சங்கீதம் 25 விளக்கம்
(தாவீதின் சங்கீதம்.)
ஏழாவது நெருக்கத்தின் ஜெபம்
பொருளடக்கம்
1. கர்த்தரிடம் ஏறெடுக்கப்பட்ட பன்னிரெண்டு விண்ணப்பங்கள் # (25:1#7)
2. பாவிகளுக்கு ஆறுவிதமான அறிவுரையும் ஜெபமும் # (25:8#11)
3. கர்த்தருக்குப் பயந்து, தங்கள் பாவங்களுக்கு மனந்திருந்துவோருக்கு கிடைக்கும் ஆறுவிதமான ஆசீர்வாதங்கள் # (25:12#15)
4. தேவனிடம் கூறப்பட்ட பன்னிரெண்டு விண்ணப்பங்கள் # (25:16#22)
இருபத்தைந்தாவது சங்கீதம் முழுவதும் தாவீது கர்த்தரிடத்தில் ஏறெடுக்கிற பயபக்தியான விண்ணப்பங்கள் இடம்பெற்றிருக்கிறது. தாவீது கர்த்தரையும், அவருடைய கிருபைகளையும், இரக்கங்களையும் நம்பியிருக்கிறார். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசத்தோடு நம்பி ஜீவிக்கிறார். தாவீது மிகுந்த பயபக்தியோடு தன்னுடைய வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் கர்த்தரிடத்தில் ஏறெடுக்கிறார்.
தாவீது கர்த்தரிடத்தில் தன்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறார். அவருடைய கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது (சங் 25:1,15). இந்த சங்கீதத்திலிருந்து நாம் பல சத்தியங்களைக் கற்றுக்கொள்ளலாம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக நாம் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணவேண்டும் (சங் 25:6,7,18). கர்த்தர் தாமே தம்முடைய பாதைகளை நமக்குப் போதித்தருளுமாறு நாம் ஜெபிக்கவேண்டும் (சங் 25:4,5). கர்த்தர் நமக்கு இரங்கவேண்டுமென்றும் (சங் 25:16), நம்முடைய இடுக்கண்களுக்கு நம்மை நீங்கலாக்கி விடுமாறும் (சங் 25:17,18) நாம் ஜெபிக்கவேண்டும். கர்த்தர் தாமே நம்முடைய சத்துருக்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவிக்கவேண்டுமென்றும் (சங் 25:20,21) தேவனுடைய சபையின் இரட்சிப்புக்காகவும் (சங் 25:22) நாம் கர்த்தரிடத்தில் பயபக்தியாய் விண்ணப்பம்பண்ணவேண்டும்.
நம்முடைய ஜெபத்தில் நாம் கேட்க வேண்டிய காரியங்களைப்பற்றியும் இந்த சங்கீதத்தின் மூலமாய் நாம் கற்றுக்கொள்ளலாம். நாம் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருப்பதை அறிக்கை செய்யவேண்டும் (சங் 25:2,3,5,20,21). நம்முடைய சத்துருக்கள் மூலமாய் நமக்கு வரும் வியாகுலங்களையும், இடுக்கண்களையும், உக்கிர பகைகளையும் கர்த்தரிடத்தில் எடுத்துச் சொல்லவேண்டும் (சங் 25:17,19). நம்முடைய உத்தமத்தையும் நேர்மையையும் நாம் அறிக்கை பண்ணவேண்டும் (சங் 25:21).
நாம் கர்த்தரிடத்தில் ஜெபிக்கும்போது, அவருடைய வாக்குத்தத்தங்களையும் நினைவுகூரவேண்டும். கர்த்தர் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார் (சங் 25:8,,12). கர்த்தருடைய உடன்படிக்கையினால் நமக்கு ஆசீர்வாதம் உண்டு (சங் 25:10). தேவனோடு ஐக்கியமாயிருப்பதினால் நம்முடைய ஆத்துமா நன்மையில் தங்கும் (சங் 25:13,14).
கர்த்தாவே சங் 25 : 1#7
என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்
கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன் (சங் 25:1).
தாவீது கர்த்தரைச் சார்ந்து ஜீவிக்கிறார். கர்த்தரிடத்தில் தான் வைத்திருக்கிற அன்பை பயபக்தியோடு எடுத்துச் சொல்லுகிறார். தாவீது தன்னுடைய சங்கீதங்களில், கர்த்தரைப் போற்றிப் புகழ்ந்து, சங்கீதத்தை ஆரம்பிப்பது வழக்கம். தன்னுடைய துதியினால் கர்த்தர் மகிழ்ச்சியாயிருக்கவேண்டும் என்பது தாவீதின் நோக்கமல்ல. கர்த்தரைத் துதிக்கும்போது தாவீதின் இருதயம் சந்தோஷத்தினால் நிரம்புகிறது. அவருடைய ஆத்துமா புத்துயிர் பெறுகிறது.
தாவீது கர்த்தர்மீது வைத்திருக்கிற பக்தியை தன்னுடைய வார்த்தைகளினால் இவ்வாறு வெளிப்படுத்துகிறார். ""கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்'' என்று சொல்லுகிறார். நாம் கர்த்தரை ஆராதிக்கும்போது, நம்முடைய ஆத்துமாவை அவரிடத்தில் உயர்த்தவேண்டும். நம்முடைய ஆத்துமாவை கர்த்தரிடத்தில் உயர்த்துவதுதான் ஜெபம். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ""கர்த்தரிடத்தில் ஜெபிப்போம்'' என்று சொல்லுவதற்குப் பதிலாக, ""கர்த்தரிடத்தில் நம்முடைய ஆத்துமாவை உயர்த்துவோம்'' என்று சொல்லுவது வழக்கம்.
உம்மை நம்பியிருக்கிறேன்
என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும். உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. (சங் 25:2,3).
தாவீது கர்த்தரை நம்பி சார்ந்திருப்பதையும் அவர் பயபக்தியாய் அறிக்கை செய்கிறார். ""என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன்'' என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார். தாவீது இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அவருடைய மனச்சாட்சி அவருடைய வார்த்தைக்கு சாட்சியாயிருக்கிறது. தாவீது தன்னிடத்திலோ அல்லது வேறு எந்த சிருஷ்டிகளிடத்திலோ நம்பிக்கை வைக்காமல், அவர் கர்த்தரை மாத்திரமே நம்பியிருக்கிறார்.
