கலாத்தியர் 5ஆம் அதிகாரம் விளக்கம்
அப்போஸ்தலர் பவுல் கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகளுக்கு பொதுவான புத்திமதிகளைச் சொல்லுகிறார். தன்னுடைய ஆவிக்குரிய ஆலோசனைகளை அவர்கள் மத்தியில் உறுதிபண்ணுகிறார் (கலா 5:1-12). விசுவாசிகள் தங்களிடத்தில் அன்புகூருவதுபோல பிறரிடத்திலும் அன்புகூரவேண்டும். அவர்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்துப்போடக்கூடாது (கலா 5:13-15).
விசுவாசிகள் பாவத்தைவிட்டு விலகி ஓடவேண்டும். மாம்சமும் ஆவியும் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது (கலா 5:17). நாம் ஆவியினால் நடத்தப்படவேண்டும். ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளவேண்டும். மாம்ச இச்சையை நிறைவேற்றக்கூடாது (கலா 5:16,18). மாம்சத்தின் கிரியைகள் என்னென்ன என்பதையும், ஆவியின் கனியையும் பவுல் தெளிவாக அட்டவணை போட்டுக் காண்பிக்கிறார் (கலா 5:19-25). விசுவாசிகள் வீண்புகழ்ச்சியை விரும்பக்கூடாது (கலா 5:26).
விருத்தசேதனம் கலா 5 : 1-12
நியாயப்பிரமாணம்
ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள். இதோ, நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன். நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள் (கலா 5:1-4).
நாம் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிக்கப்படுகிறோம். மோசேயின் பிரமாணத்திற்கும் நம்முடைய இரட்சிப்புக்கும் சம்பந்தமில்லை. இரட்சிக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை நிறைவேற்றவேண்டும் என்னும் அவசியம் இல்லை. நியாயப்பிரமாணம் நம்மை அடிமைப்படுத்துகிறது. கிறிஸ்துவோ நமக்கு சுயாதீன நிலைமையை உண்டுபண்ணியிருக்கிறார். இரட்சிக்கப்பட்டிருக்கிற விசுவாசிகள் மறுபடியும் நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தன நுகத்திற்குட்பட்டுவிடக்கூடாது. கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலமையிலேயே நிலைகொண்டிருக்கவேண்டும்.
இயேசுகிறிஸ்து சுவிசேஷத்தின்கீழ் நமக்கு ஒரு விடுதயையைக் கொடுத்திருக்கிறார். நமக்கு சுயாதீன நிலமையை உண்டுபண்ணியிருக்கிறார். இந்த விடுதலை இயேசுகிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே நமக்கு உண்டாயிற்று. அவரே நம்மை விடுதலை செய்திருக்கிறார். ஆகையினால் கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலமையில் நாம் நிலைகொண்டிருக்கவேண்டும். நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தன நுகத்திற்கு நாம் மறுபடியும் அடிமைகளாகிவிடக்கூடாது.
கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகள் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டார்கள். அவர்கள் மத்தியிலே கள்ளப்போதர்கள் பிரவேசித்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைக் கடைப்பிடித்தால் மாத்திரமே அவர்கள் இரட்சிக்கப்பட முடியுமென்று கள்ளஉபதேசத்தைக் கொடுத்தார்கள். இதனால் அவர்கள் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தை விட்டுவிட்டு, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி விருத்தசேதனம் பண்ணிக்கொள்கிறார்கள். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் நீதிமானாக்கப்பட முடியுமென்று இவர்கள் நம்புவதினால், இவர்களுக்கு கிறிஸ்துவினால் ஒரு பிரயோஜனமும் இராது.
அப்போஸ்தலர் பவுல் கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகளுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மிகவும் தெளிவாகச் சொல்லுகிறார். ""பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்'' (கலா 5:2) என்றும், ""மறுபடியும் சாட்சியாகச் சொல்லுகிறேன்'' (கலா 5:3) என்றும் எழுதி பவுல் தன் வார்த்தைகளை உறுதிபண்ணுகிறார். தான் ஏற்கெனவே சொன்னதை மறுபடியும் சொல்லுகிறார்.
""நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக் கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு பிரயோஜனமிராது'' என்று பவுல் அவர்களுக்குச் சொல்லுகிறார். ""விருத்தசேதனம்பண்ணிக்கொள்கிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்ற கடனாளியாயிருக்கிறான்'' என்று மறுபடியும் அவர்களுக்கு சாட்சியாகச் சொல்லுகிறார். பவுலைப் பொறுத்தவரையில் இந்த உபதேசம் மிகவும் முக்கியமான உபதேசமாகயிருக்கிறது. அவர்கள் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்திற்குத் திரும்பி வரவேண்டும். விசுவாசத்தினால் மாத்திரமே தாங்கள் நீதிமான்களாக்கப்பட முடியுமென்று நம்பவேண்டும்.
நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைவிட்டு விலகி வரவேண்டும். விருத்தசேதனம் பண்ணுகிற சடங்குகளுக்கு அவர்கள் அடிமைகளாகிவிடக்கூடாது. இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்காமல், நியாயப்பிரமாணத்தையும் விருத்தசேதனத்தையும் நம்பி, அவற்றைக் கைக்கொண்டால் கிறிஸ்துவினால் அவர்களுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. கிறிஸ்து அவர்களுக்கு உண்டாக்கின சுயாதீன நிலமையிலிருந்து, அவர்கள் நிலைகொண்டிராமல் விலகிப் போய்விடுகிறார்கள்.
அப்போஸ்தலர் பவுல் இதே சத்தியத்தை மறுபடியும் சொல்லுகிறார். ""நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்'' என்று சொல்லுகிறார். ஏனெனில் விருத்தசேதனம்பண்ணிக்கொள்கிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்ற கடனாளியாயிருக்கிறான். அவன் கிறிஸ்து உண்டாக்கின சுயாதீன நிலமையிலே நிலைகொண்டிராமல், கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து, கிருபையிலிருந்து விழுந்து விடுகிறான்.
விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாக்கப்பட வேண்டுமென்பது தேவன் நமக்கு நியமித்திருக்கிற பிரமாணம். விசுவாசத்தைவிட்டுவிட்டு, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைச் செய்கிறவர்கள், தேவனுடைய பிரமாணத்தைவிட்டு விலகிப்போய்விடுகிறார்கள். சுயாதீன நிலமையிலிருந்து கீழே விழுந்துவிடுகிறார்கள். அவர்கள் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்ற கடனாளியாயிருக்கிறார்கள். நியாயப்பிரமாணம் முழுவதையும் எந்த மனுஷனாலும் நிறைவேற்ற முடியாது. ஆகையினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைப் பற்றிக்கொள்வதினால், அவர்கள் இதன் மூலமாய் நீதிமான்களாக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லாமற்போயிற்று. அவர்கள் நிரந்தர கடனாளிகளாக இருக்கிறார்கள்.
அவர்கள் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தை விட்டுவிட்டு, நியாயப்பிரமாணத்தை நம்புகிறார்கள். தங்களுடைய நம்பிக்கையை கிறிஸ்துவின்மீது கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, நியாயப்பிரமாணத்தின்மீது கட்டியெழுப்புகிறார்கள். இதனால் அவர்களுக்கு கிறிஸ்துவினால் ஒரு பிரயோஜனமும் உண்டாகாது. தங்கள் ஜீவியத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அவர் இரட்சகராக இருக்கமாட்டார். கிறிஸ்து மாத்திரமே தங்களுடைய இரட்சகர் என்று விசுவாசித்து ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அவர்களுக்கு இரட்சகரும் இல்லை. இரட்சிப்பும் இல்லை.
சுயாதீன நிலைமை என்னும் வார்த்தை புதிய உடன்படிக்கையின் சுவிசேஷத்தின் சுயாதீன நிலைமையை குறிப்பிடுகிறது. பழைய உடன்படிக்கை அடிமைத்தனத்திற்கும், பாவத்திற்கும், மரணத்திற்கும் உட்பட்டது. புதிய உடன்படிக்கை சுயாதீனத்திற்கும், நீதிக்கும், ஜீவனுக்கும் உரியது. பழைய உடன்படிக்கையின் சாபத்திலிருந்தும், அதன் எல்லா விளைவுகளிலிருந்தும் மேசியா விடுதலையைத் தருகிறார். எல்லா விசுவாசிகளும் இந்தச் சுயாதீனத்தை அனுபவிக்கலாம். பரிசுத்த ஆவியானவர் நமக்கு இந்தச் சுயாதீனத்தைத் தருகிறவர். இந்தச்சுயாதீனத்தை நாம் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. நமக்குச் சுயாதீனம் இருப்பதினால் நாம் எந்தப் பாவமும் செய்து கொள்ள நமக்கு அனுமதி உண்டு என்றும் நினைக்கக்கூடாது.
நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதிலிருந்து முழுவதுமாக விலகி வரவேண்டும். நாம் தேவனுடைய பிரமாணத்திற்கு உட்பட்டவர்கள். யூதமார்க்கத்துச் சடங்குகளுக்கும், பண்டிகைகளுக்கும் விசேஷித்த காலங்களும், வருஷங்களுக்கும், நாட்களுக்கும் நாம் உட்பட்டவர்கள் அல்ல.
மோசேயின் பிரமாணத்திற்கு உட்படுதல், யூதமார்க்கத்து சடங்குகள், பண்டிகைகள் ஆகியவற்றை ஆசரித்தல் ஆகியவை அடிமைத்தனத்தின் நுகம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவன் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று தீர்மானம் பண்ணினால் அவன் நியாயப்பிரமாணம் கூறுவது அனைத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும்.
விருத்தசேதனம் பண்ண வேண்டுமென்று தன்னைக் கட்டாயப்படுத்திக் கொள்கிறவர் நியாயப்பிரமாணம் கூறுவது அனைத்தையும் கீழ்ப்படிவதற்கு அடிமைப் பட்டவராக இருக்கிறார். நியாயப்பிரமாணத்தின் மூலமாக தான் நீதிமானாக்கப்பட முடியும் என்று நினைக்கிறார். இப்பேர்ப்பட்டவர்களுக்கு கிறிஸ்துவின்மீது வைக்கும் விசுவாசத்தினால் எந்தப் பயனும் இராது. புதிய பிரமாணத்தை நாம் கைக்கொள்ள வேண்டுமா அல்லது பழைய பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டுமா என்று நாம் தீர்மானம் பண்ண வேண்டும். நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்று நாம் தீர்மானம் பண்ணினால் கிருபையினின்று நாம் விழுந்துவிடுவோம்.
விருத்தசேதனம் பண்ணுவது நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதற்கு ஓர் அடையாளமாக இருக்கிறது. ஆகையினால் விருத்தசேதனம் பண்ணுகிறவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்ற வேண்டும். விருத்தசேதனம் பண்ணிக் கொள்ளாதவன் நியாயப்பிரமாணக் கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாம் புதிய உடன்படிக்கையின் கீழ் இருக்கிறோம். ஆகையினால் நாம் புதிய உடன்படிக்கையின் கட்டளைகளுக்கும், பிரமாணங்களுக்கும் கீழ்ப்படிவது நமக்குப் போதுமானதாக இருக்கிறது.
தொடரும் கிருபையின் இரகசியங்கள்
1. ஆவியில் ஜீவித்து நடக்க வேண்டும். (கலா 5:5; கலா 5:16-26; ரோமர் 8:1-13)
2. நம்பிக்கையோடே காத்திருக்க வேண்டும். (கலா 5:5; ரோமர் 8:24; எபி 3:6, 12-14)
3. கிறிஸ்துவில் தொடர்ந்து இருக்க வேண்டும். (கலா 5:6; யோவான் 15:1-8)
4. விசுவாசத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும். (கலா 5:6; கொலோ 1:23).
நீதி கிடைக்குமென்று
நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம் (கலா 5:5).
அப்போஸ்தலர் பவுல் கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகளுக்கு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திச் சொல்லுகிறார். அவர்களுக்கு பவுல் எடுத்துக்காட்டாக ஜீவிக்கிறார். கலாத்தியர் தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்று அவர்களுக்குப் புத்தி சொல்லுகிறார். பவுல் நீதி கிடைக்குமென்று, ஆவியைக் கொண்டு, விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற எல்லா விசுவாசிகளும் நீதி கிடைக்குமென்று நம்பிக்கையோடே காத்திருக்கிறார்கள். இந்த நீதி இந்தப் பிரபஞ்சத்தில் நமக்குக் கிடைக்காது. வரப்போகிற உலகத்தில் நமக்குக் கிடைக்கும். நாம் பரலோகத்தில் தேவநீதியைப் பெற்றுக்கொள்வோம். அந்த நீதி கிடைக்குமென்று, ஆவியைக் கொண்டு, விசுவாசத்தினால், நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.
ஒவ்வொரு விசுவாசியும் தங்களுக்கு நீதி கிடைக்குமென்று நம்பவேண்டும். அதற்காக பொறுமையோடு காத்திருக்கவேண்டும். நமக்கு இந்த உலகத்தில் பல்வேறு விதமான தேவைகளும், விருப்பங்களும் இருந்தாலும், நமக்கு நீதி கிடைக்கும் என்பதே பிரதான விருப்பமாக இருக்கவேண்டும். இது மனுஷருடைய நீதியல்ல. இது கிறிஸ்துவின் நீதி. நாம் கிறிஸ்துவின் நீதியை பெற்றுக்கொள்ளவேண்டும். அந்த நீதி நமக்குக் கிடைக்குமென்று நாம் நம்பிக்கையோடே காத்திருக்கவேண்டும்.
நமக்குக் கிடைக்கப்போகிற நீதியே, நமக்கு நித்திய சந்தோஷத்தைத் தரும். இந்தச் சந்தோஷத்தை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் பெற்றுக்கொள்ள முடியாது. கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் மாத்திரமே இந்த நீதியையும், இதன் மூலமாய் வரும் நித்திய சந்தோஷத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் தேவநீதி நமக்குக் கிடைக்குமென்று நம்பிக்கையோடே காத்திருக்கிறோம். இந்த நம்பிக்கை ஆவியின் மூலமாய் நமக்கு வருகிறது. ஆவியானவரின் வழிநடத்துதலினாலும், ஆவியானவரின் உதவியினாலும் நமக்கு இந்த நம்பிக்கை உண்டாயிற்று. பரிசுத்த ஆவியானவரின் கிருபையினால் நமக்குள் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசம் வந்திருக்கிறது. கிறிஸ்துவின் மூலமாய் தேவநீதி கிடைக்குமென்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். தேவநீதியை எதிர்பார்க்கிறோம். ஆவியைக் கொண்டு விசுவாசத்தினால், தேவநீதி கிடைக்குமென்று நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.
அன்பினால் கிரியை செய்கிற விசுவாசம்
கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்த சேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும் (கலா 5:6).
இயேசுகிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார். அவருடைய வருகையினால் நியாயப்பிரமாணம் முடிந்துவிட்டது. ஆகையினால் ஒருவன் விருத்தசேதனம் செய்திருக்கிறானா அல்லது விருத்தசேதனம் செய்யவில்லையா என்பது முக்கியமல்ல. கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும், விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது. விருத்தசேதனம் செய்ததினால் ஒரு நன்மையும் வந்துவிடப்போவதில்லை. விருத்தசேதனம் செய்யாததினால் ஒரு தீமையும் உண்டாகப்போவதில்லை. இது பிரயோஜனமற்ற கிரியையாகவே இருக்கிறது. தேவன் விருத்தசேதனத்தை ஒரு பொருட்டாகப் பார்ப்பதில்லை.
விருத்தசேதனத்தின் கிரியை ஒன்றுக்கும் உதவாது. ஆனால் அன்பினால் கிரியை செய்கிற விசுவாசம் உதவும். நம்மிடத்தில் விசுவாசம் இருக்கவேண்டும். அந்த விசுவாசம் அன்பினால் கிரியை செய்யவேண்டும். கிருபை கிரியை நடப்பிக்கவேண்டும். நாம் கிரியை செய்யும்போது அதை அன்பினால் செய்யவேண்டும். விசுவாசத்தோடு செய்யவேண்டும். தேவனிடத்தில் அன்புகூரவேண்டும். மனுஷரிடத்திலும் அன்புகூரவேண்டும். அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு ஆதாரம்.
நன்றாய் ஓடினீர்களே
நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்? (கலா 5:7)
கலாத்தியர்கள் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்திலிருந்து பின்வாங்கிப் போய்விட்டார்கள். ஆரம்பத்தில் நன்றாய் ஆரம்பம்பண்ணினார்கள். ஆனால் இப்போதோ பின்மாற்றமான நிலமையிலிருக்கிறார்கள். பவுல் அவர்களை மறுபடியும் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்திற்கு அழைத்து வர பிரயாசப்படுகிறார். இதற்காக அவர்களுடைய நல்ல ஆரம்பத்தை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். ""நீங்கள் நன்றாய் ஓடினீர்களே'' என்று அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.
