சங்கீதம் 33 விளக்கம்

 



சங்கீதம் 33 விளக்கம்


துதித்து ஜெபிக்கும் நான்காவது சங்கீதம்


இந்த சங்கீதத்திற்குத் தலைப்புரை இல்லை. இதைத் தாவீது எழுதியிருக்கலாம்.  சங் 33:1 ஆவது வசனம் 32 ஆவது சங்கீதத்தின் கடைசி வசனம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இதற்கு ஆதாரம் எதுவுமில்லை.

பொருளடக்கம்

    1. துதிக்கவேண்டுமென்று ஐந்து கட்டளைகள் - (33:1-3) 

    2. துதிப்பதற்கு எட்டு காரணங்கள் - (33:4-7)

    3. கர்த்தருக்கு பயப்பட வேண்டுமென்று இரண்டு கட்டளைகள் - (33:8) 

    4. கர்த்தருக்கு பயப்படுவதற்கு ஐந்து காரணங்கள் - (33:9-11) 

    5. பாக்கியமுள்ள ஜனத்திடமும் ஜாதியிடமும் காணப்படும் காரியங்கள் - (33:12)

    6. பாக்கியமுள்ள ஜனத்தின் மீது அருளப்படும் பத்து ஆசீர்வாதங்கள் - (33:13-17) 

    7. கர்த்தருக்கு பயந்தவர் மீது அருளப்படும் நான்கு ஆசீர்வாதங்கள் - (33:18-19)

    8. நீதிமானின் ஜெபமும் நம்பிக்கையும் - (33:20-22) 


முப்பத்துமூன்றாவது சங்கீதம் துதியின் சங்கீதமாகும். நீதிமான்களெல்லோரும் கர்த்தரைத் துதிக்குமாறு  சங்கீதக்காரர் சொல்லுகிறார் (சங் 33:1-3). எந்தெந்த காரியங்களுக்கெல்லாம் நாம் கர்த்தரைத் துதிக்கவேண்டுமென்று சங்கீதக்காரர் வரிசைப்படுத்துகிறார். கர்த்தருடைய எல்லா கிரியைகளுக்காகவும் நாம் அவரைத் துதிக்கவேண்டும்  (சங் 33:4-5). சிருஷ்டிப்பின் கிரியையில் தேவனுடைய வல்லமை வெளிப்படுவதற்காக நாம் கர்த்தரைத் துதிக்கவேண்டும் (சங் 33:6-9).


கர்த்தர் தம்முடைய தெய்வீக ஆளுகையினால் இந்த உலகத்தை ஆளுகை செய்கிறார்.  சர்வசிருஷ்டிகளையும் கர்த்தர் தாமே போஷித்துப் பராமரிக்கிறார். இதற்காகவும் நாம் கர்த்தரைத் துதிக்கவேண்டும்     (சங் 33:10, 13-17). கர்த்தர் தம்முடைய ஜனத்திற்கு விசேஷித்த சிலாக்கியங்களையும், விசேஷித்த ஆசீர்வாதங்களையும் கொடுக்கிறார்.  இதற்காகவும் நாம் கர்த்தரைத் துதிக்கவேண்டும் (சங் 33:12,18-22). 

கர்த்தருக்குள் களிகூருங்கள்

நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும். சுரமண்டலத்தினால் கர்த்தரைத்துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள். அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்தசத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்  (சங் 33:1-3). 


கர்த்தரைத் துதிக்கவேண்டும் என்னும் வாஞ்சை சங்கீதக்காரருடைய இருதயத்தில் நிரம்பியிருக்கிறது.  நாம் கர்த்தருக்குள் களிகூரவேண்டும். இது பரிசுத்த சந்தோஷம். நம்முடைய துதிகளுக்கு பரிசுத்த சந்தோஷமே  இருதயமாகவும் ஆத்துமாவாகவும் இருக்கிறது. இதனால் தாவீது, ""நீதிமான்களே கர்த்தருக்குள் களிகூருங்கள்'' என்று சொல்லுகிறார். 


முப்பத்திரண்டாவது சங்கீதத்தின் முடிவில், ""நீதிமான்களே கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்'' (சங் 32:11) என்று சொல்லி  அந்த சங்கீதத்தை நிறைவு செய்தார். இப்போதோ முப்பத்து மூன்றாவது சங்கீதத்தை, அதே வாக்கியத்தினால் ஆரம்பிக்கிறார். நன்றியுள்ள இருதயத்தோடு கர்த்தரைத் துதிப்பதே பரிசுத்தமான சந்தோஷம்.  கர்த்தரைத் துதிப்பதே கர்த்தருக்குள் களிகூருவது. துதி செய்வது செம்மையானவர்களுக்கு தகும்.


நாம் கர்த்தரைத் துதிக்கும்போது  அவருடைய நாமத்திற்கு நாம் செலுத்த வேண்டிய  மகிமையைச் செலுத்தவேண்டும். கர்த்தருடைய நாமம் மகிமையுள்ளது.  நாம் கர்த்தரைத் துதிக்கும்போது, அவருடைய குணாதிசயங்களையெல்லாம் நினைவுகூர்ந்து, அவரை நன்றியோடு துதிக்கவேண்டும். கர்த்தருடைய தெய்வீக திட்டங்களையும், கிரியைகளையும் எண்ணிப்பார்த்து அவரைத் துதிக்கவேண்டும். கர்த்தருடைய சமுகத்தில்  நாம் பாடல்களைப் பாடி ஆராதிக்கும்போது, அந்தப் பாடல்களெல்லாம் கர்த்தரைத் துதித்து மகிமைப்படுத்துகிற பாடல்களாக இருக்கவேண்டும். 


கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள் என்று சங்கீதக்காரர் சொல்லுகிறார்.  நம்மிடத்திலுள்ள புதிய பாடல்களைப் பாடி கர்த்தரை ஆராதிக்கும்போது, நம்முடைய ஆராதனை மிகுந்த சந்தோஷமாயிருக்கும்.  பழைய பாடல்களையும் மறந்துவிட வேண்டியதில்லை. கர்த்தருக்கு பழைய பாடல்களையும் பாடலாம். பழைய பாடல்களோடு நம்முடைய ஆராதனையை நிறுத்திவிடக்கூடாது.  ஆராதனைக்கு புதிய பாடல்களும் தேவை. நாம் ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசிக்கவேண்டும்.


நாம் கர்த்தரைத் துதிக்கும்போது  அவரை ஆனந்த சத்தத்தோடே துதிக்கவேண்டும்.  மெதுவாக முனங்கக்கூடாது. வாத்தியங்களை நேர்த்தியாக வாசித்து  கர்த்தரைத் துதிக்கவேண்டும். நம்முடைய துதி நம்முடைய தலையிலிருந்தும் வரவேண்டும், நம்முடைய இருதயத்திலிருந்தும் வரவேண்டும்.  தெளிந்த சிந்தனையுள்ளவர்களால் மாத்திரமே தெளிவான வார்த்தைகளைப் பேசமுடியும். ஞானமுள்ளவர்களால் மாத்திரமே ஞானமுள்ள வார்த்தைகளைப் பேச முடியும்.  இவர்களால் மாத்திரமே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசிக்க முடியும்.  


நாம் கர்த்தரை ஞானத்தோடு ஆராதிக்கும்போது,  நாம் ஆனந்த சத்தத்தோடே கர்த்தரைத் துதிக்கிற வார்த்தைகள், நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து புறப்பட்டு வரவேண்டும்.  நம்முடைய சிந்தையும் இருதயமும் கர்த்தரைத் துதிக்கிற துதியினால் நிரம்பியிருக்கவேண்டும். நீதிமான்களெல்லோரும் கர்த்தருக்குள் களிகூரவேண்டும். கர்த்தரைத் துதிப்பது  நம்முடைய கடமை. துதி செய்வது செம்மையானவர்களுக்குத் தகும் என்று சங்கீதக்காரர் சொல்லுகிறார். 

சங்கீதக்காரன் கூறும் ஆலோசனைகள்

    1. கர்த்தருக்குள் களிகூருங்கள் (சங் 33:1).

    2. சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதியுங்கள் (சங் 33:2).

    3. கீர்த்தனம் பண்ணுங்கள். 

    4. பத்து நரம்பு வீணையினால் கீர்த்தனம் பண்ணுங்கள்

    5. கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள் (சங் 33:3).

    6. ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.

    7. பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக (சங் 33:8).

    8. உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக

    9. கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே, உமது கிருபை எங்கள் மேல் இருப்பதாக (சங் 33:22). 


வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஒன்பது புதுப்பாட்டுக்களின் விவரம் வருமாறு : (சங் 33:3; சங் 40:3;  சங் 96:1; சங் 98:1; சங் 144:9; சங் 149:1; ஏசா 42:10; வெளி 5:9; வெளி 14:3).

கர்த்தருடைய வார்த்தை

கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது  (சங் 33:4). 


நம்முடைய சுயபுத்தியினாலோ, சுயஞானத்தினாலோ கர்த்தரை அறிந்து கொள்ள முடியாது.  கர்த்தர் தாமே நமக்குத் தம்மை வெளிப்படுத்தவேண்டும். கர்த்தர் தம்முடைய கிருபையினால் தம்மை  நமக்கு இரண்டு வழிகளில் வெளிப்படுத்துகிறார். அவையாவன: 1. கர்த்தருடைய வார்த்தைகள் 2. கர்த்தருடைய செய்கைகள். 


கர்த்தருடைய வார்த்தை உத்தமமானது.  தேவனுடைய தெய்வீக வெளிப்பாடுகளெல்லாமே  கர்த்தருடைய வார்த்தையாகும். கர்த்தருடைய  வார்த்தை வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்  தேவன் பிதாக்களுக்கு திருவுளம் பற்றினார். இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாய்  நமக்குத் திருவுளம் பற்றினார் (எபி 1:1,2).


கர்த்தருடைய செய்கையெல்லாம் சத்தியமாயிருக்கிறது. கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவருடைய நித்திய சிந்தையில், தெய்வீக திட்டம் வைத்திருந்தார். தேவனுடைய திட்டம் காலத்தினால் மாறுவதில்லை.  சூழ்நிலைகளால் அவருடைய திட்டத்தை மாற்றமுடியாது. தேவனுடைய செய்கைகளும், அவருடைய தெய்வீக திட்டங்களும் ஒன்றுபோல் இருக்கும். இவை இரண்டிற்கும் ஒருபோதும் முரண்பாடு உண்டாகாது. தேவன் தம்முடைய கிரியைகளினால்  தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார். அவர் நீதியுள்ளவர், அவர் சத்தியமுள்ளவர், அவர் உண்மையுள்ளவர் என்பதை அவருடைய செய்கையின் மூலமாய் நாம் அறிந்துகொள்ளலாம்.  

கர்த்தரை ஏன் துதிக்க வேண்டும் என்பதற்குக் காரணங்கள்

    1. கர்த்தருடைய வார்த்தை உத்தமமானது  (சங் 33:4).

    2. அவருடைய செய்கையெல்லாம் சத்தியமானவை.

    3. கர்த்தர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார் (சங் 33:5).

    4. பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.

    5. கர்த்தருடைய வார்த்தையினால் வானங்கள் உண்டாக்கப்பட்டது          (சங் 33:6).

    6. அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனை உண்டாக்கப் பட்டது (சங் 33:6; ஆதி 2:7).

    7. சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்தார் (சங் 33:7;          ஆதி 1:10).

    8. ஆழமான ஜலங்களைப் பொக்கிஷ வைப்பாக வைக்கிறார்.

கர்த்தருடைய காருணியம்

அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது       (சங் 33:5). 


