கலாத்தியர் 6ஆம் அதிகாரம் விளக்கம்
இந்த அதிகாரம் இரண்டு பிரிவாகப் பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு விசுவாசியும் மற்ற விசுவாசிகளோடு எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றியும், விசுவாசிகளுடைய ஆவிக்குரிய கடமைகளைப்பற்றியும் பவுல் முதலாவது பகுதியில் தெளிவுபடுத்தி எழுதுகிறார் (கலா 6:1-10). யூதமார்க்கத்து கள்ளப்போதர்களுக்கு விரோதமாக கலாத்தியர்கள் எச்சரிப்போடு தங்களைக் காத்துக்கொள்ளவேண்டுமென்று இந்த நிருபத்தின் இரண்டாவது பகுதியில் பவுல் எழுதுகிறார். கள்ளப்போதகர்களின் சுபாவங்களை பவுல் வெளிப்படுத்திக் காண்பிக்கிறார் (கலா 6:11-14). தன்னுடைய சுபாவத்தையும் நடக்கையையும் பற்றி இந்த நிருபத்தில் எழுதுகிறார். நிருபத்தின் முடிவுரையாக விசுவாசிகளுக்கு அப்போஸ்தல ஆசீர்வாதத்தை பயபக்தியோடு சொல்லி, இந்த நிருபத்தை நிறைவு செய்கிறார்.
கிறிஸ்துவினுடைய ƒபிரமாணம் கலா 6 : 1-10
சீர்பொருந்தப்பண்ணுங்கள்
சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு (கலா 6:1).
ஒரு சில விசுவாசிகள் ஏதாவது குற்றத்தில் அகப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அவர்கள் சோதனையில் எதிர்பாராமல் சிக்கி பாவம் செய்திருக்கலாம். இப்படிப்பட்டவர்கள்மீது மற்ற விசுவாசிகள் கடினமாக நடந்துகொள்ளக்கூடாது. சாந்தமுள்ள ஆவியோடே அவர்களை சீர்பொருந்தப்பண்ணவேண்டும். ஒரு சிலர் வேண்டுமென்றே துணிகரமாகப் பாவம் செய்வார்கள். இப்படிப்பட்டவர்களைக் கண்டிக்கவேண்டும். வேறுசிலர், எதிர்பாராமல் சில குற்றத்தில் அகப்பட்டுக்கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களை சாந்தமுள்ள ஆவியோடே சீர்பொருந்தப்பண்ணவேண்டும்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஆவிக்குரியவர்கள். நம்மிடத்தில் ஆவிக்குரிய சுபாவங்கள் காணப்படவேண்டும். குற்றத்தில் அகப்பட்டிருக்கிறவர்களை சாந்தமுள்ள ஆவியோடே சீர்பொருந்தப்பண்ணவேண்டும். இது ஆவிக்குரிய விசுவாசிகளின் கடமை. ""சீர்பொருந்தப்பண்ணுதல்'' என்னும் வார்த்தையானது, ""முறிந்துபோன எலும்புகளை மறுபடியும் கட்டி ஒட்டவைத்தல்'' என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. எலும்புகள் பிசகிவிட்டால், அதை மிகவும் கவனமாக மறுபடியும் ஒன்றுசேர்க்கவேண்டும். உடைந்த எலும்புகளை முரட்டுத்தனமாகச் சேர்க்க முடியாது. நிதானமாக செயல்படவேண்டும். அதுபோலவே விசுவாசிகள் ஏதாவது குற்றத்தில் அகப்பட்டு விட்டால், அவர்களிடம் முரட்டுத்தனமாக கடிந்துகொள்ளக்கூடாது. முறிந்துபோன எலும்புகளை மிகவும் கவனமாக மறுபடியும் ஒட்டவைப்பதுபோல, குற்றத்தில் அகப்பட்டிருக்கிற விசுவாசிகளை, சாந்தமுள்ள ஆவியோடே சீர்பொருந்தப்பண்ணவேண்டும். அவர்களுடைய தப்பிதங்களை மன்னிக்கவேண்டும். நாம் அவர்கள்மீது அன்பாகயிருக்கிறோம் என்பதை அவர்களுக்கு உறுதிபண்ணவேண்டும்.
