ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 3-17-19 Tamil bible study pdf

 

ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 3:17-19


மண்ணுக்குத் திரும்புவாய் ஆதி 3:17-19


ஆதி 3:17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். 


ஆதி 3:18. அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். 


ஆதி 3:19. நீ பூமியி-ருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்;நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். 


ஆதாமும் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை.  ஆகையினால் தேவனாகிய கர்த்தர் ஆதாமையும் தண்டிக்கிறார். அவர் ஆதாமுக்கு  தம்முடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளை சொல்லுவதற்கு முன்பாக, ஆதாம் செய்த பாவங்களை அவருக்கு நினைவுபடுத்துகிறார்.  ஆதாம் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்ததினால், தேவனுடைய கோபம் ஆதாமின் மேலும் வெளிப்படுகிறது. 


ஆதாமுக்கு மூன்றுவிதமான சாபங்கள் வருகிறது. அவர் வாசம்பண்ணுகிற        இந்தப் பூமி சபிக்கப்பட்டிருக்கிறது. ஆதாமுக்கு கடினமான வேலை கொடுக்கப்படுகிறது. ஆதாமின் ஜீவியகாலம் குறைந்துபோகிறது.   


ஆதாம் தன் மனைவியின் வார்த்தைக்கு செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று தேவனாகிய கர்த்தர்  அவருக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தார். இதுவே ஆதாமின் பாவம். ஆகையினால் தேவனாகிய கர்த்தர் ஆதாமை நோக்கி, ""பூமி உன் நிமித்தம்  சபிக்கப்பட்டிருக்கும்'' என்றும், ""அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்'' என்றும் சொல்லுகிறார்.


மனுஷர்மீது மட்டுமல்லாமல், விலங்குகள்மீதும், பூமியின்மீதும், பூமியின்மீது முளைக்கும் தாவர வர்க்கங்கள்மீதும் தேவனுடைய சாபம் வந்தது. (ஆதி 3:17-19; ரோமர் 8:19-23; வெளி 21:4; வெளி 22:3).


முள் வறட்சிக்கு அடையாளம். (நீதி 24:31; ஏசா 5:6; ஏசா 7:24;    ஏசா 34:13). இவை தாடையை உருவக் குத்துகிறதற்கும், (யோபு 41:2), எரிபொருளாகவும், (சங் 58:9; சங் 118:12;  பிர 7:6), வேலிகளாகவும் (ஓசி 2:6; மீகா 7:4), கிறிஸ்துவிற்கு முள்முடி சூடுவதற்கும் (மத் 27:29; மாற்கு 15:17; யோவான் 19:2,5) பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனுடைய வார்த்தையை மனுஷருடைய இருதயத்திலிருந்து எடுத்துப்போடும் தீமையான காரியங்களுக்கு முள்ளுள்ள இடம் ஒரு அடையாளமாகும் (மத் 13:7,22) மனுஷருடைய பாடுகளை முள்ளானது குறிக்கிறது. (எண் 33:55; 2நாளா 12:7).


""குருக்கு''  என்பது விஷமுள்ள செடிகள்.  (யோபு 31:40; ஓசி 10:8). குருக்குகளைப் பற்றி வேதாகமத்தில் உவமைகள் உள்ளன. (2இராஜா 14:9; 2நாளா 25:18;   மத் 7:16)


சாபத்தின்கீழ் மனுஷன் மிகவும் கடினமாக உழைத்து புசிக்கவேண்டும். தன் முகத்தின் வேர்வையால் மனுஷன் ஆகாரம் புசிப்பான். மனுஷன் மண்ணாயிருக்கிறான். ஆகையினால் மண்ணுக்குத் திரும்புவான். தான் செய்த பாவத்திற்கு மனுஷன் தண்டனையை அனுபவிக்கிறான். கடினமான உழைப்பினால் அவனுடைய சரீரம் களைப்படைந்து நோய்வாய்ப் பட்டு, இறுதியில் அகால மரணமடைகிறான்.         (பிர 3:20; பிர 12:7; சங் 103:14; 1கொரி 15:21-28).


