ஆதியாகமம் வேத ஆராய்ச்சி (2:8-15)
ஏதேன் தோட்டம் ஆதி 2:8-15
ஆதி 2:8. தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
ஆதி 2:9. தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியி-ருந்து முளைக்கப்பண்ணினார்.
ஆதி 2:10. தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனி-ருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
ஆதி 2:11. முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
ஆதி 2:12. அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு.
ஆதி 2:13. இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
ஆதி 2:14. மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.
ஆதி 2:15. தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
மனுஷனிடத்தில் சரீரமும் ஆத்துமாவும் இருக்கிறது. தேவன் மனுஷனுடைய சரீரத்தை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார். அவர் அவனுடைய நாசியிலே பரலோகத்தின் ஜீவசுவாசத்தை ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான். மனுஷனுடைய ஆத்துமா நித்தியமானது.
மனுஷனுடைய சரீரமும் ஆத்துமாவும் சந்தோஷமாயிருக்கவேண்டும் என்பது தேவனுடைய திட்டம். தாம் உருவாக்கின மனுஷனுக்கு என்ன செய்யவேண்டும் என்பதையும், அவனுக்கு எதைக் கொடுக்கவேண்டும் என்பதையும், அதை அவனுக்கு எப்பொழுது செய்யவேண்டும் என்பதையும் தேவன் அறிந்திருக்கிறார்.
தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்குகிறார். அதைப்பற்றிய விவரம் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் தாம் உருவாக்கின மனுஷனை ஏதேன் தோட்டத்திலே வைக்கிறார். ஏதேன் தோட்டம் கர்த்தருக்கு விசேஷமானது. தாம் பூமியிலே வாசம்பண்ணுவதற்கு, தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தை தெரிந்தெடுத்து அதை உண்டாக்கியிருக்கிறார். ஏதேன் தோட்டம் ராஜாவின் அரமனை தோட்டத்தைப்போல இருக்கிறது.
ஏதேனுக்குக் கிழக்கே இந்தத் தோட்டம் இருந்தது. ஐபிராத்து, டைக்கிரீஸ் ஆகிய இரண்டு பிரசித்தி பெற்ற நதிகள் இந்தத் தோட்டத்தில் பாய்ந்தன. டைக்கிரீஸ் நதியின் மறுபெயர் இதெக்கேல் (ஆதி 2:14) என்பதாகும். இவ்விரண்டு நதிகள் தவிர, மேலும் இரண்டு நதிகளும் பாய்ந்தன. ஒன்று கீகோன். அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடிற்று. இது நைல் நதியைக் குறிக்கலாம். மற்றொரு நதி பைசோன், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடிற்று. ஆவிலா தேசம் அரபியா தேசத்தைக் குறிக்கும். ஏதேன் தோட்டம் பூமியில் குறிப்பாக எங்கே இருந்தது என்பதை யாரும் இன்னும் கண்டறியவில்லை. அந்தத் தோட்டம் அழிக்கப்பட்டு, பூமியின் மேல்மட்டம் மாற்றப்பட்டிருக்கலாம்.
பேலேகுவின் காலம் வரையிலும் பூமி பகுக்கப்படாமல் ஒன்றாயிருந்தது. (ஆதி 10:25, 1நாளா 1:19) இவனுடைய காலத்தில்தான், பூமி கண்டங்களாகவும், தீவுகளாகவும் பகுக்கப்பட்டது. ஆகையினால் ஏதேன் தோட்டத்தின் இருப்பிடத்தையோ, அல்லது அங்கு பாய்ந்த நதிகளையோ குறிப்பாக எங்கே உள்ளது என்று கண்டறிய முடியவில்லை. பூமியின் மேற்பரப்பு மாறிவிட்டது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது பூமியில் மேலும் பல மாற்றங்கள் உண்டாகும். (ஏசா 11:15-16; ஏசா 34:1-35:10; சக 14:4-10; வெளி 16:10-21). புதிய பூமியில் இன்னும் அநேக மாற்றங்கள் ஏற்படும். (வெளி 21:1-2, 9-10).