விசுவாசியின் ஜீவியம் ஒரு ஓட்டப்பந்தயத்தைப்போன்றது. இந்தப் பந்தயத்தில் விசுவாசி ஓடவேண்டும். தொடர்ந்து ஓடவேண்டும். தன் ஓட்டத்தில் அவர் நிலைத்திருக்கவேண்டும். பரிசு வாங்கவேண்டுமென்றால் போட்டியின் முடிவு வரையிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். ஆரம்பத்தில் நன்றாய் ஓடிவிட்டு, இடையில் ஓட்டத்தை நிறுத்திவிட்டால், நமக்குப் பரிசு கிடைக்காது. நாம் ஓட்டப்பந்தயத்தில் ஓடினால் மாத்திரம் போதாது. நன்றாகவும் ஓடவேண்டும்.
நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில், ஆரம்பத்தில் மாத்திரம் விசுவாசமிருந்தால் போதாது. நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கவேண்டும். விசுவாசத்தை விட்டு பின்வாங்கிப்போய்விடக்கூடாது. தேவன் நமக்கு நியமித்து வைத்திருக்கும் பாதையில் தொடர்ந்து ஓடவேண்டும். கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஓடவேண்டும். ஓட்டத்தை ஆரம்பத்திருக்கிற நாம் முடிவு வரையிலும் ஓடவேண்டும். நன்றாய் ஓடவேண்டும்.
கலாத்தியர்கள் ஆரம்பத்தில் நன்றாய் ஓடினார்கள். ஆனால் இப்போதோ கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்திலிருந்து பின்வாங்கிப்போய்விட்டார்கள். பவுல் அவர்களிடம், ""உங்களுக்கு தடை செய்தவன் யார்'' என்று கேட்கிறார். அவர்களுக்கு தடை செய்தவர் யார் என்பது பவுலுக்கு நன்றாகத் தெரியும். கலாத்தியர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல் போக, கள்ளப்போதகர்கள் அவர்களுக்குத் தடைசெய்தார்கள். பவுலுக்கு இது நன்றாகத் தெரியும். ஆனாலும் கலாத்தியர்களும் தங்களுக்கு தடையாக இருக்கிறவர்களைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதற்காகவே பவுல் அவர்களிடத்தில், ""உங்களுக்குத் தடை செய்தவன் யார்'' என்று ஒரு கேள்வி கேட்கிறார்.
விசுவாசிகளில் அநேகர் ஆரம்பத்தில் நன்றாய் ஓடுகிறார்கள். கொஞ்சக்காலம், கொஞ்சத்தூரம் ஓடுகிறார்கள். அதன்பின்பு அவர்களுடைய ஆவிக்குரிய ஓட்டத்தில் ஏதாவது தடை வந்துவிடுகிறது. அப்போது அவர்கள் சோர்ந்துபோய் தாங்கள் ஓடுவதை நிறுத்திவிடுகிறார்கள். ஓட்டத்திலிருந்து விலகிப்போய்விடுகிறார்கள். ஆரம்பத்தில் நன்றாய் ஓடியவர்கள், பின்பு ஏதாவது ஒரு தடையினால் ஓட்டத்தை நிறுத்திவிடும்போது, அவர்களுக்கு ஆசீர்வாதமும் நின்றுவிடும். அவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியமும் சீரழிந்துபோகிறது.
கர்த்தருடைய ஊழியக்காரர்கள் விசுவாசிகளின் ஓட்டத்திற்கு உத்தரவாதம் கொடுக்கவேண்டும். அவர்களைத் தொடர்ந்து ஓடுமாறு உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தடையாகயிருக்கும் காரியத்தைக் கண்டுபிடித்து, அந்தத் தடைகளை நீக்கிப்போட முயற்சிபண்ணவேண்டும். விசுவாசிகள் சோர்ந்துபோனால், அவர்களுடைய சோர்வுகளை அகற்றிப்போட முயற்சி செய்யவேண்டும்.
புதிய விசுவாசிகளுக்கு ஆரம்பத்தில் பல சோதனைகளும், பல தடைகளும் வரும். விசுவாச ஓட்டத்தை அவர்கள் தொடர்ந்து ஓடுவதை சாத்தான் தடைபண்ணுவான். இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடுகளை விசுவாசிகள் பின்பற்றிச் செல்லாதவாறு, சாத்தான் பல்வேறு உபாயங்களைப் பயன்படுத்துவான். எப்படியாவது விசுவாசிகளை அவர்களுடைய விசுவாசத்திலிருந்து வழிவிலகி சென்றுவிடுவதற்கு சாத்தான் அதிகப்பிரயாசப்படுவான். சத்தியத்திற்கு அவர்கள் கீழ்ப்படியாமற்போக சதிபண்ணுவான்.
கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகள், தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில், ஆரம்பத்தில் நன்றாய் ஓடினார்கள். சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள். ஆனால் அவர்கள் சத்தியத்திற்குத் தொடர்ந்து கீழ்ப்படியாதவாறு, கள்ளப்போதகர்கள் அவர்களுக்கு கள்ளப்போதனைகளைக் கொடுத்தார்கள். கலாத்தியர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிய கள்ளப்போதர்கள் தடையாக இருக்கிறார்கள். அப்போஸ்தலர் பவுல் அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணிய சுவிசேஷமே சத்தியம். கலாத்தியர்கள் அந்தச் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவேண்டும். சத்தியம் அவர்களுடைய ஜீவியத்தை ஆளுகை செய்யவேண்டும். சத்தியத்தில் சொல்லப்பட்டிருக்கிற காரியங்களை அவர்கள் விசுவாசிக்கவேண்டும்.
சத்தியத்தைக் கேட்டால் மாத்திரம் போதாது. சத்தியத்தை விசுவாசித்தால் மாத்திரம் போதாது. சத்தியத்திற்குக் கீழ்ப்படியவும்வேண்டும். சத்தியத்தின் வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டால் மாத்திரம் போதாது. அதின் அன்பையும், அதின் வல்லமையையும் பெற்றுக்கொள்ளவேண்டும். சத்தியத்திற்கு சரியாகக் கீழ்ப்படியாதவர்கள், சத்தியத்தைத் தொடர்ந்து பற்றிக்கொள்ளமாட்டார்கள். வழியில், வழிவிலகிப்போய்விடுவார்கள். பின்வாங்கிப்போய்விடுவார்கள். தேவன் தங்களுக்கு நியமித்திருக்கிற இலக்கை அவர்கள் அடையாமல் போய்விடுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் கலாத்தியர்கள் வெற்றியுள்ள கிறிஸ்தவ ஜீவியம் ஜீவித்திருக்கிறார்கள். கிறிஸ்தவ ஜீவியம் இங்கு மறுபடியுமாக ஓர் ஓட்டப்பந்தயத்தோடு ஒப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து ஜீவித்த கலாத்தியர்கள் இப்போது சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல் ஜீவிக்கிறார்கள்.
இந்தப் போதனை
இந்த போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல (கலா 5:8).
கலாத்தியர் மத்தியிலே கள்ளப்போதர்கள் கள்ளஉபதேசம்பண்ணுகிறார்கள். இதனால் அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகிப் பின்வாங்கிப்போய்விட்டார்கள். இந்தப்போதனை அவர்களை அழைத்தவரால் உண்டாகவில்லையென்று பவுல் சொல்லுகிறார். ""அழைத்தவர்'' என்னும் வார்த்தை தேவனையோ அல்லது அப்போஸ்தலராகிய பவுலையோ குறிக்கலாம். இந்தப்போதனை நிச்சயமாகவே தேவனிடத்திலிருந்து வரவில்லை. கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு உண்டாகும் என்பது தேவனுடைய போதனை. மனுஷர் விசுவாசத்தினால் மாத்திரமே நீதிமானாக்கப்பட முடியும் என்பது தேவனுடைய போதனைதான்.
ஆனால் கலாத்தியர் மத்தியிலே கொடுக்கப்படுகிற போதனை, இந்தப் போதனைக்கு முற்றிலும் முரண்பட்டிருக்கிறது. தேவன் இந்தப் போதனையை ஸ்தாபிக்கவில்லை. பவுலும் இந்தப் போதனையை உபதேசம்பண்ணவில்லை. பவுல் தன் ஆரம்பகால ஊழியத்திலிருந்து இதுவரையிலும் விருத்தசேதனத்திற்கும், அதைப் பிரசங்கிக்கிறவர்களுக்கும் விரோதமாகப் பேசி வருகிறார். விசுவாசிகளை விருத்தசேதனம்பண்ணவேண்டுமென்று கட்டாயப்படுத்தக்கூடாது என்பதே பவுலின் உபதேசம். ஆத்தும இரட்சிப்புக்கு விருத்தசேதனம் அவசியம் என்று சொல்லக்கூடாது என்பதைப் பவுல் தெளிவாகச் சொல்லுகிறார்.
