சங்கீதம் 27 விளக்கம்

  சங்கீதம் 27 விளக்கம்

(தாவீதின் சங்கீதம்.)

எட்டாவது நெருக்கத்தின் ஜெபம்

            
          

    பொருளடக்கம்

        1. ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுப்பதினால் உண்டாகும் பத்து விதமான நம்பிக்கை - (27:1-3) 

        2. ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுப்பதினாலும், தேவனிடத்தில் நம்பிக்கை வைப்பதனாலும் கிடைக்கும் எட்டு விதமான ஆசீர்வாதங்கள் - (27:4-6) 

        3. பத்து விண்ணப்பங்கள் - தேவனிடத்தில் வைக்கும்  நம்பிக்கையின் ஐந்து அம்சங்கள் - (27:7-14) 


    தாவீது தன்னுடைய சிங்காசனத்தில்  மறுபடியும் அமர்ந்த பின்பு அவர் இந்த சங்கீதத்தை எழுதியிருக்கவேண்டுமென்று  வேதபண்டிதர்களில் ஒரு சிலர் சொல்லுகிறார்கள். ஆனாலும் தாவீது தன்னுடைய துன்பங்களுக்கு மத்தியில் சிக்கி நெருக்கப்பட்டபோது, அவர் இந்த சங்கீதத்தை எழுதியிருக்கலாம் என்றும் ஒரு சிலர் சொல்லுகிறார்கள். தாவீது  வயது முதிர்ந்து, விடாய்த்துப்போனபோது அவர் இந்த சங்கீதத்தை எழுதினார் என்பதுதான் யூதருடைய பாரம்பரிய நம்பிக்கை. 


    பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம் செய்தார்கள்.  தாவீதும், அவர் சேவகரும் பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணினார்கள். தாவீது விடாய்த்துப்போனார். அப்போது  இஸ்பிபேனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்டவேண்டும் என்று இருந்தான். அப்போது  செருயாவின் குமாரனாகிய அபிசாய், தாவீதுக்கு உதவியாக வந்து, இராட்சதனாகிய அந்தப் பெலிஸ்தனை வெட்டிக் கொன்றுபோட்டான் (2சாமு 21:15-17).  கர்த்தர் தன்னை இந்த இக்கட்டிலிருந்து விலக்கிக் காத்தபோது, தாவீது இந்த சங்கீதத்தை எழுதியிருக்கலாம் என்று யூதர்கள் சொல்லுகிறார்கள். 


    தாவீது இந்த சங்கீதத்தை, மேலே சொல்லப்பட்ட எந்த சூழ்நிலையிலும் எழுதவில்லை என்றும் ஒரு சிலர் சொல்லுகிறார்கள். தாவீதின் ஆத்துமா  எல்லா வேளைகளிலும் கர்த்தரை நன்றியோடு துதிக்கிறது. தாவீது எப்போதுமே கர்த்தர்மீது பயபக்தியாயிருக்கிறார். தாவீதுக்குத் துன்பங்கள் வந்தபோது கர்த்தர்தாமே தாவீதை அவருடைய சத்துருக்களின் கைகளிலிருந்து மீட்டு இரட்சிக்கிறார்.  கர்த்தர் தனக்குச் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து தாவீது இந்த சங்கீதத்தை எழுதியிருக்கிறார்.


    தாவீது கர்த்தரிடத்தில் விசுவாசத்தோடிருக்கிறார். இதனால் அவருக்குள் தைரியமும் பரிசுத்தமும் உண்டாயிற்று (சங் 27:1-3). தாவீது கர்த்தரோடு  ஐக்கியமாயிருக்கிறார். கர்த்தரோடு கூடிய ஐக்கியத்தினால் தாவீது அநேக நன்மைகளை அனுபவிக்கிறார் (சங் 27:4-6). தேவனுடைய கிருபைக்காக, அவருடைய அநுக்கிரகத்திற்காக       தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார் (சங் 27:7-9,11,12). தாவீது கர்த்தரிடத்திலிருந்து எதிர்பார்க்கும் காரியங்களை ஜெபத்திலே சொல்லுகிறார். மற்றவர்களையும் கர்த்தரிடத்தில் விசுவாசம் வைக்குமாறு உற்சாகப்படுத்துகிறார்  (சங் 27:10,13,14). 


    தாவீதின் விசுவாசம் சங் 27 : 1-6

    கர்த்தர்  என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் வச.1

    கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?  (சங் 27:1)


    தாவீது கர்த்தரிடத்தில் ஜீவனுள்ள விசுவாசம் வைத்திருக்கிறார். கர்த்தருக்குள்  தாவீதுக்கு ஜெயம் கிடைத்திருக்கிறது. தாவீது கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்துகிறார். கர்த்தரே தாவீதுக்கு வெளிச்சமாயிருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதை, ""இஸ்ரவேலின் விளக்கு'' (2சாமு 21:17) என்று அழைக்கிறார்கள். அவர் மெய்யாகவே இஸ்ரவேல் ஜனங்களுக்கு  எரிந்து பிரகாசிக்கிற விளக்காகவே இருக்கிறார். 


    ஆனாலும் தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னைத் தாழ்த்துகிறார். சந்திரன் வெளிச்சத்தைக் கொடுத்தாலும், அது தனக்குத்தானே வெளிச்சமாயிருப்பதில்லை.  சூரியனிடத்திலிருந்து வெளிச்சத்தை வாங்கி அது வெளிச்சம் கொடுக்கிறது. அதுபோல தாவீதுக்கு அவரிடத்தில் வெளிச்சம் இல்லை. கர்த்தருடைய வெளிச்சத்தை தாவீது பெற்றுக்கொண்டு, அவர் இஸ்ரவேலுக்கு வெளிச்சமாயிருக்கிறார். கர்த்தருடைய வெளிச்சம் தாவீதின் மேல் ƒவிழுகிறது.  அந்த வெளிச்சம் தாவீதின் மூலமாய் இஸ்ரவேல் ஜனத்தாருக்கு பிரதிபலிக்கிறது. 