குற்றத்தில் அகப்பட்டிருக்கிற விசுவாசிகள்மீது நாம் கோபப்படக்கூடாது. சாபவார்த்தைகளைச் சொல்லி அவர்களை பயமுறுத்தக்கூடாது. அவர்களிடத்தில் அன்பான வார்த்தைகளைப் பேசவேண்டும். சாந்தமுள்ள ஆவியோடு அவர்களிடம் பழகவேண்டும். அவர்களை எப்படியாவது மறுபடியும் விசுவாச ஜீவியத்திற்கு அழைத்து வரவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய சகோதரர் பாவத்தில் விழுந்துவிட்டால், அதைப் பார்த்து நாம் சந்தோஷப்படக்கூடாது. ஆவிக்குரிய மற்ற சகோதரர்கள் பாவத்தில் விழுந்துபோவதை நமக்கு வெற்றியாக நினைக்கக்கூடாது.
பல சமயங்களில் குற்றத்தில் அகப்பட்டிருக்கிற சகோதரரை நாம் கடினவார்த்தைகளைச் சொல்லி திருத்துவதுற்கு முயற்சிபண்ணுகிறோம். ஆனால் அவர்களோ சீர்பொருந்துவதற்குப்பதிலாக சீரழிந்துபோகிறார்கள். கடினவார்த்தைகளினாலோ, கோபமான வார்த்தைகளினாலோ ஆவிக்குரிய பிரயோஜனம் உண்டாவதில்லை. ஆகையினால் அவர்களை சாந்தமுள்ள ஆவியோடு சீர்பொருந்தபண்ணவேண்டியது அவசியமாயிருக்கிறது. அவர்களிடத்தில் அன்பாகப் பேசவேண்டும். அவர்களுடைய ஆத்துமாவைக்குறித்து கரிசனையுடன் பேசவேண்டும். அவர்கள் கர்த்தரோடு மறுபடியும் ஒப்புரவாகவேண்டும். அவர்கள் சீர்பொருந்தப்பண்ணப்படவேண்டும்.
ஆவிக்குரியவர்களாகிய நாம் மற்ற சகோதரரிடத்தில் சாந்தமுள்ள ஆவியோடு அவர்களை சீர்பொருந்தப்பண்ணவேண்டும். இதற்கு முக்கியமான காரணம், நாமும் குற்றத்தில் அகப்படுவதற்கு வாய்ப்புள்ளது. நாமும் சோதிக்கப்பட்டு, பாவத்தில் விழுந்து விடுவதற்கு வாய்ப்புள்ளது. நாம் மற்ற சகோதரர்களிடத்தில் எப்படி பழகுகிறோமோ, அப்படித்தான் மற்றவர்களும் நம்மோடு பழகுவார்கள். நாம் மற்றவர்களிடம் சாந்தமுள்ள ஆவியோடு பழகினால், அவர்களும் நம்மோடு சாந்தமுள்ள ஆவியோடு பழகுவார்கள். ஆகையினால் நாம் சோதிக்கப்படாதபடிக்கு நம்மைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும்.
மற்ற சகோதரர்கள் இன்று பாவம் செய்திருக்கலாம். இதே போன்ற பிரச்சனை நாளைக்கு நமக்கும் வரலாம். நிற்கிற நாம் விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாயிருக்கவேண்டும். மற்றவர்களோடு எப்படி பழகுகிறோமோ அப்படித்தான் மற்றவர்களும் நம்மோடு பழகுவார்கள். மற்றவர்கள் நமக்கு எதைச் செய்யவேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ, அதை நாம் அவர்களுக்கு முந்திச் செய்யவேண்டும். மற்றவர்கள் நம்மோடு சாந்தமுள்ள ஆவியோடு பேசவேண்டுமென்று விரும்பினால், நாம் முதலில் அவர்களோடு சாந்தமுள்ள ஆவியோடு பேசவேண்டும்.
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் (கலா 6:2).
நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கவேண்டும். நமக்கு முன்பாக யாராவது பாரம் சுமப்பார்களென்றால், அவர்களுடைய பாரத்தை நாமும் சுமக்க ஆயத்தமாயிருக்கவேண்டும். அவர்கள்மீது கரிசனையோடும், அன்போடும் இருந்து, அவர்களுக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் செயல்படவேண்டும். ஒரு சிலர் சோதனைகளில் சிக்கிக்கொள்ளலாம். பாடுகளை அனுபவிக்கலாம். அப்படிப்பட்டவர்களை நாம் சந்திக்கும்போது, அவர்களைக் கண்டும் காணாதவர்கள்போல இருந்துவிடக்கூடாது. அவர்களுடைய சோதனைக்காலத்தில் நாம் அவர்களுக்கு உதவியாயிருக்கவேண்டும்.
