கலாத்தியர் 3 விளக்கம்

 




கலாத்தியர் 3ஆம் அதிகாரம் விளக்கம்


கலாத்தியா தேசத்திலுள்ள சபையார்  ஆரம்பத்தில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசத்தார்கள். அதன்பின்பு தங்கள் விசுவாசத்திலிருந்து விலகி பின்வாங்கிப்போய்விட்டார்கள். அப்போஸ்தலர் பவுல் கலாத்தியருடைய பின்மாற்றத்தினிமித்தம் அவர்களைக் கடிந்துகொள்கிறார். விசுவாசத்தினால்மனுஷர் நீதிமானாக்கப்படுகிறார்கள் என்றும், நீதிமானாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் தேவையற்றவை என்றும் பவுல் தெளிவுபடுத்துகிறார். 


இதற்காக ஒரு சில சம்பவங்களை எடுத்துக்காட்டுகளாகச் சொல்லுகிறார். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார். அது அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. நியாயப்பிரமாணத்தின்  தன்மையும், விசுவாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிற சத்தியங்களும் விசுவாசத்தை மையமாக வைத்தே அமைந்திருக்கிறது. தேவன் ஆபிரகாமோடு  உடன்படிக்கை செய்ததில் விசுவாசம் முக்கிய பங்கு வகிக்கிறது. 


ஆகையினால் விசுவாசிகள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசிப்பதிலிருந்து விலகிப்போய், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைப் பற்றிக்கொள்ளக்கூடாது. மனுஷருடைய மீறுதலினிமித்தமாகவே நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த உலகத்தை இரட்சிப்பதற்கு ஒரு      இரட்சகர் தேவைப்படுகிறார் என்பதை ஜனங்களுக்கு புரிய வைப்பதற்காக நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நியாயப்பிரமாணமானது நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாக இருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளெல்லோரும் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் அவருக்கு புத்திரராகயிருக்கிறோம். இது விசுவாசிகளுக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம். 

ஆவியினால் ஆரம்பம் பண்ணினவர்கள் கலா 3 : 1-5

கலா 3:1. புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.


கலா 3:2. ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?


கலா 3:3. ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?


கலா 3:4. இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.


கலா 3:5. அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்? 


அப்போஸ்தலர் பவுல் இந்த நிருபத்தைக் கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகளுக்கு எழுதுகிறார். அவர்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசத்தினால் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.  அதே வேளையில் அவர்கள் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் நீதிமானாக்கப்படவேண்டும் என்றும் முயற்சி செய்கிறார்கள். தாங்கள் நீதிமானாக்கப்படுவதற்கு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கவும் வேண்டும், அதே வேளையில் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளையும் செய்யவேண்டும் என்று சுயமுயற்சி செய்கிறார்கள். 


கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகள்  தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் தடுமாற்றமடைந்திருக்கிறார்கள்.  பவுல் இவர்களைக் கடினமான வார்த்தைகளினால் கடிந்துகொள்கிறார். இவர்களை அழைக்கும்போது, ""புத்தியில்லாத கலாத்தியரே''  என்று சொல்லுகிறார். ""சத்தியத்திற்கு கீழ்ப்படியாமல் போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்'' என்று அவர்களிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்கிறார். 


இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்னும் சத்தியம் அவர்களுக்கு  உபதேசம் செய்யப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினால் அவர்கள் நீதிமான்களாக்கப்பட முடியும் என்று பவுல் அவர்களுக்கு ஏற்கெனவே உபதேசம் செய்திருக்கிறார். இதுவே சுவிசேஷத்தின் வழி.  சத்தியத்தை நாம் அறிந்திருக்கிறோம் என்று சொன்னால் மாத்திரம் போதாது. சத்தியத்தை நாம் விசுவாசிக்கிறோம் என்று சொன்னால் மாத்திரம் போதாது. நாம் சத்தியத்திற்கு மெய்யாக கீழ்ப்படியவேண்டும்.  இல்லையென்றால் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் நிலைதடுமாறும். கலாத்தியாவிலுள்ள விசுவாசிகள் ஆவிக்குரிய தடுமாற்றத்திலிருக்கிறார்கள்.


இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராக அவர்கள் கண்களுக்கு முன் பிரத்தியட்சமாய் அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். சிலுவையைப்பற்றிய உபதேசம் அவர்களுக்கு  தெளிவாக உபதேசம் செய்யப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய பந்தியிலும் அவர்கள் பங்குபெறுகிறார்கள். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட சம்பவம், கர்த்தருடைய பந்தியின் மூலமாய், அவர்களுக்கு தொடர்ந்து உபதேசம்பண்ணப்பட்டு வருகிறது.  சிலுவையைப்பற்றிய உபதேசத்தின் மூலமாகவும், கர்த்தருடைய பந்தியில் அவர்கள் பங்குபெறுவதன் மூலமாகவும், இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராக அவர்கள் கண்களுக்கு முன், அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். 


கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகள் ஆவியைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவரை எப்படி பெற்றுக்கொண்டார்களென்று பவுல் அவர்களிடத்தில்   ஒரு கேள்வி கேட்கிறார். ஆவியானவர் அவர்களுடைய ஆத்துமாக்களில் கிரியை செய்கிறார். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதை கலாத்தியர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.  தேவனுடைய வரங்களையும், அவருடைய கிருபைகளையும் கலாத்தியர் எப்படி பெற்றுக்கொண்டார்கள் என்பதை அவர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.  


நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயா அல்லது விசுவாசக் கேள்வியினாலேயா, அவர்கள்  எதினாலே ஆவியைப் பெற்றார்கள் என்று பவுல் தெரிந்துகொள்ள விரும்புகிறார். விசுவாசக்கேள்வியினாலே ஆவியைப் பெற்றதாக கலாத்தியர்கள் சொன்னார்களென்றால், அந்த விசுவாசத்தை அவர்கள் பற்றிக்கொள்ளவேண்டும். விசுவாசத்தை விட்டு விலகிப்போய், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைப் பற்றிக்கொள்ள முயற்சிபண்ணக்கூடாது. 


கலாத்தியருடைய கடந்த கால அனுபவத்தையும், அவர்களுடைய தற்போதைய அனுபவத்தையும் அவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டுமென்று, பவுல் அவர்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர்கள் ஆவியினால் ஆரம்பம் பண்ணினார்கள். அவர்களுடைய ஆரம்பம் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ அவர்கள்  நியாயப்பிரமாணத்தினுடைய கிரியைகளின் பக்கமாய்த் திரும்பியிருக்கிறார்கள். கிறிஸ்துவிலும் விசுவாசம் வைத்திருக்கிறார்கள். ஆனால் பரிபூரணமான பரிசுத்த நிலமையை அடைவதற்கு விசுவாசம் மாத்திரம் போதாது என்றும், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளையும் நிறைவேற்றவேண்டும் என்றும் இப்போது சொல்லுகிறார்கள்.  விசுவாசத்தோடு கிரியைகளையும் சேர்த்துக்கொண்டால்தான் நீதிமானாக்கப்படமுடியும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பாயிருக்கிறது.


கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்திற்குப் பதிலாக, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை நாம் அங்கீகரித்தால், நமக்கு ஒரு நன்மையும் உண்டாகாது. சுவிசேஷத்தை விசுவாசிப்பதோடு,  நியாயப்பிரமாணத்தின் கிரியைகளையும் செய்தால் சுவிசேஷத்திற்கு மேன்மை உண்டாகும் என்று கலாத்தியர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இவர்களுடைய செயலினால் சுவிசேஷத்திற்கு மேன்மை உண்டாகாது. தாழ்மையே உண்டாகும். 


கலாத்தியர்கள் இதுவரையிலும் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் மேன்மையான நிலமையிலிருந்தார்கள். ஆவியினாலே தங்கள் ஜீவியத்தை ஆரம்பம்பண்ணினார்கள். தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி பெற்றார்கள். இப்போதோ அவர்கள் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைப்  பற்றிக்கொண்டார்கள். இதனால் அவர்கள் தங்கள் விசுவாசத்தை விட்டுவிட்டு, ஆவிக்குரிய ஜீவியத்தில் பின்வாங்கிப்போய், ஆவியே இல்லாத ஒரு ஜீவியத்திற்கு பின்மாற்றமடைந்திருக்கிறார்கள்.


கலாத்தியர்கள் சுவிசேஷத்தை விசுவாசித்தார்கள். கிறிஸ்தவ உபதேசங்களை தங்கள் ஜீவியத்தில் ஏற்றுக்கொண்டார்கள்.  சத்தியத்திற்காக அநேக பாடுகளைப் பட்டார்கள். ஆனால் இப்போதோ விசுவாசத்தோடு, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளும் தேவையென்று சொல்லுகிறார்கள். இதனால் அவர்கள் பட்ட எல்லா பாடுகளும் வீணாய்ப் போயிற்று. ஆவியினால் ஆரம்பம் பண்ணின அவர்கள் இப்பொழுது மாம்சத்தினால் முடிவு பெறப்போகிறார்கள். அவர்கள் இத்தனை புத்தியீனராகயிருக்கிறார்கள்.  ஆகையினால்தான் பவுல் அவர்களை, ""புத்தியில்லாத கலாத்தியரே'' என்று சொல்லுகிறார். 


தேவன் கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகளுக்கு பரிசுத்த ஆவியானவரை கொடுத்து, அவர்களுக்குளே அற்புதங்களை நடப்பிக்கிறார். தேவன் இதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் செய்யவில்லை. விசுவாசக் கேள்வியினாலே செய்கிறார். இந்தச் சத்தியம் கலாத்தியருக்கு நன்றாகத் தெரியும்.  இந்தச் சத்தியத்தை அவர்கள் ஏற்கெனவே அங்கீகரித்து ஏற்றுக்கொண்டவர்கள். இதை விசுவாசிக்கிறார்கள். 


ஆனால் இப்போதோ தாங்கள் விசுவாசித்த சத்தியத்தை விட்டுவிட்டு,  நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் என்னும் புதிய உபதேசத்தைப் பற்றிக்கொள்கிறார்கள். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் தேவன் அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கவில்லை. இந்தக் கிரியைகளினால் தேவன் அவர்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கவுமில்லை. இவர்கள் மெய்யான சத்தியத்தை விட்டு விட்டு, மாயையான கள்ளஉபதேசத்தைப் பற்றிக்கொள்கிறார்கள்.

நியாயப்பிரமாணத்தினால் செய்ய முடியாத காரியங்கள் 

    1. நியாயப்பிரமாணத்தினால் பரிசுத்த ஆவியை அளிக்க முடியாது.


    2. நியாயப்பிரமாணத்தினால் பரிபூரணத்தைக் கொடுக்க முடியாது.


    3. நியாயப்பிரமாணத்தினால் அற்புதங்களை நடப்பிக்க முடியாது


 கலாத்தியர்கள் ஒரு காலத்தில் இயேசு கிறிஸ்துவிற்காக பாடுகளை அனுபவித்தார்கள். இப்போது இயேசு கிறிஸ்துவை விட்டு விலகி நியாயப் பிரமாணத்தின் கிரியைகளுக்குத் திரும்பவும் சென்றால் கிறிஸ்துவிற்காக அவர்கள் பட்ட பாடுகளெல்லாம் வீணாய்ப் போய்விடும்.

ஆபிரகாம் கலா 3 : 6-18

கலா 3:6. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.


கலா 3:7. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.


கலா 3:8. மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.


கலா 3:9. அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.


கலா 3:10. நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.


கலா 3:11. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.


கலா 3:12. நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.


கலா 3:13. மரத்திலே  தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.


கலா 3:14. ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.


கலா 3:15. சகோதரரே, மனுஷர் முறைமையின்படி சொல்லுகிறேன்; மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை.


கலா 3:16. ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கு வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு  என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கும் என்று ஒருவனைக்குறித்துச் சொல்-யிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.


கலா 3:17. ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை  நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.


கலா 3:18. அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே. 


 விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிற சத்தியத்தைக் கலாத்தியர்கள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள். அப்போஸ்தலர் பவுல் அவர்கள் ஒதுக்கி தள்ளிய சத்தியமே மெய்யான சத்தியம் என்று இந்த வசனப்பகுதியில் உறுதிபண்ணுகிறார். ஆபிரகாம் எவ்வாறு நீதிமானாக்கப்பட்டார் என்பதை எடுத்துக்காட்டாகச் சொல்லி, விசுவாசத்தினால்  மனுஷர் நீதிமானாக்கப்படுவதை உறுதிபண்ணுகிறார். 


ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார். அது அவருக்கு             நீதியான எண்ணப்பட்டது. ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசத்தோடு பற்றிக்கொண்டார். தேவன் ஆபிரகாமினுடைய விசுவாசத்தினிமித்தம் அவரை நீதிமானாக ஏற்றுக்கொண்டார்.  ஆபிரகாம் மாத்திரமல்ல, விசுவாச மார்க்கத்தார்கள் அனைவரும் ஆபிரகாமின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். ஆபிரகாம் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்பட்டதுபோல, விசுவாசமார்க்கத்தார் அனைவரும் தங்கள் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்கள்.