தாவீது கர்த்தரை நம்பியிருப்பதை சந்தோஷமாய் அறிக்கை பண்ணுகிறார். ""நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்'' என்று தாவீது கர்த்தரிடத்தில் சொல்லுகிறார். தாவீது கர்த்தரையே நம்பியிருப்பதினால், அவர் ஏமாற்றமடைந்து விடக்கூடாது. தாவீதை நெருக்கங்களும் ஆபத்துக்களும் சூழ்ந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர் கர்த்தரையே நம்பியிருக்கும்போது, கர்த்தர் அவரை வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யவேண்டும் என்பதே தாவீதின் விண்ணப்பம்.
தாவீதின் சத்துருக்கள் அவரை மேற்கொள்வதற்கு முயற்சி பண்ணுகிறார்கள். தாவீது தோல்வியடைந்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். தாவீது கர்த்தரை நம்பியிருக்கிறார். அவர்களோ தங்களுடைய சுயபலத்தை நம்பியிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், ""என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்'' என்று தாவீது ஜெபம்பண்ணுகிறார். தான் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் காத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் தாவீதின் விண்ணப்பம். தாவீது தன்னையே கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
கர்த்தரை நோக்கி காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டு போகாதபடி செய்யும் என்று தாவீது ஜெபிக்கிறார். முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப்போவார்களாக என்பதுதான் தாவீதின் ஜெபவார்த்தை. ""முகாந்தரமில்லாமல்'' என்னும் வார்த்தைக்கு ""வீணாக'' என்று பொருள். மனுஷருக்கு சிறிய சோதனை வரும்போதே அவன் பாவத்தில் விழுந்துவிடுகிறான். சோதனை அதிகரிக்கும்போது, பாவத்தில் விழுந்த அவனால் அதிலிருந்து எழும்பி வரமுடியாது. துணிகரமாகப் பாவம் செய்கிறவர்கள் பாவம் செய்வதை தங்கள் சுபாவமாக்கிக் கொள்வார்கள். பாவம் செய்ய வேண்டுமென்பதற்காக பாவம் செய்வார்கள். இவர்கள் பாவம் செய்வதற்கு ஒரு காரணமும் இருக்காது. இப்படிப்பட்டவர்கள் முகாந்தரமில்லாமல் மற்றவர்களுக்குத் துரோகம்பண்ணுவார்கள்.
உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடையசத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன் (சங் 25:4,5).
தாவீது கர்த்தருடைய வழிகளையும், அவருடைய பாதைகளையும் அறிந்துகொள்ள விரும்புகிறார். கர்த்தர் தாவீதுக்கு சில கடமைகளை கொடுத்திருக்கிறார். கர்த்தர் கொடுத்திருக்கிற வேலைகளை தாவீது நேர்த்தியாய்ச் செய்யவேண்டும். கர்த்தருடைய வழியில் மாத்திரமே தாவீது நடக்கவேண்டும். பாதை மாறி போய்விடக்கூடாது. இதற்காக, ""கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும், உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்'' என்று தாவீது பயபக்தியாய் விண்ணப்பம்பண்ணுகிறார்.
தாவீதுக்கு கர்த்தருடைய போதனை தேவைப்படுகிறது. ""கர்த்தாவே எனக்குப் போதித்தருளும்'' என்று தாவீது மறுபடியும் மறுபடியுமாக ஜெபம்பண்ணுகிறார். தாவீதுக்கு சாதுரிய வார்த்தைகளிலோ, உலகஞானத்திலோ போதனை தேவைப்படவில்லை. கர்த்தருடைய வழிகளைப்பற்றியும், அவருடைய பாதைகளைப்பற்றியும், அவருடைய சத்தியத்தைப்பற்றியும் தாவீதுக்கு கர்த்தரிடமிருந்து போதனை தேவைப்படுகிறது.
கர்த்தருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை (சங் 25:10). கர்த்தர் தம்முடைய வழிகளிலும், பாதைகளிலும் தாவீதினிடத்தில் வந்திருக்கிறார். கர்த்தர் எப்போதுமே தம்முடைய பாதையில்தான் நடப்பார். அதே பாதையில் தாவீதும் நடக்கவேண்டுமென்று பிரியப்படுகிறார். கர்த்தரால் மாத்திரமே தம்முடைய வழிகளை தாவீதுக்கு தெரிவிக்க முடியும். அவரால் மாத்திரமே அவருடைய பாதைகளை தாவீதுக்குப் போதித்தருள முடியும்.
பல வேளைகளிலே நாம் எந்த வழியில் போகவேண்டுமென்று அறியாமல் திகைத்துக்கொண்டிருப்போம். நம்மால் எளிதில் தீர்மானம் எடுக்க முடியாது. நமக்குள் தெளிந்த சிந்தனையும் இருக்காது. மனக்குழப்பத்திலிருப்போம். நம்முடைய உள்ளத்தில் இப்படிப்பட்ட சந்தேகம் வரும்போது, நாமும் தாவீதைப்போல கர்த்தரிடத்தில், ""உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும், உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்'' என்று விண்ணப்பம்பண்ணவேண்டும்.
தாவீது கர்த்தரிடத்தில், ""நீரே என் இரட்சிப்பின் தேவன்'' என்று சொல்லுகிறார். கர்த்தர் நம்மை இரட்சிக்கும்போது, அவர் நமக்குத் தம்முடைய சத்தியத்தைப் போதிப்பார், தம்முடைய வழியிலே நம்மை நடத்துவார். நமக்கு இரட்சிப்பைக் கொடுக்கிற தேவன் நமக்குப் போதனையையும் கொடுக்கிறார்.
தாவீது கர்த்தரை நோக்கி நாள் முழுவதும் காத்திருக்கிறார். வேலையாள் தன் எஜமானுக்காக நாள் முழுவதும் காத்திருப்பதுபோல, தாவீது கர்த்தருக்காக நாள் முழுவதும் காத்திருக்கிறார். கர்த்தருடைய உபதேசத்திற்காகக் காத்திருக்கிறார். அவருடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருக்கிறார்.
இரக்கங்களையும் காருணியங்களையும் நினைத்தருளும்
இரக்கங்களையும் காருணியங்களையும் நினைத்தருளும் கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதிகாலமுதல் இருக்கிறதே (சங் 5:6).
