மாற்கு சுவிசேஷம் - ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம் 4,5
4. விழித்திருந்து ஜெபம் பன்னுங்கள்
விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் மாற்கு 13 : 28-37
மாற்கு 13:28. அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைதோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
மாற்கு 13:29. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
மாற்கு 13:30. இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு 13:31. வானமும் •பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
மாற்கு 13:32. அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
மாற்கு 13:33. அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.
மாற்கு 13:34. ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தணிக்கும் போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங் கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காக்கிறவனுக்குக் கற்பிப்பான்.
மாற்கு 13:35. அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல்கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.
மாற்கு 13:36. நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டு பிடியாதபடிக்கு விழித்திருங்கள்.
மாற்கு 13:37. நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
அத்திமரத்தினால் ஒரு உவமை
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைதோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் •பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை (மாற்கு 13:28-31).
எருசலேமின் அழிவு வெகுவிரைவில் நடைபெறப்போகிறது. அதன் அழிவு காலம் சமீபமாயிற்று. அத்திமரத்திலே இளங்கிளை தோன்றி துளிர்விடும்போது வசந்தகாலம் சமீபமாகும். அதுபோலவே இயேசுகிறிஸ்து சொன்ன அடையாளங்களெல்லாம் சம்பவிக்கும்போது எருசலேமின் அழிவு சமீபமாகும். யூதேயா தேசத்தில் யுத்தம் நடைபெறும். கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி ஏராளமான ஜனங்களை வஞ்சிப்பார்கள். கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைக்கூட வஞ்சித்துவிடுவார்கள்.
இயேசுகிறிஸ்து கூறிய சம்பவங்களெல்லாம் சம்பவிக்கும்போது யூதருக்கும் ரோமாபுரியாருக்கும் மிகப்பெரிய பகை உண்டாகும். ரோமப்பேரரசார் யூதேயா தேசத்தின்மீது யுத்தம்பண்ண ஆரம்பிப்பார்கள். அப்போது யூதர்களுடைய அழிவு மிகவும் சமீபமாக இருக்கும். அது அவர்களுடைய வாசலருகே வந்திருக்கும். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் யோவானைத்தவிர மற்றவர்கள் அனைவரும் இந்த அழிவு வருவதற்கு முன்பாகவே எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். இவர்களுக்கு அடுத்த சந்ததியில் வந்தவர்கள் எருசலேமின் பேரழிவைத் தங்கள் கண்களால் கண்டார்கள்.
புதிய சந்ததி ஒன்று உருவாயிற்று. இயேசுகிறிஸ்து சொன்ன காரியங்களெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்த புதிய சந்ததி ஒழிந்துபோகாது. அழிவு காலம் மிகவும் சமீபமாயிற்று. தம்முடைய சீஷர்களை பயமுறுத்துவதற்காக இயேசுகிறிஸ்து இந்த சம்பவங்களைக் கூறவில்லை. தேவனுடைய நோக்கமும் சித்தமும் மாறாதது என்பதை வலியுறுத்துவதற்காகவே இயேசுகிறிஸ்து இவைகளையெல்லாம் கூறுகிறார். வானமும் பூமியும் ஒழிந்துபோகும். ஆனால் தேவனுடைய வார்த்தைகளோ ஒருக்காலத்திலும் ஒழிந்துபோவதில்லை.
அந்தநாளும், நாழிகையும்
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார் (மாற்கு 13:32).
தேவாலயம் ஒரு கல்லின்மேல் ஒருகல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று இயேசுகிறிஸ்து முன்னறிவிக்கிறார். இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் என்றும், இவைகளெல்லாம் நிறைவேறும் காலத்துக்கு அடையாளம் என்ன என்றும் சீஷர்கள் இயேசுவிடம் கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்து இவைகள் நிறைவேறும் காலத்திற்கு அடையாளத்தைக் கூறுகிறார். ஆனால் இவை எப்பொழுது சம்பவிக்கும் என்று இயேசு தமது சீஷர்களுக்கு தெளிவாக அறிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக அந்தநாளையும், நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான் என்று கூறிவிடுகிறார். அந்த நாளும் நாழிகையும் தேவனைத் தவிர எந்த ஒரு மனுஷனுக்கும் தெரியாது. தேவனுடைய வார்த்தையில் இந்த நாளும் நாழிகையும் பூமியிலுள்ள மனுஷருக்கு வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலுள்ள தூதர்களுக்கும் வெளிப்படுத்தப்படவில்லை.
