கலாத்தியர் 2 விளக்கம்

 




கலாத்தியர் 2ஆம்  அதிகாரம் விளக்கம்


அப்போஸ்தலர் பவுல் எருசலேமுக்கு மறுபடியும் பிரயாணம் செய்கிறார் (கலா 2:1-10) பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது  பவுல் அவரோடு விவாதம்பண்ணுகிறார் (கலா 2:11-14) நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பதை  பவுல் தெளிவுபடுத்துகிறார் (கலா 2:15-21). 

மறுபடியும் எருசலேமுக்குப் போனேன் கலா 2 : 1-10 

கலா 2:1. பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு பர்னபாவுடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன்.


கலா 2:2. நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு  விவரித்துக்காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன்.


கலா 2:3. ஆனாலும் என்னுடனேகூட இருந்த              தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.


கலா 2:4. கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு            உண்டான சுயாதீனத்தை உளபுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.


கலா 2:5. சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.


கலா 2:6. அல்லாமலும் எண்ணிக்கையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே.


கலா 2:7. அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால்,


கலா 2:8. விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டதென்று அவர்கள் கண்டு;


கலா 2:9. எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து,


கலா 2:10. தரித்திரரை நினைத்துக்கொள்ளும் படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்


ஆதித்திருச்சபையில் விசுவாசிகள் இரண்டு பிரிவாகயிருக்கிறார்கள். ஒரு பிரிவார்  யூதமார்க்கத்திலிருந்து பிரிந்து வந்து, இயேசுகிறிஸ்துவை தங்கள் இரட்சகராகவும்ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டவர்கள்.  மற்றொரு பிரிவார் புறஜாதி மார்க்கத்திலிருந்து பிரிந்து வந்து இரட்சிக்கப்பட்டவர்கள். யூதமார்க்கத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளுக்கும், புறஜாதி மார்க்கத்திலிருந்து  இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளுக்கும் சில வித்தியாசங்கள் இருந்தது.


விருத்தசேதனமுள்ளவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்கு கையளிக்கப்பட்டது.  விருத்தசேதனமில்லாதவர்களுக்கு பிரசங்கிக்கும்படி பவுலுக்கு கையளிக்கப்பட்டது. யூதமார்க்கத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர்கள், விருத்தசேதனமானது அவசியம் என்று சொல்லுகிறார்கள். தங்கள் இரட்சிப்புக்கு விருத்தசேதனம் பெற்றுக்கொள்கிறார்கள். பவுலோ, விருத்தசேதனத்தினால் யாரும் இரட்சிக்கப்படுவதில்லை என்று பிரசங்கம் செய்கிறார். புறஜாதியார் இரட்சிக்கப்படவேண்டுமென்றால், அவர்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தால் போதுமானது என்றும், விருத்தசேதனம் பெற்றுக்கொள்வது தேவையற்றது என்றும்  உபதேசம் செய்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பவுல் மறுபடியும் எருசலேமுக்குப் போகிறார். தன்னோடு தீத்துவையும், பர்னபாவையும் கூட்டிக்கொண்டு போகிறார்.  


பவுல் ஏற்கெனவே எருசலேமுக்குப் போனதை குறிப்பிட்டிருக்கிறார் (கலா 1:18).  இதற்குப் பிறகு, பதினாலு வருஷம் சென்ற பின்பு அவர் மறுபடியும் எருசலேமுக்குப் போகிறார். இந்தப் பதினாலு வருஷங்களாக அவர் எருசலேமிலுள்ள அப்போஸ்தலரைப் பார்க்கவில்லை. பவுலின் ஊழியம் மற்ற அப்போஸ்தலரின் ஊழியத்தைச் சார்ந்திருக்கவில்லை. எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்களும் பவுலை தங்களிடத்தில் அழைத்து வந்து, அவரை விசாரிக்கவில்லை.  பவுல் புறஜாதி தேசங்களில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கலப்பில்லாமல் பிரசங்கம் செய்கிறார். 


அப்போஸ்தலர் 15-ஆம் அதிகாரத்தில்  இந்தப் பிரயாண சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது.  தன்னோடு தீத்துவையும், பர்னபாவையும் எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு போகிறார்.  அந்தியோகியாவிலுள்ள சபையார் பர்னபாவை பவுலோடுகூட அனுப்புகிறார்கள். ஆகையினால்தான் பர்னபாவும் இந்தப் பிரயாணத்தில் பவுலோடு கூடப்போகிறார்.


பவுல் பதினாலு வருஷம் சென்ற பின்பு,  இரண்டாம் முறையாக, எருசலேமுக்குப் போகும்போது தீத்துவும் அவரோடு கூடப்போகிறார். இவர் புறஜாதி மார்க்கத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர்.  பவுல் இப்போது எருசலேமுக்குப் போகும்போது, தீத்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிற பிரசங்கியாராக ஊழியம் செய்கிறார். பிறப்பினால் இவர் புறஜாதியார். விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர். பவுல் விருத்தசேதனமில்லாத தீத்துவை தன்னோடுகூட  எருசலேமுக்கு கூட்டிக்கொண்டு போகிறார். விசுவாசத்தினால் மாத்திரமே நாம் நீதிமானாக முடியும் என்றும், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்றும் பவுல் பிரசங்கம் செய்கிறார். தன்னுடைய பிரசங்கத்திற்குச் சாட்சியாக, பவுல் தன்னோடுகூட, விருத்தசேதனம் செய்துகொள்ளாத தீத்துவையும் எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு போகிறார். 


பவுல் எருசலேமுக்கு தன்னுடைய சுயவிருப்பத்தின் பிரகாரமோ, சுயசித்தத்தின் பிரகாரமோ, சுயதிட்டத்தின் பிரகாரமோ போகவில்லை. தேவ அறிவிப்பினாலே அவர் எருசலேமுக்குப் போகிறார். அப்போஸ்தலருக்கு  தேவனுடைய விசேஷித்த வெளிப்பாடு கிடைக்கிறது. அவர்கள் தெய்வீக வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் சிலாக்கியம் பெற்றவர்கள். தெய்வீக வெளிப்பாட்டிற்கு கீழ்ப்படிகிறவர்கள். 


கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும்,  தேவனுடைய சித்தத்தின் பிரகாரம் ஜீவிக்கவேண்டும். தேவனுடைய வெளிப்பாடுகளையும், வழிநடத்துதல்களையும் பெற்றுக்கொள்ளவேண்டும். நம்முடைய பாதை  கர்த்தருக்குச் சித்தமான பாதையாகவும், அவருக்குப் பிரியமான பாதையாகவும் இருக்கவேண்டும். நாம் எங்குபோனாலும் இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்கிறவர்களாக இருக்கவேண்டும். 


அப்போஸ்தலர் பவுல் எருசலேமுக்குப் போய், புறஜாதிகளிடத்தில் அவர் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு தனிமையாய் விவரித்துக் காண்பிக்கிறார். அப்போஸ்தலர் பவுல்  ஊழியத்தில் உண்மையுள்ளவராகவும் விவேகமுள்ளவராகவும் இருக்கிறார். புறஜாதியார் மத்தியில் தான் பிரசங்கிக்கிற எந்த சுவிசேஷத்தையும் பவுல் மறைக்கவில்லை. ஊழிய அறிக்கையையும், உபதேச அறிக்கையையும், ஒளிவு மறைவில்லாமல், உள்ளதை உள்ளபடியே சொல்லுகிறார். தான் புறஜாதியார் மத்தியில் பிரசங்கித்த அதே சுவிசேஷத்தையே, இனிமேலும் பிரசங்கிக்க தீர்மானம் செய்திருக்கிறார். பவுலின் பிரசங்கச் செய்தியில்  மாற்றம் எதுவுமில்லை. 


தன்னுடைய ஊழியத்தைப்பற்றி எருசலேமிலுள்ள அப்போஸ்தலரிடம் பவுல் சொல்லும்போது மிகுந்த ஞானத்தோடும், மிகுந்த எச்சரிப்போடும் பேசுகிறார். புறஜாதிகளுக்கு  பவுல் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை, எல்லோருக்கும் முன்பாக, வெளிப்படையாக விவரித்துக் காண்பிக்காமல், அவர்களுக்கு தனிமையாய் விவரித்துக் காண்பிக்கிறார். எருசலேமிலுள்ள விசுவாசிகளில் அநேகர்  யூதமார்க்கத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர்கள். பவுலோ புறஜாதியார் மத்தியில் ஊழியம் செய்கிறவர். புறஜாதிகளிடத்தில் தான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை, எருசலேமிலுள்ள விசுவாசிகளுக்கு, வெளிப்படையாக விவரித்துக் காண்பித்தால், ஒருவேளை அவர்கள் பவுலுக்கு விரோதமாக கலகம் செய்யக்கூடும். பவுலின் ஊழியத்திற்கு அவர்கள் ஒருவேளை தடையாக இருப்பார்கள். பவுல் இதுவரையிலும் ஓடுகிறதும், ஓடினதும் வீணாய்ப் போய்விடுவதற்கு வாய்ப்புள்ளது. தன்னுடைய ஊழியத்திற்கு எந்தவிதமான தடையும் வரக்கூடாது என்பதில் பவுல் மிகுந்த எச்சரிப்போடிருக்கிறார்.  ஆகையினால் புறஜாதிகளிடத்தில், தான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை, எருசலேமிலுள்ள யூதமார்க்கத்தமைந்த விசுவாசிகளிடத்தில், தனிமையாய் விரித்துக் காண்பிக்கிறார். 


பவுல் எருசலேமிலுள்ள விசுவாசிகளிடத்தில் வெளிப்படையாய்ப் பேசினால் குழப்பமுண்டாகும்.  பவுலின் ஊழியம் பாதிக்கப்படும். அவர் இதுவரையிலும் பிரயாசப்பட்டு ஊழியம் செய்ததது வீணாய்ப் போகும். கர்த்தருடைய ஊழியத்தை இனிமேலும் தொடர்ந்து செய்வதற்கு தடைகள் உண்டாகும்.  கர்த்தருடைய சித்தத்தின்படி பவுலால் விடுதலையோடு ஊழியம் செய்யமுடியாது. இப்படிப்பட்ட பிரச்சனைகளையெல்லாம் பவுல் தன் மனதில் சிந்தித்துப் பார்த்து, தான் புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை, எருசலேமிலுள்ள விசுவாசிகளிடத்தில்,   தனிமையாய் விவரித்துக் காண்பிக்கிறார். 


எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் ஆதித்திருச்சபைக்குத் தலைவர்களாகயிருக்கிறார்கள். சபைகளை ஆளுகை செய்கிற அதிகாரம் அவர்களிடத்தில் பொறுப்பாய் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பவுல் புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் அங்கீகரிக்கவேண்டும். மற்ற இடங்களிலுள்ளவர்கள் பவுலின் பிரசங்கத்தை  அங்கீகரிக்கிறார்களா, அங்கீகரிக்கவில்லையா என்பது முக்கியமல்ல. எருசலேமிலுள்ளவர்கள் அங்கீகரிக்கவேண்டும். ஏனெனில் ஆதித்திருச்சபையின் அதிகாரம் எருசலேமிலுள்ள அப்போஸ்தலரிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது.


புறஜாதிகளிடத்தில் தான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தைக் குறித்து பவுல் உறுதியோடிருக்கிறார். எருசலேமிலுள்ள அப்போஸ்தலரிடம், தான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை, தனிமையாய் விவரித்துக் காண்பித்தாலும், பவுலின் வார்த்தையில் உறுதி இருக்கிறது. தான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை பவுல் உறுதியாய்ப் பின்பற்றுகிறார். பவுல் தன்னோடுகூட தீத்துவை எருசலேமுக்கு  அழைத்து வந்திருக்கிறார். அவர் ஒரு கிரேக்கர். தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளும்படிக்கு கட்டாயம் பண்ணப்படவில்லை. தீத்து விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளவேண்டுமென்று எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் யாரும் கட்டாயம்பண்ணவில்லை. புறஜாதி மார்க்கத்திலிருந்து இரட்சிக்கப்படுகிறவர்கள் விருத்தசேதனம் பண்ணவேண்டுமென்று எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் ஒருபோதும் கட்டாயம் பண்ணவில்லை.