    தாவீதுக்கு கர்த்தரே  இரட்சிப்புமானவராகயிருக்கிறார்.  கர்த்தரில் தாவீது பாதுகாப்பாகயிருக்கிறார். கர்த்தரே தாவீதை இரட்சித்திருக்கிறார்.  தாவீதின் ஜீவனுக்கு கர்த்தரே பெலனானவர். தாவீது பல சமயங்களில் யுத்தங்களில் ஈடுபட்டிருந்தார். அவருடைய ஜீவனுக்கு ஆபத்து உண்டாயிற்று. அவர் பல சமயங்களில் சத்துருக்களினால் நெருக்கப்பட்டார்.  எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரே தாவீதினுடைய ஜீவனின் பெலனானவர். தாவீதின் ஜீவன் பலவீனமானது. இந்த பலவீனத்தில் கர்த்தருடைய பெலன் அவரை இடைக்கட்டித் தாங்கிற்று. 


    தாவீதுக்கு சத்துருக்கள் அநேகராயிருக்கிறார்கள். அவர்கள்       தாவீதுக்கு விரோதமாக கண்ணிகளை வைத்திருக்கிறார்கள். தாவீதை நெருக்குகிறார்கள்.ஆனாலும் தாவீது அவர்களுக்கு அஞ்சாமலிருக்கிறார்.  தாவீது தன்னுடைய சத்துருக்களுக்குப் பயப்படவில்லை. கர்த்தர் தாவீரோடு கூடயிருப்பதினால், அவருக்கு விரோதமாக யாராலும் எதிர்த்து நிற்கமுடியாது. தாவீதுக்குக் கிடைத்த வெற்றி, அவர் கர்த்தருக்குள் வைத்திருந்த விசுவாசத்தினால் கிடைத்த வெற்றியாகும்.  தாவீதுக்கு சத்துருக்கள் அநேகராயிருந்தாலும், அவர் விசுவாசத்தோடு ""யாருக்குப் பயப்படுவேன்'' என்றும், ""யாருக்கு அஞ்சுவேன்'' என்றும் தைரியமாய்ச் சொல்லுகிறார். 

    தாவீதின் சத்துருக்கள் வச.2-3

    என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள். எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான்  நம்பிக்கையாயிருப்பேன் (சங் 27:2,3). 


    தாவீதுக்கு விரோதமாக அவருடைய சத்துருக்கள் வருகிறார்கள்.  அவர்கள் பொல்லாதவர்கள். தாவீதின் பகைஞர்கள் அவருடைய மாம்சத்தைப்  பட்சிக்க அவரை நெருக்குகிறார்கள். ஆனால் அவர்களால் தாவீதை ஒன்றும் செய்யமுடியவில்லை. அவர்கள் பொல்லாதவர்களாயிருந்தாலும்,  தாவீதை நெருங்கும்போது, அவர்கள் இடறி விழுந்துவிடுகிறார்கள். 


    தாவீது  தன்னுடைய சத்துருக்களை  ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அவர்களோ  இடறி விழுந்துவிடுகிறார்கள். அவர்களுடைய பெலன் அவர்களைவிட்டு நீங்கிப்போயிற்று. அவர்கள் பெலவீனமடைந்தார்கள்.  தங்கள் சுயபலத்தை நம்பி அவர்கள் தாவீதை நெருக்கினார்கள். ஆனால் தங்கள் தீயயோசனைகளை அவர்களால் தொடர்ந்து நிறைவேற்ற முடியவில்லை. தாவீதுக்கு விரோதமான தங்கள் சதிஆலோசனைகளில்  அவர்களால் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியவில்லை. 


    தாவீதுக்கு விரோதமாக எழும்பி வந்திருக்கிற  சத்துருக்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் ஒரு சேனையைப்போல திரளான  எண்ணிக்கையிலிருக்கிறார்கள். அவர்கள் தாவீதுக்கு விரோதமாக ஒரு பாளையமிறங்கி இருக்கிறார்கள். ஒரு மனுஷக்கு விரோதமாக ஒரு பாளையம் வந்திருக்கிறது. ஆனாலும் தாவீதின் இருதயமோ சத்துருக்களின் திரளான எண்ணிக்கையைப் பார்த்து பயப்படவில்லை. 


    நம்முடைய சத்துருக்கள் நமக்கு விரோதமாக திரளான எண்ணிக்கையில் வரலாம். அவர்கள் ஒரு சேனையைப்போல இருக்கலாம்.  நம்முடைய கர்த்தர் சேனைகளின் கர்த்தர். சேனைகளின் கர்த்தர் நம்மோடு கூடயிருக்கும்போது, சத்துருக்களின் சேனையினால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது.   சேனைகளின் கர்த்தர் நம்மைப் பாதுகாப்பார். 


    தனக்கு விரோதமாக சத்துருக்கள் ஒரு பாளையமிறங்கியிருப்பதை தாவீது பார்க்கிறார். ஆனால் அவருடைய இருதயம் அவர்களைப் பார்த்து பயப்படவில்லை. தாவீது கர்த்தரை நோக்கிப் பார்க்கிறார்.  சேனைகளின் கர்த்தராகிய கர்த்தரிடத்தில் தாவீது நம்பிக்கை வைத்திருக்கிறார். தாவீதின் சத்துருக்கள் அவர்மீது யுத்தம்பண்ணினாலும், தாவீது இந்த யுத்தத்தில், கர்த்தர்மேலே நம்பிக்கையாயிருக்கிறார். கர்த்தர் தன்னை  தம்முடைய கூடாரத்தில் மறைத்துக்கொள்வார் என்றும், அவர் தாமே தன்னை தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்துக்கொள்வார் என்றும் தாவீது விசுவாசத்தோடு சொல்லுகிறார். கர்த்தர் தன்னைப் பாதுகாப்பது மாத்திரமல்ல, அவர் தன்னை கன்மலையின்மேல் உயர்த்துவார் என்றும்  தாவீது விசுவாசத்தோடு அறிக்கை செய்கிறார் (சங் 27:5). 

