சங்கீதம் 34 விளக்கம்

 







 சங்கீதம் 34 விளக்கம்


(தாவீது அபிமெலேக்கு முன்பாக வேஷமாறினபோது அவனால் துரத்தி விடப்படுகையில் பாடின சங்கீதம்.)

இரண்டாவது மீட்பின் சங்கீதம் 

பொருளடக்கம்

    1. மீட்பிற்காக ஏழுவிதமான ஸ்தோத்திரம் - (34:1-3) 

    2. ஏழு விதமான மீட்பின் சாட்சி - (34:4-6)  

    3. ஏழு விதமான மீட்பின் வாக்குத்தத்தம் - (34:7-10) 

    4. பத்து விதமான மீட்பின் நிபந்தனை - (34:11-14)

    5. மீட்பரின் பதினைந்து விதமான ஊழியம் - (34:15-22)


தாவீது முப்பத்து நான்காவது சங்கீதத்தை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எழுதியிருக்கிறார். தாவீது அபிமெலேக்கு முன்பாக வேஷம் மாறினபோது அவனால் துரத்திவிடப்படுகையில் பாடின சங்கீதம்        என்று இந்த சங்கீதத்திற்கு தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தாவீது கர்த்தருடைய நன்மையை அனுபவித்திருக்கிறார். தாவீதைப்போலவே கர்த்தரிடத்தில் பயபக்தியாயிருக்கிறவர்கள் எல்லோரும், கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்த்திருக்கிறார்கள். தாவீது இதற்காக  கர்த்தரைத் துதிக்கிறார் (சங் 34:1-6). 


 கர்த்தருடைய பரிசுத்தவான்களெல்லோரும் கர்த்தருக்குப் பயந்திருக்கவேண்டுமென்று  தாவீது ஆலோசனை சொல்லி, அவர்களை உற்சாகப்படுத்துகிறார் (சங் 34:7-10). தாவீது நம்மெல்லோருக்கும் நல்ல ஆலோசனைகளைச் சொல்லுகிறார். நாம் மனுஷருக்குமுன்பாகவும் தேவனுக்கு முன்பாகவும் உண்மையுள்ளவர்களாய் நடந்துகொள்ளவேண்டும்.  நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற கடமைகளை நாம் நேர்த்தியாய்ச் செய்து முடிக்கவேண்டும் (சங் 34:11-14). நன்மையும் தீமையும் நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆசீர்வாதமும் சாபமும் நமக்கு முன்பாக இருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு  தேவனுடைய தெய்வீக பாதுகாப்பு உண்டு (சங் 34:15-22). 


தாவீது தன் ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள, சவுலுக்குப் பயந்து, தன் தேசத்தை விட்டு ஓடிப்போகிறார்.  தாவீதின்மீது சவுலின் கோபம் அதிகமாயிருக்கிறது. தாவீதுக்கு பாதுகாப்பான இடம் தேவைப்படுகிறது. இஸ்ரவேல் தேசத்திற்கு அருகாமையிலுள்ள பெலிஸ்தருடைய தேசத்திற்கு  தாவீது ஓடிப்போகிறார். காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனார். ஆகீசின் மறுபெயர் அபிமெலேக்கு என்பதாகும். 


ஆகீசின் ஊழியக்காரர் தாவீதை அடையாளம் கண்டுகொண்டார்கள்.  தாவீதைப்பற்றிய செய்திகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆகீசின் ஊழியக்காரர் சொன்ன வார்த்தைகளையெல்லாம்  தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசிற்கு மிகவும் பயப்பட்டார். அவர்கள் கண்களுக்கு முன்பாக  தாவீது தன் முகநாடியை வேறுபடுத்தினார். அவர்களிடத்தில் தாவீது தன்னை பித்தங்கொண்டவன் போல காண்பித்தார். வாசற்கதவுகளிலே  தன்னைக் கீறிக்கொண்டார். தன் வாயிலிருந்து நுரையை தன் தாடியில் விழப்பண்ணிக்கொண்டிருந்தார். தாவீது ஆகீஸ் என்னும் அபிமெலேக்குக்கு முன்பாக வேஷம் மாறினவராக தன்னைக் காண்பித்தார். ஆகீஸ் தாவீதை தன்னிடத்திலிருந்து துரத்திவிட்டார் (1சாமு 21:10-13).


தாவீது யார் என்பது ஆகீசிற்குத் தெரிந்தால், ஆகீஸ் தாவீதின்மேல்  கோபப்படுவார். அவருக்குத் தண்டனை கொடுப்பார். ஆகையினால் தாவீது தன்னை வெளிப்படுத்திக் காண்பிக்காமல், தன்னை ஒரு  பைத்தியம் பிடித்தவன்போல காண்பித்துக்கொண்டார். ஆகீசின் கையிலிருந்து தப்பித்தார். இல்லையென்றால் ஆகீஸ் தாவீதுக்கு  கடுமையான தண்டனை கொடுத்திருப்பார். 


தாவீதின் ஜீவனுக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த வேளையிலும், கர்த்தர்மேல் அவர் வைத்திருந்த விசுவாசம் உறுதியாயிருந்தது.  தாவீது கர்த்தரை நம்பி, கர்த்தரைத் துதித்து இந்த சங்கீதத்தை எழுதுகிறார். முப்பத்து நான்காவது சங்கீதத்தில் சில விசேஷங்கள் உண்டு.  எபிரெய பாஷையில் இருபத்திரண்டு எழுத்துக்கள் உள்ளன. இந்த சங்கீதத்தில் இருபத்திரண்டு வசனங்கள் உள்ளன. ஒவ்வொரு வசனமும் எபிரெய எழுத்துக்களின் அகர வரிசைப் பிரகாரம் எழுதப்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு வசனத்தின் முதல் எழுத்தும், எபிரெய எழுத்துக்களின் அகர வரிசைப் பிரகாரம் எழுதப்பட்டிருப்பது இந்த சங்கீதத்தின் விசேஷித்த அம்சமாகும். 

கர்த்தரை எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன் 

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயி-ருக்கும்.  கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்           (சங் 34:1,2).


     தாவீது கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறார். கர்த்தரை ஸ்தோத்திரிப்பதில்  தாவீது பிரியமாயிருக்கிறார். கர்த்தரை ஸ்தோத்திரிக்கவேண்டுமென்று தாவீது தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கொள்கிறார். ""கர்த்தரை நான்  எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்'' என்று தாவீது சொல்லுகிறார். எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா வேளைகளிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் தாவீது கர்த்தரைத் துதிக்கிறார். கர்த்தரைத் துதிக்கிற துதி எப்போதும் தாவீதின் வாயிலிருக்கிறது. தாவீது கர்த்தரை  தன் இருதயத்தின் ஆழத்திலிருந்து ஸ்தோத்திரம்பண்ணுகிறார். 


தாவீதின் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டுகிறது.  கர்த்தருக்கும் தாவீதுக்கும் நெருங்கிய ஐக்கியமுண்டாயிருக்கிறது.  தாவீது கர்த்தரிடத்தில் பிரியமாயிருக்கிறார். கர்த்தர் தாவீதின் நன்மைகளை விசாரிக்கிறார். தாவீது தன்னை கர்த்தரிடத்தில் •பூரணமாய் ஒப்புக்கொடுத்திருக்கிறார். தனக்குத் தேவையான எல்லாவற்றையும் தாவீது  கர்த்தரிடமிருந்து எதிர்பார்க்கிறார்.


தான் எக்காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்திரிப்பதுபோல, மற்றவர்களும் கர்த்தரை ஸ்தோத்திரிக்கவேண்டுமென்று அவர்களை அழைக்கிறார். அவர்கள் தன்னோடுகூட  கர்த்தரை ஸ்தோத்திரிப்பார்கள் என்று தாவீது எதிர்பார்க்கிறார். கர்த்தர் தாவீதை அவருடைய ஆபத்துக்களிலிருந்து விடுவித்திருக்கிறார். தாவீது கர்த்தருக்கு நன்றியுள்ளவராகயிருக்கிறார். கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கிறார். சிறுமைப்பட்டவர்கள் இவையெல்லாவற்றையும் கேட்டு மகிழ்ச்சியடைவார்கள். 


கர்த்தரை எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பது தாவீதின் பழக்கம். நமக்கு கர்த்தர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நாம் அவரை ஸ்தோத்தரிக்க வேண்டும். மனுஷனுக்கு இதைக் கற்றுக் கொடுப்பதற்காக தேவன் செய்யும் காரியம் அற்புதமானது. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும் அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்து கொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார் (1கொரி 1:25-31).

கர்த்தருடைய நாமத்தை உயர்த்துவோமாக

என்னோட கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக           (சங் 34:3).