விருத்தசேதனம் பண்ணவேண்டும் என்கிற போதனை எங்கிருந்து, யாரிடமிருந்து வந்தது என்பதை கலாத்தியரே யோசித்துப் பார்க்கவேண்டும். நிச்சயமாகவே இப்படிப்பட்ட கள்ளஉபதேசங்கள் சாத்தானிடமிருந்தும், அவனுடைய கருவியாக செயல்படுகிறவர்களிடமிருந்தும் வந்திருக்கவேண்டும். தங்களுக்கு இப்படிப்பட்ட கள்ளப்போதகம் உபதேசம்பண்ணப்படும்போது, கலாத்தியர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கவேண்டும். சத்தியத்தில் நிலைத்திருக்கவேண்டும். கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தை விட்டுவிடாமல், அதைத் தொடர்ந்து பற்றிக்கொள்ளவேண்டும்.
புளிப்புள்ள கொஞ்ச மாவானது
புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும் (கலா 5:9).
கள்ளப்போதகர்கள் கொடுக்கிற கள்ளஉபதேசம் மிகவும் ஆபத்தானது. இது விசுவாசிகள் மத்தியில் தொற்றுநோயைப்போல பரவி, அவர்களுக்குத் தீங்கை விளைவிக்கும். கலாத்தியர்கள் கள்ளப்போதனையைப் புரிந்துகொண்டு அதைவிட்டு விலகி வரவேண்டும். கள்ளஉபதேசங்களுக்கு எதிர்த்து நிற்கவேண்டும். மெய்யான சத்தியத்தைப் பற்றிக்கொள்ளவேண்டும்.
விருத்தசேதனத்தைப்பற்றிய உபதேசமானது, கள்ளஉபதேசம் என்பது தெரிந்திருந்தும், அதை விட்டு விலகி வராமல், அதைப்பற்றிக்கொண்டால், அதனால் அவர்களுக்கும் அவர்கள் மூலமாய் பிறருக்கும் ஆவிக்குரிய ஆபத்து உண்டாகும். ஏனெனில் புளிப்புள்ள கொஞ்ச மாவானது பிசைந்த மா அனைத்தையும் உப்பப்பண்ணும். கொஞ்சம் புளித்த மாவு எல்லா மாவையும் புளிக்க வைத்துவிடும். புளித்தமாவை ஆரம்பத்திலேயே ஒதுக்கி வைத்துவிடவேண்டும். இல்லையென்றால் அது எல்லா மாவையும் புளிக்க வைத்துவிடும்.
விசுவாசிகளின் சமுதாயமானது பிசைந்த மாவுக்கு ஒப்புமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. விசுவாசிகளில் ஒருவர் கள்ளஉபதேசத்தைப் பெற்றுக்கொண்டாலும், அந்த உபதேசம் மற்ற விசுவாசிகளுக்கும் பரவிவிடுவதற்கு வாய்ப்புள்ளது. கள்ளப்போதகர்கள் ஓய்வில்லாமல் விசுவாசிகள் மத்தியிலே கள்ளப்போதனைகளை உபதேசம்பண்ணுகிறார்கள். ஒரு சில விசுவாசிகள் இவர்களுடைய கள்ளப்போதனைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் கொஞ்சம் புளித்த மாவைப்போல இருக்கிறார்கள். என்றாலும், கொஞ்சம் புளித்த மாவானது, எல்லா பிசைந்த மாவையும் புளிக்க வைத்துவிடுவதுபோல, கள்ளஉபதேசத்தைப் பெற்றிருக்கிற ஒரு சில விசுவாசிகள் மூலமாய், இந்த கள்ளஉபதேசம் எல்லா விசுவாசிகளுக்கும் பரவிவிடுவதற்கு வாய்ப்புள்ளது. ஒரு விசுவாசி கள்ளஉபதேசத்தைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த உபதேசம் சபை முழுவதற்கும் பரவிவிடும். பரவிய பின்பு அதை நீக்குவது கடினம். ஆரம்பத்திலேயே கள்ளஉபதேசத்தைக் கண்டுபிடித்து, அதை நீக்கிப்போடவேண்டும்.
கொஞ்ச பாவம், அல்லது ஒரு தவறான உபதேசம், ஒருவருடைய முழு ஜீவியத்தையும் அவருடைய முழு நடத்தையையும் பாதிக்கும்.
உங்களைக் கலக்குகிறவன்
நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக் குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான் (கலா 5:10).
அப்போஸ்தலர் பவுல் கலாத்தியா தேசத்து விசுவாசிகளைக் குறித்து கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறார். அவர்கள் வேறுவிதமாய் சிந்திக்கமாட்டார்களென்று பவுல் நம்புகிறார். அவர்கள் தன்னைப்போலவே சிந்திப்பார்களென்றும், தான் பிரசங்கம்பண்ணிய சத்தியத்தை விசுவாசித்து அங்கீகரிப்பார்களென்றும் பவுல் நம்புகிறார். கிறிஸ்து தம்முடைய சுவிசேஷத்தின் மூலமாய், நமக்குண்டாக்கின சுயாதீன நிலமையிலே அவர்கள் நிலைகொண்டிருப்பார்களென்று பவுல் எதிர்பார்க்கிறார்.
நாம் ஜனங்களுக்கு ஊழியம் செய்யும்போது, அவர்களுடைய இரட்சிப்பைக் குறித்து கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கவேண்டும். ஜனங்கள் இரட்சிக்கப்படுவதற்கேற்ற சூழ்நிலை இல்லாவிட்டாலும், கர்த்தர் அவர்களை இரட்சிப்பாரென்று, கர்த்தருக்குள் உறுதியாய் நம்பவேண்டும்.
கலாத்தியர்கள் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்திலிருந்து விலகிப்போயிருக்கிறார்கள். இதற்காக பவுல் அவர்களை அதிகமாய்க் குற்றப்படுத்தவில்லை. அவர்கள்மீது குற்றம் சொல்லுவதற்குப் பதிலாக, அவர்களை கலக்குகிறவர்கள்மீது பவுல் குற்றம் சொல்லுகிறார். அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும், தங்களுக்கேற்ற ஆக்கினையை அடைவார்களென்று அவர்களைக் குறித்து தீர்ப்பு சொல்லுகிறார்.
நாம் ஜனங்களுடைய தப்பிதங்களையும் பாவங்களையும் கடிந்து கொள்ளவேண்டும். தலைவர்களுக்கும், அவர்களால் வழிநடத்தப்படுகிறவர்களுக்கும் வித்தியாசமுண்டு. சில சமயங்களில் தலைவர்கள் ஜனங்களை தவறான பாதையில் வழிநடத்திவிடுவார்கள். ஜனங்களின் தப்பிதங்களைக் கடிந்துசொல்லும்போது, அந்தத் தப்பிதங்களுக்கு ஜனங்கள் காரணமா அல்லதுஅவர்களை வழிநடத்துகிற தலைவர்கள் காரணமா என்று வித்தியாசம் காணவேண்டும்.
அப்போஸ்தலர் பவுல் கலாத்தியரின் பின்மாற்றத்தைக் குறித்து சிந்தித்துப்பார்க்கிறார். அவர்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப்போனதற்கு, அவர்களுக்கு உபதேசம் செய்த கள்ளப்போதகர்களே காரணமென்று தீர்மானம்பண்ணுகிறார். அதற்காக அவர்களைக் கடிந்துகொள்கிறார். அவர்கள் தாங்கள் செய்த தப்பிதங்களுக்கேற்ற ஆக்கினையை அடைவார்களென்று கள்ளப்போதர்களைக் குறித்து பவுல் தீர்ப்பு சொல்லுகிறார். தேவன் அவர்களை நீதியாய் நியாயம் விசாரிப்பாரென்று பவுல் நிச்சயமாய் நம்புகிறார்.
கலாத்தியா தேசத்து விசுவாசிகளைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டு போனால் நலமாயிருக்கும் என்று பவுல் விரும்புகிறார். அவர்கள் கிறிஸ்துவை விட்டுத் தறிப்புண்டு போகக்கூடாது. கிறிஸ்துவின் மூலமாய் வரும் இரட்சிப்பின் நம்பிக்கைகளிலிருந்து அவர்கள் தறிப்புண்டு போகக்கூடாது. அவர்கள் சபையின் ஐக்கியத்திலிருந்து தறிப்புண்டு போகவேண்டும். கள்ளஉபதேசத்தை சபையாருக்கு சொல்லமுடியாதபடி அவர்களுக்குத் தடை ஏற்படவேண்டும். சுவிசேஷம் பரிசுத்தமானது. கள்ளப்போதகர்கள் சுவிசேஷத்தை கலப்பாய்ப் போதிக்கிறார்கள். அப்படிப்பட்ட கள்ளப்போதகர்களுக்கு விரோதமாக பவுல் எதிர்த்து நிற்கிறார்.
