சங்கீதம் 35 விளக்கம்
(தாவீதின் சங்கீதம்.)
நியாயத்தீர்ப்பிற்காக ஜெபம் பண்ணும் நான்காம் சங்கீதம்
பொருளடக்கம்
1. துன்மார்க்கன் மீது நியாயத்தீர்ப்பு வரவேண்டுமென்று பதினெட்டு விண்ணப்பங்கள் - (35:1-8)
2. துன்மார்க்கன் மீது நியாயத்தீர்ப்பு வந்ததற்காக ஸ்தோத்திரம் - (35:9-10)
3. துன்மார்க்கனின் சுபாவங்களும் நீதிமானின் சுபாவங்களும் - துன்மார்க்கனின் பத்து விதமான பாவங்களும் - நீதிமானின் ஆறுவிதமான நற்கிரியைகளும் - (35:11-16)
4. துன்மார்க்கன் மீது நியாயத்தீர்ப்பு வரவேண்டுமென்றும் நீதிமானை நிலைநிறுத்த வேண்டுமென்றும் பதினாறு விண்ணப்பங்கள் - துன்மார்க்கரின் பத்து விதமான பாவங்கள் - (35:17-26)
5. நீதிமான் செலுத்தும் ஸ்தோத்திரம் - (35:27-28)
கர்த்தராகிய தேவனே வானத்திலும் பூமியிலும் நீதியுள்ள நியாயாதிபதியாயிருக்கிறார். தாவீதின் சத்துருக்களுக்கு விரோதமாகவும், அவரை துன்பப்படுத்துகிறவர்களுக்கு விரோதமாகவும் கர்த்தர் நீதியான தீர்ப்பு கொடுப்பார். சவுலும் அவருடைய ஊழியக்காரரும் தாவீதைத் துன்பப்படுத்துகிறார்கள். தாவீதின் ஜீவனைக் கொன்றுபோட சதிஆலோசனைகளை யோசிக்கிறார்கள். தாவீதுக்கு சவுலோடு மிகுந்த போராட்டம் உண்டாயிற்று.
சவுலும் அவருடைய ஊழியக்காரரும் தனக்குச் செய்த எல்லா அநியாயங்களைப்பற்றியும், தாவீது கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். தாவீதினிடத்தில் ஒரு குற்றமுமில்லை. அவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை (சங் 35:7,19). தாவீது அவர்களுக்கு நன்மையை மாத்திரமே செய்திருக்கிறார். அவர்களோ தாவீதுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமை செய்கிறார்கள் (சங் 35:12-14).
கர்த்தர் தாமே தன்னைப் பாதுகாத்து சத்துருக்களின் ஆபத்துக்களிலிருந்து தன்னை தப்புவிக்குமாறு தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். தன்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு அழிவு வருமென்று தாவீது தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார் (சங் 35:4-6,8). தான் இன்னும் அநேக நன்மையான காரியங்களையும், நன்மையான நாட்களையும் காணப்போவதாக தாவீது தனக்குத்தானே வாக்குப்பண்ணுகிறார் (சங் 35:9,10). தாவீது கர்த்தருடைய சமுகத்திலே துதிகளோடும், ஸ்தோத்திரங்களோடும் வருவேனென்று வாக்குப்பண்ணுகிறார் (சங் 35:18,28).
என் வழக்காளிகளோடே வழக்காடும்
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம் பண்ணும் (சங் 35:1).
தாவீது தன்னுடைய பிரச்சனைகளையெல்லாம் கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். தாவீதின் சத்துருக்கள் அவருடைய ஜீவனைக் கொன்றுபோட, அவரைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். தாவீது மனஅமைதியில்லாமல், ஓய்வில்லாமல், பல இடங்களுக்கும் ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார். தாவீதின் சத்துருக்கள் அவரை நெருக்குகிறார்கள். அவர்கள் தாவீதின் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள். சவுலும், சவுலின் வேலையாட்களும் தாவீதுக்கு எப்போதுமே சத்துருக்களாகயிருக்கிறார்கள். அவர்களுக்கு தாவீதின் பிராணன் வேண்டும். தாவீதின் இரத்தத்தினால் மாத்திரமே அவர்கள் திருப்தியடைவார்கள். இரத்தப்பிரியரான அவர்கள் துணிகரமாய்ப் பாவம் செய்கிறார்கள்.
கர்த்தர் தனக்கு நீதி செய்யவேண்டுமென்று தாவீது அவரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். தாவீதின் சத்துருக்கள் அவரோடு வழக்காடுகிறார்கள். அவரோடு யுத்தம்பண்ணுகிறார்கள். இந்த யுத்தத்தில் தாவீதும், அவருடைய சத்துருக்களும் நீதியாய் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு நீதியான தீர்ப்பு கொடுக்கப்படவேண்டும்.
தாவீதுக்கு இஸ்ரவேல் தேசத்திலுள்ள ஒரு நபரோடு வழக்கு இருந்தால், அவர் அந்த வழக்கை ராஜாவிடம் போய் சொல்லலாம். பவுல் தன்னுடைய வழக்கை இராயனுக்கு முன்பாக விசாரிக்கவேண்டுமென்று அபயமிட்டார். இங்கோ தாவீதுக்கும் ராஜாவுக்கும் இடையே வழக்கு உண்டாயிருக்கிறது. நியாயந்தீர்க்கவேண்டிய சவுல் ராஜாவே தாவீதுக்கு விரோதமாய் மோசம்பண்ணுகிறார். தாவீதுக்கு ராஜாவின் சமுகத்தில் நீதி கிடைக்காது. ஆகையினால் தாவீது தன்னுடைய வழக்குகளை கர்த்தருடைய சமுகத்தில் முறையிடுகிறார்.
கர்த்தர் ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தவாகவும் இருக்கிறார். இந்தப் பூமியிலுள்ள எல்லா ராஜாக்களின்மீதும், கர்த்தரே நீதியுள்ள நியாயதிபதியாயிருக்கிறார். தாவீது இதை நினைவுகூர்ந்து, ""கர்த்தாவே நீர் என் வழக்காளிகளோடே வழக்காடும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார்.
கர்த்தர் தனக்காக வழக்காடினால் மாத்திரம் போதாது என்றும், அவர் தனக்காக யுத்தம்பண்ணவேண்டும் என்றும் தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். ""என்னோடே யுத்தம்பண்ணுகிறர்களோடே யுத்தம்பண்ணும்'' என்றும் தாவீது கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்கிறார்.
தாவீதின் விண்ணப்பங்கள்
1. கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடும் (சங் 35:1).
2. எனக்காக யுத்தம் பண்ணும்.
3. கேடகத்தையும், பரிசையையும் பிடித்துக் கொள்ளும் (சங் 35:2).
4. எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.
5. ஈட்டியையோங்கி அவர்களை மறியும் (சங் 35:3).
6. என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நில்லும்.
7. நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்
8. என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள் (சங் 35:4).
9. அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி செய்யும்
10. அவர்களை தோற்கடியும்.
11. அவர்கள் கலங்கும்படி செய்யும்.
12. காற்று முகத்தில் பறக்கும் பதரைப் போலாவார்களாக (சங் 35:5).
13. கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.
14. அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருக்கும்படிச் செய்யும் (சங் 35:6).
15. கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
16. அவன் நினையாத அழிவு அவனுக்கு வரட்டும் (சங் 35:8).
17. அவன் வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்
18. என்னை அழிக்க வெட்டிய குழியில், அவனே விழுந்து அழிவானாக
19. சீக்கிரமாய் என்னை விடுவியும் (சங் 35:17).
20. அவர்களிடமிருந்து என் ஆத்துமாவை தப்புவியும்.
21. எனக்கு அருமையானதைச் சிங்கக் குட்டிகளுக்கு தப்புவியும்.
22. வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமல் செய்யும் (சங் 35:19)
23. முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமல் இருப்பார்களாக.
24. கர்த்தாவே, மவுனமாயிராதேயும் (சங் 35:22)
25. எனக்குத் தூரமாகாதேயும்.
26. எனக்கு நியாயஞ்செய்யும் (சங் 35:23)
27. என் வழக்கைத் தீர்க்க எழுந்தருளும்.
28. விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
29. கர்த்தாவே நியாயம் விசாரியும் (சங் 35:24)
30. நீதியின் படி என்னை நியாயம் விசாரியும்.
31. என்னைக் குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்.
32. அவர்கள் தங்கள் இருதயத்திலே, இதுவே நாங்கள் விரும்பின அழிவு என்று சொல்லாதபடி செய்யும் (சங் 35:25).
33. அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடி செய்யும்.
34. அவர்கள் வெட்கி போகும்படி செய்யும் (சங் 35:26).
35. எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் நாணும்படி செய்யும்.
36. வெட்கத்தால் அவர்களை மூடும்படி செய்யும்.
37. எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.
நான் உன் இரட்சிப்பு
நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்துநில்லும். என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்துநின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும் (சங் 35:2,3).
தேவன் நம்முடைய சிநேகிதராயிருக்கும்போது, நம்முடைய சத்துருக்கள் எப்படிப்பட்டவர்களாகயிருந்தாலும் நாம் கவலைப்படவேண்டியதில்லை. இந்த உலகத்தில் இருக்கிறவனிலும் நமக்குள் இருக்கிற நம்முடைய கர்த்தர் பெரியவர். தாவீதின் சத்துருக்கள் அவரோடு யுத்தம்பண்ணுகிறார்கள் இந்த யுத்தத்தில் தாவீதுக்கு கர்த்தருடைய உதவியும் ஒத்தாசையும் தேவைப்படுகிறது. ""நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்'' என்று தாவீது கர்த்தரிடத்தில் சொல்லுகிறார். இந்த வாக்கியத்திற்கு, ""எனக்காக யுத்தம்பண்ணும்'' என்பதே பொருள். ""என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடு யுத்தம்பண்ணும்'' என்பதே தாவீதின் விண்ணப்பம்.
கர்த்தர் தம்முடைய சர்வவல்லமையினால் தம்மை வெளிப்படுத்தவேண்டுமென்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். தன்னுடைய வழக்கில் தேவனுடைய நீதியும், அவருடைய மற்ற எல்லா குணாதிசயங்களும் வெளிப்படவேண்டும் என்பதே தாவீதின் விருப்பம். கர்த்தர் தம்முடைய நாம மகிமைக்காகவும் தம்மை வெளிப்படுத்திக் காண்பிக்கவேண்டும், தம்முடைய பிள்ளைகளின் பிரயோஜனத்திற்காகவும் தம்மை வெளிப்படுத்தவேண்டும் என்பதே தாவீதின் விருப்பம்.
கர்த்தர் தாவீதுக்கு யுத்தத்தில் உதவி செய்யும்போது, தாவீதின் சத்துருக்களினால் தாவீதை நெருங்க முடியாது. கர்த்தர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, தாவீதுக்கு ஒத்தாசையாக எழுந்து நிற்கும்போது, தாவீதின் சத்துருக்களெல்லோரும் பெலனற்றுப்போவார்கள். அவர்களால் தாவீதின் பிராணனை எடுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் தாவீதுக்கு விரோதமாக யோசித்த சதிஆலோசனைகளெல்லாம் பெலனற்றுப்போகும்.
கர்த்தரே நம்முடைய இரட்சகராயிருக்கிறார். அவர் நம்முடைய ஆத்துமாவிடம், ""நான் உன் இரட்சிப்பு'' என்று சொல்லுவதே நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். இந்த உலகத்தில் நம்மை பலர் துன்பப்படுத்தலாம். அவர்களை எதிர்த்து நிற்பதற்கு நமக்குப் பெலனில்லாமல் இருக்கலாம். நாம் திராணியற்றவர்களாகக்கூட போய்விடலாம். நமக்குப் பெலமில்லாவிட்டாலும், நமக்கு ஒத்தாசை செய்கிற கர்த்தரிடத்தில் பெலம் உண்டு. அவர் சர்வவல்லமையுள்ளவர். நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களோடு கர்த்தர் எதிர்த்து நிற்பார். தம்முடைய ஈட்டியை ஓங்கி அவர்களை மரிப்பார். நம்முடைய ஆத்துமாவிடம், ""நன் உன் இரட்சிப்பு'' என்று சொல்லுவார்.
நம்முடைய சத்துருக்கள் நமக்கு விரோதமாக அநேக தூஷண வார்த்தைகளைச் சொல்லுவார்கள். அவர்களுடைய வார்த்தைகளை நாம் செவிகொடுத்துக் கேட்டால் நம்முடைய ஆவியிலே சோர்ந்துபோவோம். ஆகையினால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் சத்துருக்களின் பேச்சுக்களுக்குச் செவிகொடுப்பதற்குப் பதிலாக, கர்த்தர் நமக்குச் சொல்லுவதை செவிகொடுத்துக் கேட்கவேண்டும். கர்த்தருடைய வார்த்தை நம்மை இரட்சிக்கும். அவருடைய வார்த்தை நம்மைப் பெலப்படுத்தும்.
என் பிராணனை வாங்கத் தேடுகிறவர்கள்
என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக. அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக. அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக (சங் 35:4-6).
தன்னுடைய சத்துருக்களை பழிவாங்கவேண்டுமென்பது தாவீதின் விருப்பமல்ல. பழிவாங்குதல் கர்த்தருக்குரியது. தாவீது தன்னுடைய சத்துருக்களை கர்த்தருடைய கரத்தில் ஒப்புவித்திருக்கிறார். அவர்கள் தாவீதின் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள். அவர்களுடைய துன்மார்க்கத்தினிமித்தம் அவர்கள் அழிந்துபோகவேண்டுமென்பதே தாவீதின் ஜெபம். தாவீது அவர்களைப் பழிவாங்கவில்லை. ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு நீதியான தீர்ப்பைக் கொடுக்கவேண்டுமென்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார்.
தாவீதின் பிராணனை வாங்கத் தேடுகிறவர்கள் வெட்கப்பட்டு கலங்குவார்களாக என்பதும், அவருக்குத் தீங்கு செய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக என்பதும் தாவீதின் ஜெபமாயிருக்கிறது. கர்த்தர் அவர்களோடு யுத்தம்பண்ணவேண்டும். அவர்கள் தாவீதை நெருங்கி வராமல் திரும்பிப்போய்விடவேண்டும். அவர்கள் சந்தோஷத்தோடு திரும்பிப்போகக்கூடாது. அவர்கள் வெட்கப்பட்டும், கலங்கியும், நாணமடைந்தும் பின்வாங்கிப்போகவேண்டும்.