கர்த்தர் எந்த அளவில் இருக்கிறாரோ அந்த அளவுக்கு மாத்திரமே அவரை உயர்த்த முடியும். அவர் பெரியவர். கர்த்தருடைய மேன்மைக்கும் மகத்துவத்திற்கும் அளவு எதுவுமில்லை. அவர் சர்வவியாபகர்.  ஆகையினால் நாம் கர்த்தரைத் துதிக்கும்போது, அளவில்லாத வார்த்தைகளினால் அவரைத் துதிக்கவேண்டும். கர்த்தரை அதிகம் அதிகமாய் மகிமைப்படுத்தவேண்டும். கர்த்தருடைய நாமத்தை உயர்த்தவேண்டும். நாம் கர்த்தரை உயர்த்தும்போது, கர்த்தர் நம்முடைய துதிகளிலும் ஸ்தோத்திர பலிகளிலும் பிரியமாயிருக்கிறார். 


நாம் கர்த்தரை தனிமையிலும் துதிக்கவேண்டும். மற்ற விசுவாசிகளோடு  சேர்ந்தும் துதிக்கவேண்டும். தாவீது இதைப்பற்றிச் சொல்லும்போது, ""நாம் ஒருமித்து  அவர் நாமத்தை உயர்த்துவோமாக'' என்று சொல்லுகிறார். தேவனைத் துதிக்கிற துதி அவருடைய சபையிலே  கெம்பீரமாய்த் தொனிக்கவேண்டும். 

சங்கீதம் - 34 இல் கூறப்பட்டுள்ள பத்துக் கட்டளைகள்

    1. என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப் படுத்துங்கள் (சங் 34:3)

    2. நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோம்

    3. கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் (சங் 34:8)

    4. கர்த்தருக்குப் பயந்திருங்கள் (சங் 34:9)

    5. பிள்ளைகளே, வந்து எனக்குச் செவி கொடுங்கள் (சங் 34:11)

    6. உன்நாவைப்  பொல்லாப்புக்கும்,   உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்  (சங் 34:13)

    7. தீமையை விட்டு விலகுங்கள் (சங் 34:14)

    8. நன்மை செய்

    9. சமாதானத்தைத் தேடு

    10. சமாதானத்தைத் தொடர்ந்து கொள்

நான் கர்த்தரைத் தேடினேன்

நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்  (சங் 34:4).   


கர்த்தர் நம்முடைய ஜெபத்தைக்கேட்டு அதற்குப் பதில் கொடுக்கிறவர். தாவீது கர்த்தரைத் தேடினார். கர்த்தருடைய  சமுகத்தில் விண்ணப்பம்பண்ணினார். கர்த்தர் தாவீதுக்குச் செவிகொடுத்தார். தாவீதுக்கு ஆபத்துக்களும், நெருக்கங்களும் உண்டானபோது,  அவர் கர்த்தருடைய உதவிக்காக அவரைத் தேடினார். தனக்கு உதவிபுரியுமாறு தாவீது கர்த்தரிடத்தில் கெஞ்சி விண்ணப்பம்பண்ணினார். கர்த்தர்  தாவீதின் விண்ணப்பத்திற்குச் செவிகொடுத்தார். தாவீதின் ஜெபத்திற்கு கர்த்தர் உடனடியாக பிரதியுத்தரம் கொடுத்தார். கர்த்தர் தாவீதை அவருடைய எல்லா பயத்திற்கும் நீங்கலாக்கிவிட்டார். 


தனக்கு மரணம் வந்துவிடுமோ என்னும் பயம் தாவீதினிடத்திலிருந்தது. மரணபயத்தினால் அவருடைய இருதயம் சோர்வடைந்தது.  மனம் கலக்கமடைந்தது. இதனால் உண்டாகும் எல்லா பயத்திற்கும் கர்த்தர் தாவீதை நீங்கலாக்கி இரட்சித்தார். 


கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு  கர்த்தர் அநேக நன்மைகளைச் செய்கிறார்.  கர்த்தருடைய பராமரிப்பு முதலில் நமக்காக கிரியை செய்யும்.  இதன் பின்பு கர்த்தருடைய கிருபை நமக்குள் கிரியை நடப்பிக்கும். கர்த்தருடைய கிருபை நமக்குக் கிடைக்கும்போது  நம்மிடத்திலுள்ள பயங்களெல்லாம் நம்மை விட்டு நீங்கிப்போகும். நம்முடைய ஆவியில் தெளிவு உண்டாகும். குழப்பம் நம்மை விட்டு நீங்கிவிடும். நம்முடைய ஆவியிலும் ஆத்துமாவிலும் அமைதி  உண்டாகும். 

கர்த்தருடைய ஆசீர்வாதங்கள்

    1. கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார் (சங் 34:4)

    2. எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்

    3. அவரை நோக்கிப் பார்த்த அவருடைய ஜனங்கள் பிரகாசமடைந்தார்கள் (சங் 34:5)

    4. அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை

    5. கர்த்தர், இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்      (சங் 34:6-7)

    6. கர்த்தருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. அவர்களுடைய தேவைகளை எல்லாம் சந்திப்பார். (சங் 34:9-10; சங் 23:1; சங் 84:11; யோவான் 15:7)

    7. தீமை செய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப் போகப்பண்ணுவார் (சங் 34:16)

    8. நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங் 34:18)

    9. கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்  (சங் 34:22)

    10. அவரை நம்புகிற ஒருவர் மேலும் குற்றஞ்சுமராது. அவர்களை ஆசீர்வதிக்கிறார். 

கர்த்தர் நம்மை நீங்கலாக்கிவிடும் பயங்கள்

    1. மனுஷபயம் (ஆதி 15:1; லூக்கா 12:5; எபி 13:6) - நாம் கர்த்தருக்குப் பயப்பட வேண்டும். மனுஷருக்குப் பயப்படக்கூடாது.

    2. மரணம் (ஆதி 21:17; ஆதி 35:17; எபி 2:15)

    3. எதிர்காலம் (ஆதி 46:3; ஆதி 50:19-21)

    4. ஆபத்து (யாத் 14:13)


    5. விக்கிரகங்கள் (நியா 6:10;  2இராஜா 17:35-38)

    6. சொப்பனங்கள் (யோபு 4:14-16)

    7. தீமை (சங் 23:4; நீதி 1:33)

    8. யுத்தம் (சங் 27:3)

    9. தேவையற்ற பயம் (சங் 53:5)

    10. சத்துருக்கள் (சங் 118:6)

    11. தண்டனை (நீதி 1:26-27)

    12. இராக்காலம் (உன் 3:8)

    13. பிசாசுகள் (மத் 14:26)

    14. பயமுள்ள ஆவி (2தீமோ 1:6-7)

கர்த்தரை நோக்கிப் பார்த்து பிரகாசமடைந்தார்கள்

அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை  (சங் 34:5). 


தாவீதைப்போல இன்னும் அநேக பரிசுத்தவான்கள் கர்த்தரை விசுவாசத்திலும் ஜெபத்திலும் நோக்கிப் பார்த்தார்கள். அப்போது  அவர்கள் பிரகாசமடைந்தார்கள். கர்த்தரை நோக்கிப் பார்க்கும்போது அவர்களுடைய ஆத்துமா புதுப்பிக்கப்பட்டது. அவர்களுடைய ஆவிக்கும் ஆத்துமாவுக்கும் ஆறுதல் உண்டாயிற்று. 


அன்னாள் கர்த்தருடைய சமுகத்தில் ஜெபித்தாள். அன்னாள் கர்த்தருடைய சமுகத்தில், ""உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே  தயவு கிடைக்கக்கடவது'' என்று சொல்லி ஜெபித்தாள். பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய் போஜனம் செய்தாள். அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை (1சாமு 1:18). 


கர்த்தரை நோக்கிப் பார்க்கிறவர்களுக்கு மிகுந்த ஆசீர்வாதம் கிடைக்கும். நம்முடைய ஜீவியத்தில் நாம் மனுஷரையோ,           நம்முடைய சூழ்நிலைகளையோ, நம்முடைய பிரச்சனைகளையோ நோக்கிப் பார்ப்பதற்குப் பதிலாக, கர்த்தரை நோக்கிப் பார்ப்பதே நமக்கு நல்லது.  கர்த்தரை நோக்கிப் பார்க்கிறவர்களின் ஆவிக்குரிய ஜீவியம் ஜெயமுள்ளதாயிருக்கும். கர்த்தரை நோக்கிப் பார்க்கிறவர்களின் முகங்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. கர்த்தரை நோக்கிப் பார்க்கிற பரிசுத்தவான்கள் பிரகாசமடைகிறார்கள். 

எப்படி நோக்கிப்பார்ப்பது? அதன் விளைவு என்ன?

