ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 3:7-8
பாவத்தின் விளைவுகள் ஆதி 3:7,8
ஆதி 3:7. அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
ஆதி 3:8. பக-ல் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கும் நாளிலே அவர்கள் கண்கள் திறக்கப்படும் என்று சாத்தான் சொன்னான். சாத்தான் சொன்னதுபோலவே அவர்கள் அந்த விருட்சத்தின் கனியைப் புசித்தபோது, அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்படுகிறது. சாத்தான் அவர்களிடத்தில், அந்தக் கனியைப் புசிக்கும் நாளிலே அவர்கள் இருவரும் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பார்கள் என்று சொன்னான். ஆனால் அவன் சொன்ன இந்த வார்த்தை நிறைவேறவில்லை. சாத்தான் பொய்சொல்லுகிறவன். அவன் உண்மையை மொத்தமாக சொல்லமாட்டான். அவன் உண்மையும் பொய்யும் கலந்துபேசுவான்.
அவர்கள் கண்கள் திறந்தது. அவர்கள் எதையோ காண்போம் என்று எதிர்பார்த்தார்கள். எதிர்பார்த்தது ஒன்று, கண்டது ஒன்று. அவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். வஞ்சிக்கப்பட்டார்கள். தாங்கள் தேவர்களைப்போல இருப்பதைக் காண வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். ஆனால் தாங்கள் நிர்வாணிகளாக இருப்பதையே கண்டார்கள் (ஆதி 3:5).
விருட்சத்தின் கனியைப் புசிப்பதற்கு முன்பாகவே அவர்களுடைய கண்கள் திறந்துதான் இருந்தது. அந்தக் கண்ணால்தான் ஏவாள் அந்த விருட்சத்தையும், அந்த விருட்சத்தின் கனியானது பார்வைக்கு இன்பமாயிருக்கிறது என்பதையும் கண்டாள். இப்போது, அந்த விருட்சத்தின் கனியைப் புசித்தபொழுது, அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்படுகிறது. இப்போது திறக்கப்பட்டது அவர்களுடைய மாம்சத்தின் கண்களல்ல. இப்போது அவர்களுடைய மனச்சாட்சியின் கண்கள் திறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் செய்த காரியத்தினிமித்தமாக அவர்களுடைய இருதயங்கள் அவர்களைக் குற்றப்படுத்துகிறது. அவர்களை வேதனைப்படுத்துகிறது. அவர்களுடைய மனதை காயப்படுத்துகிறது.
ஆதாமும் ஏவாளும் கர்த்தருடைய கட்டளைக்கு மீறி பாவம் செய்துவிட்டார்கள். அவர்கள் பாவத்தில் விழுந்துவிட்டார்கள். தேவனுடைய எச்சரிப்பின் வார்த்தைகளையும் மீறிவிட்டார்கள். பாவத்தில் விழுந்தவர்கள் அதில் சிக்குண்டு கிடக்கிறார்கள். தடைபண்ணப்பட்ட கனியைப் புசித்ததினால் தங்களுக்கு என்னென்ன தீமைகள் உண்டாயிற்று என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். அவர்கள் புசித்தது நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனி. இப்போது ஆதாமும் ஏவாளும், அந்த விருட்சத்தின் கனியைப் புசித்து, தீமையை அறிந்துகொள்கிறார்கள். தடைபண்ணப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசித்த தங்களுடைய மதியீனத்தைப் புரிந்துகொள்கிறார்கள்.
இந்தக் கனியை புசிப்பதற்கு முன்பாக ஆதாமும் ஏவாளும் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருந்தார்கள். இப்போதோ அவர்கள் இருவரும் தங்கள் சந்தோஷத்தை இழந்து துக்கத்திலும் வேதனையிலும் இருக்கிறார்கள். அவர்கள் இருவருடைய கண்களும் இப்பொழுது திறக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கண்கள் மூலமாக அவர்கள், தாங்கள் பாவம் செய்வதற்கு முன்பாக அனுபவித்த சந்தோஷத்தையும், பாவம் செய்த பின்பு அனுபவிக்கிற வேதனைகளையும் பார்க்கிறார்கள்.