தாவீது தன்னுடைய சுயபக்தியையோ, சுயபுத்தியையோ நம்பவில்லை. கர்த்தருடைய அளவில்லாத இரக்கங்களையும், அவருடைய காருணியங்களையும் நம்புகிறார். கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர். அவர் நம்மை நோக்கிப் பார்க்கும்போது, நம்முடைய சுயபக்தியையோ அல்லது சுயவல்லமையையோ நாம் அவருக்குக் காண்பிக்கக்கூடாது. கர்த்தர் தம்முடைய இரக்கங்களையும் காருணியங்களையும் நினைத்தருளுமாறு அவரிடத்தில் பணிவாய் விண்ணப்பம்பண்ணவேண்டும்.
கர்த்தர் நம்மை தம்முடைய இரக்கங்களினாலும், காருணியங்களினாலும் மாத்திரமே ஆசீர்வதிக்கிறார். அவைகள் அநாதி காலம் முதல் இருக்கிறது. கர்த்தர் ஒருபோதும் மாறாதவர். அவர் தம்முடைய இரக்கங்களையும், காருணியங்களையும் நினைவுகூர்ந்து, அவர் நமக்கு தம்முடைய வழிகளைத் தெரிவிக்கவேண்டும். தம்முடைய பாதைகளை நமக்குப் போதிக்கவேண்டும். தம்முடைய சத்தியத்திலே நம்மை நடத்தவேண்டுமென்று கர்த்தரிடத்தில் பணிவாய் விண்ணப்பம்பண்ணவேண்டும். கர்த்தர் கிருபையும், இரக்கமும், காருணியமும் உள்ளவராயிருப்பதினால்தான், அவருடைய கிருபாசனத்தண்டையிலே நாம் தைரியமாய்க் கிட்டிச்சேருகிற சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
உமது கிருபையின்படியே நினைத்தருளும்
என் இளவயதின் பாவங்களையும், என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும் (சங் 25:7).
தாவீதின் ஜீவியத்தில் பாவங்களும் மீறுதல்களும் நிரம்பியிருக்கிறது. கர்த்தர் தயவுள்ளவர். அவர் கிருபையுள்ளவர். கர்த்தர் தன்னைப் பார்க்கும்போது, தன்னுடைய இளவயதின் பாவங்களையும், மீறுதல்களையும் நினையாதிருக்கவேண்டுமென்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தர் தன்னுடைய பாவங்களையும் மீறுதல்களையும் நினைப்பதற்குப் பதிலாக, தம்முடைய தயவையும் கிருபையையும் நினைத்தருள வேண்டுமென்று விண்ணப்பம்பண்ணுகிறார்.
கர்த்தர் நம்முடைய பாவத்தைப் பார்த்தால், நம்முடைய பாவத்திற்குரிய தண்டனையைக் கொடுப்பார். பாவத்தின் சம்பளம் மரணம். கர்த்தர் நீதியான நியாயாதிபதி. நம்முடைய கர்த்தர் தயவும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், கிருபையுமுள்ளவர். கர்த்தர் தம்முடைய தயவையும் கிருபையையும் நினைத்துப் பார்த்துப்பார்த்தால், நம்முடைய பாவங்களையும் மீறுதல்களையும் மன்னித்துவிடுவார்.
கர்த்தருடைய இரக்கம் நமக்குச் சாதமாகப் பேசும். நம்முடைய பாவமோ நமக்கு விரோதமாகப் பேசும். கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது அவர் அவற்றை மன்னித்து மறந்துவிடுகிறார். கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது அதை அவர் முழுவதுமாய் மன்னித்துவிடுகிறார். நம்முடைய பாவங்களை மன்னித்து அவற்றை மறந்தும்விடுகிறார். நமக்கு கர்த்தருடைய கிருபையினால் பூரணமாய் பாவமன்னிப்பு உண்டாகிறது.
தாவீது தேவனிடத்தில் ஏறெடுத்த விண்ணப்பங்கள்
1. என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும் (சங் 25:2)
2. என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்
3. உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும் (சங் 25:3)
4. முகாந்தரமில்லாமல் துரோகம் பண்ணுகிறாவர்களே வெட்கப்பட்டுப் போவார்கள்
5. உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும் (சங் 25:4)
6. உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்
7. சத்தியத்திலே நடத்தும் (சங் 25:5)
8. சத்தியத்தை எனக்குப் போதித்தருளும்
9. உம்முடைய இரக்கங்களை நினைத்தருளும் (சங் 25:6)
10. உம்முடைய காருணியங்களை நினைத்தருளும்
11. என் இளவயதின் பாவங்களை நினையாதிரும் (சங் 25:7)
12. உம்முடைய தயவினிமித்தம், என்னை உமது கிருபையின் படியே நினைத்தருளும்
கர்த்தர் சங் 25 : 8#14
கர்த்தருடைய உடன்படிக்கையைக் கைக்கொள்கிறவர்கள்
கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள் (சங் 25:8#10).
தேவனுடைய வாக்குத்தத்தங்களும் தாவீதின் ஜெபங்களும் இந்த வசனப்பகுதியில் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது. தாவீதின் விண்ணப்பங்களில் சில இந்த சங்கீதத்தில் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது. அவருடைய மற்ற விண்ணப்பங்கள் இந்த சங்கீதத்தின் பின்பகுதியில் வரும். இந்த சங்கீதத்தின் நடுப்பகுதியில் தாவீது கர்த்தருடைய வாக்குத்தத்தங்களைத் தியானிக்கிறார். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களே நம்முடைய ஜெபத்திற்கு வலுவான அஸ்திபாரம். நாம் எதற்காக ஜெபிக்கவேண்டுமென்று கர்த்தருடைய வாக்குத்தத்தம் நம்மைப் போதிக்கும். கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின் பிரகாரமாய் ஜெபிக்கும்போது, நாம் ஜெபம்பண்ணும்போதே கர்த்தருடைய உத்தரவு நமக்கு கிடைக்கும். அவருடைய வாக்குத்தத்தத்தின் பிரகாரம் இப்படித்தான் இருக்கும் என்னும் நிச்சயம் நமக்குள் உண்டாகும்.
ஆகையினால் நாம் கர்த்தரிடத்தில் ஜெபிக்கும்போது, அவருடைய வாக்குத்தத்தங்களின் பிரகாரமாய் ஜெபிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர். நம்முடைய ஜெபத்திற்கு கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தை ஆராதமாக வைத்து உத்தரவு கொடுப்பார்.
கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின் பிரகாரமாய் நாம் ஜெபிக்கும்போது, நம்முடைய ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் என்னும் நிச்சயம் நமக்குள் உண்டாகும். கர்த்தருடைய வாக்குத்தத்தம் நிறைவேறும். கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்.
ஆகையினால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். அவர் சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்துகிறார். அவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர். கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார். அவர் பரிபூரணர். கர்த்தர் வாக்குமாறாதவர். கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை நாம் தியானிக்கும்போது, அவருடைய சுபாவங்களையும் நாம் தியானித்துப் பார்க்கவேண்டும். கர்த்தருடைய சுபாவத்தினிமித்தமாய், அவருடைய வாக்குத்தத்தங்களெல்லாம் நிறைவேறுகிறது.
கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருப்பதினால், நாம் அவரை பரிபூரணமாய் நம்பலாம். அவர் தம்முடைய வார்த்தையில் உண்மையுள்ளவராயிருப்பார். கர்த்தருடைய வார்த்தைகளெல்லாம் அவரைப்போலவே நன்மை நிரம்பியதாயிருக்கும். அவர் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். கர்த்தருடைய வழிகளெல்லாம் அவருடைய சுபாவத்தோடு ஒத்துப்போகும். கர்த்தர் பரிபூரணராயிருப்பதுபோல, அவருடைய வழிகளும் பரிபூரணமாயிருக்கும்.
கர்த்தருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள். அவருடைய வாக்குத்தத்தங்களெல்லாம், அவருடைய வழிகளைப்போலவே, கிருபையும் சத்தியமுமானவைகள். கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்தில் நடத்துகிறார். சாந்தகுணமுள்ளவர்களுக்கு தம்முடைய வழியைப் போதிக்கிறார். இது கர்த்தருடைய சுபாவம்.
நாம் பாவிகளாகயிருந்தாலும் கர்த்தருடைய உடன்படிக்கையையும், அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்கிறவர்களாயிருக்கவேண்டும். நம்முடைய மாம்சத்தில் பலவீனங்கள் இருக்கலாம். நம்முடைய சுபாவத்தில் குறைபாடுகள் இருக்கலாம். நம்முடைய பலவீனத்தினால் சில வேளைகளில் நாம் கர்த்தருடைய உடன்படிக்கையை மீறிவிடலாம். ஆனாலும் நாம் கர்த்தருடைய சமுகத்தில் உண்மையான மனந்திரும்புதலோடு வரவேண்டும். கர்த்தரை விசுவாசத்தோடு பற்றிக்கொள்ளவேண்டும். கர்த்தருடைய உடன்படிக்கையையும், அவருடைய சாட்சிகளையும் உண்மையாய்க் கைக்கொள்ளவேண்டும். கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் நம்மிடத்தில் இருக்கவேண்டும்.
கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களுக்கு தமது வழியைப் போதிக்கிறார். கர்த்தர் தமக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்கு தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிக்கிறார். அவர்களுக்கு தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துகிறார். நாம் கர்த்தரை ஆராதிக்கும்போது கர்த்தருடைய மகத்துவமான சமுகத்திற்கு முன்பாக பயபக்தியோடு நிற்கவேண்டும். அவருடைய அதிகாரத்திற்கும் ஆளுகைக்கும் நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளுக்கு சந்தோஷமாய்க் கீழ்ப்படியவேண்டும்.
தாவீது கர்த்தருடைய வாக்குத்தத்தத்தைத் தியானிக்கும்போது, தன்னுடைய விண்ணப்பத்தையும் ஏறெடுக்கிறார். ""உம்முடைய நாமத்தினிமித்தம் என் அக்கிரமத்தை மன்னித்தருளும்'' (சங் 25:11) என்று விண்ணப்பம்பண்ணுகிறார். நாம் கர்த்தருடைய உடன்படிக்கையையும், அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளும்போது, கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம். நமக்கு கர்த்தருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகளாயிருக்கும்.
கர்த்தர் நல்லவர் என்பதை நிரூபிக்கும் காரியங்கள்
1. பாவிகளுக்கு தம்முடைய வழியைத் தெரிவிக்கிறார்
2. சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்துகிறார் (சங் 25:9)
3. சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்
4. கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, கிருபையையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துகிறார் (சங் 25:10)
சாந்தகுணமுள்ளவர்களின் ஆசீர்வாதங்கள்
1. திருப்தி (சங் 25:26)
2. நியாயத்திலே நடத்தப்படுதல் (சங் 25:9)
3. தேவனுடைய வழியைப் பற்றிய அறிவு (சங் 25:9)
4. பூமியைச் சுதந்தரித்தல் (சங் 37:11; மத் 5:5)
5. இரட்சிப்பு (சங் 76:9; சங் 149:4)
6. தேவனிடமிருந்து உதவி (சங் 147:6)
7. கர்த்தருக்குள் மகிழ்ச்சி (ஏசா 29:19)
8. பரிசுத்த ஆவி (கலா 5:22#23)
9. மற்றவர்களுக்கு ஆசீர்வாதம்(கலா 6:1)
10. பொறுமை (2தீமோ 2:24#25)
சாந்தகுணமுள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டானவர்கள்
1. ஆபிரகாம் (ஆதி 13:8)
2. ஈசாக்கு (ஆதி 26:20#22)
3. மோசே (யாத் 2:13; யாத் 14:13#14; யாத் 15:24; யாத் 16:7#8; யாத் 17:2; எண் 12:3; எண் 16:4#11)
4. கிதியோன் (நியா 8:2#3)
5. அன்னாள் (1சாமு 1:13#16)
6. சவுல் (1சாமு 10:27)
7. தாவீது (1சாமு 17:29; 2சாமு 16:9#14; சங் 38:13#14; சங் 120:5#7)
8. பவுல் (அப் 21:20#22; 1தெச 2:7; 2தீமோ 4:16)
9. தெசலோனிக்கேயர் (2தெச 1:4)
10. இயேசுகிறிஸ்து (ஏசா 42:1#4; ஏசா 53:7; மத் 11:28#30; மத் 26:47#54)
அக்கிரமத்தை மன்னித்தருளும்
கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும் (சங் 25:11).