இயேசுகிறிஸ்து அந்த நாளைப்பற்றியும் நாழிகையைப்பற்றியும் கூறும்போது, பிதா ஒருவர் தவிர, குமாரனும் அறியார் என்று கூறுகிறார். குமாரனுக்குத் தெரியாத காரியம் ஒன்றுமேயில்லை. பிதாவைப்போலவே குமாரனும் சர்வஞானமுள்ளவர். ஆகிலும் குமாரனாகிய இயேசுகிறிஸ்து தமது தேவத்துவத்தில் இந்த நாளையும் நாழிகையையும் அறிந்திருக்கிறார். ஆனால் இயேசுகிறிஸ்து தமது மனுஷத்துவத்தில் இந்த நாளையும் நாழிகையையும் அறியவில்லை. நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவிடத்தில் தெய்வீக ஞானம் நிரம்பியிருக்கிறது. அந்த ஞானம் அவருடைய மானிட ஆத்துமாவிற்கு தேவனுடைய ரகசியங்களையெல்லாம் அறிவிக்கிறது. தெய்வீக சித்தத்தின் பிரகாரம் இயேசுகிறிஸ்து தேவரகசியங்களையெல்லாம் அறிந்திருக்கிறார். ஆயினும் சில சமயங்களில் மானிடத்திலிருந்த இயேசுகிறிஸ்து, தேவனுடைய ரகசியங்களில் சிலவற்றை அறியாதவராகவும் இருக்கிறார். ஆகையினால்தான் இயேசுகிறிஸ்து ஞானத்தில் விருத்தியடைகிறாரென்று லூக்கா குறிப்பிட்டிருக்கிறார் (லூக் 2:52).
எச்சரிக்கையாயிருங்கள்
அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் (மாற்கு 13:33).
இயேசுகிறிஸ்துவின் வருகை எப்போது இருக்குமென்று மனுஷருக்கு வெளிப்படுத்தப்படவில்லை. அக்காலத்தை நாம் அறியாதிருக்கிறோம். அவருடைய வருகை எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகையினால் அவருடைய வருகைக்காக நாம் எச்சரிக்கையோடு காத்துக்கொண்டிருக்கவேண்டும். அவருடைய வருகை நமக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடாது. அவருடைய வருகையைச் சந்திப்பதற்கு தேவனுடைய கிருபை நமக்கு போதுமானதாக இருக்கவேண்டும். இதற்காக நாம் விழித்திருந்து ஜெபம்பண்ண வேண்டும். ஒவ்வொரு நாளும் இயேசுகிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சந்திப்பதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்.
அவனவனுக்கு தன்தன் வேலை
ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தணிக்கும் போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங் கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காக்கிறவனுக்குக் கற்பிப்பான் (மாற்கு 13:34).
இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு மறுபடியும் வருவார். அவர் எப்போது வருவாரென்று நமக்குத் தெரியாது. ஆகையினால் அவருடைய வருகைக்காக நாம் எப்போதுமே ஆயத்தமாக இருக்கவேண்டும். எச்சரிக்கையாக இருந்து ஜெபம்பண்ணவேண்டும். இதை விவரிப்பதற்காக இயேசுகிறிஸ்து ஒரு உவமையைக் கூறுகிறார். எஜமான் ஒருவன் தன் வீட்டைவிட்டு புறத்தேசத்திற்கு பிரயாணம் போக எத்தனிக்கிறான்.