புறஜாதியாரும் விருத்தசேதனம்பண்ணவேண்டுமென்று எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள்  கட்டாயம் பண்ணாவிட்டாலும், வேறுசிலர் இதைக் கட்டாயம் பண்ணுகிறார்கள். இவர்கள்  கள்ளச்சகோதரர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் தங்களுக்குண்டான சுயாதீனத்தை இவர்கள் உழவு பார்க்க வந்தவர்கள் என்று பவுல் இவர்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். தங்களை  நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும் பொருட்டாக பக்கவழியாக வந்த கள்ளச்சகோதரர்கள் என்றும் பவுல் இவர்களைப்பற்றிச் சொல்லுகிறார். 


விசுவாசிகளை நியாயப்பிரமாணத்திற்கு  அடிமைப்படுத்தவேண்டுமென்பதே கள்ளச்சகோதரரின் திட்டம். தீத்து பவுலோடு கூடயிருக்கிறார். தீத்து விருத்தசேதனம் பண்ணிக்கொண்டால், மற்றபுறஜாதியாரும் விருத்தசேதனம்பண்ணவேண்டுமென்று  சொல்லுவது கள்ளச்சகோதரருக்கு எளிதாக இருக்கும். புறஜாதியாரை விருத்தசேதனம் பண்ண வைத்தால், அவர்களை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கி விடலாம் என்பது கள்ளச்சகோதரரின் திட்டம். இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தைவிட, மோசேயின் பிரமாணத்திற்கு, இந்தக் கள்ளச்சகோதரர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 


விசுவாசிகளை நியாயப்பிரமாணத்திற்கு  அடிமைகளாக்க முயற்சி செய்யும் கள்ளச்சகோதரர்களுக்கு அப்போஸ்தலர் பவுல் எதிர்த்து நிற்கிறார். பவுலும் அவரோடு கூடயிருக்கிறவர்களும் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து இணங்கவில்லை.  விசுவாசிகளிடத்தில் சுவிசேஷத்தின் சத்தியம் நிலைத்திருக்க வேண்டுமென்பதே பவுலின் விருப்பம். ஆகையினால் பவுல் மோசேயின் பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து இணங்கவில்லை. முன்னோர்களின் பாரம்பரியங்களுக்கு பவுல் கீழ்ப்படியவில்லை. 


இயேசுகிறிஸ்து நமக்கு அடிமைத்தனத்தின் ஆவியைக்கொடுக்காமல் சுயாதீனத்தின் ஆவியைக் கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய இரத்தத்தினால் நம்மை, நம்முடைய பாவங்களுக்கும், சாபங்களுக்கும் விடுவித்திருக்கிறார். நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்திற்கு விடுவித்திருக்கிறார். இயேசுகிறிஸ்து கொடுத்திருக்கிற விடுதலையில் விசுவாசிகள் நிலைத்திருக்கவேண்டும் என்றும், தாங்கள் பெற்றுக்கொண்ட விடுதலையை இழந்துபோகக்கூடாது என்றும் பவுல் தீர்மானமாயிருக்கிறார். இதனால் பவுலும் அவரோடு கூடயிருக்கிறவர்களும், நியாயப்பிரமாணத்திற்கு தங்களை அடிமையாக்க நினைக்கும் கள்ளச்சகோதரருக்கு ஒரு நாழிகையாகிலும் கீழ்ப்படிந்து இணங்கவில்லை. 


அப்போஸ்தலர் பவுல் எருசலேமுக்கு வந்தபோது அங்குள்ள மற்ற அப்போஸ்தலரோடு உரையாடுகிறார். அவர் எருசலேமில் இருந்த நாட்களில், அங்குள்ள அப்போஸ்தலர்கள் பவுலுக்கு ஒன்றும் போதிக்கவில்லை.  பவுல் எருசலேமிலுள்ள அப்போஸ்தலரிடத்திலிருந்து அப்போஸ்தல அதிகாரத்தைப்பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களிடமிருந்து எந்த போதனையையும் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் எப்படிப்பட்டவர்களாகயிருந்தாலும் தனக்கு கவலையில்லை என்று பவுல் தெளிவுபடுத்துகிறார். தேவன் மனுஷரிடத்தில்  பட்சபாதமுள்ளவரல்ல. எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்களை நேசிக்கிற தேவன், பவுலையும் நேசிக்கிறார். இந்தச் சத்தியத்தில் பவுல் உறுதியாக இருக்கிறார்.


எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் பவுலுக்கு முன்பாகவே அப்போஸ்தல ஊழியத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் பவுல் தானும் அவர்களைப்போல, அவர்களுக்குச் சமமான அப்போஸ்தலர் என்று  தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் சுவிசேஷம் தேவனுடைய சித்தத்தினால் பவுலுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனுடைய வெளிப்பாட்டின் மூலமாகவே பவுல் தெய்வீக சத்தியங்களைப் பெற்றுக்கொண்டார். பவுல் வெளிப்பாட்டின் மூலமாகப் பெற்றுக்கொண்ட சத்தியத்தைத் தவிர, வேறு புதிய சத்தியம் எதையும், எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள்  அவருக்குப் போதிக்கவில்லை. பவுல் உபதேசிக்கிற சுவிசேஷத்திற்கு விரோதமாகவும் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.


பவுலின் அப்போஸ்தல ஊழியத்தை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் அங்கீகரிக்கிறார்கள். அவருடைய அப்போஸ்தல  அதிகாரத்தை அவர்களும் உறுதிபண்ணுகிறார்கள். தங்களைப்போல பவுலும் ஒரு அப்போஸ்தலர் என்று சொல்லி, அவரை அப்போஸ்தலராக அங்கீகாரம் செய்கிறார்கள். விருத்தசேதனமுள்ளவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே, விருத்தசேதனமில்லாதவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பவுலுக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது என்பதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் காண்கிறார்கள். 


