மாற்கு சுவிசேஷம் - ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம் 3
3. வேதபாரகரை போல ஜெபிக்க கூடாது
தேவாலயத்தில் கிறிஸ்துவின் உபதேசம் மாற்கு 12 : 35-40
மாற்கு 12:35. இயேசு தேவாலயத்திலே உபதேசம் பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்?
மாற்கு 12:36. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்-யிருக்கிறானே.
மாற்கு 12:37. தாவீதுதானே அவரை ஆண்டவரென்று சொல்-யிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்.
மாற்கு 12:38. பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும்,
மாற்கு 12:39. ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
மாற்கு 12:40. விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
கிறிஸ்து தாவீதின் குமாரன்
இயேசு தேவாலயத்திலே உபதேசம் பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்-யிருக்கிறானே (மாற்கு 12:35,36).
வேதபாரகர்கள் தங்கள் பிரசங்கத்தில் பலவீனமானவர்களாகவும் குறைபாடுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டிலுள்ள கடினமான வேதவாக்கியங்களுக்கு வியாக்கியானம் கூறும் ஆற்றல் அவர்களிடத்திலில்லை. அவர்களுடைய அறியாமையில் ஒரு சம்பவத்தை மாத்திரம் இயேசுகிறிஸ்து இங்கு விவரித்துக் கூறுகிறார். மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் இந்த சம்பவம் விரிவாக விவரித்துக் கூறப்பட்டிருக்கிறது.
வேதபாரகர் ஜனங்களிடம் கிறிஸ்துவை தாவீதின் குமாரன் என்று உபதேசம்பண்ணுகிறார்கள். அவர்கள் கூறுவது சரிதான். வேதபாரகர் எதை உபதேசிக்கிறார்களோ அதை ஜனங்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். தேவனுடைய சத்தியத்தை விளக்குவதற்கு மனுஷருடைய வார்த்தையிலிருந்து மேற்கோளாக கூறக்கூடாது. வேதத்திலிருந்தே வசனங்களை மேற்கோளாக எடுத்துக் கூறவேண்டும். வேதவாக்கியமே எல்லா வியாக்கியானத்திற்கும் ஆதாரம். மனுஷருடைய கருத்துக்களும், விளக்கங்களும் குறைபாடுடையவை.
தாவீது பரிசுத்த ஆவியினாலே ""நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப்போடும் வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்'' என்று கூறியிருக்கிறார் (சங் 110:1). இந்த வசனத்தை வேதபாரகரால் விரிவாக விளக்க முடியவில்லை. இதற்கு தெளிவான வியாக்கியானமும் கூறமுடியவில்லை. கிறிஸ்துவைப்பற்றி அவர்கள் உபதேசம்பண்ணும்போது தங்களுடைய தேசத்திற்கு அவரை மகிமையானவராக வெளிப்படுத்துகிறார்கள். அரச குடும்பத்தில் அவர் ஒரு கிளையாக இருப்பார் என்று வர்ணிக்கிறார்கள். ஆனால் அவர் தேவனுடைய குமாரனாக இருப்பார் என்னும் சத்தியத்தை வேதபாரகர் கவனமாக உபதேசிப்பதில்லை. அவரை தாவீதின் கர்த்தரென்றும் அவர்கள் கற்றுக்கொடுப்பதில்லை.
தாவீது மேசியாவை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கையில் தாவீதிற்கு மேசியா குமாரனாகயிருப்பது எப்படி என்று இயேசுகிறிஸ்து ஒரு கேள்வியைக் கேட்கிறார். இந்தக் கேள்விக்கு எப்படி பதில்சொல்வது என்று வேதபாரகருக்கு தெரியவில்லை. மோசேயின் ஆசனத்தில் அமர்வதற்கு இவர்கள் அபாத்திரராக இருக்கிறார்கள். ஆயினும் சத்தியத்தை உபதேசம் பண்ணுவதற்கு தாங்கள் பிரதிஷ்டை பண்ணப்பட்டதாக நினைத்து, சத்தியத்தை தங்களுக்கு தெரிந்த பிரகாரம் அறையும் குறையுமாக பிரசங்கம்பண்ணுகிறார்கள். இவர்களுக்கு சத்தியத்தை பூரணமாக விளக்கிக் கூற தெரியவில்லை.
