யூதா கோத்திரம் 1நாளா 2:3-12
1நாளா 2:3. யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
1நாளா 2:4. அவன் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்து பேர்.
1நாளா 2:5. பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
1நாளா 2:6. சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
1நாளா 2:7. சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.
1நாளா 2:8. ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.
1நாளா 2:9. எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
1நாளா 2:10. ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
1நாளா 2:11. நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
1நாளா 2:12. போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
""யூதா'' என்னும் பெயருக்கு ""துதி'' என்று பொருள். யாக்கோபு என்னும் இஸ்ரவேலின் 12 குமாரரையும் அட்டவணைப்படுத்திய பின்பு, நாளாகமத்தின் ஆசிரியர் யூதாவின் குமாரரையும், அவருடைய சந்ததியாரையும் பற்றி குறிப்பிடுகிறார். யாக்கோபுக்கும், லேயாளுக்கும் பிறந்த நான்காவது குமாரன் யூதா ஆவான். (1நாளா 2:3-4:23).
யூதா கோத்திரம் பன்னிரண்டு கோத்திரங்களில் ஆட்சி புரியும் கோத்திரமாகும். மேசியா யூதா கோத்திரத்திலிருந்து வந்திருக்கிறார். ஆகையினால் யூதா கோத்திரம் இங்கு முதலாவதாகக் கூறப்பட்டிருக்கிறது.
பரிசுத்த வேதாகமத்தில் யூதா என்னும் பெயரில் ஏழுபேர் இருக்கிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு :
1. யாக்கோபின் நான்காவது குமாரன். வேதாகமத்தில் இவனைப் பற்றி 341 தடவைகள் கூறப்பட்டிருக்கிறது.
2. கத்மியேலின் முன்னோர். (எஸ்றா 3:9)
3. ஒரு லேவியன் (எஸ்றா 10:23)
4. ஒரு பென்யமீனன் (நெகே 11:9)
5. மற்றொரு லேவியன் (நெகே 12:8)
6. யூதாவின் பிரபுக்களில் ஒருவன். (நெகே 12:34)
7. ஆசாரியனும், சங்கீதக்காரனும். (நெகே 12:36)
யூதாவின் குமாரருடைய நாமங்களாவன:
1. ஏர் (1நாளா 2:3; ஆதி 38:3)
2. ஓனான் (1நாளா 2:3; ஆதி 38:4)
3. சேலா (1நாளா 2:3; ஆதி 38:5)
4. பாரேஸ் (1நாளா 2:4; ஆதி 38:29)
5. சேரா (1நாளா 2:4; ஆதி 38:30)
யூதாவின் சந்ததியைப்பற்றி இந்த வசனப்பகுதியில் சுருக்கமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தர் யூதா கோத்திரத்தை அதிகமாய் ஆசீர்வதித்திருக்கிறார். இஸ்ரவேலின் மற்ற கோத்திரத்தாரைவிட, யூதாகோத்திரத்தார் எண்ணிக்கையில் அதிகமாக பலுகிப்பெருகியிருக்கிறார்கள். ஆகையினால் யூதாகோத்திரத்தாரின் வம்ச அட்டவணை முதலாவதாக சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற கோத்திரத்தாரின் வம்சவரலாற்றை விட, யூதாகோத்திரத்தாரின் வம்சவரலாறு மிகவும் பெரியதாகும்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து யூதாகோத்திரத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்துவானவரே யூதாகோத்திரத்தாரில் பிரதானமானவர். ஆனாலும் யூதாகோத்திரத்தாரில் சிலர் மிகவும் மோசமானவர்களாகயிருக்கிறார்கள். ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்கிறான். ஆகையினால் கர்த்தர் அவனைக் கொன்றுபோடுகிறார்.
ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருக்கிறான். ஏர் செய்த பொல்லாப்பு என்ன என்று வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை இவனும் ஓனானைப்போல ""தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தை தரையிலே விழவிட்டு'' கெடுத்திருக்க வேண்டும். (ஆதி 38:8-10). வேதாகமத்தில் இந்தப் பாவத்தைப் பற்றி இந்த வசனத்தில் முதன் முறையாகக் கூறப்பட்டிருக்கிறது.