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கும்போது நாம் கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுகிறோம். கிறிஸ்துவின் பிரமாணம் அன்பின் பிரமாணம். இயேசுகிறிஸ்து தம்முடைய பிரமாணத்திற்கு எடுத்துக்காட்டாக ஜீவித்தவர். இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையும் அவருடைய சுபாவமும் நமக்கு முன்மாதிரியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் சுபாவமே அவருடையபிரமாணம். இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற நம்மிடத்தில், கிறிஸ்துவின் பிரமாணம் கிரியை செய்யவேண்டும்.
இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற விசுவாசிகள் மோசேயின் பிரமாணத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். அதே வேளையில் அவர்கள் கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறார்கள். மோசேயின் பிரமாணம் ஜனங்கள்மீது தேவையில்லாத கடினபாரத்தைச் சுமத்துகிறது. கிறிஸ்துவின் பிரமாணமோ, ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கவேண்டும் என்று சொல்லுகிறது. மோசேயின் பிரமாணம் நம்மீது பாரத்தைச் சுமத்துகிறது. கிறிஸ்துவின் பிரமாணத்தில் நாம் மற்றவர்களுடைய பாரத்தைச் சுமக்கிறோம்.
விழுந்துபோன சகோதரரை மேலும் துன்புறுத்தக்கூடாது. கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றும் விதமாக ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டும். மற்றவர்களிடத்தில் அன்பையும், இரக்கத்தையும், கரிசனையையும் காண்பிக்க வேண்டும்.
தன்னைத்தானே வஞ்சிக்கிறவன்
ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான் (கலா 6:3).
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மிடத்தில் பெருமை காணப்படக்கூடாது. ôம் ஒன்றுமில்லாதவர்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். நாம் ஒன்றுமில்லாதிருந்தும், நம்மை நாமே ஒரு பொருட்டு என்று எண்ணினால், நம்மைநாமே வஞ்சிக்கிறவர்களாகயிருப்போம். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்பதற்கு நம்முடைய சுயபெருமை தடையாக இருக்கும். பெருமையும் அகந்தையும் சத்துருவின் சுபாவம். பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ அவர் கிருபை செய்கிறார்.
நம்முடைய சுபாவத்தை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். நம்மிடத்தில் தீயசுபாவம் ஏதாவது இருக்குமென்றால் அதை ஆரம்பத்திலேயே நீக்கிப்போடவேண்டும். ஒரு சிலரிடத்தில் ஒன்றுமே இருக்காது. ஆனால் தங்களிடத்தில் எல்லாம் இருப்பதாக நினைத்து அவர்கள் பெருமைப்படுவார்கள். இப்படிப்பட்ட சுபாவத்தை பவுல் எச்சரிக்கிறார். சுயபெருமையினால் அவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக்கொள்கிறார்கள். சுயபெருமையுடையவர்கள் மற்றவர்களை ஏளனமாகப் பார்க்கிறார்கள். தங்களிடத்தில் மேன்மையான குணம் எதுவும் இல்லாவிட்டாலும், மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்களென்று நினைக்கிறார்கள். இப்படி நினைக்கிறவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக்கொள்கிறார்கள்.
சுயபெருமையுள்ளவர்கள் எளிதில் மனந்திரும்பமாட்டார்கள். சோதனையை மேற்கொள்ளமாட்டார்கள். பாடுகளையும் வேதனைகளையும் சகித்துக்கொள்ளமாட்டார்கள். சுயபெருமையுள்ளவர்களுக்கு அவர்களுடைய உண்மையான சுபாவம் தெரியாது. ஆகையினால் சோதனையின்போது சீக்கிரத்தில் விழுந்துவிடுவார்கள். நிற்கிறேன் என்று தன்னைப்பற்றி நினைக்கிறவன், கீழே விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாயிருக்கவேண்டும். சுயபெருமையானது சுயவஞ்சனையாகவே இருக்கிறது. இவர்களை மற்றவர்கள் வஞ்சிக்க வேண்டியதில்லை. இவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக்கொள்வார்கள்.