ஏதேன் தோட்டத்தின் இருப்பிடத்தை வேதபண்டிதர்களில் பலரும் வரையறுத்துக் கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஒருமித்த கருத்து ஒன்றும் ஏற்படவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தை ஏதேன் தோட்டமென்று கூறுகிறார்கள். உபா 29:29 ஆவது வசனத்தில் ""மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்'' என்று கூறப்பட்டிருக்கிறது. ஏதேன் தோட்டம் எங்கிருந்தது என்பது கர்த்தருக்கே தெரிந்த உண்மையாகும்.
பரிசுத்த வேதாகமத்தில் மூன்றுவிதமான தோட்டங்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு:
1. ஏதேன் தோட்டம் (ஆதி 2:8-3:24).
2. கெத்செமனே தோட்டம். (மத் 26:36; யோவான் 18:1).
3. கிறிஸ்து உயிர்த்தெழுந்த தோட்டம். (யோவான் 19:38-42; வெளி 1:18).
இந்த மூன்று தோட்டங்கள் தவிர லூசிபரின் காலத்திலும் ஒரு தோட்டம் இருந்ததாக வேதபண்டிதர்களில் சிலர் கூறுகிறார்கள் (எசே 28:11-17; எரே 4:23-26).
""ஏதேன்'' என்னும் பெயருக்கு இனிமை, சொர்க்கம், சமமான பூமி என்று பொருள். செப்துவஜிந்த் பதிப்பில் ஏதேன் என்பது பரதீசு என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வேத அறிஞர்கள் ஏதேன் தோட்டத்தை பரதீசு என்றே கூறுகிறார்கள். ஏனெனில் எபிரெய மொழியில் பேரடஸ் என்னும் வார்த்தை வனம், சிங்காரவனம், தோட்டம் என்று பொருள்படும்.
பரிசுத்த வேதாகமத்தில் நான்கு விதமான பரதீசுகளைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
1. லூசிபரின் ஏதேன். (எசே 28:11-17)
2. ஆதாமின் ஏதேன்.
3. மூன்றாம் வானத்திலுள்ள பரதீசு. (2கொரி 12:1-4; வெளி 2:7)
4. பூமியின் தாழ்விடங்களிலுள்ள பரதீசு. (லூக்கா 16:25, லூக்கா 23:43= மத் 12:40; எபே 4:8-10; எபி 2:14-15)
ஆதியாகமம் புஸ்தகத்தின் ஆசிரியர், தேவஆவியினால் ஏவப்பட்டு, இந்த ஆகமத்திலுள்ள வசனங்களையெல்லாம் எழுதியிருக்கிறார். பஞ்சாகமம் முதலாவது யூதருக்கே எழுதப்பட்டது. சபை ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்பகாலத்திலிருந்தே, சபையாருக்கு தேவனைப்பற்றியும், அவருடைய சிருஷ்டிப்பைப்பற்றியும், திட்டத்தைப்பற்றியும் அறிவிக்கவேண்டும் என்பது ஆசிரியரின் நோக்கம்.
தேவனுடைய இரகசியங்கள் எல்லாவற்றையும் மனுஷனால் புரிந்துகொள்ள முடியாது. தேவன் தம்மைப்பற்றிய இரகசியங்களை எந்த அளவுக்கு வெளிப்படுத்துகிறாரோ, அந்த அளவுக்கு மாத்திரமே மனுஷனால் தேவனுடைய காரியங்களை அறிந்துகொள்ள முடியும். தேவனுடைய காரியங்களில் இன்னும் ஏராளமானவை மனுஷருக்கு அறிந்துகொள்ள முடியாத இரகசியமாகவே இருக்கிறது.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார். அவன் நாசியிலே ஜீவசுவாசத்தை ஊதி, அவனை ஜீவாத்துமாவாக்கினார். மனுஷன் வாசம்பண்ணுவதற்கு ஒரு வாசஸ்தலம் வேண்டும். தேவன் மனுஷனுடைய வாசஸ்தலமாக ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்குகிறார். ஆதாம் ஏதேன் தோட்டத்தில் வாசம்பண்ணவேண்டும் என்பது தேவனுடைய சித்தம்.
தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு தங்கமாளிகையை கட்டவில்லை. தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய அரமனையை அவனுக்கு கட்டி கொடுக்கவில்லை. தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை வாசஸ்தலமாக கொடுக்கிறார். ஏதேன் தோட்டத்தில் செயற்கையான அலங்காரப் பொருட்கள் எதுவுமில்லை. அது ஒரு இயற்கையான தோட்டம். தோட்டத்திலே மரங்களும் செடிகளும், கொடிகளும் திரளாயிருக்கிறது.
ஏதேன் தோட்டமே ஆதாமின் வீடு. அந்த வீட்டிற்கு வானமே கூரைபோல மூடியிருக்கிறது. இந்தக் கூரைக்கு வர்ணம் பூசவேண்டிய அவசியமில்லை. இயற்கையின் அழகே ஏதேன் தோட்டத்தின் அழகு. பூமியே ஆதாமின் வீட்டிற்கு தரை விரிப்பாயிருக்கிறது. இந்த தரையிலே பளிங்கு கற்களோ, சலவைக்கற்களோ போடப்பவில்லை. ஏதேன் தோட்டத்திலுள்ள மரங்களின் நிழலே, ஆதாமுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
ஆதாம் ஓய்வெடுக்க வேண்டுமென்றால், அவருக்கு குளிர்சாதனம் பொருத்தப்பட்ட தனிஅறைகள் எதுவுமில்லை. ஏதேன் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் நிழலே ஆதாமுக்கு ஓய்வெடுக்கும் ஸ்தலம். ஆதாம் அந்த மரத்தின் கீழே அமர்ந்து போஜனம்பண்ணவேண்டும். அங்கேயே தங்கவேண்டும்.
சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாயிருந்தார். அவரிடத்தில் திரளான ஐசுவரியம் இருந்தது. ஆனாலும் சாலொமோனுக்குகூட, ஏதேன் தோட்டத்தைப்போல ஒரு அழகான தோட்டம் கிடைக்கவில்லை. ஏதேன் தோட்டம் கர்த்தருடைய தோட்டம். கர்த்தர் இந்த தோட்டத்தை ஆதாமுக்காக உண்டாக்கியிருக்கிறார். ஏதேன் தோட்டம் இயற்கையான அழகுள்ள தோட்டம்.
தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்திலே ஏராளமான விருட்சங்களை முளைக்கப்பண்ணுகிறார். இவையெல்லாம் தேவனுடைய ஞானத்தினாலும், வல்லமையினாலும் முளைக்கிறது. இந்த தோட்டத்திலே ஆதாமைத் தவிர வேறு யாருமில்லை. தேவனே தோட்டத்திலுள்ள எல்லா விருட்சங்களையும் நட்டி, அவற்றை முளைக்கச் செய்கிறார். ஏதேன் தோட்டம் தேவனுடைய சித்தத்தின் பிரகாரமாகவும், திட்டத்தின் பிரகாரமாகவும் உண்டாக்கப்பட்டிருக்கிறது.
தேவன் உண்டாக்கினதெல்லாம் மனுஷனுடைய ஆத்துமாவுக்கு சந்தோஷத்தையும் திருப்தியையும் தரும். கர்த்தரால் நாட்டப்பட்ட தோட்டமே மனுஷருக்கு மெய்யான பரதீசாயிருக்கிறது. மனுஷனால் பரதீசை உண்டாக்க முடியாது.
ஏதேன் என்னும் பெயருக்கு சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம் என்று பொருள். ஏதேன் தோட்டம் பெயருக்கேற்ற பிரகாரமாக ஆனந்த தோட்டமாகவும், இனிமையான தோட்டமாகவும், நறுமணம் கொடுக்கும் தோட்டமாகவும் இருக்கிறது. ஏதேன் தோட்டத்தின் எல்லைகளும் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது.
விசுவாசிகளாகிய நாம் பரலோகத்திலுள்ள பரதீசுக்குரியவர்கள். பரலோகமே நம்முடைய நித்திய வாசஸ்தலம். பரலோகத்திற்குரியவர்களாகிய நாம், இந்தப் பூமிக்குரிய காரியங்களில் அதிகமாய் கவனம் செலுத்தக்கூடாது. கர்த்தர் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்களில் திருப்தியோடிருக்கவேண்டும். நாம் பூமிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக அதிகமாய் பிரயாசப்படக்கூடாது.