    1. நம்மையே நோக்கிப் பார்த்தால் துன்பம் உண்டாகும் (சங் 77:1)

    2. சுற்றுமுற்றும் பார்த்தால் கவனம் சிதறும்  (சங் 73:3)

    3. கர்த்தரை  எதிர்பார்ப்போடு நோக்கிப்பார்த்தால் ஆசீர்வாதம் உண்டாகும் (சங் 34:5; சங் 121:1)

இந்த ஏழை கூப்பிட்டான்

இந்த ஏழை கூப்பிட்டான்; கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்  (சங் 34:6). 


தாவீது தனிமனிதனாகயிருக்கிறார். தாவீதைச் சுற்றிலும் சத்துருக்கள் அநேகராயிருக்கிறார்கள். தாவீதோடு கர்த்தர் கூடயிருக்கிறார்.  தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார். தாவீதுக்கு உதவி செய்ய ஒருவருமில்லை. இப்போது அவர் தன் ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில்  தான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதை, ""இந்த ஏழை கூப்பிட்டான்'' என்று சொல்லுகிறார். 


தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, கர்த்தர் அவருடைய கூப்பிடுதலைக் கேட்கிறார். தாவீதை அவருடைய  இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சிக்கிறார். தாவீதுக்கு வனாந்தரத்திலே மரியாதையுமில்லை மகிமையுமில்லை. அவர் ஒரு சாதாரண நபராகயிருக்கிறார். ஏழையாகயிருக்கிறார்.  ஆனாலும் தேவனுடைய கிருபாசனத்தண்டையிலே கிட்டிச் சேருகிற சிலாக்கியம் தாவீதுக்கும் கிடைத்திருக்கிறது. 


நம்முடைய சுயபக்தியினாலோ, சுயபுத்தியினாலோ, சுயபராக்கிரமத்தினாலோ  நம்மால் கர்த்தருடைய சமுகத்திலே கிட்டிச் சேரமுடியாது. கர்த்தருடைய கிருபையே நம்மை அவருடைய   சமுகத்திற்கு முன்பாக தகுதிப்படுத்துகிறது. நாம் கர்த்தருடைய கிருபாசனத்தண்டையில் கிட்டிச் சேருவது  நம்முடைய தகுதியினால் அல்ல. இது தேவனுடைய கிருபையினால் மாத்திரமே ஆயிற்று.


தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, கர்த்தர் தாவீதின் கூப்பிடுதலைக் கேட்கிறார். அவருடைய விண்ணப்பங்களுக்கு கர்த்தர் செவிகொடுத்து கேட்கிறார். கர்த்தர் தாவீதின் பிரச்சனையை அறிந்திருக்கிறார்.  அவருக்கு வந்திருக்கிற இடுக்கண்களையெல்லாம் கர்த்தர் அறிந்திருக்கிறார். கர்த்தர் தாவீதின் கூப்பிடுதலைக் கேட்டு, அவரை அவருடைய இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சிக்கிறார். தாவீதின் ஜெபத்திற்கு கர்த்தர்  சாதகமான பதிலைக் கொடுக்கிறார். கர்த்தருடைய சமுகத்தில் தாவீதுக்கு தேவகிருபை கிடைத்திருக்கிறது. தேவனுடைய இரக்கமும் அநுக்கிரகமும் தாவீதுக்குக் கிடைத்திருக்கிறது. 

கர்த்தர் நல்லவர்

கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். கர்த்தர்       நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை (சங் 34:7-9).  


கர்த்தருடைய தூதனானவர்  கர்த்தருக்குப் பயந்தவர்களை, பாதுகாக்கிறார்.  அவர்களை சூழ பாளையமிறங்குகிறார். அவர்களுடைய சத்துருக்களிடமிருந்து அவர்களை விடுவிக்கிறார். நாம் கர்த்தருடைய சமுகத்தில் அவரைத் துதிக்கும்போது, அவர் நம்மை  சத்துருக்களிடமிருந்து விடுவிப்பதை நினைத்தும், அவரைத் துதிக்கவேண்டும்.


கர்த்தர்  நல்லவர். அவர் நல்லவர் என்பதை எல்லோரும் ருசித்துப் பார்க்க முடியும்.  கர்த்தர் கிருபை மிகுந்தவர். தம்முடைய தெய்வீக பராமரிப்பினால் சர்வசிருஷ்டிகளையும் போஷித்து, பாதுகாத்து, பராமரித்து வழிநடத்துகிறார்.  தாவீது இதை உணர்ந்தவராக, ""கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்'' என்று எல்லோருக்கும் சொல்லுகிறார். கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.  


கர்த்தருடைய பரிசுத்தவான்களெல்லோரும்  கர்த்தருக்குப் பயந்து ஜீவிக்கவேண்டும். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்கு ஒரு குறைவும் இல்லை. கர்த்தருக்குப் பயப்படுதல் என்னும் வார்த்தைக்கு, கர்த்தரை பயபக்தியோடு  துதித்து ஆராதனை செய்தல் என்பது பொருளாகும். நாம் கர்த்தருக்குப் பயந்து அவருடைய சமுகத்தைவிட்டு ஓடி ஒளிந்துவிடக்கூடாது. கர்த்தருடைய சமுகத்தில் நாம் பயபக்தியோடு வரவேண்டும். அவரை பயபக்தியோடு துதிக்கவேண்டும்.  கர்த்தருக்குப் பயந்து அவரைத் தேடவேண்டும். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது.

சங்கீதம் 34-இல் கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள்

    1. கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார் (சங் 34:7)

    2. கர்த்தருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை (சங் 34:9;          சங் 84:11; லூக்கா 11:9-11)

    3. கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது (சங் 34:10;  மத் 7:11)

    4. கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது  (சங் 34:10,15,17; யோவான் 15:7)

    5. கர்த்தருடைய  முகம், தீமை செய்கிறவர்களுக்கு விரோதமாயிருக்கிறது    (சங் 34:16)

    6. நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார்  (சங் 34:17; சங் 34:6)

    7. நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங் 34:18)

    8. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிக்கிறார்            (சங் 34:19)

    9. தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள் (சங் 34:21)

    10. கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது (சங் 34:22)

ஒரு நன்மையும் குறைவுபடாது

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது  (சங் 34:10). 


நாம் கர்த்தருக்குப் பயந்து அவரைத் தேடவேண்டுமென்று தாவீது நமக்கு ஆலோசனை சொல்லுகிறார். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்கு ஒரு குறைவுமில்லை என்று தாவீது நமக்கு கர்த்தருடைய வாக்குத்தத்தத்தைச் சொல்லுகிறார். நாம் கர்த்தருக்குப் பயப்படும்போது தேவனுடைய கிருபை நமக்குப் போதுமான அளவு கிடைக்கும். நம்முடைய ஜீவியத்தில் ஆவிக்குரிய திருப்தி உண்டாகும். 


அப்போஸ்தலர் பவுலின் சரீரத்தில் ஒரு முள் இருந்தது. அது தன்னைவிட்டு நீங்கும்படி பவுல் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டார். கர்த்தர் பவுலிடம், ""என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்'' என்று சொன்னார் (2கொரி 12:9). சங்கீதக்காரர் கர்த்தருடைய கிருபையைப்பற்றிச் சொல்லும்போது, ""தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர். கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்'' (சங் 84:11) என்று சொல்லுகிறார். 


கர்த்தருடைய கிருபை நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கும் போதுமானது. நம்முடைய உலகப்பிரகாரமான ஜீவியத்திற்கும் போதுமானது.  நாம் இப்பிரபஞ்சத்தில் ஜீவிக்கும் வரையிலும் நமக்கு சரீரப்பிரகாரமான தேவைகள் உண்டு. இவையெல்லாவற்றையும் கர்த்தர் தம்முடைய கிருபையினால் நமக்குக் கொடுக்கிறார். நம்முடைய சரீரத்திற்குத் தேவையான எல்லா நன்மைகளையும் நாம் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்கிறோம்.  


கர்த்தரே நம்முடைய பிதாவாகயிருக்கிறார். தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு  நல்ல ஈவுகளைக் கொடுப்பார். நம்முடைய ஆவிக்குரிய பிதாவாகிய கர்த்தரோ நமக்கு நன்மையான ஈவுகளைக் கொடுப்பது அதிக நிச்சயம். கர்த்தர் நம்மைப் போஷிப்பார்.  கர்த்தர் நமக்கு ஆகாரம் கொடுப்பார். பருகுவதற்கு தண்ணீர் கொடுத்து நம்முடைய தாகத்தைத் தீர்த்து வைப்பார். நம்மை குறைவில்லாமல் பார்த்துக்கொள்வார். 