கலாத்தியர்கள் தங்களுடைய பின்மாற்றமான நிலைமையிலிருந்து எழுந்து மறுபடியும் இயேசு கிறிஸ்துவிடம் வருவார்கள் என்று பவுல் நம்புகிறார். அவர்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான் என்றும் பவுல் நம்பிக்கையோடு இருக்கிறார்.
விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவன்
சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்?அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும் (கலா 5:11,12).
கலாத்தியர் மத்தியிலே யூதமார்க்கத்து உபதேசங்களைப் போதிக்கிற கள்ளப்போதகர்கள் ஊழியம் செய்கிறார்கள். இரட்சிக்கப்படுவதற்கு விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று அவர்கள் உபதேசம்பண்ணுகிறார்கள். கள்ளப்போதகர்கள் பவுலைக்குறித்து தப்பிதமாகப் பேசுகிறார்கள். பவுலுக்கு விரோதமாக துர்ச்செய்தியைப் பரப்புகிறார்கள். பவுலும் விருத்தசேதனத்தை ஆதரித்துப் பிரசங்கிப்பதாக கலாத்தியர்கள் சொல்லுகிறார்கள். பவுலும் விருத்தசேதனத்தை ஆதரிப்பதினால், கலாத்தியர் விருத்தசேதனம்பண்ணிக் கொள்ளவேண்டுமென்று கள்ளப்போதகர்கள் பொய்சொல்லுகிறார்கள்.
விசுவாசிகள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று பவுல் ஒருபோதும் பிரசங்கம்பண்ணவில்லை. பவுல் சொல்லாத பிரசங்கத்தை, அவர் பிரசங்கம்பண்ணியதாக, கள்ளப்போதகர்கள் பொய்சொல்லி, பவுலின் பெயரைக் கெடுக்கிறார்கள். தான் விருத்தசேதனத்தைப்பற்றி பிரசங்கிக்கவில்லையென்று பவுல் இங்கு உறுதியாகச் சொல்லுகிறார். அவர் விருத்தசேதனத்தைப் பிரசங்கித்திருந்தால், அவருக்கு ஒரு துன்பமும் வந்திருக்காது. அவர் பாடுகளையும் வேதனைகளையும் அனுபவிக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. பவுல் விருத்தசேதனத்திற்கு விரோதமாக பிரசங்கம்பண்ணுவதால்தான் அவருக்கு அநேகத் துன்பங்கள் உண்டாயிற்று.
பவுல் விருத்தசேதனத்திற்கு ஆதரவாகப் பேசியிருந்தால், யூதமார்க்கத்து உபதேசத்தைப் போதிக்கிற கள்ளப்போதகர்கள் பவுலை ஏற்றுக்கொள்வார்கள். பவுல்மீது பிரியமாயிருப்பார்கள். பவுலைத் துன்பப்படுத்தமாட்டார்கள். ஆனால் பவுலோ, தன் ஊழியத்தின் ஆரம்ப முதலே, விருத்தசேதனத்திற்கு விரோதமாகத்தான் பிரசங்கம்பண்ணிவருகிறார். கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் மாத்திரமே மனுஷர் நீதிமானாக்கப்பட முடியும் என்று உறுதியாகச் சொல்லுகிறார். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் யாரும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பதுதான் பவுலின் உபதேசம். பவுல் விருத்தசேதனத்திற்கு எப்போதுமே தடையாக இருக்கிறார்.
பவுல் விருத்தசேதனத்தை ஆதரித்துப் பிரசங்கம் செய்திருந்தால், சிலுவையைப்பற்றி வரும் இடறல் அவருக்கு ஒழிந்திருக்கும். அவருக்கு ஒரு துன்பமும் உண்டாயிருக்காது. ஆனால் பவுலோ சத்தியத்தைப் பிரசங்கம் செய்கிறார். துன்பங்களையும் பாடுகளையும், வேதனைகளையும் சகித்துக்கொள்கிறார். சத்தியத்தைக் கலப்பாய் உபதேசம்பண்ணுவதற்குப் பதிலாக, சத்தியத்தை உண்மையாய் உபதேசம் செய்து, இதனால் வரக்கூடிய எல்லா இடறல்களையும் தாங்கிக்கொள்கிறார்.
தீமோத்தேயு விருத்தசேதனம் பண்ணிக் கொண்டான். ஆகையினால் பவுல் விருத்தசேதனத்தைக் குறித்து பிரசங்கம் பண்ணியதாக ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால் பவுல் இதை மறுக்கிறார். பவுல் விருத்தசேதனத்தைப் பிரசங்கித்தால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தமாட்டார்கள்.
ஆவிக்கேற்றபடி நடப்பது கலா 5 : 13-26
சுயாதீனம்
சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள் (கலா 5:13-16).
விசுவாசிகள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சிக்கக்கூடாது. ஒருவர்மீது ஒருவர் அன்புகூரவேண்டும். விசுவாசிகளுடைய ஜீவியத்தில் தேவபக்தியும், நற்குணமும் காணப்படவேண்டும். விசுவாசிகள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்மை விசுவாசிக்கிறவர்களுடைய அடிமைத்தனத்தை நீக்கிவிட்டு, அவர்களுக்கு விடுதலையையும் சுயாதீனத்தையும் கொடுக்கிறார். ஆனால் இந்த சுயாதீனத்தை அநுசரிப்பதில், ஒவ்வொரு விசுவாசியும் மிகவும் கவனத்தோடிருக்கவேண்டும். கர்த்தர் தங்களுக்குக் கொடுத்திருக்கிற சுயாதீனத்தை, தங்களுடைய மாம்சத்திற்கேதுவாக, அநுசரிக்கக்கூடாது. அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யவேண்டும்.
கர்த்தரை விசுவாசிக்கிற பிள்ளைகளாகிய நமக்கு சுயாதீனம் ஒரு சிலாக்கியமாக கிடைத்திருக்கிறது. நமக்கு சுயாதீனம் இருப்பதினால் நாம் எதையும் செய்யலாம் என்று தீர்மானம் செய்துவிடக்கூடாது. கிறிஸ்து நியாயப்பிராமணத்தின் சாபத்திலிருந்து நம்மை விடுவித்திருக்கிறார். ஆனால் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு கீழ்ப்படிவதிலிருந்து அவர் நம்மை விடுவிக்கவில்லை. இயேசுகிறிஸ்து நமக்கு சுயாதீனத்தைக் கொடுத்தாலும், நாம் அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யவேண்டும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மிடத்தில் நற்குணங்கள் காணப்படவேண்டும். நமக்கு சுயாதீனம் இருக்கிறது என்பதற்காக, நம்முடைய சுயாதீனத்தை மாம்சத்திற்கேதுவாக அநுசரித்து, நமக்கு இஷ்டமானதைச் செய்துவிடக்கூடாது.
நாம் ஒருவருக்கொருவர் அன்பினாலே ஊழியம் செய்யவேண்டும். ""உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக'' என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறுகிறது. அன்பே நியாயப்பிரமாணத்தின் மொத்த சாரம். நாம் பிறரிடத்தில் அன்புகூரும்போது நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறோம். தேவன் நமக்கு சுயாதீனத்தைக் கொடுத்திருக்கிறார் என்று நினைத்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்குக் கீழ்ப்படியவேண்டிய அவசியமில்லை என்று தீர்மானித்து, பிறரிடத்தில் அன்புகூராமல் இருந்துவிடக்கூடாது.
""நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்'' என்று இயேசுகிறிஸ்து நமக்கு உபதேசம் செய்கிறார் (யோவா 13:35). ஒருவேளை நம்மால் எல்லாரிடத்திலும் அன்புகூரமுடியாமல் போகலாம். அன்புகூராவிட்டாலும், ஒருவரையொருவர் கடித்துப் பட்சிக்காமலிருக்கவேண்டும். யாரையும் அழித்துப்போடவேண்டுமென்று நினைக்கக்கூடாது.
""உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக'' என்பதுதான் நியாயப்பிரமாணத்தின் சாரம்சம். கலாத்தியர்கள் இந்தப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாவிட்டாலும், ஒருவரையொவருவர் கடித்து பட்சிக்காமலிருக்கவேண்டுமென்று பவுல் ஆலோசனை சொல்லுகிறார். ""நீங்கள் ஒருவரையொருவர் கடித்து பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவரால் ஒருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்'' (கலா 5:15) என்று தன் நிருபத்தில் எழுதுகிறார். சகோதரர் மத்தியிலே வாக்குவாதங்களும், சண்டைகளும்,பேதங்களும் தொடர்ந்து காணப்படுமானால் எல்லோருக்கும் அழிவு உண்டாகும். ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவார்கள்.
கர்த்தருடைய சபையை வெளியிலுள்ள அந்தகார சக்திகள் எதாலும் அழிக்க முடியாது. ஆனால் அவர்கள் தங்களுக்குத் தாங்களே கடித்து பட்சித்து, அழிந்துபோவார்கள். விசுவாசிகளை புறஜாதியாருடைய கைகள் அழிக்காது. ஆனால் சபையிலுள்ள விசுவாசிகள் தங்கள் சொந்தக் கைகளினால் தங்களைத் தாங்களே அழித்துப்போடுவார்கள். விசுவாசிகள் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூராமல், ஒருவரையொருவர் கடித்து பட்சித்தால், தேவனுடைய கிருபை அவர்களுக்குக் கிடைக்காது. அன்பின் ஆவி அவர்களை விட்டு அகன்றுபோகும். அசுத்த ஆவி அவர்களுக்குள் பிரவேசித்துவிடும். தேவகிருபை இல்லாத இடங்களில் சத்துருவினுடைய கிரியை தாராளமாய் நடைபெறும்.
நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலை பெற்று சுயாதீனமாக இருக்குமாறு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நமக்குச் சுயாதீனம் இருப்பதினால் நாம் நீதிநெறியாக வாழவேண்டிய பொறுப்பு நமக்கு இல்லை என்று அர்த்தம் கூறக்கூடாது. புதிய உடன்படிக்கையும், நமது நீதிநெறி வாழ்வை வலியுறுத்துகிறது. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பது புதிய ஏற்பாட்டுப் பிரமாணமாகும்.
ஒரு விசுவாசி மற்றொரு விசுவாசியைக் கடித்துப் பட்சிக்கக்கூடாது. ஒருவரையொருவர் அழிக்க நினைக்கக்கூடாது. ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். மற்றவர்களை அழிக்க நினைக்கும் விசுவாசி இயேசு கிறிஸ்துவின் கிருபையிலிருந்து விழுந்து போனவராகவும், பின்மாறிப்போன ஜீவியம் உடையவராகவும் இருப்பார்.
ஜெயஜீவியம் ஜீவிப்பதற்கான இரகசியங்கள்
1. சுவிசேஷத்தின் சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருக்க வேண்டும். நியாயப் பிரமாணத்தைக் கைக்கொள்வதை அகற்ற வேண்டும். (கலா 5:1-3).
2. சத்தியத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். விசுவாசத்தினால் தேவனுடைய கிருபையைக் கொண்டு நாம் நீதிமானாக்கப்படுகிறோம் என்னும் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும். (கலா 4-15).
3. ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ள வேண்டும். (கலா 5:16-17).
4. ஆவியினால் நடத்தப்படவேண்டும். (கலா 5:18).
5. நமது மாம்சத்தையும், அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைய வேண்டும். (கலா 5:19-21,24).
6. நம்முடைய அன்றாட ஜீவியத்தில் ஆவியின் கனியை வெளிப்படுத்திக் காண்பிக்க வேண்டும். (கலா 5:22-23).
7. ஆவியினாலேயே பிழைத்திருக்க வேண்டும். (கலா 5:25-26).
மாம்சத்தின் கிரியைகள்
மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்-சூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள். பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல் இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன் (கலா 5:17-21).
கர்த்தருடைய பரிசுத்தவான்களெல்லோரும் பாவத்தை வெறுக்கவேண்டும். பாவத்திற்கு விரோதமாக யுத்தம்பண்ணவேண்டும். ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளவேண்டும். மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருக்கவேண்டும். சபையிலுள்ள விசுவாசிகள் கருத்து வேறுபாடில்லாமல், ஒருவரையொருவர் கடித்து பட்சிக்காமல், ஒருவர்மீது ஒருவர் அன்புகூரவேண்டும். அப்போதுதான் விசுவாசிகள் மத்தியில் பிரிவினை உண்டாகாது. விசுவாசிகள் ஒற்றுமையாகவும், ஐக்கியமாகவும் இருக்கவேண்டுமென்றால், அவர்களெல்லோரும் பாவத்திற்கு விரோதமாக யுத்தம்பண்ணவேண்டும்.
ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் மாம்சத்திற்கும் ஆவிக்கும் இடையே யுத்தம் நடைபெறுகிறது. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. இரட்சிக்கப்பட்ட பின்பு நம்முடைய ஆவி நமக்குள் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் ஆவிக்கேற்ற பிரகாரம் நாம் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளை நாம் செய்யாமலிருக்கிறோம். மாம்சத்தின்படி செய்யக்கூடாதவற்றை செய்துவிடுகிறோம். நாம் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளை செய்யாதபடிக்கு, மாம்சமும் ஆவியும் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
இயல்பாகவே எல்லா மனுஷரிடத்திலும் இப்படிப்பட்ட போராட்டம் உண்டு. அவர்களுடைய மனச்சாட்சியும் அவர்களுடைய துன்மார்க்க குணமும் ஒன்றுக்கொன்று யுத்தம்பண்ணிக்கொண்டிருக்கும். இரட்சிக்கப்பட்டவர்கள் புதிய சிருஷ்டியாகயிருக்கிறார்கள். விசுவாசிகளாகிய நமக்குள் பழைய சுபாவத்திற்கும் புதிய சுபாவத்திற்கும் இடையே யுத்தம் நடைபெறுகிறது. நம்முடைய புதிய ஜீவியத்தில், பழைய பாவத்தின் சுபாவங்கள் ஓரளவு தங்கியிருக்கிறது. நம்முடைய புதிய சுபாவத்தில் தேவகிருபை கிரியை செய்கிறது. நாம் இந்த உலகத்திலிருக்கிற வரையிலும், நம்முடைய பழைய சுபாவத்திற்கும் புதிய சுபாவத்திற்கும், நமக்குள்ளே யுத்தம் நடைபெறும்.
நமக்குள் மாம்சத்திற்கும் ஆவிக்கும் போராட்டம் நடைபெறும்போது, நாம் எந்தப் பக்கமாக நின்று யுத்தம்பண்ணவேண்டும் என்று பவுல் விசுவாசிகளுக்கு ஆலோசனை சொல்லுகிறார். ஆவியின் பக்கமாய் நின்று மாம்சத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவது நம்முடைய கடமை. விசுவாசிகள் மாம்சத்திற்கு விரோதமாக யுத்தம்பண்ணவேண்டும். இதற்காக தேவகிருபையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். ஆவியினால் நடத்தப்படவேண்டும். தேவகிருபையினால் மாம்சத்தின் இச்சைகளை போராடி ஜெயிக்கவேண்டும். இந்தப் போராட்டத்தில் நாம் ஜெயிக்கவேண்டுமென்றால், நாம் ஆவியினால் நடத்தப்படவேண்டும்.
நாம் ஆவியினால் நடத்தப்பட்டால் மாம்சத்தின் கிரியைகளை நிறைவேற்றமாட்டோம். ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்த ஒப்புக்கொடுக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவரின் தெய்வீக ஆளுகை நம்மை ஆளுகை செய்து, ஆட்கொள்ளவேண்டும். நம்மிடத்தில் தங்கியிருக்கிற நம்முடைய பழைய சுபாவமும், பாவமான பழக்க வழக்கங்களும் நம்மை விட்டு நீங்கிப்போகவேண்டும். பழைய சுபாவம் நம்மை ஆளுகை செய்யக்கூடாது. ஆவியானவர் நம்மை ஆளுகை செய்யவேண்டும். நமக்குள் புதிய சுபாவம் நிரம்பியிருக்கவேண்டும்.
பாவத்திற்கு விரோதமாக யுத்தம் செய்யவேண்டுமென்றால், நாம் ஆவியினால் நடத்தப்படவேண்டும். நாம் ஆவியினால் நடத்தப்படுவோமென்றால், நாம் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்களல்ல. நமக்குள் பாவத்தின் வல்லமை காணப்படலாம். பழைய பாவசுபாவம் நமக்குள் இருக்கலாம். அவ்வப்போது இவை நம்மைச் சோதிக்கலாம். நம்முடைய மாம்ச இச்சைகள் நம்முடைய ஆவிக்கு விரோதமாக யுத்தம்பண்ணலாம். இருந்தாலும் நாம் ஆவியினால் நடத்தப்படுவோமென்றால், நம்முடைய பழைய பாவசுபாவம் நம்மை மேற்கொள்ளமாட்டாது. நாம் நியாயப்பிரமாணத்திற்கும், அதன் ஆக்கினைக்கும் கீழ்ப்பட்டவர்களாக இருக்கமாட்டோம்.