கர்த்தர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார். கர்த்தருடைய நன்மை ஒருபோதும் குறைந்துபோவதில்லை. இந்தப்   பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது. கர்த்தர் நம்மீது கிருபையும் இரக்கமும் காண்பிக்கிறார் என்பதற்கு அவருடைய  நிறைவான காருணியம் அத்தாட்சியாயிருக்கிறது.


பூமியில் நிரம்பியிருக்கிற காருணியமெல்லாம் பரலோகத்திலிருந்து  வந்தது. கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையினால், இந்தப் பூமியிலுள்ள சர்வசிருஷ்டிகளையும் சிருஷ்டித்தார். தாவரங்களையும் விருட்சங்களையும் சிருஷ்டித்தார். ஒவ்வொரு விருட்சமும், தேவனுடைய தெய்வீக திட்டத்தின் பிரகாரம், தன் தன் கனியைத் தருகிறது.  தாவர வகைகளெல்லாம் மனுஷருக்கும், மிருகங்களுக்கும் ஆகாரமாயிருக்கிறது. 


இந்தப் பூமியிலுள்ள எல்லா தேசங்களுக்கும் கர்த்தர் பொதுவான ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறார்.  அவர்களுக்குப் பொதுவான நன்மைகளை வாய்க்கப்பண்ணியிருக்கிறார். பூமியிலுள்ள சர்வசிருஷ்டிகளும் கர்த்தருடைய நன்மையைப் பெற்று திருப்தியடைந்து சந்தோஷமாயிருக்கிறது.  பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருப்பதினால்தான் நமக்கு ஒரு நன்மையும் குறைவுபடாமலிருக்கிறது.


இந்தப் பூமியில் பகல்வேளையிலே வெளிச்சம் இருக்கும். இரவு வேளையிலே இருள் இருக்கும். குளிர்காலத்தில் குளிரும், கோடைகாலத்தில் வெயிலும் இருக்கும்.  எல்லா காலங்களுக்கும் தேவையான காருணியங்களை கர்த்தர் தமது கிருபையினால் கொடுத்திருக்கிறார். நாம் சுவாசிக்கிற காற்று கர்த்தர் கொடுத்தது. நாம் குடிக்கிற தண்ணீர் கர்த்தர் கொடுத்தது.  நாம் புசிக்கிற ஆகாரம் கர்த்தர் கொடுத்தது. நாம் இந்தப் பூமியிலே காண்கிற எல்லாம் கர்த்தர் சிருஷ்டித்தது.


பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருப்பதினால்,  நாம் கர்த்தரைத் துதிக்கவேண்டும். நம்முடைய இருதயம் கர்த்தரைத் துதிக்கும் துதியினால் நிரம்பியிருக்கவேண்டும். ஆனாலும், தேவனுடைய காருணியத்தைப் பெற்றுக்கொண்ட மனுஷரோ, கர்த்தரைத் துதிப்பதில் குறைவுள்ளவர்களாயிருக்கிறார்கள்.  


கர்த்தருடைய காருணியங்களை ஏராளமான ஜனங்கள் அனுபவிக்கிறார்கள். ஆனாலும் ஒரு சிலர் மாத்திரமே கர்த்தரைத் துதிக்கிறார்கள்.  கர்த்தர் மகிமையுள்ளவர். நாம் கர்த்தருடைய மகிமையை நோக்கிப் பார்த்து அவரைத் துதிக்கவேண்டும். பூமியில் நிறைந்திருக்கிற கர்த்தருடைய காருணியங்களை நினைவுகூர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்தவேண்டும். கர்த்தருக்குச் சாட்சியாக ஜீவிக்கவேண்டும். நம்முடைய ஜீவியத்தில் கர்த்தரை மகிமைப்படுத்தவேண்டும். 

வானங்களும் அவைகளின் சர்வசேனைகளும்

கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது. அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும் (சங் 33:6-9).


கர்த்தர் தாமே தம்முடைய சர்வவல்லமையினால் வானத்தையும், பூமியையும்,  அவற்றிலுள்ள யாவையும் சிருஷ்டித்தார். சங்கீதக்காரர் கர்த்தருடைய சிருஷ்டிப்பைப்பற்றிச் சொல்லும்போது, ""கர்த்தருடைய வார்த்தையினால், வானங்களும்,  அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது'' என்று சொல்லுகிறார். நாம் கர்த்தரை விசுவாசிக்கிறோம். அவர் சர்வவல்லவர் என்று விசுவாசித்து அவரைத் துதிக்கிறோம். கர்த்தரே சர்வசிருஷ்டிகளையும் உண்டாக்கினவர் என்று விசுவாசித்து, நாம் அவரை மகிமைப்படுத்துகிறோம். 


கர்த்தர் சர்வசிருஷ்டிகளையும் தம்முடைய வார்த்தையினாலும், தம்முடைய வாயின் சுவாசத்தினாலும் உண்டாக்கினார். இவற்றை உண்டாக்குவது  கர்த்தருக்கு எளிதாயிருந்தது. இயேசுகிறிஸ்துவே வார்த்தையாகயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சுவாசமாயிருக்கிறார். பிதாவாகிய தேவன் இந்த உலகத்தை உண்டாக்கி, அதை தம்முடைய குமாரன் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவர் மூலமாகவும் ஆளுகை செய்து, இரட்சிக்கிறார்.  


கர்த்தர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும். கர்த்தருடைய வார்த்தை வல்லமையுள்ளது. அவர் பேசுகிறார்.  அவர் கட்டளையிடுகிறார். இதுவே போதுமானது. இதற்குமேல் இந்த உலகத்திற்கு வேறொன்றும் தேவையில்லை. கர்த்தருடைய வார்த்தையும், அவருடைய கட்டளையும் சர்வலோகத்தையும் சிருஷ்டிக்கிறது.  சர்வசிருஷ்டிகளையும் ஆளுகை செய்கிறது. சகலமும் அவர் சொல்ல ஆகும். சகலமும் அவர் சொல்ல நிற்கும்.


