ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 3:6
ஏவாள், ஆதாமின் மீறுதல் ஆதி 3:6
ஆதி 3:6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
சாத்தானுக்கு ஸ்திரீயை சோதிக்கும் முயற்சியில் வெற்றி உண்டாயிற்று. சாத்தானுடைய தந்திரம் நிறைவேறுகிறது. ஏவாள் சாத்தானுடைய வார்த்தையினால் வஞ்சிக்கப்படுகிறாள். அவள் தேவனுடைய கட்டளையை மீறுகிறாள்.
நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிப்பதினால் தனக்கு ஒரு தீங்கும் வராது என்று ஏவாள் நினைக்கிறாள். தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களைப்போல, நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் ஒரு சாதாரண விருட்சம் என்று ஏவாள் நினைக்கிறாள். மற்ற விருட்சங்களின் கனியைப்போல, இந்த விருட்சத்தின் கனியும் சுவையாகயிருக்கும் என்று ஏவாள் நினைக்கிறாள்.
தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனிகளையும் புசிப்பதற்கு தடைபண்ணாத தேவன், இந்த விருட்சத்தின் கனியைப் புசிப்பதற்கு ஏன் தடைபண்ணினார் என்னும் சந்தேகம் ஏவாளின் மனதில் உண்டாயிற்று. ஏவாள் சோதிக்கப்படுகிறாள். அவள் தன்னுடைய மனதின் பொல்லாத சிந்தனையினால் வஞ்சிக்கப்படுகிறாள்.
ஏவாளைப்போலவே நாமும் பல சமயங்களில் வஞ்சிக்கப்படுகிறோம். நம்முடைய மனதின் தீயஎண்ணங்கள் நம்மை வஞ்சிக்கிறது. நம்முடைய வாஞ்சைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்னும் பேராசையினால் நாம் வஞ்சிக்கப்படுகிறோம்.
தேவன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை தடைபண்ணியதினால், ஏவாளுக்கு அந்த விருட்சத்தின்மீது மிகுந்த ஆசை உண்டாயிற்று. இந்த சுபாவம் மனுஷருக்குள் காணப்படும் விநோதமான சுபாவமாகும். நம்முடைய மாம்சத்தில் இதுபோன்ற விநோத சுபாவம் காணப்படுகிறது. மாம்சத்தின் இந்த சுபாவம், ஆவியின் சுபாவத்திற்கு முரண்பாடாயிருக்கிறது.
நமக்கு எது தடைபண்ணப்பட்டிருக்கிறதோ அல்லது நமக்கு எது கிடைக்கவில்லையோ, அதன்மீது நாம் அதிகமாய் ஆசைப்படுகிறோம்.
ஏதேன் தோட்டத்திலே ஏராளமான விருட்சங்கள் இருக்கிறது. அந்த விருட்சங்களின் கனியைவிட, நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனி தனக்கு அதிகமான நன்மையையும், அதிகமான அறிவையும் கொடுக்கும் என்று ஏவாள் நினைக்கிறாள். இந்த விருட்சத்தின் கனியைப் புசித்தால், தனக்கு அதிகமான ஞானம் கிடைக்கும் என்று ஏவாள் ஆசைப்படுகிறாள்.
தேவனாகிய கர்த்தர் நமக்குத் தேவையான ஞானத்தையும் அறிவையும் கொடுத்திருக்கிறார். தேவையில்லாத அறிவு நமக்கு எப்போதுமே ஆபத்தானது. அதிகமான அறிவை சிலர் அதிக ஞானம் என்று வியாக்கியானம் பண்ணுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட அறிவு நமக்கு தேவையற்ற அறிவாகவே இருக்கும். அது நமக்கு நன்மை செய்வதற்கு பதிலாக தீமை செய்யும்.
மனுஷரில் அநேகர் தங்களுடைய மிகுந்த அறிவினால் அழிந்துபோயிருக்கிறார்கள். அவர்கள் தேவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அறிவுக்கும் மனுஷஞானத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து மெய்யான ஆசீர்வாதத்தை இழந்துவிடுகிறார்கள்.