தன்னுடைய அக்கிரமத்தை மன்னித்தருளுமாறு தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தரிடத்தில் இதுபற்றிச் சொல்லும்போது, ""உமது நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்'' என்று சொல்லுகிறார். தாவீதின் அக்கிரமம் பெரிதாயிருக்கிறது. கர்த்தருடைய கிருபையும் தயவும் மிகவும் பெரியது. கர்த்தர் தம்முடைய இரக்கத்தையும், கிருபையையும் நமக்குக் காண்பிக்கவில்லையென்றால், நமக்கு பாவமன்னிப்பு இல்லை. நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு கர்த்தருடைய இரட்சிக்கும் கிருபையே நமக்குப் போதுமானதாயிருக்கிறது. இரட்சிப்பு கர்த்தருடையது.
வழியைப் போதிப்பார்
கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார் (சங் 25:12).
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களுக்கு அநேக ஆசீர்வாதங்கள் உண்டு. கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு வழியைத் தெரிந்துகொண்டு, அந்த வழியையே நமக்கு நியமிக்கிறார். பல சமயங்களில் நம்முடைய வழி எது என்பது நமக்குத் தெரியாதிருக்கிறது. நாம் கர்த்தருக்குப் பயப்படும்போது, கர்த்தர் நமக்குத் தெரிந்துகொண்ட வழியை, போதிப்பார். கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற ஊழியத்தின் பாதையை நமக்குத் தெளிவுபடுத்துவார். நம்முடைய கடமைகளை நாம் செம்மையாய்ச் செய்வதற்கு கர்த்தர் தாமே நமக்குப் போதிப்பார்.
தாவீது கர்த்தரிடத்தில், ""கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும், உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும், உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி என்னைப் போதித்தருளும்'' (சங் 25:4,5) என்று பயபக்தியோடு ஜெபம்பண்ணினார். கர்த்தர் தனக்குப் போதிக்கவேண்டுமென்று ஜெபம்பண்ணினாலும், அவர் யாருக்குப் போதிப்பார் என்றும் தாவீது சொல்லுகிறார். கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷனுக்கு மாத்திரமே, கர்த்தர் தம்முடைய வழிகளையும் பாதைகளையும் போதிப்பார்.
கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் நம்முடைய இருதயத்தில் நிரம்பியிருக்கவேண்டும். அவருடைய வார்த்தைகளை நாம் மறந்துவிடாதவாறு எப்போதும் நினைவுகூரவேண்டும். கர்த்தர் யாருக்கெல்லாம் தம்முடைய வழியைப் போதிக்கிறார் என்று தாவீது இந்த சங்கீதத்தில் வரிசையாகச் சொல்லுகிறார். அவற்றின் விவரம் வருமாறு :
1. ""கர்த்தர் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்'' (சங் 25:8). அவர்கள் பாவிகளாகயிருப்பதினால் அவர்களுக்கு உபதேசம் தேவைப்படுகிறது. பாவிகள் உபதேசத்தை விரும்பவேண்டும். கர்த்தருடைய வார்த்தைக்கு கவனமாய்ச் செவிகொடுக்கவேண்டும். அப்போதுதான் கர்த்தரிடத்தில் மனந்திரும்பி வருவதற்கான வழியை, கர்த்தர் பாவிகளுக்குத் தெரிவிப்பார். கர்த்தருடைய வழியில் நாம் நடந்தால், அது நம்மை நித்திய ஜீவனுக்கு அழைத்துச் செல்லும். கர்த்தருடைய வழியில் நாம் முன்னேறிச் செல்லும்போது நம்முடைய மனச்சாட்சியில் தெய்வீக சமாதானம் உண்டாயிருக்கும்.
2. ""கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களுக்கு தமது வழியைப் போதிக்கிறார்''. சாந்தகுணமுள்ளவர்கள் தங்களுடைய சுயஞானத்திலோ, சுயபுத்தியிலோ, சுயவல்லமையிலோ நம்பிக்கை வைக்கமாட்டார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் கர்த்தரிடத்தில் மாத்திரமே நம்பிக்கை வைத்திருப்பார்கள். கர்த்தர் தங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று ஆவலாய்க் காத்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுடைய ஜீவியத்தில் உண்மையும் விசுவாசமும் இருக்கும். தேவனுடைய வழிநடத்துதலை பின்பற்றவேண்டுமென்று சாந்தகுணமுள்ளவர்கள் தீர்மானம் செய்திருப்பார்கள். இவர்களுடைய பேச்சிலும், கிரியையிலும், நடத்தையிலும் கண்ணியம் இருக்கும். கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்துகிறார். தேவனுடைய எழுதப்பட்டுள்ள வார்த்தையே அவருடைய நீதியும் நியாயமுமாயிருக்கிறது. சாந்தகுணமுள்ளவர்களின் ஜீவியத்தை கர்த்தருடைய வார்த்தை ஆளுகை செய்யும்.
3. ""தமக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்கு தாம் தெரிந்துகொள்ளும் வழியை கர்த்தர் போதிப்பார்'' (சங் 25:12). கர்த்தர் நமக்குத் தெரிந்துகொள்ளும் வழியும், நல்ல மனுஷர்கள் தங்களுடைய ஜீவியத்திற்குத் தெரிந்துகொள்ளும் வழியும் ஒன்றாயிருக்கும். இதில் முரண்பாடு இருக்காது. இவ்விரண்டு வழிகளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் சங்கமமாகும். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் கர்த்தருக்குப் பிரியமானதை மாத்திரமே செய்வார்கள். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களின் நினைவுகளும், கர்த்தருடைய போதனைகளும் ஒருபோதும் முரண்படுவதில்லை.
கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷனுக்கு வரும் ஆசீர்வாதங்கள்
1. கர்த்தர், தம்முடைய வழியைப் போதிப்பார் (சங் 25:12)
2. அவன் ஆத்துமா நன்மையில் தங்கும் (சங் 25:13)
3. அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளும் (சங் 25:13)
4. கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது (சங் 25:14)
5. அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார் (சங் 25:14)
ஆத்துமா நன்மையில் தங்கும்
அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும் (சங் 25:13).