மனுஷருக்கு பேசுவதும் செய்வதும் இரண்டு வெவ்வேறு காரியங்கள். நாம் பேசுவதை செய்ய முயற்சி செய்கிறோம். பல சமயங்களில் நம்முடைய செயல்களில் தோற்றுப்போகிறோம். நம்முடைய பேச்சும் செய்கையும் ஒத்துப்போகாமல் வேறுபட்டிருக்கிறது. கர்த்தருக்கோ, அவருடைய பேச்சும் செய்கையும் வெவ்வேறாகயிராமல், ஒன்றாகவே இருக்கிறது. அவர் சொல்லுகிறார். அவர் சொன்னது நடைபெறுகிறது. அவர் கட்டளையிடுகிறார். அவர் கட்டளையிடுவது நிறைவேறுகிறது. இதுவே  தேவனுடைய சர்வவல்லமை. 


கர்த்தர் தாம் செய்வதெல்லாவற்றையும் நேர்த்தியாய்ச் செய்து முடிக்கிறார்.  கர்த்தருக்கு ஒரு நோக்கமுண்டு. தம்முடைய நோக்கத்தில் அவர் ஒருபோதும் மாறுவதில்லை. கர்த்தர் தம்முடைய சித்தத்திலும், எண்ணத்திலும், கிரியையிலும், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.  கர்த்தர் தம்முடைய வார்த்தையில் உறுதியாய் நிலைத்திருக்கிறார். அவர் நேரத்திற்கு நேரம் வித்தியாசமாய்ப் பேசுவதில்லை. மனுஷருக்கு மனுஷர் அவர் மாறுபாடாய்ச் சொல்லுவதுமில்லை. கர்த்தர் கட்டளையிடும்போது, அவருடைய கட்டளை நிறைவேறுகிறது.  கர்த்தருடைய வார்த்தையின் பிரகாரமாய் சகலமும் இயங்குகிறது. அவருடைய கட்டளையின் பிரகாரமாய் சகலமும் நிலைத்திருக்கிறது. 


கர்த்தராகிய தேவனே சர்வசிருஷ்டிகர். அவரே சகலத்தையும் உண்டாக்கியவர். சங்கீதக்காரர் கர்த்தருடைய சிருஷ்டிகளில் ஒரு சிலவற்றை இங்கு சொல்லுகிறார்.  வானங்களையும், அவைகளின் சர்வசேனைகளையும் கர்த்தர் உண்டாக்கினார். நாம் ஆகாயத்திலே வானத்தை பிரத்தியட்சமாய்க் காண்கிறோம். அந்த வானத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்  ஆகியவற்றையும் பார்க்கிறோம். இவை தவிர உன்னதமும் உயரமுமான வானத்திலே தேவதூதர்களும், அவைகளின் சர்வசேனைகளும் இருக்கிறார்கள். கர்த்தர் தாமே தம்முடைய வாயின் சுவாசத்தினால் இவற்றை உண்டாக்கினார். 


கர்த்தர் சமுத்திர ஜலங்களையும், அவற்றின் பொக்கிஷங்களையும் உண்டாக்கினார்.  அவர் சமுத்திர ஜலங்களை குவியலாகச் சேர்த்தார். ஆழமான ஜலங்களை பொக்கிஷவைப்பாக வைக்கிறார். ஆரம்பத்தில்  பூமி முழுவதும் தண்ணீரால் மூடப்பட்டிருந்தது. அப்போது கர்த்தர் சமுத்திர ஜலங்களை குவியலாகச் சேர்த்தார். கர்த்தருடைய வார்த்தையினால் ஜலம் ஓரிடத்தில் சேர்ந்தது. வெட்டாந்தரை காணப்பட்டது. கர்த்தர் வெட்டாந்தரைக்குப் பூமியென்றும், சேர்ந்த ஜலத்திற்கு சமுத்திரம் என்றும் பேரிட்டார்  (ஆதி 1:9,10).


கர்த்தர் வானத்தையும், பூமியையும், சகலசிருஷ்டிகளையும் சிருஷ்டித்ததற்கு ஒரு தெய்வீக நோக்கமுண்டு. பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படவேண்டும்.  உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருக்கவேண்டும். இதுவே கர்த்தருடைய சிருஷ்டிப்பின் திட்டம். நாம் கர்த்தருடைய திட்டத்தையும் சித்தத்தையும் புரிந்துகொண்டு, கர்த்தரை பயபக்தியாய்த் துதிக்கவேண்டும். 


கர்த்தரைத் துதிப்பது பற்றி தொன்னூற்று  ஐந்தாவது சங்கீதத்தில் சங்கீதக்காரர் இவ்வாறு சொல்லுகிறார்.  ""கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள். துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம். கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார். பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள். சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று. நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்''  (சங் 95:1-6)

கர்த்தருடைய ஆலோசனை

கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார். கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்  (சங் 33:10,11). 


சங்கீதக்காரர் தேவனுடைய சர்வஆளுகையில் திருப்தியோடும் சந்தோஷத்தோடும் இருக்கிறார். தேவன் தம்முடைய சிங்காசனத்தில் வீற்றிருந்து, சர்வலோகத்தையும் ஆளுகை செய்கிறார். கர்த்தருடைய சமுகத்தில் நாம் விசுவாசத்தோடு வரவேண்டும். கர்த்தரைத் தரிசிப்பதற்கு நம்முடைய மனக்கண்கள் பிரகாசமுள்ளதாயிருக்கவேண்டும்.  கர்த்தருக்கு முன்பாக நாம் பணிவோடு இருக்கவேண்டும். 


நம்முடைய ஆலோசனைகளிலும், நினைவுகளிலும் நாம் பெருமைப்படக்கூடாது. கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்குகிறார். அவர் ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.  தாவீதுக்கு விரோதமாக அவருடைய சத்துருக்கள் சதிஆலோசனைபண்ணினார்கள். கர்த்தரோ அவர்களுடைய ஆலோசனைகளையெல்லாம் விருதாவாக்கிப்போட்டார். அவர்களுடைய நினைவுகளை அவமாக்கிப்போட்டார்.  அவர்களுடைய ஆலோசனைகளும் நினைவுகளும் ஒன்றுமில்லாமற்போயிற்று.


