தேவனால் கூடும். 


நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால் 


இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான் (மாற்கு 9:22).


அசுத்த ஆவியினால் தன் மகனுக்கு சிறு வயது முதற்கொண்டே இந்த பிரச்சனை உண்டாயிருப்பதை அந்த சிறுவனின் தகப்பன் இயேசுவிடம் கூறுகிறான். தன்னுடைய மகனின் பரிதாபமான நிலையை இயேசுவிடம் பணிவோடு எடுத்துக் கூறுகிறான். தன் மகனை கொல்லும்படிக்கு அந்த அசுத்தஆவி அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் அவனை தள்ளிற்று என்று தன் மகனின் பிரச்சனையை இயேசுவிடம் எடுத்துக் கூறுகிறான். இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் ""நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்'' என்று கேட்டுக்கொள்கிறான். 


ஒரு சமயம் குஷ்டரோகி ஒருவன் இயேசுகிறிஸ்துவிடம் வருகிறான். கிறிஸ்துவின் வல்லமையைக் குறித்து அவன் உறுதியோடிருக்கிறான். ஆயினும் அந்த குஷ்டரோகி இயேசுவை பணிந்து ""ஆண்டவரே உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்'' (மத் 8:2) என்று கிறிஸ்துவின் சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான். ஆனால் இந்த சிறுவனின் தகப்பனோ ""நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால்'' என்று கூறி  இயேசுகிறிஸ்துவின் வல்லமையினால் இது முடியுமா என்று கேட்கிறான். ஆகிலும் மனதிரங்கி தன் மகனுக்கு உதவி செய்ய வேண்டுமென்று பணிவோடு கேட்கிறான்.


சிறுவனின் தகப்பன் ""கூடுமானால்'' என்று கூறுகிறான். இயேசு கிறிஸ்துவும் ""கூடுமானால்'' என்று பதில் கூறுகிறார். மனுஷன் தன்னுடைய அவிசுவாசத்தை அகற்றிவிட்டு, இயேசுவிடம் வரவேண்டும். தேவனுடைய சித்தத்தையும், அவருடைய வல்லமையையும் விசுவாசிக்க வேண்டும். அப்போது விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.  தேவனால் கூடுமானால் என்னும் கேள்விக்கே இடமில்லை. ஏனெனில் தேவனால் எல்லாம் கூடும். மனுஷன்தான் அதை விசுவாசிக்க வேண்டும். மனுஷனால் விசுவாசிக்கக்கூடுமானால் அது அவனுக்கு ஆகும். தேவன் நமக்கு ஏற்கெனவே பல காரியங்களை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். அவற்றை நாம் விசுவாசத்தோடு பெற்றுக்கொள்ள வேண்டும். நமது அவிசுவாசத்தினால் ஒன்றையும் பெற்றுக் கொள்ளாமல் அதற்குத் தேவனைக் குறைக்கூறக்கூடாது. (மாற்கு 9:24; எபி 11:6;       யாக் 1:5-8)


தேவன் வல்லமையுள்ளவர். அதேசமயத்தில் அவர் இரக்கம் உள்ளவர். அவர் மனதிரங்கி, நம்மீது தமது வல்லமையை வெளிப்படுத்துவார் என்று விசுவாசிக்க வேண்டும். அவர் தமது கிருபையினாலும், மனதுருக்கத்தினாலும் மனுஷருடைய தேவைகளையெல்லாம் சந்திப்பார். இங்கே இந்த மனுஷன் தனக்காகவும், தன் மகனுக்காகவும் மனதிரங்க வேண்டுமாறு இயேசு கிறிஸ்துவிடம் விண்ணப்பம் பண்ணுகிறான்.     (மத் 9:36)  


விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்


இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார் (மாற்கு 9:23). 


இயேசுகிறிஸ்துவால் ஏதாவது செய்யக்கூடுமானால், அவர் தங்கள்மேல் மனதிரங்கி தங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று சிறுவனின் தகப்பன் இயேசுவிடம் கேட்கிறான். இயேசுகிறிஸ்துவோ அந்த தகப்பனைப் பார்த்து ""நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்'' என்று பதில் கூறுகிறார். அவனுடைய அவிசுவாசத்தை இயேசு அவனுக்கு உணர்த்துகிறார். பிள்ளையின் தகப்பனோ ""நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால்'' என்று இயேசுவின் வல்லமையைக் குறித்து விசாரிக்கிறான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அவனுடைய அவிசுவாசத்தை அவனுக்கு விளக்கி காண்பிக்கிறார். அந்த பிள்ளையின் தகப்பனுக்கு  விசுவாசமிருந்தால் அது அவனுக்கு நடைபெறும். விசுவாசமில்லையென்றால் அது அவனுக்கு நடைபெறாது. இயேசுகிறிஸ்துவிடம் வல்லமை தாராளமாக உள்ளது. அவரால் எல்லாக் காரியமும் செய்யக்கூடும். ஆயினும் அவர் நமக்கு ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமென்றால் நமக்கு அவர் மீது விசுவாசம் இருக்க வேண்டும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று இயேசு அந்த மனுஷனை உற்சாகப்படுத்துகிறார்.  


நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும் என்று கூறும் இயேசு,     அந்த மனுஷனை விசுவாசிக்குமாறு உற்சாகப்படுத்துகிறார். ""விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் ஆகும்'' என்று கூறி தம்மிடத்தில் விசுவாசமாக இருக்குமாறு  அவனை வலியுறுத்துகிறார். தேவனுடைய சர்வ வல்லமையை விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். இயேசுகிறிஸ்துவிடம் நாம் நன்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், அவருடைய வல்லமையை நாம் விசுவாசிக்க வேண்டும். நாம் தேவனிடத்தில் விசுவாசம் வைக்கும்போது நமது கடின இருதயம் மென்மையாகும். நமது ஆவிக்குரிய வியாதி குணமடையும். நமது பலவீனம் நீங்கி ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் பெலப்படுவோம். 


""நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்'' என்று   இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறுகிறார். எல்லாம் கூடும் என்று அவர் கூறும்போது அதில் எல்லாமே அடங்கியிருக்கிறது. எல்லாம் என்பது ஜீவனுக்குரியவையையும், நன்மையானவையையும் குறிக்கும்.     


அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்


உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்          (மாற்கு 9:24).


விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று இயேசுகிறிஸ்து கூறியவுடன் பிள்ளையின் தகப்பன் இயேசுவிடம் ""விசுவாசிக்கிறேன் ஆண்டவரே'' என்று அறிவிக்கிறான். தன்னுடைய விசுவாசக் குறைவினால் தன்னுடைய மகன் குணமடையாமல் போய்விடக்கூடாது என்பதில் மிகுந்தகவனத்தோடிருக்கிறான். ஆகையினால் ஆரம்பத்திலேயே ""விசுவாசிக்கிறேன் ஆண்டவரே'' என்று தன் விசுவாசத்தை அறிக்கை செய்கிறான். அதே வேளையில் தன்னிடத்திலுள்ள அவிசுவாசத்தையும் அவன் உணர்ந்தவனாக ""என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிச்செய்யும்'' என்று கண்ணீரோடு சத்தமிட்டு விண்ணப்பம்பண்ணுகிறான். தன்னுடைய விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுவதற்கு தேவனுடைய கிருபை  தனக்கு தேவை என்பதை உணருகிறான். நம்மிடத்தில் விசுவாசக்குறைவு காணப்படுமென்றால் தேவனுடைய கிருபைக்காக ஜெபிக்க வேண்டும். தேவனுடைய கிருபை நமது அவிசுவாசத்தை நீக்கி நமக்குள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும். நமது பலவீனங்களில் தேவனுடைய பலன் நம்மை பூரணமாய் தாங்கும்.  


நான் உனக்கு கட்டளையிடுகிறேன்


அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான். இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்  (மாற்கு 9:25-27).


இயேசுகிறிஸ்து பிள்ளையின் தகப்பனோடு பேசிக்கொண்டிருக்கிறார். அவனுடைய மகனோ தரையிலே விழுந்து நுரைதள்ளி கீழே கிடக்கிறான். இதைக்கண்ட ஜனங்கள் அந்த இடத்திற்கு கூட்டமாய் ஓடிவருகிறார்கள். இயேசுகிறிஸ்து தம்மிடத்தில் வரும் ஜனக்கூட்டத்தைக் காண்கிறார். இதற்கு மேலும்  பிள்ளையின் தகப்பனிடம் பேசிக்கொண்டிருக்காமல் அந்த அசுத்த ஆவியை அதட்டி வெளியேற்றுகிறார். 


இயேசு அந்த அசுத்த ஆவியை நோக்கி ""ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டு புறப்பட்டுப்போ'' என்று கட்டளையிடுகிறார்.  இந்த கட்டளையோடு சேர்ந்து ""இனி இவனுக்குள் போகாதே'' என்றும் கட்டளையிடுகிறார். அசுத்தஆவி இதுவரையிலும் இவனை பிடித்து அலைக்கழித்திருக்கிறது. அப்போதெல்லாம் இவன் தரையிலே கீழே விழுந்து நுரைதள்ளி புரண்டிருக்கிறான். இதுபோன்ற சம்பவம் அந்த பிள்ளைக்கு மறுபடியும் வரக்கூடாது என்று சித்தங்கொண்டு இயேசுகிறிஸ்து அந்த அசுத்த ஆவியை நோக்கி ""இனி இவனுக்குள் போகாதே'' என்று கட்டளையிடுகிறார். 


