ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 1:26-28 Tamil bible study pdf

 

ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 1:26-28

ஆறாம் நாள் - மனுஷன் ஆதி 1:26-28


ஆதி 1:26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும், ஆளக்கடவர்கள் என்றார். 


ஆதி 1:27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்த்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.  


ஆதி 1:28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி,அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்-, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.


தேவன் ஆறாம் நாளிலே  இரண்டுவிதமான கிரியைகளை செய்கிறார்.  அவர் முதலாவதாக மிருகங்களை உண்டாக்குகிறார்.  அதன் பின்பு தேவன் மனுஷனை சிருஷ்டிக்கிறார். தேவன்  எல்லா ஜீவஜந்துகளையும் உண்டாக்கி முடித்த பின்பு, மனுஷனை கடைசியாக உண்டாக்குகிறார்.  தேவன் மனுஷனை முதலாவது உண்டாக்கியிருந்தால், தேவனுடைய சிருஷ்டிப்பின் கிரியைகளில் மனுஷனும் உதவி செய்தான் என்று  சிலர் தப்பிதமாக வியாக்கியானம் பண்ணுவார்கள்.


தேவன் மனுஷனை, எல்லா ஜீவஜந்துகளையும் உண்டாக்கின பின்பு,  கடைசியாக சிருஷ்டித்தது மனுஷனுக்கு மேன்மை. தேவன் மனுஷனுக்கு விசேஷித்த கிருபையையும் சிலாக்கியத்தையும் காண்பித்து, அவனை கடைசியாக சிருஷ்டித்திருக்கிறார்.  


தேவனுடைய சிருஷ்டிக்கும்  கிரியையில் ஒழுங்கும் கிரமமும் இருக்கிறது.  தேவன் முதலாவதாக சாதாரண காரியங்களை சிருஷ்டிக்கிறார்.  அதன் பின்பு அவர் கொஞ்சம் கொஞ்சமாக விசேஷித்த காரியங்களை சிருஷ்டிக்கிறார். தேவனுடைய சிருஷ்டிப்பில் ஒரு முன்னேற்றம் காணப்படுகிறது.  தேவன் ஆரம்பத்தில் சிருஷ்டித்தது. ஒழுங்கின்மையாயும், வெறுமையாயும் இருந்தது. அவர் அதன் பின்பு சிருஷ்டித்தது ஒழுங்குள்ளதாயும், நிறைவானதாயும் இருக்கிறது. அது நல்லதாயும் இருக்கிறது.


தேவன் மனுஷனை சிருஷ்டிப்பதற்கு முன்பதாகவே, அவனுக்கு தேவையானது எல்லாவற்றையும் சிருஷ்டித்து முடிக்கிறார்.  மனுஷனுக்கு தங்கும் வாசஸ்தலத்தை உண்டாக்கியிருக்கிறார். மனுஷன் இந்தப் பூமியில் சிருஷ்டிக்கப்படும்போது, அவனுக்கு தேவையானவையெல்லாம் ஏற்கெனே சிருஷ்டித்து முடிக்கப்பட்டிருக்கிறது.  தேவன் இந்தப் பூமியிலே மனுஷனை, தம்முடைய கிருபையினால் வரவேற்கிறார். மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டபோது, அவன் தேவனுடைய சிருஷ்டிப்புகளை பிரத்தியட்சமாய்ப் பார்க்கிறான். தேவனுடைய சிருஷ்டிப்பு மனுஷனுக்கு ஆச்சரியமாயும்,  ஆறுதலாயும் இருக்கிறது.


மனுஷனுடைய சிருஷ்டிப்பு மிகவும் விசேஷித்ததாயிருக்கிறது. இதில்  தேவனுடைய தெய்வீக ஞானமும் அவருடைய வல்லமையும் அதிகமாய் வெளிப்படுகிறது.  தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தாலும், மனுஷனை விசேஷித்த விதமாகவும், தம்முடைய  விசேஷித்த ஞானத்தின் பிரகாரமாகவும் சிருஷ்டித்திருக்கிறார். 


தேவன் இதற்கு முன்பு வெளிச்சத்தை உண்டாக்கியபோது, ""வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று மாத்திரமே சொன்னார். அவர் ஆகாயவிரிவை உண்டாக்கியபோது, ""ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது'' என்று மாத்திரமே சொன்னார்.


