கலாத்தியர் 4 விளக்கம்

 




கலாத்தியர் 4ஆம்  அதிகாரம் விளக்கம்

விசுவாசத்தினால் மாத்திரமே நாம் நீதிமானாக்கப்படமுடியும் என்னும் சத்தியத்தை  பவுல் இந்த அதிகாரத்திலும் தொடர்ந்து எழுதுகிறார். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் நாம் நீதிமான்களாக்கப்பட முடியாது என்பது நிச்சயம். நியாயப்பிரமாணத்தைவிட சுவிசேஷம்  மேன்மையானது என்பதை பவுல் தெளிவுபடுத்துகிறார் (கலா 4:1-7). கலாத்தியர்கள் மனந்திருந்தி இரட்சிக்கப்பட்ட பின்பு, அவர்களுடைய ஜீவியத்தில் ஏற்பட்ட ஆசீர்வாதமான மாற்றங்களை பவுல் இங்கு குறிப்பிடுகிறார் (கலா 4:8-11). 


ஆரம்பத்தில் கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகள் பவுல்மீது மிகவும் அன்பாகவும்  பிரியமாகவும் இருந்தார்கள் (கலா 4:12-16). கள்ளப்போதகர்களின் குணாதிசயங்களைப் பவுல் விளக்குகிறார்         (கலா 4:17,18). அப்போஸ்தலர் பவுல் கலாத்தியர்மீது அன்பாகவும் பிரியமாகவும் இருக்கிறார் (கலா 4:19,20). ஈசாக்கு, இஸ்மவேல் ஆகியோரின் சரித்திரம். 

காலம் நிறைவேறினபோது கலா 4 : 1-7

கலா 4:1. பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை.


கலா 4:2. தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.


கலா 4:3. அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.


கலா 4:4. நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,


கலா 4:5. காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.


கலா 4:6. மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.


கலா 4:7. ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய் 


கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகள்  இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால்  இரட்சிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசித்து, விசுவாசத்தினால் மாத்திரமே தாங்கள் நீதிமான்களாக்கப்பட முடியும் என்று  நம்பினார்கள். அதன்பின்பு யூதமார்க்கத்து கள்ளப்போதகர்கள் கலாத்தியா தேசத்து சபைகளில் பிரவேசித்து, அவர்களுக்கு கள்ளஉபதேசத்தைக் கொடுத்தார்கள். கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தோடு, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளையும் கடைப்பிடித்தால்தான் இரட்சிக்கப்பட முடியும் என்றும், அப்போதுதான் நீதிமான்களாக்கப்பட முடியும் என்றும் கள்ளஉபதேசம் பண்ணினார்கள். யூதமார்க்கத்தின் உபதேசங்களை சுவிசேஷத்தின் உபதேசங்களோடு கலப்பாய்ப் பேசினார்கள். 


அப்போஸ்தலர் பவுலோ கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயே நாம் இரட்சிக்கப்படுவதாகவும், நீதிமான்களாக்கப்படுவதாகவும் உறுதியாகச் சொல்கிறார்.  இந்தச் சத்தியத்தைத் தெளிவுபடுத்துவதற்கு பழைய ஏற்பாட்டு சபையை ஒரு எடுத்துக்காட்டாக பயன்படுத்தி விளக்குகிறார். பழைய ஏற்பாட்டு சபையானது ஒரு சிறு பிள்ளையைப்போல இருந்தது. பழைய ஏற்பாட்டு சபையின் காலமும் கிருபையின் காலம்தான். ஆனாலும் தற்போதுள்ள கிருபையின் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பழைய ஏற்பாட்டுக் கிருபையின் காலமானது, இருளின் காலமாகவே இருந்தது.  பழைய ஏற்பாட்டு சபை சுதந்தரவாளியாகயிருந்தாலும், அது சிறுபிள்ளையாகயிருந்ததினால், சுதந்தரவாளிக்குரிய உரிமைகளும் சிலாக்கியங்களும் எதுவும் அதற்கு கிடைக்கவில்லை. 


சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருக்கிறான். ஆனாலும் அவன்  சிறுபிள்ளையாயிருக்கும் காலமளவும், அவனுடைய தகப்பன் குறித்த காலம் வரைக்கும், அந்தச் சிறுபிள்ளையானது காரியக்காரருக்கும், வீட்டு  விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறது. சுதந்தரவாளியானவன் சிறுபிள்ளையாயிருக்கும் காலமளவும் அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. அவன் சுதந்தரவாளிதான்.  ஆனாலும் அவன் அடிமையைப்போலவே இருக்கிறான். காரியக்காரருக்கும், வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்படிக்கிறான். அவன் சுதந்தரவாளியாகயிருந்தாலும் அவனால் சுயாதீனமாக ஒன்றும் செய்யமுடியாது. அவனுடைய தகப்பன் குறித்த காலம் வரைக்கும்,  அந்தப் பிள்ளையானது காரியக்காரருக்கும், வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்படிருக்கவேண்டும். 


பழைய ஏற்பாட்டு சபையானது சிறுபிள்ளையாகயிருக்கிற சுதந்தரவாளியைப்போலவே இருந்தது. பழைய ஏற்பாட்டுக்காலம் இருளின்காலம். அது அடிமைத்தனத்தின் காலம். பழைய ஏற்பாட்டுக்கால சபைக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. பிதாவானவர் குறித்த காலம் வரைக்கும் பழைய ஏற்பாட்டுச் சபை அடிமையானவனைப்போலவே இருந்தது. அது கிருபையின் காலமாகயிருந்தாலும், தேவனுடைய கிருபையை சுயாதீனமாக அனுபவிக்கிற விடுதலை அதற்குக் கொடுக்கப்படவில்லை. காலம் நிறைவேறினபோதோ, தேவன் தம்முடையகிருபையை இயேசுகிறிஸ்துவின் மூலமாய் புதிய ஏற்பாட்டு சபைக்கு, பூரணமாய் வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவரையிலும் சிறுபிள்ளையாகயிருந்த சுதந்தரவாளியானவன், காலம் நிறைவேறினபோது, பூரண புருஷனாக, சுதந்தரவாளியின் சுதந்தரங்களெல்லாவற்றையும் பூரணமாய்ப் பெற்றுக்கொள்கிறான்.


தேவன் குறித்த காலம் வரும்வரைக்கும்,  கர்த்தருடைய பிள்ளைகள் சிறுபிள்ளைகளைப்போலவே இருந்தார்கள். அந்தக்காலத்தில் அவர்கள் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தார்கள். சுவிசேஷத்தின் காலத்தில், சபைக்கு, தேவனுடைய கிருபை பூரணமாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. காலம் நிறைவேறினபோது, பிதாவாகிய தேவன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். குமாரனாகிய கிறிஸ்து ஸ்திரீயினிடத்தில் பிறந்தவராகவும், நியாயப்பிரமாணத்திற்கு கீழானவருமாக இருந்தார். 


தேவனுடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரம், குமாரன் பிதாவின் திட்டத்திற்குக் கீழ்ப்படிந்து, ஸ்திரீயினிடத்தில் பிறந்திருக்கிறார்.  மனுஷனாக அவதரித்திருக்கிறார். நியாயப்பிரமாணத்திற்குத் தன்னைக் கீழ்ப்படுத்திக்கொண்டார். தேவன் இயேசுகிறிஸ்துவை இந்தப் பூமிக்கு அனுப்பியதற்கு பிரதான நோக்கமுண்டு. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் புத்திரசுவீகாரத்தை அடையவேண்டும். நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் மீட்டுக்கொள்ளப்படவேண்டும். இதுவே தேவனுடைய நோக்கம். இதை நிறைவேற்றுவதற்காகவே, பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இந்தப் பூமிக்கு அனுப்பினார். 


காலம் நிறைவேறினபோது இயேசுகிறிஸ்து  இந்தப் பூமிக்கு வந்தார். நாம் இனிமேல் அடிமையானவர்களல்ல. ஏற்கெனவே நாம் சுதந்தரவாளிகளாகயிருந்தோம். ஆனாலும் சிறுபிள்ளைகளாகவும் இருந்தோம். அந்தக் காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாகயிருந்தோம். காலம் நிறைவேறினபோது, நம்முடைய சிறுபிள்ளை பருவத்திலிருந்து வளர்ச்சி பெற்று, •பூரண புருஷராக முதிர்ச்சியடைந்திருக்கிறோம். இப்போது சுதந்தரவாளியாக இருக்கிற நாம், தேவனிடமிருந்து நம்முடைய சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.          நாம் இனிமேல் அடிமைகளைப்போலயிராமல் தேவனுடைய புத்திரராகயிருக்கிறோம். 


