ஞானம் கூப்பிடுகிறது

 




ஞானம் கூப்பிடுகிறது நீதி 1 : 20,21

நீதி 1:20. ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது. 


நீதி 1:21. அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒ-முகவாச-லும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது:  


சாத்தானுடைய இச்சகமான பேச்சுக்களுக்கு  செவிகொடுப்பது மிகவும் ஆபத்தானது. அதே சமயத்தில்  தேவன் நம்மோடு பேசும்போது, அதற்கு செவிகொடுக்க மறுப்பதும்,  நமக்கு மிகப்பெரிய ஆபத்தாகயிருக்கும். தேவன் நம்மோடு பேசுகிறார்.  அவர் ஞானத்தின் மூலமாய்ப் பேசுகிறார். ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது.  ""ஞானம்'' என்னும் வார்த்தை, மூலஎபிரெய பாஷையில், ""ஞானங்கள்'' என்று பன்மையில் எழுதப்பட்டிருக்கிறது. தேவனிடத்தில்  அனந்த ஞானம் இருக்கிறது. அவரே சர்வஞானமுள்ளவர்.


 ""தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக,  இயேசுகிறிஸ்துவைக் கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது'' (எபே 3:9-11) என்று  அப்போஸ்தலர் பவுல் சொல்லுகிறார்.


தேவன் மனுபுத்திரரோடு,  தம்முடைய எல்லாவிதமான ஞானத்தின் மூலமாயும் பேசுகிறார். மனுஷனிடத்தில் புரிந்துகொள்ளும் தன்மையிருக்கிறது.  இதுவே மனுஷருடைய ஞானம். மனுஷன் இயற்கையின் பிரமாணத்தையும், இயற்கையான வெளிச்சத்தையும் அறிந்திருக்கிறான். மனுஷனுக்கு காரண காரியங்களை  அறிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கிறது. மனுஷனுடைய மனச்சாட்சி அவனுடைய ஞானத்தை வெளிப்படுத்துகிறது. ""அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?'' (யோபு 38:36) என்று கர்த்தர் யோபுவிடம் கேட்கிறார். கர்த்தரே  மனுஷருக்குள்ளே ஞானத்தை வைத்திருக்கிறார்.  


ஒரு தேசத்தில் நடைபெறுகிற ஆளுகையும் தேவன்கொடுத்திருக்கிற ஞானமாகும்.   வழக்குகளை விசாரிக்கிற நியாயாதிபதிகள், தேவனுடைய பிரதிநிதிகளாக ஊழியம் செய்கிறார்கள்.  


தேவனுடைய தெய்வீக வெளிப்பாடும், மனுஷருக்கு ஞானமாகயிருக்கிறது.  தேவன் தம்மைப்பற்றியும், தம்முடைய பிரமாணங்களைப்பற்றியும் மனுஷருக்கு வெளிப்படுத்துகிறார்.  தேவனுடைய சித்தமும் விருப்பமும் வார்த்தைகளாக எழுதப்பட்டிருக்கிறது. வேதாகமத்திலுள்ள புஸ்தகங்களை எழுதிய  ஆசிரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் தேவன் தம்முடைய விசேஷித்த ஞானத்தைக் கொடுத்திருக்கிறார். வேதாகம ஆசிரியர்கள் தேவனுடைய  சிந்தையை மனுஷருக்கு வார்த்தை வடிவில் வெளிப்படுத்துகிறார்கள். 


கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே ஞானமாகயிருக்கிறார். அவரே  எல்லா ஞானத்திற்கு ஆதரமாக இருக்கிறவர். இயேசுகிறிஸ்துவுக்குள்  ஞானம், அறிவு ஆகியவற்றின் பொக்கிஷங்களெல்லாம் மறைந்திருக்கிறது. தேவனுடைய  எல்லா வெளிப்பாடுகளுக்கும் இயேசுகிறிஸ்துவே மையமாகயிருக்கிறார். கிறிஸ்துவுக்குள்  நமக்குத் தேவையான எல்லா ஞானமும் இருக்கிறது. அவரே நித்திய வார்த்தையாகயிருக்கிறார். கிறிஸ்துவின் மூலமாகவே தேவன் நம்மோடு பேசுகிறார்.  அவர் மூலமாக எல்லா நியாயங்களையும் விசாரித்து, நமக்கு நீதியான தீர்ப்புகளைச் சொல்லுகிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றிச் சொல்லும்போது, ""ஞானமானது  அதன் பிள்ளைகள் எல்லாராலும் நீதியுள்ளது என்று ஒப்புக்கொள்ளப்படும்'' (லூக் 7:35) என்று சொல்லுகிறார்.  


நம்முடைய தேவனாகிய கர்த்தர்  நம்மோடு பேசுகிறார். அவர் வெளிப்படையாகவும் பேசுகிறார். சத்தமாகவும் பேசுகிறார்.  தெளிவாகவும் பேசுகிறார். தேவன் பேசுகிற வார்த்தைகளை, காதுள்ளவர்கள் எல்லோருமே கேட்கவேண்டும்.  தேவனுடைய ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது. அது வீதிகளில் சத்தமிடுகிறது. தேவனுடைய வார்த்தைகள்  வேதபாடசாலைகளில் வெளிப்படுத்தப்படுவதோடு, ஜனங்கள் கூடியிருக்கிற பொது இடங்களிலும் வெளிப்படுத்தப்படுகிறது.  


தேவனுடைய வார்த்தை ராஜாக்களின் அரண்மனையில் வெளிப்படுத்தப்படுவதுபோல,  சாதாரண ஜனங்கள் கூடியிருக்கும் பொது இடங்களிலும் வெளிப்படுத்தப்படுகிறது.   ஞானமானது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிடுகிறது.  ஞானமானது தன் வார்த்தைகளை பட்டணத்தில் வசனித்துச் சொல்லுகிறது.  


தேவன்  நம்மோடு பேசும்போது,  நமக்கு புரியும் விதமாக  சத்தமாகவும், தெளிவாகவும் பேசுகிறார்.  தம்முடைய ஞானமுள்ள வார்த்தைகளை வீதிகளில் சத்தமிட்டுச் சொல்லுகிறார். தேவன் நம்மோடு பேசும்போது,  அவர் அன்பாகவும் பேசுகிறார், சத்தமாகவும் பேசுகிறார். நாம் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கவேண்டும் என்பதே  அவருடைய விருப்பம். நாம் எங்கேயிருந்தாலும் தேவனுடைய ஞானமுள்ள வார்த்தை நம்மைத் தேடி வருகிறது. கர்த்தர் நம்மை தேடி வந்து விசாரிக்கிறவர்.  நாம் இருக்கிற இடங்களில், கர்த்தர் நம்மைத் தேடிவந்து, தம்முடைய ஞானமுள்ள வார்த்தைகளை நம்மோடு பேசுகிறார். 

ஞானம் பிரசங்கம் பண்ணப்படும் இடம்     

    1. வெளி

    2. வீதிகள்

    3. சந்தடியுள்ள தெருக்களின் சந்தி

    4. ஒலிமுகவாசல்

    5. பட்டணம்  

ஞானத்தினுடைய செய்தியின் அம்சம்


    1. பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவது எதுவரைக்கும் இருக்கும்.

    2. நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவது  எதுவரைக்கும் இருக்கும்.

    3. மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பது எது வரைக்கும் இருக்கும்.

    4. என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள். (நீதி 1:23)

    5.   என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்.

    6. என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். 

ஞானத்தை யாருக்குப் பிரசங்கம் பண்ண வேண்டும்


1. பேதை (நீதி 1:4) 

2. நிந்தனைக்காரர் (சங் 1:1)

3. மதியீனர்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.