ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 3:14-15 Tamil bible study pdf

 

ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 3:14-15


சபிக்கப்பட்டிருப்பாய் ஆதி 3:14,15


ஆதி 3:14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 


ஆதி 3:15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். 


தேவனாகிய கர்த்தர்  காலதாமதம்பண்ணாமல், உடனே  தம்முடைய நீதியான தீர்ப்பை  சொல்ல ஆரம்பிக்கிறார். சர்ப்பமே  பாவத்திற்கு காரணம். சாத்தானிடமிருந்துதான் பாவம் ஆரம்பமாயிற்று.  பிசாசானவன் ஏற்கெனவே தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணியவன். அவன் தேவனால் தண்டிக்கப்பட்டவன். 


தேவனாகிய கர்த்தர் சோதனைக்காரனை தண்டிக்கிறார்.  சர்ப்பத்தின்மீது மின்னலும் இடியும் தாக்கியதுபோல விழுகிறது. சர்ப்பமானது  சாத்தானுடைய கருவியாக செயல்பட்டு, ஆதாமையும் ஏவாளையும் வஞ்சித்தது. பிசாசின் கருவியாக செயல்படுகிறவர்கள்,  அவனுடைய தண்டனையிலும் பங்குபெறுவார்கள். சர்ப்பத்தின்மீது தேவனுடைய சாபம் வருகிறது. ""நீ சகல நாட்டு மிருகங்களிலும் காட்டு மிருகங்களிலும்  சபிக்கப்பட்டிருப்பாய்'' என்று தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தை பார்த்து சொல்லுகிறார். சர்ப்பம் தந்திரமானது. தந்திரமுள்ளது எல்லாமே மனுஷனுக்கு சாபமாயிருக்கும். தந்திரமான காரியங்களை செய்கிறவர்கள், மனுஷருக்கு அநேக தீங்குகளை செய்வார்கள். 


சர்ப்பம் ஆதாமையும் ஏவாளையும் வஞ்சித்தது. தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தை தண்டிக்கிறார். சர்ப்பத்திற்கும்,  மனுக்குலத்திற்கும் இடையே பகையை உண்டுபண்ணுகிறார். தேவன் தடைபண்ணின விருட்சத்தின் கனியைப் புசிக்குமாறு, சர்ப்பமானது  ஏவாளை சோதித்தது. ஏவாள் அந்தக் கனியைப் புசித்திருக்கக்கூடாது. சர்ப்பம் ஏவாளை சோதித்தினால் அவள் அந்தக் கனியைப் புசித்தாள்.  இதனால் தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்திற்கு தண்டனை கொடுக்கிறார்.  


சர்ப்பம்  எதைப் புசிக்காதோ,  அதைப் புசிக்குமாறு தேவன் அதற்கு தண்டனை கொடுக்கிறார். ""நீ  உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்'' என்று தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தை பார்த்து சொல்லுகிறார்.


இதற்கு முன்பு ஒருவேளை சர்ப்பம் வயிற்றினால் நகராமல் நேராக நடந்திருக்கலாம். மண்ணைத் தின்பதினால் சர்ப்பம் சிருஷ்டிகள் எல்லாவற்றிலும் தாழ்த்தப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.          (சங் 72:9; மீகா 7:17). ஆயிரம் வருஷ அரசாட்சியிலும் சர்ப்பம் சபிக்கப்பட்டதாகவே இருக்கும். (ஏசா 65:25).


சர்ப்பம் தந்திரமுள்ளது மாத்திரமல்ல அது விஷமுள்ளது. ஆகையினால் அது   மற்ற எல்லா ஜீவராசிகளின் பகைக்கு பாத்திரமுள்ளதாயிருக்கிறது. சர்ப்பம்  விஷமுள்ளது. அது மனுஷருக்கு தீங்கு செய்கிறது. சர்ப்பம் பூமியிலே ஊர்ந்து செல்லும் பிராணியாகயிருப்பதினால்,  அது மனுஷருடைய காலை கொத்தும், கடிக்கும், நசுக்கும். சர்ப்பத்தால் காலை மாத்திரமே கொத்த முடியும். அது மனுஷருடைய தலை உயரத்திற்கு ஏறிச்சென்று, அவனுடைய தலையைக் கொத்தாது. தரையில்  ஊறிப்போகிற சர்ப்பம், அதிலே நடந்துபோகிற மனுஷருடைய கால்களைக் கொத்தும். ஆகையினால் தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து, ""நீ ஸ்திரீயின் வித்தின் குதிங்காலை நசுக்குவாய்'' என்று சொல்லுகிறார். 