 பாலைவனங்கள், நீர்வளமில்லாதநிலங்கள், களைகள், விஷங்கள் ஆகியவை எல்லாம் சாபத்தின் விளைவுகளே. மனுஷன் இவற்றுக்கு மத்தியில் ஜீவிக்க வேண்டும். பூமி சபிக்கப்பட்டிருக்கும்போது அது மனுஷனுக்கும் சாபமாக இருக்கும். வானமண்டலங்களிலுள்ள நட்சத்திரங்களும், இதனால் பாதிப்படைகின்றன. சீதோஷண நிலைகள் மாற்றமடைந்து அது மனுஷருக்குப் பிரச்சனையாகிறது.  (ஏசா 30:26; ஏசா 35:1-8; வெளி 7:16).


மனுக்குலம் இறுதியாக இரட்சிக்கப்படும் வரையிலும் மனுஷனுக்குத் தொடர்ந்து பிரச்சனைகளும், கஷ்டங்களும், பாடுகளும், வேதனைகளும் வந்து கொண்டே இருக்கும். (ஆதி 31:42; ஆதி 35:16;  சங் 90:10; சங் 107:12; பிர 1:8; பிர 2:18; பிர 4:8; மத் 11:28; யாக் 5:4). புதிய பூமியில் ஒரு சாபமுமிராது. மனுஷனுடைய சாபமும் அகன்றுபோகும். மனுஷன் தேவனோடு முழு உலகத்தையும் ஆளுகை செய்வான்   (1கொரி 15:24-28; எபே 1:10; வெளி 20-22).


இந்தப் பூமியிலிருந்து இது வரையிலும் ஆதாமுக்கும் ஏவாளுக்கும்  நல்ல சுவையான கனிகள் கிடைத்தது. அவர்கள் இருவரும் ஏதேன் தோட்டத்தை பண்படுத்தி,  சகல விருட்சங்களின் கனிகளையும் புசித்து திருப்தியடைந்தார்கள். ஆனால் இப்போதோ ஆதாமுடைய பாவத்தினிமித்தமாக,  கர்த்தர் இந்தப் பூமியை சபிக்கிறார். 


கர்த்தர் ஆதாமை சபிக்கவில்லை.  அவர் சர்ப்பத்தை சபித்தார். தேவனாகிய கர்த்தர்  சர்ப்பத்தைப் பார்த்து, ""நீ சகல நாட்டுமிருங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய்'' (ஆதி 3:14) என்று சொன்னார்.   ஆனாலும் தேவனாகிய கர்த்தர், சர்ப்பத்தை சபித்ததுபோல, ஆதாமை சபிக்கவில்லை. அவர் ஆதாமுக்கு ஏராளமான ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். 


ஆதாமுடைய பாவத்தினிமித்தமாக, தேவனாகிய கர்த்தர் பூமியை சபிக்கிறார். ஆதாம் இந்தப் பூமியைவிட மேலானவராகவும், விசேஷமானவராகவும் இருக்கிறார்.       இந்தப் பூமி தன் வாயைத் திறந்து ஆதாமை விழுங்கிவிடவில்லை. பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. இந்தப் பூமியில் சகலவிதமான விருட்சங்களும் இருக்கிறது. அவை பார்ப்பதற்கு அழகாயிருக்கிறது.  ஆனால் ஆதாமுடைய பாவத்தினிமித்தமாக, பூமியின் அழகு குறைந்துபோயிற்று. விருட்சங்கள் கனிகளைத் தரவில்லை. தேவன் பூமியை சபிக்கிறார். 


