சங்கீதம் 26 விளக்கம்
(தாவீதின் சங்கீதம்.)
பொருளடக்கம்
1. முதலாவது ஜெபமும் சாட்சியும் சங்கீதம் - ஒன்பது விண்ணப்பங்கள், பத்துவிதமான சாட்சிகள், எட்டு விதமான பொறுத்தனைகள் - (26:1-12)
தாவீது தன்னுடைய மனச்சாட்சியினால் தன்னைச் சோதித்துப் பார்க்கிறார். கர்த்தரும் தன்னைச் சோதித்துப் பார்க்குமாறு விண்ணப்பம்பண்ணுகிறார். தாவீது தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறார் (சங் 26:1,2). தன்னுடைய உத்தமத்திற்கு ஆதாரங்களையும் சொல்லுகிறார். கர்த்தருடைய கிருபை தாவீதின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது (சங் 26:3). தாவீது பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறார் (சங் 26:4,5). தாவீது தேவனுடைய பிரமாணங்களின்மீது வாஞ்சையாயிருக்கிறார் (சங் 26:6-8).
தாவீது தன்னுடைய உத்தமத்தைப்பற்றி சாட்சியாகச் சொல்லிவிட்டு, தனக்காக கர்த்தரிடத்தில் விண்ணப்பமும்பண்ணுகிறார். பாவிகளுக்கும் இரத்தப்பிரியருக்கும் அழிவு வரும் (சங் 26:9,10). தாவீதுக்கு கர்த்தருடைய இரக்கம் தேவைப்படுகிறது (சங் 26:11,12).
தாவீதின் உத்தமம் சங் 26 : 1-5
நான் என் உத்தமத்திலே நடக்கிறேன் (26:1)
கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை (சங் 26:1).
சவுல் தாவீதைத் துன்பப்படுத்துகிறார். தாவீதைக் கொன்றுபோடுவதற்கு சவுல் முயற்சி செய்கிறார். இப்படிப்பட்ட நெருக்கமான காலத்தில் தாவீது இந்த சங்கீதத்தை எழுதியிருக்கவேண்டும். சவுல் இரத்தப்பிரியராகயிருக்கிறார். அவர் தாவீதின்மீது வீண்பழியை சுமத்துகிறார். உண்மையில்லாத குற்றச்சாட்டுக்களைச் சொல்லுகிறார். தாவீதுக்கு அவருடைய சத்துருக்கள் மூலமாய் நிந்தையும் வேதனையும் வந்திருக்கிறது. பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தாவீது கிறிஸ்துவுக்கு அடையாளமாகயிருக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்கும் மனுஷர் மூலமாய் நிந்தைகளும், வேதனைகளும், உபத்திரவங்களும் உண்டாயிற்று.
தாவீது நெருக்கப்பட்டாலும், அவர் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறார். கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய உத்தமத்தைச் சாட்சியாகச் சொல்லுகிறார். தாவீதின் வார்த்தைகளும் கிரியைகளும் ஒத்துப்போகிறது. அவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதாகயிருக்கிறது. தாவீதின் சத்துருக்களோ தாறுமாறாகப் பேசுகிறார்கள். தங்கள் பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் ஜீவிக்கிறார்கள்.
கர்த்தர் நீதியுள்ள நியாயாதிபதி. தாவீதினிடத்தில் ஒரு அநீதியும் இல்லை. அவர் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறார். தாவீது தன்னுடைய உத்தமத்தை நோக்கிப் பார்த்து, ""கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும்'' என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார். கர்த்தருடைய சமுகத்தில் தனக்கு நீதி கிடைக்கும் என்று தாவீது எதிபார்க்கிறார்.
தாவீது கர்த்தரை நம்பியிருக்கிறார். ஆகையினால் அவர் தள்ளாடுவதில்லை. கர்த்தரை நம்புகிறவர்கள் ஒருபோதும் தள்ளாடமாட்டார்கள். கர்த்தர் தம்மை நம்புகிறவர்களின் நடைகளை ஸ்திரப்படுத்துவார். அவர்களுடைய கால்களை தள்ளாடவிடமாட்டார். கர்த்தரை விசுவாசிக்கிறவர்கள் தங்களுடைய விசுவாசத்திலிருந்து பின்வாங்கிப் போய்விடக்கூடாது. கர்த்தரைப் பற்றும் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்கவேண்டும்.