சர்ப்பம் குதிரையின் குதிங்காலையும் கடிக்கும். ""தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்'' (ஆதி 49:17).


தேவனாகிய கர்த்தர் மனுஷனுக்கும் சர்ப்பத்திற்கும் பகை உண்டாக்குகிறார். அவர்  சர்ப்பத்தைப் பார்த்து, ""உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்'' (ஆதி 3:15) என்று சொல்லுகிறார்.


இந்த வாக்கியம் இரண்டு நபர்களுக்குக் கூறப்படுகிறது. சர்ப்பத்தின் வித்தாகிய சர்ப்பத்திற்கும், சாத்தானுக்கும் ""உன் வித்து'' என்னும் வாக்கியம் பொருந்தும். ஆதி 3:14 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருப்பது சர்ப்பத்திற்கு மட்டும் பொருந்தும். சாத்தானுக்குப் பொருந்தாது. 


""அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்'' என்னும் இந்த வாக்கியம் சாத்தானையும், கிறிஸ்துவையும் மட்டும் குறிக்கும். வேதாகமத்தில் இதுபோன்று ஒரே      வாக்கியம் இரண்டு பேரைக் குறிக்குமாறு பல வசனங்களில் வந்திருக்கிறது. (ஏசா 14:12-14; எசே 28:11-17; மத் 16:22-23; மாற்கு 5:7-16; லூக்கா 4:33-35,41). ""எனக்கு பின்னாக போ சாத்தானே'' என்று இயேசு கூறுவது பேதுருவையும், சாத்தானையும் குறிக்கும்.   (மத் 16:22-23). தேவன் ஆதி 3:15 ஆவது வசனத்தில் சர்ப்பத்திடம் கூறினாலும் அது சாத்தானையும் குறிக்கிறது. 


அதுபோல ஏசா 14:12-14,              எசே 28:11-17 ஆகிய வசனங்களில் பாபிலோன், தீரு ஆகிய தேசங்களின் ராஜாக்களைப் பற்றிக் கூறப்பட்டிருந்தாலும், இந்த வசனங்கள் பிரதானமாகச் சாத்தானையே குறிக்கும். பாபிலோனுக்கும், தீருவிற்கும் சாத்தான் அதரிசனமான ராஜாவாக இருக்கிறான்.


 சர்ப்பங்களுக்கும், மனுஷருக்கும் இயற்கையாகவே பகை உள்ளது. அதுபோலவே சாத்தானுடைய பிள்ளைகளுக்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் இயற்கையாகவே  பகை இருக்கிறது. (மத் 10:34-38; யோவான் 15:18-19; யாக் 4:4; 1பேதுரு 4:12-19; 1யோவான் 2:15-17; 1யோவான் 3:8-12; 1யோவான் 4:1-6).


""அவள் வித்து'' என்பது ஸ்திரீயின் வித்தைக் குறிக்கும். புருஷனுடைய வித்தைக் குறிக்காது. ஆகையினால் இந்த வாக்கியம் மரியாள் மூலமாக வரும் தேவனுடைய குமாரனையே குறிக்கிறது. (ஆதி 3:15; ஏசா 7:14; ஏசா 9:6-7; ஏசா 11:1; மத் 1;  லூக்கா 1:31-35; யோவான் 1:14; ரோமர் 1:1-3; ரோமர் 8:3; கலா 3:16,19; கலா 4:4; பிலி 2:5-11; 1தீமோ 3:16; 2தீமோ 2:8; எபி 1:1-8; எபி 2:9-18; 1யோவான் 4:1-6; வெளி 5:5). 


