ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 3:22-24 Tamil bible study pdf

 

ஆதியாகமம் வேத ஆராய்ச்சி 3:22-24


ஜீவவிருட்சம்  ஆதி 3:22-24


ஆதி 3:22. பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, 


ஆதி 3:23. அவன் எடுக்கப்பட்ட       மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்தி-ருந்து அனுப்பிவிட்டார். 


ஆதி 3:24. அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.


ஆதாமும் ஏவாளும் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்திருக்கிறார்கள். பாவம் செய்த  அவர்கள்மீது தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு காலதாமதமில்லாமல் உடனே வருகிறது. 


ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு முன்பாகவும், அவருடைய பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் மகிமை மங்கியவர்களாகவும்,  அவமானம் நிரம்பியவர்களாகவும் நிற்கிறார்கள். 


தேவன் அவர்களைப் பார்த்து, ""இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்'' (ஆதி 3:22) என்று சொல்லுகிறார். நல்ல தேவன் அவர்களை  உருவாக்கியிருக்கிறார். அவர்கள் நன்றாயிருக்கவேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம்.


தேவனாகிய கர்த்தர் தம்முடைய வார்த்தையின்  மூலமாக அவர்களுடைய பாவங்களை அவர்களுக்கு உணர்த்துகிறார்.  அவர்களைத் தாழ்த்துகிறார். அவர்கள் தங்கள் பாவத்தையும் மதியீனத்தையும் உணர்ந்து,  அதற்காக அவர்களை மனம் வருந்த வைக்கிறார். அவர்களுடைய முகம் அவமானத்தால் மூடப்பட்டிருக்கிறது. 


""கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்''  (சங் 83:16). 


ஆதாமும் ஏவாளும் குழப்பத்திலிருக்கிறார்கள். தேவனே  அவர்களுடைய பாவங்களினிமித்தமாக அவர்களுக்கு இந்தக் குழப்பத்தைக் கொடுத்திருக்கிறார். அவர்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம்.


ஆதாமும் ஏவாளும் பாவம் செய்திருந்தாலும்,  அவர்கள் இருவரும் இன்னும் ஏதேன் தோட்டத்திற்குள்ளேயே இருக்கிறார்கள்.  தேவனாகிய கர்த்தரோ அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து தம்முடைய நீதியினால் வெளியே அனுப்பிவிடுகிறார். ஏதேன் தோட்டத்தின் வழியையும் அடைத்துவிடுகிறார்.  


தேவன் ஆதாமையும் ஏவாளையும்  ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி,  அதன் வழியை அடைப்பதற்கு ஒரு காரணமுள்ளது. அவர்கள் இருவரும் தேவனால் தடைபண்ணப்பட்ட  நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்தார்கள். இது அவர்களுடைய பாவம்.  அவர்கள் இப்பொழுது தங்கள் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து புசித்து விடக்கூடாது என்று தேவன் சித்தங்கொண்டிருக்கிறார்.  அவர்கள் ஜீவவிருட்சத்தின் கனியைப் புசித்தால் என்றைக்கும் உயிரோடிருப்பார்கள். 


ஜீவவிருட்சத்தின் கனியைப் புசித்தால் என்றைக்கும் உயிரோடு இருக்கலாம். மனுஷன் பாவம் செய்யவில்லை என்றால், அவனுக்கு மரணம் வந்திருக்காது. அவன் என்றைக்கும் உயிரோடிருந்திருப்பான். இப்பொழுது மனுஷன் தன்னுடைய நித்திய ஜீவனை இழந்து விட்டான். இயேசு கிறிஸ்து மனுஷனுக்கு மறுபடியும் நித்திய ஜீவனைத் தருகிறார். (2தீமோ  1:10). ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கிறவன் நல்லவனாக இருந்தாலும், தீயவனாக இருந்தாலும் சரீரப்பிரகாரமாக மரிக்காமல் நித்திய காலமாக ஜீவிப்பான். (ஆதி 3:22-24, ஆதி 2:9, வெளி 22:1-3)


ஆதாமும் ஏவாளும் ஜீவவிருட்சத்தின் கனியை பறித்து புசிக்கக்கூடாது என்பதற்காக தேவனாகிய கர்த்தர்   ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிடுகிறார். ஆதாம் ஏதேன் தோட்டத்திற்கு வெளியே அனுப்பப்பட்டதினால்,  அவரால் இனிமேல் முன்புபோல தேவனோடு நெருங்கிய ஐக்கியத்திலிருக்க முடியாது. ஆதாம் தேவனுடைய சமுகத்திலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்.  