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களுக்கு அநேக நன்மைகள் உண்டாயிருக்கும். அவர்கள் ஆத்துமா நன்மையில் தங்கும். அவர்களுடைய சந்ததியார் பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள். கர்த்தர் தங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று இவர்கள் விரும்புகிறார்கள். கர்த்தருடைய போதனையைக் கேட்க இவர்கள் திறந்த இருதயத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். கர்த்தருடைய உபதேசத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள். கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து பயபக்தியாய் ஜீவிக்கிறார்கள். இதனால் இவர்களுடைய வாழ்க்கை குழப்பமில்லாமல் அமைதியாய் இருக்கிறது. இவர்கள் தங்கள் ஜீவியத்தில் தெய்வீக ஆறுதலும், தெய்வீக சமாதானமும் பெற்று ஜீவிக்கிறார்கள்.
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். கர்த்தர் இவர்களை ஆசீர்வதிக்கிறார். இந்த உலகத்தில் இவர்களுடைய ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறார். நாம் கர்த்தருக்குப் பயந்து ஜீவிக்கும்போது, நாமும், நம்முடைய சந்ததியாரும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். நம்முடைய சந்ததியார் பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள். நாம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்கிற வேண்டுதல்களுக்கும் விண்ணப்பங்களுக்கும், கர்த்தர் செவிகொடுத்து, நம்மையும் ஆசீர்வதிக்கிறார், நம்முடைய சந்ததியையும் ஆசீர்வதிக்கிறார்.
கர்த்தருடைய பிள்ளைகள் இந்தப் பூமியைவிட்டு கடந்துசெல்லும்போது, தங்களுடைய சந்ததியாருக்கு தெய்வீக ஆசீர்வாதங்களை விட்டுச் செல்கிறார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு நம்மால் ஐசுவரியங்களையும், சொத்துக்களையும், சம்பத்துக்களையும் சம்பாதித்து வைக்க முடியாமல் போனாலும், அவர்களுக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை சம்பாதித்து வைக்கவேண்டும்.
கர்த்தருடைய இரகசியம்
கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார் (சங் 25:14).
தமக்குப் பயந்து ஜீவிக்கிறவர்களோடு கர்த்தர் ஐக்கியமாயிருக்கிறார். கர்த்தருடைய இரகசியம் அவர்களிடத்தில் இருக்கிறது. அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைப் புரிந்துகொள்வார்கள். கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு தம்முடைய உடன்படிக்கையை தெரியப்படுத்துகிறார். ""அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவன் எவனோ, அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்வான்'' (யோவா 7:17) என்று இயேசு சொல்லுகிறார்.
தேவனே சங் 25 : 15#22
கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது
என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார் (சங் 25:15).
தாவீது கர்த்தரை நம்பி ஜெபிக்கிறார். தனக்கு எத்தனை ஆபத்துக்கள் வந்தாலும், கர்த்தரே தனக்கு ஆதரவாகயிருக்கிறவர் என்று விசுவாசித்து, அவரையே நோக்கிப் பார்க்கிறார். ""என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது'' என்று தாவீது விசுவாசத்தோடு சொல்லுகிறார். நம்முடைய கண்களும் கர்த்தரையே நோக்கிக் கொண்டிருக்கவேண்டும். நம்முடைய கால்களுக்கு சத்துருக்கள் அநேக கண்ணிகளை வைத்திருக்கலாம். நம்மைப் பிடிப்பதற்கு சத்துரு வலைகளை விரித்திருக்கலாம். நம்முடைய கண்கள் கண்ணிகளையும், வலைகளையும் நோக்கிப் பார்ப்பதற்குப் பதிலாக, கர்த்தரையே நோக்கிப் பார்க்கவேண்டும்.
நாம் கர்த்தரை நோக்கிப் பார்க்கும்போது, நம்முடைய கால்கள் சத்துருவின் வலைகளில் சிக்காது. ""கர்த்தரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்'' என்று தாவீது சொல்லுகிறார். தம்மை நம்புகிறவர்களை கர்த்தர் ஒருபோதும் கைவிடுகிறவரல்ல. தம்மை நோக்கிப் பார்த்து, தம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறவர்களை கர்த்தர் ஆபத்துக்களிலிருந்து மீட்டு இரட்சித்துக்கொள்கிறார். கர்த்தரே நம்முடைய பாதுகாப்பு. நம்முடைய பாதுகாப்பை நாமே தேடாமல், கர்த்தரிடத்தில் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, கர்த்தர் நம்மை தம்முடைய தெய்வீக வல்லமையினாலும், வலதுகரத்தினாலும் பாதுகாத்துக்கொள்வார்.
தான் கர்த்தரையே நம்பியிருப்பதை தாவீது மறுபடியுமாகச் சொல்லுகிறார். ""என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும், நாம் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன்'' (சங் 25:20). ""உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது. நான் உமக்குக் காத்திருக்கிறேன்'' (சங் 25:21) என்று தாவீது தன்னுடைய விசுவாசத்தைக் கர்த்தரிடத்தில் அறிக்கை செய்கிறார்.
தாவீது செய்த இரண்டு முக்கியமான காரியங்கள்
1. கர்த்தருக்குக் காத்திருந்தார் (சங் 25:3,5,21)
2. அவர் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருந்தன (சங் 25:15)
தனித்தவனும் சிறுமைப்பட்டவனுமாயிருக்கிறேன்
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன் (சங் 25:16).
தாவீது இந்த சங்கீதத்தின் ஆரம்பத்தில் ""என் தேவனே உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும், என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்'' (சங் 25:2) என்று கர்த்தரைத் துதித்துப் பாடினார். கர்த்தருடைய வாக்குத்தத்தம் தாவீதின் ஆத்துமாவுக்கு உற்சாகத்தைத் தருகிறது. தாவீது கர்த்தருடைய வார்த்தைகளைத் தியானிக்கிறார். இந்த சங்கீதத்தை ஆரம்பிக்கும்போது, ""என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன்'' (சங் 25:2) என்று சொன்னவர், இதை முடிக்கும்போதும் ""உம்மை நம்பியிருக்கிறேன்'' (சங் 25:20) என்று பாடி முடிக்கிறார்.