இயேசு கிறிஸ்துவின் கன்னிகைப் பிறப்பு தேவனுடைய திட்டத்தில் மிகவும் முக்கியமான அம்சமாகும். இயேசு கிறிஸ்து கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்தது, அவருடைய மரணம், அவர் அடக்கம் பண்ணப்படுதல், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுதல் ஆகிய சத்தியங்களை ஒருவர் விசுவாசிக்கவில்லையென்றால் அவருக்கு இரட்சிப்பு இல்லை.            (1கொரி 15:1-8; 1யோவான் 4:1-6).


மேசியாவுக்கு  பரிசுத்த வேதாகமத்தில்  ஒரு சில உருவகப்பெயர்கள்  பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  ஆதியாகமம் புஸ்தகத்தில் மேசியாவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும்  உருவக பெயர்களின் விவரம் வருமாறு:  


    1. ஸ்திரீயின் வித்து  (ஆதி 3:15)

    2. ஆபிரகாமின் குமாரன்.  (ஆதி 22:18; மத் 1:1; லூக்கா 3:23-34;  கலா 3:16)

    3. ஈசாக்கின்  குமாரன். (ஆதி  21:12; ஆதி 26:4; மத் 1:2;             லூக்கா 3:23-34; ரோமர் 9:6-9)

    4. யாக்கோவின் குமாரன் (ஆதி 28:13-14; மத் 1:2; லூக்கா 3:23-34)

    5. சமாதான    கர்த்தர் # சைலோ (ஆதி 49:10)

    6. இஸ்ரவேலின் மேய்ப்பன்   (ஆதி 49:24; சக 13:7; யோவான் 10:1-18)

    7. இஸ்ரவேலின் கன்மலை  (ஆதி 49:24)


தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தை நோக்கி, ""அவர் உன் தலையை      நசுக்குவார்'' என்று சொல்லுகிறார். இயேசு கிறிஸ்து சாத்தானை நசுக்கி, அவனை நித்தியமாக தோற்கடிப்பார். (ரோமர் 16:20;  கலா 3:13; சங் 72:9; எபே 2:14-18; கொலோ 2:15; எபி 2:14; 1யோவான் 3:8; வெளி 11:15; வெளி 12:7-12; வெளி 19:11-20:10).


தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தை நோக்கி, ""நீ அவர்குதிங்காலை நசுக்குவாய்'' என்று சொல்லுகிறார். சாத்தான் இயேசு கிறிஸ்துவிற்கு ஒருசில தற்காலிகப் பாடுகளைக் கொண்டுவந்தான்.   (ஆதி 3:15; ஏசா 53; அப் 2:25-26; எபி 2:14-15; வெளி 1:18).


மனுஷனுக்கும்  சர்ப்பத்திற்கும் பகையிருந்தாலும், மனுஷன் சர்ப்பத்தை அழித்து வெற்றி பெறுவான். அவன் சர்ப்பத்தின் தலையை நசுக்குவான்.         தலை நசுக்கப்படும்போது சர்ப்பம் அழிந்துபோகும். மனுக்குலம் சர்ப்பத்தின் இனத்தையே அழிப்பதற்கு முயற்சிபண்ணும்.


தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்திற்கு தண்டனை கொடுக்கும்போது,  மனுஷனுக்கும் தண்டனை கொடுக்கிறார். ஆனாலும் தேவனுடைய வாக்குத்தத்தம், அவருடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பாயிருக்கிறது.   


"சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய்''   (சங் 91:13).


கிறிஸ்துவனாவர் தம்முடைய சீஷர்களை நோக்கி, ""சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்  (மாற் 16:18) என்று சொன்னார்.