    தாவீது தேவனிடத்தில் வைத்திருந்த நம்பிக்கையின் அம்சங்கள்

        1. கர்த்தர் என் வெளிச்சமானவர் (சங் 27:1)

        2. என் இரட்சிப்புமானவர்

        3. என் நம்பிக்கை

        4. என் பெலன்

        5. என் ஜீவன்

        6. என் நம்பிக்கை

        7. சத்துருக்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பவர் (சங் 27:2)

        8. பகைஞர்களிடமிருந்தும்  பொல்லாதவர்களிடமிருந்தும் என்னைப் பாதுகாப்பவர்

        9. நெருக்கங்களிலிருந்து என்னை மீட்பவர்  (சங் 27:3)

        10. யுத்தத்தில் எனக்கு உதவிசெய்பவர்

    கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பது வச.4

    கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்  (சங் 27:4). 


    தாவீது கர்த்தருடைய சமுகத்தில் பயபக்தியாய் ஜெபம்பண்ணுகிறார்.  கர்த்தரிடத்தில் தாவீது விசுவாசத்தோடு விண்ணப்பம்பண்ணுகிறார். தாவீதின் ஜெபத்தில் உண்மையிருக்கிறது. விசுவாசம் இருக்கிறது. பயபக்தியும் இருக்கிறது.  


    தாவீது கர்த்தரோடு எப்போதும் ஐக்கியமாயிருக்கவேண்டும் என்று விரும்புகிறார்.  தாவீதின் இருதயத்தில் ஒரே ஒரு விருப்பம் மாத்திரமே இருக்கிறது. தன் ஜீவனுள்ள நாளெல்லாம் தாவீது  கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதை நாடுகிறார். கர்த்தருடைய ஆலயத்தின் பிரகாரங்களில் ஆசாரியர்கள் தங்கியிருப்பார்கள். தாவீதுக்கோ தங்குவதற்கு  பெரிய அரண்மனை உண்டு. ஆனாலும் அரண்மனையில் தங்குவதைவிட, கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே தாவீது நாடுகிறார். 


    கர்த்தருடைய பிள்ளைகளெல்லோருமே  அவருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதை நாடவேண்டும்.  நாம் தங்கியிருப்பதற்கு கர்த்தருடைய ஆலயத்தைத் தவிர வேறு இடம் எதுவுமில்லை. கர்த்தருடைய ஆலயத்தில் மாத்திரமே அவருடைய மகிமையைப் பார்க்க முடியும். அவருடைய ஆலயத்தில் மாத்திரமே  அவருடைய வசனங்களை ஆராய்ச்சி செய்ய முடியும். கர்த்தருடைய ஆலயத்தில் மாத்திரமே நாம் மற்ற பரிசுத்தவான்களோடு சேர்ந்து கர்த்தரை நன்றியோடு துதிக்க முடியும். நம்முடைய நித்திய ஜீவனுக்காக நாம் கர்த்தருடைய ஆலயத்தில் அவரைத் துதிக்கவேண்டும். நம்முடைய வாழ்நாளில்  நமக்கு அநேக அலுவல்கள் இருந்தாலும், கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருந்து, அவரைத் துதிப்பதே பிரதான அலுவலாகயிருக்கவேண்டும்.


    தாவீது தன் ஜீவனுள்ள நாளெல்லாம்  கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதை விரும்பி, இதையே  தன் விண்ணப்பமாக ஏறெடுக்கிறார். ""கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்'' என்று  தாவீது பயபக்தியாய்ச் சொல்லுகிறார். தன் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருக்கவேண்டும் என்னும் ஒன்றை மாத்திரமே தாவீது கர்த்தரிடத்தில் கேட்கிறார்.  இதையே அவர் நாடுகிறார். 


    நாமும் கர்த்தரிடத்தில் ஏதாவது ஒன்றை கேட்கவேண்டுமென்றால், தாவீதைப்போல, நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம், நாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருக்கவேண்டும் என்பதையே கேட்கவேண்டும். தாவீதின் இருதயத்தில் வேறு வாஞ்சை எதுவுமில்லை. தாவீது  கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும் சிலாக்கியம் அவருக்குக் கிடைக்கும். 


    தாவீதுக்கு கர்த்தருடைய மகிமையைப்பற்றி ஏற்கெனவே ஓரளவு தெரியும்.   கர்த்தருடைய பரிசுத்தமே அவருடைய மகிமை. கர்த்தருடைய பராக்கிரமத்தின் நாளிலே  அவருடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமும் உள்ளவர்களாயிருப்பார்கள் (சங் 110:3).  கர்த்தருடைய காருணியமே அவருடைய சௌந்தரியம். கர்த்தருடைய காருணியம் எத்தனை பெரியது என்றும், அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது என்றும் சகரியா தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறார் (சக 9:17). கர்த்தருடைய சுபாவங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவருடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் நாம் தங்கியிருக்கும்போது, அவருடைய  பூரண சுபாவத்தின் சௌந்தரியத்தை நம்மால் பார்க்க முடியும்.

    தாவீதின் வாஞ்சைகள்

        1. மரிக்கும் வரையிலும் தேவனுடைய ஆலயத்தில் தங்கவேண்டும்

        2. கர்த்தருடைய அழகைக் காணவேண்டும்

        3. கர்த்தருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டும்

    கர்த்தர் தாவீதை தமது கூடார மறைவிலே ஒளித்து வைப்பார் வச.5-6

    தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த ப-களையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்  (சங் 27:5,6).   


    நாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருக்கும்போது நமக்கு தேவனுடைய  தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும். தாவீதுக்கு சத்துருக்கள் அநேகராயிருந்தார்கள்.   அவருக்கு தீங்கு நாட்கள் ஏராளமாய் உண்டாயிற்று. ஆனாலும் தாவீதை எந்தத் தீங்கும் அணுகவில்லை.  தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருக்கிறார். கர்த்தருடைய ஆலயம் அவருடைய பரிசுத்த கூடாரம். கர்த்தர் தம்மை நம்பி, தம்முடைய ஆலயத்தில் தங்கியிருக்கிற பிள்ளைகளை, தம்முடைய கூடாரத்தில் மறைத்து வைக்கிறார். தம்முடைய கூடார மறைவிலே அவர்களை ஒளித்து வைக்கிறார். 


    யோவாஸ் தாவீதின் சந்ததியில் வந்த  ஒரு ராஜா. அவர் ஆறுவருஷகாலமாக தேவாலயத்திலே ஒளித்து வைக்கப்பட்டார்.  சத்துருக்களால் யோவாசை கண்டுபிடிக்க முடியவில்லை. கர்த்தர் தாமே யோவாசை தம்முடைய கூடார மறைவிலே ஒளித்து வைத்துக்கொண்டார்.  சத்துருக்களிடமிருந்தும், அவர்களுடைய பொல்லாத பட்டயங்களிலிருந்தும் கர்த்தர் யோவாசை பாதுகாத்தார். அவருடைய ஜீவனைப் பாதுகாத்ததோடு, கர்த்தர் யோவாசை சிங்காசனத்திலும் அமரச் செய்தார் (2இராஜா 11:3). 


    நெகேமியாவுக்கும் தேவனுடைய ஆலயமே பாதுகாப்பான இடமாகயிருந்தது. ""மெகதாபெயே-ன் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும் போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்'' (நெகே 6:10).


    கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதே மெய்யான பாதுகாப்பு.  ஆலயத்தின் சுவர்கள் நம்மைப் பாதுகாக்காது. செங்கல்களால் கட்டப்பட்ட சுவர்கள் நம்மைப்  பாதுகாக்கும் அரண்களல்ல. ஆலயத்தின் கட்டிடத்தைவிட, ஆலயத்தில் வாசம்பண்ணுகிற கர்த்தரே நம்மைப் பாதுகாக்கிறவர். நாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கும்போது, அவரோடு எப்போதும் ஐக்கியமாயிருக்கவேண்டும் என்பதை நாடவேண்டும். கர்த்தரோடு கூடயிருப்பதுதான் நமக்குப் பாதுகாப்பு. அதுவே நமக்கு மெய்யான ஆறுதல்.


    தாவீது  கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதை விரும்புகிறார்.  தீங்கு நாளிலே கர்த்தர் தன்னை தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்துக்கொள்வார் என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார்.  கர்த்தர் தாவீதை அவருடைய சத்துருக்களின் கைகளிலிருந்து பாதுகாப்பதோடு, அவர் தாவீதின் தலையை, அவரைச் சுற்றிலுமிருக்கிற, அவருடைய சத்துருக்களுக்கு மேலாகவும் உயர்த்தவும் செய்வார். இதனிமித்தமாய்  தாவீது கர்த்தருடைய கூடாரத்திலே ஆனந்த பலிகளைச் செலுத்துவார். கர்த்தரைப் பாடுவார். அவரைக் கீர்த்தனம்பண்ணுவார். கர்த்தருடைய சமுகத்தில் அடைக்கலமாய் வந்திருக்கிற ஜனங்கள் கர்த்தரைப் பாடி அவரைக் கீர்த்தனம்பண்ணுவார்கள்.  

    தீங்கு நாளில் கர்த்தர் நமக்குச் செய்யும் காரியங்கள்

        1. தீங்கு நாளில் அவருடைய கூடாரத்தில் மறைப்பார்

        2. அவருடைய கூடார மறைவில் வைத்துக் காப்பார்

        3. என்னைக் கன்மலையின் மேல் உயர்த்துவார்

        4. என் தலையை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்துவார் (சங் 27:6)


    தாவீதின் ஜெபம் சங் 27 : 7-14

    எனக்கு உத்தரவு அருளிச்செய்யும் வச.7

    கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்            (சங் 27:7).  


    தாவீது கர்த்தரிடத்தில் ஏராளமான விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார். இப்போது தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருக்கவில்லை. அவர் எங்கேயிருந்தாலும், தன்னுடைய ஜெபத்தினால்,  தேவனுடைய கிருபாசனத்தண்டையிலே கிட்டிச் சேருகிற வழியை கண்டுபிடித்திருக்கிறார். தான் கூப்பிடுகிற சத்தத்தை கர்த்தர் கேட்கவேண்டுமென்று, தனக்கு இரங்க வேண்டுமென்றும், தனக்கு உத்தரவு  அருளிச் செய்யவேண்டுமென்றும், தாவீது தான் இருந்த இடத்திலிருந்தே ஜெபம்பண்ணுகிறார். தாவீதின் கூப்பிடுதல் அவருடைய இருதயத்திலிருந்து கூப்பிடுகிற சத்தமாகவும் இருக்கிறது. அதே வேளையில் அது, அவர் தன்  வாயினால் கூப்பிடுகிற சத்தமாகவும் இருக்கிறது. 


    நம்முடைய ஜெபங்களும் உண்மையுள்ளதாயும், விசுவாசமுள்ளதாயும் இருக்கவேண்டும். நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்தும் ஜெபம்பண்ணவேண்டும்.  நம்முடைய வாயின் வார்த்தைகளினாலும் ஜெபம்பண்ணவேண்டும். நாம் விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது, கர்த்தர் தம்முடைய கிருபையினால் நாம் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டு,  நமக்கு இரங்கி, நம்முடைய விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பார். ஜெபத்திற்குப் பதில் கொடுப்பது கர்த்தருடைய கிருபை. 