ஆதாம் ஏவாளுடைய மனதிலே மிகப்பெரிய போராட்டமுண்டாயிற்று. அவர்களுடைய மாம்சமும் சிந்தையும் அவர்களுக்குள்ளே யுத்தம்பண்ணுகிறது. அவர்களுடைய சிந்தையின் பிரமாணம், அவர்களுடைய மாம்சத்தின் பிரமாணத்திற்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறது. ஆதாமும் ஏவாளும் தங்களுடைய திறக்கப்பட்ட கண்கள் மூலமாக இந்த யுத்தத்தைப் பார்க்கிறார்கள். இதற்கு முன்பு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பார்த்தவர்கள், இப்போது யுத்தத்தையும் வேதனையையும் பார்க்கிறார்கள்.
தடைபண்ணப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசித்தபோது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்படுகிறது. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து கொள்கிறார்கள். பாவம் செய்வதற்கு முன்பாக அவர்களிடத்தில் இருந்த சந்தோஷம், மகிமை, மேன்மை எல்லாமே அவர்களை விட்டு உரிந்துபோடப்பட்டிருக்கிறது. அவர்கள் வஸ்திரமில்லாத நிர்வாணிகளைப்போல இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களுடைய பாதுகாப்பும் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று. தங்களைக் காத்துக்கொள்ளக்கூடிய எந்த ஆயுதமும் அவர்களிடத்தில் இல்லை.
ஆதாமும் ஏவாளும் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து வெட்கப்படுகிறார்கள். அவர்கள் இப்போது பரலோகத்தின் நிந்தைக்கும், பூமியின் அவமானத்திற்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய நிந்தையையும் அவமானத்தையும் தங்கள் கண்களால் பிரத்தியட்சமாய்ப் பார்க்கிறார்கள். அவர்களுடைய நிர்வாணத்தையும், அதன் மூலமாக உண்டாயிருக்கிற அவமானத்தையும், அவர்களுடைய சொந்த மனச்சாட்சிகள் பார்க்கிறது. எதுவும் மறைவாயில்லை.
கனியைப் புசிப்பதற்கு முன்பாகவும், அவர்கள் நிர்வாணிகளாகத்தான் இருந்தார்கள். அவர்கள் பாவம் செய்வதற்கு முன்பாக தேவனுடைய மனச்சாட்சியைப் பெற்றிருந்தார்கள். இப்பொழுது அதை இழந்து, சுயமனச்சாட்சியை உடையவர்களாக இருக்கிறார்கள். நன்மை செய்யும் வல்லமையை இழந்து போனார்கள். தீமை செய்யும் வல்லமையைப் பெற்றுக் கொண்டார்கள். தேவனைப்போல இருப்பதற்குப் பதிலாக தேவனுக்கு விரோதமாக இருக்கிறார்கள். நன்மை செய்யும் தேவனுடைய வல்லமை அவர்களுக்குள் காணப்படவில்லை.
தேவனால் பாவம் செய்ய முடியாது. ஆதாமையும் தேவன் அப்படித்தான் சிருஷ்டித்தார். ஆனால் ஆதாமோ தன்னுடைய சுயாதீனச் சித்தத்தின் பிரகாரமாக தேவனுக்குக் கீழ்ப்படியாமல் தன்னுடைய சுய சித்தத்தை நிறைவேற்றி, தேவ மகிமையை இழந்துபோனார். பாவம் செய்யாதவராக இருந்த ஆதாம் இப்பொழுது பாவம் செய்து பாவியாகிவிட்டார்.
பாவம் மனுஷனை அசுத்தப்படுத்துகிறது. அது அவனை வேதனைப்படுத்தி, அவமானப்படுத்துகிறது. எங்கெல்லாம் பாவம் பிரவேசிக்கிறதோ, அங்கெல்லாம் துன்பமும், துயரமும், அவமானமும் பிரவேசிக்கும்.
சத்துரு மனுஷரை வஞ்சிக்கிறவன். நம்முடைய முதல் பெற்றோரை சாத்தான் வஞ்சித்தபோது, விருட்சத்தின் கனியைப் புசிக்கும் நாளிலே, அவர்களுடைய கண்கள் திறக்கப்படும் என்று சொன்னான். சாத்தான் சொன்ன பிரகாரமாக அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பிரகாரமாக அவர்களுடைய கண்கள் திறக்கப்படவில்லை. அவர்களுக்கு துக்கமும், அவமானமும் ஏற்படும் வண்ணமாக, அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. அவர்கள் நன்மையை காண்பதற்குப் பதிலாக, தீமையைக் காண்கிறார்கள்.
