பிரிஸ்கில்லாள், ஆக்கில்லா
கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள் (ரோம 16:3,4).
பவுல் சில சிநேகிதருக்கு இந்த நிருபத்தில் விசேஷமாய் வாழ்த்துதல் சொல்லுகிறார். பவுல் அன்றாடம் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கிறவர். ஊழியத்தில் அவருக்கு ஏராளமான பொறுப்புக்கள் உண்டு. இவைகளுக்கு மத்தியிலும் பவுல் தன்னுடைய பழைய சிநேகிதர்கள் யாரையும் மறந்துவிடவில்லை. வாய்ப்பு வரும்போதெல்லாம் பவுல் தன்னுடைய அன்பையும் பாசத்தையும் அவர்களுக்குக் காண்பிக்கிறார். அவர்களை வாழ்த்துகிறார். தான் அவர்களை மறந்துவிடவில்லையென்றும், அவர்களைப்பற்றிய நினைவு தன்னுடைய இருதயத்தில் எப்போதும் நிரம்பியிருக்கிறது என்றும் பவுல் இந்த நிருபத்தின் மூலமாய் எழுதி உறுதிப்படுத்துகிறார்.
ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் பவுலுக்கு விசேஷித்த சிநேகிதர்கள். இந்தத் தம்பதியினர் பவுலுக்கு அநேக உதவிகளைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் ஆரம்பத்தில் ரோமாபுரியில் வசித்தவர்கள். கிலவுயுதியு ராயனுடைய காலத்தில், ரோமாபுரியில் ஏற்றப்பட்ட ஒரு சட்டத்தினால், இவர்கள் இருவரும் ரோமாபுரியைவிட்டு வெளியேறி கொரிந்து பட்டணத்திற்கு வந்து குடியேறினார்கள் (அப் 18:2).
கொரிந்து பட்டணத்தில் பவுல் ஊழியம் செய்ய வந்தபோது, பவுலுக்கு இவர்களுடைய சிநேகம் கிடைத்தது. பவுல் அவர்களோடு சேர்ந்து கூடாரம் பின்னுகிற தொழிலைச் செய்து வந்தார். சிறிது காலத்திற்குப் பின்பு ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் ரோமாபுரிக்குத் திரும்பிப்போய்விட்டார்கள். பவுல் இவர்களைப்பற்றிச் சொல்லும்போது, ""கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்கள்'' என்று குறிப்பிடுகிறார்.
ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் கிறிஸ்துவுக்குள் பவுலுடைய உடன்வேலையாட்கள் மாத்திரமல்ல. அதைவிட அதிகமாக அவர்கள் ஊழியம் செய்திருக்கிறார்கள். பவுலின் பிராணனுக்காக அவர்கள் இருவரும் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள். பவுலின் ஜீவனைப் பாதுகாப்பதற்காக அவர்கள் பல ஆபத்துக்களைச் சந்தித்தார்கள். உபத்திரவங்கள், போராட்டங்கள் ஆகியவற்றிற்கு மத்தியிலும் அவர்கள் பவுலுக்குப் பாதுகாப்பாயிருந்து, பவுலின் ஜீவனைத் தப்புவிக்க உதவிசெய்தார்கள்.
பவுல் கொரிந்து பட்டணத்தில் ஊழியம் செய்தபோது அவருக்கு அதிக எதிர்ப்பு உண்டாயிற்று. அவருடைய ஜீவனுக்கு ஆபத்து உண்டாயிற்று. அப்போது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் பவுலுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். பவுலைத் தங்களோடு சேர்த்துக்கொண்டார்கள். அவர்கள் இருவரும் பவுலுக்கு உதவிசெய்தது அநேக வருஷங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம். ஆனாலும் பவுல் இந்த நிருபத்தை எழுதும்போது, அவர்கள் தனக்கு இப்போதுதான் உதவிசெய்ததுபோல எழுதுகிறார். அவர்கள் தனக்குச் செய்த உதவியை பவுல் மறக்கவில்லை.
ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் பற்றி, பவுல் மாத்திரமல்ல புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள் என்று சொல்லுகிறார். பவுல் புறஜாதியாருக்கு அப்போஸ்தலர். புறஜாதியார் மத்தியில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர். பவுலின் பிராணனுக்காக இவர்கள் இருவரும் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள். பவுலின் ஜீவன் தப்பிக்க உதவிபுரிந்தவர்கள். இதனால் புறஜாதியார் அநேகருக்கு அவர்கள் உதவிசெய்திருக்கிறார்கள். பவுல் மரித்துப்போகாமல், புறஜாதியார் மத்தியில் தொடர்ந்து ஊழியம் செய்வதற்கு இவர்கள் உதவிசெய்திருக்கிறார்கள். ஆகையினால் பவுலும் இவர்களுக்கு நன்றியதலுள்ளவர்களாயிருக்கிறார். அதே வேளையில் புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும், அவர்கள் பவுலின் பிராணனைக் காப்பாற்றியதற்காக, அவர்களும் ஆக்கில்லாவுக்கும் பிரிஸ்கில்லாளுக்கும் நன்றியதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
பிரிஸ்கில்லாளும், ஆக்கில்லாவும் ரோமாபுரிக்குத் திரும்பிச் சென்றிருக்க வேண்டும். இவர்களுடைய வீட்டில் ஒரு சபை கூடி வந்திருக்கலாம். வேதாகமத்தில் இவ்விருவரின் பெயரும் சேர்ந்தே வந்திருக்கிறது.