தேவனாகிய கர்த்தர் ஆதாமை  ஏதேன் தோட்டத்திலே, அழைத்துக்கொண்டு வந்தார். தோட்டத்தை  பண்படுத்தும் வேலையை ஆதாமுக்கு கொடுத்தார். இப்போதோ ஆதாமின் வேலை கடினமாயிற்று. தேவனாகிய கர்த்தர் ஆதாமை நோக்கி,       ""நீ பூமியி-ருந்து எடுக்கப்பட்டபடியால், பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்'' (ஆதி 3:19) என்று சொல்லுகிறார்.


ஆதாம் பாவம் செய்வதற்கு முன்பாக, அவருடைய வேலை ஏதேன் தோட்டத்திலே இலகுவாயிருந்தது. அவர்  வேலை செய்தததினால் களைப்படையவில்லை. ஆதாமின் முகத்தில் வேர்வை வடியவில்லை. ஆதாமின் வேலை அவருக்கு சந்தோஷமாயிருந்தது. ஏதேன் தோட்டத்தை பண்படுத்துகிற வேலை  மிகவும் சாதாரணமான வேலை. அது ஏற்கெனவே தேவனுடைய ஆசீர்வாதத்தினால் பண்படுத்தப்பட்ட தோட்டமாயிருக்கிறது. 


தேவனாகிய கர்த்தர்  ஆதாமுக்கு இப்போது கடினமான வேலையைக் கொடுக்கிறார். அவர் தன் முகத்தின்  வேர்வையால் ஆகாரம் புசிக்கவேண்டும். ஆதாம் கடினமாய் உழைக்கவேண்டும். அவர் உழைக்கவில்லையென்றால், அவருக்கு  புசிக்க போஜனம் இருக்காது. ஆதாம் பட்டினி கிடக்கவேண்டும்.


ஆதாம் பாவம் செய்யவில்லையென்றால்,  அவருடைய முகத்திலே வேர்வை வடிந்திருக்காது.  அவர் எப்போதும் போல இலகுவான வேலையை செய்து, தன்னுடைய ஆகாரத்தை சந்தோஷமாய்ப் புசித்திருக்கலாம். வேலை செய்வது எல்லோருக்கும் நியமிக்கப்பட்டிருக்கிற கடமை. கர்த்தர் நமக்கு கொடுக்கிற வேலைகளை,            நாம் உண்மையாய்ச் செய்யவேண்டும். ஆனாலும் நம்முடைய பாவத்தினிமித்தமாக, நம்முடைய வேலைகளின் பாரம் அதிகரிக்கிறது. நாம் அளவுக்கு அதிகமாக கடினமாக உழைக்கவேண்டியதாயிருக்கிறது.  


ஏதேன் தோட்டத்திலே சகலவிதமான  விருட்சத்தின் கனிகளும் இருக்கிறது. அந்தக் கனிகளையெல்லாம் புசிப்பதற்கு  தேவன் ஆதாமுக்கு அனுமதி கொடுத்திருந்தார். ஆனால் இப்போதோ, தேவனாகிய கர்த்தர் ஆதாமை நோக்கி, ""உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்''  என்றும், ""நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே பூமியின் பலனைப் புசிப்பாய்'' என்றும் சொல்லுகிறார். ஆதாம் தன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிக்கவேண்டும். 


இந்த உலகத்தில்                  அநேகர் சந்தோஷமாயிருக்கிறார்கள்.  வெளிப்பிரகாரமாகப் பார்த்தால், அவர்களுக்கு ஒரு கவலையும், ஒரு வருத்தமும் இல்லாததுபோல தெரியும்.  ஆனால் அவர்களுக்கும் ஏதாவது ஒரு வருத்தம் இருக்கும். ஒருவேளை அவர்களுடைய சரீரத்தில் வியாதியோ, அவர்களுடைய குடும்பத்திலே மரணமோ ஏற்பட்டிருக்கலாம்.  மனுஷருடைய பாவத்தினால் இந்தப் பூமியிலே வருத்தமும் வேதனையும் பிரவேசித்திருக்கிறது.


