மத்தேயு சுவிசேஷம் - ஜெபத்தை குறித்த இயேசுவின் உபதேசம்
3. உபவாசிக்கும் விதம் மத் 6 : 16-18
உபவாசத்தில் மாய்மாலம் இருக்கக்கூடாது. இயேசுகிறிஸ்து உபவாசம் பண்ணக்கூடாது என்று கூறவில்லை. இயேசுகிறிஸ்துவே உபவாசம்பண்ணியிருக்கிறார். நம்மையும் உபவாசம்பண்ணி ஜெபிக்கவேண்டுமென்று கூறுகிறார். நாம் உபவாசம்பண்ணும் முறைமையைக் குறித்து இயேசுகிறிஸ்து இங்கு விவரமாக எடுத்துக் கூறுகிறார்.
மாயக்காரரைப்போல முகவாடலாயிராதேயுங்கள்
நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 6:16).
கிறிஸ்துவின் சீஷர்கள் உபவாசம்பண்ணவேண்டும். உபவாசம்பண்ணுவது ஆவிக்குரிய காரியம். நாம் உபவாசம்பண்ணவேண்டுமென்று இயேசுகிறிஸ்து நமக்கு வலியுறுத்திக் கூறுகிறார். நமது ஆத்துமாவின் நன்மைக்காக உபவாசம்பண்ணுவது அவசியம். ஆகையினால் நாம் நினைக்கும்போது கட்டாயம் உபவாசம்பண்ணவேண்டும்.
ஜெபத்தைப் பற்றிய உபதேசத்தில் இயேசுகிறிஸ்து உபவாசத்தை கடைசியாக குறிப்பிடுகிறார். உபவாசம்பண்ணுவதை ஒரு கடமையாக நினைத்து செய்யக்கூடாது. மற்ற வேலைகளை செய்யாமல் உபவாசம்பண்ணுகிறேன் என்று கூறி, மற்ற கடமைகளை அசட்டை பண்ணக்கூடாது.
தானதர்மம் பண்ணுவதற்கும் உபவாசம்பண்ணுவதற்கும் நடுவில் இயேசுகிறிஸ்து ஜெபத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவ்விரண்டிற்கும் உபவாசமே ஜீவனும் ஆத்துமாவுமாக இருக்கிறது.
பரிசேயர்கள் வாரம் இரண்டு முறை உபவாசம்பண்ணினார்கள். இதில் தவறில்லை. ஆனால் இவர்கள் தங்கள் உபவாசத்தைக் குறித்து பெருமைப்படுகிறார்கள். அந்த பெருமையை இயேசுகிறிஸ்து இங்கு கடிந்து கூறுகிறார். உபவாசம்பண்ணுவதை கிறிஸ்தவ விசுவாசிகள் அலட்சியம் பண்ணிவிடக்கூடாது. உபவாசம்பண்ணும்போது நாம் நமது சுயத்தை வெறுக்கிறோம். கர்த்தருடைய கரங்களில் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறோம்.
நம்மிடத்தில் எந்த காரியத்திற்கும் பெருமை காணப்படக்கூடாது. நம்முடைய அன்றாட ஆகாரத்திற்கே நாம் பாத்திரவான்களல்ல என்று நினைவுகூரவேண்டும். நமது அன்றாட போஜனம்கூட கர்த்தர் தமது கிருபையினால் நமக்கு கொடுக்க வேண்டும் என்று நினைவுகூர்ந்து அவருடைய சமுகத்தில் நம்மை தாழ்த்தவேண்டும்.
மாயக்காரர் உபவாசிப்பதுபோல நாம் உபவாசிக்கக்கூடாது. அவர்கள் உபவாசிக்கும்போது முகவாடலாக இருக்கிறார்கள். தாங்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள். இவர்களுக்கு கர்த்தரிடமிருந்து எந்த பலனும் உண்டாகாது. மனுஷர் காணவேண்டுமென்று உபவாசிக்கும்போது மனுஷர் இவர்களை காண்பார்கள். இதுவே இவர்கள் விரும்பும் பலன். அதைப் பெற்றுக்கொள்வார்கள்.