    தாவீது தன்னுடைய ஜெபத்தில் உறுதியாயத் தரித்திருக்கிறார்.  அவருடைய சிந்தனைகளெல்லாமே கர்த்தருடைய கிருபையைப்பற்றியதாக இருக்கிறது.  விசுவாசத்தோடு ஜெபித்தால், கர்த்தர் தம்முடைய கிருபையினால் இரங்கி, தனக்குப் பதில் கொடுப்பார் என்னும் விசுவாசம் தாவீதின் இருதயத்தில் உறுதியாய்ப் பதிந்திருக்கிறது. தாவீது கர்த்தருடைய கிருபாசனத்தண்டையில் வந்து, தன்னுடைய வார்த்தையினாலும்,  இருதயத்தின் சிந்தனையினாலும், ஜெபங்களை ஏறெடுக்கிறார்.

    தாவீது தேவனிடம் ஏறெடுத்த விண்ணப்பங்கள்

        1. நான் கூப்பிடும்போது என் சத்தத்தைக் கேளும் (சங் 27:7)

        2. எனக்கு இரங்கும்

        3. எனக்கு உத்தரவு அருளிச் செய்யும்

        4. உமது முகத்தை எனக்கு மறையாதேயும்   (சங் 27:9)

        5. கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப் போடாதேயும்

        6. என்னை நெகிழவிடாதேயும்

        7. என்னைக் கைவிடாமல் இரும்

        8. உமது வழியை எனக்குப் போதியும் (சங் 27:11)

        9. செவ்வையான பாதையில் நடத்தும்

        10. என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்           (சங் 27:12) 

    உம்முடைய முகத்தையே தேடுவேன் வச.8

    என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்-ற்று  (சங் 27:8). 


    ""என் முகத்தைத் தேடுங்கள்'' என்று கர்த்தர் தாவீதுக்குச் சொல்லியிருக்கிறார்.  கர்த்தருடைய உபதேசம் தாவீதின் இருதயத்தில் ஆழமாய்ப் பதிந்திருக்கிறது. கர்த்தருடைய  வார்த்தைக்கு தாவீது கீழ்ப்படிகிறார். அவருடைய இருதயமும் கீழ்ப்படிகிறது. தாவீதின் இருதயத்தில் கர்த்தர் சொன்ன வார்த்தை நிரம்பியிருக்கிறது.  கர்த்தருடைய வார்த்தையை தாவீது தன்னுடைய இருதயத்திலே, திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்.  


    ""உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே'' என்று  தாவீதின் இருதயம் கர்த்தரிடத்தில் சொல்லிற்று. ""என் முகத்தைத் தேடுங்கள்'' என்று கர்த்தர் தாவீதுக்குச் சொன்னார். கர்த்தருடைய வார்த்தைக்கு  தாவீதின் இருதயம் கீழ்ப்படிகிறது. கர்த்தருடைய வார்த்தையை தாவீதின் இருதயம் தியானிக்கிறது. கர்த்தருடைய சமுகத்திலே, ""உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே'' என்று தாவீதின் இருதயம் பயபக்தியாய் தீர்மானித்திருக்கிறது. 


    ""நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்'' (சங் 145:16) என்று தாவீது தன்னுடைய சங்கீதத்திலே பாடுகிறார். கர்த்தருடைய முகத்தைத் தேடவேண்டும் என்பதே தாவீதின் வாஞ்சை. கர்த்தருடைய  முகத்தின் ஒளி தன்மேல் பிரகாசிப்பதே தாவீதின் வாஞ்சை (சங் 4:6,7). கர்த்தருடைய முகத்தின் ஒளி தாவீதின்மேல் பிரகாசிக்கும்போது, அவருடைய இருதயம் அதிக சந்தோஷத்தினால் நிரம்பியிருக்கும். 

    தேவனைத் தேடுவோருக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதங்கள்

        1. கர்த்தரைக் கண்டடைவாய் (உபா 4:29; 1நாளா 28:9; 2நாளா 15:2;          எரே 29:13)

        2. பரலோகத்திலிருக்கிற கர்த்தர்,  விண்ணப்பத்தைக் கேட்பார் (2நாளா 7:14)

        3. பாவத்தை மன்னிப்பார் (2நாளா 7:14)

        4. தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பார் (2நாளா 7:14)

        5. தேவனுடைய நன்மை கிடைக்கும்  (எஸ்றா 8:22)

        6. கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையுங் குறைவுபடாது  (சங் 34:9-10)

        7. கர்த்தரைத் தேடுகிறவர்கள் இருதயம் வாழும்  (சங் 69:32; ஆமோ 5:4-8)

        8. கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்          (நீதி 28:5)

        9. கர்த்தர் உங்கள்மேல் நீதியை வருஷிக்கப் பண்ணுவார் (ஓசி 10:12)

        10. தேவனுடைய ராஜ்யமும், நீதியும் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33)

        11. தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்  (மத் 7:7-11)

        12. தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிப்பார் (எபி 11:6)

    உமது முகத்தை எனக்கு மறையாதேயும் வச.9-10

    உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும். என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்  (சங் 27:9,10). 


    தாவீது கர்த்தருடைய சமுகத்தில்  தன்னுடைய உத்தமத்தைப்பற்றிப் பேசினாலும்,  கர்த்தருக்கு விரோதமாக தான் செய்த பாவங்களையும் அவர் நினைவுகூருகிறார். தன்னுடைய பாவத்தினிமித்தம் தேவனுடைய  கோபத்திற்கும் சாபத்திற்கும் தான் பாத்திரவானாயிருப்பதை தாவீது அங்கீகரிக்கிறார். ஆனாலும் கர்த்தர் தன்னை தம்முடைய கிருபையினால் திருத்துமாறு தாவீது மிகுந்த பணிவோடு  விண்ணப்பம்பண்ணுகிறார்.  


    கர்த்தருடைய முகத்தைத் தேடுவதே தாவீதுக்குப் பிரியமானது. இதுவே அவருடைய இருதயத்தின் வாஞ்சை. தாவீதினுடைய பாவத்தினிமித்தம் கர்த்தர் தம்முடைய முகத்தை தாவீதுக்கு மறைக்க வாய்ப்புள்ளது. தாவீது தன்னுடைய பாவத்தை உணர்ந்து, ""உமது முகத்தை எனக்கு மறையாதேயும்'' என்று பணிவோடு விண்ணப்பம்பண்ணுகிறார். மேலும், ""நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்'' என்றும் தாவீது கர்த்தருடைய சமுகத்தில் கெஞ்சி மன்றாடுகிறார். 