சுவிசேஷத்தின் காலத்தில் கர்த்தரை விசுவாசிக்கிற நாம், தேவனுடைய புத்திரராகயிருக்கிறோம். விசுவாசத்தினால் புத்திர சுவிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறோம். நாம் தேவனுடைய புத்திரராகயிருக்கிறபடியினால்  தேவன் தமது குமாரனுடைய ஆவியை நம்முடைய இருதயங்களில் அனுப்பியிருக்கிறார். ஆகையினால் தேவனை, ""அப்பா, பிதாவே'' என்று கூப்பிடும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். நாம் தேவனிடத்தில் நம்முடைய வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் ஏறெடுக்கும்போது, நாம் தேவனைப் பிதாவாகப் பார்க்கிறோம். 


அப்போஸ்தலர் பவுல் விசுவாசிகளுக்கும் தேவனுக்கும் இடையே இருக்கிற ஆவிக்குரிய உறவைத் தெளிவுபடுத்துகிறார். இதன் முடிவுரையாக ""ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்'' என்று சொல்லுகிறார். நாம் இனிமேல் அடிமைகளல்ல. தேவனுடைய வாக்குத்தத்தத்தின் சுதந்தரவாளிகளாகயிருக்கிறோம்.  தேவனுடைய புத்திரராகயிருக்கிறோம். அப்போஸ்தலர் பவுல் இந்தச் சத்தியத்தைச் சொல்லும்போது, ""நீ புத்திரனேயானால், கிறிஸ்து மூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்'' என்று சொல்லி, கலாத்தியா தேசத்து சபையாரை உற்சாகப்படுத்துகிறார். 


நாம் கிறிஸ்து மூலமாய் தேவனுடைய  புத்திரராயும், சுதந்தரராயும் இருக்கிறோம். இனிமேல் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு            நாம் அடிமைப்பட்டவர்களல்ல. நாம் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படுகிறோம். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு  நாம் அடிமைப்பட்டவர்களல்ல. இயேசுகிறிஸ்து மூலமாய், அவரைப்பற்றும் விசுவாசத்தினால், நாம் தேவனுடைய புத்திரராயும், சுதந்தரராயும் இருக்கிறோம்.


தேவன் நம்மீது அன்புகூர்ந்து, நம்மை இரட்சிப்பதற்காக, தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். இதன் மூலமாய் அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிப்பதற்காக  இந்தப் பூமிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். கிறிஸ்துவானவர் நமக்காக பாடுகளைச் சகித்துக்கொண்டு, சிலுவையில் தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்கு, தம்முடைய சொந்த இரத்தத்தையே மீட்பின் கிரயமாகச் செலுத்தினார். 


தேவனுடைய வார்த்தைகள் நம்முடைய இருதயத்தில் எப்போதும் நிரம்பியிருக்கவேண்டும்.  தெய்வீக சத்தியங்கள் நமக்குத் தொடர்ந்து உபதேசம்பண்ணப்படவேண்டும். இதற்காக கிறிஸ்துவானவர் பரிசுத்த ஆவியானவரை நமக்குள்ளே வாசம்செய்யுமாறு அனுப்பியிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர்  நமக்கு சத்தியங்களை உபதேசிக்கிறார். நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார். தேவனுடைய தெய்வீக சித்தத்தை நமக்குத் தெளிவுபடுத்துகிறார். ஆவிக்குரிய ஆலோசனைகளைச் சொல்லுகிறார். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களில் வாசம் செய்து, தம்முடைய ஆவியினால் நம்மை நிரப்புகிறார்.  அபிஷேகம் செய்கிறார். 


பழைய ஏற்பாட்டுக்காலத்து சபையிலிருந்த விசுவாசிகள் சுதந்தரவாளிகளாகயிருந்தாலும், அவர்கள்  சிறுபிள்ளைகளாகவே இருந்தார்கள். அடிமையானவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமில்லாமலிருந்தார்கள்.  இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாகயிருந்தார்கள். சுவிசேஷத்தின் காலத்து சபையிலிருக்கிறவிசுவாசிகளாகிய நாம் மேன்மையான சிலாக்கியங்களைப் பெற்றிருக்கிறோம். கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால், நாம் இனிமேல் அடிமையாயிராமல் புத்திரராயிருக்கிறோம். கிறிஸ்து மூலமாய் தேவனுடைய சுதந்தரராயிருக்கிறோம். 


இதுவரையிலும் கோபாக்கினையின் பிள்ளைகளாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாகவும் இருந்தோம். ஆனால் இப்போதோ தேவனுடைய கிருபையினால்  தேவனுடைய புத்திரராகவும், தேவனுடைய சுதந்தரராகவும் இருக்கிறோம். புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றுக்கொள்கிறோம். தேவனை, ""அப்பா பிதாவே, என்று கூப்பிடுகிற சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். 


இயேசுகிறிஸ்துவை  விசுவாசிக்கிற நாம், கிறிஸ்து மூலமாய்  தேவனுடைய புத்திரராகயிருக்கிறோம். தேவனுடைய புத்திரருக்குரிய சுபாவங்களைப்பெற்றுக்கொள்கிறோம். தம்முடைய பிள்ளைகளெல்லோரும், தம்மைப்போலவே இருக்கவேண்டுமென்று பிதாவாகிய தேவன் விரும்புகிறார். நாம் தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள். ஆதியிலே ஆதாம் பாவம் செய்ததினால், தேவசாயல் நம்மிடத்தில் மங்கிப்போயிற்று. ஆயினும், கிறிஸ்து மூலமாய் தேவசாயல் நமக்குள் புதுப்பிக்கப்படுகிறது. தேவனுடைய புத்திரரின் சுபாவங்களைப் பெற்றிருக்கிற நாம், தேவனுடைய சுதந்தரராகயிருந்து, சுதந்தரவாளிக்குரிய எல்லா ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக்கொள்கிறோம்.


 உரிய வயது வரும் வரையிலும் சுதந்தரவாளிக்கும், அடிமைக்கும் வித்தியாசம் இல்லை.  அதுபோலவே கிறிஸ்து வரும்வரையிலும் நாம் நியாயப்பிரமாணத்திற்கு அடிமையான பிள்ளைகளாக இருந்தோம். நியாயப்பிரமாணத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காக இயேசு கிறிஸ்து வந்தார். அதன்பின்பு நாம் நியாயப்பிரமாணத்திற்கு விடுவிக்கப்பட்டிருக்கிறோம். தேவனுடைய சுவிகார புத்திரர்களாக ஆனோம்.  

மீட்பின் சுவிசேஷத்தின் முக்கிய அம்சங்கள்

    1. தேவனுடைய குமாரன் மூலமாக உலகத்தை மீட்கும் தேவனுடைய திட்டம். (கலா 4:4; ஆதி 3:15; ஏசா 7:14)  


    2. காலம் நிறைவேறினபோது தேவனுடைய குமாரனின் வெளிப்பாடு                 (கலா 4:4; தானி 9:24-26; மத் 1:18-25)


    3. தேவனுடைய  குமாரன் வெளிப்படும் சூழ்நிலைகள் - ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர்,  நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவர், பரிபூரண பலியாக இருக்கிறவர். (கலா 4:4-5)        


    4. தேவனுடைய குமாரனின் மரணத்தின் மூலமாக மீட்பு (கலா 4:5; ரோமர் 3:24)  


    5. விசுவாசிக்கிறவர்கள்  எல்லோரையும் சுவிகாரத்தின் மூலமாக புத்திரராக ஏற்றுக் கொள்வது. (கலா 4:6; ரோமர் 8:14-16)  


    6. பரிசுத்த ஆவியானவரை அனுப்புதல் (கலா 4:6; ரோமர் 8:9-16; கலா 3:14)


    7. எல்லா புத்திரர்களுக்கும் சுதந்தரம். (கலா 4:7; ரோமர் 8:14-18;   எபே 1:11)  


  மனுக்குலத்தை மீட்பதற்குத் தேவன் ஏற்ற வேளையைத் தெரிந்தெடுத்து, தமது ஒரேபேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இந்தக் காலம் தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த காலத்தின் நிறைவேற்றமாகும்.  


நாம் தேவனுடைய புத்திரராய் இருக்கிறபடியினால் பரிசுத்த ஆவியானவர் மூலமாக இதன் முழுமையான அடையாளத்தைப் பெற்றுக் கொள்கிறோம். தேவனை அப்பா பிதாவே என்று கூப்பிடுகிறோம். தேவன் தமது குமாரனுடைய ஆவியை நம்முடைய இருதயங்களில் அனுப்பினார்.  