அப்போஸ்தலர் பவுல் மாம்சத்தின் கிரியைகளை இங்கு வரிசையாக அட்டவணை போட்டு சொல்லுகிறார். மாம்சத்தின் கிரியைகள் பல உள்ளன. இவையெல்லாமே நம்முடைய ஆவிக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகின்றன. மாம்சத்தின் கிரியைகள் எல்லாமே பாவமானது. விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம் ஆகியவை ஏழாவது கற்பனைக்கு விரோதமான பாவம். விக்கிரகாராதனை பில்லிசூனியம் ஆகியவை இரண்டாவது கற்பனைக்கு விரோதமான பாவம்.
ஒரு சில பாவங்கள் மற்ற மனுஷருக்கு விரோதமாக செய்யக்கூடியவை. பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள் ஆகியவை மற்ற மனுஷருக்கு விரோதமாக நாம் செய்கிற பாவங்கள். இந்தப் பாவங்கள் முற்றிப்போனால் அது மனுஷ கொலைகளில் முடியும். நாம் மற்றவர்களுடைய நற்பெயருக்கும், அவர்களுடைய புகழுக்கும் விரோதமாக யுத்தம்பண்ணுவதோடு, அவர்களுடைய ஜீவனுக்கு விரோதமாகவும் யுத்தம்பண்ணி, அவர்களைக் கொலைசெய்கிற நிலமைக்கு வந்துவிடலாம். இவையெல்லாம் மாம்சத்தின் கிரியைகள்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் பிறருக்கு விரோதமாகப் பாவம் செய்வதுபோல, சில சமயங்களில் நமக்கு விரோதமாகவும் பாவம் செய்கிறோம். வெறிகள், களியாட்டுக்கள் ஆகியவை நமக்கு விரோதமாக நாம் செய்கிற பாவங்களாகும். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று பவுல் கலாத்தியருக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். தாம் ஏற்கெனவே சொன்னதை, இப்போது அவர்களுக்கு மறுபடியும் சொல்லுகிறார். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. இந்தப் பாவங்கள் பரலோகத்தின் வாசல்களை அவர்களுக்கு அடைத்துப்போடும்.
""மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது'' என்னும் இந்த வசனத்தை வேதபண்டிதர்கள் பலவிதமாக வியாக்கியானம் பண்ணுகிறார்கள். ஆவிக்கு விரோதமாக மாம்சம் தொடர்ந்த போராடும் என்றும், இதில் மாம்சம் தோற்றுப்போகும் என்றும் இந்த மாம்சத்தினால் ஜெயஜீவியம் ஜீவிக்க முடியாது என்றும் ஒருசிலர் வியாக்கியானம் பண்ணுகிறார்கள். இது தவறான உபதேசம். இந்த வசனம் கலாத்தியருடைய ஆவிக்குரிய நிலைமையை விளக்குகிறது. சுய முயற்சியினாலும், மாம்சத்தினாலும் பரிபூரண ஜீவனைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முயற்சி செய்கிறவர்கள் தோற்றுப்போவார்கள். தேவனுடைய கிருபையில் ஜீவிக்கிறவர்களுக்கு தோல்வி இல்லை. ஜெயஜீவியம் உண்டு. விசுவாசிகள் தேவனுடைய கிருபையில் தொடர்ந்து ஜீவிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலின்படி ஆவிக்கேற்றபடி நடக்க வேண்டும்.
கலாத்தியர்கள் தேவனுடைய கிருபையிலிருந்து விழுந்து திரும்பவும் நியாயப் பிரமாணத்திற்கு அடிமைகளாகிவிட்டார்கள். அவர்கள் தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை மறுபடியும் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுடைய ஜீவியத்தில் பரிசுத்த ஆவியானவர் மறுபடியுமாகக் கிரியை செய்வதற்கு அவர்கள் அனுமதிக்க வேண்டும். நியாயப்பிரமாணத்தை விட்டு விலகி வரும்போது அதற்கு இனிமேல் அவர்கள் அடிமைகளாய் இருப்பதில்லை. அவர்களுடைய ஆவி அவர்களுடைய மாம்சத்திற்கு எதிராக இனிமேல் போராட வேண்டிய அவசியம் இராது. தங்களுடைய மாம்சத்தையும், அதன் ஆசை இச்சைகளையும் மறுபடியும் சிலுவையில் அறையும்போது அவர்களால் கிறிஸ்தவ ஜீவியத்தை மறுபடியும் ஜீவிக்க முடியும்.
மாம்சத்தின் கிரியைகள்
1. விபசாரம்
2. வேசித்தனம்
3. அசுத்தம்
4. காமவிகாரம்
5. விக்கிரகாராதனை
6. பில்-சூனியம்
7. பகைகள்
8. விரோதங்கள்
9. வைராக்கியங்கள்
10. கோபங்கள்
11. சண்டைகள்
12. பிரிவினைகள்
13. மார்க்கபேதங்கள்
14. பொறாமைகள்
15. கொலைகள்
16. வெறிகள்
17. களியாட்டுகள்
பாவப்பிரிவினைகள்
1. இச்சைகளின் பாவங்கள்
(1) விபசாரம்
(2) வேசித்தனம்
(3) அசுத்தம்
(4) காமவிகாரம்,
2. விக்கிரகாராதனையும், சூனியமும்
3. உணர்ச்சியின் பாவங்கள்
(1) பகைகள்
(2) விரோதங்கள்
(3) வைராக்கியங்கள்
(4) கோபங்கள்
(5) சண்டைகள்
(6) பிரிவினைகள்
(7) மார்க்கபேதங்கள்.
(8) பொறாமைகள்
(9) கொலைகள்
4. வெறியும், களியாட்டும்
பாவிகள் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவிடம் தங்களுடைய பாவங்களை அறிக்கையிட வேண்டும். இந்தப் பாவக் கிரியைகளைத் தங்களுடைய ஜீவியத்திலிருந்து அகற்றிப்போட வேண்டும். இல்லையெனில் இவர்களால் தேவனுடைய இராஜ்ஜியத்தைச் சுதந்தரிக்க முடியாது. தன்னை இரட்சிக்கப்பட்டவன் என்று கூறிக்கொண்டு இந்தப் பாவங்களைச் செய்வானென்றால் அவன் தன்னைத்தான் சோதித்துப் பார்க்க வேண்டும்.
ஆவியின் கனி
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம் (கலா 5:22-25).
விசுவாசிகளாகிய நம்முடைய ஜீவியம் கனிதரும் ஜீவியமாக இருக்கவேண்டும். ஆவியின் கனி நம்மிடத்திலிருந்து வெளிப்படவேண்டும். அப்போஸ்தலர் பவுல் பாவத்தைப்பற்றிச் சொல்லும்போது, அதை மாம்சத்தின் கிரியை என்று சொல்லுகிறார். ஏனெனில் மாம்சம் மனுஷனை பாவத்திற்குட்படுத்துகிறது. கிருபையானது ஆவியின் கனி என்று அழைக்கப்படுகிறது. ஆவியின் கனியானது பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்தே புறப்பட்டு வருகிறது. ஆவியானவரே கனிதரும் வேராக இருக்கிறார்.
நம்மிடத்தில் அன்பும் சந்தோஷம் நிரம்பியிருக்கவேண்டும். அப்போதுதான் நம்மால் கர்த்தரிடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கமுடியும். நாம் தேவனோடும் மற்றவர்களோடும் சமாதானத்தோடிருக்கவேண்டும். நீடிய பொறுமையும் தயவும் நம்மிடத்தில் காணப்படவேண்டும். நமக்கு விரோதமாக யாராவது தீங்கு செய்தால், உடனே கோபப்பட்டுவிடாமல், நீடியபொறுமையோடு, அந்தத் தீங்குகளைச் சகித்துக்கொள்ளவேண்டும். நம்மிடத்தில் நற்குணம் காணப்படவேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது பிறருக்கு நன்மைசெய்ய நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும்.