அப்போது தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவர்கள் செய்யவேண்டிய வேலையையும் நியமிக்கிறான். ஒவ்வொரு ஊழியக்காரருக்கும் ஒவ்வொரு விதமான பொறுப்புக்களை கொடுக்கிறான். ஒரு சிலருக்கு வேலையையும், வேறு சிலருக்கு அதிகாரத்தையும் கொடுக்கிறான். அதிகமான அதிகாரம் பெற்றிருக்கிறவர்கள் அதிகமாகவேலை செய்யவேண்டும். புறத்தேசத்திற்கு எஜமான் போகும்போது விழித்திருக்கும்படிக்கு காவல்காக்கிறவனுக்கும் கற்பிக்கிறான். தான் மறுபடியும் திரும்பி வரும்போது காவல்காக்கிறவன் எஜமானுக்கு கதவுகளைத் திறந்து கொடுக்க ஆயத்தமாக இருக்கவேண்டும்.
அந்த எஜமானைப்போலவே இயேசுகிறிஸ்துவும் பரமேறிப்போயிருக்கிறார். தம்முடைய ஊழியக்காரர்கள் எல்லோருக்கும் அவரவர்களுக்குரிய ஊழியங்களைப் பொறுப்பாகக் கொடுத்துவிட்டு போயிருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோருக்குமே ஊழியப்பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மில் சிலருக்கு ஊழியம் செய்யவும், வேறு சிலருக்கு ஆளுகை செய்யவும் அவர் அதிகாரங்கொடுத்திருக்கிறார்.
வீட்டெஜமான்
அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல்கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டு பிடியாதபடிக்கு விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார் (மாற்கு 13:35-37).
நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து மறுபடியும் வருவார். ஆனால் அவர் எப்போது வருவாரென்று நமக்கு வெளிப்படுத்தப்படவில்லை. ஆகையினால் நாம் எப்போதும் எச்சரிக்கையாயிருந்து, விழித்திருந்து ஜெபம்பண்ணவேண்டும். வீட்டெஜமான் அறியாதவேளையில் வருவதுபோல நம்முடைய கர்த்தரும் நாம் அறியாத வேளையில் வருவார். வீட்டெஜமான் நினையாத வேளையில் வந்தாலும், அவனுடைய ஊழியக்காரர்கள் தூங்குகிறவர்களாகக் காணப்படக்கூடாது. வீட்டெஜமானின் வரவுக்காக அவர்கள் எப்போதும் விழித்திருந்து ஆயத்தமாக இருக்கவேண்டும்.
அதுபோலவே நம்முடைய கர்த்தரும் எப்போது வருவாரென்று தெரியாது. நாம் எப்போதுமே ஆயத்தமாக இருக்கவேண்டும். ஒருவேளை அவர் வருவதற்கு தாமதமாகலாம், அல்லது நமக்கு மரணமுண்டாகலாம். மரணமும் நாம் நினையாத வேளையிலேயே நமக்கு வரும். நாம் எப்போதுமே மரிப்பதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்.
நம்முடைய தற்போதைய ஜீவன் இரவு வேளையைப்போன்று இருக்கிறது. அது இருளடைந்த ஜாமம் போலிருக்கிறது. எஜமான் எந்த ஜாமத்தில் வருவார் என்று காவல் காக்கிறவருக்குத் தெரியாது. அதுபோல நமது மரணமும் இளமையில் வருமா, வாலிபத்தில் வருமா அல்லது முதுமையில் வருமா என்பது நமக்குத் தெரியாது. ஆகையினால் நாம் மிகுந்த எச்சரிக்கையாக ஜீவித்து, விழித்திருந்து ஜெபிக்கவேண்டும்.
நாம் இந்த பூமியில் பிறக்கும்போதே மரிக்க ஆரம்பித்துவிடுகிறோம். இந்த மரணம் நமது வாழ்நாளில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். நாம் எப்போதுமே நமது மரணத்தை எதிர்பார்த்தவர்களாக ஜீவிக்கவேண்டும். கர்த்தர் வரும்போது அவர் நம்மைத் தூங்குகிறவர்களாக கண்டுபிடியாதபடிக்கு நாம் விழித்திருக்கவேண்டும். நமது காவலைக் காத்துக்கொண்டு அவரது வருகைக்காக விழித்திருக்க வேண்டும். அவர் வரும்போது நம்மைத் தூங்குகிறவர்களாக அவர் கண்டுபிடித்தால் நமது நிலமை பரிதாபமாக இருக்கும்.