தேவனை அறிந்திருக்கிறோம் கலா 4 : 8-11

கலா 4:8. நீங்கள் தேவனை அறியாம-ருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள்.


கலா 4:9. இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?


கலா 4:10. நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே.


கலா 4:11. நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன். 


கலாத்தியா தேசத்திலுள்ள ஜனங்களுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது. அதற்கு முன்பு அவர்கள் தேவனை அறியாமலிருந்தார்கள். பாவத்தின் அடிமைத்தனத்தில் கட்டப்பட்டவர்களாகயிருந்தார்கள். சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அவர்கள் அடிமைகளாகயிருந்தார்கள். தேவர்களல்லாதவர்கள் மெய்யான தேவனல்ல. அவர்களெல்லாம் மாய்மாலம் பண்ணுகிறவர்கள். அவர்களால் ஜெபங்களைக் கேட்க முடியாது.  ஜெபங்களுக்குப் பதில் கொடுக்க முடியாது. ஜனங்களுக்கு உதவி செய்யமுடியாது. ஆனால் கலாத்தியரோ மெய்யான தேவனை அறியாதவர்களாகயிருக்கிறார்கள். பொய்யான தெய்வங்களை பற்றிக்கொள்கிறார்கள். அந்தத் தெய்வங்களுக்கு அடிமைகளாகவும் இருக்கிறார்கள். அப்போஸ்தலர் பவுல் அவர்களுடைய பழைய நிலமையை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். 


தேவனை அறியாமலிருந்த கலாத்தியருக்கு கிறிஸ்துவின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது. கிறிஸ்துவின் ஆவியானவர் அவர்களுடைய உள்ளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டுபண்ணினார். அவர்கள் இப்போது தேவனை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் தேவனால் அறியப்பட்டிருக்கிறார்கள். இந்த மனமாற்றம் அவர்களுடைய சுயபக்தியினாலோ, சுயபுத்தியினாலோ, சுயவல்லமையினாலோ உண்டாகவில்லை. இந்த மாற்றம் தேவனுடைய கிருபையினால் உண்டாயிற்று. நாம் தேவனை அறிந்துகொள்வதும், தேவனால் அறியப்படுவதும் தேவன் மூலமாகவே நமக்குள் உண்டாகிறது.  தேவனாலே நாம் அறியப்பட்டிருப்பதினால்தான், நாம் தேவனை அறிந்திருக்கிறோம். தேவன் நம்மை அறிந்துகொள்ளவில்லையென்றால், நம்மால் தேவனை ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது. 


கலாத்தியர்கள் தேவனை அறிந்துகொள்வதற்கு முன்பு         இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாகயிருந்தார்கள். இப்போதோ அவர்கள் தேவனை அறிந்திருக்கிறார்கள். தேவனால் அறியப்பட்டிருக்கிறார்கள். இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு இதுவரையிலும் அடிமைகளாகயிருந்தவர்கள், இப்போது கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். 


ஆனால் கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகளோ இப்போது கர்த்தரைப் பற்றும்  விசுவாசத்திலிருந்து பின்வாங்கிப்போய்விட்டார்கள். உலகத்தின் வழிபாடுகள் பெலனற்றதும் வெறுமையானதுமாயிருக்கிறது. ஆனாலும் அவர்கள் அந்த வழிபாடுகளுக்கு மறுபடியும் திரும்பியிருக்கிறார்கள். மறுபடியும் அந்தவழிபாடுகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறார்கள். 


கலாத்தியர்கள் சுவிசேஷத்தின் பிரகாரம் தேவனை ஆராதிப்பதற்கு   கற்றுக்கொண்டார்கள். ஆனால் இப்போதோ பெலனற்றதும் வெறுமையானதுமான வழிபாடுகளுக்கு  மறுபடியும் திரும்புகிறார்கள். மறுபடியும் பொய்யான தெய்வங்களுக்கு அடிமைப்படும்படியாக விரும்புகிறார்கள்.  தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை செய்வதற்குப் பதிலாக, முன்னோர்களின் பாரம்பரியத்தின் பிரகாரமாகவும், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளின் பிரகாரமாகவும் ஆராதனை செய்ய அவசரம் காண்பிக்கிறார்கள்.


இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, அவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட பின்பு, விசுவாசத்தில் பின்வாங்கிப்போய், தங்களுடைய பழைய ஜீவியத்திற்குத் திரும்பிப்போனால் அவர்களுடைய நிலமை பரிதாபமாகயிருக்கும். யூதர்கள் அறியாமையினால் முன்னோர்களின் பாரம்பரியத்தை கைக்கொள்கிறார்கள். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்குத் தங்களை அடிமைப்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிற விசுவாசிகள், மறுபடியும் இவைகளுக்குத் தங்களை அடிமைப்படுத்தினால்,  இவர்களுடைய நிலமை யூதர்களுடைய நிலமையைவிட பரிதாபமாகயிருக்கும். யூதர்களைவிட இவர்களே துணிகரமாகப் பாவம் செய்கிறார்கள். அறியாமல் செய்த தப்பிதங்கள் மன்னிக்கப்படும். அறிந்து துணிகரமாகச் செய்கிற தப்பிதங்கள் மன்னிக்கப்படமாட்டாது.  


யூதர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை நேசிக்கிறார்கள்.  நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைச் செய்யவேண்டுமென்று விரும்புகிறார்கள்.  அவை பெலனற்றதும் வெறுமையானதுமாக யிருந்தாலும், அவ்வழிபாடுகளை அவர்கள் விரும்பி செய்கிறார்கள். அவைகளுக்குத் தங்களை அடிமைப்படுத்துகிறார்கள்.  முன்னோர்களின் பாரம்பரியமோ அல்லது நியாயப்பிராணத்தின் கிரியைகளோ நம்முடைய பாவத்தை மன்னிப்பதற்கு பெலனற்றவை. இவற்றால் நம்முடைய ஆத்துமாவை சுத்திகரிக்கமுடியாது.  அந்த அளவுக்கு இவை பெலனற்றதாகவும் வெறுமையானதாகவும் இருக்கிறது. 


யூதர்கள் தங்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தின் பிரகாரம், நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறார்கள்.  அவற்றிற்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, தங்களை அடிமைப்படுத்துகிறார்கள். மார்க்க காரியங்களை நேர்த்தியாய்க் கடைப்பிடித்து, செம்மையாய் நிறைவேற்றுகிறார்கள். ஆனால் இவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியமோ பெலனற்றதாயிருக்கிறது. இவர்களுக்குள் ஜீவனில்லை. இவர்களைப்போலவே கர்த்தருடைய பிள்ளைகளில் சிலர் மார்க்ககாரியங்களில் தீவிரமாகயிருக்கிறார்கள்.  ஆனால் அதன் பரிசுத்தத்தையும் எளிமையையும் புரிந்துகொள்ளாமல், தங்களை மார்க்கத்தின் சடங்காச்சாரங்களுக்கு அடிமைப்படுத்திவிடுகிறார்கள். 


அப்போஸ்தலர் பவுல் கலாத்தியரைப்பற்றிச் சொல்லும்போது,   அவர்கள் தேவனை அறிந்திருக்கிறார்கள் என்றும், தேவனால் அறியப்பட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லுகிறார். ஆனாலும் அவர்கள் நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்திற்குள்  இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். முன்னோர்களுடைய பாரம்பரிய வழிபாடுகள் பெலனற்றதாகவும், வெறுமையானதாகவும் இருந்தாலும், அதற்கு மறுபடியும் திரும்பி, தங்களை அவைகளுக்கு அடிமைப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்.


அப்போஸ்தலர் பவுல் கலாத்தியரின் ஆவிக்குரிய நிலமையைப் பார்த்து மனங்கலங்குகிறார். தான் அவர்களுக்காக  பிரயாசப்பட்டது வீணாய்ப் போயிற்றோ என்று அவர்களைக் குறித்து பயப்படுகிறார். பவுலின் இருதயத்தில் கலாத்தியரைக் குறித்து மிகுந்த வேதனை உண்டாயிற்று.  பவுலின் பிரயாசம் எதுவும் கனிதரவில்லை. அவருடைய ஊழியத்தில் பலன் உண்டாகவில்லை. பிரயோஜனமேயில்லாமல் அவர்களுக்காக பிரயாசப்பட்டதை நினைத்து பவுல் மனங்கலங்குகிறார். அவர்களைக் குறித்துப் பயப்படுகிறார். கலாத்தியரின் பின்மாற்றம் பவுலை  வெகுவாகப் பாதித்திருக்கிறது. 