மார்க்கவெறியுடையவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள்
1. யோசுவா (எண் 11:27-29)
2. யூதர்களில் சிலர் (யோவான் 4:9,27)
3. சமாரியர்களில் சிலர் (லூக்கா 9:52-53)
4. சீஷர்கள் (மத் 19:13; லூக்கா 9:49-56)
5. சவுல் (அப் 9:1-5; அப் 22:3-4)
6. ஆதிக் கிறிஸ்தவர்களில் சிலர் (அப் 11:1-3)
சுயகிரியை
அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும் (கலா 6:4).
ஒவ்வொருவரும் தன்தன் சுயகிரியையை சோதித்துப்பார்க்க வேண்டுமென்று பவுல் ஆலோசனை சொல்லுகிறார். சுயகிரியை என்பது நம்முடைய சுயசுபாவத்தைக் குறிக்கிறது. தேவனுடைய வார்த்தை நம்மை ஆளுகை செய்கிறதா, கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி நாம் ஜீவிக்கிறோமா என்று நம்மைநாமே சோதித்துப் பார்க்கவேண்டும். மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, நம்மைநாமே சோதித்துப் பார்த்து, நம்மை நியாயந்தீர்த்துக்கொள்ளவேண்டும். நம்முடைய வழிகளைச் சோதித்துப் பார்க்கவேண்டும். நம்முடைய தொழிலைச் சோதித்துப்பார்க்கவேண்டும். மற்றவர்களுடைய குடும்பங்களை சோதித்துப் பார்த்து, அவர்களை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, நம்முடைய குடும்பங்களைச் சோதித்துப் பார்க்கவேண்டும்.
நம்முடைய சுயகிரியைகளை நாம் சோதித்துப் பார்க்கும்போது, நமக்குள் பெருமை இருக்காது. நாம் ஒன்றுமில்லாதவர்கள் என்பதைப் புரிந்துகொண்டு, நம்மை ஒரு பொருட்டு என்று சொல்லி, நம்மை நாமே மேன்மை பாராட்டமாட்டோம். நம்முடைய இருதயத்தின் சிந்தனைகளையும், நாம் நடக்கிற வழிகளையும் சோதித்துப் பார்க்கவேண்டும். மற்றவர்களுக்கு உபகாரம் செய்யாவிட்டாலும், அவர்களுக்கு உபத்திரவம் பண்ணாமலிருக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். பிறருக்கு உதவிசெய்யும் நல்ல சுபாவம் நம்மிடத்தில் வரவேண்டும்.
நம்மைநாமே பார்க்கும்போது, நம்மிடத்தில் நல்ல சுபாவங்கள் காணப்படுமென்றால், நமக்கு நம்மைக்குறித்து மேன்மை பாராட்ட இடமுண்டாகும். நம்முடைய சுபாவம் நமக்குச் சந்தோஷத்தைத் தரும். மற்றவர்களைப் பார்த்தால் சில சமயங்களில் நமக்கு எரிச்சலும் பொறாமையும் வரும். நம்மைநாமே பார்க்கும்போது, நம்முடைய உண்மையான சுபாவம் நமக்குத் தெரியவரும். நம்முடைய நற்குணத்தில் நாம் திருப்தியாயிருப்போம். கர்த்தருக்குள் சந்தோஷமாயிருப்போம். தேவனுடைய வார்த்தையின்படி நம்முடைய வாழ்க்கையைச் சீர்பொருந்தப்பண்ணுவோம். கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருப்போம். கர்த்தருக்குப் பிரியமாக ஜீவிப்போம்.
நாம் கர்த்தருக்குள் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்றால், நம்முடைய சுயகிரியைகள் கர்த்தருக்குப் பிரியமானதாக இருக்கவேண்டும். நம்முடைய கிரியைகள் கர்த்தரைச் சந்தோஷப்படுத்தவேண்டும். அப்போதுதான் நமக்குள் மெய்யான சந்தோஷமுண்டாகும். நம்முடைய நற்கிரியைகளைக் குறித்து நம்முடைய மனச்சாட்சி நமக்கு நற்சாட்சி கொடுக்கும். மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன சொல்வார்களென்றோ, நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களென்றோ அதிகமாய்க் கவலைப்படக்கூடாது. கர்த்தருடைய பார்வையில் நாம் எப்படியிருக்கிறோம் என்பதை கண்டுபிடிக்கவேண்டும். அதற்காக ஒவ்வொரு விசுவாசியும் தன்தன் கிரியைகளைச் சோதித்துப் பார்க்கவேண்டும். அப்போது மற்றவர்களைப் பார்க்கும்போது அல்ல, தங்களையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவர்களுக்கு இடமுண்டாகும்.