ஆதித்திருச்சபையில் யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் தூண்களாக எண்ணப்பட்டவர்கள். பவுலுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள். பவுல் புறஜாதிகளுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கிக்கவேண்டுமென்று தீர்மானம் செய்கிறார்கள்.  எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள், பவுலோடும் அவருடைய உடன்ஊழியரோடும் அந்நியோந்நிய ஐக்கியத்தோடிருக்கவேண்டும் என்று தீர்மானம் செய்கிறார்கள். தங்களுடைய அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக அவர்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் வலது கை கொடுக்கிறார்கள். 


பவுல் மறுபடியும் எருசலேமுக்கு வந்தது மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கிறது.  எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் பவுலோடு இசைவாக ஒத்துப்போகிறார்கள். அவரோடு அந்நியோந்நிய ஐக்கியத்தில் இருக்கவேண்டுமென்று தீர்மானம் செய்கிறார்கள். அவர்கள் பவுலின் உபதேசத்தையும் நடத்தையையும் அங்கீகரிக்கிறார்கள். எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் பவுலுக்குப் புதிதாக ஒன்றும் போதிக்கவில்லை. ""தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்கு'' மாத்திரம் அவர்கள் பவுலுக்குச் சொல்லுகிறார்கள். பவுல் ஏற்கெனவே தரித்திரரை நினைக்கிறவர். அவர்கள்மீது மிகுந்த கரிசனையோடிருக்கிறவர்.  அவர்கள் தரித்திரரைப்பற்றிச் சொன்னது பவுலுக்குப் புதிய உபதேசமல்ல. ஏற்கெனவே பவுல் செய்கிற ஊழியத்தை, அவர் தொடர்ந்து செய்யுமாறு, அவரை உற்சாகப்படுத்துகிறார்கள். தரித்திரரை நினைத்துக்கொள்வதற்கு தான் முன்னமே கருத்துள்ளவராக இருந்ததாக பவுலும் குறிப்பிடுகிறார். 


கர்த்தருடைய ஊழியக்காரர்கள், தங்களைப்போல கர்த்தருக்கு ஊழியம் செய்கிற மற்ற ஊழியக்காரர்களுக்கும் மரியாதை காண்பிக்கவேண்டும். அவர்களோடு அந்நியோந்நிய ஐக்கியத்திலிருக்கவேண்டும்.  நம்மைப்போலவே கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கிற மற்ற ஊழியக்காரர்களையும் நேசிக்கவேண்டும். ஜனங்கள் மத்தியில் ஊழியம் செய்யும்போது, ஊழியக்காரரின் ஐக்கியமும் ஒற்றுமையும் ஜனங்களுக்குத் தெரியவேண்டும்.  ஊழியக்காரர் மத்தியில் அதிகமான குழப்பங்களும், கருத்து வேறுபாடுகளும், பிரிவினைகளும் இருக்குமென்றால், ஜனங்கள் மத்தியில் அவர்களால் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த முடியாது. 


 கலா 2:16-18 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் பிரயாணத்திற்கு 14 வருஷங்களுக்குப் பின்பு பவுல் எருசலேமிற்குப் பிரயாணம் பண்ணுகிறார். இந்தப் பிரயாணம் அப் 11:30 ஆவதுவசனத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் பிரயாணமா அல்லது அப் 15:4 ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரயாணமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 2கொரி 12:2 ஆவதுவசனத்தில் கூறப்பட்டிருக்கும் 14 வருஷங்களை இந்த நிகழ்ச்சியோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


விவரித்துக் காண்பித்தல் என்னும்  வார்த்தைக்கு விசாரணைக்காக ஒரு காரியத்தை விவரித்துக் கூறுதல் அல்லது அறிவித்தல் என்று பொருள். இது அப்போஸ்தலர் 15 ஆவது  அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் காரியமாக இருக்கலாம். ஆதித் திருச்சபையில் காணப்பட்ட மார்க்கப் பேதங்களையும், உபதேச பேதங்களையும் குறித்து விவாதம் பண்ணுவதற்காக பவுலும், பர்னபாவும் மற்றும் பலரும் கூடி வந்தார்கள். எருசலேமிலுள்ள ஏழைப் பரிசுத்தவான்களுக்குத் தருமப்பணத்தைச் சேகரித்து அங்கு கொண்டு சென்றபோது பவுல் எருசலேமில் அதிக நாட்கள் தங்கவும் இல்லை. உபதேசக் காரியங்களைக் குறித்து விவாதம் பண்ணவும் இல்லை.


 புறஜாதியாருக்குச் சுவிசேஷத்தை விவரித்துக் காண்பிப்பதற்கு முன்பாகப் பவுல் அப்போஸ்தலர்கள் மத்தியில் தன்னுடைய ஊழியத்தைக் குறித்து விவரித்துக் காண்பித்தார்.  தன்னுடைய ஊழியம் வீணாய்ப் போகக்கூடாது என்பதை மனதில் கொண்டு பவுல் இவ்வாறு ஞானமாகச் செயல்படுகிறார். ஒருசில சகோதரர்கள் பக்க வழியாய் நுழைந்து பவுலையும், அவருடைய உடன் ஊழியர்களையும் உளவுபார்த்தார்கள். இவர்கள் மூலமாகத் தன்னுடைய ஊழியம் தடைபடாமல் நடைபெற வேண்டுமென்பதற்காகவும், பவுல் இவ்வாறு ஞானமாகச் செயல்படுகிறார். இந்த ஆலோசனைகளுக்குப் பின்பு தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக் கொள்ளும்படிக்குக் கட்டாயம்            பண்ணப்படவில்லை. 