இக்காலத்தில் கலாத்தியர்கள் சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தார்கள். விக்கிரகாராதனைக்காரர்களாக இருந்தார்கள். யூதமார்க்கத்திற்கு மறுபடியும் திரும்பினார்கள். சிறிது காலம் கிறிஸ்துவைப் பின்பற்றினார்கள்.   அதன்பின்பு கிறிஸ்துவையும், சுவிசேஷத்தையும் விட்டு விலகி நியாயப் பிரமாணத்திற்கு மறுபடியும் அடிமைகளானார்கள்.  

பெலனற்றதும் வெறுமையானதுமான வழிபாடுகள்


    1. ஓய்வுநாட்களையும், நியாயப்பிரமாணத்தின் விசேஷித்த நாட்களையும் ஆசரித்தல். (கலா 4:10; கொலோ 2:14-17)       


    2. மாதங்களை ஆசரித்தல் (கலா 4:10; கொலோ 2:14-17)


    3. இஸ்ரவேலின் பண்டிகைகளாக வருஷத்தில் சில குறிப்பிட்ட நாட்களை ஆசரித்தல். (கலா 4:10; லேவி 23; கொலோ 2:14-17)


    4. வருஷங்களை ஆசரித்தல் - வருஷாந்திர பாவநிவாரணங்கள், இஸ்ரவேலின் யூபிலி வருஷங்கள் முதலியவை. (கலா 4:10)  


 பவுல் கலாத்தியருக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று அவர்களைக் குறித்துப் பயந்திருக்கிறார். நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்ப்பதினால் அவர்கள் மார்க்கக் காரியங்களைச் சரியாகச் செய்வதாக நினைக்கிறார்கள். இவற்றைப் பக்தியுடன் ஆசரிப்பதினால் தாங்கள் நீதிமானாகலாம் என்று நினைக்கிறார்கள். சுவிசேஷத்திற்குப் பதிலாக நியாயப்பிரமாணத்தை நம்புவது வீணான நம்பிக்கை.

ஆனந்த பாக்கியம் எங்கே கலா 4 : 12-16

கலா 4:12. சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே, எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை.


கலா 4:13. உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான்     சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.


கலா 4:14. அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.


கலா 4:15. அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்த பாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி  எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.


கலா 4:16. நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? 


 கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகள்  கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்திலிருந்து  பின்வாங்கிப்போய்விட்டார்கள். தங்களுடைய இரட்சிப்புக்கு நியாயப்பிரமாணத்தின் கிரியைகளும் தேவைப்படுகிறது என்று சொல்லி, அவற்றை கைக்கொள்கிறார்கள். அப்படியிருந்தாலும் பவுல் அவர்கள்மீது  அன்பாகவும் பிரியமாகவும் இருக்கிறார். அவர்களை ""சகோதரரே'' என்று கூப்பிடுகிறார். அவர்களுடைய இருதயம் பவுலைவிட்டு தூரமாய் விலகிப்போய்விட்டது. ஆனாலும் பவுலிடத்தில் அவர்கள்மீது காணப்படுகிற அன்பு குறைந்துபோகவில்லை. தன்னைப்போலாகுமாறு  பவுல் அவர்களை வேண்டிக்கொள்கிறார். தானும் அவர்களைப்போல ஆனதாக சொல்லுகிறார். அவர்கள் தனக்கு அநியாயம் ஒன்றும் செய்யவில்லை என்று அவர்களைப்பற்றி அறிக்கை செய்கிறார்.  


அப்போஸ்தலர் பவுல் கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகளோடு சண்டைபோடவில்லை. வாக்குவாதம்பண்ணவில்லை. பவுலுக்கு அவர்களைப்பற்றிய பயமிருந்தாலும், அவர்களைப்பற்றிய கவலையிருந்தாலும், பவுல் அவர்கள்மீது இன்னும் அன்பாகவே இருக்கிறார்.  தன்னுடைய உபதேசத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்து, அவர்களை ""சகோதரரே'' என்று அன்போடு அழைக்கிறார். கர்த்தரைப்பற்றும் விசுவாசத்திலிருந்து அவர்கள் விலகிப்போய்விட்டாலும் அவர்களை எப்படியாவது மறுபடியும் கர்த்தரிடத்தில் அழைத்துவரவேண்மென்று பிரயாசப்படுகிறார்.  அவர்களை கடினமாகக் கடிந்துகொண்டு, அவர்களை கர்த்தரைவிட்டு துரத்திவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடிருக்கிறார்.


கர்த்தருடைய  ஊழியக்காரர்களாகிய நாம் சில சமயங்களில் விசுவாசிகளுக்கு ஆலோசனை சொல்லுகிறோம். அவர்கள் செய்கிற தப்பிதங்களினிமித்தமாக அவர்களைக் கடிந்துகொள்கிறோம். விசுவாசிகளைக் கடிந்துகொள்ளும்போது, அதை ஒரு குறிப்பிட்ட அளவோடு நிறுத்திக்கொள்ளவேண்டும்.  அவர்கள் செய்த தப்பிதங்களை அவர்களுக்கு உணர்த்திக் காண்பித்தால் போதும் என்று பொறுமையோடு பேசவேண்டும். நம்முடைய கடினமான வார்த்தைகளினால் அவர்களை கிறிஸ்துவை விட்டு துரத்திவிடக்கூடாது. எல்லோருக்கும் முன்பாக அவர்களைக் கடிந்துகொள்வதற்குப் பதிலாக, தனிமையில் அவர்களோடு நிதானமாகப் பேசி, அவர்களுடைய தப்பிதங்களை, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளினால்  உணர்த்தவேண்டும். நம்முடைய வார்த்தைகள் தேவனை மகிமைப்படுத்தவேண்டும். கர்த்தருடைய பிள்ளைகளுக்குப் பிரயோஜனமாயிருக்கவேண்டும். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் நன்மையை விசாரிக்கிறவர். 


கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகள்  ஆரம்பத்தில் பவுல்மீது அன்பாகவும் நேசமாகவும் இருந்தார்கள்.  பவுல் அவர்களிடத்தில் முதலாந்தரம் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காக  வந்திருந்தார். அப்போது அவர்கள் பவுலை அன்போடு ஏற்றுக்கொண்டார்கள். பவுல் அப்போது அவர்களிடத்தில் சரீர பெலவீனத்தோடு வந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அவருடைய சரீர பலவீனம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.  தன்னுடைய சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை, பவுல் ஒருவேளை சரீர பலவீனம் என்று சொல்லியிருக்கலாம்.


கலாத்தியா சபையிலுள்ள விசுவாசிகள்  பவுலுடைய சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை அசட்டைபண்ணவில்லை.  அதை அரோசிக்கவில்லை. பவுலை அருவருக்காமல் ஏற்றுக்கொண்டார்கள். பவுல் சரீர பலவீனத்தோடிருந்ததினால், ஒருவேளை அவரால் உற்சாகமாக ஊழியம் செய்யமுடியாமல் இருந்திருக்கலாம்.  பவுலின் ஊழியத்தில் அவருடைய சரீர பலவீனம் ஒரு குறையாகவே காணப்பட்டது. ஆனாலும் அவர்கள் பவுலை ஏற்றுக்கொண்டார்கள். 


அவர்கள் பவுலை சாதாரணமாக ஒரு ஊழியக்காரரைப்போல ஏற்றுக்கொள்ளாமல், அவரை ஒரு தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும் ஏற்றுக்கொண்டார்கள். பவுலை அன்போடு வரவேற்றார்கள். தங்களுக்கு  நற்செய்தி சொல்ல வந்தவர் என்று விசுவாசித்து, அவர்கள் பவுலை அன்போடு வரவேற்றார்கள். பவுலுக்காக எதையும் செய்ய அவர்கள் ஆயத்தமாயிருந்தார்கள். தங்கள் கண்களைப் பிடுங்கி, அவற்றை பவுலுக்குக் கொடுக்கக்கூடுமானால், அவர்கள் அப்படியும் செய்திருப்பார்கள். ஆனால் இப்போது அந்த அன்பு குறைந்துபோயிற்று. அவர்கள் பவுலை வெறுக்கிறார்கள்.  அப்பொழுது அவர்கள் பவுல்மீது கொண்டிருந்த ஆனந்த பாக்கியம் இப்போது இல்லை. 