தாவீது இப்போது மிகுந்த நெருக்கத்திலிருக்கிறார். அவருடைய ஜீவனுக்கு ஆபத்துக்கள் உண்டாயிற்று. அவருடைய கால்களுக்கு நேராக வலைகள் விரிக்கப்பட்டிருக்கிறது. அவரைச் சுற்றிலும் கண்ணிகள் மறைவாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தாவீதின் கண்கள் கர்த்தரையே எப்போதும் நோக்கிக்கொண்டிருக்கிறது. தாவீது தனித்தவராகயிருக்கிறார். சிறுமைப்பட்டவராகயிருக்கிறார். தாவீதின் ஊழியக்காரராலும், போர்வீரர்களாலும் அவருக்கு உதவிபுரிய முடியவில்லை. தாவீது அவர்களை நம்பவும் இல்லை.
தாவீது மனுஷரை நம்புவதற்குப் பதிலாக, கர்த்தரையே நம்பியிருக்கிறார். தம்மை நம்புகிறவர்களை கர்த்தர் வெட்கப்பட்டு போகவிடமாட்டார். நாம் கர்த்தரை நம்பும்போது, நம்முடைய சத்துருக்களை நம்மை மேற்கொள்ளமாட்டார். தாவீதினுடைய இருதயத்தில் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது. சிறிய வியாகுலமாக ஆரம்பித்தது, இப்போது வளர்ந்து பெருகியிருக்கிறது. தாவீதுக்கு அநேக இடுக்கண்கள் உண்டாயிற்று. இருதயத்தில் சமாதானமும், சந்தோஷமும் பெருகுவதற்குப் பதிலாக வியாகுலங்கள் பெருகிற்று. தாவீது தன்னுடைய பரிதாபமான நிலமையை மனுஷரிடத்திலே சொல்லி புலம்புவதற்குப் பதிலாக, கர்த்தரிடத்தில் பயபக்தியோடு விண்ணப்பம்பண்ணுகிறார்.
என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்
என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும். என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும் (சங் 25:17,18).
தாவீது கர்த்தரிடத்தில் பாவமன்னிப்புக்காக ஜெபம்பண்ணுகிறார். ""என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார். பாவத்தின் சம்பளம் மரணமாயிருப்பதினால், தேவன் தம்முடைய கிருபையினால் தன்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளுமாறு தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். மனுஷருக்கு பாவத்தினால் சாபமும், சாபத்தினால் மரணமும் உண்டாகிறது. பாவம் செய்த ஆத்துமா வியாகுலப்படும். ஆத்துமாவில் இடுக்கண்கள் அதிகரிக்கும். பாவம் செய்தோருக்கு துன்பங்களும் வருத்தங்களும் மிகுதியாயிருக்கும்.
தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தான் செய்த பாவங்களையெல்லாம் ஒப்புக்கொண்டு, கர்த்தருடைய சமுகத்தில் அவற்றை அறிக்கை செய்கிறார். கர்த்தர்தாமே தம்முடைய கிருபையினால், தன்னுடைய துன்பத்தையும், வருத்தத்தையும் பார்த்து, தன்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளுமாறு வேண்டுதல் செய்கிறார்.
தாவீது கர்த்தரிடத்தில் பாவமன்னிப்புக்காக விண்ணப்பம்பண்ணும்போது, தன்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளுமாறு விண்ணப்பம்பண்ணுகிறார். தாவீதின் பாவங்களெல்லாம் பூரணமாய் மன்னிக்கப்படவேண்டும். அப்போதுதான் அவருடைய துன்பமும் வருத்தமும் அவரை விட்டு நீங்கும். தாவீது இப்போது நெருக்கத்திலும், இடுக்கண்களிலும் இருக்கிறார். இவையெல்லாம் தாவீதின் பாவத்தினால் அவருக்கு ஏற்பட்ட விளைவுகள். கர்த்தர் தாமே தன்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளுமாறும், தன்னுடைய இடுக்கண்களுக்கு தன்னை நீங்கலாக்கி விடுமாறும் தாவீதுகர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.
தாவீதுக்கு அநேக பிரச்சனைகளும், நெருக்கங்களும் உண்டாயிருக்கிறது. இவற்றிலிருந்து விடுபடுவதற்கு அவருக்கு எந்த வழியும் திறக்கப்படவில்லை. தாவீதின் கண்கள் விடுதலையின் வழியை பார்க்க முடியாமல் தவிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தாவீதின் கண்கள் இப்போது கர்த்தரையே நோக்கிக்கொண்டிருக்கிறது. கர்த்தர் தாமே, தான் தப்பிப்பதற்கு, ஒரு புதிய வழியை திறந்து கொடுக்குமாறு, தாவீது கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார். கர்த்தருடைய இரக்கத்திற்காக கெஞ்சுகிறார். ""என் மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார்.
நாம் இந்த உலகத்தில் எவ்வளவு பெரியவர்களாகயிருந்தாலும் நமக்கும் கர்த்தருடைய தயவு தேவைப்படுகிறது. கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் நம்மிடத்தில் இல்லையென்றால் நாம் ஒன்றுமில்லை. நமக்கு பணபலம் இருந்தாலும், பதவிபலம் இருந்தாலும், ஆள்பலம் இருந்தாலும், கர்த்தருடைய கிருபையும் இரக்கமுமே நமக்கு மெய்யான பலம். தாவீது இதை உணர்ந்தவராய், ""எனக்கு இரங்கும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார். தாவீதோடு வேலையாட்களும், யுத்தவீரர்களும் இருந்தாலும், அவர்கள் தாவீதுக்கு பெலமாய்த் தெரியவில்லை. ஆகையினால், ""நான் தனித்தவனும் சிறுமைப்பட்டவனுமாயிருக்கிறேன்'' என்று சொல்லி, கர்த்தர் தாமே தன்னை நோக்கிப் பார்க்குமாறும், தனக்கு இரங்குமாறும் விண்ணப்பம்பண்ணுகிறார்.
சத்துருக்கள்
என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைக் பகைக்கிறார்கள். என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன் (சங் 25:19,20).
சத்துருக்கள் தாவீதை சூழ்ந்திருக்கிறார்கள். தாவீது சத்துருக்களையும் பார்க்கிறார். கர்த்தரையும் பார்க்கிறார். தான் சத்துருக்களை பார்ப்பதினால் தனக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகாது என்பது தாவீதுக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய சத்துருக்களை தான் பார்ப்பதற்குப் பதிலாக, கர்த்தர் தாமே அவர்களைப் பார்க்கவேண்டுமென்று தாவீது விரும்புகிறார். ""என் சத்துருக்களைப் பாரும்'' என்று தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.