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியி-ருந்து முளைக்கப்பண்ணினார் (ஆதி 2:9).
தேவன் ஏதேன் தோட்டத்திலே சகலவித விருட்சங்களையும் முளைக்கப்பண்ணுகிறார். இந்த விருட்சங்களெல்லாமே விசேஷித்த விருட்சங்கள். தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு தேவனாகவும் இருக்கிறார், அவருக்கு பரலோக பிதாவாகவும் இருக்கிறார். கர்த்தர் ஆதாமின்மீது அன்பும் கரிசனையும் வைத்திருக்கிறார். ஆதாமுக்கு எது பிரயோஜனமாயிருக்கும் என்பதும், அவருக்கு எது சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதும் தேவனாகிய கர்த்தருக்கு தெரியும்.
பல போஜனங்கள் பார்வைக்கு அழகாகவும், புசிப்பதற்குச் சுவையாகவும் இருக்கும். அதினாலேயே நாம் அவற்றைப் புசிக்கிறோம். (ஆதி 3:6). சில போஜனங்கள் பார்வைக்கு அழகாக இருக்கலாம். அது உடல் நலத்திற்குக் கேடாகவும் அமையலாம்.
தோட்டத்தில் பல விருட்சங்கள் இருந்தன. அதில் நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் ஒன்று. கனியின் தன்மை நன்மை தீமையை அறிய வைக்காது. மனுஷனுடைய கீழ்ப்படியாமையே அவனை நன்மை தீமை அறிய வைக்கும். (ரோமர் 5:12-21).
கர்த்தர் ஆதாமின் சந்தோஷத்தையும், பிரயோஜனத்தையும் தம்முடைய மனதில் நினைத்து, ஏதேன் தோட்டத்திலே சகலவித விருட்சங்களையும் உண்டாக்குகிறார். ஆதாம் ஏதேன் தோட்டத்திலிருந்தபோது, அவர் பாவம் செய்யவேண்டுமென்று ஆசைப்படவில்லை. ஆதாமினிடத்தில் அநீதியான சந்தோஷம் எதுவுமில்லை. ஆதாமின் மனது கள்ளம் கபடமில்லாமல் சுத்தமாயிருக்கிறது.
தேவன் ஏதேன் தோட்டத்திலே சகலவித விருட்சங்களையும் முளைக்கப்பண்ணுகிறார். இவையெல்லாம் பார்வைக்கு அழகும், புசிப்புக்கு நலமுமாயிருக்கிறது. கர்த்தர் ஏதேன் தோட்டத்திலே சகலவித விருட்சங்களை முளைக்கப்பண்ணினாலும், அங்கே இரண்டு விருட்சங்கள் மிகவும் விசேஷமானவை. தேவன் இந்த இரண்டு விருட்சங்களையும் ஏதேன் தோட்டத்தின் நடுவிலே, பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிறார். அவற்றில் ஒன்று ஜீவவிருட்சம். மற்றொன்று நன்மை தீமை அறியத்தக்க விருட்சம். இவ்விரண்டு விருட்சங்களுக்கு ஒப்பான விருட்சம் இந்தப் பூமியில் வேறெங்கும் இல்லை.
தேவன் ஏதேன் தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தை முளைக்கப்பண்ணியிருக்கிறார். இந்த விருட்சம் ஆதாமுக்கு அடையாளமாகவும் முத்திரையாகவும் இருக்கிறது. தேவனுடைய கிருபையினாலும், தெய்வீக பராமரிப்பினாலும் ஆதாமுக்கு நித்திய சந்தோஷமும், நித்திய ஜீவனும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என்பதை ஜீவவிருட்சம் அவருக்கு உறுதிபண்ணுகிறது. ஆனாலும் தேவன் ஆதாமுக்கு ஒரு நிபந்தனையையும் சொல்லுகிறார். ஆதாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவேண்டும். அப்போதுதான் அவருக்கு நித்திய சந்தோஷமும், நித்திய ஜீவனும் கிடைக்கும்.
ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிப்பதற்கு தேவன் ஆதாமுக்கு அனுமதி கொடுக்கிறார். ஆதாம் ஜீவனோடிருக்கவேண்டும் என்பது தேவனுடைய விருப்பம். புதிய ஏற்பாட்டுக்காலத்து விசுவாசிகளாகிய நமக்கு, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே ஜீவவிருட்சமாயிருக்கிறார்.
""ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங் கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியி-ருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது'' (வெளி 2:7).
""நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்'' (வெளி 22:2).
தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்திலே நன்மை •தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிறார். இந்த விருட்சத்தின் கனியைப் புசிப்பதினால் ஆதாமுக்கு விசேஷித்த ஞானமோ, அறிவு விருத்தியோ ஏற்படாது. ஆனாலும் இந்த விருட்சத்திற்கு நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்த விருட்சம் தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறது. இந்த விருட்சத்தின் மூலமாக தேவனுடைய சித்தம் ஆதாமுக்கு சொல்லப்படுகிறது. ஆதாம் இந்த விருட்சத்தின் உதவியினால் நன்மை தீமையை அறிந்துகொள்ளலாம். இந்த விருட்சத்தின் கனியை புசியாமலிருப்பதே ஆதாமுக்கு நன்மையானது. இந்த விருட்சத்தின் கனியைப் புசிப்பது ஆதாமுக்குத் தீமையானது.
இந்தப் பிரபஞ்சத்தில் ஏராளமான நன்மைகளும் தீமைகளும் இருக்கிறது. தேவன் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை, ஆதாமின் இருதயத்தில், இயற்கையின் பிரமாணத்தின் மூலமாக, எழுதி வைத்திருக்கிறார். அதிலும் விசேஷமாக, தேவனாகிய கர்த்தர், நன்மை தீமையின் பிரமாணத்தை இந்த விருட்சத்தின்மீது எழுதி வைத்திருக்கிறார்.
ஆதாம் நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை, இந்த விருட்சத்தின் மூலமாக, அனுபவ ரீதியாக புரிந்துகொள்ளலாம். இந்த விருட்சத்தின் கனியை புசியாதிருந்தால், ஆதாமுக்கு நன்மையைப்பற்றிய அறிவு வரும். இந்த விருட்சத்தின் கனியைப் புசித்தால் அவருக்கு தீமையைப்பற்றிய அறிவு வரும். ஆதாம் இந்த விருட்சத்தின் கனியைப் புசித்தால் தீமையை அனுபவிப்பார். இந்தக் கனியைப் புசியாதிருந்தால் அவர் நன்மையை அனுபவிப்பார்.
விசுவாசிகளாகிய நமக்கு தேவன் தம்முடைய கிருபையின் பிரமாணத்தைக் கொடுத்திருக்கிறார். விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவோம் என்பது ஒரு பிரமாணம். விசுவாசிக்கவில்லையென்றால் அழிந்துபோவோம் என்பது மற்றொரு பிரமாணம்.
""விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்'' (மாற் 16:16).
ஆதாம் ஏதேன் தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியை புசிக்கவே புசிக்கலாம். ஜீவவிருட்சத்தின் கனியைப் புசித்தால் ஆதாமுக்கு ஜீவன் உண்டாகும். இதை உறுதிபண்ணுவதற்காக கர்த்தர் ஏதேன் தோட்டத்திலே ஜீவவிருட்சத்தை முளைக்கப்பண்ணியிருக்கிறார்.
ஆதாம் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கக்கூடாது. அதைப் புசிக்கும் நாளிலே ஆதாம் சாகவே சாவார். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லையென்றால் சாவு வரும் என்பதற்கு, நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் அடையாளமாயிருக்கிறது.
தேவன் இவ்விரண்டு விருட்சங்களின் மூலமாக, ஆதாமுக்கு முன்பாக நன்மையையும் தீமையையும் வைத்திருக்கிறார். அவர் ஆதாமுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைத்திருக்கிறார். இவ்விரண்டு விருட்சங்களும், தேவனுடைய இரண்டு நியமங்களாகும்.
""நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு'' (உபா 30:19)
""கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்'' (உபா 30:20).
ஏதேன் தோட்டத்திலே, தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனி-ருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று (ஆதி 2:10).