கலாத்தியர் அப்போஸ்தலர் பவுல்மீது வைத்திருந்த அன்பு குறைந்துபோயிற்று. பவுல்  அதைப்பற்றி அவர்களுக்கு எழுதும்போது ""அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்த பாக்கியம் எங்கே'' என்று கேட்கிறார். சுவிசேஷத்தைப் பெற்றுக்கொள்வதும், அதை விசுவாசிப்பதும் தங்களுக்கு பாக்கியம் என்று  முதலில் நினைத்தார்கள். ஆனால் இப்பொழுதோ அந்த நம்பிக்கை அவர்களைவிட்டு நீங்கிப்போயிற்று. ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டார்கள். ஆரம்பத்திலே தங்கள் கண்களைப் பிடுங்கி பவுலுக்குக் கொடுக்க ஆயத்தமாயிருந்தார்கள்.  ஆனால் இப்பொழுதோ பவுல்மீது அவர்களுக்குச் சிறிதும் அன்பில்லை. பவுலை ஒரு சத்துருவைப்போல பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பவுல் அவர்களிடம் ""நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்கு சத்துருவானேனோ'' என்று கேட்கிறார். 


சத்தியத்தைச் சொன்னதினால் பவுல் ஒரு காலத்தில் அவர்களுக்கு மிகவும் வேண்டிய சிநேகிதராகயிருந்தார். ஆனால் இப்பொழுதோ அதே சத்தியத்தைச் சொன்னதினால் அவர்களுக்கு சத்துருவைப்போல இருக்கிறார்.   இது உலகத்தின் சுபாவம். தங்களுக்கு உண்மையிலேயே நெருக்கமாகயிருக்கிற சிநேகிதர்களை இந்த உலகத்தார் சத்துருவாக நினைப்பார்கள். அதிலும் குறிப்பாக உண்மையைச் சொன்னால் யாருக்கும் பிடிக்காது. தங்களுக்குப் பிடிக்காத உண்மையை யாராவது தங்களிடம் சொல்லிவிட்டால், உடனே அவர்களை சத்துருவாகப் பாவித்துவிடுவார்கள்.  


கர்த்தருடைய ஊழியக்காரர்கள் சத்தியத்தைப் பேசுகிறார்கள். கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கிற செய்தியை முகதாட்சணியம் இல்லாமல், பாரபட்சம் காண்பியாமல், சத்தியத்தை உபதேசம் பண்ணுகிறார்கள். இதனால் ஊழியக்காரர்களுக்கு அநேக சத்துருக்கள் உருவாகுகிறார்கள். அதிகமாய் ஊழியம் செய்யும்போது சத்துருக்களும் அதிகமாய் எழும்புகிறார்கள். எத்தனை சத்துருக்கள் எழும்பினாலும் கர்த்தருடைய ஊழியக்காரர்கள்  சத்தியத்தைப் பேசுவதை நிறுத்திவிடக்கூடாது. மற்றவர்களுடைய மனது நோகுமே என்று நினைத்து சத்தியத்தைப் பேசாமலிருந்துவிடக்கூடாது. மற்றவர்கள் நம்மை சத்துருக்களாக நினைத்தாலும், அவர்களுக்கு சத்தியத்தைச் சொன்னதினிமித்தமே, நம்மை சத்துருக்களாக நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, கர்த்தருக்கு தொடர்ந்து உண்மையாய் ஊழியம் செய்யவேண்டும். 


பவுலுக்குக் கண்நோய் எதுவும் இல்லை. தன்மீது கலாத்தியர்கள் மிகுந்த அன்போடு இருக்கிறார்கள் என்பதை விளக்கும் ஒரு வழக்குச்சொல். அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவித்ததினால் தன்மீது அவர்கள் வைத்துள்ள அன்பு குறைந்துவிட்டதோ அல்லது மாறிவிட்டதோ என்று பவுல் கலாத்தியரிடம் கேட்கிறார். 

கள்ளப்போதகர்கள் கலா 4 : 17,18

கலா 4:17. அவர்கள் உங்களை நாடி வைராக்கியம் பாராட்டுகிறார்கள்; ஆகிலும் நல்மனதோடே அப்படிச் செய்யாமல், நீங்கள் அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டும்பொருட்டு உங்களைப் புறம்பாக்க விரும்புகிறார்கள்.


கலா 4:18. நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில் இருக்கும்பொழுது மாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும். 


அப்போஸ்தலர் பவுல் கள்ளப்போதகர்களின் சுபாவத்தை இங்கு விரிவாக எடுத்துச் சொல்லுகிறார். அவர்கள் மாய்மாலக்காரர்கள். உண்மையை மறைத்து, பொய்யை உண்மையைப்போல பேசுகிறவர்கள்.  மனுஷருக்குப் பிரியமானதை மாத்திரம் அவர்கள் சொல்லுவார்கள். கலாத்தியரை நாடி அவர்கள் வைராக்கியம் பாராட்டுகிறார்கள். அவர்களை எப்படியாவது தங்கள் வலையில் சிக்க வைக்கவேண்டுமென்பதுதான் கள்ளப்போதர்களின்  நோக்கம். 


அவர்கள் கலாத்தியரை நாடி நல்மனதோடே வைராக்கியம் பாராட்டவில்லை.  கலாத்தியரும் தங்களை நாடி வைராக்கியம் பாராட்டவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  அவர்கள்மீது அன்பாகயிருப்பதுபோல நடிக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்களுக்கு கலாத்தியர்மீது அன்பில்லை. அவர்களை சத்தியத்தைவிட்டுப் புறம்பாக்க வேண்டுமென்பதே அவர்களுடைய நோக்கம்.  தங்கள் வலையில் கலாத்தியரைச் சிக்கவைப்பதற்காக, அவர்கள்மீது அன்புள்ளவர்கள்போல நடிக்கிறார்கள். அவர்களை நாடி பொய்யாக வைராக்கியம் பாராட்டுகிறார்கள்.  


சில சமயங்களில் அன்பும் வைராக்கியமும்  பெரிதாயிருக்கும். ஆனால் அங்கு உண்மை இருக்காது.  நேர்மை இருக்காது. உண்மையில்லாத வைராக்கியம் பிரயோஜனமற்றது. நல்ல விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான் என்று  பவுலும் சொல்லுகிறார். ஒரு சிலர் மற்றவர்களுக்கு அருகாமையிலிருக்கும்போது அவர்களைப்பற்றிப் புகழ்ந்துபேசுவார்கள். அன்பான வார்த்தைகளைக் கொட்டுவார்கள்.  அவர்களைவிட்டுத் தூரமாகப் போய்விட்ட பின்போ, அவர்களைப்பற்றி தவறாகப் பேசுவார்கள். மறைமுகமாக குறைசொல்லுவார்கள். 


அப்போஸ்தலர் பவுல் கலாத்தியர்மீது உண்மையிலேயே அன்பாயிருக்கிறார். அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டுகிறார்.  அவர்களோடு கூடயிருக்கும்போது மாத்திரமல்ல, அவர்களைவிட்டுப் பிரிந்திருந்தாலும், அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டுகிறார். 


நாம் நல்ல விஷயத்தில் மாத்திரமே வைராக்கியம் பாராட்டவேண்டும்.  நல்ல விஷயத்திற்காக வைராக்கியம் பாராட்டுவது நல்லது. தீயவிஷயத்திற்காக வைராக்கியம் பாராட்டுவது தீமையானதுதான். நல்ல விஷயத்திற்காக நாம் எப்போதுமே வைராக்கியம் பாராட்டவேண்டும்.  நம்முடைய இருதயத்திலிருந்து உண்மையான அன்பு புறப்பட்டு வரவேண்டும். அவ்வப்போது வருகிற அன்பு மெய்யான அன்பல்ல. எப்போதும் அன்பாகயிருப்பதே மெய்யான அன்பு. விசுவாசிகள் மத்தியில் இப்படிப்பட்ட மெய்யான அன்பு காணப்படவேண்டும். ஒருவருக்கொருவர்  அன்பினால் வைராக்கியம் காண்பிக்கவேண்டும். ஒவ்வொரு விசுவாசியும் அன்பில் நிலைத்திருக்கவேண்டும். அவர்களுடைய அன்பும் நிலைத்திருக்கவேண்டும். 


 கள்ளப்போதகர்கள் அவர்களுடைய அன்பைப் பெறுவதற்காக அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டுகிறார்கள். கலாத்தியர்கள் கள்ளப்போதகர்களை நம்பும்போது பவுலை விரோதிப்பார்கள். அவர்களுடைய உபதேசத்தின் பிரகாரமாகவே நடந்து கொள்வார்கள். நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான். ஆனால் கள்ளப்போதகர்கள் பவுலுக்கு விரோதமாக வைராக்கியம் பாராட்டுகிறார்கள்.

