மாற்கு சுவிசேஷம் - ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம் 2
2. விசுவாச ஜெபம்
விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்
இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள் (மாற்கு 11:22).
பட்டுப்போன அத்திமரத்தை உதாரணமாக வைத்து இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு ஆவிக்குரிய சத்தியத்தை உபதேசம்பண்ணுகிறார். அத்திமரம் பட்டுப்போனாலும், அது ஆவிக்குரிய சத்தியத்தை சீஷர்கள் கற்றுக்கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கிறது. தேவனிடத்தில் நாம் விசுவாசமுள்ளவர்களாக இருக்கவேண்டும். விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவினுடைய வார்த்தையின் அதிகாரத்தைக்குறித்து சீஷர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். நம்முடைய இருதயத்திலும் நாம் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் நாம் சொன்னபடியே ஆகும் என்று இயேசுகிறிஸ்து உபதேசிக்கிறார்.
ஒரு மலையைப் பார்த்து, நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று நாம் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்துச் சொன்னால், அது நாம் சொன்னபடியே நடக்கும். இயேசுகிறிஸ்துவில் தேவனுடைய வல்லமையும் பெலனுமுள்ளது. நாம் தேவனிடத்தில் விசுவாசம் வைக்கும்போது நமக்கு கடினமாக இருக்கும் காரியங்களெல்லாம் நம்மைவிட்டு அகன்றுபோகும். ஆகையினால் நாம் ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வோமோ அவைகளை பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கவேண்டும். நமது இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசிக்கவேண்டும். அப்போது நாம் சொன்னபடியே காரியம் நடைபெறும்.
ஆதி அப்போஸ்தலர்களும், ஆதித் திருச்சபையில் சுவிசேஷத்தை பிரசங்கித்தவர்களும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அற்புதங்களை நடப்பித்தார்கள். இவை அற்புதங்களின் விசுவாசமாகும். அதே வேளையில் விசுவாசமே ஒரு அற்புதம்தான். விசுவாசம் நம்மை நீதிமானாக்குகிறது (ரோம 5:1). மெய்யான கிறிஸ்தவர்களிடம் விசுவாசம் நிறைந்திருக்க வேண்டும். நம்முடைய விசுவாசம் குற்றவுணர்வு என்னும் மலையை தள்ளிப்போடும். அதை சமுத்திரத்தின் ஆழத்திலே புதைத்துப்போடும். விசுவாசம் நமது இருதயத்தை சுத்திகரிக்கிறது (அப் 15:9). கபடு என்னும் பர்வதங்களை நம்மை விட்டு அகற்றிப்போடுகிறது. விசுவாசத்தினால் நாம் இந்த உலகத்தை ஜெயிக்கப்போகிறோம். தேவனிடத்தில் வைத்திருக்கும் விசுவாசத்தினால் நாம் சாத்தானுடைய அக்கினியாஸ்திரங்களை அவித்துப்போடுவோம். நமது ஆத்துமா கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டாலும் அது மரித்துப்போகாமல் நித்தியகாலமாக ஜீவிக்கும்.
தேவனிடத்தில் மனுஷரால் விசுவாசமாய் இருக்க முடியும். மனுஷரால் முடியாத காரியத்தைத் தேவன் கட்டளையிட மாட்டார். தேவனை விசுவாசிக்கும் விசுவாசத்தோடு அவர் மனுஷனைச் சிருஷ்டித்தார். மனுஷன் பாவம் செய்து வீழ்ந்தபோது, அவிசுவாசம் அவனுக்குள் வந்தது. (ஆதி 3:1-7) மனுஷன் புதுசிருஷ்டியாகும்போது அவனுக்குள் விசுவாசம் புதுப்பிக்கப்படுகிறது. அந்த விசுவாசத்தை அவன் காத்துக்கொள்ளும் போது, அது பூரண நிலைக்கு வளர்கிறது.
ஜெபத்திற்குப் பதில் கிடைப்பதற்கு நிபந்தனைகள்
1. தேவனிடத்தில் விசுவாசம் வைத்திருக்க வேண்டும். (ரோமர் 4:17; எபி 11:3)
2. நமது விருப்பங்களைத் தேவனிடம் தாராளமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். (மாற்கு 11:23-24; மத் 17:20)
3. தேவன் நமது ஜெபத்திற்குப் பதில் கொடுப்பார் என்று இருதயத்தில் விசுவாசிக்க வேண்டும். (மாற்கு 11:23-24; மத் 17:20)
4. இருதயத்தில் சந்தேகப்படக்கூடாது. (மாற்கு 11:23; மத் 17:20; யாக் 1:5-8).