ஆனால் இப்போது தேவன் மனுஷனை சிருஷ்டிக்கும்போது, ""நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக'' (ஆதி 1:26) என்று சொல்லுகிறார். தேவன்  வெளிச்சத்தையும், ஆகாயவிரிவையும் உண்டாக்கியபோது, தம்முடைய கட்டளையின் வார்த்தையை வெளிப்படுத்தினார். மனுஷனை உண்டாக்கும்போதோ, தேவன் கட்டளையின் வார்த்தைக்கு பதிலாக,  ஆலோசனையின் வார்த்தையை சொல்லுகிறார். ""மனுஷனை உண்டாக்குவோமாக'' என்று தேவன் சொல்லுகிறார்.


தேவன் மனுஷனுக்காகவே மற்ற எல்லா சிருஷ்டிகளையும் சிருஷ்டித்திருக்கிறார். ஆகையினால் மனுஷனை உண்டாக்கும்போது,  தேவன் விசேஷித்த கவனம் செலுத்தி, அவனை தம்முடைய சொந்த கரங்களினால் உண்டாக்குகிறார்.  


தேவன்  வெளிச்சத்தையும்,  ஆகாயவிரிவையும் உண்டாக்கியபோது,  அவர் அதிகாரமுள்ளவராகப் பேசினார்.   ஆனால் இப்போதோ, அவர் மனுஷனை உண்டாக்குகிறபோது, அன்பும்,  கரிசனையுமுள்ளவராகப் பேசுகிறார். மனுஷனுக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் ஏற்கெனவே உண்டாக்கியிருக்கிறார்.  இப்போது மனுஷனை உண்டாக்குவதற்கான ஏற்ற வேளை வந்திருக்கிறது. ஆகையினால் தேவன், ""மனுஷனை உண்டாக்குவோமாக'' என்று சொல்லுகிறார். 


மனுஷனுக்கும், தேவனுடைய மற்ற சிருஷ்டிகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளது.  தேவன் இதுவரையிலும் சிருஷ்டித்த சர்வசிருஷ்டிகளிலிருந்தும், மனுஷன் வேறுபட்டவனாயிருக்கிறான்.  மனுஷனுக்குள்ளே மாம்சமும் ஆவியும் கலந்திருக்கிறது. தேவன் மனுஷனுக்குள்ளே வானத்தையும் பூமியையும் ஒன்றாய்ச்  சேர்த்து வைக்கிறார். மனுஷன் பூமிக்குரியவன் வானத்திற்குமுரியவன்.


ஆகையினால் மனுஷனை விசேஷித்த விதமாக சிருஷ்டிக்கவேண்டும் என்பது தேவனுடைய  தெய்வீக சித்தமாயிற்று. மனுஷனை சிருஷ்டிக்கும் வேலையை தேவன் தாமே பொறுப்பேற்றுக்கொள்கிறார்.  ஆனாலும் தேவன் மனுஷனை சிருஷ்டிக்கும்போது, திரித்துவத்தின் மற்ற நபர்களையும் கலந்து ஆலோசித்து,  மனுஷனை சிருஷ்டிப்பதுபோல இருக்கிறது. ஆகையினால் தேவன், ""மனுஷனை உண்டாக்குவோமாக'' என்று பன்மைப் பொருளில் சொல்லுகிறார். 


மனுஷனை உண்டாக்கும்போது, திரித்துவத்தின் மூன்று நபர்களான,  பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று பேருமே கலந்து ஆலோசித்துக்கொள்கிறார்கள். அவர்கள்  மூன்று பேரும் தங்களுடைய ஒருமித்த கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். அதன் பிரகாரமாக மனுஷன் உண்டாக்கப்படுகிறான். 


மனுஷன் தேவனுடைய சாயலாகவும்,  அவருடைய ரூபத்தின் படியேயும் உண்டாக்கப்படுகிறான். மனுஷனிடத்தில் தேவனுடைய சாயலும்,  அவருடைய ரூபமும் கலந்திருக்கிறது. ஆனாலும் தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையில் அனந்தமான  இடைவெளி இருக்கிறது. கிறிஸ்துவானவர் தேவனுடைய சாயலை வெளிப்படுத்துகிறார். குமாரனாகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய பிதாவின் சாயலை பிரதிபலிக்கிறார்.


தேவனுடைய சாயலும் ரூபமும்  மனுஷனிடத்தில் காணப்படுவது,  மனுஷனுடைய மேன்மை. இது மனுஷனுக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம்.  இது மனுக்குலத்திற்கு ஒரு பாக்கியம். மனுஷன் தேவனுடைய சாயலாகவும், அவருடைய ரூபத்தின்படியும் உண்டாக்கப்பட்டாலும்,  தேவனுடைய பூரண சாயலும், அவருடைய பூரண ரூபமும் மனுஷனிடத்தில் வெளிப்படவில்லை. ஒரு கண்ணாடியில் நிழலைப் பார்ப்பதுபோல, மனுஷனிடத்தில் தேவனுடைய ரூபமும் சாயலும் காணப்படுகிறது. 