தாவீது தன்னுடைய சத்துருக்களின் மனந்திரும்புதலுக்காகவும் விண்ணப்பம்பண்ணுகிறார். நம்முடைய பாவங்களுக்காக நாம் வெட்கப்பட்டு கலங்கவேண்டும். நம்முடைய மீறுதல்களுக்காகவும், நம்முடைய அக்கிமங்களுக்காகவும் நாம் நாணமடையவேண்டும். நம்முடைய துன்மார்க்கமான காரியங்கள் எல்லாவற்றையும் விட்டு விலகி, கர்த்தரிடத்தில் மனந்திரும்பி வரவேண்டும். கர்த்தரை பயபக்தியோடு துதிக்கவேண்டும்.
தாவீது தன்னுடைய சத்துருக்களுக்காக கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். ""அவர்கள் காற்று முகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக. கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார். காற்று முகத்தில் பறக்கிற பதரினால், காற்றை எதிர்த்து போராட முடியாது. காற்று எந்தத் திசையில் அடிக்கிறதோ, அந்தத் திசையில் பதரும் அடித்துச் செல்லப்படும்.
தாவீதின் சத்துருக்களினால் தேவனுடைய நீதிக்கு எதிர்த்து நிற்கமுடியாது. தேவன் தம்முடைய நீதியான நியாயத்தீர்ப்பை அவர்களுக்குக் கொடுக்கும்போது, அவர்களுக்குத்தண்டனை கிடைக்கும். அழிவு வரும். கர்த்தருடைய தூதன் தாவீதின் சத்துருக்களைத் துரத்துவான். கர்த்தருடைய தூதன் பலமுள்ளவன். பலத்த காற்றைப் போன்றவன். தாவீதின் சத்துருக்களோ பதரைப்போன்றவர்கள். பதரால் பலத்த காற்றிற்கு எதிர்த்து நிற்கமுடியாது. தாவீதின் சத்துருக்களினால் கர்த்தருடைய தூதனுக்கு எதிர்த்து நிற்கமுடியாது.
தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய சத்துருக்களுக்காக தொடர்ந்து ஜெபம்பண்ணுகிறார். ""அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக. கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக'' என்று சொல்லுகிறார். தாவீதின் சத்துருக்கள், தோற்று ஓடிப்போகும்போது, அவர்களுக்குள் கலக்கமும் பயமும் உண்டாயிருக்கும். அவர்களுக்கு செம்மையான வழி இருக்காது. அவர்கள் போகிற வழி இருளும் சறுக்கலுமாயிருக்கும்.
அவர்களால் அந்த வழியில் மெதுவாகவும் போகமுடியாது. ஏனெனில் கர்த்தருடைய தூதன் அவர்களைப் பிடிப்பதற்கு பின்தொடர்ந்து வருகிறான். தாவீதின் சத்துருக்கள் தாவீதைப் பிடிப்பதற்காக அவரைப் பின்தொடர்ந்து வந்தார்கள். கர்த்தரோ தாவீதை அவருடைய சத்துருக்களிடமிருந்து காப்பாற்றுகிறார். அவருடைய சத்துருக்களைப் பிடிப்பதற்கு கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்புகிறார். கர்த்தருடைய தூதன் தாவீதின் சத்துருக்களைப் பிடிக்க அவர்களைப் பின்தொடருகிறான்.
அவன் மறைவாய் வைத்த வலை
முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள். அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக (சங் 35:7,8).
தாவீதின் சத்துருக்கள் மிகப்பெரிய துன்மார்க்கராயிருக்கிறார்கள். தாவீதுக்கு விரோதமாய் சதிஆலோசனைபண்ணுகிறார்கள். தாவீதைப் பிடிப்பதற்கு மறைவாக கண்ணிகளை வைக்கிறார்கள். தாவீது ஒரு குற்றமும் செய்யவில்லை. அவர்கள் தாவீதைப் பிடிப்பதற்கு ஒரு முகாந்தரமுமில்லை. ஆனாலும் அவர்கள் எந்தவித முகாந்தரமுமில்லாமல், தாவீதுக்காக தங்கள் வலையை குழியில் ஒளித்து வைக்கிறார்கள். முகாந்தரமில்லாமல் தாவீதின் ஆத்துமாவுக்கு படுகுழிவெட்டுகிறார்கள்.
சத்துருக்கள் தாவீதுக்கு மறைவாக குழியிலே வலையை ஒளித்து வைத்தாலும், கர்த்தருக்கு மறைவாக எதையும் ஒளித்து வைக்க முடியாது. சத்துருக்கள் இறுமாப்போடிருக்கிறார்கள். தங்களுக்கு அழிவு வராது என்று தங்கள் சுயபலத்தை நம்புகிறார்கள். சவுல் அவர்களுக்குத் தலைவனாயிருக்கிறான். சவுல் நினையாத அழிவு அவருக்கு வரவேண்டுமென்றும், சவுல் மறைவாய் வைத்த வலை அவரையே பிடிக்கக்கடவது என்றும், சவுலே அந்தக் குழியில் விழுந்து அழிவாராக என்றும் தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.
உமக்கொப்பானவர் யார்
என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும் (சங் 35:9,10).
தாவீது தன்னை கர்த்தருடைய பலத்த கரத்திலே ஒப்புக்கொடுத்திருக்கிறார். கர்த்தர் தன்னை சத்துருக்கள் மூலமாய் வரும் ஆபத்துக்களிலிருந்து விடுவிப்பார் என்று தாவீது கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறார். தாவீதுக்கு தன்னுடைய நம்பிக்கையில் ஒரு சந்தேகமுமில்லை. இதனால் தாவீதின் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கிறது.
தாவீதின் மகிழ்ச்சிக்கு அவருடைய சுயபலமோ, சுயபராமக்கிரமமோ காரணமல்ல. தாவீது தன்னுடைய பாதுகாப்பை நினைத்து சந்தோஷப்படவில்லை. அவருடைய ஆத்துமா கர்த்தரில் களிகூருகிறது. கர்த்தருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கிறது. தாவீதின் சந்தோஷத்திற்கு கர்த்தரே ஆதரமாயிருக்கிறார். தாவீது கர்த்தருடைய வாக்குத்தத்தத்தில் மகிழ்ச்சியாயிருக்கிறார். கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தின் பிரகாரமாய், தாவீதை இரட்சிப்பார். இதனால் தாவீது கர்த்தருடைய இரட்சிப்பில் சந்தோஷமாயிருக்கிறார்.
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனை கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் கர்த்தர் தப்புவிக்கிறார். இந்த விஷயங்களில் கர்த்தருக்கொப்பானவர் ஒருவருமில்லை. இந்த வாக்கியத்தை தாவீதின் எலும்புகளெல்லாம் சாட்சியாகச் சொல்லுகிறது. தாவீதின் ஆவியும், ஆத்துமாவும், இருதயமும், இந்த வாக்கியத்தை சாட்சியாகச் சொல்லுகிறது.
கர்த்தருக்கு ஒப்பானவர் கீழ்க்கண்ட காரியங்களில் ஒருவருமில்லை
1. மீட்பு (சங் 35:10).
2. வல்லமை (யாத் 9:14; சங் 89:8).