    கர்த்தருடைய கிருபை தாவீதுக்குத் தேவை. கர்த்தரே தாவீதுக்குப் பெலனாயிருக்கிறார்.  கர்த்தர் தாவீதுக்கு உதவிசெய்கிறார். கர்த்தர் தம்முடைய சமுகத்திலிருந்து தாவீதை விலக்கிப்போட்டால், தாவீது  உதவியற்றவராகயிருப்பார். கர்த்தருடைய சமுகமே அவருக்கு ஒத்தாசை வருகிற பர்வதம். கர்த்தர் தம்முடைய முகத்தை தனக்கு மறைத்துவிட்டால், தன்னுடைய நிலமை  பரிதாபமாகயிருக்கும் என்பதை தாவீது உணர்ந்திருக்கிறார். 


    தாவீது  கர்த்தரைப்பற்றிச் சொல்லும்போது, ""நீரே எனக்குச் சகாயர்'' என்று சொல்லுகிறார். தாவீது கர்த்தரை, ""என் இரட்சிப்பின் தேவனே'' என்று அழைத்து, தன்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்து,   தன்னை இரட்சிக்குமாறு பணிவோடு விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தருடைய சகாயம் தாவீதுக்குக் கிடைக்கவில்லையென்றால் அவருக்கு ஒரு ஆதரவும் இல்லை. ஒரு தேறுதலும் இல்லை. ஆகையினால் தாவீது தன்னுடைய ஆத்தும இரட்சிப்புக்காக கெஞ்சி மன்றாடுகிறார்.  ""என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும், என்னைக் கைவிடாமலும் இரும்'' என்று மிகுந்த பணிவோடு விண்ணப்பம்பண்ணுகிறார்.


    தாவீது கர்த்தரையே நம்பியிருக்கிறார். அவரையே சார்ந்து ஜீவிக்கிறார். தன்னுடைய தகப்பனும், தன்னுடைய தாயும்          தன்னைக் கைவிட்டாலும், கர்த்தர் தன்னைக் கைவிடாமல், தம்மிடமாகச் சேர்த்துக்கொள்வார் என்னும் நம்பிக்கை தாவீதினிடத்தில் அதிகமாயிருக்கிறது. இந்த உலகத்தில் தாவீதுக்கு நெருகிய சிநேகிதர்கள் அநேகர் இருக்கிறார்கள்.  அவர்களிடமிருந்து தாவீதுக்கு சில உதவிகளும், ஒத்தாசைகளும் வரும். 


    ஆனாலும் எல்லா சூழ்நிலைகளிலும் அவர்களால்  தாவீதுக்கு உதவி செய்யமுடியாது. அவர்கள் தாவீதை விட்டு தூரமாய் விலகிப்போய்விடலாம். ஒருவேளை அவர்கள் மரித்துப்போய்விடலாம். ஒருவேளை தாவீதுக்கு உதவிசெய்யும் ƒதிராணி  அவர்களுக்கு இல்லாமற்போகலாம். ஒருவேளை அவர்கள் தாவீதை மறந்துவிடலாம். ஒருவேளை அவர்கள் தாவீதின்மீது வைத்திருக்கிற அன்பு குறைந்துபோகலாம். அவர்கள் தாவீதை நேசிப்பதற்குப் பதிலாக தாவீதின்மீது கோபமாயிருக்கலாம்.  


    இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தாவீது   ஒரு உதவியும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையிலிருப்பார். தாயும் தகப்பனும் இல்லாத அநாதையைப்போல இருப்பார். ஆனாலும் தாவீது  கர்த்தரை நம்புகிறார். கர்த்தர் தனக்கு உதவிசெய்வார் என்று விசுவாசிக்கிறார். இந்த விசுவாசத்தோடு, ""என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்'' என்று  முழுநம்பிக்கையோடு சொல்லுகிறார். 

    தேவனிடம் வைக்க வேண்டிய நம்பிக்கையின் அம்சங்கள்

        1. கர்த்தர் என் சகாயர்

        2. தேவன் என் இரட்சகர்

        3. கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்ளுவார் (சங் 27:10)

        4. கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசிக்கிறேன் (சங் 27:11)

        5. கர்த்தர், என் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் (சங் 27:14)

    கர்த்தாவே உமது வழியை எனக்குப் போதித்தருளும் வச.11-12

    கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும். என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்  (சங் 27:11,12). 


    தாவீது கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வர விரும்புகிறார்.  தாவீதுக்கு கர்த்தருடைய வழி தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் தாவீதால் கர்த்தரைப் பின்பற்றிச் செல்லமுடியும். தன்னுடைய சுயபுத்தியினால்,  சுயமுயற்சியினால் கர்த்தருடைய வழியை தாவீதால் புரிந்துகொள்ள முடியாது. கர்த்தர் தாமே தனக்கு தம்முடைய வழியை போதித்தருளவேண்டுமென்று தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.


    தாவீது தன்னுடைய சுயமுயற்சியினால் நடக்கும்போது, ஒருவேளை அவர் தவறான பாதையில் போய்விடுவார். ஒருவேளை அவர் செவ்வையான பாதையில் நடந்தாலும் அவருக்குள் ஒரு நிச்சயம் இருக்காது. தான் நடக்கிற பாதை செவ்வையான பாதையா அல்லது தவறான பாதையா என்னும் நிச்சயம்  இல்லாமல் குழப்பத்தில் நடப்பார். கர்த்தர் தம்முடைய வழியை தாவீதுக்குப் போதித்தால், கர்த்தருடைய செவ்வையான வழியை தாவீது அறிந்து கொள்வார். 