கர்த்தர் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நல்ல அறிவைக் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு தேவனைப்பற்றியும், இந்த உலகத்தைப்பற்றியும் அதிகமாய்த் தெரிந்திருக்கிறது. இந்த அறிவே அவர்களுக்குப் போதுமானது. தேவன் தங்களுக்கு போதுமான அறிவை கொடுத்திருக்கிறார் என்பதை, ஆதாமும் ஏவாளும் அறிந்துகொள்ளவில்லை. இதனால் தங்களுக்கு கூடுதல் அறிவு வேண்டும் என்னும் ஆசை அவர்களுடைய மனதில் உண்டாயிற்று.
சாத்தான் ஏவாளை வஞ்சிக்கிறான். ஏவாள் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் அதை மீறுகிறாள். பூமியில் வாசம்பண்ணுகிறவர்கள் பரலோகத்தை நோக்கி வரவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் பூமியிலிருக்கிற பாவிகளோ, பரலோகத்தை நோக்கிப் பார்க்காமல், பாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். ஏவாளும் கர்த்தருடைய கற்பனைக்கு கீழ்ப்படியாமல் மீறுகிறாள். அவள் தன்னுடைய ஸ்தானத்திலிருந்து சறுக்கி கீழே விழுகிறாள்.
ஏவாளின் பாவம் இந்த வசனத்தில் ஒவ்வொன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. ""அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்'' (ஆதி 3:6).
ஸ்திரீயானவள் கண்டாள். பறித்தாள். புசித்தாள். தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான். இதுவே ஆதாம் ஏவாளின் பாவம்.
ஏவாள் ஏதேன் தோட்டத்திலே, நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திற்கு அருகாமையிலிருக்கிறாள். அந்த விருட்சத்தின் கனி மாயையானது. ஆனால் ஏவாளோ அந்தக் கனியைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். சாத்தான் ஏவாளைப் பார்க்கிறான். ஏவாள் கனியைப் பார்க்கிறாள்.
ஏவாள் விருட்சத்தின் கனியைப் பார்ப்பதற்கு பதிலாக, அவள் கர்த்தரை நோக்கிப் பார்த்திருக்கவேண்டும். அவள் மாயையான கனியை நோக்கிப் பார்க்காமல், தன் கண்களை மாயைக்கு விலக்கியிருக்கவேண்டும். ஆனால் அவளோ விருட்சத்தின் கனியைக் காண்கிறாள். சோதனையிலே பிரவேசிக்கிறாள். தடைபண்ணப்பட்ட விருட்சத்தின் கனி அவளுடைய பார்வைக்கு இன்பமாயிருக்கிறது. பொதுவாக நம்முடைய கண்கள் பார்ப்பதன் மூலமாகவே, நமக்கு அநேக பாவங்கள் வரும். ஏவாள் விருட்சத்தின் கனியை கண்டதே, அவளுடைய பாவத்தின் ஆரம்பம்.
ஸ்திரீயானவள் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் பார்க்கும்போது, அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படதக்கதுமாயிருக்கிறது என்பதை காண்கிறாள். ஏவாள் அந்த விருட்சத்தின் கனியைப் பறிக்கிறாள்.
சாத்தான் அந்த விருட்சத்தின் கனியைப் புசிக்குமாறு ஸ்திரீயானவளை தூண்டுகிறான். ஆனால் சாத்தான் அந்த விருட்சத்தின் கனியைப் பறித்து ஏவாளின் கையிலே கொடுக்கவில்லை. அந்த கனியைப் பறித்தது ஏவாளின் சொந்த செயல். அவளே அந்தக் கனியைப் பார்த்தாள். இப்போது அவளே அந்த விருட்சத்தின் கனியைப் பறிக்கிறாள்.
சாத்தான் அந்த விருட்சத்தின் கனியைப் பறித்து, அதை அவளுடைய வாயிலே திணிக்கவில்லை. ஏவாளின் விருப்பத்திற்கு விரோதமாக சாத்தான் ஒன்றும் செய்யவில்லை. சாத்தான் ஏவாளை வார்த்தையினால் வஞ்சிக்கிறான். ஏவாள் வஞ்சிக்கப்படுகிறாள். அதன் பின்பு அவளே தன்னுடைய கைகளால் அந்த விருட்சத்தின் கனியைப் பறிக்கிறாள்.