3. மற்ற தேவர்களுடன் ஒப்பிடுதல் (யாத் 15:11)
4. பரிசுத்தம் (யாத் 15:11; 1சாமு 2:2)
5. மாட்சிமை (உபா 33:26)
6. ஸ்திரத்தன்மை, பெலன் (1சாமு 2:2)
7. மகத்துவம் (2சாமு 7:22)
8. உடன்படிக்கையையும், கிருபையையும் காத்தல் (1இராஜா 8:23)
9. நீதி (சங் 71:19)
10. கிரியைகள் (சங் 86:8)
11. விசுவாசம் (சங் 89:8)
12. வானங்களில் கர்த்தருடைய மகிமை (சங் 113:4-5)
13. அனைத்திலும் திட்டம் பண்ணுதல் (ஏசா 46:5-10)
14. ராஜ்யபாரம் பண்ணுதல் (எரே 10:6-7)
15. மன்னித்தல் (மீகா 7:18)
கர்த்தர் மனுஷனைத் தப்புவிக்கும் பலமான காரியங்கள்
1. மோசேயின் பிரமாணம் (ரோமர் 3:19-20; ரோமர் 7:1-6; 2கொரி 3:6; கலா 3:10-11)
2. பாவம் (ரோமர் 5:21; ரோமர் 6:7-23; ரோமர் 8:12-13)
3. உலகம் (யோவான் 16:33; ரோமர் 12:1-2)
4. சுயம் (ரோமர் 7:7-24; ரோமர் 8: 1-13)
5. வியாதி (மத் 8:17; யோவான் 10:10; 1பேதுரு 2:24)
6. மரணம் (எபி 2:9-18; 1கொரி 15:35-54)
7. சாத்தான் (கொலோ. 2:14; 1யோவான் 3:8-10; 1யோவான் 5:18)
கொடுமையான சாட்சிகள்
கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள் (சங் 35:11).
தாவீதின் சத்துருக்களிடத்தில் இரண்டு தீயசுபாவங்கள் உள்ளன. அவையாவன : 1. அநியாயம் 2. நன்றி மறப்பது. சவுல் தாவீதுக்கு விரோதமாய் சதிஆலோசனைபண்ணுகிறார். தாவீதின்மீது தேசத்துரோக குற்றம் சுமத்தி, அவரை தேசத்திலிருந்து துரத்திவிடவேண்டுமென்பதுதான் சவுலின் தீயஎண்ணம். இதற்காக சவுல் தாவீதுக்கு விரோதமாய் கொடுமையான சாட்சிகளை எழுப்புகிறார். அந்தச் சாட்சிகளும் தாவீது அறியாததை அவரிடத்தில் கேட்கிறார்கள்.
கொடுமையான சாட்சிகள் பொய்சொல்லுவதற்கு அஞ்சமாட்டார்கள். பணத்திற்காக எத்தனை பொய் வேண்டுமானாலும் சொல்லுவார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு எதன்மீதும், யார்மீதும் சத்தியம்பண்ணுவார்கள். தாவீதுக்கு விரோதமாய் பொய்ச்சாட்சிகள் எழும்பியது, தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாய் பொய்ச்சாட்சிகள் எழும்பியதற்கு அடையாளமாயிருக்கிறது.
""பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்; ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்-யும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து: தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள். அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்'' (மத் 26:59-62).
துன்மார்க்கரின் பாவங்கள்
1. கொடுமையான சாட்சிகளாக எழும்புவார்கள் (சங் 35:11)
2. மற்றவர்களை தவறாக குற்றஞ்சாட்டுதல்
3. நன்மைக்குப் பதில் தீமை செய்தல் (சங் 35:12)
4. மற்றவர்களை அழிக்க வகைதேடுதல்
5. மற்றவர்களுக்கு ஆபத்துண்டான போது சந்தோஷப்படுதல் (சங் 35:15)
6. பாவம் செய்வதற்கு கூட்டங்கூடுதல்
7. கொலை செய்வதற்கு இரகசியமாக திட்டம் பண்ணுதல்
8. நீதிமானை தாக்குவார்கள் (சங் 35:16)
9. இச்சகம் பேசுகிற பரியாசக்காரரோடே சேர்வார்கள்.
10. அடுத்தவர்களை வெறுத்து அவதூறு சொல்வார்கள்.
நன்மைக்குப் பதிலாக தீமை செய்கிறார்கள்
நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள் (சங் 35:12).
தாவீதின் சத்துருக்கள் நன்றி மறந்தவர்களாகயிருக்கிறார்கள். தாவீது அவர்களுக்கு அநேக நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆனால் அவர்களோ தாவீதுக்கு நன்மை செய்யாமல் தீமை செய்கிறார்கள். ஒருவனைப்பற்றி கடினமான வார்த்தைகளைச் சொல்லவேண்டுமென்றால், ""அவன் நன்றி மறந்தவன்'' என்று சொல்லலாம். இது துன்மார்க்கருடைய சுபாவம். அவர்கள் நன்மைக்குப் பதிலாக தீமை செய்வார்கள்.
தாவீது இஸ்ரவேல் தேசத்திற்கு நன்மை செய்திருக்கிறார். கோலியாத்தைக் கொன்று, யூதர்களை பெலிஸ்தரிடமிருந்து பாதுகாத்தார். இதனிமித்தமாய் இஸ்ரவேல் தேசத்தாரெல்லோரும் தாவீதுக்கு நன்மை செய்யவேண்டும். தாவீது தேசத்திற்கு நன்மை செய்ததுபோல, ஒரு சில தனிமனுஷர்களுக்கும் நன்மை செய்திருக்கிறார். அவர்கள்கூட தாவீதுக்கு நன்மை செய்யாமல், தீமை செய்கிறார்கள். தாவீதுக்கு அவர்கள் சிநேகிதராயிருப்பதற்குப் பதிலாக, சத்துருக்களாயிருக்கிறார்கள்.
தாவீது சவுலுக்கும் அநேக நன்மைகளைச் செய்திருக்கிறார். சவுலோ நன்றி மறந்தவராக, தாவீதுக்கு நன்மைசெய்யாமல் தீமை செய்கிறார். சவுல் தன்னுடைய வேலையாட்களையும் தாவீதுக்கு தீமை செய்யுமாறு வழிநடத்துகிறார். இதனால் தாவீதுக்கு எப்பக்கத்திலும் உதவி கிடைக்கவில்லை. தாவீதின் சத்துருக்கள் அவருடைய ஆத்துமாவை திக்கற்றுப்போகப்பார்க்கிறார்கள். தாவீதுக்கு உதவி செய்ய ஒருவருமில்லை. அவர் திக்கற்றப்பிள்ளையைபோல இருக்கிறார்.
நீதிமானின் நற்கிரியைகள்
1. சத்துருக்களுக்கு நன்மையானதை மட்டும் செய்வார்கள் (சங் 35:12).
2. வியாதியின் போது இரக்கம் காட்டுவார்கள்(சங் 35:13).
3. வியாதியாயிருக்கிற சத்துருக்களுக்காக உபவாசம் இருப்பார்கள்
4. சத்துருக்களுக்காக ஜெபிப்பார்கள்
5. விரோதம் பாராட்டாமல் சகோதரனாகவும் சிநேகிதனாகவும் பாவித்து நடப்பார்கள் (சங் 35:14).