தாவீதுக்கு ஆண்டவர்
தாவீதுதானே அவரை ஆண்டவரென்று சொல்-யிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள் (மாற்கு 12:37).
இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக் கேட்டு வேதபாரகர் தங்கள் உள்ளத்தில் குத்தப்பட்டு தலைகுனிந்து நிற்கிறார்கள். ஆனால் அநேக ஜனங்களோ அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் பிரசங்கம் ஜனங்களுடைய உள்ளத்தில் ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது. அவர்களுடைய உள்ளத்தை தொடுகிறது. இதுபோன்ற பிரசங்கத்தை அவர்கள் இதுவரையிலும் கேள்விப்பட்டதேயில்லை. ஒருவேளை இயேசுகிறிஸ்துவின் மெல்லிய சத்தமும், அவர் சத்தியத்தை விளக்கிச் சொன்ன விதமும் ஜனங்களுக்கு அவருடைய பிரசங்கத்தின்மீது விருப்பத்தை உண்டுபண்ணியிருக்கலாம்.
ஆகையினால் சாதாரண ஜனங்கள் ஏராளமான எண்ணிக்கையில் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசம் வைத்து அவரை பின்பற்றுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை விருப்பத்தோடே கேட்ட இந்த ஜனங்களின் சிலர் இதன்பின்பு ""அவரை சிலுவையில் அறையும்'' என்று கூக்குரலிட்டார்கள். ஏரோது யோவான்ஸ்நானனின் பிரசங்கத்தை சந்தோஷமாக கேட்டான். என்றாலும் சமயம் வந்தபோது அவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், அவனை சிரச்சேதம் பண்ணிவிட்டான்.
வேதபாரகர்
பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார் (மாற்கு 12:38-40).
வேதபாரகர் ஜனங்கள்மீது பாரமான சுமைகளை சுமத்துகிறார்கள். அவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இயேசுகிறிஸ்து ஜனங்களுக்கு கூறுகிறார். ""வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள்'' என்று அவர்களைப் பற்றி ஜனங்களிடம் எச்சரித்துக் கூறுகிறார்.
அவர்களால் வரும் பாதிப்பு மிகவும் அதிகம். நியாயதிபதிகளைப்போலவும், பிரபுக்களைப்போலவும் அவர்கள் நீண்ட அங்கிகளை தரித்துக்கொள்கிறார்கள். நீண்ட அங்கிகளை தரித்துக்கொள்வது பாவமல்ல. ஆனால் நீண்ட அங்கிகளை தரித்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவது பாவம். இது பெருமையடையவேண்டும் என்னும் எண்ணத்தினால் வருவது. அகந்தையும் பெருமையும் பாவமான செயல். இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது எளிய உடையை தரித்துக்கொண்டு போகுமாறு கூறினார்.
அவர்கள் பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிறார்கள். மற்றவர்களுடைய பார்வையில் தாங்கள் நல்லவர்களாக இருக்கவேண்டுமென்று மாய்மாலமாக வேஷம் போடுகிறார்கள். இதற்காகவே நீண்ட ஜெபம்பண்ணுகிறார்கள். தாங்கள் நீண்ட ஜெபம்பண்ணுவது மனுஷருக்குத் தெரியவேண்டுமென்று விரும்புகிறார்கள். ஜெபத்தில் தங்களுக்கு ஆர்வம் இருப்பதுபோல காண்பித்துக்கொள்கிறார்கள். தேவனிடத்தில் ஜெபிக்கவேண்டும் என்னும் வாஞ்சை இவர்களிடத்தில் சிறிதும் இல்லை. தங்கள் நீண்ட ஜெபத்தை ஜனங்கள் பார்க்கவேண்டும் என்னும் விருப்பமே இவர்களிடத்தில் காணப்படுகிறது.