தன்னிடத்தில் தப்பிதம் இருக்குமென்றால், கர்த்தர் தன்னை நீதியாய் விசாரித்து, தமக்குச் சித்தமானபடி தனக்குத் தண்டனை கொடுக்கட்டும் என்று தாவீது தன்னைக் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார். ""கர்த்தாவே என்னை நியாயம் விசாரியும்'' என்று நீதியுள்ள நியாயாதிபதியாகியகர்த்தரிடத்தில் சொல்லுகிறார். தாவீதின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாய்த் தூஷணமான குற்றச்சாட்டுக்களைச் சொல்லுகிறார்கள். கர்த்தர் தாமே தனக்கும், தன்னுடைய சத்துருக்களுக்கும் இடையே நின்று நியாயம் விசாரிக்கட்டும் என்று தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரணைக்காக நிற்கிறார்.
தாவீது தன்னைத்தானே நியாயம் விசாரித்துக்கொள்ள முடியாது. தாவீதுக்கு விரோதமாக சத்துருக்கள் குற்றச்சாட்டுக்களைச் சொல்லியிருக்கிறார்கள். தாவீதினிடத்தில் ஒரு குற்றமுமில்லை. அவர் தன்னுடைய உத்தமத்தில் நடக்கிறார். ஆனாலும் மனுஷருடைய நீதி தேவனுக்கு முன்பாக நிலைத்து நிற்காது.
கர்த்தர் தம்முடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் நம்மை நியாயம் விசாரிக்கவேண்டும். கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிக்கவேண்டும். கர்த்தரிடமிருந்து நாம் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளவில்லையென்றால், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு வேறு உபாயம் எதுவுமில்லை. நம்முடைய பாவங்களை நாமே மன்னித்துக்கொண்டு, நம்மை நாமே நீதிமான்கள் என்று சொல்லிக்கொள்வோமென்றால், நாம் மாய்மாலக்காரர்களாயிருப்போம்.
கர்த்தருடைய சமுகத்தில் நம்முடைய உண்மையையும், உத்தமத்தையும் சாட்சியாக எடுத்துச் சொல்லலாம். நம்முடைய உத்தமத்திற்கு நம்முடைய மனச்சாட்சி சாட்சி சொல்லவேண்டும். கர்த்தரும் நம்முடைய உத்தமத்திற்கு சாட்சி சொல்லுவார் என்னும் நம்பிக்கை நமக்குள் இருக்கவேண்டும். அப்போதுதான் தாவீதைப்போல, நம்மாலும், ""கர்த்தாவே என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்'' என்று விசுவாசத்தோடு சொல்ல முடியும்.
நம்முடைய மனச்சாட்சியே நம்மைக் குற்றப்படுத்தும்போது, கர்த்தருக்கு முன்பாக நம்மைக் குறித்து வீணாக பெருமை பாராட்டக்கூடாது. பெருமையுள்ளவனுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவனுக்கோ கிருபை கொடுக்கிறார். நம்மிடத்தில் பாவம் உண்டு என்று நம்முடைய மனச்சாட்சி சொல்லும்போது, கர்த்தருக்கு முன்பாக நம்முடைய பாவங்களை ஒப்புக்கொள்ளவேண்டும். மனந்திரும்ப வேண்டும். நம்முடைய பாவங்களை தயவாய் மன்னிக்குமாறு கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும். நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு கர்த்தர் கிருபை நிரம்பியவர்.
என்னைப் பரீட்சித்துச் சோதித்துப்பாரும் (26:2)
கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும் (சங் 26:2).