6. சத்துருக்களுக்காக துக்க வஸ்திரம் தரிப்பார்கள்.
நான் துன்மார்க்கருக்காக ஜெபித்தேன். ஆனால் அவர்களுடைய பாவத்தின் நிமித்தம் தேவன் அவர்களை இரட்சிக்கவில்லை. ஆயினும் நான் அவர்களுக்காக ஜெபித்ததினாலும் அவர்கள் மீது இரக்கமாயிருந்ததாலும் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார். நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன். அவன் செய்த தீமைக்குப் பதிலாக அவனுக்கு நன்மை செய்தேன் என்று நீதிமான் சொல்லுவான் (ரோமர் 12:14-21).
சிநேகிதனாகவும் சகோதரனாகவும்
அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது. நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன் (சங் 35:13,14).
தாவீது எல்லோருக்கும் நன்மை செய்தார். இப்போது தாவீதுக்கு சத்துருக்களாகயிருக்கிறவர்கள், ஒரு காலத்தில் அவருக்கு சிநேகிதராயிருந்தார்கள். அவர்கள் வியாதியாயிருந்தபோது தாவீது அவர்களுக்காக ஜெபித்தார். அவர்களோடு அன்பாகப் பேசி பழகினார். அவர்களுக்கு உபத்திவரங்கள் வந்தபோது தாவீது அவர்களுக்கு ஆதவாயிருந்தார்.
தாவீதின் சத்துருக்கள் அவருக்கு சிநேகிதராயிருந்தபோது அவர்களில் சிலர் வியாதியாயிருந்தார்கள். அப்போது தாவீது அவர்களுக்காக கர்த்தருடைய சமுகத்தில் விசேஷித்த ஜெபங்களை ஏறெடுத்தார். அவர்களுக்காக ஜெபிக்கும்போது இரட்டு அவருடைய உடுப்பாயிருந்தது. உபவாசத்தால் தாவீது தன்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினார். கர்த்தர் தாவீதின் ஜெபத்தைக்கேட்டு, அவர்களுடைய வியாதிகளை குணமாக்கினார். தாவீதின் ஜெபம் அவர் மடியிலே திரும்ப வந்தது. கர்த்தர் அவருடைய ஜெபத்திற்குப் பதில்கொடுத்தார்.
தாவீது தன்னுடைய போஜனத்தையும், வஸ்திரத்தையும் அவர்களுக்காக வருத்திக்கொண்டார். ராஜவஸ்திரம் தரிப்பதற்குப் பதிலாக இரட்டுடுத்திக் கொண்டார். விருந்து சாலையிலே சுவையான போஜனம் புசிப்பதற்குப் பதிலாக, தாவீது உபவாசித்து தன்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினார். தாவீது அவர்களுடைய சரீரப்பிரகாரமான வேதனைகளுக்காகவும் ஜெபித்தார். தாவீது அவர்களுடைய பாவங்களுக்காகவும் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணினார்.
தாவீது அவர்களுக்காக ஜெபம்பண்ணும்போது, தன்னுடைய சரீரத்தை வருத்தி உபவாசம்பண்ணுகிறார். தாவீதுக்கு போஜனத்தின்மீது விருப்பமில்லை. போஜனம்பண்ணுவதற்கு அவருக்கு நேரமுமில்லை. வியாதியாயிருந்தவர்களை கர்த்தர் சொஸ்தமாக்கவேண்டுமென்பதே தாவீதின் விருப்பமாயிருந்தது. தன்னுடைய சுயகாரியங்களுக்காக தாவீது நேரத்தை செலவிடாமல், வியாதியாயிருப்பவர்களுக்காக ஜெபம்பண்ணுவதில் தன்னுடைய நேரத்தை செலவு செய்தார். இதனால் அவருடைய ஜெபம் அவருடைய மடியில் திரும்ப வந்தது.
தாவீது சவுலை தன்னுடைய சிநேகிதனாகவும், சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டார். சவுலுக்கு வியாதி வந்தபோது தாவீது துக்க வஸ்திரம் தரித்து தலைகவிழ்ந்து நடந்தார். ஒரு குமாரன் தன் தாய்க்காக துக்கிப்பதுபோல, தாவீது சவுலுக்காக துக்கித்தார்.
நீசரும் நான் அறியாதவர்களும்
ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள். அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள் (சங் 35:15,16).
தாவீது தன்னுடைய சிநேகிதருக்காக அநேக நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆனால் அவர்களோ தாவீதுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமை செய்கிறார்கள். நன்றி மறந்தவர்களாகயிருக்கிறார்கள். தாவீதுக்கு ஆபத்து உண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டு கூட்டங்கூடுகிறார்கள். அவர்கள் நீசராகயிருக்கிறார்கள். தாவீதுக்கு அறிமுகமில்லாத ஜனங்கள்கூட அவருக்கு விரோதமாய் கூட்டங்கூடுகிறார்கள். நீசரும், தாவீது அறியாதவர்களும், அவருக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, அவரை ஓயாமல் நிந்திக்கிறார்கள். தாவீதின் பெயரில் பற்கடிக்கிறார்கள்.
பரியாசக்காரர்கள் அப்பத்திற்காக இச்சகம் பேசுவார்கள். தாவீதின் சத்துருக்கள் அவர்களோடு சேர்ந்துகொண்டு தாவீதின் பெயரில் பற்கடிக்கிறார்கள். தாவீதை நிந்திக்கிறார்கள். பரியாசக்காரர் எப்போதுமே மாய்மாலக்காரராயிருப்பார்கள். அவர்களுடைய வார்த்தையிலும் செய்கையிலும் உண்மையிருக்காது. அவர்களுக்கு மத்தியிலே தாவீது ஒரு வேடிக்கை பொருளைப்போல இருக்கிறார். குடிகாரர்கள் குடித்துவிட்டு கும்மாளம்போடுவதுபோல, அவர்கள் தாவீதுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி அவரை ஓயாமல் நிந்திக்கிறார்கள்.
தாவீதைப்போல கர்த்தருடைய பிள்ளைகள் அநேகருக்கு இப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும். நாம் ஒரு சிலருக்காக ஜெபம்பண்ணியிருப்போம். கர்த்தரும் நம்முடைய ஜெபத்தைக்கேட்டு அவர்களை ஆசீர்வதித்திருப்பார். அவர்கள் நம்மீது நன்றியுள்ளவர்களாயிருக்கவேண்டும். ஆனால் அவர்களோ நன்றி மறந்து, நமக்குத் தீங்கு செய்வார்கள். நம்மை நிந்திப்பார்கள். நமக்கு ஆபத்து வரும்போது அவர்கள் சந்தோஷப்படுவார்கள். இச்சகம் பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு, நமக்கு விரோதமாய்த் தூஷண வார்த்தைகளைப் பேசுவார்கள். புதிய ஏற்பாட்டுக்காலத்தில் அப்போஸ்தலர்கள் இந்த உலகத்திற்கு ஒரு வேடிக்கைப் பொருளைப்போல இருந்தார்கள். ஆனாலும் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை கைவிட்டுவிடவில்லை. கர்த்தர் தம்முடைய ஊழியக்காரரின் சுகத்தை விரும்புகிறவர்.
ஆண்டவரே
ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும் (சங் 35:17).