மற்றவர்கள் தங்களை போற்றிப் புகழவேண்டுமென்றும், தங்களுக்கு வந்தனம் செய்யவேண்டுமென்றும் விரும்புகிறார்கள். இதற்காக ஜெபாலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்புகிறார்கள். தங்களுக்கு இதுபோன்ற முதன்மையான இடம் கிடைத்தால் தாங்கள் சமுதாயத்தில் முக்கியமானவர்களென்றும், அந்தஸ்தில் உயர்ந்தவர்களென்றும் தங்களைப்பற்றி உயர்வாக நினைத்துக் கொள்கிறார்கள். வேதபாரகரைப்பற்றி தெரியாதவர்கள் அவர்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தைப்பார்த்து அவர்களை உயர்வாக நினைக்கலாம். ஆனால் அவர்களைப்பற்றி தெரிந்தவர்களோ அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மாத்திரமே கொடுப்பார்கள்.
வேதபாரகர் விதவைகளின் வீடுகளை பட்சித்துப்போடுகிறார்கள். ஆதரவற்ற விதவைகளின் ஐசுவரியங்களை தங்களுக்கென்று அபகரித்துக் கொள்கிறார்கள். பொறுப்பான ஊழியத்தில் இருக்கிறவர்கள். சமுதாயத்தில் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். மற்றவர்கள் தங்களைப்பார்த்து எந்தவிதத்திலும் குறை கூறாதவாறு மிகுந்த எச்சரிப்போடு பிறரிடம் பழகவேண்டும். ஆனால் வேதபாரகரோ பக்தியின் வேஷத்தை தரித்து, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறார்கள்.
வேதபாரகரின் உத்தியோகம் புனிதமானது. ஆனால் அவர்களுடைய செயலோ பாவமானது. தங்களுடைய உத்தியோகத்திற்கு தகுந்த பிரகாரம் இவர்கள் கண்ணியமாக நடந்துகொள்ளாமல், தங்களுடைய சுயநலத்தையே பார்க்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைக் குறித்து எல்லோரும் எச்சரிக்கையோடிருக்க வேண்டும். இவர்கள் எவ்வளவுதான் நீண்ட ஜெபம்பண்ணினாலும் இவர்களுடைய ஜெபம் தேவனுடைய சமுகத்தை கிட்டிச் சேராது. ஏனெனில் இவர்களுடைய வார்த்தையில் உண்மையில்லை. நடத்தையில் பரிசுத்தமில்லை. பேச்சில் தாழ்மையில்லை.
பரிசேயர் பக்தியின் வேஷத்தை தரித்து தங்களுடைய பாவங்களை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இவர்கள் அதிக ஆக்கினை அடைவார்கள். தாங்கள் தவறு செய்தாலும், தவறு செய்யாதவர்கள் போல தங்களை காண்பித்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மாய்மாலக்காரர்களைக் குறித்து நாம் எச்சரிப்போடு இருக்கவேண்டும்.
மாயக்காரரின் அடையாளங்கள்
1. நீண்ட அங்கிகளைத் தரித்துக் கொள்வார்கள். (மாற்கு 12:38; மத் 23:5)
2. சந்தைவெளிகளில் வந்தனங்களை அடைய விரும்புவார்கள். (மாற்கு 12:38)
3. ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் இருக்க விரும்புவார்கள். (மாற்கு 12:39; மத் 23:2,6)
4. விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவிரும்புவார்கள். (மாற்கு 12:39; மத் 23:6; லூக்கா 14:7-11; லூக்கா 20:46)
5. விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுவார்கள். (மாற்கு 12:40; மத் 23:14)
6. பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுவார்கள். (மாற்கு 12:40; மத் 23:14)