யூதாவின் சந்ததியில் வந்த ஓனானும் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான். இந்தப் பாவத்தைச் செய்த ஓனானைக் கர்த்தர் கொன்று போட்டார். மனுஷர் பூமியில் பலுகிப் பெருகவேண்டுமென்பது கர்த்தருடைய கட்டளை. கர்த்தருடைய சாயலாகவும், கர்த்தருடைய ரூபத்தின் பிரகாரமாகவும் இருக்கும் மனுஷ சந்ததியாரை உலகத்தில் வரவிடாமல் தடுக்கக்கூடாது.
யூதா தன் மருமகளாகிய தாமாரோடு வேசித்தனம்பண்ணினான். யூதாவின் கோத்திரத்தில் வந்த ஆகார் என்பவன், சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணினான். ஆகாரின் மறுபெயர் ஆகான் (யோசு 7:25).
யூதாகோத்திரத்தாரில் கர்த்தருக்கு பிரியமானவர்களும் இருக்கிறார்கள். ஏமான், ஏத்தான், கல்கோல், தாரா ஆகியோர் கர்த்தருக்கு பிரியமானவர்களாயும், ஞானமுள்ளவர்களாயும் இருந்தார்கள்.
""ஏத்தான்'' என்னும் பெயருக்கு ""உறுதி'', ""நிலைத்திருப்பது'' என்று பொருள். ""ஏமான்'' என்னும் பெயருக்கு ""உண்மையுள்ளவன்'' என்று பொருள். ""கல்கோல்'' என்னும் பெயருக்கு ""நிலைத்திருப்பது'' என்று பொருள். ""தாரா'' என்னும் பெயருக்கு ""தாங்குகிறவன்'' என்று பொருள் (1நாளா 2:6).
ஏமான், ஏத்தான், கல்கோல், தாரா ஆகியோர் சேராவின் குமாரர்களல்ல என்றும், இவர்கள் சேராவின் சந்ததியைச் சேர்ந்தவர்கள் என்றும் வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஆனாலும் இவர்களுடைய பெயர்களும் இந்த வம்சஅட்டவணையில் சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள் தங்கள் பிதாவின் வீட்டாருக்கு கீர்த்தியுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
""அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோ-ன் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது'' (1இராஜா 4:31).
இந்த வசனப்பகுதியில் நகசோனைப்பற்றியும், சல்மாவைப்பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. எகிப்திலிருந்து இஸ்ரவேல் புத்திரர் வெளியேறி வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணிய போது நகசோன் யூதா கோத்திரத்தாரை வழிநடத்திச் சென்றான். (எண் 2:3,9). ""சல்மா'' என்பவனின் மறுபெயர் சல்மோன். இவன் எரிகோவிலிருந்த ராகாபை விவாகம் பண்ணியவன். (ரூத் 4:21; மத் 1:5; லூக்கா 3:32).
மேசியாவின் வம்ச வரலாறு பாரேசின் மூலமாக வருகிறது. (1நாளா 2:5,9-12; ரூத் 4:18; லூக்கா 3:23-38). ராஜவம்சமும் பாரேசின் மூலமாகவே வருகிறது (மத் 1:1-17).
பாரேசும் சேராவும் இரட்டைப்பிள்ளைகள். இவர்கள் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் இரண்டாவது இரட்டைப்பிள்ளைகள் ஆவார்கள்.
பரிசுத்த வேதாகமத்தில் மூன்று இரட்டைப்பிள்ளைகளைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களின் விவரம் வருமாறு :
1. யாக்கோபும், ஏசாவும் (ஆதி 25:24-28)
2. பாரேசும், சேராவும் (ஆதி 38:25-30)
3. திதிமு என்னப்பட்ட தோமோவும், அவனுடைய சகோதரன் அல்லது சகோதரியும் (யோவான் 11:16; யோவான் 20:24; யோவான் 21:2)
மேசியாவின் வம்ச வரலாறு எஸ்ரோன் மூலமாக வருகிறது. (1நாளா 2:5,9-12; ரூத் 4:18; லூக்கா 3:23-38). ராஜவம்சமும் எஸ்ரோனின் மூலமாகவே வருகிறது (மத் 1:1-17).
சேராவின் குமாரருடைய நாமங்களாவன:
1. சிம்ரி
2. ஏத்தான்
3. ஏமான்
4. கல்கோல்
5. தாரா
""சிம்ரி'' என்னும் பெயருக்கு ""இசை'' ""பாதுகாப்பு'' என்று பொருள். இந்தப் பெயருக்கு ""மலையாடு'' என்றும் பொருள் கூறுகிறார்கள். ""ராம்'' என்பவன் எஸ்ரோனின் பௌத்திரன் (1நாளா 2:9,25).