சற்று நேரத்திற்கு முன்பு, ஏதேன் தோட்டத்திலே சர்ப்பமும் ஸ்திரீயானவளும்  சிநேகிதர்களாயிருந்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் மனம்விட்டு சாம்பாஷணை பண்ணினார்கள்.  தேவன் தடைபண்ணின விருட்சத்தின் கனியைக் குறித்து அவர்கள் அதிகமாய்ப் பேசினார்கள். அவர்கள் மத்தியிலே அற்புதமான உடன்படிக்கையும் ஏற்பட்டது.  ஆனால் இப்போதோ அவர்கள் இருவரும் சபிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலே பிரிவினையும் பகையும் உண்டாயிற்று. 


பாவமான சிநேகம் பகையில் முடியும்.  துன்மார்க்கத்தினால் இணைகிறவர்கள்,  நிலைத்திருக்கமாட்டார்கள். அவர்களுடைய இணைப்பு சீக்கிரத்தில் முடிந்துபோகும். சர்ப்பமும் ஸ்திரீயானவளும் சற்று நேரத்திற்கு முன்பு சிநேகமாயிருந்தார்கள். இப்போதோ  அவர்கள் பகையாயிருக்கிறார்கள்.


தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்திற்கு  தண்டனையைக் கொடுத்தாலும், அந்த தண்டனை சாத்தான்மீது கொடுக்கப்பட்ட தண்டனையாகவே இருக்கிறது.  சாத்தான் சர்ப்பத்தை தன்னுடைய கருவியாகப் பயன்படுத்தினான். ஏதேன் தோட்டத்திலே சாத்தானே சர்ப்பத்தின் ரூபத்தில் வந்தான். ஆகையினால்  ஏவாளை சர்ப்பம் வஞ்சித்தது என்று சொல்லும்போது, அவளை சாத்தான் வஞ்சித்தான் என்றும் சொல்லலாம். 


சாத்தான்  தேவனுக்கும், மனுஷனுக்கும் விரோதமான சத்துருவாயிருக்கிறான்.  அவன் நித்திய சத்துரு. தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைத் தண்டிக்கும்போது,  சாத்தானை தண்டிக்கிறார். சாத்தான் தேவனால் சபிக்கப்பட்டவன். ""நீ சபிக்கப்பட்டிருப்பாய்'' என்று தேவன் சர்ப்பத்தைப் பார்த்து சொல்லும்போது, ""லூசிபராகிய நீ கீழே விழுந்தாய்,  நீ சபிக்கப்பட்டிருப்பாய்'' என்று சொல்லுகிறார். 


லூசிபர் தன்னை தேவனுக்கு மேலாக உயர்த்தினான். அவன் தேவனுக்கு விரோதமாக தன் தலையை உயர்த்தி கலகம்பண்ணினான்.  ஆகையினால் தேவன் தம்முடைய நீதியினால் சாத்தானை தாழ்த்துகிறார். ""அவர் உன் தலையை நசுக்குவார்'' என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.  சாத்தான் தன்னுடைய தலையை தேவனுக்கு மேலாக உயர்த்தினான். சாத்தானுடைய தலை நசுக்கப்படுகிறது.


தேவனாகிய  கர்த்தர் சாத்தானை  தண்டிப்பதுபோல, தங்களை உயர்த்துகிற எல்லோரையுமே தண்டிக்கிறார். அவர்களைத் தாழ்த்துகிறார். இருதயத்தில்  பெருமையுள்ளவர்களை கர்த்தர் தாழ்த்துகிறார். இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களை கர்த்தர் உயர்த்துகிறார்.


சாத்தானுக்கும்  மனுக்குலத்திற்கும் இடையே தேவனாகிய கர்த்தர்  பிரிவினையையும், பகையையும் ஏற்படுத்துகிறார். சாத்தான்  மனுக்குலத்திலிருந்து விலக்கப்படுகிறான். அவன் ஒதுக்கி வைக்கப்படுகிறான்.  சாத்தானுக்கும் மனுக்குலத்திற்கும் இடையே பகையும் யுத்தமும் உண்டாகிறது. இந்தப் பகை முடிவு பெறுகிற பகையல்ல. இது  நித்திய பகை. 