நாம் உபவாசிக்கும்போது நம்முடைய மனம் கர்த்தருக்கு முன்பாக தாழ்மையோடிருக்கவேண்டும். நமது ஆத்துமாவை தாழ்த்தவேண்டும். உபவாசத்தில் நம்மைத் தாழ்த்துவதே முக்கியமான அம்சம். மாயக்காரர்கள் உபவாசத்தில் தங்களை தாழ்த்தாமல் பெருமைப்படுகிறார்கள். ஆகையினால் இவர்களுடைய உபவாசம் மாய்மாலமான உபவாசமாக இருக்கிறது. இது மெய்யான உபவாசமாக இராமல் பகட்டுக்காக செய்யப்படும் கபட நாடகமாக இருக்கிறது.
மாயக்காரர்கள் தாங்கள் உபவாசம்பண்ணுவதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டுமென்று அதை விளம்பரம் பண்ணுகிறார்கள். விசேஷித்த உபவாச நாளை நியமித்து அதை விளம்பரம் செய்கிறார்கள். எல்லா மனுஷரும் தங்கள் உபவாசத்தை காணவேண்டுமென்று விரும்புகிறார்கள். உபவாசிக்கும் நாட்களில்கூட இவர்கள் தெருவீதிகளுக்கு வந்து தாங்கள் உபவாசம்பண்ணுகிறோம் என்பதை மனுஷருக்கு தெரியப்படுத்துகிறார்கள். இதனால் தாங்கள் எத்தனைமுறை உபவாசம் பண்ணுகிறார்கள் என்பதை ஜனங்களுக்கு சுயவிளம்பரம் செய்கிறார்கள்.
மாய்மாலக்காரர்கள் உபவாசம்பண்ணும்போது தங்களுடைய சுய ஆசைகளையும், இச்சைகளையும், பெருமைகளையும் சிலுவையில் அறைவதில்லை. பெருமைக்காக உபவாசம்பண்ணுவதினால் இவர்களுடைய இச்சை துன்மார்க்கமாக இருக்கிறது. இது ஆவிக்குரிய துன்மார்க்கமாகும். இவர்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பெருமை அழித்துவிடுகிறது. சுய பெருமை எப்போதுமே ஆபத்தானது. பெருமையை அழிக்கவேண்டும் என்பதற்காக நாம் உபவாசம்பண்ணவேண்டும். ஆனால் மாயக்காரர்களோ பெருமைக்காகவே உபவாசம்பண்ணுகிறார்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்து மாயக்காரரைப்போல நாம் உபவாசம்பண்ணக்கூடாது என்று உபதேசம்பண்ணுகிறார். இவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்துவிட்டார்கள். இவர்களுடைய உபவாசத்தினால் தேவனிடத்திலிருந்து இவர்களுக்கு எந்தவித பலனும் வருவதில்லை.
நீயோ உபவாசிக்கும்போது
நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் (மத் 6:17,18).
நமது உபவாசம் மனுஷர்களுக்கு காணப்படாமல் தேவனுக்கு காணப்படும்படியாக அந்தரங்கமாக இருக்கவேண்டும். நமது அந்தரங்கமான உபவாசம் எவ்வாறு இருக்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். எத்தனைமுறை நாம் உபவாசிக்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்து குறிப்பிடவில்லை. நமது உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் ஏவுகிற பிரகாரமாக நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் உபவாசித்துக் கொள்ளலாம்.
நாம் எத்தனைதடவை உபவாசம்பண்ணினாலும் நமது உபவாசம் எவ்வாறு கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று இயேசுகிறிஸ்து ஒரு சில நியதிகளைக் கூறுகிறார். தேவனுக்கு பிரியமான பிரகாரம் உபவாசம் செய்தால்தான் தேவன் நமக்கு பலனளிப்பார். மனுஷர் நம்மை உயர்வாக எண்ணவேண்டும் என்னும் நோக்கத்தோடு உபவாசம் செய்தால் தேவன் நமக்கு பலனளிக்கமாட்டார்.