பொன்னை புடமிட்டு சோதித்துப் பார்ப்பதுபோல, கர்த்தர் தன்னையும் சோதித்துப்பார்க்கட்டும் என்று தாவீது தன்னை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார். ""கர்த்தாவே என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்'' என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார். தங்கத்தை உருக்கிப் புடமிடும்போதுதான், அது சொக்கத்தங்கமா இல்லையா என்பது தெரியவரும். தாவீது தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறார். அவர் கர்த்தரை நம்பியிருக்கிறார்.
தன்னுடைய உத்தமத்தைப்பற்றி தாவீது கர்த்தருக்கு முன்பாக சாட்சி சொல்லுகிறார். கர்த்தர் தாமே தாவீதை நியாயம் விசாரிக்கவேண்டும். கர்த்தர் தாமே அவரை பரீட்சித்து, சோதித்துப் பார்க்கவேண்டும். அப்போதுதான் தாவீதின் உண்மையான சுபாவம் தெரியவரும். தாவீது கர்த்தரிடத்தில் பயபக்தியாயிருக்கிறார். தன்னைப்பற்றி தாவீதுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகையினால் விசுவாசத்தோடு, ""கர்த்தாவே, என் உள்ளிந்திரியங்களையும், என் இருதயத்தையும் புடமிட்டுப் பாரும்'' என்று சொல்லுகிறார். மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். கர்த்தரோ நம்முடைய இருதயத்தைப் பார்க்கிறார். கர்த்தருடைய கண்கள் நம்முடைய இருதயத்தை ஊடுருவிப் பார்க்கும். இருதயத்தின் சிந்தனைகளையெல்லாம் கர்த்தருடைய கண்கள் பரீட்சித்து, சோதித்துப் பார்க்கும். கர்த்தருக்கு மறைவான இரகசியம் எதுவுமில்லை.
உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்கிறேன் (26:3)
உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன் (சங் 26:3).
தாவீது கர்த்தரைப் போற்றிப் புகழுகிறார். கர்த்தர்மீது பிரியமாயிருக்கிறார். கர்த்தருடைய கிருபைக்கு தாவீது அதிக மதிப்பு கொடுக்கிறார். கர்த்தருடைய கிருபை தாவீதின் கண்களுக்கு முன்பாக எப்போதும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தை தாவீதின் ஜீவியத்தை ஆளுகை செய்கிறது. தாவீது கர்த்தருடைய சத்தியத்திலே நடந்துகொள்கிறார். கர்த்தருடைய பிரமாணமே சத்தியம். கர்த்தருடைய பிரமாணம் தாவீதை வழிநடத்துகிறது. தாவீது கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்லுகிறார். தான் கர்த்தருக்கு முன்பாக தன்னுடைய உத்தமத்திலே நடப்பதை, கர்த்தர் தாமே பரீட்சித்து, சோதித்துப் பார்க்குமாறு சொல்லுகிறார்.
பொல்லாதவர்களின் கூட்டம் (26:4-5)
வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன் (சங் 26:4,5).
இருளின் அந்தகார கிரியைகளோடு தாவீதுக்கு பங்குமில்லை, பாத்தியமுமில்லை. அந்தகார கிரியைக்காரரோடு தாவீதுக்கு ஐக்கியமுமில்லை. பொல்லாதவர்களின் கூட்டத்தில் சேர்ந்துவிடாதவாறு தாவீது விலகியே இருக்கிறார். வஞ்சகரிடத்தில் தாவீது சேருவதில்லை. வீணரோடும், துன்மார்க்கரோடும் தாவீது உட்காருவதில்லை. அவர் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறார். தன்னுடைய உத்தமத்தைக் காத்துக்கொள்கிறார்.
வஞ்சகரும், வீணரும், துன்மார்க்கரும், பொல்லாதவர்களும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக கண்ணிகளை வைத்திருப்பார்கள். அவர்கள் தங்களுடைய துன்மார்க்கமான சுபாவங்களை மறைத்து நல்லவர்களைப்போல நடிப்பார்கள். அவர்களுடைய வார்த்தையில் இனிமையிருக்கும். ஆனால் அவர்களுடைய சுபாவத்திலே விஷம் இருக்கும்.