சாத்தானால் மனுஷரை சோதிக்க முடியும். ஆனால் அவனால் நம்மை பாவம் செய்யுமாறு கட்டாயப்படுத்த முடியாது. சாத்தான் நம்மை பாவத்தில் விழுமாறும், கீழே விழுமாறும் தூண்டுவான். ஆனால் அவனால் நம்மை கீழே விழத்தள்ள முடியாது.
""நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்-ல் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்'' (மத் 4:6).
ஏவாள் அந்த விருட்சத்தின் கனியை கண்டாள், பறித்தாள். அவள் இப்போது அதை புசிக்கிறாள். ஏவாள் அந்தக் கனியைக் கண்டபோது, அதைப் புசிக்கவேண்டும் என்னும் ஆசை அவள் மனதில் இல்லாதிருந்திருக்கலாம். அவள் அந்தக் கனியைப் பறித்தபோதுகூட, அதைப் புசிக்கவேண்டும் என்னும் ஆசை அவள் மனதிலே ஏற்படாமலிருந்திருக்கலாம். ஆனால் முடிவிலே ஏவாள் தான் கண்டதை, தான் பறித்ததை புசிக்கிறாள். இதுவே பாவத்தின் விளைவு. ஏவாளால் பாவம் செய்யாமலிருக்க முடியவில்லை.
பாவத்தின் பாதை சறுக்கலாயிருக்கும். மனுஷன் பாவம் செய்ய ஆரம்பிக்கும்போது, அவனால் அந்தப் பாவத்தை தன்னுடைய சுயமுயற்சியினால் நிறுத்த முடியாது. பாவம் செய்வது சறுக்கலான பாதையைப்போல இருக்கும். சறுக்கலான பாதையில் சீராக நடக்க முடியாது. சறுக்கலான பாதையில் நடக்கிறவர்கள் கால் சறுக்கி, வழுக்கி கீழே விழுந்துவிடுவார்கள். மறுபடியும் எழுந்திருக்க முடியாமல் திணறுவார்கள். அதுபோலவே பாவத்தில் விழுகிறவர்களுடைய நிலமையும் இருக்கும். பாவத்தில் விழுகிறவர்கள், அதிலிருந்து எழுந்திருக்க முடியாதபடிக்கு, பாவத்திலே மூழ்கிப்போவார்கள்.
நம்முடைய மனதிலே பாவம் செய்யவேண்டும் என்னும் ஆசை ஏற்படும்போது, ஆரம்பத்திலேயே அந்த ஆசையைவிட்டு வெளியேறி விடவேண்டும். பாவத்தில் விழுவதற்கு முன்பாக, அதிலிருந்து தப்பிப்பது எளிதான காரியம். பாவத்தில் விழுந்து விட்ட பின்போ, அதிலிருந்து தப்பிப்பது கடினம். பாவம் ஒரு கண்ணியைப்போல நம்மைப் பிடித்துக்கொள்ளும். பாவத்தில் விழுகிறவர்கள் வலையில் விழுகிறவர்கள்போல, அதிலே சிக்கிக்கொள்வார்கள்.
ஏவாள் அந்த விருட்சத்தின் கனியைக் கண்டு, பறித்து, புசித்ததோடு மாத்திரமல்ல, அவள் அந்தக் கனியை தன் புருஷனுக்கும் கொடுக்கிறாள். சாத்தான் ஸ்திரீயினிடத்தில் சொன்ன வஞ்சகமான வார்த்தைகளெல்லாம், அவளுடைய மனதிலே நிரம்பியிருக்கிறது. சாத்தான் ஏவாளை வஞ்சித்ததுபோல, இப்போது ஏவாள் தன் புருஷனாகிய ஆதாமை வஞ்சிக்கிறாள். ஏவாள் சாத்தானுடைய பிரதிநிதியாக செயல்படுகிறாள்.