தாவீது கர்த்தரிடத்தில் பாரத்தோடு ஜெபம்பண்ணுகிறார். கர்த்தர் தாமே தம்முடைய கிருபையை தனக்கும், தன்னுடைய சிநேகிதருக்கும் வெளிப்படுத்தவேண்டுமென்றும், தனக்காக கர்த்தர் தாமே கிரியை நடப்பிக்கவேண்டுமென்றும் தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தர் இனிமேலும் கிரியை நடப்பிக்காமல், தனக்கு ஏற்பட்டிருக்கிற உபத்திரவங்களையெல்லாம் சும்மா பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது என்பதுதான் தாவீதின் விண்ணப்பம்.
""ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர். என் ஆத்துமாவை அழிவுக்கு தப்புவியும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார். சத்துருக்கள் தாவீதின் ஆத்துமாவுக்கு விரோதமாய் சதிஆலோசனை செய்கிறார்கள். தனக்கு அருமையானதை சிங்கக்குட்டிகளுக்கு தப்புவியும் என்று தாவீது சொல்லுகிறார். தாவீதுக்கு அவருடைய ஆத்துமாவே அருமையானது. சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம்போல சுற்றித்திரிகிறான். தாவீதின் சத்துருக்கள் சாத்தானுடைய பிள்ளைகளாய் இருக்கிறார்கள். சிங்கக்குட்டிகளைப்போல தீங்கு செய்கிறார்கள்.
தாவீது தன்னுடைய ஆத்துமாவை இழந்துபோக ஆயத்தமாயில்லை. ஆத்தும இழப்பு பேரிழப்பாகயிருக்கும் என்பது தாவீதுக்குத் தெரியும். தாவீது தன்னுடைய ஆத்துமாவைக் கவனியாமல், அதை அசட்டை செய்து விட்டுவிடுவாரென்றால், அதுவே அவருக்கு பெருத்த அவமானமாயிருக்கும். ஆகையினால் தாவீது தன்னுடைய ஆத்துமாவை மிகுந்த கவனத்தோடு பாதுகாத்து, பராமரிக்கவேண்டும் என்று விரும்புகிறார்.
தாவீதின் ஆத்துமாவுக்கு ஆபத்து வந்திருக்கிறது. கர்த்தர் தாமே தாவீதின் ஆத்துமாவை அழிவுக்குத் தப்புவிக்கவேண்டும். தாவீது யாருக்கும் ஒரு தீங்கும் செய்தததில்லை. அவர் குற்றமற்றவர். கர்த்தர் தாவீதை நீதியாய் விசாரிக்கும்போது, அவரிடத்தில் ஒரு குற்றமும் இல்லையென்பது எல்லோருக்கும் தெளிவாய்த் தெரியும். அப்போது தாவீதின் சத்துருக்கள், தங்களுடைய சதிஆலோசனைகளினிமித்தம் வெட்கப்பட்டுப்போவார்கள்.
தாவீதின் ஆத்துமா அழிந்துபோகவேண்டுமென்பதே அவருடைய சத்துருக்களின் விருப்பம். அதற்காகவே அவர்கள் அநேக சதிஆலோசனைகளைச் செய்கிறார்கள். தாவீதின் ஆத்துமாவை அழிப்பதற்காக அவருக்கு மறைவாய் வலைகளை விரிக்கிறார்கள். இவையெல்லாவற்றிற்கும் கர்த்தர் தாவீதைத் தப்புவிக்கும்போது, அவருடைய சத்துருக்களுக்கு மிகுந்த ஏமாற்றமும் அவமானமும் உண்டாகும்.
தாவீதின் சத்துருக்கள் மனந்திரும்பவேண்டும். தாவீது தங்களுக்கு இதுவரையிலும் செய்திருக்கிற அநேக நன்மைகளை அவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். இனிமேலாவது தாவீதுக்கு தீமை செய்யாமல் நன்மை செய்யவேண்டும். அவர்கள் மனந்திரும்பவில்லையென்றால் அவர்களுக்கு நித்திய துக்கமும், நித்திய அழிவும் உண்டாகும். நம்முடைய வாழ்க்கையில் சில பிரச்சனைகள் உண்டாகும்போது, நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து, அதைச் சுத்திகரிக்கவேண்டும். நம்முடைய இருதயம் பரிசுத்த ஆவியானவரால் புதுப்பிக்கப்படவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி பெறவேண்டும்.
மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்
மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன் (சங் 35:18).
கர்த்தர் தன்னுடைய ஜெபத்திற்கு பதில்கொடுப்பார் என்று தாவீது விசுவாசிக்கிறார். ஜெபத்தினால் நமக்கு ஜெயமுண்டாகும். துதி பெருகும்போது கிருபை பெருகும். கர்த்தருடைய சமுகத்தில் நாம் பயபக்தியாய் ஜெபம்பண்ணும்போது, கர்த்தர் தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் நமக்குக் காண்பிப்பார். கர்த்தர் கொடுக்கிற ஆசீர்வாதங்களுக்காக நாம் அவரை நன்றியோடு துதிக்கவேண்டும். கர்த்தர் நமக்குச் செய்த நன்மைகளை நினைத்து நாம் அவருக்கு ஸ்தோத்திரபலிகளை ஏறெடுக்கவேண்டும்.
""மகாசபையிலே உம்மைத் துதிப்பேன். திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்'' என்று தாவீது சொல்லுகிறார். கர்த்தர் தாமே தாவீதின் ஆத்துமாவை அழிவுக்கும், அவருக்கு அருமையானதை சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவித்திருக்கிறார். ஆகையினால் கர்த்தரே தாவீதின் துதிகளுக்குப் பாத்திரராயிருக்கிறார். தாவீதின் நாவு கர்த்தருடைய நீதியைப்பற்றிப் பேசுகிறது. கர்த்தர் தம்முடைய நீதியின்படியே நியாயம் விசாரிக்கிறவர். தாவீதின் ஜீவியத்தில் கர்த்தருடைய நீதியும், கிருபையும், இரக்கமும் வெளிப்பட்டிருக்கிறது. இதனிமித்தமாய் தாவீது கர்த்தரை மகா சபையிலே துதிப்பதாக வாக்குப்பண்ணுகிறார். திரளான ஜனங்களுக்குள்ளே கர்த்தரைப் புகழுவேன் என்றும் தாவீது சொல்லுகிறார்.
வீணாய் எனக்கு சத்துருக்களானவர்கள்
வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக. அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள். எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள் (சங் 35:19-21).
தாவீதுக்கு இப்போது சத்துருக்களாயிருக்கிறவர்கள் எந்தவிதமான முகாந்தரமுமில்லாமல் அவருக்குச் சத்துருக்களாயிருக்கிறார்கள். தாவீதுக்கு வீணாய் சத்துருக்களானவர்கள், அவருக்கு வந்திருக்கிற ஆபத்துக்களை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். அவர்கள் முகாந்தரமில்லாமல் தாவீதைப் பகைக்கிறார்கள். தாவீது தன்னுடைய சத்துருக்களைப்பற்றி கர்த்தரிடத்தில் ஒப்புவிக்கிறார். அவர்கள் தாவீதைப் பகைப்பதற்கு ஒரு முகாந்தரமுமில்லை. நியாயமாகப் பார்த்தால் அவர்கள் தாவீதை சிநேகிக்கவேண்டும். அவருக்கு நன்மை செய்யவேண்டும். ஏனெனில் தாவீது அவர்களுக்கு நன்மை செய்திருக்கிறார். அவர்களோ நன்றி மறந்துவிட்டார்கள். அவர்கள் தாவீதுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமை செய்கிறார்கள்.