தாவீது பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறார். அவர்களுடைய வஞ்சக பேச்சுக்களை தாவீது நம்புவதுமில்லை. ஒரு சில சமயங்களில் பொல்லாதவர்களின் கூட்டத்தைவிட்டு விலகுவது நமக்குக் கடினமாயிருக்கலாம். சிறிதுகாலம் அவர்களை விட்டு விலகமுடியாமல் இருந்தாலும், அவர்களோடு நிரந்தரமாக தங்கிவிடக்கூடாது. அவர்களுடைய பாவங்களுக்கு நாம் பங்காளிகளாகிவிடக்கூடாது.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு நல்லவர்களின் கூட்டமே தேவை. நல்லவர்களோடு சேரும்போது, அவர்களுடைய நற்குணம் நமக்கும் கடந்துவரும். தீயோரோடு சேரும்போது அவர்களுடைய தீயகுணம் நம்மையும் பாதிக்கும். நாம் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்து முன்னேற வேண்டியவர்கள். நம்முடைய பரிசுத்தத்தில் நாம் வளர்ச்சி பெறவேண்டும். நம்முடைய பரிசுத்தத்திற்கும் பொல்லாதவர்களின் கூட்டத்திற்கும் ஒத்து வராது. அவர்கள் இருளின் பிள்ளைகள். அந்தகார கிரியைகளை நடப்பிக்கிறவர்கள்.
நாமோ வெளிச்சத்தின் பிள்ளைகள். இருளுக்கும் ஒளிக்கும் சம்பந்தமில்லை. துன்மார்க்கர் துன்மார்க்கரோடு சேரும்போது, அவர்கள் துணிகரமாகப் பாவம் செய்வார்கள். அப்படிப்பட்ட கூட்டத்தை, தாவீதைப்போல நாமும் பகைத்து, வெளியேறி வரவேண்டும். துன்மார்க்கரோடு உட்காரக்கூடாது. வீணரோடும் உட்காரக்கூடாது. வஞ்சகரிடத்தில் நாம் சேரவும் கூடாது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு நல்லரோடு ஐக்கியம் தேவை.
தாவீதின் சாட்சி சங் 26 : 6-12
குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவுகிறேன் (26:6-7)
கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன் (சங் 26:6,7)
தாவீது தன்னுடைய உத்தமத்தைக் குறித்து கர்த்தரிடத்தில் இன்னும் அதிகமாய் முறையிடுகிறார். அதற்கான ஆதாரங்களையும் அதிகமாகச் சொல்லுகிறார். தேவனுடைய பிரமாணத்தின்மீது தாவீது பிரியமாயிருக்கிறார். அவருடைய அன்பு உண்மையானது. அது நேர்மையானது.
பரிசுத்த நியமங்களுக்கு தன்னை ஆயத்தம்பண்ணுவதில் தாவீது மிகுந்த கவனத்தோடிருக்கிறார். பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிற சுத்திகரிப்பு முறைமைகளை தாவீது நிறைவாக கடைபிடிக்கிறார். தாவீது குற்றமில்லாமையிலே தன்னுடைய கைகளை கழுவுகிறார். நாம் கர்த்தரை ஆராதிக்கும்போது, நம்மைச் சுத்திகரித்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நம்முடைய ஆராதனையை கர்த்தர் அங்கீகரிப்பார்.
கர்த்தரை ஆராதிக்கிறவர்களிடத்தில் மாய்மாலம் இருக்கக்கூடாது. அவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு செய்யக்கூடாது. நாம் நன்மை செய்தால் மாத்திரம் போதாது. தீமை செய்யாமலும் இருக்கவேண்டும். தாவீது தன்னுடைய உத்தமத்தைப்பற்றிச் சொல்லும்போது, தன்னுடைய கையை குற்றமில்லாமையில் கழுவுவதாகச் சொல்லுகிறார். அவரிடத்தில் மாய்மாலமும் இல்லை. குற்றமுமில்லை.