காட்டிலுள்ள சிங்கக்குட்டிகள்கூட தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்.  கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது. இது நமக்கு ஆறுதலான வார்த்தை. தேவன் தம்முடைய தெய்வீக ஞானத்தினால் நம்முடைய தேவைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார்.  நமக்கு நன்மையானது எது என்று கர்த்தருக்குத் தெரியும். கர்த்தர் நமக்கு நன்மையான ஈவுகளைக் கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கிறார். 


சில சமயங்களில்  நாம் கர்த்தரிடத்தில் கேட்பதை அவர் நமக்குக் கொடுக்கமாட்டார்.  இதனால் அவர் நம்மீது அன்பாயில்லை என்பது பொருளல்ல. நாம் கேட்பது  நமக்குத் தேவையானதல்ல என்று கர்த்தர் தம்முடைய ஞானத்தினால் தீர்மானிக்கிறார். நாம் கர்த்தருடைய சமுகத்தில் ஒன்றைக் கேட்கும்போது, கர்த்தர் நமக்கு அதைக் கொடுக்கவில்லையென்றால், அந்தக் காரியம் நம்மிடத்தில் இல்லாவிட்டாலும் நமக்குள்  பூரண திருப்தி உண்டாயிருக்கும். கர்த்தர் நமக்கு எதைக் கொடுத்திருக்கிறாரோ அதில் திருப்தியடையவேண்டும். கர்த்தருக்குச் சித்தமில்லாத காரியத்தின்மீது நாம் ஆசைப்படக்கூடாது. கர்த்தருக்குப் பிரியமில்லாத காரியம் நமக்கு நன்மையாயிராது. 


மோசே கர்த்தருடைய சமுகத்தில்  ஜெபம்பண்ணினார். கர்த்தரோ மோசே கேட்டதை அவருக்குக் கொடுக்கவில்லை.


""அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன் யார்? நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன். கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னோடே பேசவேண்டாம்.   நீ பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை. நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பான் என்றார்'' (உபா 3:23-28).


அப்போஸ்தலர் பவுல் கர்த்தருக்காக நேர்த்தியாய் ஊழியம் செய்தார்.  அவருடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் அவருக்குப் பல அனுபவங்கள் உண்டாயிற்று.  சரீரப்பிரகாரமாக அவர் பல சமயங்களில் நிறைவான ஆசீர்வாதத்தோடு இருந்தார். சில சமயங்களில் பவுலுக்குக் குறைச்சலுண்டாயிற்று. பவுல்  எந்த நிலமையிலிருந்தாலும் மனரம்மியமாய் இருக்கக்கற்றுக்கொண்டார். 


பவுல் இயேசுகிறிஸ்துவின் சமுகத்தில் எப்போதும் திருப்தியோடிருக்கிறார். ""எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்தவாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த ப-யுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்'' (பிலி 4:18) என்று  பவுல் பிலிப்பியருக்கு எழுதுகிறார்.

பிள்ளைகளே

பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன் (சங் 34:11).  


முப்பத்து நான்காவது சங்கீதத்தின் பின்பகுதியில் தாவீது சிறுபிள்ளைகளுக்குப் போதகம்பண்ணுகிறார். தாவீது இந்த சங்கீதத்தை எழுதியபோது, அவர் பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிறார்.  இந்த சூழ்நிலையில் தாவீதின் பிள்ளைகள் அவரோடு கூடயிருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தாவீதோடு அவருடைய ஊழியக்காரர்கள் கூடயிருக்கிறார்கள். தாவீது ஒருவேளை தன்னுடைய ஊழியக்காரர்களின் பிள்ளைகளுக்கு, இந்த உபதேசத்தைச் சொல்லியிருக்கவேண்டுமென்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். தாவீது  அவர்களெல்லோரையும் பொதுவாக ""பிள்ளைகளே'' என்று அழைக்கிறார். 


சிறுபிள்ளைகள் தங்களுடைய விளையாட்டுக்களை விட்டுவிட்டு, தங்களிடத்திலுள்ள விளையாட்டுப் பொருட்களையெல்லாம் ஓரமாக  ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் தாவீதினிடத்தில் வரவேண்டும். தாவீதின் உபதேசத்திற்குச் செவிகொடுக்கவேண்டும். ""பிள்ளைகளே வந்து  எனக்குச் செவிகொடுங்கள்'' என்று தாவீது சொல்லுகிறார். தாவீது அவர்களுக்குச் சொல்லுவதை பிள்ளைகள் கவனமாய்க் கேட்கவேண்டும். கேட்டால் மாத்திரம் போதாது,  தாங்கள் கேட்ட உபதேசத்திற்கு அவர்கள் கீழ்ப்படியவும் வேண்டும். 


கர்த்தருக்குப் பயப்படுதலைப்பற்றி தாவீது பிள்ளைகளுக்கு உபதேசம்பண்ணுகிறார். கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்.  சிறுபிள்ளைகளுக்கு உலகப்பிரகாரமான ஞானத்தைவிட, தேவனுடைய ஞானம் அதிகமாய்த் தேவைப்படுகிறது. கர்த்தருக்குப் பயப்படும்போது அவர்கள் கர்த்தருடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவார்கள்.  சிறுபிராயத்திலேயே அவர்கள் கர்த்தரைத் துதிக்க கற்றுக்கொள்வார்கள். 

மனுஷனுடைய விருப்பம்

நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்? உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள். தீமையை விட்டு விலகி,       நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத்தொடர்ந்துகொள் (சங் 34:12-14). 


எல்லா மனுஷரும் சந்தோஷமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். நன்மையைக் காணவேண்டுமென்றும், நீடித்த நாட்களாய் ஜீவிக்க வேண்டுமென்றும் விரும்புகிறார்கள். இதுவே மனுஷருடைய அபேட்சை. இதுவே  மனுஷருடைய இருதயத்தின் விருப்பம். இந்தப் பிரபஞ்சத்திலும், இனிமேல் நாம் போகப்போகிற பரலோகத்திலும் சந்தோஷமாயிருப்பதற்கு ஒரே ஒரு வழி மாத்திரமே இருக்கிறது. 


தாவீது அந்த வழியை பிள்ளைகளுக்குப் போதிக்கிறார். அவையாவன :  1. நம்முடைய நாவை பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டும். 2. நம்முடைய உதடுகளை கபட்டு வசனப்புக்கு  விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டும். 3. தீமையை விட்டும், தீயகிரியைகளை விட்டும், துன்மார்க்கரைவிட்டும் விலகி ஜீவிக்கவேண்டும்.  4. நன்மை செய்யவேண்டும். 5. சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்ளவேண்டும். 


நம்முடைய நாவை நாம் ஆளுகை செய்யவேண்டும். கடிவாளம் போட்டு நம்முடைய நாவை அடக்கவேண்டும். நம்முடைய  பேச்சுக்களில் எப்போதுமே கவனமும், தெளிவும் இருக்கவேண்டும். தாறுமாறாகப் பேசிவிடக்கூடாது. குழப்பத்தோடு பேசக்கூடாது. நம்முடைய பேச்சு தேவனுடைய நாமத்தைத் தூஷித்துவிடக்கூடாது. நம்முடைய       பேச்சின் மூலமாய் பிறருக்கு நன்மை மாத்திரமே உண்டாகவேண்டும். நம்முடைய நாவை பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்ளும்போது நமக்கு சந்தோஷம் உண்டாகும். 


நாம்  இருமனமுள்ளவர்களாயிருக்கக்கூடாது. தெளிவாகப் பேசவேண்டும். உள்ளதை உள்ளது என்றும், இல்லாததை இல்லாதது என்றும் தெளிவாகச் சொல்லவேண்டும். இரு நாக்கோடு  பேசக்கூடாது. நம்முடைய உதடுகளை கபட்டு வசனப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நம்முடைய ஜீவியத்தில் மெய்யான சந்தோஷம் நிரம்பியிருக்கும்.  


நம்முடைய செய்கைகளைக் குறித்தும் நாம் மிகுந்த கவனமாயிருக்கவேண்டும். தீமையை விட்டு விலகவேண்டும். தீயகாரியங்கள் எதையும் நாம் செய்யக்கூடாது. தீயகாரியங்களை செய்கிறவர்களோடு நாம் ஐக்கியம் வைத்திருக்கக்கூடாது.  நல்லோரோடு பழகவேண்டும். அப்போதுதான் நம்முடைய ஜீவியத்தில் சந்தோஷம் உண்டாயிருக்கும்.  