இயேசுகிறிஸ்து ஒரு வியாதியை குணப்படுத்தும்போது அந்த வியாதி பரிபூரணமாக குணமடையும். ஆனால் சாத்தானோ ஒருவரைவிட்டு வெளியேறிப்போகும்போது, அவன் மறுபடியும் அந்த நபருக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆகையினால் இயேசுகிறிஸ்து அந்த அசுத்த ஆவியை தமது அதிகாரத்தினால் ""இனி இவனுக்குள் போகாதே'' என்று கட்டளையிட்டு துரத்திவிடுகிறார். 


இயேசுகிறிஸ்துவின் கட்டளையை கேட்டவுடன் அசுத்த ஆவி மிகுந்த சத்தமிடுகிறது. அந்த சிறுவனை மிகவும் அலைக்கழித்துவிட்டு அவனை விட்டு புறப்படுகிறது. அந்த சிறுவனோ செத்தவன்போல கீழே         விழுந்து கிடக்கிறான். மற்றவர்கள் அவனைப்பார்த்து அவன் செத்துப்போய்விட்டான் என்றே கூறுகிறார்கள். ஆனால் அவன் மரிக்கவில்லை. பிசாசு அவனை அலைக்கழித்ததினால், அதை தாங்கமுடியாமல் மரித்தவன்போல கீழே விழுந்துகிடக்கிறான். பரிபூரணமாக குணமடைந்திருக்கிறான். 


இயேசுகிறிஸ்து அவன் கையை பிடித்து  அவனை தூக்கிவிடுகிறார் உடனே அவன் எழுந்திருக்கிறான். அந்த சிறுவனுடைய பிரச்சனை நீங்கிற்று. அவனுடைய தகப்பனும் சந்தோஷமடைகிறான். இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள வார்த்தையினால் பிசாசு துரத்தப்படுகிறது. 


இயேசு அந்த அசுத்த ஆவியை நோக்கி: ""ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே'' என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். இயேசுவின் சீஷர்களும் இப்படித்தான் சொன்னார்கள். ஆனால் அசுத்த ஆவி அவனை விட்டுப்போகவில்லை. இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு வல்லமையுண்டு. அவர் விசுவாசத்தோடும், அதிகாரத்தோடும் பிசாசையும், அவனுடைய கிரியைகளையும் கடிந்து கொள்கிறார். வனாந்தரத்திலே இயேசு சாத்தானை ஜெயித்தார். சீஷர்கள் தங்களுடைய விசுவாச ஜீவியத்திலே அந்த அளவிற்கு வளர்ந்து வரவில்லை. 


ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்


வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்              (மாற்கு 9:28,29).


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களால் அந்த பிசாசை துரத்தக்கூடாமற்போயிற்று. ஆனால் இயேசுகிறிஸ்துவோ தமது அதிகாரமுள்ள வார்த்தையினால் அந்த பிசாசை துரத்துகிறார்.  அது மறுபடியும் அவனுக்குள் போகக்கூடாது என்று கட்டளையிடுகிறார். இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து பிசாசு அவனை விட்டுப் போயிற்று. இந்த சம்பவம் சீஷர்களுக்கு  மிகுந்த ஆச்சரியமாயிற்று. 


இயேசு ஒரு வீட்டில் பிரவேசித்தபோது, அவர் தனித்திருக்கும்போது அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வருகிறார்கள். அந்த அசுத்த ஆவியை துரத்திவிட தங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்கிறார்கள். இயேசு தமது சீஷர்களுக்கு ""இவ்வகை பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது'' என்று கூறுகிறார். எல்லாக் காரியத்தையும் எளிதாக செய்துவிடலாமென்று சீஷர்கள் அசட்டையாக இருக்கக்கூடாது. இயேசுகிறிஸ்து தமது வாயின் வார்த்தையினாலே கட்டளையிட்டு பிசாசுகளை துரத்துகிறார். வியாதிகளை சொஸ்தமாக்குகிறார். சீஷர்களும் இயேசுகிறிஸ்துவைப் போன்று பிசாசுகளை துரத்த முடியும். ஆனால் தேவனுடைய வல்லமையில்லாமல் சீஷர்களால் பிசாசுகளை துரத்த முடியாது. தேவனுடைய வல்லமையை ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமே சீஷர்களால் பெற்றுக்கொள்ள முடியும். இயேசு தமது சீஷர்களுக்கு ஜெபிப்பதன் அவசியத்தையும் உபவாசிப்பதின் அவசியத்தையும் போதிக்கிறார். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.