சுத்திகரிப்பு முறைமையில் கைகளைக் கழுவும் பிரமாணம் பழைய ஏற்பாட்டில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. ""கொலை செய்யப்பட்டவனுக்கு சமீபமான பட்டணத்தின் மூப்பரெல்லாரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளை கழுவவேண்டும்'' (உபா 21:6). புதிய ஏற்பாட்டில் நம்முடைய கைகளை கழுவினால் மாத்திரம் போதாது. நம்முடைய மனந்திரும்புதலையும் புதித்தாக்கவேண்டும். நம்முடைய இருதயம் சுத்திகரிக்கப்பட வேண்டும். நம்முடைய இருதயம் சுத்திகரிப்பட்டு புதிதாக்கப்படவேண்டும்.
தாவீது கர்த்தருடைய பலிபீடத்தைப்பற்றியும் சொல்லுகிறார். தான் கர்த்தருடைய பலிபீடத்தைச் சுற்றி வருவதாகச் சொல்லுகிறார். பலிபீடத்தைச் சுற்றி வருவது ஆசாரியரின் ஊழியம். ஆசாரியர்கள் பலிகளை செலுத்தும்போது, அவர்கள் பலிபீடத்தைச் சுற்றிவருவார்கள். பலிசெலுத்துவதற்காக மிருகங்களை கொண்டு வருகிறவர்கள், பலிபீடத்திற்கு அருகில் வராமல், சற்று தூரத்திலிருந்து, கர்த்தரை பயபக்தியோடு துதிப்பார்கள். அப்போது ஆசாரியர்கள் பலிபீடத்தைச் சுற்றிவருவார்கள்.
இது கர்த்தர் நியமித்திருக்கிற ஊழிய முறைமை. ஆசாரிப்புக்கூடாரத்திலும் தேவாலயத்திலும் மோசேயின் பிரமாணத்தின்படி இதுபோல ஆராதனை செய்வது வழக்கம். தாவீது பழைய ஏற்பாட்டு பிரமாணத்தை சரியாகக் கடைபிடிக்கிறார். ஒரு ஆசாரியரைப்போல தானும் பலிபீடத்தைச் சுற்றிவருவதாகச் சொல்லுகிறார்.
தாவீது கர்த்தருடைய சமுகத்தில் குற்றமில்லாமையில் தன்னுடைய கைகளை கழுவி, கர்த்தருடைய பலிபீடத்தைச் சுற்றிவருவதற்கு ஒரு ஆவிக்குரிய நோக்கமுண்டு. அவர் கர்த்தரைத் துதிக்கும் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணுகிறார். இதை பரிசுத்தமாக தொனிக்க வேண்டுமென்பதற்காக தாவீது தன்னைச் சுத்திகரிக்கிறார். தன்னுடைய துதியை கர்த்தர் அங்கீகரிக்கவேண்டுமென்பதற்காக தாவீது குற்றமில்லாமையிலே தன்னுடைய கைகளைக் கழுவுகிறார். தாவீது கர்த்தரைத் துதித்து, அவருடைய அதிசயங்களையெல்லாம் விவரிக்கிறார். கர்த்தருடைய அதிசயங்களை விவரித்துச் சொல்லும்போது, அவர் பலிபீடத்தைச் சுற்றிவந்து, தேவனை மகிமைப்படுத்துகிறார்.
உமது ஆலயத்தை வாஞ்சிக்கிறேன் (26:8)
கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன் (சங் 26:8).
கர்த்தரை மகிமைப்படுத்தவேண்டும் என்பதே தாவீதின் விருப்பம். இதற்காகவே அவர் தேவனுடைய பிரமாணங்களையெல்லாம் கடைபிடித்து வருகிறார். தாவீது கர்த்தரை சந்தோஷமாய் ஆராதிக்கிறார். ஆராதனையில் தாவீது பிரியமாயிருக்கிறார். தேவாலயம் கர்த்தருடைய வாசஸ்தலம். அந்த ஸ்தானத்தில் கர்த்தருடைய மகிமை வந்து தங்கியிருக்கிறது. தாவீது கர்த்தருடைய ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், அவருடைய மகிமை தங்கி ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறார்.