தாவீது தன்னுடைய சத்துருக்களைப்பற்றி கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணும்போது, ""வீணாய் எனக்கு சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண்சிமிட்டாமலும் இருப்பார்களாக'' என்று சொல்லுகிறார். தாவீதின் சத்துருக்கள் அவரை முகாந்தரமில்லாமல் பகைத்ததுபோல, இயேசுகிறிஸ்துவின் சத்துருக்களும் அவரை முகாந்தரமில்லாமல் பகைத்தார்கள். இயேசுகிறிஸ்து தாமே இந்த வாக்கியத்தை மேற்கோளாகச் சொல்லுகிறார். ""முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று'' (யோவா 15:25) என்று இயேசு சொல்லுகிறார்.
தாவீதின் சத்துருக்கள் சமாதானமாய் பேசுவதில்லை. அவர்கள் தாவீதைச் சந்திக்கும்போது நலம் விசாரிக்கமாட்டார்கள். பொதுவான நற்குணம்கூட அவர்களிடத்தில் காணப்படவில்லை. தாவீதைப் பார்க்கும்போது அவர்கள் பகைவுணர்வோடு பார்க்கிறார்கள். முகாந்தரமில்லாமல் அவரைப் பகைக்கிறவர்கள், தாவீதுக்கு விரோதமாகவே பேசுகிறார்கள்.
யோசேப்பின் சகோதரர்கள் அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள் (ஆதி 37:4). பகை வரும்போது அங்கு சமாதானம் இருக்காது. தாவீதின் சத்துருக்களுக்கு இருதயத்திலும் பகை இருக்கிறது. அவர்களுடைய நாவிலும் பகை இருக்கிறது. ஆகையினால் அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல் பகையாய்ப் பேசுகிறார்கள். அவர்கள் தாவீதுக்கு விரோதமாய் மாத்திரமல்ல, தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்கள் எல்லோருக்கும் விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள். தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்கள் தாவீதின் சிநேகிதராயிருக்கிறார்கள். முகாந்தரமில்லாமல் தாவீதைப் பகைத்து, அவருக்கு வீணாய்ச் சத்துருக்களானவர்கள், அவருடைய சிநேகிதருக்கும் சத்துருக்களாயிருக்கிறார்கள்.
சத்துருக்களின் இருதயம் நன்மையான காரியங்களைச் சிந்திக்காது. அவர்கள் நல்லவர்களுக்கு விரோதமாய் வஞ்சமான காரியங்களையே சிந்திப்பார்கள். ஜனங்கள் அமைதலாயிருந்தால் அது சத்துருக்களுக்குப் பிடிக்காது. ஜனங்களுக்கு அமைதி வரும்போது தாவீதுக்கும் அமைதி வரும். தாவீதின் அமைதியைக் கெடுப்பதற்காக, அவருடைய சத்துருக்கள் ஜனங்களுடைய அமைதியைக் கெடுத்துப்போடுகிறார்கள்.
தாவீதின் சத்துருக்கள் தாவீதுக்கு விரோதமாய் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, தூஷண வார்த்தைகளைப் பேசுகிறார்கள். தாவீதுக்குத் தீங்கு வருவதை தங்கள் கண்கள் கண்டது என்று துணிகரமாய்ப் பொய்சொல்லுகிறார்கள். தங்களுடைய இருதயம் விரும்புவதை வார்த்தைகளாகச் சொல்லிவிடுகிறார்கள். தங்களுடைய இருதயத்தின் விருப்பம் நிறைவேறுமா அல்லது நிறைவேறாதா என்பது பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. தாவீதைப் பார்த்தவுடன் அவருடைய சத்துருக்கள் அவரை சபித்துவிடுகிறார்கள்.
உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும்
கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும். என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும். என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும் (சங் 35:22-24).
தாவீது தன்னுடைய சத்துருக்களுக்கு விரோதமாய் தேவனிடத்தில் முறையிடுகிறார். தாவீதின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாய் தீங்கு பேசுகிறார்கள். தீங்கு செய்கிறார்கள். தாவீதின் இருதயத்தில் அவர்களை பழிவாங்கும் எண்ணம் எதுவுமில்லை. பழிவாங்குதல் கர்த்தருக்குரியது. ஆகையினால் தாவீது தன்னுடைய வழக்கை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்துவிடுகிறார்.
தனக்கு விரோதமாக தன்னுடைய சத்துருக்கள் வஞ்சகமான காரியங்களை நினைப்பதையும், தூஷணமான வார்த்தைகளைப் பேசுவதையும் கர்த்தர் பார்த்திருக்கிறார். அவர்கள் தாவீதுக்கு வீணாய் சத்துருக்களானதையும், முகாந்தரமில்லாமல் அவர்கள் தாவீதைப் பகைப்பதையும் கர்த்தர் பார்த்திருக்கிறார். தாவீது இதை கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். ""கர்த்தாவே நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும், ஆண்டவரே எனக்குத் தூரமாகாதேயும்'' என்று தாவீது கர்த்தரிடத்தில் தன்னுடைய வழக்கை ஒப்புவிக்கிறார்.
கர்த்தர் சர்வஞானமுள்ளவர். அவருக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை. அவர் சகலவற்றையும் காண்கிறவர். மனுஷன் முகத்தைப் பார்த்தாலும், கர்த்தர் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்து அறிந்திருக்கிறார். மனுஷர் தனக்குத் தீங்கு செய்தாலும் கர்த்தர் தனக்கு நன்மை செய்வார் என்று தாவீது விசுவாசிக்கிறார். தனக்கு நியாயம் செய்ய கர்த்தரால் மாத்திரமே முடியும் என்பது தாவீதுக்குத் தெரியும். தாவீது இதை கர்த்தரிடத்திலே இவ்வாறு சொல்லுகிறார். ""என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயம் செய்யவும், என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்'' என்று சொல்லுகிறார்.
தாவீதுக்கு நீதியான நியாயத்தீர்ப்பு தேவைப்படுகிறது. தாவீதால் மனுஷரிடத்தில் நீதியைப் பார்க்கமுடியவில்லை. அவர்கள் முகாந்தரமில்லாமல் தாவீதைப் பகைக்கிறார்கள். தன்னுடைய பகைஞரிடமிருந்து தனக்கு நீதியான நியாயத்தீர்ப்பு கிடைக்காது என்பது தாவீதுக்குத் தெரியும். கர்த்தர் மாத்திரமே நீதியுள்ள நியாயாதிபதியாயிருக்கிறார். கர்த்தரே தன்னுடைய வழக்கை விசாரித்து, தனக்கு நீதியான தீர்ப்பு கொடுக்கவேண்டுமென்று, தாவீது தன்னுடைய வழக்கை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார். ""என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை விசாரியும், என்னைக் குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்'' என்று தாவீது கர்த்தரிடத்தில் சொல்லுகிறார்.