தேவன் யூதமார்க்கத்தாரை மாத்திரமல்ல, புறஜாதியாரையும் நீதிமான்களாக்குகிறார். அவர்களையும், அவர்களுடைய விசுவாசத்தினாலேயே நீதிமான்களாக்குகிறார். இயேசுகிறிஸ்து ஆபிரகாரமின் சந்ததியாகயிருக்கிறார். ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டதுபோல, ஆபிரகாரம் ஆசீர்வதிக்கப்பட்டதுபோல, இயேசுகிறிஸ்துவில்  விசுவாசம் வைப்பதன் மூலமாக, புறஜாதியாரும் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். அவர்களும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.


தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஆபிரகாம் விசுவாசித்தார்.  இதனால் அவர் ஆசீர்வதிக்ப்பட்டார். புறஜாதி ஜனங்களும் ஆபிரகாரமைப்போலவே, இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். கிறிஸ்துவின் மூலமாய்  புறஜாதி ஜனங்களும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். 


""உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்'' என்று தேவன் ஆபிரகாமுக்கு சுவிசேஷமாய் முன்னறிவித்தார்.  அந்தப்படி விசுவாச மார்க்கத்தார் அனைவரும், விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். புறஜாதி ஜனங்களும், இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். விசுவாசத்தினாலேயே, விசுவாசமார்க்கத்தார் அனைவரும் இந்தச் சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். 


நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்.  சுவிசேஷத்தை விசுவாசியாமல் யாரும் நீதிமானாக்கப்பட முடியாது. நியாயப்பிரமாணம் மனுஷரை சாபத்திற்குட்படுத்துகிறது. இது யாரையும் நீதிமானாக்குவதில்லை. நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக, நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரர் யாவரும் அவைகளில் நிலைத்திருக்கவேண்டும்.  அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவனாகயிருப்பான். நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்ட பிரகாரம் நாம் நியாயந்தீர்க்கப்படுவோமென்றால், நாம் எல்லோருமே குற்றவாளிகளாகவும், சபிக்கப்பட்டவர்களாகவுமே இருப்போம். நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரர் யாவரும் சாபத்திற்குட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.  


நியாயப்பிரமாணம் விசுவாசத்திற்குரியதல்ல.  நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைச் செய்கிற மனுஷன் அவைகளாலே பிழைப்பான். நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகள் எல்லாவற்றையும் செய்து, அவைகளில் நிலைத்திருக்கிறவன் மாத்திரமே,  நியாயப்பிரமாணத்தினால் பிழைப்பான். அவைகள் அனைத்திலும் ஒருவன் நிலைத்திராவிட்டால் அவன் சபிக்கப்பட்டவனாகவே இருப்பான். நியாயப்பிரமாணத்திற்கு பூரணமாகக் கீழ்ப்படியவேண்டும். ஏதாவது ஒரு பகுதியில் கீழ்ப்படியவில்லையென்றாலும், நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரர்கள் சபிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். 


நாம் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் நீதிமானாக்கப்பட வேண்டுமென்று முயற்சிசெய்தால், நாமும் சபிக்கப்பட்டவர்களாகவே இருப்போம். ஏனெனில் நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லை. இது வெளியரங்கமாக இருக்கிறது. இது மறைவான இரகசியமல்ல. விசுவாசத்தினாலே  நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறது.  


நியாயப்பிரமாணத்தை மீறுகிறவர்கள் சபிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது நியாயப்பிரமாணத்தினால்  நீதிமானாக்கப்பட முடியும் என்று எதிர்பார்ப்பது வீணான காரியம். நியாயப்பிரமாணத்தின் மூலமாய் நமக்கு நீதி கிடைப்பதற்குப் பதிலாக  சாபமே வருகிறது. 


நியாயப்பிரமாணத்தின் மூலமாய் வருகிற சாபத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு வழி இருப்பதாக பவுல் கலாத்தியருக்குச் சொல்லுகிறார்.  இயேசுகிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால், நாம் நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து விடுதலை பெறமுடியும். மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறது. கிறிஸ்து நமக்காக மரத்திலே தூக்கப்பட்டார். அவர் நமக்காக சாபமானார்.  இதுவே கிறிஸ்துவின் வழி. இதன் மூலமாய் நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். இயேசுகிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொள்வதற்காக, ஒரு புதுமையான வழியைத் தெரிந்தெடுத்திருக்கிறார்.  அவரே நமக்காக சாபமானார். இதன் மூலமாய் ஆபிரகாமுக்குண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வருகிறது. இயேசுகிறிஸ்து நமக்காக சாபமானதினால், சிலுவையைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்கிறோம்.  


இயேசுகிறிஸ்துவை விசவாசிக்கிறவர்களெல்லோரும் ஆபிரகாமின் ஆசீர்வாதத்திற்கு சுதந்தரவாளிகளாகயிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் வாக்குத்தத்தத்திற்குப்  பங்காளிகளாகயிருக்கிறார்கள். கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகள் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைச் செய்வதினால் அவர்கள் நீதிமானாக்கப்படுவதில்லை. கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதினால் மாத்திரமே அவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். ஆபிரகாமுக்குண்டான ஆசீர்வாதம் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் அவர்களுக்கு வருகிறது. கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதினால் அவர்கள் தேவனுடைய புத்திரராகயிருக்கிறார்கள். தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு சுதந்தரவாளிகளாகயிருக்கிறார்கள். இந்தச் சிலாக்கியங்களெல்லாம் விசுவாசத்தினால் மாத்திரமே உண்டாகிறது. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் உண்டாகவில்லை. 


அப்போஸ்தலர் பவுல் நீதிமானாக்கப்படுவதைப்பற்றிச் சொல்லும்போது,  பழைய ஏற்பாட்டிலுள்ள வேதவசனங்களை இங்கு சாட்சியாகச் சொல்லுகிறார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறது (கலா 3:11). விசுவாசத்தினால் மாத்திரமே மனுஷர் நீதிமானாக்கப்பட முடியும். விசுவாசத்தினால் மாத்திரமே ஜீவனைப்பெற்றுக்கொள்ள முடியும். ஜீவனுக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். நியாயப்பிரமாணம் விசுவாசத்திற்குரியதல்ல. 


""நியாயப்பிராமணத்தை செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான்'' என்றுஎழுதப்பட்டிருக்கிறது.இந்த வாக்கியத்திற்கு ""நியாயப்பிரமாணத்தைச் செய்கிறவர்கள் நியாயப்பிரமாணத்தில் பிழைக்கவேண்டும்'' என்பது பொருளாகும். இவர்கள் நியாயப்பிரமாணத்திற்குப் பூரணமாய்க் கீழ்ப்படியவேண்டும். நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதை தங்கள் ஜீவியத்தில் மாறாத பிரமாணமாக ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். 


நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு சிறிது மீறி நடந்தாலும், நீதிமானாக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு நீதிக்குப்      பதிலாக சாபமே உண்டாகும். இதனால் நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரர்கள் அனைவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லை என்பது  வெளியரங்கமாயிருக்கிறது.