கர்த்தருடைய ஆலோசனை நித்தியமானது. அது நித்தியகாலமாக நிலைத்துநிற்கும். கர்த்தருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாக நிற்கும். இந்த உலக வரலாற்றில்  பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. நாகரீகங்கள் மாறியிருக்கின்றன. இராஜ்யங்களும் ராஜாக்களும் மாறிப்போனார்கள். இவையெல்லாவற்றிற்கும் மத்தியில் கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாய் நிலைத்து நிற்கிறது.  


உலக வரலாற்றின் ஒவ்வொரு காலத்திலும் தேவனுடைய நித்திய ஆலோசனை வெளிப்படுகிறது.  அவருடைய இருதயத்தின் நினைவுகள் நிறைவேறுகிறது. ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு சம்பவங்களிலும் கர்த்தருடைய சித்தமே நிறைவேறுகிறது.  கர்த்தருடைய ஆலோசனை நித்தியமானது. அது சர்வவல்லமையுள்ளது. வரலாற்றுக்காலத்தில் கர்த்தருடைய ஆலோசனை மங்கிப்போவதில்லை. கர்த்தருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கும். 

பாக்கியமுள்ள ஜாதியும் ஜனமும்

கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது (சங் 33:12).


தேவனுடைய விசேஷித்த கிருபைக்காக நாம் அவரை மகிமைப்படுத்தவேண்டும். அவருக்குத் துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் சொல்லவேண்டும். கர்த்தரைத் தங்களுக்கு தெய்வமாக கொண்ட ஜாதி பாக்கியமுள்ளது. இந்த ஜாதியார் தங்களுடைய ஞானத்தினால், கர்த்தரைத் தங்களுக்கு தெய்வமாகத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள். கர்த்தர் இவர்களை ஆசீர்வதிக்கிறார். 


நாம் கர்த்தரை நமக்கு தெய்வமாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர் நம்மை தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொள்கிறார். கர்த்தருடைய சுதந்தரத்திற்கு நாம் பாத்திரவான்களாயிருக்கிறோம். கர்த்தர் நம்மைத் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்டபடியினால், அவர் நம்மைப் பாதுகாக்கிறார்.  நம்மைப் பராமரிக்கிறார். நம்மைத் தம்முடைய நன்மைகளினால் நிரப்புகிறார். நமக்கு விசேஷித்த சிலாக்கியங்களையும், விசேஷித்த ஆசீர்வாதங்களையும் கொடுக்கிறார். கர்த்தர் நமக்குத் தம்முடைய கிருபைகளையும் இரக்கங்களையும் வெளிப்படுத்துகிறார். கர்த்தரை நம்பியிருக்கிறவர்களை அவருடைய கிருபை சூழ்ந்துகொள்ளும். 


கர்த்தர் நம்மை தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொள்ளும்போது, தம்முடைய சுதந்தரத்திற்கு நாம் பங்குள்ளவர்களாயிருப்பதற்கு,  கர்த்தர் நம்மைத் தகுதிப்படுத்துகிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகயிருப்பதற்கு முன்பாக, நாம் புத்தியில்லாத குதிரையைப்போலவும், கோவேறு கழுதையைப்போலவும், கீழ்ப்படியாமலும், முரட்டாட்டமாயும் ஜீவித்திருந்தோம் (சங் 32:9). நம்முடைய கர்த்தரோ நம்மீது  கிருபையுள்ளவராக, நமக்கு இரங்கி, நம்மைத் தம்முடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிய பழக்குவிக்கிறார். தம்மை நம்புவதற்கு கர்த்தர் தாமே நமக்குக் கிருபை கொடுக்கிறார். தம்முடைய கிருபையை நம்மை சூழ்ந்துகொள்ளச் செய்கிறார்.  

கர்த்தர் கண்ணோக்கமாயிருக்கிறார்

கர்த்தர் வானத்தி-ருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார். தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்தி-ருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார் (சங் 33:13,14).


கர்த்தர் மனுபுத்திரர் எல்லோருக்குமே  பொதுவான கிருபைகளைக் கொடுக்கிறார். அவர் வானத்திலிருந்து நோக்கிப் பார்க்கிறார்.  எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார். கர்த்தரைத் தங்களுக்கு தெய்வமாகக் கொண்ட ஜாதியையும் காண்கிறார். மற்றவர்களையும் காண்கிறார்.  கர்த்தர் பார்க்கும்போது நம்முடைய முகத்தை மாத்திரம் பார்ப்பதில்லை. அவர் மனுஷருடைய இருதயங்களையும் நோக்கிப் பார்க்கிறார். நம்முடைய இருதயத்தின் நினைவுகள், ஆத்துமாவின் பாரங்கள் எல்லாவற்றையும் அவர் காண்கிறார். கர்த்தருக்கு மறைவானது ஒன்றுமேயில்லை. 


ஒரு சில காரியங்கள் நமக்கு மாத்திரமே தெரிந்த இரகசியம் என்றும், இது வேறு யாருக்கும் தெரியாது என்றும் நாம் நினைத்திருப்போம். ஆனாலும் கர்த்தருக்குத் தெரியாத இரகசியம் என்று ஒன்றுமேயில்லை. அவர் சர்வத்தையும் அறிந்தவர். அவர் சர்வஞானமுள்ளவர். நம்மைப்பற்றி நமக்குத் தெரிந்திருப்பதைவிட, நம்முடைய கர்த்தருக்குத்தான் நம்மைப்பற்றி அதிகமாய்த் தெரியும்.  நம்முடைய தலையிலுள்ள ரோமங்களைக்கூட அவர் எண்ணி வைத்திருக்கிறார்.  