ஆதாமும் ஏவாளும் தங்களுடைய நிர்வாணத்தையும், அவமானத்தையும் மூடி மறைப்பதற்கு முயற்சி பண்ணுகிறார்கள். தாங்கள் நிர்வாணிகளாயிருப்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். அவர்களுடைய பாவமே அவர்களைக் குற்றப்படுத்துகிறது. அவர்கள் அத்திஇலைகளை தைத்து தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணுகிறார்கள். இதன் மூலமாக அவர்களுடைய அவமானத்தின் ஒரு பகுதியை மூடி மறைக்க திட்டமிடுகிறார்கள்.
அவர்களுடைய அரைக்கச்சைகளை அவர்களுக்கு வேறு யாரும் உண்டுபண்ணிக்கொடுக்கவில்லை. அதை அவர்களே உண்டுபண்ணுகிறார்கள். அவர்களை சோதித்து, பாவத்தில் விழத்தள்ளின சாத்தான் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. சாத்தான் வஞ்சிக்கிறவன். அவன் நம்முடைய முதற்பெற்றோரை வஞ்சித்துவிடுகிறான்.
ஆதாமும் ஏவாளும் தங்களுடைய நிர்வாணத்தை மூடி மறைக்க முயற்சி பண்ணுகிறார்கள். அவர்களுடைய அவமானம் அவர்களை விட்டு நீங்கவேண்டும் என்பதே இப்போது அவர்களுடைய நோக்கமாயிருக்கிறது. இதுவும் அவர்களுடைய மதியீனம். மனுஷர் பொதுவாக தேவனுடைய மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பாக, தங்களுடைய மதிப்பையும் மரியாதையையும், அந்தஸ்தையும் காத்துக்கொள்ள விரும்புகிறார்கள். நம்முடைய அந்தஸ்தைவிட, தேவனுடைய மன்னிப்பே நமக்கு அவசியமானது.
ஆதாமும் ஏவாளும் தங்களுடைய பாவங்களை அத்திஇலைகளினால் மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள். இதன் மூலமாக தங்களுடைய பாவங்களை தாங்களே மன்னித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். தங்களுக்கு ஏற்பட்ட நிர்வாணத்தையும், அவமானத்தையும் தாங்களாகவே மூடி மறைத்துவிடலாம் என்று அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
ஆதாமும் ஏவாளும் தங்களுக்கு அத்தியிலைகளைத் தைத்து அரைக்கச்சைகளை உண்டுபண்ணுகிறார்கள் (பிர 3:7; யோபு 16:15; எசே 13:18) மனுஷன் தன்னுடைய நிர்வாணத்தை மூடுவதற்காக தனக்குத் தானே கண்டுபிடித்துக் கொள்ளும் உபாயம். அத்தியிலைகளைத் தைத்து ஆதாமும், ஏவாளும் தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள். இது குளிரிலிருந்து அவர்களைப் பாதுகாக்காது. இது நீண்ட நாள் உழைக்கவும் செய்யாது. தேவன் அவர்களுக்கு தோல் உடைகளை உண்டாக்கி, உடுத்தினார் (ஆதி 3:21).
அத்தி இலைகளினால் பாவத்தை மூடி மறைக்க முடியாது. அவர்கள் உண்டுபண்ணின அரைக்கச்சையினால் அவர்களுடைய அவமானத்தை நீக்க முடியாது. அத்தி இலைகள் அவர்களுடைய அவமானத்தை அதிகரிக்கச் செய்யும். அவர்களுடைய வெட்கமும் அவமானமும் அதிகமாய் வெளிப்படும். மனுஷன் தன்னுடைய சுயமுயற்சியினால் பாவத்தை மூடி மறைக்க நினைப்பது மதியீனம்.
தேவன் தடைபண்ணின விருட்சத்தின் கனியைப் புசித்த வேளையிலே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பயமுண்டாயிற்று. பக-ல் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்கிறார்கள் (ஆதி 3:8).
தேவனாகிய கர்த்தர் இதற்கு முன்பு பல சமயங்களில் அவர்களோடு கூடயிருந்திருக்கிறார். அவருடைய சத்தத்தை அவர்கள் பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கு பயமுண்டாகவில்லை. ஆனால் இப்போதோ தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டபோது, அவர்களுக்கு பயமுண்டாயிற்று.
ஆதாமும் ஏவாளும் இதுவரையிலும் தேவனாகிய கர்த்தரைப் பார்க்கும்போதும், அவருடைய சத்தத்தைக் கேட்கும்போதும், அவரை தங்களுடைய சிருஷ்டிகராகவே பார்த்தார்கள். இப்போதோ அவர்கள் கண்கள் திறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தேவனாகிய கர்த்தரை தங்களுடைய நியாயாதிபதியாக பார்க்கிறார்கள். தங்களுடைய பாவத்திற்காக தங்களை நியாயந்தீர்த்து தண்டிக்கப்போகிற நியாயாதிபதியாக அவர்கள் தேவனாகிய கர்த்தரைப் பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்கு பயமுண்டாயிற்று.