கர்ப்பவேதனைப்படுகிறேன் கலா 4 : 19,20

கலா 4:19. என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.


கலா 4:20. உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால், நான் இப்பொழுது உங்களிடத்தில் வந்திருந்து, வேறுவகையாகப்பேச விரும்புகிறேன். 


அப்போஸ்தலர் பவுல் கலாத்தியர்மீது மிகவும் அன்பாயிருக்கிறார். தன்னுடைய அன்பை இங்கு தெளிவுபடுத்துகிறார். பவுலின் அன்பு கள்ளஅப்போஸ்தலரின் அன்பைப்போல  மாய்மாலமானதல்ல. அது உண்மையான அன்பு. கள்ளஅப்போஸ்தலர்கள் கலாத்தியரோடு இருக்கும்போது ஒருவிதமாகவும், அவர்களை விட்டுப் பிரிந்திருக்கும்போது வேறுவிதமாகவும் பேசுவார்கள். அவர்களோடு கூடயிருக்கும்போது  வைராக்கியம் பாராட்டுவார்கள். ஆனால் அவர்கள் நல்மனதோடே வைராக்கியம் பாராட்டுவதில்லை. கள்ளஅப்போஸ்தலர்கள் கலாத்தியர்மீது அன்பாயிருப்பதுபோல மாய்மாலம் பண்ணுகிறார்கள். தங்களுடைய சுயஆதாயத்திற்காக அவர்கள்மீது  அன்புகூருகிறார்கள். தங்களுக்கு கலாத்தியரால் ஒரு பிரயோஜனமும் இல்லையென்றால், அவர்கள்மீது அன்புகூரமாட்டார்கள். ஆனால் பவுலோ கள்ளப்போதகர்களைப்போல மாய்மாலம்பண்ணவில்லை. கலாத்தியர்மீது மெய்யாகவே அன்புகூருகிறார். 


பவுல் கலாத்தியரை, ""என் சிறு பிள்ளைகளே'' என்று அழைக்கிறார். மெய்யாகவே கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகள் பவுலுக்கு சிறுபிள்ளைகளைப்போல இருக்கிறார்கள். பவுல் அவர்களைத் தான் பெற்றெடுத்த பிள்ளைகளைப்போல பாவித்து நேசிக்கிறார். பவுலுக்கு கலாத்தியர்மீது பாசம் இருக்கிறது. இது பெற்றோர் பிள்ளையின்மீது காண்பிக்கிற பாசம். பவுல் கலாத்தியர்மீது தான் வைத்திருக்ககிற பாசத்தைச் சொல்லும்போது, ""என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்'' என்று சொல்லுகிறார். ஒரு தாய் தன்னுடைய பிள்ளையைப் பெறும்போது கர்ப்பவேதனை அடைவதுபோல, கிறிஸ்து கலாத்தியரிடத்தில் உருவாகுமளவும், பவுல் ஒரு தாயைப்போல அவர்களுக்காக கர்ப்பவேதனைப்படுகிறார். அவர்கள் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தில் நிலைத்திருக்கவேண்டுமென்று விரும்புகிறார். 


உண்மையுள்ள ஊழியக்காரர்கள், விசுவாசிகள்மீது பவுலைப்போல உண்மையான அன்பு காண்பிக்கவேண்டும். பெற்றோர் தங்கள் சிறுபிள்ளைகளை நேசிப்பதுபோல ஊழியக்காரர்களும் விசுவாசிகளை நேசிக்கவேண்டும். 


விசுவாசிகளிடத்தில் கிறிஸ்து உருவாகவேண்டுமென்பதே ஊழியக்காரரின்  பிரதான நோக்கமாகயிருக்கவேண்டும். தங்கள்மீது அன்பாகயிருக்கிற ஊழியக்காரரை  விசுவாசிகளும் நேசிக்கவேண்டும். ஊழியக்காரரை வெறுத்து ஒதுக்கிவிடக்கூடாது. அவர்களை உதாசீனம்பண்ணிவிடக்கூடாது. தங்களுக்கு சத்தியத்தைச் சொன்னதினால் அவர்களை சத்துருக்களாக நினைக்கக்கூடாது.  


அப்போஸ்தலர் பவுல் மறுபடியும் கலாத்தியரிடம் வரவேண்டுமென்று விரும்புகிறார். இதுவரையிலும் அவர்களுக்கு தன் அன்பை வெளிப்படுத்தியவர், இப்போது அவர்களோடு வேறு வகையாய்ப் பேசவிரும்புகிறார். அவர்களைச் சந்தேகப்படுகிறார். ஆகையினால் பவுல் அன்பான வார்த்தைகளைச் சொல்லுவதற்குப் பதிலாக இப்போது வேறு வகையாகப் பேசுகிறார்.  கலாத்தியரைப்பற்றி எப்படி நினைப்பது என்று பவுலுக்குச் சரியாகத் தெரியவில்லை. அவர்கள் ஒரு காலத்தில் பவுல்மீது மிகவும் அன்பாகயிருந்தார்கள். பவுலை நேசித்தார்கள். ஆனால் இப்போதோ அவர்கள் பவுலை ஒரு சத்துருவாகப் பாவிக்கிறார்கள். அவர்களிடத்தில் பெரிய மாற்றமுண்டாயிருக்கிறது. ஆகையினால் பவுல் அவர்களைக் குறித்து சந்தேகப்படுகிறார்.  


அவர்களைக் கடிந்துகொள்வதற்குப் பதிலாக, அவர்களிடத்தில் காணப்படுகிற உண்மையான பிரச்சனை என்ன என்பதை பவுல் அறிந்துகொள்ள விரும்புகிறார். அவர்களுக்கு மறுபடியும் சத்தியத்தை உபதேசம் செய்து, கள்ளஉபதேசங்களிலிருந்து  அவர்களை விடுதலை செய்ய விரும்புகிறார். அவர்கள் மறுபடியும் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்திற்குள் திரும்பி வரவேண்டுமென்று பவுல் விரும்புகிறார். அவர்களைக் கடிந்துகொள்வதற்குப் பதிலாக, அவர்களோடு அன்பான வார்த்தைகளைப் பேசி, அவர்களுடைய விசுவாசத்தை உறுதிபண்ண விரும்புகிறார். அவர்களுக்காக  மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறார். அவர்களுக்குள் கிறிஸ்து உருவாகவேண்டுமென்பதே பவுலின் விருப்பம். 


கலாத்தியர்களை இயேசு கிறிஸ்துவிடம் ஆதாயம் பண்ணுவதற்காகப் பவுல் பிரசங்கங்கள், ஜெபங்கள், கண்ணீர்கள் ஆகியவற்றால் பிரயாசப்பட்டார். தன்னுடைய ஊழியத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டவர்களைப் பவுல் தன்னுடைய பிள்ளைகளாகக் கருதினார். ஆனால் இப்பொழுதோ அவர்கள் தேவனை விட்டு விலகிப்போய்விட்டார்கள். அவர்கள் தேவனிடத்தில் திரும்பி வருவதற்காகவும், இயேசு கிறிஸ்து அவர்களிடத்தில் உருவாகும் அளவும் அவர்களுக்காக பவுல் மறுபடியும் கர்ப்ப வேதனைப்படுகிறார். அவர்கள் கிருபையிலிருந்து விழுந்துவிட்டார்கள்.  அவர்கள் கிறிஸ்துவிற்குள் தங்களை மறுபடியும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். இந்தப்பிறப்பு சரீரப்பிரகாரமான பிறப்பைக் குறிக்காது. ஜெபத்தில் ஆத்துமாவின் வேதனையைக் குறிக்கும். 