உபவாசம்பண்ணும்போது இயேசுகிறிஸ்து அந்த உபவாசத்தின் அம்சங்களில் எதையும் குறைத்து தள்ளுபடிபண்ணவில்லை. உபவாசிக்கும்போது சிறிது பானம்பண்ணிக்கொள்ளலாம் என்றோ, பழவகைகளைப் புசிக்கலாம் என்றோ விதிவிலக்கு எதுவும் கூறவில்லை. இயேசுகிறிஸ்துவை பொருத்தளவில் போஜனம்பண்ணாமலும், பானம்பண்ணாமலும் இருப்பதுதான் உபவாசம். போஜனத்தையும் பானத்தையும் தவிர்க்கும்போது சரீரத்திற்கு சிரமமாக இருக்கும். அதை தாழ்மையோடு தாங்கிக்கொள்ள வேண்டும். நமது முகம் வாடிப்போவதை எல்லோருக்கும் விளம்பரம் பண்ணக்கூடாது.
நாம் உபவாசிக்கும்போது நமது தலைக்கு எண்ணெய் பூசி நம்முடைய முகத்தை கழுவவேண்டும். உபவாசம்பண்ணாத மற்ற நாட்களில் நாம் தலைக்கு எண்ணெய் பூசி நமது முகத்தை கழுவுகிறோம். அதுபோலவே உபவாச நாட்களிலும் நமது முகம் வாடலாகயிராதவாறு முகத்தை கழுவவேண்டும்.
முகம் வாடலாகயிராவிட்டால் தாங்கள் உபவாசம்பண்ணுவது மனுஷருக்குத் தெரியாது என்று மாயக்காரர்கள் நினைக்கிறார்கள். ஆகையினால் மற்ற நாட்களில் அவர்கள் தங்கள் தலைகளில் எண்ணெய் பூசி, தங்களுடைய முகத்தை கழுவினாலும், உபவாச நாட்களில் எண்ணெய் பூசாமல், முகத்தைக் கழுவாமல் முகவாடலாகயிருக்கிறார்கள். முகவாடலாகயிருந்தால் தங்களுடைய உபவாசம் மனுஷருக்கு வெளிப்படையாக தெரியும் என்பது மாயக்காரரின் எண்ணம்.
நாம் உபவாசிக்கும்போது மாயக்காரரைப்போல முகவாடலாக இருக்கக்கூடாது. நாம் மனுஷர் காணவேண்டும் என்பதற்காக உபவாசம் பண்ணுவதில்லை. தேவன் நம்மை காணவேண்டும் என்பதற்காகவே உபவாசிக்கிறோம். மனுஷருடைய புகழ்ச்சி நமக்கு முக்கியமல்ல. தேவனுடைய பார்வையில் நமது உபவாசம் அவருக்கு பிரியமாக இருக்கவேண்டும். நமது உபவாசத்தை அவர் அங்கீகரிக்கவேண்டும்.
ஆத்துமாவை தாழ்த்துவதே உபவாசம். உபவாசத்தில் பெருமைக்கு இடமில்லை. ஆகையினால் நாம் உபவாசிக்கும்போது நம்மை தாழ்த்தவேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். மனுஷர் நமது உபவாசத்தை காணாவிட்டாலும் தேவன் நமது உபவாசத்தைக் காண்கிறார். நமது உபவாசத்திற்கு தேவன் தமது சர்வஞானத்தினால் சாட்சியாக இருக்கிறார். தமது நன்மையை நமக்கு வெகுமதியாக கொடுப்பார். நமது பரலோகப் பிதா அந்தரங்கத்தில் பார்த்து வெளியரங்கமாக பலனளிக்கிறவர். உண்மையான நோக்கத்தோடு மெய்யான உபவாசத்தை மேற்கொண்டால் தேவன் நமக்கு நித்திய விருந்தை வெகுமதியாக கொடுப்பார்.