இந்த உலகத்தில் நாம் தீமை செய்யாமல் இருந்தால் மாத்திரம் போதாது. நன்மையும் செய்யவேண்டும். பிறருக்கு உபகாரம் செய்யவேண்டும். யாருக்கும் உபத்திரவம் பண்ணிவிடக்கூடாது.  நம்முடைய பேச்சு எல்லோருக்கும் பிரயோஜனமுள்ளதாயிருக்கவேண்டும். ஒரு உன்னதமான நோக்கத்தோடு ஜீவிக்கவேண்டும். வாழ்க்கையில் எந்தவித குறிக்கோளும் இல்லாமல், ஏனோதானோவென்று, நிலையில்லாமல் ஜீவிக்கக்கூடாது. அப்போதுதான் நம்முடைய ஜீவியத்தில் சந்தோஷம் உண்டாயிருக்கும். 


நாம் சமாதானத்தைத் தேடி அதைத் தொடர்ந்து கொள்ளவேண்டும். எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருக்கும்படி நாடவேண்டும். சமாதானத்தைப் பெற்றுக்கொள்வதற்காக,  நம்மை நாமே வெறுக்க வேண்டியது வரலாம். நம்முடைய சுயவிருப்பங்களையும், சுயஆசைகளையும் வெறுக்க வேண்டியது வரலாம். பல காரியங்களை தியாகமாய் விட்டு விடவேண்டியதும் வரலாம்.  நாம் எதைச் செய்தாலும் சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்ளும்போது, நம்முடைய ஜீவியத்தில் சந்தோஷம் உண்டாயிருக்கும். 

நீண்ட ஆயுசின் இரகசியங்கள்

    1. பயத்திலிருந்து விடுபடவேண்டும்  (சங் 34:4)

    2. தேவனை நோக்கிப்பார்த்து பிரகாசமடைதல்  (சங் 34:5)

    3. நமது முகங்கள் வெட்கப்படக்கூடாது

    4. இடுக்கண்களிலிருந்து விடுபடல் (சங் 34:6)

    5. தெய்வீக விடுதலை (சங் 34:7)

    6. கர்த்தருடைய ஜீவனை ருசிபார்க்க வேண்டும் (சங் 34:8)

    7. கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தல்

    8. தேவனுக்கு பயப்படுதல் (சங் 34:7-9)

    9.  குறைவு இருக்கக்கூடாது (சங் 34:9-10)

    10. முதலில் கர்த்தரைத் தேடவேண்டும் (சங் 34:10,15; மத் 6:33) 

    11. கர்த்தருடைய போதனையைக் கைகொள்ள வேண்டும் (சங் 34:11; 2தீமோ 3:15)

    12. நாவைக் கட்டுப்படுத்த வேண்டும் (சங் 34:12-13)

    13. தீமையை விட்டு விலகிட வேணடும் (சங் 34:14-16)

    14. நன்மை செய்யவேண்டும்  (சங் 34:14)

    15. சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்து கொள்ளவேண்டும்

    16. நொருங்குண்ட இருதயமும் நருங்குண்ட ஆவியும் வேண்டும்     (சங் 34:18)

    17. ஆத்துமா இரட்சிப்பு பெறவேண்டும் (சங் 34:22)

    18. கவலையில்லாமல் ஜீவிக்க வேண்டும்

பொல்லாப்புப் பேசக்கூடாது

    1.  இதற்கு எதிரான பிரமாணம் (யாத் 22:28;  எபே 4:25-31)

    2. ஆயுசு காலத்தை சுருக்கிவிடும் (சங் 34:13; 1பேதுரு 3:9-10)

    3.  நியாயத்தீர்ப்பு வரும் (சங் 12:3-4; மத் 12:36-37; 1கொரி 6:10)

நீதிமான்

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது (சங் 34:15).


நீதிமான்களெல்லோருக்கும் தேவனுடைய  விசேஷித்த கிருபையும், விசேஷித்த ஆசீர்வாதமும், விசேஷித்த அநுக்கிரகமும், விசேஷித்த பாதுகாப்பும் உண்டாயிருக்கும். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. கர்த்தர் நீதிமான்களை நீதியின் பாதையிலே வழிநடத்துகிறார். அவர்களுக்கு ஒரு தீங்கும் வந்துவிடாதவாறு  அவர்களைப் பாதுகாக்கிறார். தீமைகளுக்கும் ஆபத்துக்களுக்கும் விலக்கிப் பாதுகாத்துக்கொள்கிறார். 


நீதிமான்கள் கர்த்தருடைய சமுகத்தில் தங்கள் வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் ஏறெடுக்கும்போது, கர்த்தருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. கர்த்தர் நீதிமான்களோடு ஐக்கியமாயிருக்கிறார்.  பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு எப்போதும் கூடவே இருக்கவேண்டுமென்று விரும்புவார்கள். தங்களுடைய பிள்ளைகள் தங்கள் கண் பார்வையிலேயே இருக்கவேண்டுமென்று ஆசைப்படுவார்கள். கர்த்தர் நம்மீதும் பிரியமாயிருக்கிறார். ஆகையினால்தான் கர்த்தருடைய கண்கள் நம்மேல் எப்போதும் நோக்கமாயிருக்கிறது. 

தீமை செய்கிறவர்கள்

தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது  (சங் 34:16). 


நமக்கு முன்பாக மரணமும் ஜீவனும் வைக்கப்பட்டிருக்கிறது.  நன்மையும் தீமையும் வைக்கப்பட்டிருக்கிறது. ஆசீர்வாதமும் சாபமும் வைக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நமக்கு முன்பாக இருக்கும்போது  நாம் எதைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். நாம் ஜீவனையே தெரிந்தெடுத்து, கர்த்தருக்கு முன்பாக சந்தோஷமாயும், சமாதானமாயும் ஜீவிக்கவேண்டும். 


""உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள். துன்மார்க்கனுக்கு  ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்'' (ஏசா 3:10,11).


தீமை செய்கிறவர்களுக்கு சாபம் வரும். சாபம் அவர்களோடு எப்போதும் தங்கியிருக்கும். கர்த்தர்  தீமை செய்கிறவர்களுடைய பெயரை பூமியிலிராமல் அற்றுப்போகப்பண்ணுவார். இதன் நிமித்தமாய் கர்த்தருடைய முகம் அவர்களுக்கு  எப்போதும் விரோதமாயிருக்கிறது. தீமை செய்கிறவர்கள் தங்களுடைய சொந்த வழிகளில் தங்களைத் தாங்களே ஆசீர்வதித்துக்கொள்ளலாம்.  உலகப்பிரகாரமான நன்மைகள் அவர்களிடத்தில் ஓரளவு காணப்படலாம். ஆனாலும் அவர்களுடைய பெயர் பூமியிலிராமல் அற்றுப்போகும். தீமை துன்மார்க்கனைக் கொல்லும் (சங் 34:21). 


துன்மார்க்கரின் மரணம் பரிதாபமாயிருக்கும்.  அவர்களுக்கு கொடிய மரணமுண்டாகும். அவர்கள் வாழ்ந்திருந்து மரித்தாலும், தாழ்ந்து போய் மரித்தாலும், அவர்களுடைய மரணம் துர்மரணமாகவே இருக்கும். அவர்கள் மரித்துப்போன பின்பு அவர்களுடைய பெயர் பூமியில் நிலைத்திராமல் அற்றுப்போகும். அவர்களுடைய மரணத்திற்கு  அவர்களுடைய தீமையே காரணம். அவர்களுடைய தீமை அவர்களைக் கொன்றுபோடுகிறது.  


நீதிமானுக்கும் அநேக துன்பங்கள் வரும். ஆனால் அந்தத் துன்பங்கள் நீதிமானை ஒன்றும் செய்யாது. கர்த்தர்  அவைகளெல்லாவற்றிலும் நின்று நீதிமானை விடுவிப்பார். 


துன்மார்க்கனுக்கு கொஞ்சம் துன்பம் வந்தாலும் அவனுடைய தீமை அவனைக் கொன்றுபோடும்.  கர்த்தர் அவனைப் பாதுகாக்கமாட்டார். கர்த்தருடைய முகம் துன்மார்க்கனுக்கு விரோதமாயிருக்கிறது.  சிறிய துன்பம் வந்தால்கூட துன்மார்க்கனால் தாங்கிக்கொள்ள முடியாது. பாவத்தின் சம்பளம் மரணம். அவனுடைய பாவமே அவனைக் கொன்றுபோடும். 