பண்டை காலத்து நாணயங்களில்,  ராஜாவின் ரூபம் பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்திலுள்ளது மெய்யான  ராஜா அல்ல. அது ராஜாவின் ரூபம். அதுபோலவே மனுஷனிடத்தில் காணப்படுவது  தேவனுடைய பூரணமான ரூபமோ, பூரணமான சாயலோ அல்ல.


மனுஷன் தேவனுடைய சாயலாகவும்,   அவருடைய ரூபமாகவும் உண்டாக்கப்பட்டான் என்று சொல்லும்போது,  அதில் மூன்றுவிதமான காரியங்கள் இடம்பெற்றுள்ளன. அவையாவன : 


1. மனுஷன்  தன்னுடைய சரீர அமைப்பில்,  தேவனுடைய ரூபத்தைப்போலவோ அவருடைய  சாயலைப்போலவே இல்லை. ஏனென்றால் தேவனுக்கு சரீரம் இல்லை.  தேவன் அரூபமானவர்.


மனுஷனுடைய ஆத்துமா  தேவனுடைய சாயலாகவும், அவருடைய  ரூபத்தின்படியேயும் இருக்கிறது. தேவன் தாமே மனுஷனுடைய சரீரத்தில்  இந்த மேன்மையை வைத்திருக்கிறார். வார்த்தை மாம்சமாயிற்று. தேவகுமாரன் மனுஷசாயலானார். விசுவாசிகளாகிய நாம் உயிர்த்தெழும்போது, கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பான  மகிமையான சாயலைப் பெற்றுக்கொள்வோம்.  


மனுஷனுடைய ஆத்துமாவே தேவனுடைய சாயலைப் பெற்றிருக்கிறது.  ஆத்துமாவில் மூன்று பகுதிகள் உள்ளன. அவையாவன : 1. புரிந்து கொள்ளும் அறிவு.   2. சித்தம் 3. செயல்படும் வல்லமை. நாம் இம்மூன்றின் மூலமாக மாத்திரமே, தேவனை அறிந்துகொள்ள முடியும். 


2. தேவன் மனுஷனை  தம்முடைய ஸ்தானத்திலும்,  தம்முடைய அதிகாரத்திலும் உண்டாக்கியிருக்கிறார்.  மனுஷன் சகல பிராணிகளையும் ஆளவேண்டும் என்பதற்காக, தேவன் மனுஷனை  தம்முடைய சாயலாகவும், தம்முடைய ரூபத்தின்படியேயும் உண்டாக்கியிருக்கிறார். 


""பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப்பிராணிகளையும், ஆளக்கடவர்கள் என்றார்'' (ஆதி 1:26). 


தேவனே சர்வசிருஷ்டிகளையும் சிருஷ்டித்தவர்.  ஆகையினால் அவருக்கு எல்லா சிருஷ்டிகளையும் ஆளுகை செய்கிற அதிகாரமுள்ளது. தேவன் தம்முடைய  சார்பாக சகல பிராணிகளையும் ஆளுகை செய்யும் அதிகாரத்தை மனுஷனுக்கு கொடுத்திருக்கிறார். மனுஷன் தேவனுடைய  பிரதிநிதியாக சகல பிராணிகளையும் ஆளுகை செய்கிறான்.


3. மனுஷன்  பரிசுத்தத்தில் தேவசாயலாகவும்  அவருடைய ரூபத்தின்படியும் உண்டாக்கப்பட்டிருக்கிறான். மனுஷனுடைய அறிவு, நீதி, மெய்யான பரிசுத்தம் ஆகியவற்றில்  தேவனுடைய சாயல் வெளிப்படுகிறது.  


""உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்'' (எபே 4:23,24). 


""தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே''      (கொலோ 3:10).


நம்முடைய முதல் பெற்றோர் தேவசாயலாகவும்,  தேவனுடைய ரூபத்தின் படியேயும் உண்டாக்கப்பட்டார்கள். ஆகையினால் அவர்கள் பரிசுத்தமாயும், சந்தோஷமாயும் இருந்தார்கள். 


தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்த்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் (ஆதி 1:27).  


பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி,அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்-, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் (ஆதி 1:28). 


தேவன், ""நமது சாயலாகவும்          நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக'' என்று சொன்னார்.  தேவன் அவ்வாறு சொன்னவுடனே, ""அவர் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார்''. தாம் தீர்மானித்ததை தேவன் உடனே நிறைவேற்றினார். 