அவருடைய வருகை நினையாத நாழிகையிலும் இருக்கும். அது திடீரெனவும் வரும். ஆகையினால் இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றும், எச்சரிக்கையாயிருங்கள் என்றும் கூறுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களில் நான்கு பேருக்கு கூறும் இந்த சத்தியத்தை, அவர்கள் மற்ற சீஷர்களுக்கும் கூறவேண்டும். இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிற எல்லோருக்கும் சீஷர்கள் இந்த சத்தியத்தைச் சொல்லவேண்டும். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு விசுவாசிகள் எல்லோரும் ஆயத்தமாக இருக்கவேண்டும். விழித்திருந்து ஜெபிக்க வேண்டும். கறைதிரையில்லாமல் அவரைச் சந்திப்பதற்கு நாம் விழிப்போடு காத்திருக்கவேண்டும்.
5. விழித்திருந்து ஜெபம் பன்னுங்கள்
சோதனைக்குட்படாதபடிக்கு
பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார் (மாற்கு 14:37,38).
இயேசுகிறிஸ்து ஜெபிக்கும்போது அவருடைய சீஷர்கள் நித்திரைபண்ணுகிறார்கள். அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரை மயக்கம் அடைந்திருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கங்கொண்டு, அவர் திகிலடையவும் வியாகுலப்படவும் தொடங்கியபோது சீஷர்கள் அவரை விசாரிக்க வரவில்லை. ஆகையினால் இயேசுகிறிஸ்துவே இப்போது தமது சீஷர்களை விசாரிக்க வருகிறார். ஆனால் அவர்களோ விழித்திராமல் நித்திரைபண்ணுகிறார்கள். ஜெபத்தில் சீஷர்கள் கவனக்குறைவாக இருப்பதினால், இயேசுவுக்கு பிரச்சனை வரும்போது, அவர்கள் தங்களுடைய ஆவியில் பெலனில்லாமல் அவரைவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள். சீஷர்கள் சோதனைக்குட்படாதிருக்க வேண்டுமென்றால் அவர்கள் விழித்திருந்து ஜெபம்பண்ணவேண்டும்.
இயேசுகிறிஸ்துவினிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும் நான் இடறலடையேன் என்று பெருமையோடு கூறிய பேதுரு, இப்போது விழித்திருந்து ஜெபிக்காமல் நித்திரை பண்ணிக்கொண்டிருக்கிறான். அவனுடைய கண்கள் மிகுந்த நித்திரை மயக்கமடைந்திருக்கிறது. நித்திரை பண்ணுகிற பேதுருவை நோக்கி ""சீமோனே, நித்திரை பண்ணுகிறாயா, ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா'' என்று இயேசு பரிவோடு கேட்கிறார்.
இரவு முழுவதும் விழித்திருந்து ஜெபிக்காவிட்டாலும், ஒரு மணி நேரமாவது விழித்திருந்து ஜெபித்தால் போதுமானது. இயேசுகிறிஸ்து ஒருபோதும் நம்மீது அதிகமான பாரத்தை சுமத்துவதில்லை. நம்மை சோர்வடையச் செய்வதில்லை. அவருடைய பாரம் இலகுவானது.