துன்மார்க்கனுக்கு வரும் துன்பத்தில் சாபம் உள்ளது. அதனால்தான் துன்மார்க்கனுக்கு அழிவு உண்டாகிறது. நீதிமானுக்கு வரும் துன்பங்களிலோ கர்த்தருடைய ஆசீர்வாதமுள்ளது. இந்தத் துன்பங்கள் நீதிமானுக்கு ஒன்றும் செய்யாது.  நீதிமானுக்கு வரும் துன்பங்கள், அவருக்குத் தீங்கு செய்வதற்குப் பதிலாக, நன்மை செய்யும். நமக்குத் துன்பம் வந்தாலும், வராவிட்டாலும், கர்த்தருடைய கண்கள் நம்மேல் நோக்கமாயிருக்கிறது. கர்த்தருடைய செவிகள் நம்முடைய கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. நமக்கு வரும் எல்லா துன்பங்களிலிருந்தும்  கர்த்தர் நம்மை விடுவிப்பார். நம்முடைய எலும்புகளையெல்லாம் கர்த்தர் காப்பாற்றுகிறார். 

கர்த்தர் சமீபமாயிருக்கிறார்

நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை  அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்          (சங் 34:17,18). 


நீதிமான்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்.  தங்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், நீதிமான்கள் தங்களுடைய பிரச்சனைகளை மனுஷரிடம் சொல்லி புலம்பமாட்டார்கள்.  கர்த்தரிடம் மாத்திரமே முறையிடுவார்கள். கர்த்தரோ நீதிமான்கள் தம்மைக் கூப்பிடும்போது, அவர்களுடைய கூப்பிடுதலைக் கேட்கிறார்.  ஒரு சிறு குழந்தை அழும்போது, அந்தக் குழந்தையின் தாய் அழுகை சத்தத்தைக்கேட்டு, அந்த அழுகையை அமர்த்துவதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வாள்.  தாயின் கவனமெல்லாம் தன்னுடைய குழந்தையின்மீதே இருக்கும். பிள்ளையைப் பெற்ற தாய்க்கு மாத்திரமே தன்னுடைய பிள்ளையின்மீது பாசம் இருக்கும். மற்றவர்கள்  அந்தப் பிள்ளையை கவனிக்கமாட்டார்கள். அந்தப் பிள்ளை அழும்போது அதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய முன்வரமாட்டார்கள். 


கர்த்தரை நோக்கி நாம் கூப்பிடும்போது,  கர்த்தர் நம்முடைய கூப்பிடுதலைக் கேட்டு, நம்முடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நம்மை  நீங்கலாக்கிவிடுகிறார். நம்முடைய கூப்பிடுதலைக் கேட்பது மாத்திரமல்ல, நாம் எதற்காக கூப்பிடுகிறோமோ, அதை நமக்கு நிறைவேற்றி தருகிறார்.  நாம் உபத்திரவப்படும்போது கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டால், கர்த்தர் நம்முடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நம்மை நீங்கிலாக்கி விடுகிறார்.


கர்த்தர் நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருக்கிறார். நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். கர்த்தர் நமக்கு ஆலோசனை சொல்லுவதற்காகவும், நம்மை வழிநடத்துவதற்காகவும், நம்மைப் பாதுகாப்பதற்காகவும், நமக்கு நன்மை செய்வதற்காகவும் நமக்கு சமீபமாயிருக்கிறார். அவர் நல்ல நோக்கத்தோடு நமக்கு அருகாமையிலிருக்கிறார். நம்முடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றவேண்டுமென்பதற்காக கர்த்தர்  நமக்கு சமீபமாயிருக்கிறார். நம்மை இரட்சிப்பதற்காக கர்த்தர் நமக்கு சமீபமாயிருக்கிறார். 

பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள நொறுங்குண்ட காரியங்கள்

    1. இருதயம் (சங் 34:18)

    2. ஊற்றுக்கண் (ஆதி 7:11)

    3. விதை நசுங்கியவன் (லேவி 21:20)

    4. கற்பனை (எண் 15:31)

    5. கப்பல்கள் (1இராஜா 22:48)

    6. கர்த்தருடைய ஆலயம்  (2நாளா 24:7)

    7. சரீரங்கள் (2நாளா 25:12)

    8. பலிபீடம் (2நாளா 34:7)

    9. அலங்கம் (நெகே 1:3)

    10. பற்கள் (யோபு 4:10)

    11. தோல் (யோபு 7:5)

    12. சிந்தனைகள் (யோபு 17:11)

    13. அக்கிரமம் (யோபு 24:20)

    14. புயம் (யோபு 31:22)

    15. அம்பு (சங் 18:34)

    16. ஆவி (சங் 51:17; நீதி 15:13; நீதி 17:22) 

    17. உடன்படிக்கைகள் (சங் 55:20)

    18. பூமி (சங் 60:2)

    19. அடைப்பு (சங் 80:12)

    20. கதவுகள் (சங் 107:16)

    21. ஆழங்கள் (நீதி 3:20)

    22. பாதரட்சை (ஏசா 5:27)

    23. தொட்டிகள் (எரே 2:13)

    24. பட்டணங்கள் (எரே 4:26)

    25. விக்கிரகங்கள் (எரே 50:2)

    26. ராஜ்யங்கள் (தானி 2:35,42; தானி 11:4)

    27. களஞ்சியங்கள் (யோவே 1:17)  

    28. துணிக்கைகள் (மத் 15:37) 

    29. விலங்குகள் (மாற்கு 5:4)

    30. அப்பம் (அப் 20:11; 2கொரி. 11:24)

    31. ஓய்வுநாள் (யோவான் 5:18)

    32. நியாயப்பிரமாணம் (யோவான் 7:23)

    33. காலெலும்புகள் (யோவான் 19:31)

    34. கிளைகள் (ரோமர் 11:17-19)

    35. பிரிவினையாகிய நடுச்சுவர் (எபே 2:14)

நீதிமானுடைய எலும்புகள்

நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை (சங் 34:19,20).


 கர்த்தர் நீதிமானுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார். அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. கர்த்தர் நம்முடைய ஆத்துமாவை மாத்திரமல்ல, நம்முடைய சரீரத்தையும் காப்பாற்றுகிறார்.  நம்முடைய பொதுவான சரீரத்தை மாத்திரமல்ல, நம்முடைய சரீரத்திலுள்ள ஒவ்வொரு அவயவத்தையும், ஒவ்வொரு எலும்பையும் காப்பாற்றுகிறார். நம்முடைய எலும்புகள் முறிக்கப்படுவதற்கு கர்த்தர் அனுமதி கொடுப்பதில்லை. நம்முடைய இருதயம் நொறுங்குண்டாயிருக்கும்போது நம்முடைய எலும்புகள் முறிக்கப்படாமலிருக்கும். 


தாவீது கர்த்தருடைய அன்பை ருசித்துப்பார்த்திருக்கிறார்.  தாவீதின் இருதயம் நொறுங்குண்ட இருதயம். தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணும்போது, ""நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும். அப்பொழுது  நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்'' (சங் 51:8), ""தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான். தேவனே, நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்'' (சங் 51:17). 


நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்.  தாவீதுக்கு அநேக துன்பங்கள் உண்டாயிற்று. ""கர்த்தாவே தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்'' (சங் 132:1) என்று தாவீது  கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்கிறார். அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள்  அநேகமாயிருந்தாலும், கர்த்தர் அவைகள் எல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.  


நீதிமானுடைய ஆவி  நருங்குண்டாதாயிருக்கும். நருங்குண்ட ஆவியுள்ளவர்களை கர்த்தர் இரட்சிக்கிறார். நீதிமான்களுக்கு துன்பங்கள் வரலாம். அந்தத் துன்பங்கள் நீதிமானை அழித்துப்போடாது.  நீதிமான்களுக்கு உபத்திரவங்களும், பாடுகளும், வேதனைகளும், நெருக்கங்களும் வரலாம். ஆனாலும் இவை எதுவும் நீதிமானை அழித்துவிடாது. 