பிரதான மீட்பர் சாத்தானை அழித்துப்போடுவார். தேவனாகிய கர்த்தர்  பிசாசாகிய சர்ப்பத்தைப் பார்த்து, ""அவர் உன் தலையை நசுக்குவார்'' என்று சொன்னார்.  இந்த வாக்கியத்திற்கு ""பிரதான மீட்பர் சாத்தானின் தலையை நசுக்குவார்'' என்று பொருள். மீட்பருக்கு முன்பாக சாத்தானுடைய தந்திரம் பலிக்காது.  சாத்தானுடைய அதிகாரமும் வல்லமையும் மீட்பருக்கு முன்பாக ஒன்றுமில்லாமல் போகும். மீட்பர் சாத்தானின் தலையை நசுக்குவதினால் அவன் நசுக்கப்பட்டு அழிந்துபோவான்.


தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து, ""உனக்கும் ஸ்திரீக்கும்,  உன் வித்திற்கும் அவள் வித்திற்கும் பகை உண்டாக்குவேன்'' என்று சொல்லுகிறார். மனுஷர் மத்தியிலே தேவனுடைய ராஜ்யத்திற்கும், பிசாசின் ராஜ்யத்திற்கும் பகை உண்டாயிற்று. இந்தப் பகை முடிவு பெறுகிற பகையல்ல. இது தற்காலிகமான பகையுமல்ல. இது நிரந்தர பகையாகவும், நித்திய பகையாகவும் இருக்கிறது.


தேவன் மனுஷருக்கும் சாத்தானுக்கும் பகையை ஏற்படுத்தியிருக்கிறார். இந்தப் பகையின் விளைவாக தேவனுடைய   ஜனத்தின் இருதயங்களிலே ஒரு நிரந்தர போராட்டம் உண்டாயிருக்கிறது. விசுவாசிகளின் இருதயத்தில் தேவனுடைய கிருபைக்கும்,  அவர்களுடைய பாவத்திற்கும் இடையே தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் பிரபஞ்சத்தில், துன்மார்க்கருக்கும், கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கும் இடையே  நித்தியமான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  


ஏதேன் தோட்டத்திலே தேவனாகிய கர்த்தர், மீட்பராகிய  கிறிஸ்துவைக்குறித்து தம்முடைய கிருபையுள்ள வாக்குத்தத்ததை வெளிப்படுத்துகிறார். விழுந்துபோன மனுக்குலத்திற்கு  கிறிஸ்துவானவர் மீட்பராயிருப்பார். கிறிஸ்துவானவர் மனுக்குலத்தை சாத்தானுடைய பிடியிலிருந்தும் வல்லமையிலிருந்தும் விடுதலைபண்ணுவார். 


நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாமுக்கும் ஏவாளுக்கும்,  நம்பிக்கையின் கதவு திறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இரட்சகர் மூலமாக வரும் மீட்பை           தங்கள் விசுவாசக்கண்களால் நோக்கிப் பார்க்கிறார்கள். சுவிசேஷத்தின் காலம் ஏதேன் தோட்டத்திலேயே ஆரம்பமாயிற்று. தேவனாகிய கர்த்தர் காயம்கட்டுகிறவராகயிருக்கிறார்.  இது அவருடைய கிருபை. மனுக்குலத்திற்கு காயம் ஏற்பட்டபோதே, தேவனாகிய கர்த்தர், அந்தக் காயத்தை திறந்து, அந்தக் காயத்தைக் குணப்படுத்துவதற்கு காயம் கட்டுகிறார். 


ஏதேன் தோட்டத்திலே இரட்சராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய வாக்குத்தத்தத்தை தேவனாகிய          கர்த்தர் வெளிப்படுத்துகிறார். அவர் கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லும்போது, ""அவள் வித்து'' என்று சொல்லுகிறார். கிறிஸ்துவானவர் அந்த  ஸ்திரீயின் வித்தாகயிருப்பார். ஆகையினால்தான் லூக்கா எழுதின சுவிசேஷத்தில், இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாற்றைப்பற்றிச் சொல்லும்போது,  அவருடைய வம்சவரலாறு ""ஆதாமின் குமாரன்'' என்று ஆரம்பமாகிறது.  