தடைபண்ணப்பட்ட விருட்சத்தின் கனியை ஏவாள் புசித்திருக்கிறாள். ஆகையினால் சாத்தான் சொன்ன வஞ்சனûயான வார்த்தைகளைவிட, இப்போது ஏவாளால் அதிகமாய் சொல்ல முடியும். ஏவாள் அந்தக் கனியைப் புசித்ததினால், சாத்தான் தனக்கு சொன்னதெல்லாம் மெய்யாயிற்று என்று அவளால் சொல்ல முடியும். ஆதாம் ஏவாளை நம்புவார்.
நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று தேவன் சொன்னார். சாத்தானோ ""நீங்கள் சாவதில்லை'' என்று சொன்னான். ஏவாள் அந்த விருட்சத்தின் கனியை புசித்திருக்கிறாள். ஆனால் அவள் சாகவில்லை. ஆகையினால் தேவன் சொன்ன வார்த்தையைவிட, சாத்தான் சொன்ன வார்த்தையே அவர்களுக்கு உண்மையான வார்த்தையாய்த் தெரிகிறது.
சாத்தான் ஏவாளை வஞ்சித்தான். ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள். இப்போதோ ஏவாள் ஆதாமை வஞ்சிக்கிறாள். பாவம் செய்கிறவர்கள் பாவத்திற்கும் சாத்தானுக்கும் துணைபோகிறார்கள். பாவம் செய்த ஏவாள் இப்போது ஆதாமை வஞ்சிக்கிறவளாயிருக்கிறாள். ஆதாம் ஏவாளுடைய வார்த்தைகளை நம்புகிறார். ஏவாள் தனக்கு கொடுத்த அந்தக் கனியை ஆதாமும் புசிக்கிறார்.
தேவன் ஜீவவிருட்சத்தின் கனியை புசிப்பதற்கு அவர்களுக்கு அனுமதி கொடுத்திருந்தார். ஆனால் அவர்களோ தேவன் புசிக்கச் சொன்னதை புசியாமல், புசிக்கக்கூடாது என்று சொன்னதை புசிக்கிறார்கள். ஆதாமும் ஏவாளும் கர்த்தருடைய கட்டளையை மீறியதினால், அவர்கள் இருவருமே தேவனுடைய கிருபையையும், அவருடைய இரக்கத்தையும் இழந்துவிடுகிறார்கள். தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்வதற்கு, அவர்கள் இருவரும் தகுதியற்றவர்களாயிருக்கிறார்கள்.
தேவனாகிய கர்த்தர் இப்போது ஆதாமுக்கு எஜனமானாகயில்லை. தேவன் ஆதாமுக்கு ஆண்டவராகவும் இல்லை. ஆதாம் தனக்குத்தானே எஜமானனாகவும், ஆண்டவராகவும் இருக்கிறார். ஆதாம் தனக்குப் பிரியமானதை செய்கிறார். அவர் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல், தன்னுடைய மனதின் இச்சைகளுக்கு கீழ்ப்படிகிறார். ஆதாம் செய்த பாவத்தை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால், அதை ""கீழ்ப்படியாமை'' என்று சொல்லலாம்.
""அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படித-னாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்'' (ரோம 5:19).
மனுக்குலத்தின் முதல் பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்தார்கள். அவர்களுடைய பாவம் மனுக்குலத்தார் அனைவருக்கும் கடந்து வருகிறது. அவர்களிடத்தில் பாவக்கறை காணப்படுகிறது. அந்தக் கறையானது மனுக்குலம் முழுவதையும் தீட்டுப்படுத்துகிறது.
ஏவாள் அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுக்கிறாள். ஆதாம் அவள் அருகில் அங்கேயே இருக்கிறார். ஆகையினால் அவருக்குச் சாக்குப்போக்கு சொல்ல இடம் இல்லை. ஆதாம் ஏதேன் தோட்டத்தையும், ஏவாளையும் பாதுகாக்க வேண்டியவர். ஆனால் தன் கடமையிலிருந்து தவறி சர்ப்பத்தை உள்ளே விட்டு விடுகிறார். தன் மனைவியை ஆளுகை செய்யும் பொறுப்பிலிருந்து விலகி, அவளால் ஆளுகை செய்யப்படுகிறார் (ஆதி 2:15).