ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 2:21-25 Tamil bible study pdf

 

ஆதியாகமம் வேத ஆராய்ச்சிGenesis biblical research (2:21-25)


மனுஷி ஆதி 2:21-25


ஆதி 2:21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த       நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். 


ஆதி 2:22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். 


ஆதி 2:23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். 


ஆதி 2:24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். 


ஆதி 2:25. ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.


மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக மயக்க மருந்து கொடுப்பது போன்றிருக்கிறது. ஆதாம் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.      (ஆதி 15:12; 1சாமு 26:12; தானி 8:18).


ஆதாமுக்கு ஏற்ற துணையாக  தேவன் மனுஷியை உருவாக்குகிறார்.  தேவன் முதலில் ஆதாமையே உருவாக்கினார்.  அதன் பின்புதான் அவர் ஏவாளை உருவாக்குகிறார்.  


""முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்''  (1தீமோ 2:13). 


புருஷன் தன் குடும்பத்திற்கு  தலையைப்போல இருக்கிறான். அவனுடைய மனைவியோ  அந்தத் தலைக்கு கிரீடமாயிருக்கிறாள். அவள் தன் புருஷனுக்கும் கிரீடமாயிருக்கிறவள். 


தேவன் மனுஷனை  இந்தப் பூமியின் மண்ணால் உருவாக்கினார். ஸ்திரீயானவளோ  மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனுஷனுடைய விலா எலும்புகளில்  ஒன்றினால் உருவாக்கப்பட்டிருக்கிறாள். ஆகையினால் ஸ்திரீக்கும் மண்ணே ஆதாரமாயிருக்கிறது.  தேவன் ஸ்திரீயையும் மண்ணினால் உருவாக்கியிருக்கிறார். புருஷன் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவன்.  ஸ்திரீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட, புருஷனிலிருந்து உருவாக்கப்பட்டவள்.


தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணுகிறார், ஆதாம் நித்திரையடைந்தார்; தேவன் ஆதாமின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைக்கிறார் (ஆதி 2:21).


தேவன் ஆதாமின் மனைவியை சிருஷ்டிக்கும்போது, ஆதாம்  நித்திரையிலிருக்கிறார். ஆதாம் தன்னுடைய கவலைகளையும்,  வருத்தங்களையும், பாரங்களையும் தேவன்மீது வைத்துவிட்டு, அயர்ந்த நித்திரையிலிருக்கிறார். ஆதாம் தன்னை தேவனுடைய சித்தத்திற்கும்,  அவருடைய ஞானத்திற்கும் ஒப்புக்கொடுத்து நித்திரைபண்ணுகிறார். 


தன்னை உருவாக்கின கர்த்தர் யெகோவாயீரேயாக  இருக்கிறார் என்பது ஆதாமுக்கு தெரியும். யெகேவாயீரே என்னும் பெயருக்கு ""கர்த்தர் பார்த்துக்கொள்வார்'' என்று பொருள். கர்த்தர் தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரம், தமக்கு சித்தமான வேளையிலே, தன்னுடைய தேவைகளை சந்திப்பார் என்று   ஆதாம் தேவனாகிய கர்த்தர்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்.


தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு  அயர்ந்த நித்திரையை வரப்பண்ணுகிறார்.  ஆதாம் இன்னும் பாவம் செய்யவில்லை. ஆகையினால் தேவன் ஆதாமுக்கு  வேதனையை அனுமதிக்கவில்லை. தேவன் ஆதாமின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தை சதையினால்   அடைக்கிறபோது, ஆதாமின் சரீரத்தில் எந்த வேதனையும் உண்டாகவில்லை. ஆதாம் அப்போது பாவத்தை அறியாத மனுஷனாக இருக்கிறதினால், அவர்  சரீர வேதனையை அறியாத மனுஷனாகவும் இருக்கிறார். 


தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வருகிறார் (ஆதி 2:22).


தேவன் ஏவாளை  ஆதாமின் தலையிலிருந்து உருவாக்கவில்லை.        தேவன் அவ்வாறு செய்திருந்தால் ஏவாள் ஆதாமை ஆளுகை செய்வாள். தேவன் ஏவாளை ஆதாமின் பாதத்திலிருந்தும் உருவாக்கவில்லை. தேவன்  அவ்வாறு செய்திருந்தால் ஆதாம் ஏவாளை தன்னுடைய காலில் வைத்து நசுக்கியிருப்பார். 