பிசாசானவன் ஏதேன் தோட்டத்திலே  ஸ்திரீயை வஞ்சித்தான். தேவனாகிய கர்த்தரோ, ""அவள் வித்து'' என்று சொல்லி, ஸ்திரீயைக் கனப்படுத்துகிறார்.  ஆதாமும் அந்த ஸ்திரீயை குற்றப்படுத்தினார். தன்னுடைய பாவத்திற்கு ஸ்திரீயானவளும் காரணம் என்று சொன்னார். ஆனாலும் தேவனாகிய கர்த்தர் தம்முடைய கிருபையை இங்கு வெளிப்படுத்துகிறார். 


ஏதேன் தோட்டத்திலே, ஸ்திரீயானவளே, முதலாவதாக அந்த விருட்சத்தின் கனியைப் புசித்து பாவம் செய்தாள். அவளே தேவனுடைய கற்பனைக்கு கீழ்ப்படியாமல் முதலாவதாக மீறினாள். ஆனாலும் பிள்ளை பேற்றின்  மூலமாக, அவளுக்கு இரட்சிப்பு உண்டாகும். 


""அப்படியிருந்தும், தெளிந்த  புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்'' (1தீமோ 2:15). 


வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட  வித்து, ஸ்திரீயினிடத்திலிருந்து பிறக்கும்.       இரட்சகர் ""ஸ்திரீயின் வித்து'' என்று அழைக்கப்படுகிறார். ""ஸ்திரீயின் வித்து'' என்பது, ஸ்திரீயின் வித்தை மாத்திரமே குறிக்கும். ஆகையினால் ஸ்திரீயின் வித்தானது, கன்னிகையின் வித்தாகயிருக்கிறது.


தேவனாகிய கர்த்தர், மீட்பருடைய பாடுகளையும் மரணத்தையும் இங்கு முன்னறிவிக்கிறார்.  தேவன் சர்ப்பத்தை நோக்கி, ""நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்'' என்று சொல்லுகிறார். சாத்தான் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவினுடைய குதிங்காலை நசுக்குவான்.  அவன் இயேசுகிறிஸ்துவினுடைய மாம்ச சரீரத்தை நசுக்குவான்.


இயேசுகிறிஸ்து வனாந்தரத்திலே உபவாசம்பண்ணியபோது சாத்தான் அவரை பாவம் செய்யுமாறு சோதித்தான்.  கிறிஸ்துவானவர் வியாகுலப்பட்டு ஜெபித்தபோது, சாத்தானே அவருக்கு வியாகுலத்தைக் கொடுத்தான் என்று வேதபண்டிதர்களில் சிலர் விளக்கம் சொல்லுகிறார்கள்.  கிறிஸ்துவானவருக்கு வியாகுலம் வந்தால், அவர் சிலுவையில் மரிக்காமல் தப்பித்துக்கொள்வார் என்று சாத்தான் திட்டமிட்டான். கிறிஸ்துவானவர் இரத்தம் சிந்தவில்லையென்றால் மனுக்குலத்திற்கு பாவமன்னிப்பு இல்லை. 


 யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்தான். பேதுரு  கிறிஸ்துவானவரை மறுதலித்தார். பிரதான ஆசாரியர்கள் இயேசுகிறிஸ்துவைத் துன்பப்படுத்தினார்கள்.  கிறிஸ்துவுக்கு விரோதமாகக் குற்றம் சொல்ல கள்ள சாட்சிகளை ஏற்படுத்தினார்கள். பிலாத்துவும் இயேசுகிறிஸ்துவை சிலுவையில்  அறையுமாறு ஒப்புக்கொடுத்தான். இவையெல்லாம் சாத்தானுடைய தந்திரமான வேலைகள். இரட்சகருடைய இரட்சிப்பின் திட்டத்தை அழிக்கவேண்டும் என்பது சாத்தானுடைய நோக்கம்.