கர்த்தர் மனுபுத்திரரைக் காணும்போது, அவர்களை பொதுவாகப் பார்ப்பதோடு, தனித்தனி மனிதராகவும் பார்க்கிறார். தொலைநோக்கு கருவியில்  ஒரு பொருளை கூர்ந்து பார்ப்பதுபோல, கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்க்கிறார். கர்த்தர் வானத்திலிருக்கிறார். பரலோகமே அவர் வாசமாயிருக்கிற ஸ்தானம்.  நாம் பூமியிலிருக்கிறோம். வானத்திற்கும் பூமிக்கும் தூரம் அதிகமாயிருந்தாலும், கர்த்தருக்கு தூரம் தடையாகயில்லை. தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து, பூமியின் குடிகள் எல்லார்மேலும் கர்த்தர் கண்ணோக்கமாயிருக்கிறார். 


""கர்த்தர் வானத்தி-ருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்'' என்பது கர்த்தருடைய பராமரிப்பைக் குறிக்கும் வாக்கியமாகும். எல்லா சிருஷ்டியின் மீதும் கர்த்தருடைய பராமரிப்பு உள்ளது (சங் 33:12-17).


தேவன் ஆதாமை தமது சாயலாகபும் தமது ரூபத்தின்படியேயும் உண்டாக்கினார் (ஆதி 1:26-28; ஆதி 5:3; 1கொரி 15:45-50). மனுஷனை  பாவியாகவோ, வியாதியஸ்தனாகவோ, குறைவுள்ளவனாகவோ சிருஷ்டிக்கவில்லை. மனுஷன் பாவத்தினால் தனது பரிபூரணத்தை இழந்து குறைவுள்ளவனானான் (உபா 32:4).


தேவனுடைய பாதுகாப்பு இல்லையென்றால், ஒரு ராஜா கூட, சாதாரணபோர் வீரனைப்போல மரிப்பான். அதுபோலவே பலவானும் கோழையைப் போல மடிவான்.


குதிரையால் மனுஷனை இரட்சிக்க முடியாது. தேவனால் மட்டுமே மனுஷனை பாதுகாத்து, அவனுடைய மரணத்திலிருந்து தப்புவிக்க முடியும். (சங் 33:18-19). 

கர்த்தர் இருதயங்களை உருவாக்குகிறார்

அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர்  உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்  (சங் 33:15).


கர்த்தர் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் அவனுடைய ஆவியை உருவாக்கி வைத்திருக்கிறார். இதனால் கர்த்தர் ""ஆவிகளின் பிதா'' என்று அழைக்கப்படுகிறார். நம்மை உருவாக்கிய தேவனுக்கு, நம்மை எப்படி ஆளுகை செய்வது என்பது தெரியும். நம்முடைய உள்ளிந்திரியங்கள் எல்லாவற்றையும் நம்மை உருவாக்கிய தேவன் அறிந்து வைத்திருக்கிறார்.  ஒரு இயந்திரத்தை உண்டுபண்ணியவருக்கு, அந்த இயந்திரத்திலுள்ள எல்லா கருவிகளைப்பற்றியும் நன்றாகத் தெரியும். அவை எவ்வாறு இயங்குகிறது என்பதும் தெரியும். அந்த இயந்திரம் பழுதடையும்போது அதை எப்படி பழுதுபார்ப்பது என்பதும் அவருக்குத் தெரியும். கர்த்தர் நம்முடைய இருதயங்களையெல்லாம் உருவாக்கி வைத்திருக்கிறார். அவருக்கு நம்முடைய இருதயங்களின் நினைவுகளெல்லாம் தெரியும். 


தாவீது இந்த சத்தியத்தை விவரிப்பதற்காக அவர் தன்னையே ஒரு எடுத்துக்காட்டாக இவ்வாறு  சொல்லுகிறார். ""நீர் என் உள்ளத்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது'' (சங் 139:13-16). 


ஒரு இயந்திரத்தில் பல்வேறு கருவிகள் இருக்கும். அவையெல்லாம் உருவத்தில் ஒன்றுபோல் இருப்பதில்லை. அவற்றின் வடிவமும் ஒன்றுபோல் இருக்காது. அவையெல்லாம் வித்தியாசமாயிருந்தாலும், அவை ஒவ்வொன்றும் தன்னுடைய பணியை  சிறப்பாகச் செய்யும். ஒரு இயந்திரத்திலுள்ள எல்லா பகுதிகளும் சீராக இயங்கினால்தான், அந்த இயந்திரம் பயனுள்ளதாக செயல்படும். இல்லையென்றால் அது பழுதடைந்துள்ள இயந்திரம்தான். பழுதை நீக்கினால்தான் அது மறுபடியும் சீராக செயல்படும். இயந்திரத்தை உருவாக்கினவருக்குத்தான்  அதன் பழுதை நீக்கத் தெரியும். 


மனுஷருடைய இருதயங்களை கர்த்தரே உருவாக்கியிருக்கிறார்.  மனுஷருடைய சரீரத்தில் வெவ்வேறு அவயவங்கள் உண்டு. கர்த்தரே இவையெல்லாவற்றையும் சிருஷ்டித்தவர். நம்முடைய அவயவங்கள் தோற்றத்தில் வித்தியாமாயிருக்கலாம்.  அளவில் வித்தியாசமாயிருக்கலாம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்யலாம். எல்லா அவயவங்களும் மொத்தமாகச் சேர்ந்து தேவனுக்குச் சித்தமானதைச் செய்யவேண்டும். தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவே  தேவன் நம்மை சிருஷ்டித்திருக்கிறார். 

இரட்சிக்கிறதற்கு குதிரை விருதா

எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.  இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது (சங் 33:16,17). 


சர்வசிருஷ்டியும் தேவனையே சார்ந்திருக்கிறது. தேவனில்லாமல் அவை ஒன்றுமில்லை.  தேவனுடைய உதவியும் ஒத்தாசையும் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. தேவனே நமக்குப் பலன்.  அவரே நமக்கு ஜீவன். அவரே நம்மை இயக்குகிறவர். நாம் அவருடைய சித்தத்தின் பிரகாரமாய் இயங்குகிறோம்.  அவரே நம்மை ஆளுகை செய்கிறவர். 