மனுஷனுக்கு  சொல்லுவதும் செய்வதும் இரண்டு வெவ்வேறு காரியங்கள்.  ஆனால் தேவனுக்கோ சொல்லுவதும் செய்வதும் ஒரே காரியம். அவர்  சொல்லுகிறதை செய்கிறவர். செய்கிறதை சொல்லுகிறவர்.  


தேவன் மற்ற ஜீவஜந்துக்களை சிருஷ்டித்தபோது அவற்றை  ஜோடி ஜோடிகளாக சிருஷ்டித்தார். தேவன் அவற்றை திரளான எண்ணிக்கையில் சிருஷ்டித்தார். ஆனால்   தேவன் மனுஷனை சிருஷ்டிக்கும்போது, ஒருவனை மாத்திரமே சிருஷ்டிக்கிறார்.


இயேசுகிறிஸ்து  திருமண விவாகரத்துக்கு விரோதமாக உபதேசம்பண்ணும்போது, இந்த சத்தியத்தை சொல்லுகிறார். 


""அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?'' (மத் 19:4,5). 


நம்முடைய முதலாவது தகப்பனாகிய ஆதாமுக்கு, ஏவாள் என்பவள் மாத்திரம்  ஒரே மனைவியாகயிருந்தாள். ஆதாம் தன்னுடைய மனைவியாகிய ஏவாளை தள்ளி வைத்துவிட்டால், ஆதாம் மறுபடியும் விவாகம்பண்ணுவதற்கு, இந்தப் பூமியிலே  ஏவாளைத் தவிர வேறு ஸ்திரீ யாருமில்லை. ஆகையினால் புருஷனும் மனைவியும், தங்களுடைய சுயஇஷ்டம்போல, தாங்கள் விரும்பிய பிரகாரம், தங்களுடைய திருமண உறவை முறித்துக்கொள்ளக்கூடாது. 


தேவன் ஒரு ஆணும், ஒரு பெண்ணுமாக சிருஷ்டித்தார். இந்த சத்தியத்தை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா தேசத்தாரும் அறிந்திருக்கவேண்டும்.  திருமண உறவின் மூலமாக, புருஷனும் மனைவியும், ஒரே இரத்தமாக சேருகிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே சந்ததியை சேர்ந்தவர்களாயிருக்கிறார்கள்.  கணவனும் மனைவியும் தங்களுடைய திருமண பந்தத்தின் பரிசுத்ததை நினைவுகூர்ந்து, ஒருவருக்கொருவர் அன்பாயிருக்கவேண்டும். 


தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார்.  தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி, ""நீங்கள் பலுகிப்பெருகி பூமியை நிரப்புங்கள்'' என்று சொன்னார்.  தேவன் முதலாம் மனுஷனுக்கு சொன்ன கட்டளை, இந்தப் பூமியிலுள்ள மனுபுத்திரர் எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கிற பொதுவான கட்டளையாகும். 


""மனுஷஜாதியான சகல  ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்''  (அப் 17:26). 


நாம் இந்தப் பூமியில் வாசம்பண்ணினாலும், இங்கே பரதேசிகளைப்போல சஞ்சரிக்கிறோம்.  நமக்கு நிலையான நகரம் இங்கு இல்லை. பரலோகமே நமக்கு நித்திய வாசஸ்தலம். நாம் இந்தப் பூமியில் இருக்கும் காலம் வரையிலும், இங்கே பலுகிப்பெருகி,         பூமியை நிரப்பவேண்டும். இதுவே நம்மைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.


தேவன் மனுஷருக்கு சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். சமுத்திரத்தின் மச்சங்கள், ஆகாயத்து பறவைகள், பூமியின்மேல் நடமாடுகிற        சகல ஜீவஜந்துக்கள் ஆகியவையெல்லாமே மனுஷனுடைய ஆளுகைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. மனுஷன் இந்த ஜீவஜந்துக்களை பராமரிக்கவில்லை. ஆனாலும் அவற்றை ஆண்டுகொள்ளும் அதிகாரத்தை கர்த்தர் மனுஷனுக்கு கொடுத்திருக்கிறார்.  


தேவன் தம்முடைய சாயலாகவும், தம்முடைய ரூபத்தின் படியேயும் மனுஷனை சிருஷ்டித்து,  அவனுக்கு சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளும் அதிகாரத்தைக் கொடுத்து, அவனை மேன்மைப்படுத்தியிருக்கிறார். மனுஷன் தன்னுடைய பாதுகாப்புக்காகவும்,  தன்னுடைய ஜீவாதாரத்திற்காகவும் சகல ஜந்துக்களையும் ஆளுகை செய்யவேண்டும். அவற்றை தன்னுடைய பிரயோஜனத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.



You have to wait 15 seconds.

Download pdf

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.