இயேசுகிறிஸ்து யாரை நேசிக்கிறாரோ அவர்களைக் கடிந்துகொள்கிறார். தம்முடைய ஆலோசனையைக் கேட்காமல் நித்திரை பண்ணிக்கொண்டிருக்கும் சீஷர்களைக் கடிந்து கொள்கிறார். கிறிஸ்துவின் ஆலோசனைக்கு கீழ்ப்படிந்தால் நமக்கு சமாதானம் உண்டாகும். இயேசு தமது சீஷர்களுக்கு எப்போதுமே பிரயோஜனமுள்ள நல்ல ஆலோசனைகளையே கூறுகிறார். ""நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்'' என்று இயேசு தமது சீஷர்களுக்கு ஆவிக்குரிய நல்ல ஆலோசனையைக் கூறுகிறார். இயேசுகிறிஸ்து திகிலடையும்போது, வியாகுலப்படும்போது சீஷர்கள் தூங்குவது நல்ல காரியமல்ல. அவர்களும் விழித்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் பாடுகளில் பங்குபெறவேண்டும். நித்திரை பண்ணாமல் விழித்திருப்பதற்கு தேவனுடைய கிருபையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆவி உற்சாகமுள்ளதுதான். மாம்சமோ பலவீனமுள்ளது. நமது மாம்ச பலவீனத்தை ஜெபத்தினால் அகற்றிப்போடவேண்டும். ஜெபத்தின் மூலமாக மாத்திரமே நமது மாம்சத்தில் பெலனைப் பெற்றுக்கொள்ள முடியும். சீஷர்கள் ஜெபிக்காமல் நித்திரை பண்ணியதினால் அவர்களிடத்தில் பெலனில்லாமல் போயிற்று. ஆகையினால் அவருக்கு பாடுகள் வந்தபோது அவர்கள் எல்லோரும் அவரை மறுதலித்து விட்டு ஓடிப்போய்விடுகிறார்கள்.
சீஷர்கள் நித்திரைபண்ணுவதற்கான காரணத்தையும் இயேசுகிறிஸ்து கூறுகிறார். அவர்களுடைய ஆவி உற்சாகமுள்ளதுதான். அவர்கள் விழித்திருக்க வேண்டுமென்றே விரும்புகிறார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. அவர்களுடைய மாம்சம் பலவீனமாக இருக்கிறது. அவர்கள் விழித்திருந்து ஜெபிக்காவிட்டால் அவர்களால் ஆவிக்குரிய பலனைப் பெற்றுக்கொள்ள முடியாது. மாம்சத்தின் பலவீனத்தை மேற்கொள்ள முடியாது. நமது மாம்சத்தின் பலவீனத்தை நாம் உணர்ந்தவர்களாக, விழித்திருந்து ஜெபிக்க வேண்டும்.
மறுபடியும் ஜெபம்
அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்- ஜெபம்பண்ணினார் (மாற்கு 14:39).
இயேசுகிறிஸ்து மறுபடியும் பிதாவிடம் ஜெபிக்கிறார். ஏற்கெனவே ஜெபத்தில் சொல்லிய அதே வார்த்தைகளையே மறுபடியும் சொல்லி ஜெபிக்கிறார். மூன்றாம் முறையாக ஜெபிக்கிறார். நாம் சோர்ந்துபோகாமல் எப்போதும் ஜெபிக்க வேண்டும் என்பதற்கு இயேசுகிறிஸ்துவின் ஜெபம் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது (லூக் 18:1). சில வேளைகளில் நமது ஜெபத்திற்கு உடனடியாக பதில் கிடைக்காமல் போகலாம். என்றாலும் சோர்ந்து போகாமல், நமது விண்ணப்பங்களை தேவனிடம் மறுபடியும் ஏறெடுக்க வேண்டும்.
அப்போஸ்தலர் பவுல் தன்னுடைய சரீரத்திலுள்ள வேதனை நீங்கும்படி இயேசுகிறிஸ்துவிடம் மூன்றுமுறை ஜெபம்பண்ணினார். அவருடைய மாம்சத்தில் ஒரு முள் கொடுக்கப்பட்டிருந்தது பவுல் தன்னை உயர்த்தாதபடிக்கு அது அவரைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருந்தது. அது தன்னைவிட்டு நீங்கும்படிக்கு பவுல் கர்த்தரிடம் மூன்றுதரம் வேண்டிக்கொண்டார். ஆனால் கர்த்தரோ ""என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்'' என்று பதில் கூறுகிறார் (2கொரி 12:7,8). தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்வதற்கு பவுல் மூன்றுமுறை ஜெபம்பண்ணினார். தேவனுடைய சித்தம் தன்னுடைய ஜீவியத்தில் நிறைவேறுகிறது என்பதை அறிந்துகொண்டபோது அவருடைய ஆவியிலும் ஆத்துமாவிலும் சந்தோஷமும் சமாதானமும் உண்டாயிற்று.
