பாடுகளின் வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வு - 3
இவர் யார் - இவர் இயேசு
அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள்: இவர் க-லேயாவிலுள்ள நாசரேத்தி-ருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள் (மத் 21:10,11).
எருசலேமிலுள்ள ஜனங்கள் இயேசுகிறிஸ்துவைப் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இயேசுவை ""இவர் யார்'' என்று விசாரிக்கிறார்கள். பரிசுத்த நகரத்தில் பரிசுத்தரைப்பற்றி அறியாமல் இருக்கிறார்கள். யூதமார்க்கத்தின் தலைநகரமாக விளங்கும் எருசலேம் நகரத்தில் ""யூதருடைய ராஜா'' வை அறியாமல் இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் அவர்களிடத்தில் இருக்கிறது. கிறிஸ்து மகிமையின் ராஜாவாக எருசலேமுக்குள் பிரவேசிக்கிறார். எருசலேம் நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு ""இவர் யார்'' என்று விசாரிக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவை முன்நடப்பாரும் பின்நடப்பாருமாக, திரளான ஜனங்கள் பின்பற்றி வருகிறார்கள். அவர்களுக்கு இயேசுவைப்பற்றி தெரியும். மிகுந்த ஆச்சரியத்தோடு ""இவர் யார்'' என்று கேட்கும் எருசலேம் நகரத்தாரிடம் இவர்கள் ""இவர் இயேசு'' என்று பதில் கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்துவை இவர்கள் தீர்க்கதரிசியென்று அறிவிக்கிறார்கள். அவர் நாசரேத்திலிருந்து வந்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். இயேசு தங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதை இவர்கள் பெருமையாக கூறிக்கொள்கிறார்கள். இயேசுகிறிஸ்துவோ நாசரேத் ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் உலக ரட்சகர். எல்லா ஊரிலுள்ள ஜனங்களின் பாவங்களைப் போக்குவதற்காக அவர் பாவநிவாரணபலியாக சிலுவையில் மரித்திருக்கிறார்.
தேவாலயத்தில் இயேசு
அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார் (மாற்கு 11:11).
எருசலேமின் வீதிகளில், ஜனங்களுடைய ஆர்ப்பரிப்புக்களுக்கு மத்தியில், பவனியாக வரும் இயேசுகிறிஸ்து நேரடியாக தேவாலயத்தில் பிரவேசிக்கிறார். தேவாலயத்தில் உள்ள எல்லாவற்றையும் சுற்றிப்பார்க்கிறார். ஆயினும் அதுபற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. அன்று இரவு வரையிலும் தேவாலயத்தில் உள்ளது உள்ளபடியே இருக்கட்டுமென்று விட்டுவிடுகிறார். மறுநாள் காலையில் தேவாலயத்தை சுத்திகரிக்க வேண்டுமென்று தமது மனதில் சித்தங்கொண்டிருக்கிறார்.
தேவன் இந்த உலகத்திலுள்ள எல்லா துன்மார்க்கங்களையும் தமது கண்களால் பார்த்துக்கொண்டிருக்கிறார். என்றாலும் அவற்றை உடனடியாக இந்த உலகத்திலிருந்து அவர் நீக்கிப்போடுவதில்லை. ஏற்றவேளை வரும்வரையிலும் இயேசு அமைதியோடிருக்கிறார். துன்மார்க்கத்திற்கு ஒரு முடிவு உண்டாகும். துன்மார்க்கருக்கு அழிவு நியமிக்கப்பட்டிருக்கிறது. தேவாலயத்திலுள்ள எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்தபின்பு, சாயங்காலமானபோது தம்முடைய சீஷரோடே பெத்தானியாவிலுள்ள தம் சிநேகிதரின் வீட்டிற்கு புறப்பட்டுப்போகிறார்.
தேவாலயத்துப் பிரகாரங்களில் என்ன காரியங்கள் நடைபெறுகிறது என்பதை இயேசு கிறிஸ்து சுற்றிப்பார்க்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு தேவாலயத்தில் காசுக்காரர்களையும், விற்கிறவர்களையும் துரத்தினார். (மத் 21:12-16) அதுபோன்ற காரியத்தை இப்போது அவர் செய்யவில்லை. அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில், இதுபோன்ற காரியம் நடைபெற்றது. (யோவான் 2:13) இப்போது இயேசு தேவாலயத்திற்கு வரும்போது, எல்லாம் சரியாக இருக்கிறது. அடுத்த நாளில் இயேசு கிறிஸ்து தேவாலயத்திற்கு வந்து, இரண்டாம் முறையாக அதைச் சுத்திகரிக்கிறார். (மாற்கு 11:15-17)