புதிய பிறப்பு

    1.  ஆவிக்குரிய மாற்றம் - சரீர மாற்றமல்ல. (கலா 4:29;           யோவான் 3:1-8)


    2. இருதயம், சித்தம், சிந்தனை, ஆவல்கள், ஜீவன், நடத்தை ஆகியவற்றில் மாற்றம் - சரீரத்தில் ஏற்படும் மாற்றமல்ல.          (2கொரி 5:17-18)


    3. எஜமான்களை மாற்றுவது - சரீரம், ஆத்துமா, ஆவியை மாற்றுவதல்ல. (ரோமர் 6:11-23; ரோமர் 8:1-4)


    4. சாத்தானின் குடும்பத்திலிருந்து தேவனுடைய குடும்பத்திற்குள் சுவிகார புத்திரராக அங்கீகரிக்கப்படுவது        (ரோமர் 8:14-16; கலா 4:5; எபே 1:5)


    5. சாத்தானுக்கும், பாவத்திற்கும் ஊழியம் செய்வதற்குப் பதிலாகத் தேவனுக்கும், பரிசுத்தத்திற்கும் ஊழியம் செய்யுமாறு தன்னைப் பிரதிஷ்டை பண்ணுவது. (ரோமர் 6:16-22; ரோமர் 8:1-13)


    6. தன்னுடைய நீதியிலும், பரிசுத்தத்திலும் புதுப்பித்துக் கொள்வது. (எபே 4: 23-24; கொலோ 3:10; சங் 51:10) புதிய பிறப்பு என்பது பரிசுத்த ஆவியினால் பிறப்பதைக் குறிக்காது. தேவனுடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியினால் பிறந்தார்.  (யோவான் 1:14,18; யோவான் 3:16)


    7. சுபாவத்தின் மாற்றம் (ரோமர் 3:24-25)


    8. ஆர்வத்தின் மாற்றம் - தேவனுடைய சமூகத்திற்கு முன்பாகப் புதிய பிரதிஷ்டையோடு நிற்பது. (ரோமர் 5:1-2)  


    9. சுபாவம், ஊழியம், ஸ்தானம் ஆகியவற்றில் மாற்றம். (கலா 5:22-23; 1கொரி 13)   


    10. ஒருபாவி மனந்திரும்பி இரட்சிக்கப் படும்போது அவருடைய ஜீவியத்தில் ஏற்படும் ஆவிக்குரிய மாற்றங்களும், சுபாவங்களின் மாற்றங்களும்   இரட்சிக்கப்பட்ட நபர் மறுபடியும் பாவம் செய்யும்போது தேவனுடைய பிரமாணத்தை அவர் மீறுகிறார். அவருக்குப் பாவத்தின் சம்பளமாகிய மரணம் நியமிக்கப்படுகிறது.              (யாக் 1:13-15; யாக் 5:19-20)            

மனுஷர் பலதடவை மறுபடியும் பிறக்க முடியும்

    1. ஆதாம் பாவம் செய்யும் வரையிலும் எல்லா ஜனங்களும் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தார்கள். ஆதாம் பாவம் செய்யாமல் இருந்திருந்தால் எல்லா ஜனங்களும் நித்திய காலமாக ஜீவித்திருப்பார்கள்.   யோவான் 3:1-8 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் புதிய பிறப்பானது மறுபடியும் பிறப்பதைக் குறிக்கும். மரண தண்டனையை அகற்றிவிட்டு தன்னுடைய ஜீவன் மீட்கப்படுவதைக் குறிக்கும். இது ஒருமுறை நடைபெறும்போது பலமுறை நடப்பதற்கு வாய்ப்புள்ளது.


    2. நமது சத்துருக்களை நாம் ஏழுஎழுபது தரம் அதாவது 490 தரம் மன்னிக்க வேண்டுமென்று சுவிசேஷம் நமக்கு உபதேசிக்கிறது.  நமக்கு இதை உபதேசிக்கும் கர்த்தர் இந்தக் காரியத்தைத் தம்முடைய நடைமுறையிலும் செயல்படுத்தி நம்மை பலதரம் மன்னிப்பார்.


    3. ஒருவிசுவாசி பாவம் செய்யும்போது இயேசுகிறிஸ்து பிதாவிடத்தில் அந்த நபருக்காக பரிந்து பேசுகிறார்.  பின்வாங்கிப் போனவர்களைத் தேவனிடத்தில் மறுபடியும் கூட்டிச்சேர்க்க வேண்டியதில்லை என்றால் நமக்காகப் பரிந்து பேசவேண்டிய அவசியமுமிராது.


    4. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1யோவான் 1:9).


    5. பேதுரு மனந்திருந்தி இரட்சிக்கப்பட்டான். இயேசுவை தேவனுடைய குமாரன் என்றும், கிறிஸ்து என்றும் அறிக்கையிட்டான். இதன் மூலமாக அவனுக்குப் புதிய பிறப்பு கிடைத்தது.  பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள் இருந்தார். சுவிசேஷ வசனங்களைப் பிரசங்கம் பண்ணினான். வியாதியஸ்தர்களைக் குணமாக்கினான். இப்பேர்ப்பட்ட பேதுரு தம்மை மறுதலித்து பின்வாங்கிப்போவான் என்றும் மறுபடியும் இரட்சிக்கப்படுவான் என்றும் இயேசுகிறிஸ்து முன்னறிவித்தார். இரட்சிக்கப்பட்டவர்கள் பாவம்செய்யும்போது அவர்கள் தம்முடைய பாவங்களை மறுபடியும் அறிக்கையிட்டு பேதுருவைப் போல தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  (மத் 26:69-75)


    6. ஒருவன் மறுபடியும் இரட்சிக்கப்படுவதைக் குறித்து யாக்கோபு இவ்வாறு உபதேசம் பண்ணுகிறான். ""சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகிமோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.


    7. தேவனால் மனுஷரை மறுபடியும் ஒட்ட வைக்க முடியும் என்று பவுல் உபதேசம் பண்ணியிருக்கிறார்.


    8. பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கத்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்று பவுல் உபதேசம் பண்ணுகிறார்.


    9. பின்வாங்கிப்போனவர்களும் தேவனுடைய கிருபையிலிருந்து விழுந்தவர்களும்  மறுபடியும் பிறப்பதைக் குறித்து பவுல் உபதேசம் பண்ணியிருக்கிறார்.


    10. ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், அவனைச் சீர்பொருந்த பண்ணவேண்டும் என்பது பவுலின் உபதேசம்.        (கலா 6:1).


    11. தேவைப்பட்டால் மனந்திரும்புதலின் அஸ்திபாரத்தை மறுபடியும் போடலாம்.   மார்க்கப்பேதம் உள்ளவர்கள் மனந்திரும்ப மாட்டார்கள். பின்வாங்கிப்போனவர்கள் இயேசு கிறிஸ்துவின் மீது இன்னும் விசுவாசமாகவே இருப்பார்கள். தங்களுடைய பாவங்களில் எவ்வளவுதான் முங்கிப்போயிருந்தாலும் கிறிஸ்துவில் அவர்கள் வைத்திருக்கும் விசுவாசம் புதுப்பிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.


    12. மறுபடியும் மனமாற்றமடைவதைக் குறித்து இயேசு கிறிஸ்து உபதேசம் பண்ணியிருக்கிறார்.


    13. காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்ட ஆடு, வெள்ளிக்காசு, கெட்டகுமாரன் ஆகியோரைப் பற்றி இயேசு கிறிஸ்து லூக்கா 15 ஆவது அதிகாரத்தில் உவமையாகக் கூறியிருக்கிறார். 


    14. தாவீது பாவம் செய்த பின்பு, மறுபடியும் புதுப்பிக்கப்பட்டான்.


    15. தம்முடைய நிபந்தனைகளைக் கைக்கொண்டால் தேவன் இஸ்ரவேலரை மீட்டுக் கொள்வதாகத் திரும்பத் திரும்ப வாக்குப் பண்ணியிருக்கிறார்.


 கலாத்தியர்கள் பின்வாங்கிப் போய் விட்டார்கள். ஆகையினால் பவுல் அவர்களைக் கடினமாகக் கடிந்து கொள்ளாமல் மெதுவாகக் கடிந்து கொண்டு அவர்களை மறுபடியுமாக இயேசு கிறிஸ்துவினிடத்தில் அழைத்து வர முயற்சி பண்ணுகிறார்.

ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் கலா 4 : 21-31 

கலா 4:21. நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள்.


கலா 4:22. ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.


கலா 4:23. அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.


கலா 4:24. இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள் தானே.


கலா 4:25. ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே.


கலா 4:26. மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.


கலா 4:27. அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப்பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது.


கலா 4:28. சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்.


கலா 4:29. ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.


கலா 4:30. அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை;  ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.


கலா 4:31. இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவர்களுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.


கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகளில் சிலர் தங்கள் இரட்சிப்புக்கு  கிறிஸ்துவை மாத்திரமே விசுவாசிக்கிறார்கள். கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் தாங்கள் நீதிமான்களாக்கப்பட முடியுமென்று நம்புகிறார்கள். வேறுசிலரோ கிறிஸ்துவின் சுவிசேஷத்தோடே, யூதமார்க்கத்து உபதேசமும்  தங்கள் இரட்சிப்புக்குத் தேவையென்று சொல்லுகிறார்கள். இவர்கள் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் மாத்திரமே தாங்கள் நீதிமான்களாக்கப்பட முடியுமென்று நம்புகிறார்கள். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசிக்கிறவர்களுக்கும், நியாயப்பிராமணத்தை விசுவாசிக்கிறவர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை பவுல் இங்கு தெளிவுபடுத்துகிறார்.  இதற்காக ஈசாக்கு, இஸ்மவேல் ஆகியோரின் சரித்திரத்தை ஒப்பிட்டுச் சொல்லுகிறார். ""நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதை கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள்'' என்று பவுல் அவர்களிடம் கேட்கிறார். 