துன்பத்தைக் குறித்த சத்தியங்கள்

    1.  விதைப்பு - அறுப்பு என்ற பிரமாணத்தின் பிரகாரம். கர்த்தர் இதை ஆளுகை செய்கிறார். (லேவி 26; சங் 80:5; ஏசா 9:1)

    2.  எவ்வளவு  காலம் நீடிக்கும்  என்று முடிவு செய்கிறார்           (ஆதி 15:13-14; எண் 14:33; ஏசா 10:25; எரே 29:10)

    3.  வேண்டுமென்றே தேவன் அனுப்புவதில்லை (புல 3:33)

    4.   மனுஷன் துன்பத்தில் பிறந்திருக்கிறான் (யோபு 5:6-7)

    5. பரிசுத்தவான்களுக்கு துன்பம் நியமிக்கப்பட்டிருக்கிறது             (யோவான் 16:33; அப் 14:22; 1தெச 3:3; 1பேதுரு 5:9)

    6.  கடினமாக இருக்கும் (உபா 28; வெளி 7:14)

    7.  வருங்கால   மகிமையைப் பார்க்கும்போது   இலகுவாயிருக்கும் (அப் 20:23-24; ரோமர் 8:18; 2கொரி 4:17)

    8.  தற்காலிகமானது (சங் 30:5; சங் 103:9)

    9. சிலருடைய இருதயத்தைக் கடினப்படுத்தும் (யாத் 4-12;         நெகே 9:28-29)

    10.   ஆசீர்வாதம் உண்டாகும் (சங் 119:71; யாக் 1:12)

    11. துன்பத்திற்கு தவறான வியாக்கியானம் கூறப்படும்

    12.  துன்பத்தில் ஜெபங்கள் (ஆதி 32:11; 2நாளா33:12-13; சங் 6:1-4; சங் 31:1-17; சங் 38:1-10; சங் 51:1-17; ஏசா 38:2-19; அப் 4:29-30)

துன்பம் வருவதற்குக் காரணங்கள்

    1. பாவம் (ஆதி 3:16; சங் 25:18; சங் 89:32)

    2. வழிதப்புதல் (சங் 119:67)

    3. இச்சகம் பேசுதல் நாவு (நீதி 26:28)

    4. மனக்கசப்பு (ஆதி 16:4-11)

    5. பெருமை (யோபு 33:14-29)

    6. மனந்திரும்பாமை (நீதி 1:30-31;  வெளி 2:21)

    7. வருத்தம் அநுபவிக்கப் பிறத்தல் (யோபு 5:6)

    8.  மற்றவர்களுக்கு தீங்கு செய்தல் (ஆதி 27, ஆதி 32:11; ஆதி 37,          ஆதி 42:21) 

    9. கடினமான இருதயம் (யாத் 4-12)

    10. விக்கிரகாராதனை (நியா 10:6-10; 2இராஜா 17)

    11. தேவனை மறத்தல் (1சாமு 12:9-10) 

    12. மாய்மாலம் (மத் 23)  

துன்பம் வருவதன் நோக்கங்கள்

    1. நல்ல கிரியை நடைபெறும் (சங் 119:71)

    2. மனுஷனிடமுள்ள பெருமை மறையும் (யோபு 33:14-29)

    3. தேவனுடைய உண்மை வெளிப்படும் (சங் 119:75)

    4.  மனுஷனுடைய விசுவாசம் சோதிக்கப்படும் (மாற்கு 4:17; யோபு 1-2; யாக் 5:10-11)

    5.  மனுஷனைப் புடமிட்டு சுத்தப்படுத்தும் (ஏசா 48:10; யோவான் 15:2;              எபி 12:10-11)

    6. வல்லமையும் கிருபையும் பெருகும் (ரோமர் 5:1-8; யாக் 1:2-4;    யாக் 4:7; 1பேதுரு 5:9)

    7.   தேவனிடம் திரும்பி வர வழிநடத்தும் (ஓசி 5:15; யோபு 33:14-29)

    8.  மனுஷனைத்   தாழ்மைப்படுத்தி   திருத்தும் (2சாமு 12:14;          சங் 89:30-32; எபி 12:5-6)

    9.   மற்றவர்களுக்கு முன்மாதிரியாக ஆக்கும் (1கொரி 10:5,11)

    10.  அன்பை வெளிப்படுத்தும் (நீதி 3:11-12; எபி 12:5-10; வெளி. 3:19)

    11. வெகுமதி வரும் (ரோமர் 8:17; 2கொரி 4:17; யாக் 1:12; 1பேதுரு 1:7; 1பேதுரு 4:14)

    12. கீழ்ப்படிதலையும் சத்தியத்தையும் கற்றுக் கொள்ளும் (சங் 119:71; எபி 5:8; எபி 12:5-10)

துன்ப வேளையில் தேவனுடைய வாக்குத்தத்தங்கள்

    1. உபத்திரவத்தை கேட்பார் (யோபு 34:28)

    2. அவர்களை இரட்சிப்பார் (சங் 18:27)

    3. அவர்களின் மேல் கிருபையாயிருப்பார்  (ஏசா 49:13)

    4. பயத்திலிருந்து அவர்களை விடுவிப்பார் (சங் 23:4)

    5. அவர்களுடைய  எல்லா இடுக்கண்களிலிருந்து  விடுவிப்பார் (சங் 34:19; சங் 50:15)

    6. அவர்களை ஆதரிப்பார் (சங் 37:23-33; சங் 55:22)

    7. பலன் தருவார்  (மத் 5:10-12)

    8. அவர்களுக்கு  அடைக்கலமாவார் (சங் 9:9-10)

    9. மண்ணென்று நினைவு கூருவார்  (சங் 103:13)

    10. அவர்களை மறைத்து காப்பார்  (சங் 27:5)

    11. அவர்களின் வியாகுலங்களை அறிந்திருக்கிறார்  (சங் 31:7)

    12. போதுமான கிருபை அளிப்பார் (2கொரி 12:9)

ஜனங்கள் துன்பப்படும் விதங்கள்

    1. அடிமைத்தனம், அடக்குமுறை (ஆதி 15:13; ஆதி 31:50; யாத் 1:11-12; எபி 11:25) 

    2. பல்வேறு விதமான ஒடுக்கங்கள் (யாத்  22:22-23; யாக் 1:27; எபி 12:6) 

    3. குடும்பத்தின் இடுக்கண்கள் (ஆதி 16:1-11)

    4. மலட்டுத்தன்மை (1சாமு 1:11) 

    5. சாபம் (2சாமு 16:12)

    6. சிறையிலடைத்தல் (சங் 107:10) 

    7. உபத்திரவம் (மாற்கு 13:19; 2கொரி 2:4; 2கொரி 4:17; 2கொரி 8:2) 

    8. சிலுவையில் அறைதல்  (ஏசா 53:4-7)

    9. ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும் உபவாசம் (லேவி 16:29-31;     எண் 29:7; எண் 30:13; ஏசா 58:3)

    10. யுத்தத்தில் தோற்றுப்போதல் (எண் 24:24; 2இராஜா 17:20;    நெகே. 1:3) 

    11. சரீர வேதனைகள் (நியா 16:5,6,19, 21-31)

    12. ஏழ்மை, பசி (ரூத் 1:21; 1இராஜா 22:27; சங் 107:38-41;        ஏசா 58:7-10)

துன்பங்களின் வகைகள்

    1. ஒருவருக்கொருவர் துன்புறுத்துவார்கள்  (ஆதி 15:13; ஆதி 31:42)

    2. மனுஷர்கள், விதவைகளை ஒடுக்குவார்கள்  (யாத் 22:22-23)

    3. மனைவிகளை, கணவன்மார்கள் மோசமாக நடத்துவார்கள்     (ஆதி 29:32; ஆதி 31:50)

    4. எஜமானர்கள், அடிமைகளை அடக்குவார்கள் (யாத் 1:11-12;         யாத் 3:7,17; யாத் 4:31; உபா 26:6-7) 

    5. ஜெயம் கொண்டவர்கள் தோற்றவர்களை துன்புறுத்துவார்கள்    (எண் 24:24; நியா 16:5-31; ஏசா 9:1) 

    6. உபவாசத்தினால்  ஆத்துமாவை துன்புறுத்திக்கொள்ளுவார்கள்         (லேவி 16:29-31; ஏசா 58:5; யாக் 4:9) 

    7. துன்மார்க்கர்,  அயலகத்தாரை பல்வேறு  வழிகளில் உபத்திரவப்படுத்துவார்கள்  (சங் 89:22)

    8.  துன்மார்க்கர்  நீதிமானை துன்புறுத்துவார்கள் (சங் 94:5;           சங் 143:12; ஆமோ 5:12)

    9. யூதர்களை புறஜாதியார் ஒடுக்குவார்கள்  (ஏசா 51:23; ஆமோ 6:14; மத் 24:9)  

    10. அதிகமான பொறுப்புகள் (எண் 11:11) 

    11. கிறிஸ்துவின் பாடுகள் (ஏசா 53:4) 

    12. கர்த்தர் மனுஷருக்கு அனுமதிக்கும் கஷ்டங்கள் (யோபு 37:23; 1இராஜா 11:39; 2இராஜா 17:20; 2நாளா 6:26; எரே 31:28;    நாகூம் 1:12)

துன்பங்களை அனுபவிப்பதற்கு எடுத்துக்காட்டுகள்

    1. கர்த்தர் (ஏசா 63:9) 

    2. கிறிஸ்து - (ஏசா 53:7; கொலோ 1:24) கிறிஸ்து துன்பங்களை அநுபவித்தார். அவருக்கு சரீரத்தில் வியாதி இல்லை. ஆனாலும் அவருக்கு துன்பங்களும் பாடுகளும் உண்டாயிற்று

    3. இஸ்ரவேல்  (ஆதி 15:13)

    4. ஆகார் (ஆதி 16:11) 