ஆதாம் மாத்திரமல்ல, ஆதாமின் சந்ததியில் வருகிற குற்றமுள்ள மனுக்குலத்தார் எல்லோரும் தேவனுடைய சந்நிதியில் வரமுடியாதவாறு விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  அவர்களால் தேவனுடைய ஏதேன் தோட்டத்தின் ஆசீர்வாதத்தையும், அதன் மகிமையையும் அனுபவிக்க முடியாது. 


ஆதாம் பாவம் செய்ததினால்,  அவருக்கு தேவனோடிருந்த ஐக்கியமும், நெருக்கமும் குறைந்துபோயிற்று. தேவன் ஆதாமோடு பேசுவதும்,   ஆதாம் தேவனோடு பேசுவதும் குறைந்துபோயிற்று. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நெருங்கிய ஐக்கியம் முறிந்துபோயிற்று.


தேவனாகிய கர்த்தர் ஆதாமை இந்த உலகத்திலிருந்தே துரத்திவிடவில்லை. அவர் ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்துதான் துரத்திவிடுகிறார். 


""அவன் வெளிச்சத்தி-ருந்து       இருளில் துரத்திவிடப்பட்டு,   பூலோகத்தி-ருந்து தள்ளுண்டுபோவான்'' (யோபு 18:18).


தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு      ஒரு வேலையைக் கொடுக்கிறார்.   ஆதாம் இந்த பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர். தான் எடுக்கப்பட்ட மண்ணை  பண்படுத்துவதற்காக, தேவனாகிய கர்த்தர் ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிடுகிறார்.  


மனுஷன் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டவன். மனுஷனுடைய சரீரத்தில் இரும்பு, உப்பு, அயோடின், சுண்ணாம்பு, கால்சியம், சர்க்கரை போன்ற பல வேதியியல் பொருட்கள் உள்ளன.


தேவனாகிய கர்த்தர் ஆதாமை உபத்திரவப்படுத்தவில்லை.  அவர் ஆதாமை வேதனையை அனுபவிக்கும் ஸ்தலத்திற்கு அனுப்பவில்லை. அவரை  வேலை செய்யும் ஸ்தலத்திற்குத்தான் அனுப்பியிருக்கிறார். தேவனாகிய கர்த்தர் ஆதாமை  மண்ணுக்குத்தான் அனுப்பியிருக்கிறார். அவர் ஆதாமை கல்லறைக்கு அனுப்பவில்லை. தேவனாகிய கர்த்தர் ஆதாமை  ஒரு புதைகுழிக்கோ அல்லது சிறைச்சாலைக்கோ அனுப்பவில்லை. அவரை வேலை செய்யும் ஸ்தலத்திற்குத்தான் அனுப்பியிருக்கிறார்.  


ஆதாம் நிலத்தை பண்படுத்தவேண்டும். அதை உழவேண்டும். ஆதாமை சங்கிலிகளால் கட்டி அவரை சித்திரவதை செய்யவேண்டும் என்பதற்காக தேவன் அவரை அனுப்பவில்லை.  தான் எடுக்கப்பட்ட மண்ணை பண்படுத்துவதற்காகவே தேவன் அவரை அனுப்பியிருக்கிறார்.


ஆதாம் மண்ணை பண்படுத்தும்போது அவருக்கு சம்பளம் கொடுக்கப்படும்.  அந்த மண்ணில் முளைக்கும் விருட்சத்தின் கனிகளைப் புசிப்பதே, ஆதாமின் வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம். ஆதாம் தான் எடுக்கப்பட்ட மண்ணை பண்படுத்தும்போது,  அந்த மண் பண்படுத்தப்பட்ட நல்ல மண்ணாகயிருக்கும். அந்த மண் ஆதாமைத் தாழ்மைப்படுத்தும். ஆதாமும் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டவர் என்பதையும், அவர் மண்ணுக்குத் திரும்புவார் என்பதையும் அந்த மண் அவருக்கு நினைவுபடுத்தும். 


தேவனாகிய கர்த்தர் நம்முடைய முதல் பெற்றோரை  ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றிவிடுகிறார். அவர்கள் இருவரும்  பாவமில்லாத, கள்ளம் கபடமில்லாத நிலமையிலிருந்தவர்கள். ஆனால் அவர்களோ  தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்து, தங்களுடைய மகிமையையும், மேன்மையையும் இழந்தவர்களாயிருக்கிறார்கள்.


தேவன் மனுக்குலத்தின் முதலாவது பெற்றோரை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றினாலும், அவர் அவர்களை  தம்முடைய நினைவுகளிலிருந்து வெளியேற்றவில்லை. அவர்கள் இருவரும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தாலும், தேவனாகிய கர்த்தர்  அவர்கள்மீது இன்னும் அன்பாகவும், கரிசனையாகவும் இருக்கிறார். அவர்களைக் குறித்து நல்ல திட்டங்களை வைத்திருக்கிறார். தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு மறுபடியும்  புதிய உடன்படிக்கையைக் கொடுத்து அவர்களை மறுபடியும் தம்மோடு சேர்த்துக்கொள்ள சித்தமுள்ளவராயிருக்கிறார். 


ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதாம், மறுபடியும்  அந்தத் தோட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கு வாய்ப்பில்லை. ஆதாம்  ஏதேன் தோட்டத்திற்குள் மறுபடியும் பிரவேசிப்பதற்கான எல்லா நம்பிக்கைகளும்  வாய்ப்புக்களும் அடைக்கப்பட்டிருக்கிறது.  


தேவனாகிய கர்த்தர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைக்கிறார் (ஆதி 3:24). 


கேருபீன்கள்  தேவனுடைய சேனையிலுள்ளவர்கள்.  அவர்கள் கைகளில் சுடரொளி பட்டயம் இருக்கிறது. ஆதாமால் கேருபீன்களை எதிர்த்து நிற்கமுடியாது.  அவர்களை மீறி ஆதாமால் ஏதேன் தோட்த்திற்குள் பிரவேசிக்க முடியாது. ஆதாம் மறுபடியும் ஏதேன் தோட்டத்திற்குள் பிரவேசித்து,  ஜீவவிருட்சத்தின் கனியை திருடி புசித்துவிடக்கூடாது. இதற்காக தேவனாகிய கர்த்தர் ஜீவவிருட்சத்திற்குப் போகும் வழிக்கு காவல் வைக்கிறார். 


தேவனாகிய கர்த்தர் இப்போது  ஆதாமின்மீது பிரியமாயில்லை. கேருபீன்கள்  ஆதாமுக்கு விரோதமாக யுத்தம்பண்ண ஆயத்தமாயிருக்கிறார்கள்.  ஆதாமுக்கு தேவனுடைய பரமசேனையோடு சமாதானமில்லை. ஆதாம் கர்த்தருக்கும்,  கர்த்தருடைய சேனைக்கும் விரோதமாக சத்துருவாயிருக்கிறார். 


ஆதாம் ஏதேன் தோட்டத்திலிருந்தபோது, தேவன் தடைபண்ணின விருட்சத்தின் கனியை   அவர் புசிப்பதற்கு முன்பு, ஜீவவிருட்சத்திற்குப்போகும் வழி அடைக்கப்பட்டிருக்கவில்லை. அது அவருக்கு திறந்த வழியாகவே இருந்தது.  தேவனாகிய கர்த்தர் ஆதாமை ஜீவவிருட்சத்திற்கு போகும் வழியின் மூலமாக அழைத்து வந்து, அவரை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். அப்போது ஆதாமிடத்தில் பாவமில்லை. கபடமில்லை. 


ஆனால் இப்போதோ ஆதாம்  தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறார். அவருக்கு  ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிப்பதினால் கிடைக்கும் ஆசீர்வாதம் தடைபண்ணப்பட்டிருக்கிறது.  


தேவன் ஆதாமோடு பண்ணியிருந்த முதலாவது உடன்படிக்கை முற்றிலுமாய் முறிந்துபோயிற்று.  தேவன் தம்முடைய உடன்படிக்கையின் பிரகாரம் நம்மை நியாயந்தீர்த்தால், நாம் எல்லோருமே  தேவனுடைய பார்வையில் குற்றவாளிகளாயிருப்போம். நம்மால் தேவனுடைய நீதியான தண்டனைக்கு தப்பிக்க முடியாது. 


ஆதாம் தன்னுடைய சுயநீதியினால்  தேவனோடு ஒப்புரவாக முடியாது. ஆதாம்  தன்னுடைய சுயபரிசுத்தத்தினால் ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியாது. வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவித்தின்  மூலமாகவே மனுக்குலத்திற்கு தேவனோடு ஒப்புவாதல் உண்டாகும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட அந்த வித்தாகயிருக்கிறார். 


ஸ்திரீயின் வித்தாகிய இயேசுகிறிஸ்துவின்  மூலமாக சுடரொளி பட்டயம் அகற்றப்படும். மனுக்குலத்திற்கு தேவனோடும், அவருடைய தூதர்களோடும்   ஒப்புரவாதல் உண்டாகும். தேவனுடைய மகாபரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பதற்கு ஜீவனுள்ள புதிய பாதை திறக்கப்படும். ஜீவனுக்குப்போகிற இந்தப் பாதை இயேசுகிறிஸ்துவின் மூலமாக உண்டாகும். கிறிஸ்துவானவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்.



You have to wait 15 seconds.

Download pdf

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.