  பவுலின் திட்டங்களை அப்போஸ்தலர்கள் மாற்றவில்லை. புறஜாதியாருக்கு வேறொரு சுவிசேஷத்தை அறிவிக்குமாறும் கூறவில்லை. புறஜாதியார் மத்தியில் வேறொரு முறையில் சுவிசேஷ ஊழியம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தவும் இல்லை. பவுலின் உபதேசமும், மற்ற அப்போஸ்தலர்களுடைய உபதேசமும் ஒன்றுபோலவே உள்ளன. ஒரே ஆதாரத்திலிருந்தே இந்த உபதேசம் வந்திருக்கிறது. ஆகையினால் மற்ற அப்போஸ்தலர்கள் பவுலை ஆசீர்வதித்து புறஜாதியார் மத்தியில் ஊழியம் செய்ய அனுப்புகிறார்கள். 


  பவுலின் நாட்களில் சுவிசேஷத்திற்கு     ""விருத்தசேதனமில்லாதவர்களுக்குச் சுவிசேஷம்'' என்னும்  ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. புறஜாதியார்களுக்கும், சுவிசேஷம்          அறிவிக்கப்பட்டபடியினால் இவ்வாறு பெயர் வழங்கப்படலாயிற்று. யூதர்கள் மத்தியில் செய்யப்படும் சுவிசேஷத்திற்கு ""விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷம்'' என்னும் பெயர் வழங்கலாயிற்று. அக்காலத்தில் யூதமார்க்கத்திலிருந்து விசுவாசிகளான கிறிஸ்தவர்கள் மோசேயின் பிரமாணங்களில் சிலவற்றைக் கடைப்பிடித்து வந்தார்கள். இதற்கு ஆதித்திருச்சபையார் அனுமதி கொடுத்தனர். ஆனாலும் அந்தப் பிரமாணங்களைப் புறஜாதியாரும் கடைப்பிடிக்க வேண்டுமென்று அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை.


 விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டது.  பேதுருவின் ஊழியத்திலும், பவுலின் ஊழியத்திலும் அப்போஸ்தல ஊழியத்தின் அடையாளங்கள் நடைபெற்றன. பேதுரு யூதர் மத்தியிலே அற்புதங்களைச் செய்தார். பவுல் புறஜாதியார் மத்தியிலே அற்புதங்களைச் செய்தார்.         


  அப்போஸ்தலர்கள் மத்தியில் யாக்கோபும், கேபாவும், யோவானும் பிரபல்யமானவர்கள். ஆதித்திருச்சபைகளுக்குப் பேதுரு மட்டுமே பிரதான தலைவராக இருந்தார் என்று கூற இயலாது. பேதுருவைப் போல யோவானும், யாக்கோபும் ஆதித்திருச்சபைகளுக்கு முக்கியமான தலைவர்களாக இருந்தார்கள். நியாயப்பிரமாணத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், மிகவும் முக்கியத்துவம் உடையவர்களுக்கும் பெரிய காரியங்களைச் சாதித்தவர்களுக்கும் ""தூண்கள்'' என்னும் சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது.


 ""தரித்திரர்'' என்பது யூதேயாவிலுள்ள ஏழை விசுவாசிகளைக் குறிக்கும் வார்த்தை. நண்பர்கள் இவர்களைக் கைவிட்டுவிட்டார்கள். உறவினர்கள் இவர்களை வெளியே துரத்தி விட்டார்கள். வியாபாரம் செய்வதற்கு இவர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தன.   

பவுலும் பேதுருவும் கலா 2 : 11-14

கலா 2:11.  மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். 


கலா 2:12. எப்படியெனில், யாக்கோபினிடத்தி-ருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்த சேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.


கலா 2:13. மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான்.


கலா 2:14. இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்? 


அப்போஸ்தலர் பவுல் கலாத்தியருக்கு நிருபம் எழுதும்போது, தான் எருசலேமுக்கு இரண்டாம் முறையாக பிரயாணம் செய்தததை  எழுதுகிறார். அதன்பின்பு அவர் அந்தியோகியாவிலே, பேதுருவோடு பண்ணிய ஒரு விவாதத்தையும் குறிப்பிட்டு எழுதுகிறார். இதற்கு முன்பு இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, மிகுந்த ஒற்றுமையோடும், இசைவாகவும் இருந்தார்கள்.  ஆனால் இப்போதோ, பேதுரு செய்த ஒரு தப்பிதத்தினிமித்தம், பவுல் பேதுருவை எதிர்ப்பதற்கு ஆயத்தமாகயிருக்கிறார். 


பேதுரு புறஜாதியார் மத்தியிலும் ஊழியம் செய்தார். அவர்களுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய்தார். புறஜாதியாருடனே சாப்பிட்டார். அப்போது எருசலேமிலிருந்து யூதமார்க்கத்தமைந்த விசுவாசிகள் சிலர் பேதுருவிடத்திற்கு வந்தார்கள். அவர்களெல்லோரும் விருத்தசேதனமுள்ளவர்கள். அவர்கள் தன்னிடத்தில் வந்தபோது, பேதுரு அவர்களுக்குப் பயந்து, புறஜாதியாரைவிட்டு  விலகிப் பிரிந்தார். பேதுரு புறஜாதியாரை விட்டு விலகிப் பிரிவதைப் பார்த்து, மற்ற யூதரும் பேதுருவுடனேகூட மாயம் பண்ணினார்கள். இதுவரையிலும் புறஜாதியாருடனே சாப்பிட்டவர்கள், இப்போது மற்ற யூதர்களுக்குப் பயந்து, புறஜாதியாரை விட்டு விலகிப் பிரிகிறார்கள். புறஜாதியார்களுக்கு அப்போஸ்தலராக ஊழியம் செய்த பர்னபாவும் அவர்களில் ஒருவர். அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டார். பேதுருவும், அவருடனேகூட ஊழியம் செய்தவர்களும் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடக்கவில்லை.