நித்திரை மயக்கம்
அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள். அவர் மூன்றாந்தரம் வந்து; இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுகிறார். என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார் (மாற்கு 14:40-42).
இயேசுகிறிஸ்து ஜெபம்பண்ணிவிட்டு மறுபடியும் தம்முடைய சீஷர்களைப் பார்க்க வருகிறார். அவர்களோ மறுபடியும் நித்திரை பண்ணுகிறார்கள். சீஷர்களைப்போலவே இக்காலத்தில் கிறிஸ்துவின் சபையும் பாதித் தூக்கத்திலிருக்கிறது. என்றாலும் இயேசுகிறிஸ்து பூமியிலுள்ள தமது சபையின்மீது கிருபையுள்ளவராக, தமது சபையின்மீது தொடர்ந்து கவனமுள்ளவராக இருக்கிறார். அவர் இரண்டாந்தரம் வந்தபோது சீஷர்கள் நித்திரை மயக்கமாக இருக்கிறார்கள். இதற்கு முன்பு ஏற்கெனவே அவர்கள் விழித்திருந்து ஜெபிக்காமல் நித்திரைபண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் பேதுருவிடம் ""ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா'' என்று கூறினார். இப்போது இரண்டாம் முறை அவர்களைப் பார்க்க வரும்போது, அவர்கள் மறுபடியும் நித்திரை பண்ணுகிறார்கள். அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரை மயக்கம் அடைந்திருக்கிறது. ஆகையினால் தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.
ஒரு சிலர் தூக்கத்திலேயே நடப்பார்கள். அவர்களுக்கு தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதும் தெரியாது, எங்கே போகிறோம் என்பதும் தெரியாது, என்ன பேசுகிறோம் என்பதும் புரியாது. சீஷர்கள் அதுபோல நித்திரை மயக்கத்திலிருக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்து மூன்றாம் முறையும் சீஷர்களிடம் வருகிறார். அவர்கள் மறுபடியும் நித்திரை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போதோ ""விழித்திருங்கள்'' என்று அவர்களுக்கு ஆலோசனை கூறாமல் ""இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்'' என்று கூறிவிடுகிறார். ""போதும், வேளை வந்தது'' என்று அறிவித்துவிடுகிறார். இந்த வார்த்தை மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் எழுதப்படவில்லை. ""இதோ மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் இதோ வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம்'' என்று கூறுகிறார்.
சாதாரண விசுவாசிக்கு ஆவிக்குரிய போராட்டம் வரும்போது, விழித்திருந்து ஜெபிக்காமல், தூங்கி விடுகிறான். ஆனால் அவனுக்கு சரீரப்பிரகாரமான ஆபத்து வரும்போது தூங்காமல் விழித்திருப்பான். ஆவிக்குரிய ஆபத்துக்களையும், ஆவிக்குரிய போராட்டங்களையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பதினாலேயே ஜெபம் பண்ண வேண்டிய பல சமயங்களில் ஜெபம் பண்ணாமல் தூங்கிக் கொண்டிருக்கிறோம்.
யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காக பிரதான ஆசாரியரிடம் ஏற்கெனவே பணம் பெற்று விட்டான். இது இயேசுவிற்குத் தெரியும். அவன் வாங்கியதற்கு ரசீது கொடுப்பதுபோன்று, இயேசு கிறிஸ்து ""போதும்'' என்று கூறுகிறார் (மாற்கு 14:11) இப்போது யூதாஸ் இயேசுவை நெருங்கிவிட்டான். (மாற்கு 14:42-45)