சேனையிலே ஏராளமான போர்வீரர்கள் இருப்பார்கள்.  இவர்களெல்லோருக்கும் உலகப்பிரகாரமான பெலன் உண்டு.     ஆனாலும் தேவனில்லாமல் இவர்களுக்கு ஒரு பெலனுமில்லை. எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால்  இரட்சிக்கப்படமாட்டார். கர்த்தரே நம்மை இரட்சிக்கிறவர். கர்த்தரே சேனைக்குப் பலன் கொடுக்கிறவர். சேனையின் மிகுதி நம்மைப் பாதுகாக்காது. கர்த்தருடைய கிருபையே நம்மைப் பாதுகாக்கும். 


சேனையின் மிகுதி நமக்குப் பாதுகாப்பு என்று நினைத்து, நம்முடைய நம்பிக்கையை  சேனையின்மீது வைக்கக்கூடாது. நம்முடைய நம்பிக்கையை நாம் கர்த்தர்மீது மாத்திரமே வைக்கவேண்டும்.  கர்த்தருடைய பாதுகாப்பே நமக்கு மெய்யான பாதுகாப்பு. ஒருவன் இராட்சதனாயிருந்தாலும், கர்த்தர் இல்லாமல் அவனுக்கு ஒரு பெலனும் இல்லை. 


கோலியாத் ஒரு இராட்சதனாகயிருந்தான். அவனுடைய பலத்தினால்  அவனால் தப்பிக்க முடியவில்லை. சவுரியவான் எவனும் தன் பலத்தின் மிகுதியால் தப்பிப்பதில்லை.  கோலியாத் விழுவதற்கு ஒரு நாள் வந்தது. அந்த நாளில் அவன் விழுந்துவிட்டான். மரித்துப்போனான். நம்முடைய     சுயபலத்தின்மேல் நாம் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது. நம்முடைய நம்பிக்கையை நாம் கர்த்தரிடத்தில் மாத்திரமே வைக்கவேண்டும். அவரே நமக்குப் பெலனாயிருக்கிறார்.  


குதிரை வீரியமுள்ளது.  ஆனாலும் நாம் குதிரையின் வீரியத்தினால் இரட்சிக்கப்படுவதில்லை.  இரட்சிக்கிறதற்கு குதிரை விருதாவாகவே இருக்கிறது. பிரயோஜனமற்றதாயிருக்கிறது. குதிரை தன் மிகுந்த வீரியத்தால் யாரையும் தப்புவியாது. இஸ்ரவேலின் ராஜாக்கள் தங்களுடைய பாதுகாப்புக்கு குதிரைகளை நம்பினார்கள்.  கர்த்தரே நமக்கு மெய்யான பாதுகாப்பு. நம்முடைய பாதுகாப்புக்கு நாம் கர்த்தரை மாத்திரமே நம்பவேண்டும். 


கர்த்தர் இஸ்ரவேல் தேசத்து ராஜாவின்  குணாதிசயத்தைப்பற்றிச் சொல்லுகிறார். ""அவன்  அநேக குதிரைகளை சம்பாதியாமலும், அநேக குதிரைகளை தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும்  இருக்கக்கடவன்'' (உபா 17:16) என்று சொல்லுகிறார். குதிரையின்மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் கர்த்தர்மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள். தாவீது சீரியருடைய குதிரைகளையெல்லாம் துண்டாடிப்போட்டார் (2சாமு 8:4). கர்த்தரோ இந்த உலகத்திலுள்ள  எல்லா குதிரைகளும் இரட்சிப்பதற்கு விருதா என்று சொல்லுகிறார். யுத்தநாளிலே குதிரை நம்மைத் தப்புவியாது. கர்த்தரே நம்மைத் தப்புவிக்கிறவர்.  

கர்த்தருடைய கண்

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்.  பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்  (சங் 33:18-20). 


கர்த்தருடைய கண் மனுபுத்திரர் எல்லோரையும் நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.  மனுஷர் மத்தியிலே, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் கர்த்தருக்கு விசேஷித்தவர்கள்.  கர்த்தர் அவர்கள்மீது கிருபையாய் நோக்கிப் பார்க்கிறார். அவர்களுடைய ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்க வேண்டுமென்று  கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. 


ஒரு சிலர் தங்கள் பாதுகாப்புக்கு சேனைகளையும், இரதங்களையும், குதிரைகளையும் நம்புகிறார்கள்.  அவர்களோ முறிந்துவிழுவார்கள். அவர்கள் நம்பிய குதிரைகளாலும், இரதங்களாலும், சேனைகளாலும் அவர்களைப் பாதுகாக்க முடியாது. ஏமாற்றமடைவார்கள். 


கர்த்தருடைய பிள்ளைகளோ தேவனுடைய பாதுகாப்பிலிருக்கிறார்கள்.  கர்த்தருக்குப் பயந்தவர்கள் எப்போதும் பாதுகாப்பாயிருப்பார்கள்.  ஏனெனில் கர்த்தர் தாமே அவர்களுடைய ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கிறார்.  அவர்களுடைய ஆத்துமாக்களைப் பாதுகாக்கிறார். 


மனுபுத்திரர் எல்லோருக்குமே மரணம் வரும்.  இது சரீர மரணம். ஒரு தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் நமக்கு சரீர மரணத்தை நியமித்திருக்கிறார். ஆனாலும்  கர்த்தர் நம்மை ஆவிக்குரிய நித்திய மரணத்திலிருந்து பாதுகாக்கிறார். நம்முடைய ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கிறார். 


கர்த்தருடைய பிள்ளைகளுக்கு எவ்வளவு ஆபத்துக்கள் வந்தாலும், எவ்வளவு நெருக்கப்பட்டாலும் அவர்களுடைய  ஆத்துமா கர்த்தரையே துதிக்கும். நம்முடைய ஆத்துமா இந்தப் பிரபஞ்சத்திலும் கர்த்தரைத் துதிக்கும். இனிமேல் நாம் போகப்போகிற பரலோகத்திலும் கர்த்தரைத் துதிக்கும். 