தேவனாகிய கர்த்தரோ மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்குகிறார். விலா பகுதி ஆதாமுக்கும் ஏவாளுக்கும்  சமமான பகுதியாகயிருக்கிறது. மனுஷனுடைய விலா எலும்பு அவனுடைய கைகளுக்கு கீழே இருக்கிறது. மனுஷன் தன்னுடைய மனைவிக்கு தன் கைகளினால் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். விலா      எலும்பு மனுஷனுடைய இருதயத்திற்கு அருகாமையிலிருக்கிறது. மனுஷன் தன்னுடைய மனைவியை தன் இருதயத்தின் நினைவில் வைத்திருக்கவேண்டும்.


விவாகம் கனமுள்ளது. தேவன் மனுஷியை உருவாக்கி அவளை  மனுஷனிடத்தில் கொண்டு வருகிறார். அவர்கள் இருவரும்  விவாக சம்பந்தத்தில் இணைக்கப்படுகிறார்கள். இந்த விவாகம் மிகவும் கண்ணியமான விவாகம்.  இந்த விவாகத்தை தேவனாகிய கர்த்தர் தாமே நடத்தி வைக்கிறார். இது பரிசுத்தமான விவாகம்.


திருமணங்கள்  சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லுகிறார்கள். இது ஒரு மெய்யான வாக்கியம்.  திருமணத்தில் இணைக்கப்படுகிற புருஷனும் மனைவியும் தேவனுடைய கரங்களின் கிரியைகளாயிருக்கிறார்கள். தேவன் தம்முடைய வல்லமையினால்  புருஷனையும் ஸ்திரீயையும் உருவாக்குகிறார். இப்போது அவர்கள் இருவரும் தேவனுடைய பிரமாணத்தினால் ஒன்றாக இணைக்கப்படுகிறார்கள்.


ஸ்திரீயானவளுக்கு  தேவனே பிதாவாயிருக்கிறார். பிதாவானவர்  ஸ்திரீயை மனுஷனிடத்தில் கொண்டு வருகிறார். மனுஷி  மனுஷனுக்கு ஏற்ற துணையாயிருக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தம்.  தேவனாகிய கர்த்தர் மனுஷியை தம்முடைய விசேஷித்த கிருபையினால் உருவாக்கியிருக்கிறார். அவர் தம்முடைய  விசேஷித்த பராமரிப்பினால், மனுஷியை மனுஷனிடத்தில் கொண்டு வருகிறார். மனுஷி மனுஷனுக்கு ஏற்ற துணையாயிருக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தம். 


தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் பிதாவாயிருக்கிறார்.  ஆதாம் தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து ஏவாளைப் பெற்றுக்கொள்கிறார்.  நாம் தேவனுடைய கிருபைகளையும், வரங்களையும் மனத்தாழ்மையோடும், நன்றியுள்ள இருதயத்தோடும் பெற்றுக்கொள்ளவேண்டும். தேவனுடைய கிருபைக்காகவும்,  அவருடைய ஞானத்திற்காகவும் நாம் அவருக்கு நன்றி சொல்லவேண்டும். 


ஆதாம் ஏவாளை நேசிக்கிறார். தேவன் மனுஷியை மனுஷனிடத்தில் கொண்டு வந்தபோது, ஆதாம், ""இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள்'' (ஆதி 2:23) என்று  சொல்லுகிறார்.


மனுஷி என்பதற்கான எபிரெய வார்த்தை ""ஈஷா'' என்பதாகும். இது மனுஷன் என்று பொருள்படும் ""ஈஷ்''  என்னும் வார்த்தையின் பெண்பால் பெயர்ச்சொல். மனுஷி மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறாள். ஆகையினால்           ஈஷா என்னும் வார்த்தை ""பெண் - ஆண்'' என்று பொருள்படுகிறது. 


மனுஷி மனுஷனுடைய தலையிலிருந்து எடுக்கப்படவில்லை. அவ்வாறு           எடுக்கப்பட்டிருந்தால் மனுஷன் மனுஷியை சர்வாதிகாரியைப்போன்று ஆளுகை செய்வான். மனுஷனுடைய காலிலிருந்தும் மனுஷி எடுக்கப்படவில்லை. அவ்வாறு எடுக்கப் பட்டிருந்தால் மனுஷன் மனுஷியை மதிக்காமல் மிதித்து தள்ளி விடுவான். 