பரிசுத்த வேதாகமத்தில் சிம்ரி என்னும் பெயரில் நான்குபேர் இருக்கிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு :
1. சேராவின் குமாரன் (1நாளா 2:6)
2. பென்யமீன் கோத்திரத்தான் (1நாளா 8:36; 1நாளா 9:42)
3. சிமியோனின் பிரபு (எண் 25:14)
4. பத்துக் கோத்திரத்தின் ராஜா (1இராஜா 16:9-20; 2இராஜா 9:31)
""ஏத்தான்'' என்னும் பெயருக்கு ""உறுதி'' ""நிலைத்திருப்பது'' என்று பொருள்.
பரிசுத்த வேதாகமத்தில் ஏத்தான் என்னும் பெயரில் நான்குபேர் இருக்கிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு :
1. சேராவின் குமாரன் (1நாளா 2:6,8)
2. கெர்சோனின் சந்ததியான் (1நாளா 6:42)
3. மெராரியின் சந்ததியான் (1நாளா 6:44; 1நாளா 15:17,19)
4. சாலொமோனின் ஆட்சிக்காலத்திலிருந்த ஞானவான். (1இராஜா 4:31)
""ஏமான்'' என்னும் பெயருக்கு ""உண்மையுள்ளவன்'' என்று பொருள்.
பரிசுத்த வேதாகமத்தில் ஏமான் என்னும் பெயரில் நான்குபேர் இருக்கிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு :
1. சேராவின் குமாரன் (1நாளா 2:6)
2. ஒரு லேவியன் - சங்கீதக்காரன் (1நாளா 6:33)
3. லோத்தானின் குமாரன் (ஆதி 36:22). மறுபெயர் ஓமாம் (1நாளா 1:39)
4. சாலொமோனின் ஆட்சிக்காலத்தில் இருந்த ஞானவான். (1இராஜா 4:31)
""கல்கோல்'' என்னும் பெயருக்கு ""நிலைத்திருப்பது'' என்று பொருள்.
பரிசுத்த வேதாகமத்தில் கல்கோல் என்னும் பெயரில் இரண்டுபேர் இருக்கிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு :
1. சேராவின் குமாரன் (1நாளா 2:6)
2. சாலொமோனின் ஆட்சிக்காலத்தில் இருந்த ஞானவான். (1இராஜா 4:31)
""தாரா'' என்னும் பெயருக்கு ""தாங்குகிறவன்'' என்று பொருள். (1நாளா 2:6).
""கர்மீ'' என்னும் பெயருக்கு ""கிளைகழிக்கிறவன்'' என்று பொருள்.
பரிசுத்த வேதாகமத்தில் கர்மீ என்னும் பெயரில் இரண்டுபேர் இருக்கிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு :
1. ஆகானின் தகப்பன் (1நாளா 2:7)
2. ரூபனின் குமாரன் (1நாளா 5:3)
கர்மீ யாருடைய குமாரன் என்று கூறப்படவில்லை. இவன் சேராவின் குமாரரோடு கூறப்பட்டிருக்கிறான். அவனுடைய குமாரனாகிய ஆகாரைப் பற்றி மட்டுமே இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. யோசு 7:16-18 ஆகிய வசனங்களில் பிரகாரம் இவன் சேராகியரின் வம்சத்தில் வருகிறான். இந்தப் பெயர் 1நாளா 2:6 ஆவது வசனத்திலுள்ள சேராவோடு தொடர்புடையது.
""ஆகார்'' என்பவனுடைய மறுபெயர் ஆகான் என்பதாகும் (யோசு 7:25).
""ராம்'' என்பவன் எஸ்ரோனின் பௌத்திரன் (1நாளா 2:9,25).
""நகசோன்'' என்பவன் எகிப்திலிருந்து இஸ்ரவேல் புத்திரர் வெளியேறி வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணிய போது இவன் யூதா கோத்திரத்தாரை வழிநடத்திச் சென்றான். (எண் 2:3,9).
""சல்மா'' என்பவனுடைய மறுபெயர் சல்மோன் என்பதாகும். இவன் எரிகோவிலிருந்த ராகாபை விவாகம் பண்ணியவன். (ரூத் 4:21; மத் 1:5; லூக்கா 3:32).