தாவீது கர்த்தரிடத்தில் தன்னையும் பார்க்குமாறு சொல்லுகிறார். சத்துருக்களையும் பார்க்குமாறு சொல்லுகிறார். ""என்மேல் நோக்கமாகி எனக்கு இரங்கும், நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்'' என்று தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னைத் தாழ்த்துகிறார். தன்னுடைய சத்துருக்களைப்பற்றிச் சொல்லும்போதோ, ""என் சத்துருக்களைப் பாரும், அவர்கள் பெருகியிருந்து உக்கிர பகையாய் என்னைப் பகைக்கிறார்கள்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார்.
""என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்'' (சங் 25:2) என்று இந்த சங்கீதத்தின் ஆரம்பத்தில் தாவீது ஏற்கெனவே சொன்னார். அதே வார்த்தைகளை இந்த சங்கீதத்தின் முடிவிலும், ""நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன்'' என்று சொல்லி இந்த சங்கீதத்தை முடிக்கிறார். தாவீது கர்த்தரிடத்தில் ஒன்றை மாத்திரமே கேட்கிறார். தன்னுடைய சரீரத்தைவிட தாவீதுக்கு அவருடைய ஆத்துமாவே முக்கியமானதாயிருக்கிறது. ஆகையினால், ""என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார்.
உமக்குக் காத்திருக்கிறேன்
உத்தமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன் (சங் 25:21).
தாவீது தேவனுக்கு விரோதமாகவும், மனுஷருக்கு விரோதமாகவும் பாவம் செய்திருக்கிறார். கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக தாவீது ஒரு பாவியாகவே நிற்கிறார். கர்த்தர் தாமே தன்னுடைய துன்பத்தையும், வருத்தத்தையும் பார்த்து தன்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளுமாறு தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணினார். இப்போதோ தன்னுடைய உத்தமத்தையும், நேர்மையையும் கர்த்தரிடத்தில் சாட்சியாய் அறிவிக்கிறார்.
தாவீது தேவனுக்கு முன்பாக குற்றமுள்ளவராயிருக்கிறார். தன்னுடைய பாவங்களை அங்கீகரிக்கிறார். ஆனாலும் தன்னுடைய சத்துருக்களைப் பொறுத்தளவில், தான் அவர்களுக்கு தீங்கு செய்யவில்லை என்றும், தான் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை என்றும் தாவீது கர்த்தரிடத்தில் சாட்சியாய் அறிவிக்கிறார். தன்னுடைய சத்துருக்களுக்கு முன்பாக தாவீது உத்தமமும் நேர்மையும் உள்ளவர். சத்துருக்கள் தாவீதை உக்கிர பகையாய்ப் பகைக்கிறார்கள். தாவீதோ அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. கர்த்தர் தன்னுடைய உத்தமத்தையும், நேர்மையையும் அறிந்திருக்கிறார் என்று தாவீது சாட்சியாய்ச் சொல்லுகிறார். ""உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது'' என்று தாவீது விசுவாசத்தோடு சொல்லுகிறார்.
நம்முடைய ஜீவியத்தில் நமக்குப் பிரச்சனைகளும், போராட்டங்களும், ஆபத்துக்களும் வரலாம். இவையெல்லாவற்றிற்கு மத்தியிலும் நாம் உத்தமமானவர்களாயும்,நேர்மையுள்ளவர்களாயும் நடந்துகொள்ளவேண்டும். நம்முடைய ஆபத்துக்களிலிருந்து நம்முடைய உத்தமமும், நேர்மையும் நம்மைப் பாதுகாக்கும்.
இஸ்ரவேலை மீட்டுவிடும்
தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும் (சங் 25:22).
""இஸ்ரவேல்'' என்னும் வார்த்தை கர்த்தருடைய சபையைக் குறிக்கும் வார்த்தையாகும். தாவீது நெருக்கத்திலும், ஆபத்திலும், இடுக்கண்களிலும், இக்கட்டுக்களிலும் இருந்தாலும், அவர் கர்த்தருடைய பிள்ளைகளையும் மறக்கவில்லை. நமக்கு ஆபத்துக்கள் வந்தாலும், நாம் நமக்காக ஜெபிப்பதோடு, மற்ற விசுவாசிகளுக்காகவும் ஜெபிக்கவேண்டும். கர்த்தர் தாமே தம்முடைய பிள்ளைகளெல்லோரையும், அவர்களுடைய எல்லா இக்கட்டுக்களுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடுமாறு விண்ணப்பம்பண்ணவேண்டும்.
தாவீதின் இக்கட்டுக்கள் பெரிதாயிருக்கிறது. அவருடைய இருதயத்தின் வியாகுலங்களும் பெருகியிருக்கிறது. தான் கர்த்தரை நம்பியிருப்பதினால் அவர் தன்னை வெட்கப்பட்டுப்போகாதபடி செய்வார் என்று தாவீது நம்புகிறார். தனக்கு உதவி செய்கிற கர்த்தர், கர்த்தருடைய சபையாருக்கும் உதவிசெய்யவேண்டுமென்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். இஸ்ரவேலுக்கு இக்கட்டுக்கள் வரக்கூடாது. கர்த்தர் தாமே இஸ்ரவேலை, அவர்களுடைய எல்லா இக்கட்டுக்களுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடுவாராக என்று தாவீது ஜெபிப்பதுபோல, நாமும் ஜெபிக்கவேண்டும்.
தாவீது தேவனிடம் ஏறெடுத்த விண்ணப்பங்கள்
1. என்மேல் நோக்கமாயிரும் (சங் 25:16)
2. எனக்கு இரங்கும்
3. என் இடுக்கண்களுக்கு எனக்கு நீங்கலாக்கி விடும் (சங் 25:17)
4. என் துன்பத்தைப் பாரும் (சங் 25:18)
5. என் வருத்தத்தைப் பாரும்
6. என் பாவங்களை மன்னித்தருளும்
7. என் சத்துருக்களைப் பாரும் (சங் 25:19)
8. என் ஆத்துமாவைக் காப்பாற்றும் (சங் 25:20)
9. என்னை விடுவியும்
10. நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்
11. உத்தமமும் நேர்மையும் என்னைக் காத்தருளுவதாக (சங் 25:21)
12. இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும் (சங் 25:22)