    5. யாக்கோபு (ஆதி 31:42; ஆதி 41:52) 

    6. யோசேப்பு  (அப் 7:10)

    7. யோபு (யோபு 10:15; யோபு 30:16,27; யாக் 5:10)

    8. தாவீது (சங் 132:1)

    9. மனாசே (2நாளா 33:12)

    10. கெட்ட குமாரன் (லூக்கா 15:1-32)

    11. பவுல் (2கொரி 1:6; 2தீமோ 3:11)

    12. பரிசுத்தவான்கள் (கொலோ 1:24; எபி 11:37; 1பேதுரு 5:9)   

நீதிமானின் அடையாளங்கள்

    1. பாவத்துக்கு மரித்தல் (ரோமர் 6:2-7)

    2. பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்படுதல்  (ரோமர் 6:7,18,22)

    3. புதுச்சிருஷ்டி (2கொரி 5:17-18)

    4. மாம்சத்தையும், அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைதல்  (கலா 5:24)  

    5. இயேசு கிறிஸ்துவிலிருந்த சிந்தை (பிலி 2:5; 1யோவான் 2:6)

    6. கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் (எபே 6:6)

    7. நீதிக்கு அடிமைகள் (ரோமர் 6:19)

    8. பரிசுத்தமுள்ளவர்கள், குற்றமில்லாதவர்கள்  (எபே 1:4)

    9. தயவும், மன உருக்கமுமுள்ளவர்கள் (எபே 4:32)

    10. பொறுமையும், நீடிய சாந்தமுமுடையவர்கள் (கொலோ 1:11)

    11. ஜெபம் பண்ணுவார்கள் (1தீமோ 2:1-4)

    12. மன்னித்தல், இரங்குதல் ஆகிய பண்புடையவர்கள் (எபே 4:32;    சங் 37:21) 

    13. பொய்ப்பேச்சை வெறுப்பார்கள் (நீதி 13:5)

    14. துன்மார்க்கத்தை அருவருத்தல்  (சங் 101:3-4)

    15. தீமை செய்தலை விட்டுவிடுதல்  (ஏசா 1:16-17)

    16. நீதிக்கென்று விதைத்தல் (ஓசி 10:12; கலா 6:8)

    17. நீதியைத் தேடுதல் (மத் 6:33)

    18. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள்  (மத் 5:6)

    19. பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க நாடுங்கள்  (எபி 12:14)

    20. கிறிஸ்துவை அறிக்கையிடுதல் (ரோமர் 10:9-10)

    21.  கிறிஸ்தவ கிருபைகளைக் கூட்டுவார்கள் (2பேதுரு 1:5-9)

நீதிமான் ஒப்பிடப்பட்டுள்ள காரியங்கள்

    1. சூரியன்  (நியா 5:31; மத் 13:43)

    2. நட்சத்திரங்கள் (தானி 12:3)

    3. வெளிச்சம் (மத் 5:14; பிலி 2:15)

    4. சீயோன் பர்வதம் (சங் 125:1-2)

    5. ஜீவனுள்ள கற்கள் (1பேதுரு 2:5)

    6. மரங்கள் (சங் 1:3; சங் 52:8; சங் 92:12; எரே 17:8; ஓசி  14:6)

    7. மலையின் மேல் இருக்கிற பட்டணம்  (மத் 5:14)

    8. கோதுமை (மத் 3:12; மத் 13:39)

    9. உப்பு (மத் 5:13)

    10. ஆடு (சங் 95:7; மத் 10:16; யோவான் 10)

    11. போர்ச்சேவகன் (2தீமோ 2:3-4)

    12. பந்தயச் சாலையில் ஓடுகிறவர்கள் (1கொரி 9:24) 

    13. மல்யுத்தம் பண்ணுகிறவன் (எபே 6:12; 2தீமோ 2:5)

    14. சரீரத்தின் அவயவங்கள் (1கொரி 12:20,27)

    15. சம்பத்து (மல் 3:17)

    16. பொன் (யோபு 23:10)

    17. கீழ்ப்படிகிற பிள்ளைகள் (1பேதுரு 1:14)

நீதிமானைப் பற்றிய பொதுவான சத்தியங்கள்

    1.  தேவனோடு அதிகாரம் பெற்றிருப்பார்கள் (ஆதி 18:23-33)

    2.  தேவனால் ஆதரிக்கப்படுவார்கள் (நீதி 2:7-8) 

    3. கர்த்தருடைய இரகசியம் நீதிமான்களோடே இருக்கிறது            (நீதி 3:32)

    4. நீதிமானுடைய பேர் புகழ் பெற்று விளங்கும் (நீதி 10:7) 

    5. நீதியின் பாதையில் கர்த்தர் நடத்துவார் (சங் 23:3)

    6. இரட்சிப்பின் வஸ்திரங்களை உடுத்துவார் (ஏசா 61:10)

    7. கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது (சங் 34:15;  1பேதுரு 2:12)

    8. நீதிமான்களுடைய விண்ணப்பங்களை கர்த்தர் கேட்கிறார்       (சங் 34:15)

    9. நீதிமான்கள் நித்திய ஜீவனை அடைவார்கள் (மத் 25:46)

    10. எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுபடுவார்கள்          (சங் 34:17)

    11. சோதனையைத்  தாங்கக்கூடிய திராணியையும்,  அதற்கு தப்பிக்கொள்ளும் படியான போக்கையும் உண்டாக்குவார்       (1கொரி 10:13)

    12. நீதியின் கிரீடம் வைக்கப்படும் (2தீமோ 4:8)

    13. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்  (சங் 1:6)

    14. நீதிமானை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார் (சங் 5:12)

    15. நீதிமானை சோதித்தறிகிறார் (சங் 11:5)

    16. நீதிமான்களைக் கர்த்தர் தாங்குகிறார்  (சங் 37:17)

    17. நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்  (சங் 55:22)

    18. கண்ணீரைத் துடைக்கிறார் (ஏசா 25:8; வெளி 21:4)

    19. நீதிமானுக்குப் பலன் உண்டு (சங் 58:11)

    20. நீதிமான்கள்  பூமியைச் சுதந்தரித்துக்  கொள்ளுவார்கள் (சங் 37:29) 

தீமை துன்மார்க்கனைக் கொல்லும்

தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.  கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது                 (சங் 34:21,22).


     துன்மார்க்கனுக்கு கர்த்தருடைய பாதுகாப்பு இல்லை. கர்த்தர் தீமை செய்கிறவர்களுடைய பெயரை பூமியிலிராமல் அற்றுப்போகப்பண்ணுகிறார்.  கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது. துன்மார்க்கர் கர்த்தரை நம்புவதில்லை. அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதுமில்லை. அவர்களுடைய இருதயமும்  கடினமுள்ளதாயிருக்கிறது. இதனால் கர்த்தருடைய சமுகத்தில் அவர்களுக்கு கிருபை கிடைப்பதில்லை. 


துன்மார்க்கர் துணிகரமாய்ப் பாவம் செய்கிறார்கள்.  பாவத்தின் சம்பளம் மரணம். அவர்கள் செய்கிற தீமையான பாவங்களே  அவர்களைக் கொன்றுபோடும். துன்மார்க்கர் நீதிமானைப் பகைக்கிறார்கள். இவர்கள் நீதிக்குச் சத்துருக்களாயிருக்கிறார்கள்.  தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பின்படி, நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.


கர்த்தர்  தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்கிறார். கர்த்தர் அவர்களுக்குப் பாதுகாப்பாகயிருக்கிறார். கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு துன்பங்கள் அநேகம் வந்தாலும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று  அவர்களை விடுவிப்பார். கர்த்தரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றம் சுமராது. துன்மார்க்கர் கர்த்தரை நம்பாமல் போனபடியினால் அவர்கள்மேல் குற்றம் சுமரும். அவர்கள் கர்த்தருக்கு முன்பாக குற்றவாளிகளாவார்கள். 

சங்கீதம் 34-இல் கர்த்தரைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பொதுவான காரியங்கள்

    1. கர்த்தர் நோக்கமாயிருக்கிறார் (சங் 34:15)

    2. கூப்பிடுதலைக் கேட்கிறார் (சங் 34:15,17)

    3. தீமையை அற்றுப்போகப்பண்ணுகிறார்  (சங் 34:16)

    4. தீமையை நியாயந்தீர்க்கிறார்

    5. உபத்திரவங்களிலிருந்து விடுவிக்கிறார் (சங் 34:17,19) 

    6. சமீபமாயிருக்கிறார் (சங் 34:18)

    7. இரட்சிக்கிறார்

    8. காப்பாற்றுகிறார் (சங் 34:20)

    9. மீட்டுக்கொள்ளுகிறார் (சங் 34:22)

    10. ஆசீர்வதிக்கிறார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.