தன் பாரம்
அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே (கலா 6:5).
ஒவ்வொரு விசுவாசியும் தன்தன் பாரத்தைச் சுமக்கவேண்டுமென்று அப்போஸ்தலர் பவுல் ஆலோசனை சொல்லுகிறார். தேவனுடைய மகா நியாயத்தீர்ப்பு நாளின்போது, நாம் ஒவ்வொருவரும் நம்மைக்குறித்து கர்த்தருக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். தேவனுடைய சமுகத்தில் நாம் நியாயம் விசாரிக்கப்படுவோம். நாம் செய்த நன்மைகளுக்காகவது அல்லது தீமைகளுக்காகவது ஏற்ற பலனை அப்போது பெற்றுக்கொள்வோம். நன்மை செய்திருந்தால் நமக்கு ஆசீர்வாதம் உண்டு. தீமை செய்திருந்தால் நமக்கு தண்டனை உண்டு. நியாயத்தீர்ப்பு நாளின்போது ஒவ்வொருவரும் தன்தன் பாரத்தைச் சுமக்கவேண்டும்.
நியாயத்தீர்ப்பு நாளின்போது, கர்த்தருடைய சமுகத்தில், நம்மைக் குறித்து நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டியது நிச்சயம். ஆகையினால் இப்பிரபஞ்சத்தில் நாம் ஜீவிக்கும்போதே, கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்கிறவர்களாக ஜீவிக்கவேண்டும். நம்முடைய கிரியைகளைச் சோதித்துப் பார்க்கவேண்டும். கர்த்தருக்குப் பிரியமானபடி ஜீவிக்கவேண்டும். நம்மையும் நம்முடைய கிரியைகளையும் கர்த்தர் அங்கீகரிக்கவேண்டும்.
நாம் மற்றவர்களை நியாயந்தீர்க்காமல், மற்றவர்கள்மீது அதிக பாரத்தைச் சுமத்தாமல், ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கும்போது, கர்த்தருடைய பிரமாணத்தை நிறைவேற்றுகிறோம். நம்முடைய பாரத்தை நாம் கட்டாயம் சுமந்தே ஆகவேண்டும். அதே வேளையில் நாம் மற்றவர்களுடைய பாரத்தைச் சுமக்கும்போது, நம்மிடத்திலுள்ள நற்குணத்தை வெளிப்படுத்துகிறோம். ஆவியின் கனி நம்மூலமாக வெளிப்படுகிறது. கிறிஸ்துவின் பிரமாணத்தை நம்முடைய ஜீவியத்தில் நிறைவேற்றுகிறோம்.
உபதேசிக்கப்படுகிறவன்
மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன் (கலா 6:6).
விசுவாசிகள் ஊழியக்காரர்களுக்கு தாராளமாய் உதவிசெய்யவேண்டும். ஊழியத்திற்கும், ஊழியக்காரர்களுக்கும் உதாரத்துவமாய்க் கொடுக்கவேண்டும். கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களின் நன்மையை விசாரிக்கிறார். அவர்களைப் போஷித்துப் பராமரிக்கிறார். ஊழியக்காரர்கள் விசுவாசிகளுக்கு திருவசனத்தை உபதேசிக்கிறார்கள். திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிற விசுவாசிகள், தங்களுக்கு வசனத்தை உபதேசிக்கிற ஊழியக்காரர்களுக்கு, சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கவேண்டும்.
ஒரு சிலர் திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் திருவசனத்தை உபதேசிக்கிறவர்களாக இருப்பார்கள். கர்த்தரே தம்முடைய ஊழியக்காரர்களை திருவசனத்தை உபதேசிக்க நியமித்திருக்கிறார். உபதேசிக்கிறவர்களுக்கும், உபதேசிக்கப்படுகிறவர்களுக்கும் வித்தியாசமுண்டு. உபதேசிக்கிறவர்களுக்கு, உபதேசிக்கப்படுகிறவர்கள் உதவிசெய்ய வேண்டுமென்பது தேவனுடைய சித்தம். இது அவருடைய பிரமாணம்.