மனுஷனுடைய விலா எலும்பிலிருந்து மனுஷி எடுக்கப்பட்டிருக்கிறாள்.  ஆகையினால் மனுஷி மனுஷனுக்குச் சமமானவள். மனுஷனுடைய கையின்கீழ்         எடுக்கப்பட்டிருக்கிறாள். ஆகையினால் மனுஷன் மனுஷியைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும். மனுஷனுடைய இருதயத்திற்கு அருகில் மனுஷி எடுக்கப்பட்டிருக்கிறாள். ஆகையினால் மனுஷன் மனுஷியை நேசிக்க வேண்டும்.  


ஆதாம் ஏவாளை மனுஷி என்று அழைப்பது, அவர் ஏவாளை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளம். ஏவாள் மனுஷி என்று அழைக்கப்படுகிறாள்.  ஆதாம் ஆணாகயிருக்கிறார். ஏவாள் பெண்ணாகயிருக்கிறாள். இந்த வித்தியாசத்தை தவிர, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வேறு வித்தியாசம் எதுவுமில்லை.  ஆதாம் தேவசாயலாக உருவாக்கப்பட்டதுபோல, ஏவாளும் தேவசாயலாகவே உருவாக்கப்பட்டிருக்கிறாள்.


தேவனாகிய கர்த்தர் ஆதாமையும் ஏவாளையும் விவாக பந்தத்தில் இணைக்கிறார். ""இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்'' (ஆதி 2:24) என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். 


மனுஷன் பாவத்தை அறியாததற்கு  முன்பாகவே, தேவனாகிய கர்த்தர்  ஓய்வுநாள் நியமத்தையும், விவாக நியமத்தையும் ஏற்படுத்துகிறார். ஓய்வுநாள் பிரமாணம்  சபையின் ஆசீர்வாதத்திற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது. விவாக பிரமாணம் மனுக்குலத்தின் ஆசீர்வாதத்திற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது. 


""அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?'' (மத் 19:4,5).


விவாக மஞ்சம் கனமுள்ளது.       விவாக உறவு மிகவும் வலுவானது. இயற்கையான உறவுகளைவிட, விவாக உறவே  மிகவும் பெலமுள்ளது. பிள்ளைகள் விவாகம்பண்ணும்போது, தங்கள் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  விவாகம்பண்ணுவதற்கு முன்பாக கர்த்தருடைய சமுகத்தில் ஜெபம்பண்ணி, அவருடைய ஆலோசனைகளையும் வழிநடத்துதல்களையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.


ஒருவனுக்கு ஒரு மனைவி என்பது  தேவனுடைய பிரமாணம். ஒருவன் பல மனைவிகளை விவாகம்பண்ணி,  திருமண உறவை முறித்துப்போடக்கூடாது. திருமணத்தை பலவீனப்படுத்தக்கூடாது.  தள்ளுதற்சீட்டு கொடுப்பது கர்த்தருக்கு பிரியமானதல்ல. 


""அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னைஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்'' (மல் 2:15). 


""தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்'' (மல் 2:16).


புருஷனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள அன்பு  வலுவாகயிருக்கவேண்டும். 


""அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்''           (எபே 5:28).


மனுக்குலத்தின்  முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் பரிசுத்தமானவர்களாகவும், பாவம் அறியாதவர்களாகவும் இருந்தபோது  அவர்களுடைய விவாகம் நடைபெற்றது. ஆதாமும் அவர் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்              (ஆதி 2:25).


ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருக்கிறார்கள். அங்கே      குளிரும் வெயிலின் உஷ்ணமும் அதிகமாயிருக்கிறது. அவர்களை இயற்கையின் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு,  அவர்களுக்கு வஸ்திரம் தேவைப்படவில்லை. அவர்கள் இருவரும் ஏதேன் தோட்டத்திலே நிர்வாணிகளாயிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் வெட்கப்படாதிருக்கிறார்கள்.  அவர்கள் வெட்கப்படுவதற்கு காரணம் ஒன்றுமில்லை. அவர்களுக்கு வெட்கம் என்றால் என்ன என்று தெரியவில்லை.  


மனச்சாட்சியில் பாவமில்லாதவர்களின் முகங்களில் வெட்கமோ, அவமானமோ இருக்காது.



You have to wait 15 seconds.

Download pdf

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.