பாவத்தின் சம்பளம் மரணம்.  பாவத்தினால் மனுக்குலத்திற்கு சாபம் வருகிறது. மனுஷருடைய பாவத்தின் நிமித்தம், தேவனாகிய கர்த்தர்  மனுஷர்மீது கோபமாயிருக்கிறார். அவர் பாவிகள்மீது தம்முடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய கோபத்திற்கு மத்தியிலும், அவருடைய கிருபையும் இரக்கமும் வெளிப்படுகிறது. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பார்த்து ""உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்'' என்று சொல்லுகிறார். 


வருத்தத்தோடே கடினமாய் வேலை செய்தால் வேர்வை வரும்.  கடினமாய் வேலை செய்கிறவர்களுக்கு சரீரத்தின் களைப்பு அதிகமாயிருக்கும்.  அப்பேற்பட்டவர்களுக்கு அயர்ந்த நித்திரை வரும். கடினமாய் உழைக்கிறவர்கள் தங்கள் படுக்கையில் நன்றாய் இளைப்பாறுவார்கள்.  முகத்தில் அதிகமாய் வேர்வை வரும்போது, அவர்களுடைய சரீரத்தில் அதிகமாய்க் களைப்பு வரும். அவர்களுக்கு நித்திரையும் இன்பமாயிருக்கும்.


மனுஷன் தன் பாவத்தினால், தான் உயிரோடிருக்கும் நாளெல்லாம், பூமியின் பலனை வருத்தத்தோடு புசிப்பான்.       மனுஷன் வருத்தப்பட்டாலும் பட்டினியாயிருக்கமாட்டான். இதுவும் கர்த்தருடைய கிருபை. மனுஷன் தேவனுடைய கட்டளைக்கு  கீழ்ப்படியாதே போனாலும், தேவனாகிய கர்த்தர் மனுஷனை பட்டினிபோட்டு, அவனை வாதிக்கவில்லை. மனுஷனுக்கு கடின வேலையினால் வருத்தமுண்டாகிறது.  ஆனாலும் அவனுக்கு பசியினாலும், பட்டினியினாலும் வருத்தமோ வாடலோ உண்டாகவில்லை.


மனுஷன் வருத்தத்தோடு வேலை செய்கிறான்.  அவனுடைய வருத்தம் அவனுக்கு ஆகாரத்தைத் தருகிறது. அவனுடைய கடினமான உழைப்பு  அவனுடைய இருதயத்தைப் பலப்படுத்துகிறது. மனுஷனுக்கு வருத்தமும் வேதனையும் அதிகரித்தாலும், அவனுடைய சரீரத்தில்  நல்ல ஆரோக்கியமும் கிடைக்கிறது.


மனுஷன் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்தததினால், அவனுடைய ஆயுசுகாலமும் குறைந்துபோகிறது. மனுஷனுடைய நாளெல்லாம் வருத்தமும், சஞ்சலமும் நிரம்பியதாகவே இருக்கிறது. 


தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பார்த்து, ""நீ பூமியி-ருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்'' (ஆதி 3:19) என்று சொல்லுகிறார்.


தேவன் பூமியின் மண்ணினாலே மனுஷனை உருவாக்கினார். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனுஷன்,  மறுபடியும் மண்ணுக்கே திரும்புகிறான். தேவன் மனுஷனுக்கு கொடுக்கும் தண்டனையினால், அவனுடைய  சரீரமும் ஆத்துமாவும் பிரிகிறது. மனுஷனுடைய சரீரத்திலிருந்து, அவனுடைய ஆத்துமா வெளியேறிவிட்டால், மீதமுள்ளது சாதாரண மண்ணாகவே இருக்கும்.  


உயிரில்லாத பிரேதத்தை  கல்லறையிலே அடக்கம்பண்ணுகிறார்கள்.  அதுவே பிரேதங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஸ்தலம். மனுஷனுடைய  பிரேதத்தை பூமியிலே புதைத்த பின்பு, அந்த பிரேதம் மண்ணோடு மண்ணாக கலந்துவிடும். 


""நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்''  (சங் 104:29).


மனுஷன் மண்ணைப்போல இலகுவானவன். அவன் இந்தப் பூமியின் மண்ணைப்போல  உறுதியில்லாதவன். தேவனாகிய கர்த்தர் மனுஷனுக்கு மரணத்தை நியமிக்கிறார். ஒரு மனுஷன் எவ்வளவு பெரியவனாகயிருந்தாலும், அவன்  இந்தப் பூமியின் மண்ணாகவே இருக்கிறான். அவனும் மண்ணுக்குத் திரும்புவான்.


மனுஷனுடைய பாவத்தினால் இந்த உலகத்தில் மரணம் பிரவேசித்திருக்கிறது. ஆதாம் பாவம் செய்யவில்லையென்றால்,  அவர் மரித்திருக்கமாட்டார். 


""இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று'' (ரோம 5:12). 


முதல் மனுஷனாகிய ஆதாம்  தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்தார். ஆதாமின் பாவத்தினால்  அவருடைய ஆத்துமாவுக்கு பாதிப்பு உண்டாயிற்று. ஆதாமின் பாவம் மனுக்குலத்தார் எல்லோருக்கும் கடந்து வருகிறது. ஆதாமின் பாவம் ஜென்மபாவமாயிற்று. 


தேவனாகிய கர்த்தர் ஆதாமை நோக்கி, ""நீ மண்ணாயிருக்கிறாய்,  மண்ணுக்குத் திரும்புவாய்'' என்று சொல்லுகிறார். ஆதாமுக்கு சரீர மரணமுண்டாகும். ஆதாமுக்கு மரணம் வரும்போது, அவருடைய ஆத்துமாவுக்கும் பாதிப்பு வருகிறது.


ஸ்திரீயானவள் வேதனையோடே பிள்ளை பெறுவாள். இந்த வேதனை  அவளுடைய பாவத்தினால் உண்டாயிற்று. அவள் அதிகமான வேதனைகளை அனுபவிக்கும்போதெல்லாம், அவளுடைய குற்றமனச்சாட்சி  அவளைக் குற்றப்படுத்தும். ஸ்திரீயின் மனத்திற்குள்ளே அவளுடைய பாவத்தைக் குறித்த உணர்வு ஏற்படும்.


புருஷன் ஸ்திரீயை ஆண்டுகொள்வான்.   வேதபண்டிதர்கள் இந்த வாக்கியத்திற்கு ஆவிக்குரிய வியாக்கியானம் சொல்லுகிறார்கள். ஏவாள் தன்னுடைய பாவத்தினால், ஆவிக்குரிய விடுதலையை இழந்துபோகிறாள். பாவத்தின் விளைவாக,  ஏவாளின் சுயாதீன சித்தம் அடிமைப்படுத்தப்படுகிறது. 


தேவனாகிய கர்த்தர் ஆதாமை நோக்கி, ""பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்'' என்றும், ""அது  உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்'' என்றும் சொல்லுகிறார். பூமி செழிப்பில்லாமல் வறட்சியாய்ப் போகிறது. பாவமான ஆத்துமா  செழிப்பாயிருக்காது. அதிலே சந்தோஷமோ, சமாதானமோ இருக்காது. பாவம் செய்கிற ஆத்துமா ஆவிக்குரிய ஆசீர்வாதமில்லாமல் வறட்சியாயிருக்கும்.


மனுஷன் பாவம் செய்ததினால்,       அவன் தன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிக்கவேண்டியதாயிற்று. இந்த வாக்கியத்திற்கு  அதிக உழைப்பு, குறைந்த பலன் என்று பொருள். மனுஷனுடைய பாவத்தினால் அவனுடைய சரீரம் பலவீனமாகிறது. அந்த சரீரத்தினால்  அதிகமாக வேலை செய்ய முடியவில்லை.


நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து,  மனுக்குலத்தின் பாவத்தையும் சாபத்தையும்  பரிகரிப்பதற்காக இந்தப் பூமிக்கு வந்தார்.  அவர் தம்முடைய பாடுகளின் மூலமாகவும், சிலுவை மரணத்தின் மூலமாகவும் மனுக்குலத்திற்கு  இரட்சிப்பை உண்டுபண்ணினார். நம்முடைய முதலாவது பெற்றோர் இழந்துபோன மேன்மையை, கிறிஸ்துவானவர் நமக்கு மறுபடியும் மீட்டுத் தந்திருக்கிறார்.


மனுஷருடைய பாவத்தினால்  அவனுக்கு வேதனை உண்டாயிற்று.  கிறிஸ்துவானவரின் ஆத்தும வேதனையைப்பற்றி ஏசாயா  தீர்க்கதரிசனமாய்ச் சொல்லியிருக்கிறார். 


""அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசானாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்'' (ஏசா 53:11).


மனுஷன் அனுபவிக்க வேண்டிய எல்லா பாடுகளையும்  கிறிஸ்துவானவரும் அனுபவித்து, தம்முடைய ஆத்துமாவில்  வருத்தப்பட்டார். 


மனுஷன் தன்னுடைய பாவத்தினால் அடிமைத்தனத்திற்குட்பட வேண்டியதாயிற்று.  கிறிஸ்துவானவர் தம்மை நியாயப்பிரமாணத்திற்குட்படுத்தியிருக்கிறார்.  


""அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம். நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்'' (கலா 4:3#5).


பாவத்தினாலே மனுக்குலத்திற்குள் சாபம் பிரவேசித்திருக்கிறது.  கிறிஸ்துவானவர் நமக்காக சாபமானார். அவர் சாபமான மரணத்தை தம்மீது ஏற்றுக்கொண்டார்.  


""மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்'' (கலா 3:13). 


மனுஷனுடைய பாவத்தின்      நிமித்தமாய் இந்தப் பூமியானது முள்ளையும் குருக்கையும் முளைப்பிக்கிறது. கிறிஸ்துவானவர் நமக்காக தம்முடைய சிரசின்மீது முள் முடியை ஏற்றுக்கொண்டார். 


மனுஷனுடைய பாவத்தினால் அவனுடைய முகத்தில் வேர்வை உண்டாயிற்று. கிறிஸ்துவானவர் நமக்காக  இரத்தமும் வேர்வையும் சிந்தினார். 


பாவத்தினால்  மனுஷருக்கு வேதனையும் வருத்தமும் உண்டாயிற்று.  கிறிஸ்துவானவரும் நமக்காக வருத்தமும் வேதனையும் உள்ளவராயிருந்தார்.  அவருடைய ஆத்துமா வியாகுலப்பட்டது.


பாவத்தினால் மனுஷருக்கு மரணமுண்டாயிற்று.  கிறிஸ்துவனாவர் மரணபரியந்தம் பிதாவுக்கு கீழ்ப்படிந்தார். ஆதாமின் பாவத்தினால் மனுக்குலத்திற்கு சாபமும்,  வேதனையும், மரணமும் இன்னும் அநேக தீங்குகளும் உண்டாயிற்று. பாவத்தினால் உண்டான காயம் அதிகமாயிருக்கிறது.  தேவனாகிய கர்த்தரோ காயம் கட்டுகிறவராக இருக்கிறார். காயத்தின் அளவு எவ்வளவு அதிகமாயிருக்கிறதோ, அந்த அளவுக்கு  அதிகமாக தேவன் காயம் கட்டுகிறார். கிறிஸ்துவானவரே நம்முடைய காயங்களைக்கட்டுகிற பரமவைத்தியராயிருக்கிறார்.



You have to wait 15 seconds.

Download pdf

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.