மனுஷனுடைய மனச்சாட்சி குற்றமுள்ளதாயிருக்கும்போது, அவனுக்கு தேவனைக் குறித்து பயமுண்டாகும். அவனுடைய குற்றமனச்சாட்சியே அவனைக் குற்றப்படுத்தும். அது அவனுக்கு விரோதமாக சாட்சி சொல்லும்.
தேவனாகிய கர்த்தர் பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்திலே உலாவுகிறார். அவர் இரவிலே வரவில்லை. பகலிலே வருகிறார். தேவன் தம்முடைய உக்கிரகோபத்தோடு வரவில்லை. மதியவெயில் அதிகமாயிருக்கும்போது, பூமியின்மேல் உஷ்ணம் அதிகமாயிருக்கும். இதனால் மனுஷருக்கு எரிச்சலுண்டாகும். தேவனோ மத்தியான வெயில் நேரத்தில் வராமல், பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்திலே உலாவுகிறார். தேவனிடத்தில் கோபமில்லை. ஆனாலும் ஆதாமும் ஏவாளும் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு பயப்படுகிறார்கள்.
தேவனாகிய கர்த்தர் மெல்லிய சத்தத்திலே பேசுகிறார். அவர் ஆதாமையும் ஏவாளையும் விசாரிப்பதற்காக வந்திருக்கிறார். கர்த்தர் எலியாவை மெல்லிய சத்தத்தினால் விசாரித்ததுபோல, இப்போது பகலில், குளிர்ச்சியான வேளையில், ஆதாமையும் ஏவாளையும் அன்போடு விசாரிக்க வருகிறார். ஆனால் அவர்களுக்கோ தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டபோது பயமுண்டாயிற்று.
அப்பொழுது ஆதாமும் ஏவாளும், தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொள்கிறார்கள். அவர்களுடைய மனதிலே மிகப்பெரிய மாற்றமுண்டாயிருக்கிறது. அவர்கள் இதற்கு முன்பு தேவனாகிய கர்த்தருடைய சந்நியில் இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டவர்கள். ஆனால் இப்போதோ அவர்கள் கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி ஓடுகிறார்கள். இந்த மாற்றம் அவர்களுடைய பாவத்தினால் உண்டாயிற்று.
தேவன் அவர்களுக்கு பயங்கரமானவராயிருக்கிறார். அவர்கள் தங்களுக்குத் தாங்களே பயங்கரமானவர்களாயிருக்கிறார்கள். விருட்சத்தின் கனியைப் புசித்ததினால் அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கண்கள் மூலமாக அவர்கள் தேவனை பார்க்கிறார்கள். அவர்களால் தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும், அன்பையும் பார்க்க முடியவில்லை. அந்தக் கண்கள் தேவனுடைய கோபத்தையும், நியாயத்தீர்ப்பையும் பார்க்கிறது.
அவர்களுடைய மனச்சாட்சிகளே அவர்களைக் குற்றப்படுத்துகிறது. அவர்கள் செய்த பாவம் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அத்தி இலைகளினால் உண்டுபண்ணப்பட்ட அரைக்கச்சைகளால் அவர்களுடைய பாவங்களை மூடி மறைக்க முடியவில்லை. அவர்களுடைய பிரயாசம் வீணாய்ப்போயிற்று.
ஆதாமும் ஏவாளும் தங்களுடைய பாவத்தையும், குற்றத்தையும், மீறுதலையும் உணருகிறார்கள். அவர்களால் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு முன்பாக நிற்கமுடியவில்லை. நீதியுள்ள தேவன் தங்களைத் தண்டிப்பார் என்று அவர்களுக்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது. ஆகையினால் அவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பயந்து, கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி ஓடுகிறார்கள்.
சாத்தான் ஆதாமையும் ஏவாளையும் வஞ்சித்திருக்கிறான். விருட்சத்தின் கனியைப் புசித்தால் அவர்கள் சாகமாட்டார்கள் என்று சொன்னான். அவர்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், அவர்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பார்கள் என்றும் சொன்னான். அவர்களுக்கு ஒரு தீங்கும் வராது என்றும், அவர்கள் பாதுகாப்பாயிருப்பார்கள் என்றும் வாக்குப்பண்ணினான். சாத்தானுடைய வார்த்தைகள் பொய்யானது. ஆதாமும் ஏவாளும் மிகப்பெரிய ஆபத்திலிருக்கிறார்கள்.