    தாவீதின் எதிராளிகள் அவரைப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.  எல்லா பக்கங்களிலும் அவர்கள் தாவீதை சூழ்ந்திருக்கிறார்கள்.  தன்னுடைய எதிராளிகளினிமித்தம் கர்த்தர் தாமே தன்னை செவ்வையான பாதையில் நடத்துமாறு தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். 


    தாவீது தன்னை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.  கர்த்தர் தன்னைப் பாதுகாத்துக்கொள்வார் என்னும் நிச்சயம் தாவீதுக்கு உண்டு.  தன்னுடைய சத்துருக்களின் இஷ்டத்திற்கு கர்த்தர் தன்னை ஒப்புக்கொடுத்துவிடக்கூடாது என்று  தாவீது ஜெபிக்கிறார். அவர்கள் தாவீதின் ஜீவனை வேட்டையாட வந்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாக்க  தாவீதுக்கு அரண் எதுவுமில்லை. கர்த்தர் தாமே தாவீதுக்குப் பாதுகாப்பாயிருக்கிறார். கர்த்தருடைய பாதுகாப்பே மெய்யான பாதுகாப்பு.  கர்த்தர் தாவீதைக் கைவிட்டுவிட்டால், தாவீதின் சத்துருக்கள் தங்கள் இஷ்டத்திற்கு தாவீதைக் கொடுமைப்படுத்துவார்கள்.


    தாவீதுக்கு விரோதமாய் வந்திருக்கிறவர்கள் துன்மார்க்கர்கள். அவர்கள் பொய்ச்சாட்சிகள். அவர்கள் ஆக்கிரமித்து சீறுகிறவர்கள்.  இப்படிப்பட்டவர்கள் தாவீதுக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள். தாவீதின் இரத்தத்தின்மீது அவர்கள் வெறியாயிருக்கிறார்கள். அவர்கள் தாவீதுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லி, தாவீதின் நற்பெயருக்கு களங்கம் உண்டுபண்ணுகிறார்கள். ஆக்கிரமித்து சீறுகிறவர்கள் இரத்தப்பிரியராயும்,  இரத்த வெறியராயும் இருப்பார்கள். இப்படிப்பட்ட துன்மார்க்கர்களே தாவீதுக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள். அவர்களே தாவீதின் சத்துருக்கள். அந்த சத்துருக்களின் இஷ்டத்திற்குக் கர்த்தர் தன்னை ஒப்புக்கொடுத்துவிடாதவாறு, தாவீது கர்த்தருடைய சமுகத்தில் பணிவாய் வேண்டிக்கொள்கிறார். 

    ஜீவனுள்ளோர் தேசம் வச.13

    நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக்  காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்  (சங் 27:13). 


    தாவீது ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையை காணப்போவதாக விசுவாசிக்கிறார். இந்த விசுவாசமே தாவீதைப் பலப்படுத்துகிறது.  இந்த விசுவாசம் தாவீதுக்கு இல்லையென்றால் அவர் எப்போதோ கெட்டுப்போயிருப்பார். சத்துருக்கள் தாவீதை நெருக்கி ஒடுக்கும்போது, தாவீதுக்குள் இந்த விசுவாசமே நிரம்பியிருக்கிறது. இந்த விசுவாசம் தாவீதுக்குள் இல்லையென்றால், சத்துருக்கள் அவரை சூழ்ந்து நெருக்கும்போது, தாவீது  பலவீனமடைந்து கீழே விழுந்திருப்பார். 


    கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம். கர்த்தருடைய நன்மைகளை விசுவாசித்து நடக்கிற நாம், கர்த்தருக்கு ஏற்றவேளையிலே அவருடைய நன்மைகளைத் தரிசித்து நடப்போம்.  கர்த்தர் தம்முடைய நன்மைகளை நமக்கு ஆசீர்வாதமாகவும், ஆறுதலாகவும் தருகிறார். ஜீவனுள்ளோருடைய தேசத்தைக் காண்போம் என்பதே நம்முடைய விசுவாசம் அந்தத் தேசத்திலே கர்த்தருடைய நன்மையை நாம் காணப்போகிறோம்.  சர்வசிருஷ்டிகளும் இந்த நாளைக் காண்பதற்காக ஏங்கி தவித்துக்கொண்டிருக்கிறது. பரலோகமே ஜீவனுள்ளோருடைய தேசம். 


    இந்தப் பூமி மரித்துப்போகிறவர்களின் தேசம். இந்தப் பூமியிலுள்ளவர்களெல்லோருமே மரித்துப்போவார்கள்.  பரலோகத்திலுள்ளவர்களோ நித்திய ஜீவனைப்பெற்று நித்தியகாலமாய் ஜீவிப்பார்கள். இந்தப் பூமியில் நாம் ஜீவிக்கிற காலம் வரையிலும் நமக்கு பாடுகளும், வேதனைகளும், உபத்திரவங்களும் உண்டு. இவற்றையெல்லாம் நாம் மேற்கொள்ளவேண்டுமென்றால்,  ஜீவனுள்ளோருடைய தேசத்தை விசுவாசிக்கவேண்டும். கர்த்தருடைய நன்மையை நாம் காண்போம் என்னும் விசுவாசம் நமக்குள் உறுதியாயிருக்கவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரபஞ்சத்தின் பாடுகளை நம்மால் சகித்துக்கொள்ள முடியும். இந்தப் பூமியிலுள்ள சோதனைகளை நம்மால் மேற்கொள்ள முடியும். 

    கர்த்தருக்குக் காத்திரு

    கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு (சங் 27:14).


    தாவீது இதுவரையிலும் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணினார். இப்போது  அவர் தனக்குத்தானே சில ஆவிக்குரிய ஆலோசனைகளைச் சொல்லிக்கொள்கிறார்.  ஒருவேளை தாவீது இந்த ஆலோசனைகளை அவருடைய சிநேகிதர்களுக்கும் சொல்லியிருக்கலாம். ""கர்த்தர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்'' இதுவே தாவீது சொல்லுகிற உபதேசம். இந்த வாக்கியத்திற்கு, ""கர்த்தர் உன் ஆவியை முறிந்துபோகாமல்  காத்துக்கொள்வார்'' என்று பொருள் சொல்லலாம்.