கர்த்தருடைய ஆசரிப்புக் கூடாரத்தில் அவருடைய ஷேக்கைனா மகிமை வந்து தங்கியிருக்கிறது. கர்த்தர் தம்முடைய ஆலயத்தில் தங்கியிருந்து மனுஷர் மத்தியில் வாசம்பண்ணுகிறார். தேவாலயமே தம்முடைய வாசஸ்தலம் என்பதை கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கிறார். கர்த்தரை ஆராதிக்க வருகிறவர்கள் அவருடைய ஆலயமாகிய வாசஸ்தலத்திற்கு வந்து அவரை ஆராதிக்கலாம். ள்கர்த்தருடைய ஆலயத்தில் அவருடைய மகிமை தங்கியிருக்கிறது.
என் ஆத்துமாவைப் பாவிகளோடு வாரிக்கொள்ளாதேயும் (26:9-10)
என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும். அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது (சங் 26:9,10).
தாவீது தன்னுடைய உத்தமத்தை கர்த்தரிடத்தில் தெரியப்படுத்துகிறார். தன்னுடைய உத்தமத்திற்கு சாட்சி ஆராதங்களையும் சொல்லுகிறார். தாவீதைச் சுற்றிலும் துன்மார்க்கரும், இரத்தப்பிரியரும், பாவிகளும் நிரம்பியிருக்கிறார்கள். அவர்கள் தாவீதின் ஜீவனை பிடிக்க தீவிரமாய் விரைந்து வருகிறார்கள். தாவீதோ கர்த்தரையே நம்பியிருக்கிறார். தன்னிடத்தில் ஒரு குற்றமும் இல்லையென்றும், தான் உத்தமன் என்றும் தாவீது கர்த்தரிடத்தில் தயவாய் விண்ணப்பம்பண்ணுகிறார்.
தாவீது தன்னுடைய உத்தமத்தைப்பற்றிச் சொன்ன பின்பு, தன்னுடைய ஜீவன் துன்மார்க்கரோடு அழிந்துபோகக்கூடாது என்று ஜெபம்பண்ணுகிறார். துன்மார்க்கருக்கு அழிவு உண்டாகும். பாவிகளும், இரத்தப்பிரியரும் கர்த்தருடைய கோபாக்கினையினால் சங்காரம்பண்ணப்படுவார்கள். கர்த்தர் அவர்களுடைய ஜீவனை வாரிக்கொள்ளுவார். அவர்களுடைய ஜீவன்களோடு, தன்னுடைய ஜீவன் வாரிக்கொள்ளப்படாமலிருக்கவேண்டும் என்று தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.
துன்மார்க்கர் பாவிகளாயும் இரத்தப்பிரியராயும் இருக்கிறார்கள். ஒரு பாவமும் செய்யாத ஜனங்களுடைய இரத்தத்தின்மீது வெறிகொண்டு, அவர்களுக்கு மறைவாக கண்ணிகளை வைக்கிறார்கள். அவர்களைப் பிடிப்பதற்காக பதிவிருக்கிறார்கள்.
பாவிகளின் கைகளிலே எப்போதும் தீவினை இருக்கிறது. அவர்களுடைய வலது கை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது. எல்லா காரியங்களையும் தங்களுடைய துன்மார்க்கத்தினால் சாதித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு தேவன்மீது பக்தியில்லை. நீதியைச் செய்யவேண்டும் என்னும் ஆர்வமும் இல்லை. தங்களைத் தாங்களே நியாயந்தீர்த்துக்கொள்கிறார்கள். அவர்களுடைய நியாயத்தீர்ப்பில் நீதி எதுவுமில்லை. அவர்கள் அநீதி செய்தாலும், தங்களை நீதிமான்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
துன்மார்க்கர் பரிதானம் வாங்குகிறார்கள். பரிதானம் வாங்குகிற நீதிபதிகளிடத்தில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் நீதியையும் நியாயத்தையும் பணத்திற்கு விற்றுப்போடுவார்கள். உலகப்பிரகாரமான சொத்துக்களையும் சம்பத்துக்களையும் அடையவேண்டுமென்பதே இவர்களுடைய பேராசை. ஒரு மனுஷன் உலகமுழுவதையும் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டாலும், அவன் தன் ஜீவனை இழந்துபோனால் அவனுக்கு பெரிய நஷ்டமுண்டாகும்.