தேவன் ஆபிரகாமோடு ஏற்படுத்திய உடன்படிக்கை ஸ்திரமாகயிருக்கிறது. மோசேக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதினால், தேவன் ஆபிரகாமோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் ஸ்திரதன்மை குறைந்துபோகவில்லை. அந்த உடன்படிக்கை வலுவிழந்துவிடவில்லை. மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதில்லையென்றும், அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதில்லை என்றும் பவுல் இதை விவரமாகச் சொல்லுகிறார்.


விசுவாசமானது வாக்குத்தத்தத்திற்கு முந்தியது. ஆபிரகாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டார். அவருக்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தைப்பற்றி எதுவும் தெரியாது. மோசேயின் நியாயப்பிரமாணம் ஆபிரகாமுக்கு நானூற்று வருஷத்திற்குப் பின்பு உண்டாயிற்று.  மோசேயின் நியாயப்பிரமாணமானது தேவனுடைய வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது. தேவன் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்துகொண்டார். அவருக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தார் (கலா 3:8). தேவனுடைய முன்னறிவிப்பானது ஒரு உடன்படிக்கையாகவும்,  ஒரு ஏற்பாடாகவும் இருக்கிறது.


தேவன் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். சந்ததிகளென்று அநேகரைக் குறித்துச் சொல்லவில்லை. ""உன் சந்ததிக்கென்று'' ஒருவரைக் குறித்தே சொல்லியிருக்கிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே அந்தச் சந்ததி. தேவன் ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கை நிறைவேறவேண்டுமானால், தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு, ஆபிரகாமுக்கு ஒரு சந்ததி உண்டாயிருக்கவேண்டும். தேவன் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும்  வாக்குத்தத்தங்களை உண்டுபண்ணியிருக்கிறார். அந்த வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக்கொள்ள ஆபிரகாமுக்கு சந்ததி உண்டாயிருக்கவேண்டும். ஆபிரகாமுக்கு சந்ததி உண்டாகவில்லையென்றால், உடன்படிக்கையை யாராலும் சுதந்தரித்துக்கொள்ள முடியாது. 


தேவன் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்களை உண்டுபண்ணினார். ஆபிரகாம் மரித்துப்போனார். தீர்க்கதரிசிகளும் மரித்துப்போனார்கள். ஆனால் மரித்துப்போகவில்லை. அது உடன்படிக்கை ஜீவனுள்ளதாகயிருக்கிறது. அப்போஸ்தலர் பவுல்  ஆபிரகாமின் சந்ததியைப்பற்றிச் சொல்லும்போது, கிறிஸ்துவே அந்தச் சந்ததி என்று தெளிவுபடுத்துகிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய், தேவன் ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கை, இன்னும் ஜீவனுள்ளதாகயிருக்கிறது. இயேசுகிறிஸ்து நித்திய ஜீவனுள்ளவர். நித்தியகாலமாக ஜீவிக்கிறவர். இயேசுகிறிஸ்து நித்தியமானவராகயிருக்கிறபடியினால், தேவன் அவரோடு செய்து கொண்ட உடன்படிக்கையும் நித்தியமானதாக இருக்கிறது.


மோசேயின் பிரமாணம், தேவன் ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கைக்கு பிந்தி உண்டானது. தேவன் ஆபிரகாமுக்கு,  வாக்குத்தத்தத்தினால் சுதந்தரத்தை அருளிச் செய்திருக்கிறார். பிந்திவந்த நியாயப்பிரமாணம், முந்திபண்ணப்பட்ட உடன்படிக்கையை வியர்த்தமாக்கமாட்டாது. தேவன் ஆபிரகாமுக்கு, வாக்குத்தத்தத்தினாலே, சுதந்தரத்தை அருளிச்செய்திருக்கிறார். தேவன் வாக்குமாறாதவர். தம்முடைய வாக்குத்தத்தத்திலிருந்து அவர் ஒருபோதும் விலகிச் சென்றுவிடமாட்டார். மனம்மாறுவதற்கு தேவன் ஒரு               மனுஷனல்ல. தேவனுடைய உடன்படிக்கை நித்தியமானது. இயேசுகிறிஸ்துவின் மூலமாய் அந்த உடன்படிக்கை இன்றும் ஜீவனுள்ளதாயிருக்கிறது.  


இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறவர்கள் ஆபிரகாமோடு ஆசீர்வதிக்கப்படுவார்கள். நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு 430 வருஷங்களுக்கு முன்பாகவே அவன் விருத்தசேதனம் பண்ணிக் கொள்வதற்கு முன்பாகவே விசுவாசத்தினால் ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டான்.   இது உண்மையான சத்தியம். ஆகையினால் இரட்சிப்பிற்கு நியாயப்பிரமாணம் அவசியமற்றதாக இருக்கிறது. இந்த வாக்கியம் யூதருக்கு மிகவும் முக்கியமான சத்தியம். ஏனெனில் ஆபிரகாம் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டான் என்று யூதரும் விசுவாசிக்கிறார்கள். நியாயப்பிரமாணமும், விருத்தசேதனக் கட்டளையும் கொடுக்கப் படுவதற்கு முன்பாகவே ஆபிரகாமின் விசுவாசம் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆபிரகாமின் விசுவாச வாழ்க்கையை எடுத்துக்கூறி விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்பதை பவுல் கலாத்தியருக்கு விளக்கிக் கூறுகிறார். 

கலாத்தியர் நிருபத்தில் நிறைவேறியுள்ள பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன எண் - 1

""மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது'' இது எல்லா ஜாதிகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் சுவிசேஷமாகும். இந்த வாக்குத்தத்தத்தில் பங்கு பெறுகிறவர்கள்எல்லோரும் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறார்கள். இவர்கள் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளையும், விருத்தசேதன கட்டளையையும் நிறைவேற்றாமல், விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறார்கள்.


 நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிவது இயலாத காரியம். நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப் பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறது.       ஆகையினால் நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்.


நியாயப் பிரமாணக்கிரியைக்காரன் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளெல்லாம் செய்ய வேண்டும். பத்து கட்டளைகள், அத்துடன் பண்டிகைகள், சடங்குகள், பலிகள் ஆகிய அனைத்தும் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நியாயப் பிரமாணக் கிரியைக்காரன் இவை அனைத்தையும் பூரணமாகச் செய்யவேண்டும்.  


   நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லை. நியாயப்பிரமாணம் விசுவாசத்திற்குரியதல்ல. நீதிமான் விசுவாசத்தினால் பிழைக்கிறான். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைச் செய்கிறவர்கள் அதில் எழுதப்பட்டிருக்கும் எல்லாக் காரியங்களையும் செய்ய வேண்டும்.  


நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து இயேசு கிறிஸ்து நம்மை மீட்டுக் கொண்டார். நாம் இனிமேல் நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகள் அல்ல. நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக விற்கப்பட்ட நம்மை இயேசு கிறிஸ்து மீட்டுக் கொண்டார். நியாயப் பிரமாணத்தின் மரண தண்டனையிலிருந்தும், கிறிஸ்து நம்மை மீட்டுக் கொண்டார். நியாயப்பிரமாணம் நமக்குச் சாபமாக இருந்தது. இந்தச் சாபத்திலிருந்து மீட்க இயேசு கிறிஸ்து நமக்காகப் பாவநிவாரண பலியானார். 

கிறிஸ்து மரித்ததற்கான காரணங்கள்

    1. ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாக (ஆதி 15:6; ரோமர் 4)  


    2. ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாக இது ஒரு வாக்குத்தத்தமாகக்             கூறப்பட்டிருக்கிறது. (லூக்கா 24:49)                 


 எல்லா ஆசீர்வாதங்களும் மீட்பின் மூலமாகவும், இயேசுகிறிஸ்துவின் பாவநிவாரண பலியின் மூலமாகவும் நமக்கு வருகிறது. எல்லா ஆசீர்வாதமும் என்று சொல்லும்போது அதில் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமும் அடங்கியிருக்கிறது. நியாயப்பிரமாணத்தினால் வந்த சாபங்களை இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலி அகற்றுகிறது. இயேசு கிறிஸ்துவின் தழும்புகளால் நாம் குணமடைகிறோம். இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மூலமாக நமது சரீரங்களில் நாம் சரீரசுகமாதல்களைப் பெற்றுக் கொள்கிறோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் இயேசு கிறிஸ்து காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். 


 உடன்படிக்கை செய்யும்போது அந்த உடன்படிக்கையை உறுதிபண்ணுவதற்காக அதில் முத்திரையிடுவார்கள். உடன்படிக்கை பண்ணுகிறவர்கள் கையொப்பமிடுவார்கள். இரண்டு அல்லது மூன்று சாட்சிகளும் அந்த உடன்படிக்கையில் கையொப்பமிடுவார்கள். இவ்வாறு முறைப்படி செய்யும்போது அந்த உடன்படிக்கை உறுதிபண்ணப்படுகிறது. உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை. ஆபிரகாமின் உடன்படிக்கையும், தேவனுடைய வாக்குத்தத்தங்களும் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையாகும். நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு 430 வருஷங்களுக்கு முன்பாகவே தேவன் ஆபிரகாமோடு உடன்படிக்கை பண்ணினார். மோசேயின் உடன்படிக்கை ஆபிரகாமின் உடன்படிக்கையை வியர்த்தமாக்கவில்லை. சுதந்தரம் நியாயப்பிரமாணத்தினால் உண்டாகவில்லை. ஆபிரகாமின் உடன்படிக்கையினாலேயே  சுதந்தரம் உண்டாயிற்று.

நியாயப்பிரமாணத்தின் நோக்கம் கலா 3 : 19-29

கலா 3:19. அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக் கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.


கலா 3:20. மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.


கலா 3:21. அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே;     உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.


கலா 3:22. அப்படியிராதபடியால், இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே ப-க்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.


கலா 3:23. ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப் பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.


கலா 3:24. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம்நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.


கலா 3:25. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.


கலா 3:26. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.


கலா 3:27. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.


கலா 3:28. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.


கலா 3:29. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள். 


 தேவன் மனுக்குலத்திற்கு மோசேயின் மூலமாய் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்திருக்கிறார். அப்போஸ்தலர் பவுல் நியாயப்பிராமணத்தின் நோக்கத்தை இங்கு தெளிவாகச் சொல்லுகிறார். மனுஷருடைய அக்கிரமங்களினிமித்தம் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மோசேயின் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களும்,  புறஜாதி ஜனங்களும் பாவிகளாகயிருந்தார்கள். அவர்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் அவர்களுக்கு உணர்த்துவதற்காக, தேவன் மோசேயின் மூலமாய் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். பாவம் செய்யாதவாறு அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காகவும், தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். 


வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வருமளவும்  நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவே அந்த சந்ததி. தேவன் ஆபிரகாமுக்கும், அவருடைய சந்ததியாகிய கிறிஸ்துவுக்கும் வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருக்கிறார். கிறிஸ்துவுக்காகக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்வதற்கு,  கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, இந்தப் பூமியில் அவதரிக்கவேண்டும். தேவன் மோசேயின் மூலமாய் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்து, கிறிஸ்து வருமளவும், அதை ஜீவனுள்ளதாக அனுமதித்திருக்கிறார். 


மனுஷருடைய அக்கிரமங்களினிமித்தமாக நியாயப்பிரமாணமானது மனுஷருக்குக் கூட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. காலம் நிறைவேறும் வரையில் மாத்திரமே, நியாயப்பிரமாணத்திற்கு ஜீவன் இருக்கும். தேவனுடைய வாக்குத்தத்தத்தில் அவருடைய தெய்வீக கிருபை இடம்பெற்றிருக்கிறது. காலம் நிறைவேறும்போது தேவகிருபை அவருடைய வாக்குத்தத்தத்தில் பூரணமாய் வெளிப்படும்.  அப்போது மோசேயின் மூலாமாய்க் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் பெலனிழந்துபோகும். தேவகிருபை பூரணமாய் வெளிப்படும்போது, நியாயப்பிரமாணம் ஒழிந்துபோகும்.


நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமானதல்ல. ஆனாலும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய்,   தேவகிருபை நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதினால், நாம் இனிமேலும் நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்திற்குட்பட்டவர்களல்ல. நியாயப்பிரமாணத்திற்கு நாம் பயப்படவேண்டியதில்லை. நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய், மனுக்குலத்திற்குக்  கொடுக்கப்பட்டதினால், வாக்குத்தத்தத்தின் முக்கியத்துவம் நமக்குத் தெரியவருகிறது. நியாயப்பிரமாணமானது நம்முடைய பாவத்தை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. கிறிஸ்துவிடம் நாம் செல்லுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைத் துரிதப்படுத்துகிறது. வழிநடத்துகிறது. 


மனுஷருடைய அக்கிரமங்களினிமித்தமாகவே தேவன் மோசேயின் மூலமாய், மனுக்குலத்திற்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். இந்த நியாயப்பிரமாணத்தை தேவன் தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே  கட்டளையிட்டார். மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல. மோசேயே அந்த மத்தியஸ்தன். தேவனோ ஒருவர். ஆகையினால் நியாயப்பிரமாணத்தினால் தேவனுடைய உடன்படிக்கையை வியர்த்தமாக்க முடியவில்லை. தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பதற்கு முன்பாகவே, ஆபிரகாமோடு உடன்படிக்கை பண்ணினார். உடன்படிக்கை பழையதாகயிருந்தாலும், அதற்குப் பின்பு வந்த நியாயப்பிரமாணத்தினால், தேவனுடைய உடன்படிக்கையை வியர்த்தமாக்க முடியவில்லை.  