இந்த வசனப்பகுதியில் ஏதேன் தோட்டத்தில் பாயும் நாலு ஆறுகளைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை ஒரே ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும், நாலு பெரிய கிளை ஆறுகளாகும். இந்த நாலு ஆறுகளும் ஏதேன் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுகிறது. இதன் தண்ணீரினால் தோட்டம் செழிப்பாயிருக்கிறது. விருட்சங்கள் ஏராளமான கனிகளைத் தருகிறது.
முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர் (ஆதி 2:11-14).
ஏதேன் தோட்டத்தில் பாய்கிற நாலு ஆறுகளைப்பற்றி இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. பரலோகத்திலும் ஜீவத்தண்ணீருள்ள நதி ஓடும். இது வற்றாத நதியாயிருக்கும். பரலோகத்தில் ஓடுகிற நதி ஏதேனிலிருந்து ஓடுகிற நதியல்ல. இந்த நதி தேவனுடைய சிங்காசனத்திலிருந்து ஓடுகிற நதியாகும். இந்த நதி நம்முடைய தேவனுடைய நகரத்தை சந்தோஷப்படுத்துகிறது.
""பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவதண்ணீருள்ள சுத்தமான நதிதேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்தி-ருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்'' (வெளி 22:1).
""ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்'' (சங் 46:4).
பைசோன் ஆறு ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடுகிறது. அவ்விடத்தில் பொன் விளைகிறது. அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு (ஆதி 2:11,12).
ஆவிலா தேசத்தில் பொன் விளைந்தாலும், ஏதேன் தோட்டமே மிகவும் விசேஷமானது. ஏனெனில் ஏதேன் தோட்டத்தின் நடுவில்தான் ஜீவவிருட்சம் இருக்கிறது. இந்தத் தோட்டத்தில்தான் ஆதாம் தன்னுடைய தேவனாகிய கர்த்தரோடு ஐக்கியமாயிருக்கிறார்.
விசுவாசிகளாகிய நாம், உலகப்பிரகாரமான ஜனங்களைப்போல, பொன்னுக்கும், விலையுயர்ந்த கற்களுக்கும், உலகப்பிரகாரமான மற்ற பொருட்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. கர்த்தரை நம்புகிற நாம், கர்த்தர் நமக்கு கொடுக்கும் நித்திய ஜீவன் மீது பிரியமாயிருக்கவேண்டும். உலகத்தாரிடம் தங்கம் இருக்கலாம். நம்மிடத்திலோ இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் இருக்கிறது.
ஆவிலா தேசத்தின் பொன் நல்லதாயிருக்கலாம். ஆனாலும் கர்த்தர் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்களும், ஐசுவரியங்களும் நித்தியகாலத்திற்கும் நமக்கு பிரயோஜனமாயிருக்கும்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார் (ஆதி 2:15).
தோட்டத்தைப் பண்படுத்தி, பாதுகாப்பது மனுஷனுடைய கடமை. வெளியிலிருந்து யாரும் உள்ளே வந்து விடாதவாறு இவன் பாதுகாக்க வேண்டும். தோட்டத்தைப் பாதுகாக்கும் தன் கடமையிலிருந்து ஆதாம் தவறிவிடுகிறார். பாவம் மனுக்குலத்திற்குள் நுழைந்து விடுகிறது. சாத்தான் மனுஷனை ஆளுகை செய்கிறான். (மத் 4:1-11; மத் 12:24-25; ரோமர் 5:12-21; 2கொரி 4:4; எபே 6:10-18) சாத்தானுடைய இறுதியான தோல்வி வெளி 12:7-12; வெளி 20:1-10 ஆகிய வசனங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார். இந்த மண் ஏதேன் தோட்டத்தின் மண் அல்ல. தேவன் மனுஷனை ஏதேன் தோட்டத்திற்கு வெளியே உண்டாக்கினார். அதன் பின்பு, தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருகிறார். மனுஷன் சாதாரண மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்திலே கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும், காக்கவும் வைக்கிறார். ஆனாலும் ஆதாமுக்கு ஏதேன் தோட்டத்தின்மீது உரிமையோ, பாத்தியமோ இல்லை. ஆதாம் ஏதேன் தோட்டத்து மண்ணினால் உருவாக்கப்படவில்லை. தேவனாகிய கர்த்தரே மனுஷனை உண்டாக்கினார். அவனை ஜீவாத்துமாவாக்கினார். கர்த்தரே மனுஷனுக்கு ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறார்.