ஆத்தும நஷ்டமே மிகப்பெரிய நஷ்டம். துன்மார்க்கரோ உலகப்பிரகாரமான லாபத்தைப் பெறுவதற்காக தங்கள் ஆத்துமாவை நஷ்டப்படுத்துகிறார்கள். இவர்களுக்கு அழிவு நியமிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அழியும்போது தானும் அழிந்துபோகக்கூடாது என்று தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.
நானோ என் உத்தமத்திலே நடப்பேன் (26:11-12)
நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என் மேல் இரக்கமாயிரும். என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன் (சங் 26:11,12).
தாவீது தன்னுடைய உத்தமத்தைப்பற்றி கர்த்தரிடத்தில் பணிவான நம்பிக்கையோடு எடுத்துச் சொல்லுகிறார். அதே சமயத்தில் தாவீது தன்னை கர்த்தருடைய கிருபைக்கும் ஒப்புக்கொடுக்கிறார். மற்றவர்கள் எப்படி நடந்தாலும், தான் தன்னுடைய உத்தமத்திலே நடப்பாக வாக்குப்பண்ணுகிறார். மற்றவர்கள் பாவம் செய்யலாம், அவர்கள் இரத்தப்பிரியராயிருக்கலாம். அவர்கள் தாவீதுக்கு தீங்கு செய்யலாம். மற்றவர்கள் எப்படி ஜீவியத்தாலும், தான் கர்த்தருடைய சமுகத்திலே தன்னுடைய உத்தமத்திலே நடப்பதாக தாவீது வாக்குப்பண்ணுகிறார்.
நம்முடைய சுயமுயற்சியினால், சுயபக்தியினால், சுயபுத்தியினால் நம்மால் நம்முடைய உத்தமத்தில் நடக்கமுடியாது. தேவனுடைய கிருபையும் அநுக்கிரகமும் நமக்கு இருந்தால் மாத்திரமே நம்மால் நம்முடைய உத்தமத்தில் நடக்க முடியும். கர்த்தரே நம்மை நம்முடைய உத்தமத்தில் நடக்கச் செய்கிறவர். கர்த்தரே நம்மை கரம்பிடித்து வழிநடத்துகிறவர். தன்னுடைய உத்தமத்தில் நடப்பதற்கு, தனக்கு கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் வேண்டும் என்று தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.
தாவீதின் சத்துருக்கள் அவரைப் பிடிப்பதற்காக சூழ்ந்திருக்கிறார்கள். அவர்களெல்லோரும் துன்மார்க்கர்கள். அவர்கள் இரத்தப்பிரியர்கள். அவர்களுடைய கொடிய கைகளிலிருந்து கர்த்தர் தாமே தன்னை மீட்டுக்கொள்ளவேண்டும் என்று தாவீது பணிவாய் விண்ணப்பம்பண்ணுகிறார். தான் உயிரோடிருந்தாலும், மரித்துப்போனாலும் கர்த்தர் தன்மேல் இரக்கமாயிருக்கவேண்டும் என்றும் தாவீது தன் ஜீவனைக் குறித்து கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார்.
தாவீதின் நடைகள் தள்ளாடாமல் உறுதியாயிருக்கிறது. அவருடைய கால்கள் செம்மையான இடத்திலே நிற்கிறது. தன்னுடைய நடை உறுதியாயிருப்பதைப் பார்த்து தாவீதுதனக்குத்தானே சந்தோஷப்படுகிறார். அவருடைய கால்கள் செம்மையான இடத்திலிருப்பதினால், அவர் ஒருபோதும் இடறி கீழே விழுந்துவிடமாட்டார். சத்துருக்கள் தாவீதைத் துரத்திவருவதினால், அவர் எருசலேமைவிட்டு, தன் ஜீவனைக் காத்துக்கொள்ள வனாந்தரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்.