மோசே தேவனுக்கும் மனுஷருக்கும் ஒரு மத்தியஸ்தனாகவே இருந்தார். தேவனுடைய கரத்திலிருந்து நியாயப்பிரமாணத்தைப் பெற்று  அதை மனுஷருக்கு வெளிப்படுத்தினார். உடன்படிக்கையோ தேவனிடத்திலிருந்து ஆபிரகாமுக்கு நேரடியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவனுக்கும் ஆபிரகாமுக்கும் நடுவில் மத்தியஸ்தர் யாருமில்லை. ஆகையினால், நியாயப்பிரமாணத்தினால், வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்க முடியவில்லை. 


மனுக்குலத்திற்கு ஒரு இரட்சகர் தேவைப்படுகிறார். மனுஷருக்கு இந்தச் சத்தியத்தை உணர்த்துவதற்காக, தேவன் அவர்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்திருக்கிறார். நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமானதுமல்ல, முரண்பாடானதுமல்ல. மனுஷருடைய மீறுதல்களையும், அக்கிரமங்களையும் அவர்களுக்கு காண்பிப்பதற்காகவே, நியாயப்பிரமாணம் மனுஷருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நியாயப்பிரமாணத்தைவிட மேன்மையான நீதி ஒன்று தங்களுக்குத் தேவை என்பதை மனுஷர் புரிந்துகொள்ளவேண்டும். நியாயப்பிரமாணத்தினால் நீதி உண்டாகவில்லை. நியாயப்பிரமாணம் மனுஷருக்கு உயிரைக் கொடுக்கத்தக்கதாக அருளப்படவில்லை. 


வேதம் எல்லோரையும் ஏகமாய் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. நியாயப்பிரமாணத்தினால் நம்முடைய காயங்கள் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் நம்முடைய காயங்களுக்கு மருந்து கட்டி குணமாக்கக்கூடிய ஆற்றல் நியாயப்பிரமாணத்திற்கு இல்லை. நியாயப்பிரமாணம் மனுஷருடைய பாவங்களையும், மீறுதல்களையும், அக்கிரமங்களையும் வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. ஆனால் இவற்றிலிருந்து எவ்வாறு விடுதலை பெறுவது என்னும் வழிமுறையை நியாயப்பிரமாணம் நமக்குக் காண்பிக்கவில்லை. 


இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு மாத்திரமே வாக்குத்தத்தம் பலிக்கும். விசுவாசமுள்ளவர்களுக்கு மாத்திரமே தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறும். நம்முடைய ஜீவியத்தில் வாக்குத்தத்தம் நிறைவேறவேண்டுமென்றால், நம்மிடத்தில் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசம் காணப்படவேண்டும். 


நியாயப்பிரமாணத்தினால் மனுஷருக்கு நீதி உண்டாகாது. இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் மாத்திரமே மனுஷருக்கு நீதி உண்டாகும்.  இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிறவர்கள் மாத்திரமே வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை நம்புகிறவர்களுக்கு வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதம் கிடைக்காது.  அவர்களுக்கு நீதியும் உண்டாகாது.


நாம் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறோம். நாம் நீதிமான்களாக்கப்படுவதற்கு, நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாயிருந்தது. நியாயப்பிரமாணமானது  ஒரு ஆசிரியரைப்போல இருந்ததாக பவுல் இங்கு ஒப்புமையாகச் சொல்லுகிறார். கிறிஸ்துவைப்பற்றிய விசுவாசம் நமக்குள் வருகிறதற்கு முன்னே நாம் அடைக்கப்பட்டவர்களாய், நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்சிறைச்சாலைகளில் கைதிகள் காவலில் வைத்து அடைக்கப்பட்டிருப்பதுபோல நாமும் நியாயப்பிரமாணத்தின்கீழ் அடைக்கப்பட்டிருந்தோம். 


அடைக்கப்பட்டவர்கள்  விடுதலைக்காக ஏங்கி தவிப்பார்கள்.  நியாயப்பிரமாணத்தின்கீழ்அடைக்கப்பட்டு காவல்பண்ணப்பட்டிருந்தவர்கள், விசுவாசம் வருகிறதற்கு ஆவலோடு காத்திருந்தார்கள். கிறிஸ்துவின் வருகைக்காக அவர்கள் ஏங்கி தவித்தார்கள். கிறிஸ்து வந்தபோதோ அவரை விசுவாசத்தோடும், வாஞ்சையோடும் ஏற்றுக்கொண்டார்கள்.  இயேசுகிறிஸ்து இந்தஉலகத்திற்கு வந்தபோது, நியாயப்பிரமாணத்தின்கீழ் அடைக்கப்பட்டு காவல்பண்ணப்பட்டவர்கள், இயேசுகிறிஸ்துவைத் தங்கள்தேவனாகவும், இரட்சகராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொண்டார்கள். 


தங்களுடைய சுயநீதி பிரயோஜனமற்றது என்பதையும், தாங்கள் பரிசுத்தமில்லாதவர்கள் என்பதையும், தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில்  பலவீனமானவர்கள் என்பதையும் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தபோது ஜனங்கள் கற்றுக்கொண்டார்கள். நியாயப்பிரமாணத்தினால் தாங்கள் நீதிமான்களாக்கப்பட முடியாது என்று அவர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்கள். நியாயப்பிரமாணம் அவர்களுக்கு ஒரு உபாத்தியைப்போல இருந்தது.  அவர்களுக்கு கண்டிப்புடன் கற்றுக்கொடுத்தது. அவர்களை கண்டிப்புடன் ஆளுகையும் செய்தது. அவர்கள் உபாத்திக்குக் கீழ்ப்படிந்து, கீழானவர்களாக இருந்தார்கள்.


நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு, நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிறது.  ஜனங்களுக்கு உபாத்தியாயிருக்கிற நியாயப்பிரமாணம் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படும் சத்தியத்தை அவர்களுக்குத் தெளிவாகக் கற்றுத்தருகிறது. விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு உண்டாகும் என்பதையும் நியாயப்பிரமாணம் என்கிற உபாத்தி அவர்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்கிறது. 


அப்போஸ்தலர் பவுல் நியாயப்பிரமாணத்தை உபாத்தியோடு ஒப்பிட்டுச் சொல்லும்போது, ""விசுவாசம் வந்தபின்பு நாம்  உபாத்திக்கு கீழனானவர்களல்லவே'' என்று சொல்லுகிறார். இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசம் நமக்குள் வந்தபின்பு, நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்தவேண்டிய அவசியமில்லை.  ஏனெனில் நாம் விசுவாசத்தினால் கிறிஸ்துவினிடத்தில், வந்து சேர்ந்துவிட்டோம்.


பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் தம்முடைய ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்து மிகுந்த நன்மை செய்திருக்கிறார்.  தேவனிடத்தில் தங்களுக்குள்ள கடமைகளைப் புரிந்துகொள்வதற்கு நியாயப்பிரமாணம் அவர்களுக்கு பேருதவியாயிருந்திருக்கிறது. தேவனிடத்தில் அவர்கள் விசுவாசம் வைப்பதற்கு  நியாயப்பிரமாணம் அவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. 


ஆனால் யூதர்களோ நியாயப்பிரமாணத்தின் மெய்யான நோக்கத்தைப் புரிந்துகொள்ளவில்லை. நியாயப்பிரமாணம் தங்களை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துவதை அவர்கள்  அறிந்துகொள்ளவில்லை. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் தாங்கள் நீதிமான்களாக்கப்படுவதாக அவர்கள் தப்பாக நினைத்துக்கொண்டார்கள். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் மனுஷனை நீதிமானாக்குவது தேவனுடைய சித்தமல்ல. மனுஷனை நீதிமானாக்குவதற்காக தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுக்கவுமில்லை. ஆனால் யூதர்களோ நியாயப்பிரமாணத்தை தவறாகப் புரிந்துகொண்டார்கள். தேவனுக்குச் சித்தமில்லாததை தேவனுடைய சித்தம் என்று நினைத்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் நீதிமான்களாக்கப்பட வகைதேடுகிறார்கள். 


ஆனால் நியாயப்பிரமாணமோ அவர்களுடைய பாவத்தை  அவர்களுக்கு உணர்த்துகிறது. அவர்களுடைய மீறுதல்களையும், அக்கிரமங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்திக்காண்பிக்கிறது.  நியாயப்பிரமாணத்தினால் ஜனங்களுடைய பாவங்களை வெளிப்படுத்திக் காண்பிக்க மாத்திரமே முடியும். பாவத்தின் கட்டுக்களிலிருந்து நியாயப்பிரமாணத்தினால் மனுஷரை விடுவிக்க முடியாது. நியாயப்பிரமாணம் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதினால், தங்களுக்கு ஒரு இரட்சகர் தேவையென்பதை ஜனங்கள் புரிந்துகொள்கிறார்கள். இந்தப் புரிந்துகொள்ளுதலும் நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிற்று. 


சுவிசேஷம் நியாயப்பிரமாணத்திற்கு மேலானது. நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழிருந்தபோது காவல்பண்ணப்பட்ட சிறு பிள்ளைகளைப்போல இருந்தோம். நாம் அடைக்கப்பட்டவர்களைப்போல இருந்தோம்.  நமக்கென்று எந்தவிதமான சுயாதீன உரிமையும் இல்லாமலிருந்தோம். ஆனால் சுவிசேஷம் நமக்குள் வந்தபோதோ, நமக்கு நியாயப்பிரமாணத்தின் கட்டுக்களிலிருந்து விடுதலை உண்டாயிற்று. நாம் இனிமேலும் காவல்பண்ணப்பட வேண்டிய சிறுபிள்ளைகளல்ல.  தேவனுடைய புத்திரராகயிருக்கிற நாம், நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்து பெரியவர்களாகயிருக்கிறோம். சுயாதீனராகயிருக்கிறோம்.


நாமெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே தேவனுடைய புத்திரராயிருக்கிறோம்.  புத்திரர் என்பது சிறுபிள்ளைகளைக் குறிக்கிற வார்த்தையல்ல. தேவனுடைய ஆசீர்வாதங்களையும் சிலாக்கியங்களையும் சுதந்தரித்துக்கொள்ளும் உரிமையுள்ள பிள்ளைகளாகயிருக்கிறோம். சுதந்தரவாளிக்குரிய வயது வந்தவர்களாகயிருக்கிறோம். நாம் தேவனுடைய புத்திரராயிருப்பது நமக்குக் கிடைத்திருக்கிற  மிகப்பெரிய சிலாக்கியம். இந்தச் சிலாக்கியம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் நமக்கு உண்டாயிற்று. 


நாம் இனி அடைக்கப்பட்டவர்களோ அல்லது காவல்பண்ணப்பட்டவர்களோ அல்ல. நாம் சுயாதீனமுள்ளவர்கள்.  தேவனுடைய புத்திரர்கள். தேவன் தம்முடைய புத்திரருக்குக் கொடுக்கிற எல்லா ஆசீர்வாதங்களையும், எல்லா சிலாக்கியங்களையும் பெற்றுக்கொள்கிற  உரிமையுள்ளவர்களாகயிருக்கிறோம். தேவனுடைய நன்மைகளுக்கு நாம் சுதந்தரவாளிகளாகயிருக்கிறோம். இந்தச் சிலாக்கியம் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் நமக்கு உண்டாயிற்று. 


நாமெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறோம். கிறிஸ்துவுக்குள்ளாக  ஞானஸ்நானம் பெற்றவர்கள் அத்தனைபேரும், கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவர்களாகயிருக்கிறோம். ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்போது, இயேசுகிறிஸ்துவில் நாம் வைத்திருக்கிற விசுவாசத்தை அறிக்கை செய்கிறோம். ஞானஸ்நானம் பெற்றதினால் நாம் கிறிஸ்துவின் அங்கத்தினர்களாகயிருக்கிறோம். தேவனும் நம்மை தம்முடைய புத்திரராக அங்கீகரித்து, ஏற்றுக்கொள்கிறார். 


ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவர்கள் சபையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.  கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொள்கிறார்கள். சுவிசேஷத்தின்படி  நாம் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வது, நியாயப்பிரமாணத்தின்படி விருத்தசேதனம் செய்துகொள்வதுபோல ஒரு அடையாளமாக இருக்கிறது. நாம் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்போதுஅவருடைய மரணத்திற்குள் நாம் ஞானஸ்நானம் பெறுகிறோம். இயேசுகிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்ததுபோல, நாம் பாவத்திற்கு மரித்து நீதிக்கு உயிர்த்தெழுகிறோம்.  புதிய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம். கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றவர்களாகிய நாம், நமக்குக் கிடைத்திருக்கிற இந்தச் சிலாக்கியத்தை நினைவுகூரவேண்டும். நாம் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவர்கள் என்னும் சிந்தனை நமக்குள் காணப்படவேண்டும். 


இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற எல்லா விசுவாசிகளுமே தேவனுடைய புத்திரராகயிருக்கிறார்கள். நியாயப்பிரமாணம்  ஜனங்களை வேறுபிரிக்கிறது. யூதனென்றும், கிரேக்கனென்றும் வித்தியாசம் பண்ணிப் பார்க்கிறது. நியாயப்பிரமாணம் அடிமையானவனுக்கும்  சுயாதீனனுக்கும் வித்தியாசம் காண்பிக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. இந்த வித்தியாசம் நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிற்று.  ஆனால் இயேசுகிறிஸ்துவுக்குள் இப்படிப்பட்ட வித்தியாசம் எதுவுமில்லை. நாமெல்லோரும் ஒரே நிலமையிலிருக்கிறோம். கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம். நாம் எந்த தேசத்தை சேர்ந்தவராகயிருந்தாலும், எந்த இனத்தவராகயிருந்தாலும், ஆணாகயிருந்தாலும், பெண்ணாகயிருந்தாலும் இயேசுகிறிஸ்துவுக்குள்  வித்தியாசமில்லை. நாமெல்லோரும் இயேசுகிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறோம். நாமெல்லோருமே இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே தேவனுடைய புத்திரராயிருக்கிறோம். 


நாம் கிறிஸ்துவினுடையவர்களாய் இருப்போமானால், நாம் ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரராயும் இருக்கிறோம்.  தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளும் சிலாக்கியமுள்ளவர்களாகயிருக்கிறோம். கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகள் ஒரு காலத்தில் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருந்தார்கள்.  கிறிஸ்துவினுடையவர்களாயிருந்தார்கள். ஆபிரகாமின் சந்ததியாராயிருந்தார்கள். வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருந்தார்கள். 


ஆனால் இப்போதோ அவர்கள்  சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்திலிருந்து  விலகிப்போய்விட்டார்கள்.விசுவாசத்தைவிட்டுவிட்டு நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைப் பற்றிக்கொண்டார்கள். இதனால் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய எல்லா ஆசீர்வாதங்களையும்  சிலாக்கியங்களையும் இழந்துபோனார்கள்.  

நியாயப்பிரமாணத்தைப் பற்றிய காலக் குறிப்புக்கள்


    1. வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் (கலா 3:19)

    2. விசுவாசம் வருகிறதற்கு முன்னே (கலா 3:23)

    3. கிறிஸ்துவினிடத்தில் (கலா 3:24)

    4. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே. (கலா 3:25)

    5. குறித்த காலம்வரைக்கும் (கலா 4:2-5)

    6. நிறைவேற்றுகிறதற்கே  (மத் 5:17-18)

    7. யோவான் வரைக்கும் (மத் 11:13; லூக்கா 16:16)

    8. கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாய் இருக்கிறார்.           (ரோமர் 10:4)

    9. ஒழிந்துபோகிறது (2கொரி 3:7-14)

    10. இப்போதும் இருக்கிறது. (கலா 4:21-31)

    11. நியாயப்பிரமாணத்திற்குப் பின்பு (எபி 7:28)

    12. சீர்திருத்தல் உண்டாகும் காலம் வரைக்கும். (எபி 9:10)

    13. சிலுவையின்மேல் ஆணி அடித்து (கொலோ 2:14-17)

    14. ஆனால் இப்பொழுது (எபே 2:13-16)

    15. அதன்பின்பு (கிறிஸ்துவின் பலி)  (எபி 9-16; எபி 8:13)


நியாயப்பிரமாணம் நீதியையும், உயிரையும் கொடுக்காது. எல்லோரும் பாவம் செய்தவர்கள் என்று நியாயப்பிரமாணம் அறிவிக்கிறது. பாவம் செய்த அனைவருக்கும் நியாயப்பிரமாணம் மரண தண்டனை கொடுக்கிறது. பாவம் செய்தவர்கள் எல்லோருமே மரிக்க வேண்டியவர்கள்.  நமது பாவத்திற்காக நாம் செலுத்த வேண்டிய தண்டனையை இயேசு கிறிஸ்து நமக்காகச் செலுத்தினார். இயேசு கிறிஸ்துவின்மீது நாம் விசுவாசம் வைக்கும்போது நமக்கு நியமிக்கப்பட்டிருந்த மரண தண்டனையிலிருந்து மீட்கப்பட்டு ஜீவனைப் பெற்றுக் கொள்கிறோம்.  


பிள்ளைகளுக்கு உரிய வயது வரும்வரையிலும் அவர்களைப் பாதுகாத்து பராமரிப்பவர். உரிய வயது வந்தபின்பு இவர்கள் உபாத்தியின் கட்டுப் பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, சுயமாகச் செயல்படுவார்கள். நமக்கு விசுவாசம் வந்தபின்பு நாம் இனிமேலும் உபாத்தியாகிய நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல.  நாம் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறோம். ஆகையினால் மோசேயின் பிரமாணத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இராமல் விடுதலை பெற்றவர்களாக இருக்கிறோம்.       


  கிறிஸ்துவின் சுபாவம், அவருடைய சிந்தை ஆகியவற்றை நமது சுபாவமாகவும், நமது சிந்தையாகவும் ஆக்குவது. நமது அன்றாட ஜீவியத்தில் இயேசு கிறிஸ்துவைப் போலவே ஜீவிப்பது. இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவருடைய கிரியைகளைச் செய்வது.    


 இயேசு கிறிஸ்துவிற்குள் அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. எல்லா இனமும் எல்லா வகுப்பாரும், எல்லாப் பாலர்களும் இயேசு கிறிஸ்துவிற்குள் ஒன்றாக இருக்கிறார்கள். சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமைகளும், சிலாக்கியங்களும் அனைவருக்கும் சமமாகவே                  வழங்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவைத் தலையாகக் கொண்டு அனைவரும் ஒரே சரீரரமாகச் செயல்படுகிறார்கள். யூதருக்கும், புறஜாதியாருக்கும் இடையிலுள்ள வேறுபாடு அகற்றப்பட்டிருக்கிறது. நாம் எல்லோரும் இயேசு கிறிஸ்துவிற்குள் ஒன்றாய் இருக்கிறோம்.

விசுவாசிகள் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்படும் ஆசீர்வாதங்கள்

    1. எல்லாரும் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள். (கலா 3:26).


    2. எல்லாரும் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். (கலா 3:27).


    3. எல்லாரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.           (கலா 3:27).


    4. எல்லாரும் இயேசு கிறிஸ்துவிற்குள் ஒன்றாய் இருக்கிறார்கள்.           (கலா 3:28).


    5. எல்லாரும் கிறிஸ்துவினுடையவர்கள்  (கலா 3:29; கலா 5:24)..


    6. எல்லாரும் ஆபிரகாமின் சந்ததியாராய் இருக்கிறார்கள். (கலா 3:29).


  7. எல்லாரும் வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரராய் இருக்கிறார்கள்.           (கலா 3:29).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.