கிறிஸ்துவானவர் சிலுவையிலே தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார்.  கிறிஸ்துவை அழிக்கவேண்டும் என்பது சாத்தானுடைய நோக்கம். ஆனால் சாத்தான் நினைத்தது நிறைவேறவில்லை.  கிறிஸ்துவானவர் சிலுவையிலே மரித்ததன் மூலமாக, அவர் சாத்தானையும், மரணத்தின் வல்லமையையும் அழித்தார். 


""ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது           மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்'' (எபி 2:14,15). 


தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்திலே, ""நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்''  என்று சர்ப்பத்திடம் சொன்னார். இந்த வாக்கியத்திற்கு சாத்தான் இயேசுகிறிஸ்துவின் குதிங்காலை நசுக்குவான் என்று பொருள்.  


நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து,  கல்வாரி சிலுவையில் அறையப்பட்டபோது, அவருடைய கால்களில் ஆணிகள் அறையப்பட்டது. கிறிஸ்துவானவர் சிலுவையில் அனுபவித்த பாடுகளை,  அவருடைய பரிசுத்தவான்கள், அவருடைய நாமத்தினிமித்தமாக இன்றும் அனுபவித்து வருகிறார்கள். பிசாசானவன் பரிசுத்தவான்களை சோதிக்கிறான்.  அவர்களைத் துன்பப்படுத்துகிறான்.  


சாத்தான்  கர்த்தருடைய பிள்ளைகளை  சிறைச்சாலைகளில் அடைக்கிறான்.  அவர்களில் சிலரை கொன்றும் போடுகிறான்.  கர்த்தருடைய பரிசுத்தவான்கள், கிறிஸ்துவின் நிமித்தமாக பாடுகளை அனுபவிக்கிறார்கள். ஏதேன் தோட்டத்திலே  தேவனாகிய கர்த்தர் சொன்ன பிரகாரமாக, சாத்தான் அவர்களுடைய குதிங்காலை நசுக்குகிறான். 


சாத்தான் இரட்சகருடைய குதிங்காலை பூமியிலே  நசுக்கினாலும், அவருடைய தலை பரலோகத்திலே பாதுகாப்பாயிருக்கிறது.  கிறிஸ்துவானவருக்கு சாத்தான்மீது வெற்றி உண்டாயிற்று. சாத்தானுக்கும்  ஸ்திரீக்கும் பகை உண்டாயிற்று. சாத்தானுடைய வித்திற்கும் ஸ்திரீயின் வித்திற்கும் பகை உண்டாயிற்று.  ஆனாலும் ஸ்திரீயின் வித்தானவர் சாத்தானுடைய தலையை நசுக்கி வெற்றி சிறந்தார்.


""நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவி-ராதபடிக்கு எடுத்து, சிலுவையின் மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றி சிறந்தார்'' (கொலோ 2:14,15). 


இரட்சகராகிய இயேசுகிறிஸ்து  சாத்தானுடைய தலையை நசுக்கும்போது,  அவனுடைய தந்திரங்களையும், அவனுடைய  அதிகாரங்களையும் முற்றிலுமாய் நசுக்கிப்போடுகிறார். இதனால் சாத்தானுடைய  ராஜ்யம் அழிக்கப்படுகிறது. அவனுடைய திட்டங்கள் எல்லாம் நிர்மூலமாக்கப்படுகிறது.   கிறிஸ்துவானவர் சாத்தானுடைய சோதனைகளையும் ஜெயிக்கிறார். கிறிஸ்துவின் மரணத்தினால் சாத்தான்  நிர்மூலமாகிறான். சாத்தானுடைய ராஜ்யம் மொத்தமாய் அழிந்துபோகிறது.  


ஸ்திரீயின் வித்தானவர் சர்ப்பத்தின்  தலையை நசுக்கும்போது, அந்த மிருகம் குணப்படுத்த முடியாதபடி அழிந்துபோகும். தலை நசுங்கிப்போனால் சர்ப்பத்திற்கு ஜீவன் இருக்காது. கிறிஸ்துவானவர் சாத்தானுடைய  தலையை நசுக்கி, அவனை முற்றிலுமாய் அழித்துப்போடுகிறார்.



You have to wait 15 seconds.

Download pdf

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.