கர்த்தருடைய தேவாலயம் எருசலேமிலிருக்கிறது. தாவீதோ இப்போது வனாந்தரத்திலும் காடுகளிலும் ஒழிந்துகொண்டிருக்கிறார். கர்த்தருடைய சபையிலே, அவருடைய பரிசுத்த வாசஸ்தலத்திலே, தாவீதினால் இப்போது கர்த்தரைத் துதிக்க முடியாது. ஆனாலும் கர்த்தர் தன்னுடைய சத்துருக்களின் கைகளிலிருந்து தன்னை மீட்டு, தன்னை மறுபடியும் எருசலேமுக்கு அழைத்துச் செல்வார் என்று தாவீது விசுவாசத்தோடிருக்கிறார்.
தாவீது இப்போது வனாந்தரத்திலும், காடுகளிலும் ஒழிந்திருந்தாலும், அவர் கர்த்தருடைய ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், அவருடைய மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறார். கர்த்தருடைய பரிசுத்தவான்களோடு சேர்ந்து, கர்த்தருடைய சபைகளிலே, அவருடைய பரிசுத்த ஆலயத்திலே, தான் கர்த்தரைத் துதிக்கப்போவதாக தாவீது விசுவாசத்தோடு சொல்லுகிறார்.
கர்த்தர் தாவீதை தம்முடைய தேவாலயத்திற்கு மறுபடியும் அழைத்து வருவார். கர்த்தரைத் துதிக்கிற ஜனங்களோடு தாவீது மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்படுவார். தேவாலயத்திலே கர்த்தரைத் துதித்து மகிமைப்படுத்தும் கிருபை தனக்கு மறுபடியும் கிடைக்கும் என்பது தாவீதின் விசுவாசம். தாவீது கர்த்தரை நம்பியிருக்கிறார். தம்மை நம்பியிருக்கிற பிள்ளைகளை கர்த்தர் ஒருபோதும் வெட்கமடைய செய்யமாட்டார்.
தாவீது தேவனிடம் ஏறெடுத்த விண்ணப்பங்கள்
1. என்னை நியாயம் விசாரியும் (சங் 26:1)
2. என்னை பரீட்சியும் (சங் 26:2)
3. என்னைச் சோதித்துப்பாரும்
4. என் உள்ளத்திரியங்களை புடமிட்டுப் பாரும்
5. என் இருதயத்தை புடமிட்டுப்பாரும்
6. என் ஆத்துமாவைப் பாவிகளோடு வாரிக்கொள்ளாதேயும் (சங் 26:9)
7. என் ஜீவனை இரத்தப் பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்
8. என்னை மீட்டுக்கொள்ளும் (சங் 26:11)
9. என்மேல் இரக்கமாயிரும்
தாவீதின் சாட்சி
1. நான் உத்தமத்திலே நடக்கிறேன் (சங் 26:1)
2. நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்
3. நான் தள்ளாடுவதில்லை
4. உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது (சங் 26:3)
5. உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன்
6. வீணரோடே நான் உட்காரவில்லை (சங் 26:4)
7. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன் (சங் 26:5)
8. உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தை வாஞ்சிக்கிறேன் (சங் 26:8)
9. உமது மகிமை தங்கிய ஸ்தானத்தை வாஞ்சிக்கிறேன்
10. என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது (சங் 26:12)
உள்ளந்திரியங்கள் என்பது சிறுநீரகம். சிறுநீரகமும் இருதயமும் நமது நினைவுகளைக் குறிக்கும் சொற்கள்.
தாவீதின் பொருத்தனைகள்
1. வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை
2. துன்மார்க்கரோடே உட்காரேன் (சங் 26:5)
3. நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன் (சங் 26:6)
4. உம்முடைய பீடத்தைச் சுற்றி வருகிறேன்
5. நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப் பண்ணினேன் (சங் 26:7)
6. உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்
7. நான் என்னுடைய உத்தமத்திலே நடப்பேன் (சங் 26:11)
8. சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன் (சங் 26:12)