நியாயப்பிரமாணத்தில் ஆபிரகாமுக்கு  இரண்டு குமாரர்கள் இருந்தார்களென்று  எழுதியிருக்கிறது. அவர்களில் ஒருவனாகிய இஸ்மவேல் அடிமையானவளிடத்தில் பிறந்தவன்.   மற்றொரு குமாரனாகிய ஈசாக்கு சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். இஸ்மவேல் மாம்சத்தின்படி பிறந்தான். ஈசாக்கு  வாக்குத்தத்தின்படி பிறந்தான். மாம்சத்தின்படி பிறப்பது என்பது இயற்கையாகப் பிறப்பதைக் குறிக்கும். ஆனால் ஈசாக்கோ இயற்கையாகப் பிறக்கவில்லை.  சாராளுக்கு குழந்தை பெறுவதற்கான சரீர பெலன் இல்லாதபோது, வாக்குத்தத்தின்படி ஈசாக்கு பிறந்தான். அப்போஸ்தலர் பவுல் இந்தச் சம்பவத்தை ஒரு உருவகமாக விளக்கி, சுவிசேஷத்திற்கும், நியாயப்பிரமாணத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை எடுத்துச் சொல்லுகிறார். 


ஆகார், சாராள் ஆகிய இரண்டு ஸ்திரீகளும் இரண்டு ஏற்பாடுகளாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகள். ஆகார் சீனாய் மலையில் உண்டான உடன்படிக்கைக்கு ஒப்புமையாக இருக்கிறாள். சீனாய் மலையிலிருந்து நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையானது அடிமைத்தனத்திற்குள்ளாக பிள்ளை   பெறுகிறது. மனுஷரை நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்திற்குட்படுத்துகிறது. ஆகார் என்பது அரபி தேசத்திலுள்ள சீனாய் மலை. இது இப்பொழுதிருக்கிற எருசலேமுக்கு ஒப்புமையாக இருக்கிறது. ஆகார் தன் பிள்ளைகளோடே, அடிமைப்பட்டிருக்கிறாள். 


ஆகாரும், அவளுடைய பிள்ளைகளும், அவர்களுடைய அடிமைத்தனமும் யூதருடைய தற்போதைய நிலமையை வெளிப்படுத்துகிறது.  யூதர்கள் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைப் பற்றிக்கொண்டு அதற்கு அடிமைப்பட்டிருக்கிறார்கள். தங்களுடைய பிள்ளைகளையும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு அடிமைப்படுத்தியிருக்கிறார்கள்.


சாராளோ சுயாதீனமுள்ளவள். இவள் மேலான எருசலேமுக்கு ஒப்புமையாகயிருக்கிறாள். மேலான எருசலேமில்  நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனம் இல்லை. பாவத்தினால் உண்டாகும் சாபம் இல்லை. மேலான எருசலேமே நம்மெல்லோருக்கும் தாயானவள்.  இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலமாக, யூதரும் புறஜாதியாரும், மேலான எருசலேமுக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.  இது விசுவாசிகளுக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய ஆசீர்வாதம். இதுவே உண்மையான சுயாதீனம். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைச் செய்வது அடிமைத்தனம். 


அப்போஸ்தலர் பவுல் விசுவாசிகளுடைய சுயாதீனத்தைச் சொல்லுவதற்கு, ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை இங்கு மேற்கோளாக எழுதுகிறார்.  ""பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்'' (ஏசா 54:1).


அப்போஸ்தலர் பவுல் கலாத்தியா தேசத்து  விசுவாசிகளுக்கு அவர்களுடைய சுதந்தரத்தைத் தெளிவுபடுத்துகிறார். ""சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்'' என்று சொல்லி  தேவன் அவர்களுக்குக் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தை உறுதிபண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சகராகவும் ஆண்டவராகவும் நம்முடைய ஜீவியத்தில் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.  இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் மாத்திரமே நமக்கு இரட்சிப்பு உண்டு என்றும், இதன் மூலமாக மாத்திரமே நாம் நீதிமான்களாக்கப்பட முடியும் என்றும் நம்புகிறோம். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம்  தேவனுடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்கிற சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். 


வாக்குத்தத்தின் பிள்ளைகள் சுதந்தரவாளிகளாகயிருந்தாலும், அவர்களுக்கும் சில துன்பங்கள் உண்டு. மாம்சத்தின்படி பிறந்தவனாகிய இஸ்மவேல், ஆவியின்படி பிறந்த  ஈசாக்கை அப்பொழுது துன்பப்படுத்தினான். அதுபோலவே இப்பொழுதும் நடந்துவருகிறது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் உலகப்பிரகாரமான ஜனங்கள் மூலமாய் துன்பங்களை அனுபவிக்கிறோம். இதற்காக நாம் சோர்ந்துபோய்விடக்கூடாது. 


இதைக்குறித்து வேதமும் இவ்வாறு தெளிவாகச் சொல்லுகிறது. "" சாராள் ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பேதள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள்''      (ஆதி 21:10). அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை. 


அப்போஸ்தலர் பவுல் ஆபிரகாமின் இரண்டு குமாரரைப்பற்றிச் சொல்லிவிட்டு, கலாத்தியருக்கு ஆவிக்குரிய ஆலோசனைகளைச் சொல்லுகிறார். ""இப்படியிருக்க சகோதரரே, நாம் அடிமையானவளுக்கு பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கு பிள்ளைகளாயிருக்கிறோம்'' என்று சொல்லுகிறார். நாம் வாக்குத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். ஆவியின்படி பிறந்திருக்கிறோம். 


 சாராள் புதிய உடன்படிக்கையையும், ஆகார் பழைய உடன்படிக்கையையும் பிரதிபலிக்கிறார்கள். ஆகார் மோசேயின் பிரமாணத்திற்கு ஒப்பானவள். மோசேயின் பிரமாணம் அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது.  சாராள் புதிய பிரமாணத்தை வெளிப்படுத்துகிறாள். அடிமைத்தனத்திலிருந்து இந்தப் பிரமாணம் நம்மை விடுவித்து, தேவனிடத்தில் கொண்டு வருகிறது. புதிய பிறப்பின் மூலமாக புதிய பிரமாணம் நம்மைத் தேவனுடைய புத்திரர்களாக ஆக்குகிறது.   பழைய உடன்படிக்கை அகற்றப்பட்டு விட்டது. இனிமேல் அது அமுலில் இல்லை.  


 சடங்குகளையும், பண்டிகைகளையும் கொண்டாட வேண்டும் என்னும் அடிமைத்தனத்திற்குள் நியாயப் பிரமாணம் பிள்ளைகளைக் கொண்டு வருகிறது.    பழைய பிரமாணம் பூமியிலுள்ள எருசலேமிற்கு ஒப்பானது. இது தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறது.


  கிறிஸ்தவ விசுவாசிகள் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள். ஈசாக்கைப் போல புதிய உடன்படிக்கையின் பிள்ளைகள். ஈசாக்கைத் துன்பப்படுத்தினது போல நம்மையும் துன்பப்படுத்துவார்கள்.    


 பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் மனுஷர்கள் மறுபடியும் பிறந்தார்கள்.  சிலுவையில் வரப்போகிற நியாயத்தீர்ப்பை விசுவாசித்து அவர்கள் புதிய பிறப்பின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டார்கள். புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ஜீவிக்கும் நாமோ நமது புதிய பிறப்பிற்குக் கல்வாரி சிலுவையை நோக்கிப் பார்க்கிறோம்.


 ஆபிரகாமின் வீட்டிலிருந்து ஆகாரும், இஸ்மவேலும் வெளியே துரத்தப்பட்டார்கள். ஈசாக்கோடு அவர்களுக்குச் சுதந்தரவீதம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதுபோலவே மோசேயின் பிரமாணத்தையும், சுவிசேஷத்தையும் கலப்படம் பண்ண முடியாது. இவ்விரண்டும் வெவ்வேறு உடன்படிக்கைகள். பழைய உடன்படிக்கை அகற்றப்பட்டது. புதிய உடன்படிக்கை மட்டுமே தற்பொழுது அமுலில் உள்ளது.  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.