நம்மை உண்டாக்கின கர்த்தரால் மாத்திரமே, நமக்கு சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் கொடுக்க முடியும். தேவன் நம்மோடு கூடயிருப்பதுதான் நமக்கு ஆறுதல். நாம் தேவனோடு ஐக்கியமாயிருப்பதுதான் நமக்கு ஆசீர்வாதம். தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்திலே அழைத்துக்கொண்டு வருகிறார். அங்கே கர்த்தரும் உலாவுகிறார். ஆதாம் தேவனாகிய கர்த்தரை, ஏதேன் தோட்டத்திலே பிரத்தியட்சமாய் தரிசிக்கிறார்.
""தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார்'' (சங் 47:4). நாம் எங்கே வாசம்பண்ணவேண்டும் என்பதை கர்த்தர் அறிந்திருக்கிறார். கர்த்தர் நம்மை எந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறாரோ, அந்த ஸ்தானத்திலே நாம் ஆத்தும திருப்தியோடிருக்கவேண்டும். கர்த்தர் நமக்கு என்ன வேலையைக் கொடுக்கிறாரோ, அந்த வேலையை நாம் சந்தோஷமாயும், உண்மையாயும் செய்யவேண்டும். தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்திலே அழைத்து வந்து, அதைப் பண்படுத்தவும், காக்கவும் வைக்கிறார்.
ஏதேன் தோட்டம் பரதீசுக்கு அடையாளமாயிருக்கிறது. இது பரதீசாகயிருந்தாலும் இதையும் பண்படுத்த வேண்டியதாயிருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் ஜீவிக்கிற எல்லோருமே ஏதாவது ஒரு வேலையை செய்யவேண்டும். ஒருவரும் வேலை செய்யாமல் சோம்பேறியாயிருக்கக்கூடாது. யாரும் சும்மாயிருக்கக்கூடாது.
நமக்கு சரீரத்தையும் ஆத்துமாவையும் கொடுத்திருக்கிற தேவன், நமக்கு வேலைகளையும் கொடுத்திருக்கிறார். நம்முடைய சரீரம், கர்த்தர் கொடுக்கும் வேலையை ஒழுங்காய்ச் செய்யவேண்டும். நம்முடைய ஆத்துமா கர்த்தருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிவதுபோல, நம்முடைய சரீரமும் கர்த்தருடைய சித்தத்திற்கு கீழ்ப்படியவேண்டும்.
நாம் கர்த்தருடைய ஊழியத்தை செய்தாலும் அல்லது வேறு ஏதாவது உத்தியோகமோ அல்லது தொழிலோ அல்லது வியாபாரமோ செய்தாலும், நம்முடைய வேலைகளில் நாம் உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும். நம்முடைய வேலைகள் மூலமாயும் நாம் கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தவேண்டும்.
பூர்வகாலம் முதலே விவசாய வேலை நடைபெறுகிறது. விவசாயம் ஒரு கண்ணியமான தொழில். விவசாய வேலை ஒரு மேன்மையான வேலை. தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு ஏதேன் தோட்டத்திலே விவசாய வேலையைக் கொடுக்கிறார். ஆதாம் ஏதேன் தோட்டத்திலே தன்னுடைய கைகளால் நிலத்தைப் பண்படுத்தினாலும், அவருடைய இருதயம் தேவனோடு ஐக்கியமாயிருக்கவேண்டும்.
தேவன் நமக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும், அந்த வேலையை உண்மையாயும், நேர்மையாயும், மனப்பூர்வமாயும் செய்யவேண்டும். அப்போதுதான் நாம் செய்கிற வேலையில் நமக்கு திருப்தியும் சந்தோஷமும் உண்டாகும்.
தேவனாகிய கர்த்தர் இதுவரையிலும் சிருஷ்டிகராகவும், தம்முடைய சிருஷ்களை பராமரிக்கிறவராகவும் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பொழுது தேவனாகிய கர்த்தர் தம்மை ஆளுகை செய்கிறவராகவும், பிரமாணங்களைக் கொடுக்கிறவராகவும் வெளிப்படுத்துகிறார்.