கர்த்தர் நம்மை பஞ்சத்தில் உயிரோடே காக்கிறார். நமக்கு ஆதரவாகயிருக்கிற வாசல்கள் சில சமயங்களில் அடைக்கப்படலாம்.   நமக்குக் கிடைக்கிற உதவிகள் நம்முடைய கண்களுக்கு பிரத்தியட்சமாய்த் தெரியாமலிருக்கலாம். நமக்கு அநுகூலமான வாசல்கள் அநேகம் அடைக்கப்பட்டாலும், கர்த்தரே நமக்கு மெய்யான வாசலாயிருக்கிறார். அவரே நமக்கு  அநுகூலமானவர். அவருடைய அநுகூலம் நமக்குப் போதுமானது. நம்முடைய தேவைகளைச் சந்திப்பதற்கு அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.  


தேசத்திலே  பொதுவான பஞ்சம் உண்டாகலாம். ஜனங்கள் பசியினாலும் பட்டினியினாலும் பரிதபிக்கும்போது, கர்த்தரோ தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களை, பஞ்சத்திலே உயிரோடே காப்பாற்றுகிறார்கள். இதற்காக அவருடைய கண் நம்மேல் நோக்கமாயிருக்கிறது. கர்த்தருடைய பராமரிப்பு நமக்குப் போதுமானதாயிருக்கும்.  பஞ்சத்திலும் கர்த்தர் நம்மைப் போஷிப்பார். சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும். கர்த்தரை நம்புகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது.  

கர்த்தருடைய கிருபை நம்மேல் இருப்பதாக 

நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும். கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக  (சங் 33:20-22).


 நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கவேண்டும்.  நாம் கர்த்தரையே நம்பி ஜீவிக்கவேண்டும். கர்த்தருடைய கிருபையிலும் இரக்கத்திலும்  நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பவேண்டும். கர்த்தருக்குள் நம்முடைய இருதயம் களிகூரவேண்டும்.  கர்த்தரே நமக்குத் துணையும் நமக்கு கேடகமுமாயிருக்கிறார். இதை நினைவுகூர்ந்து நம்முடைய இருதயம் கர்த்தருக்குள் களிகூரவேண்டும்.  


கர்த்தரை நம்புகிறவர்கள் ஒருபோதும் சோர்ந்துபோய்விடுவதில்லை. தம்மை நம்புகிறவர்களை கர்த்தர் ஒருபோதும்  வெட்கமடையச்செய்யமாட்டார். கர்த்தரை நம்பும்போது அவரே நமக்கு துணையும், கேடகமுமாயிருக்கிறார் என்று நினைவுகூர்ந்து,  நம்முடைய ஆத்துமாவில் உற்சாகமடையவேண்டும். நமக்குள் காணப்படுகிற சோர்வுகளையெல்லாம் நம்மை விட்டு நீக்கிப்போடவேண்டும். நம்முடைய இருதயம் கர்த்தருக்குள்  களிகூரவேண்டும்.  


தாவீது முப்பத்து மூன்றாவது சங்கீதத்தின் முடிவுரையாக, கர்த்தரிடத்தில் ஒரு ஜெபத்தை ஏறெடுக்கிறார்.  ""கர்த்தாவே, உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக'' என்று சொல்லுகிறார். கர்த்தருடைய கிருபையே நமக்கு மெய்யான ஆசீர்வாதம்.  கர்த்தருடைய கிருபை நமக்குக் கிடைக்கும் என்று விசுவாசத்தோடு எதிர்பார்த்து, நாம் ஆறுதலாயும் சமாதானமாயும் ஜீவிக்கவேண்டும்.  


கர்த்தருடைய கிருபையை நம்முடைய சுயமுயற்சியினாலோ,  சுயபுத்தியினாலோ, சுயபக்தியினாலோ பெற்றுக்கொள்ள முடியாது.  நாம் கர்த்தரை நம்பும்போது, அவருடைய கிருபை நம்மேல் இருக்கும்.  தாவீது கர்த்தருடைய கிருபையைப்பற்றிச் சொல்லும்போது, ""கர்த்தாவே  நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே'' என்னும் வாக்கியத்தைச் சொல்லி, ""உமது கிருபை  எங்கள்மேல் இருப்பதாக'' என்று சொல்லுகிறார்.  


கர்த்தருடைய வார்த்தைகளெல்லாம் வேதாமகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.  தம்முடைய வார்த்தையில் கர்த்தர் நமக்கு அநேக வாக்குத்தத்தங்களைச் சொல்லியிருக்கிறார். கர்த்தருடைய  ஆவியானவர் நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார். அவரே நம்முடைய இருதயத்தில் கர்த்தரை நம்புகிற விசுவாசத்தைக் கொடுக்கிறார்.  நம்முடைய நம்பிக்கை பரிசுத்த ஆவியானவர் மூலமாய் நமக்குள்ளே உண்டாயிற்று. தேவனுடைய கிருபையினாலே நம்முடைய விசுவாசம் கர்த்தருக்குள் நிலைத்திருக்கிறது.  நாம் கர்த்தரை நம்பும்போது, கர்த்தருடைய கிருபை நம்மேல் இருக்கும். கர்த்தர் தம்முடைய வார்த்தையின் பிரகாரமாய், தம்முடைய கிருபையினாலே நம்மை ஆசீர்வதிப்பார்.  


""அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்''. என்று சங்கீதக்காரர் சொல்லுகிறார். வேறு யார் மூலமாகவும் நமக்கு பாதுகாப்பும் இரட்சிப்பும் இல்லை (சங் 33:16-19). ஆகையினால் சங்கீதக்காரர் தனது முழுநம்பிக்கையையும் தேவன் மீது வைப்பதாக அறிக்கை செய்கிறார்.  (சங் 33:20-22). 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.