பேதுருவும் பர்னபாவும் கர்த்தருக்கு அப்போஸ்தலர்களாக இருக்கிறார்கள்.  கிறிஸ்துவின் சுவிசேஷத்தை புறஜாதியார் மத்தியில் அப்போஸ்தல அதிகாரத்தோடு பிரசங்கம் செய்கிறார்கள். சபைக்குத் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களிடத்தில் பலவீனம் உண்டாகும்போது அது மற்றவர்களையும் அதிகமாகப் பாதிக்கிறது.  சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி தலைவர்கள் சரியாய் நடக்கவில்லையென்றால், அதனால் சபைக்கு அதிக பாதிப்பும், விசுவாசிகள் மத்தியில் அதிக குழப்பமும் உண்டாகிறது. ஆகையினால் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் மனுஷருக்குப் பயப்படாமல், கர்த்தருக்கு மாத்திரமே பயந்து ஊழியம் செய்யவேண்டும். மனுஷரைப் பிரியப்படுத்த ஊழியம் செய்யாமல், கர்த்தரையே பிரியப்படுத்தவேண்டும். உபதேசத்திலும் விசுவாசத்திலும் உறுதியாய் நிலைத்திருக்கவேண்டும். 


சபையின் தலைவர்கள் விசுவாசிகளுக்கு  நல்ல முன்மாதிரிகளாக இருக்கவேண்டும். தலைவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடக்கவில்லையென்றால், விசுவாசிகள் மத்தியில் அதிகமான குழப்பங்கள் உண்டாகிவிடும். விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் ஸ்திரமாக நிலைத்து நிற்கமாட்டார்கள். பிரசங்கம் செய்கிறவர்கள்  தாங்கள் பிரசங்கிக்கிற செய்திக்கேற்ற பிரகாரம் ஜீவிக்கவில்லையென்றால், அவர்களுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்கள், தாங்கள் கேட்ட பிரசங்கச் செய்திக்கேற்ற பிரகாரம் ஜீவிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. 


பேதுருவும் மற்ற யூதரும் மாய்மாலம் பண்ணுகிறார்கள். அப்போஸ்தலர் பவுல் அதைக் கண்டபோது, எல்லோருக்கும் முன்பாக பேதுருவைக் கடிந்துகொள்கிறார். பேதுரு யூதனாகயிருக்கிறார்.  அவர் புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி கட்டாயம்பண்ணுகிறார். இதற்காக பவுல் பேதுருவைக் கடிந்துகொள்கிறார். எல்லோருக்கும் முன்பாக பேதுருவைக் கடிந்துகொள்ள பவுல் பயப்படவில்லை. பவுல் தன்னுடைய உபதேசத்தில் உறுதியாக இருக்கிறார். மற்ற ஊழியரிடத்தில் தப்பிதம் காணப்படும்போது, பவுல் அதை கண்டும் காணாதவர்போல் இருக்கிறவரல்ல.  


புறஜாதியார்கள் யூதர் முறைமையாக நடந்தால் மாத்திரமே இரட்சிக்கப்பட முடியும் என்பது  தவறான உபதேசம். ஏனெனில் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லை. விசுவாசத்தினால் மாத்திரமே மனுஷன் நீதிமானாக்கப்படுகிறான். இதுவே அடிப்படை சத்தியம். பேதுரு இந்தச் சத்தியத்திற்கு மாறாக உபதேசம் செய்து மாய்மாலம் பண்ணினார்.  அவருடனேகூட மற்ற யூதரும் மாய்மாலம் செய்தார்கள். பவுல் அவர்களுடைய மாய்மாலத்தைக் கண்டிக்கிறார். பேதுருவை எல்லோருக்கும் முன்பாக கண்டிக்கிறார்.


 பேதுருவுக்கு புதிய ஏற்பாட்டின் ஒருசில பதிப்புக்களில் கேபா என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வசனத்தில் பேதுரு அல்லது கேபா என்று குறிப்பிடப் பட்டிருக்கிறவர் அப்போஸ்தலர் பேதுருவைக் குறிப்பவரா அல்லது வேறு யாராவது நபரைக் குறிப்பவரா என்று ஒருசிலர் விவாதம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வேதவாக்கியத்தில் பேதுருவைத் தவிர வேறு யாருக்கும் கேபா என்னும் பெயர் கொடுக்கப்படவில்லை.          


 யாக்கோபினிடத்தி-ருந்து சிலர் வருகிறதற்குமுன்னே பேதுரு புறஜாதியாருடனே சாப்பிட்டான். யூதர்களுக்கும், புறஜாதியாருக்கும் இடையே இருந்த பிரிவினையாகிய சுவர் இடிந்து விழுந்தது என்று பேதுரு பிரசங்கம் பண்ணினான். ஆனால் யாக்கோபினிடத்திலிருந்து ஒருசில யூதர்கள் வந்தபோதோ பேதுரு பயந்துபோய் புறஜாதியார் மத்தியில் தான் வைத்திருந்த ஐக்கியத்தை விலக்கிக் கொண்டு அவர்களைவிட்டுப் பிரிந்து போய்விட்டான். பவுல் இதை மாய்மாலமான செயல் என்று வர்ணிக்கிறார்.


   பவுல் பேதுருவையும், மாய்மாலமாக ஜீவித்த யூதரையும் நேரடியாகக் கடிந்து கொள்கிறார்.   பேதுரு பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்பாக பயந்த சுபாவம் உடையவனாயிருந்தான். பெந்தெகொஸ்தே நாளில் தான் பெற்ற தைரியத்தில் ஒரு பகுதியை பேதுரு இப்போது இழந்துவிட்டான்.  தவறு செய்யாதவன் ஒருவனும் இல்லை.  

கிறிஸ்துவுக்குள் நீதிமான்கள் கலா 2 : 15-21

கலா 2:15. புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.


கலா 2:16. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.


கலா 2:17. கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும் படிநாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ அல்லவே.


கலா 2:18. நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.


கலா 2:19. தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே  நியாயப் பிரமாணத்திற்கு மரித்தேனே.


கலா 2:20. கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப் பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.


கலா 2:21. நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. 