    கர்த்தர் நம்மை ஸ்திரப்படுத்தி  பலப்படுத்தும்போது, அந்தப் பலத்தினால் நாம் கர்த்தருக்குக் காத்திருக்கவேண்டும். விசுவாசத்தோடும், ஜெபத்தோடும் கர்த்தருக்குக் காத்திருக்கவேண்டும். கர்த்தருடைய சித்தத்திற்கு  ஒப்புக்கொடுத்து, ""உம்முடைய சித்தம் ஆகக்கடவது'' என்று பயபக்தியோடும், மனத்தாழ்மையோடும், விசுவாசத்தோடும் சொல்லி, கர்த்தருக்கே காத்திருக்கவேண்டும்.


    கர்த்தருக்காக காத்திருக்கிறவர்கள் புதுபலனைப் பெற்றுக்கொள்வார்கள்.  அவர்கள் திடமனதாயிருப்பார்கள். ஆகையினால் நாம் செய்கிற எல்லா வேலையிலும் அவசரப்படாமல், கர்த்தருக்கே காத்திருக்கவேண்டும். கர்த்தருக்குக் காத்திருப்பதை நாம் நேசிக்கவேண்டும்.  ஸ்திரப்பட்ட இருதயத்தோடும், திடமனதோடும் நாம் கர்த்தருக்கே காத்திருக்கவேண்டும். 

    நாம் ஏன் கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும் என்பதற்குக் காரணங்கள்

        1. வெட்கப்பட்டுப் போகாதபடி செய்வார்  (சங் 25:3)

        2. நீதியும் நேர்மையும் நமக்கு அளிப்பார் (சங் 25:21)

        3. நம்மைப் பாதுகாப்பார் (சங் 25:21)

        4. இருதயத்தை  ஸ்திரப்படுத்தி,  திடமனதாக்குவார் (சங் 27:14;      சங் 31:24; ஏசா 40:31)

        5. பஞ்சத்தில் உயிரோடே காப்பார்  (சங் 33:19-20)

        6. துணையும் கேடகமுமாய் இருப்பார் (சங் 33:20)

        7. கிருபை அளிப்பார் (சங் 33:22)

        8.  பொறுமையைக் கொடுப்பார் (சங் 37:7-9)

        9. பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளச் செய்வார்  (சங் 37:34)

        10. நம்பிக்கையாக இருப்பார் (சங் 39:7-8; சங் 130:5-6; கலா 5:5)

        11. நம் கூப்பிடுதலைக் கேட்பார்  (சங் 40:1-3)

        12. இரட்சிப்பு வரும் (சங் 62:1; ரோமர் 8:25)

        13. ஏற்ற வேளையில் ஆகாரத்தைத் தருவார்  (சங் 104:27-28)

        14. ஆலோசனையாளர் (சங் 106:13)

        15. தேவனுடைய வெளிப்பாடு  (ஏசா 25:9)

        16. நியாயத்தீர்ப்பு (ஏசா 26:8-9; ஏசா 30:18)

        17. ஆசீர்வாதம் (ஏசா 30:18)

        18. நித்தியமானவைகள் (ஏசா 64:4)

        19. கர்த்தருடைய நன்மையானவைகள்  (புல 3:25)

        20. பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் (லூக்கா 24:49; அப் 1:4-8)

        21. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை (லூக்கா 12:36; 1கொரி 1:7; 1தெச 1:9-10; 2தெச 3:5; 1தீமோ 6:14)

    கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டிய வழிமுறைகள்

        1. ஜெபத்துடன் (சங் 25:4-5)

        2. பொறுமையுடன் (சங் 37:7; சங் 145:15)

        3. ஒருமித்த மனதுடன் (சங் 62:5)

        4. எதிர்பார்ப்புடன் (சங் 62:5-6; சங் 123:2; மீகா 7:7)

        5. நம்பிக்கையோடு (சங் 130:5-6)

        6. அமைதியாக  (புல 3:26)

        7. இடைவிடாமல் (ஓசி 12:6)

    கர்த்தருக்குக் காத்திருந்தவர்களுக்கு எடுத்துக்காட்டுகள்

        1. யாக்கோபு (ஆதி 49:18)

        2. தாவீது (சங் 25:4-5,21; சங் 33:18-22)

        3. ஏசாயா (ஏசா 8:17)

        4. எரேமியா (எரே 14:22)

        5. மீகா (மீகா 7:7)

        6. சிமியோன் (லூக்கா 2:25)

        7. அனைத்து சிருஷ்டிகள் (சங் 104:25-28; சங் 145:15-16)

    தேவனும் மனுஷருக்குக் காத்திருக்கிறார் (ஏசா 30:18)

    கர்த்தர் ""திடமனதாயிரு'' என்று கூறிய கட்டளைகள்

        1. பத்து வேவுகாரர்கள் (எண் 13:20)

        2. யோசுவா (யோசு 1:6-9,18)

        3. யோசுவாவின் கீழ் இஸ்ரவேல் (உபா 31:6-7; யோசு 10:25;      யோசு 23:6)

        4. தாவீதின் கீழ் இஸ்ரவேல் (2சாமு 10:12; 1நாளா 19:13)

        5. அப்சலோமின் சேவகர்கள் (2சாமு 13:28)

        6. சாலொமோன் (1நாளா 22:13; 1நாளா 28:20)

        7. எசேக்கியா (2நாளா 32:7)

        8. எஸ்றாவின் கீழ் இஸ்ரவேல் (எஸ்றா 10:4)

        9. அனைத்து மனிதர்கள்  (சங் 27:14; சங் 31:24)

        10. ஒருவருக்கொருவர் (ஏசா 41:6)



    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.