சாத்தான் சொன்ன பிரகாரம் அவர்கள் நன்மை தீமையை அறியவில்லை. அவர்கள் இப்போது ஒன்றையும் அறியாமல், காணாமல் போனவர்கள்போல தேவனுடைய சந்நிதிக்கு விலகி ஓடுகிறார்கள். பயந்து நடுங்குகிறார்கள். அவர்கள் தேவர்களைப்போல இருப்பார்கள் என்று சாத்தான் சொன்னான். ஆனால் ஆதாமும் ஏவாளுமோ பயத்தினால் நடுங்கி, கோழைகளைப்போல ஓடி ஒளிகிறார்கள். அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட குற்றவாளிகளாகயிருக்கிறார்கள்.
தேவனுடைய சந்நிதியைவிட்டு விலகி யாராலும் ஓடி ஒளித்துக்கொள்ள முடியாது. கர்த்தருடைய பிரசன்னத்திற்கு விலகி தங்களை மறைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பது மனுஷருடைய மதியீனம். தேவனுக்கு மறைவான இரகசியம் எதுவுமில்லை. நாம் எங்கே இருந்தாலும் கர்த்தர் நம்முடைய இருப்பிடத்தை அறிந்திருக்கிறார். அவர் நம்முடைய போக்கையும் வரத்தையும், நாம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும், நடப்பதையும், நாம் நம்மை மறைத்துக்கொள்வதையும் அறிந்திருக்கிறார்.
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ததினால், பயம் அவர்களை சூழ்ந்துகொள்கிறது. அவர்கள் தேவனுடைய பிரசன்னத்திற்கும், அவருடைய சத்தத்திற்கும், அவருடைய சந்நிதிக்கும் பயப்படுகிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சி அவர்களைக் குற்றப்படுத்துவதினால் அவர்களுக்கு பயமுண்டாயிற்று. தங்களுக்கு தீங்கு வரப்போகிறது என்பதை அவர்கள் அறிந்து பயப்படுகிறார்கள்.
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தததினால் அவர்கள் தேவமகிமையற்றவர்களாகயிருக்கிறார்கள். தேவன் அவர்களுக்கு கொடுத்த ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்கள் இனிமேல் அவர்களுக்கு சித்திக்காது. அவர்கள் சர்வசிருஷ்டிகளையும் கீழ்ப்படுத்தி ஆளுகை செய்வார்கள் என்று தேவன் அவர்களுக்கு சொல்லியிருந்தார். இனிமேல் நாட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப்பறவைகளும் அவர்களுக்கு கீழ்ப்படியாது.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி ""நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கலாம்'' என்று சொன்னார். அவன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கும் நாளில், அவன் சாகவே சாவான் என்றும் தேவனாகிய கர்த்தர் அவனுக்கு கட்டளையிட்டார். மனுஷன் ஜீவவிருட்சத்தின் கனியைப் புசித்திருந்தால், அவன் என்றும் ஜீவனோடிருந்திருப்பான். அவனுக்கு மரணம் ஏற்பட்டிருக்காது. ஆனால் இப்போதோ, ஆதாமும் ஏவாளும் கர்த்தர் தடைபண்ணின விருட்சத்தின் கனியைப் புசித்து பாவம் செய்திருக்கிறார்கள். பாவத்தின் சம்பளம் மரணம்.
தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே தேவனுடைய சத்தத்தைக் கேட்டார்கள். தாங்கள் பாவம் செய்ததினால் தேவனுக்குப் பயந்து, தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக் கொண்டார்கள். ஒருவேளை தேவனுடைய சத்தம் கோபதொனியுடையதாக இருந்திருக்கலாம். (ஆதி 3:10; சங் 29; வெளி 10:4) அல்லது அவர்களுடைய குற்ற உணர்வு தேவ சந்நிதியை விட்டு அவர்களை ஓடி ஒழிய வைத்திருக்கலாம்.
தேவனிடமிருந்து யாரும் ஒழிந்து ஓட முடியாது. (சங் 139:7-12; எரே 23:24; ஆமோஸ் 9:2-3). தேவனுடைய சந்நிதியிலிருந்து ஓடி ஒழிவது அவர்களுடைய குற்ற உணர்வையே வெளிப்படுத்துகிறது.