அப்போஸ்தலர் பவுல் பேதுருவின் மாய்மாலத்தை கண்டித்து எழுதுகிறபோது, சுவிசேஷத்தின் அடிப்படை சத்தியத்தையும்  இங்கு தெளிவாக எழுதுகிறார். இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் மாத்திரமே நாம் நீதிமானாக்கப்படுகிறோம்.  புறஜாதியாராகயிருந்தாலும், யூதராகயிருந்தாலும், நீதிமானாக்கப்படுவதற்கு இதுவே சத்தியம். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லை. கலாத்தியர் மத்தியில் பவுல் இந்த அடிப்படை சத்தியத்தை உபதேசம் பண்ணுகிறார். இந்த உபதேசத்தில்  அவர் நிலைத்து நிற்கிறார். கலாத்தியருக்கு எழுதின இந்த நிருபத்தில், பவுல் இந்த உபதேசத்தை தெளிவுபடுத்தி உறுதிபண்ணுகிறார்.


 யூதமார்க்கத்தமைந்த விசுவாசிகளும் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள்.  தங்கள் பாவம் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் மன்னிக்கப்படும் என்று அவர்கள் விசுவாசித்தால், கிறிஸ்துவில் அவர்கள் வைத்திருக்கிற விசுவாசம் பிரயோஜனமற்றதாக இருக்கும்.  ஏனெனில் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயே நாமெல்லோரும் இரட்சிக்கப்படுகிறோம். அப்படியிருக்கும்போது நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் தாங்கள் நீதிமான்களாக்கப்படுவதாக யூதமார்க்கத்மைந்த  விசுவாசிகள் விசுவாசிக்கிறார்கள். இப்படிப்பட்ட விசுவாசமுள்ளவர்களுக்கு, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசம் தேவையற்றதாகவே இருக்கும். இவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கிற விசுவாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,  நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைச் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 


கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி யூதர்களும் நாடுகிறார்கள். ஆனால் அவர்கள் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் பாவிகளாகக் காணப்படுகிறார்கள். இவர்களுடைய பாவத்திற்கு கிறிஸ்து காரணரல்ல. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் நீதிமான்களாக்கப்பட முடியும் என்பது யூதமார்க்கத்தின் உபதேசம். அந்த உபதேசத்திலிருந்து விட்டுப்பிரிந்து, யூதமார்க்கத்தமைந்த விசுவாசிகள், கிறிஸ்துவைப் பற்றிக்கொள்கிறார்கள்.  கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிறார்கள். கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படும்படிக்கு கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளாக இருக்கிறார்கள். இது புதிய அனுபவம். நியாயப்பிரமாணத்தின் கிரியை பழைய அனுபவம். பழைய சுபாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, கிறிஸ்துவுக்குள் புதிய சுபாவத்தைப் பெற்றிருக்கிறார்கள்.  


அப்போஸ்தலர் பவுல் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இரட்சிக்கப்பட்ட பின்போ, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் தான் நீதிமானாவதில்லைஎன்றும், இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் மாத்திரமே தான் நீதிமானாக்கப்படுவதாகவும் உறுதியாகச் சொல்லுகிறார். யூதமார்க்கத்தின் பழைய உபதேசத்தை இடித்துப்போட்டு, கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பற்றிக்கொண்டார்.  கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், அவர்கள் இடித்துப்போட்டவைகளை மறுபடியும் கட்டுகிறவர்களாகயிருப்பார்கள். பவுல் அப்படியிருக்க விரும்பவில்லை. பவுல், தான் இடித்துப்போட்டதை மறுபடியும் கட்டினால், அவர் பிரமாணத்தை மீறுகிறவர் என்று காணப்படுவார். நியாயப்பிரமாணத்தை மீறின பாவத்திற்கு உட்பட்டவராகக் காணப்படுவார். ஆனால் பவுலோ தேவனுக்கென்று பிழைக்கும்படியாக, நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்திருக்கிறார்.  


அப்போஸ்தலர் பவுல் நியாயப்பிரமாணத்தைக் குறித்து தன்னுடைய  உபதேசத்தைச் சொல்லுகிறார். அவர் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்திருக்கிறார். நியாயப்பிரமாணத்தின் கிரியையினால் நீதிமானாக்கப்படமுடியும் என்று பவுல் எதிர்பார்க்கவில்லை. இயேசுகிறிஸ்துவைப்பற்றிய  விசுவாசமே தன்னை நீதிமானாக்கும் என்று பவுல் விசுவாசிக்கிறார். இயேசுகிறிஸ்து பாவிகளை இரட்சிக்க தம்மையே பாவநிவாரண பலியாகச் செலுத்தியிருக்கிறார். மனுஷரை மீட்பதற்கு, தம்முடைய சொந்த இரத்தத்தையே, மீட்பின் கிரயமாகச் செலுத்தியிருக்கிறார்.  மனுஷருடைய இரட்சிப்புக்கு இயேசுகிறிஸ்துவைத் தவிர வேறொரு பலி தேவையில்லை.


அப்போஸ்தலர் பவுல் நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவராகயிருந்தாலும், தன்னை நியாயப்பிரமாணமில்லாதவராக   காண்பித்துக்கொள்ளவில்லை. தேவனுக்கென்று பிழைக்கும்படியாகவே, அவர் நியாயப்பிரமாணத்திற்கு மரித்திருக்கிறார்.  சுவிசேஷத்தின் உபதேசம் நம்முடைய கடமைகளிலிருந்து நமக்கு விடுதலை கொடுக்காது. நாம் செய்யவேண்டிய கடமைகளை நாம் செய்தே ஆகவேண்டும். நம்முடைய கடமைகளைச் செய்வதற்கு சுவிசேஷம் நம்மைப் பலப்படுத்துகிறது. அப்போஸ்தலர் பவுல் நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவராகயிருந்தாலும், தேவனுக்கென்று பிழைக்கும்படியாகவே அவர் நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவராகயிருக்கிறார். தேவனுக்கென்று புதிய ஜீவனையும், மேன்மையான ஜீவனையும் ஜீவிக்கும்படியாகவே, அவர் நியாயப்பிரமாணத்திற்கு மரித்திருக்கிறார். 