5. நாம் கேட்பதைக் கர்த்தர் கொடுப்பார் என்பதை விசுவாசிக்க வேண்டும். (மாற்கு 11:23-24; மத் 7:7-11)
6. நாம் கேட்பதை ஆண்டவர் ஏற்கெனவே கொடுத்து விட்டார் என்று விசுவாசிக்க வேண்டும். (மாற்கு 11:24; மத் 17:20)
7. நாம் தேவனிடத்தில் கேட்கும்பொழுது, புத்திரசுவீகாரத்தின் உரிமையோடு கேட்க வேண்டும். (மாற்கு 11:23-24; மத் 17:20)
8. நாம் கேட்பதும், தேவனுடைய சித்தமும் ஒன்றுதான் என்று விசுவாசிக்க வேண்டும். (மாற்கு 11:24; யோவான் 15:7)
9. ஒரு காரியம் தேவனுடைய சித்தம் என்று தெரிந்தும், அதற்காக ஜெபிக்கும்போது, ""உமக்கு சித்தமானால்'' என்று கூறி ஜெபிக்கக்கூடாது. (மாற்கு 11:23)
10. தேவனுக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும் சுத்த இருதயத்தோடும், சுத்த ஜீவியத்தோடும் இருக்க வேண்டும். (மாற்கு 11:25; யோவான் 15:7)
மன்னியுங்கள்
நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்தி-ருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார் (மாற்கு 11:25,26).
நமது ஜெபத்திற்கு கர்த்தர் பதில் கொடுக்க வேண்டுமென்றால் நாம் மற்றவர்கள் செய்த தப்பிதங்களை மன்னிக்கவேண்டும். எல்லா மனுஷரோடும் அன்போடும் சமாதானமாகவும் ஜீவிக்க வேண்டும். நாம் நின்று ஜெபம்பண்ணும்போது, மற்றவர் பேரில் நமக்கு ஏதாவது குறை உண்டாயிருக்குமானால், அந்த குறையை அவனுக்கு மன்னிக்க வேண்டும். நாம் ஜெபிக்கும்போது மற்றவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும். அதிலும் விசேஷமாக நமது சத்துருக்களுக்காகவும், நமக்கு விரோதமாக தப்பிதங்களை செய்தவர்களுக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டும். நாம் மற்றவர்களுக்கு ஏதாவது தப்பிதம் செய்திருந்தால், முதலாவதாக அவரிடத்தில் சென்று அவர்களோடு ஒப்புரவாக வேண்டும் (மத் 5:23,24).
மற்றவர்கள் நமக்கு விரோதமாக ஏதாவது தப்பிதம் செய்திருந்தால், அல்லது நம்மை காயப்படுத்தியிருந்தால், நமது இருதயம் அவர்களை தாமதமில்லாமல் மன்னிக்க வேண்டும். நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது நமது பரலோகப் பிதா நமது தப்பிதங்களையும் மன்னிப்பார். நாம் மற்றவர்கள் செய்த தப்பிதங்களை மன்னியாதிருந்தால், நமது பரலோகப் பிதாவும் நமது தப்பிதங்களை மன்னியாதிருப்பார்.
இந்த சத்தியத்தை நாம் ஜெபத்தில் தரித்திருக்கும்போது நினைவுகூரவேண்டும். தேவனுடைய கிருபாசனத்தண்டையில் நாம் வரும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்படும். அதே வேளையில் நாம் மற்றவர்களை மன்னியாதிருந்தால் நமது பாவமும் மன்னிக்கப்படாது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். இயேசுகிறிஸ்து இந்த சத்தியத்தை நமக்கு வலியுறுத்திக் கூறுகிறார். ஏனெனில் நாம் ஒருவருக்கொருவர் அன்புகூர வேண்டுமென்பதே தேவனுடைய பிரமாணம். நாம் நம்மை நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்க வேண்டும். இந்த அடிப்படை சத்தியத்தை இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு பல சமயங்களில் போதகம்பண்ணியிருக்கிறார்.
தேவன் நமது பாவங்களை மன்னிக்க வேண்டுமென்றால் அதற்காக நாம் செய்ய வேண்டிய நிபந்தனை ஒன்று உள்ளது. நமக்கு எதிராக மற்றவர்கள் பாவம் செய்திருக்கலாம். நாம் அவர்களை மன்னிக்க வேண்டும்.