சத்தியத்தில் நமக்கு விசுவாசம் வேண்டும். நாம் சத்தியத்தை அறிக்கை செய்கிறோம். அதை விசுவாசித்து அறிக்கை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு நாம் வாக்கு கொடுக்கும்போது, நம்முடைய வார்த்தையில் உண்மையுள்ளவர்களாக காணப்படவேண்டும். நம்மிடத்தில் சாந்தகுணம் இருக்கவேண்டும். எளிதில் கோபப்பட்டு விடக்கூடாது. இச்சையடக்கத்தோடிருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் பேராசைப்படக்கூடாது. இப்படிப்பட்ட ஆவியின் கனி நம்மிடத்திலிருந்து புறப்பட்டு வரவேண்டுமென்று அப்போஸ்தலர் பவுல் சொல்லுகிறார். இதைப்பற்றிச் சொல்லும்போது, ""இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை'' என்றும் சொல்லுகிறார்.
கலாத்தியர்கள் இப்போது நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை. அவர்கள் தேவகிருபையின்கீழ் இருக்கிறார்கள். யாரிடத்திலெல்லாம் ஆவியின்கனி காணப்படுகிறதோ அவர்கள் ஆவியினால் நடத்தப்படுகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் இவர்களை ஆளுகை செய்கிறார். இவர்கள் மூலமாக ஆவியின் கனியை வெளிப்படுத்துகிறார்.
கிறிஸ்துவினுடையவர்கள் இச்சையடக்கத்தோடிருப்பார்கள். அவர்கள் தங்கள் மாம்சத்தையும், அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். அவர்கள் பாவத்திற்கு மரித்தவர்களாக இருக்கிறார்கள். பவுல் எப்போதோ பாவத்திற்கு மரித்துவிட்டார். அவரைப்போலவே கலாத்தியரும் இப்போது பாவத்திற்கு மரித்தவர்களாகயிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு பாவத்தின்மீது பூரண வெற்றி உண்டாகவில்லை. அவர்களுடைய மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. அவர்கள் செய்யவேண்டு மென்றிருக்கிறவைகளை செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. இவர்களுக்குள் மாம்சமும் இருக்கிறது, ஆவியும் இருக்கிறது. மாம்சத்தின் இச்சைகளும் இருக்கிறது. மாம்சத்தின் இச்சைகள் நம்மை மேற்கொள்ளக்கூடாது. மாம்சத்தையும், அதின் இச்சைகளையும் நாம் சிலுவையில் அறையவேண்டும். மாம்சத்தினால் நாம் அழிந்துபோகக்கூடாது.
நாம் கிறிஸ்துவினுடையவர்கள். கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறவர்கள். நாம் நம்முடைய மாம்சத்தையும் அதன் இச்சைகளையும், தொடர்ந்து சிலுவையில் அறைந்துகொண்டே இருக்கவேண்டும். பாவத்திற்கு ஊழியம் செய்கிறவர்களையும், தங்கள் மாம்சத்திற்கும் அதன் ஆசை இச்சைகளுக்கும் அடிமைப்பட்டவர்களையும், கிறிஸ்து தம்முடையவர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்.
நாம் தீமையைவிட்டு விலகியிருந்தால் மாத்திரம் போதாது. பாவம் செய்யாமல் இருந்தால் மாத்திரம் போதாது. நன்மை செய்யவும் கற்றுக்கொள்ளவேண்டும். மாம்சத்தின் கிரியைகள் நம்மிடத்தில் காணப்படக்கூடாது. மாம்சத்தின் கிரியைகளை நாம் செய்யக்கூடாது. இதைச் செய்யாமலிருந்தால் மாத்திரம்போதாது. நாம் கனிதரவும்வேண்டும். நம்முடைய ஜீவியத்திலிருந்து ஆவியின் கனி வெளிப்படவேண்டும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் கனிகொடுக்கும் ஜீவியத்தை நாடவேண்டும். மிகுந்த கவனத்தோடு நம்முடைய ஜீவியத்திலிருந்து ஆவியின் கனியை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். நாம் ஆவியினால் பிழைத்திருந்தால் ஆவிக்கேற்றபடி நடக்கவும் வேண்டும். கனிகொடுப்பது கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்முடைய கடமை.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம் தேவனுடைய புத்திரராகயிருக்கிறோம். அவரை, ""அப்பா பிதாவே'' என்று கூப்பிடத்தக்கதாக, தேவன் தமது குமாரனுடைய ஆவியை நம்முடைய இருதயங்களில் அனுப்பியிருக்கிறார் (கலா 4:6). கிறிஸ்துவின் ஆவியானவர் நமக்கு அருளப்பட்டிருப்பது, நமக்குக் கிடைத்திருக்கிற பெரிய சிலாக்கியம். கிறிஸ்துவின் ஆவியையுடையவர்களாகிய நாம், அதற்கேற்றபடி நடக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். நம்முடைய ஜீவியத்தில் நற்குணங்கள் காணப்படவேண்டும். நம்முடைய நடத்தை நல்ல நடத்தையாக இருக்கவேண்டும். ஆவிக்கேற்றபடி நடக்கிறவர்கள் ஆவியின் கனியைக் கொடுக்கவேண்டும். கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றிருக்கிறவர்கள் தங்கள் மாம்சத்தையும், அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறையவேண்டும். புதிய ஜீவனைப் பெற்றிருக்கிற நாம், அந்த ஜீவனுக்கேற்றபடி பரிசுத்தத்தில் நடக்கவேண்டும்.
ஆவியின் கனி
1. அன்பு
2. சந்தோஷம்
3. சமாதானம்
4. நீடியபொறுமை
5. தயவு
6. நற்குணம்
7. விசுவாசம்
8. சாந்தம்
9. இச்சையடக்கம்
நியாயப்பிரமாணம் பாவத்தை மட்டுமே கண்டிக்கிறது. நீதியைக் கண்டிப்பதில்லை. ஆகையினால் ஆவியின் கனியை உடையவரை எந்தப்பிரமாணமும் கண்டிப்பதில்லை.
வீண்புகழ்ச்சி
வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமலும் இருக்கக்கடவோம் (கலா 5:26).
அப்போஸ்தலர் பவுல் இந்த அதிகாரத்தின் முடிவில் கலாத்தியரை எச்சரித்து ஆலோசனை சொல்லுகிறார். அவர்கள் வீண்புகழ்ச்சியை விரும்பக்கூடாது. ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளக்கூடாது. ஒருவரையொருவர் கோபமூட்டக்கூடாது. வீண்புகழ்ச்சியை விரும்புகிறவர் மற்றவர்மீது பொறாமை கொள்வார், மற்றவர்களை கோபமூட்டுவார். இதனால் விசுவாசிகள் மத்தியில் வாக்குவாதங்களும் சண்டைகளும் உண்டாகும். ஆவியின் கனி வெளிப்படுகிற இடத்தில் மாம்சத்தின் கிரியை வெளிப்படும்.
நாம் நம்மிடத்தில் அன்புகூருவதுபோல பிறரிடத்திலும் அன்புகூரவேண்டும் என்பதுதான் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமக்குக் கொடுத்திருக்கிற முக்கியமான பிரமாணம். நாம் ஒருவருக்கொருவர் அன்புகூராமல், வீண்புகழ்ச்சியை விரும்பி, ஒருவரையொருவர் கோபமூட்டி, ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளும்போது, கர்த்தருக்கு விரோதமாகவும், மனுஷருக்கு விரோதமாகவும் பாவம் செய்கிறவர்களாகயிருப்போம்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நம்முடைய உள்ளான சுபாவத்தை ஆராய்ந்து பார்க்கவேண்டும். மனுஷரிடத்திலிருந்து வருகிற புகழ்ச்சி வீண்புகழ்ச்சியாகவே இருக்கிறது. நாம் மனுஷருடைய வீண்புகழ்ச்சியை விரும்பக்கூடாது. இப்படிப்பட்ட வீண்புகழ்ச்சிகளை சிலுவையில் அறையவேண்டும். கர்த்தருடைய ஊழியக்காரர்கள் மனுஷர் புகழவேண்டுமென்று ஊழியம் செய்யக்கூடாது. கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்யவேண்டும். அப்போது கர்த்தரே நம்மை, ""நல்லது, உண்மையும் உத்தமுமுள்ள ஊழியக்காரனே'' என்று புகழ்ந்து பேசுவார்.
பரிசுத்தவான்களுக்கு நேரிடும் பொதுவான சோதனைகள்
1. வீண் புகழ்ச்சியை விரும்புதல் (கலா 5:13; கலா 6:12-13; பிலி 2:1-3)
2. ஒருவரையொருவர் கோபமூட்டுதல் (பிலி 2:1-3; எபே 4:31-32;
3. ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளுதல் (ரோமர் 13:13; 1கொரி 3:3)