அப்போஸ்தலர் பவுல் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் தேவனுக்கென்று பிழைக்கிறார். அவர் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார்.  ஆயினும் பிழைத்திருக்கிறார். இனி அவரல்ல, கிறிஸ்துவே அவருக்குள் பிழைத்திருக்கிறார். அப்போஸ்தலர் பவுல் மாம்சத்தில், இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தில் பிழைத்திருக்கிறார்.


தேவனுடைய கிருபையில் பவுல் ஆறுதலடைந்திருக்கிறார். தேவகிருபை அவருக்கு சுயமாய்க் கிடைக்கவில்லை. அந்தக் கிருபையை அவர் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்டார்.  கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பவுலிடத்தில் அன்புகூர்ந்து, அவருக்காக, தம்மைதாமே ஒப்புக்கொடுத்திருக்கிறார். கிறிஸ்துவின் மரணத்தை பவுல் நினைவுகூர்ந்து, தானும் பாவத்திற்கு மரித்திருப்பதாகச் சொல்லுகிறார்.  பவுல் பாவத்திற்கு மரித்திருந்தாலும் கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கிறார். கிறிஸ்து தனக்குள் பிழைத்திருப்பதாக பவுல் அறிக்கை செய்கிறார். 


பவுல் மாம்சத்தில் பிழைத்திருக்கிறார்.  அதே வேளையில் அவர் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறார். வெளிப்பார்வைக்கு பவுல்  மற்ற மனுஷரைப்போல இருந்தாலும், அவருடைய உள்ளான ஜீவியம் வித்தியாசமாகயிருக்கிறது. அவர் மாம்சத்தில் பிழைத்திருந்தாலும், அவர்  விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறார். உண்மையான விசுவாசமுடையவர்கள், விசுவாசத்தினாலே பிழைப்பார்கள். எல்லோரும் மாம்சத்தில் பிழைத்திருந்தாலும், எல்லோரும் விசுவாசத்தினாலே பிழைத்திருப்பதில்லை.  கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமோ, மாம்சத்திலே, விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறோம். இதுவே கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கும், உலகப்பிரகாரமான ஜனங்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசம். 


இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நாம் நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம்.  நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லை. அப்போஸ்தலர் பவுல், நீதிமானாக்கப்படுவதைப்பற்றிச் சொல்லும்போது, தேவனுடைய கிருபையைப்பற்றியும் சொல்லுகிறார்.  பவுல் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வராது. அது தேவனுடைய கிருபையினால் மாத்திரமே வரும். நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்கும் என்று பவுல் சொல்லுகிறார். மோசேயின் பிரமாணத்தினால் நமக்கு இரட்சிப்பு வருமென்றால், கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்தது தேவையற்றதாகயிருக்கும். மோசேயின் பிரமாணத்தினால் மனுஷருக்கு இரட்சிப்பு உண்டாகாது. ஆகையினால்தான் நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து, மனுக்குலத்திற்கு  இரட்சிப்பை உண்டுபண்ணுவதற்காக, கல்வாரி சிலுவையில் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார். 


""சுபாவத்தின்படி யூதர்'' என்பது யூத தேசத்தின் பிரஜைகள். யூதப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்களைக்குறிக்கும். தேவனைப் பற்றியும், நியாயப்பிரமாணத்தைப் பற்றியும் அறிவில்லாத புறஜாதியாரை அக்காலத்தில் புறஜாதியாரில் பிறந்த பாவிகள் என்று அழைத்தார்கள். ஒரு மனுஷன் எவ்வாறு நீதிமானாக்கப்படுகிறான் என்பதை இந்த வாக்கியம் தெளிவாக விளக்குகிறது.  


 கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப் படும் படிநாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோம். ஆனாலும் நமது பாவத்திற்குக் கிறிஸ்து காரணமல்ல. கிறிஸ்துவின் மரணத்தினால் நியாயப்பிரமாணம் இடித்துப் போடப்பட்டது. இதை நாம் மறுபடியும் கட்டக்கூடாது. திரும்பவும் கட்டுவது இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு எதிரான செயல். இதைச் செய்யும்போது நாம் கிறிஸ்துவிற்கு எதிராகக் கலகம் பண்ணுகிறவர்களாக இருப்போம்.  


பவுல் நியாயப்பிரமாணத்திற்கு மரித்தார். தேவனுக்கென்று பிழைக்கும்படியாக பவுல் நியாயப்பிரமாணத்திற்கு மரித்தார். தனக்காக நியாயப்பிரமாணம் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததாகக் கூறுகிறார். ஆகையினால் இயேசு கிறிஸ்துவுடனேகூட பவுலும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார். இயேசு கிறிஸ்து உயிரோடு எழும்பிய போது தானும் உயிரோடு எழும்பியதாகவும் பவுல் கூறுகிறார்.   


 இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார். ஆகையினால் நியாயப் பிரமாணத்தின் மூலமாக இரட்சிப்பு இல்லை என்பது தெளிவாகிறது.  பவுல் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டு அவரோடேகூட பிழைத்தும் இருக்கிறார். ஆகையினால் தனக்குள் பிழைத்திருப்பது தானல்ல. கிறிஸ்துவே தனக்குள் பிழைத்திருப்பதாகக் கூறுகிறார். பவுல் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, தன்னில்  அன்புகூர்ந்து தனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருப்பதாகப் பவுல் கூறுகிறார்.


பவுல் தேவனுடைய கிருபையை விருதாவாக்குவதில்லை. நீதி, நீதிமானாக்கப்படுதல், இரட்சிப்பு ஆகியவை நியாயப் பிரமாணத்தினால் வரவில்லை. அவை நியாயப்பிரமாணத்தினால் வருமென்றால் கிறிஸ்து மரித்தது வீணாய் இருக்கும். நீதி, நீதிமானாக்கப்படுதல், இரட்சிப்பு ஆகியவை நியாயப்பிரமாணத்தினால் வராமல் கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாகவே வருகிறது. கிறிஸ்துவின் மரணம் நமது இரட்சிப்பிற்கு மிகவும் பயனுள்ளது. நியாயப்பிரமாணம் நமது இரட்சிப்பிற்குப் பயனற்றது.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.