கர்த்தர் நீதியுள்ளவர். அவர் வழக்குகளை நியாயமாய் விசாரிக்கிறவர். நீதியும் நியாயமும் கர்த்தருடைய சுபாவம். கர்த்தருடைய ஆளுகை எப்போதுமே நீதியுள்ளதாயிருக்கும். அவருடைய தீர்ப்பு நியாயமுள்ளதாயிருக்கும். அவரே ராஜாக்களுக்கும், தேசங்களுக்கும், மனுபுத்திரருக்கும் நீதியுள்ள நியாயாதிபதியாயிருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும், இந்தப் பிரபஞ்சத்திலே, மனுஷர் மத்தியிலே, தேவநீதி வெளிப்பட வேண்டுமென்று விண்ணப்பம்பண்ணவேண்டும். தேவநீதி நம்மை ஆளுகை செய்யவேண்டுமென்று கர்த்தரிடத்தில் அறிக்கை செய்யவேண்டும். அப்போதுதான் மனுஷர் மத்தியிலே பகை நீங்கும். சமாதானம் பெருகும். அமைதி உண்டாகும்.
சத்துருக்களின் இருதயம்
அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும். எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள் (சங் 35:25,26).
தாவீதுக்கு இப்போது ஆபத்து நேரிட்டிருக்கிறது. சவுல் தாவீதை நெருக்குகிறார். தாவீதுக்கு நேரிட்ட ஆபத்துக்காக அவருடைய சத்துருக்கள் சந்தோஷப்படுகிறார்கள். தாவீதுக்கு விரோதமாய் பெருமை பாராட்டுகிறார்கள். தாவீதுக்கு ஆபத்து நேரிடவேண்டுமென்று தாங்கள் விரும்புவதாகச் சொல்லுகிறார்கள். தாவீதை விழுங்கிவிட்டோமென்றுகூட ஆணவமாய்ச் சொல்லுகிறார்கள். வெளிப்படையான வார்த்தைகளினால் அவர்கள் இப்படி சொல்லாவிட்டாலும், தங்களுடைய இருதயத்திலே அவர்கள் இப்படி பேசிக்கொள்கிறார்கள்.
சத்துருக்களின் பேச்சு தாவீதுக்கு வேதனையைத் தருகிறது. தாவீது ஏற்கெனவே ஆபத்திலிருக்கிறார். அவருக்கு ஆதரவாகப் பேசுவதற்கு ஒருவர் கூடயில்லை. இந்த சூழ்நிலையில் கர்த்தர் தனக்கு ஆதரவாயிருக்கவேண்டுமென்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். ""அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்'' என்பதே தாவீதின் ஜெபம்.
தாவீதுக்கு நேரிட்ட ஆபத்துக்காக சந்தோஷிக்கிறவர்கள் வெட்கி நாணவேண்டும் என்று தாவீது எதிர்பார்க்கிறார். கர்த்தர் தாவீதை ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கும்போது, அவர்களுக்கு மெய்யாகவே வெட்கமும் நாணமும் உண்டாகும். தாவீதுக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலட்சையாலும் மூடப்படுவார்கள். தன்னுடைய சத்துருக்கள் அழிந்துபோகவேண்டுமென்று தாவீது விண்ணப்பம்பண்ணவில்லை. அவர்களுக்கு வெட்கமும், நாணமும், இலச்சையும் உண்டாகவேண்டுமென்று மென்மையான வார்த்தைகளினால் தாவீது ஜெபம்பண்ணுகிறார். தாவீதின் சத்துருக்கள் கடின இருதயமுள்ளவர்கள். தாவீதின் இருதயமோ மென்மையானது. அவருடைய இருதயம் நொறுங்குண்டதும், நருங்குண்டதுமாயிருக்கிறது. பழிவாங்குதல் கர்த்தருக்குரியது என்று விசுவாசித்து, தாவீது தன்னுடைய சத்துருக்களெல்லோரையும் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்துவிடுகிறார்.
துன்மார்க்கரின் பாவங்கள்
1. துன்மார்க்கர்கள், மற்றவர்களின் அழிவைத் தேடுவார்கள் சங் 35:19).
2. நீதிமானுக்கு விரோதியாய் இருப்பார்கள்.
3. முகாந்தரமில்லாமல் பகைப்பார்கள்.
4. யுத்தத்தைப் பற்றியே விடாமல் தொடர்ந்து பேசுவார்கள் (சங் 35:20).
5. விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுவார்கள்.
6. நீதிமானைக் குற்றப்படுத்துவார்கள் (சங் 35:21)
7. நீதிமான் அழிய வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள் (சங் 35:25)
8. நீதிமானை விழுங்கப் பார்க்கிறார்கள்
9. மற்றவர்களுக்கு நேரிடும் ஆபத்துக்காக சந்தோஷப்படுவார்கள் (சங் 35:26)
10. தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு விரோதமாக பெருமை பாராட்டுவார்கள்
கர்த்தர் தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிறார்
என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள். என் நாவு உமது நீதியையும், நாள் முழுவதும் உமது துதியையும் சொல்-க்கொண்டிருக்கும் (சங் 35:27,28).
தேசத்திலே அநேகர் தாவீதுக்கு வீணாய் சத்துருக்களானாலும், அவர்கள் தாவீதை முகாந்தரமில்லாமல் பகைத்தாலும், தாவீதின் நன்மையை விரும்புகிற ஒரு சிலரும் தேசத்திலே இருக்கிறார்கள். சத்துருக்கள் தாவீதுக்கு விரோதமாய் சதிஆலோசனை பண்ணினாலும், தூஷண வார்த்தைகளைப் பேசினாலும், தாவீதின் நீதி விளங்கவேண்டுமென்று விரும்புகிறவர்களும் தேசத்திலே இருக்கத்தான் செய்கிறார்கள். தாவீது அவர்களுக்காக கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.
தன்னுடைய நீதி விளங்கவேண்டுமென்று விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழவேண்டும் என்பதே தாவீதின் ஜெபம். கர்த்தர் தமது ஊழியக்காரருடைய சுகத்தை விரும்புகிறார். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று நீதிமான்கள் சொல்லவேண்டும். தாவீதின் நீதி விளங்கவேண்டுமென்று விரும்புகிறவர்கள் இதுபோல எப்போதும் சொல்லி தேவனைத் துதிக்கவேண்டும். தாவீது கர்த்தரைத் துதிப்பதுபோல, அவருடைய சிநேகிதர்களும் கர்த்தரைத் துதிக்கவேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.
துதி பெருகும்போது கிருபை பெருகும். தாவீதின் நாவு கர்த்தருடைய நீதியையும், அவருடைய துதியையும் நாள் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கும். இதனால் தேவகிருபை தாவீதின்மீது நாள் முழுவதும் இரங்கி வரும். தாவீது கர்த்தரை மகா சபையிலே துதிக்கிறார். திரளான ஜனங்களுக்குள்ளே அவரைப் புகழுகிறார். கர்த்தர் தாமே தம்முடைய நீதியின்படி தாவீதை நியாயம் விசாரித்திருக்கிறார். இதனிமித்தமாய் தாவீதின் நாவு கர்த்தருடைய நீதியை நாள்முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கிறது. கர்த்தருடைய நீதி எல்லா காலங்களிலும் விளங்கும். கர்த்தர் நீதியுள்ளவர் என்பதை எல்லா ஜாதியாரும் ருசித்துப் பார்ப்பார்கள்.