கர்த்தருடைய ஊழியக்காரர்கள் ஜனங்களுக்கு திருவசனத்தை உபதேசிக்கிறார்கள். கர்த்தருடைய வார்த்தையே நமக்கு ஜீவனாக இருக்கிறது. நம்முடைய ஜீவியத்தையும், நம்முடைய விசுவாசத்தையும் கிறிஸ்துவின் வார்த்தையே ஆளுகை செய்கிறது. திருவசனத்தை உபதேசிக்கிறவர்கள்,வார்த்தையைக் கலப்பில்லாமல் உபதேசிக்கவேண்டும். சத்தியத்தை மெய்யாய்ச் சொல்லவேண்டும். ஊழியக்காரர்களும் போஷிக்கப்படவேண்டும். திருவசனத்தை உபதேசிக்கிறவர்கள் ஜனங்களுடைய இருதயங்களில் ஞானநன்மையை விதைக்கிறார்கள். அவர்களுடைய சரீர நன்மைகளை அறுவடை செய்கிற உரிமையை கர்த்தர் ஊழியக்காரருக்குக் கொடுத்திருக்கிறார். ஆகையினால் திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிற விசுவாசிகள், தங்களுக்கு திருவசனத்தை உபதேசம்பண்ணுகிற ஊழியக்காரர்களுக்கு, தங்களுடைய சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கவேண்டும்.
எதை விதைக்கிறானோ
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான் (கலா 6:7,8).
தேவனை யாரும் பரியாசம்பண்ணக்கூடாது. தேவன் தம்மை யாரும் பரியாசம்பண்ணவொட்டார். நாமும் மோசம்போகாதிருக்கவேண்டும். நம்மை நாமே வஞ்சித்துவிடக்கூடாது. கர்த்தருடைய ஊழியக்காரர்கள் திருவசனத்தை உண்மையாய் உபதேசிக்கவேண்டும். ஊழியம் செய்வதுபோல நடிக்கக்கூடாது. மாய்மாலம்பண்ணக்கூடாது. நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். கர்த்தருக்கு ஊழியம் செய்வதாகச் சொல்லிவிட்டு, நாம் உண்மையாக ஊழியம் செய்யவில்லையென்றால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம். கர்த்தரை யாரும் வஞ்சிக்க முடியாது. அவரை யாரும் பரியாசம்பண்ண முடியாது. மனுஷன் தனக்குத்தானே மாய்மாலம் பண்ணலாம். கர்த்தரோ மனுஷனுடைய இருதயத்தைப் பார்க்கிறவர். அவருக்கு முன்பாக எல்லாம் வெளியரங்கமாக இருக்கும்.
நாம் இப்பிரபஞ்சத்தில் ஜீவிக்கிற காலம் விதைக்கிற காலம். பரலோகத்தில் நமக்கு மிகப்பெரிய அறுவடைக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது. நாம் இந்தப்பூமியில் எதை விதைக்கிறோமோ, அதையே பரலோகத்தில் அறுப்போம். விதைப்பது ஒன்றும், அறுப்பது வேறொன்றுமாக ஒருபோதும் இருக்காது.
அப்போஸ்தலர் பவுல் இரண்டுவிதமான விதைப்புக்களைப்பற்றி இங்கு சொல்லுகிறார். ஒன்று மாம்சத்திற்கென்று விதைப்பது. மற்றொன்று ஆவிக்கென்று விதைப்பது. நாம் மாம்சத்திற்கென்று விதைத்தால், மாம்சத்தினால் அழிவை அறுப்போம். ஆவிக்கென்று விதைத்தால் ஆவியினால் நித்திய ஜீவனை அறுப்போம். மாம்சத்திற்குரிய அறுவடையினால் இம்மையிலும் நமக்கு நன்மை உண்டாகாது. மறுமையிலும் நன்மை உண்டாகாது. இம்மையில் துன்பமும் மறுமையில் நித்திய அழிவும் உண்டாகும்.
ஆவிக்கென்று விதைக்கிறவர்கள், தங்களுடைய அறுவடைக்காக, பரிசுத்த ஆவியானவரையே சார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இப்பிரபஞ்சத்தில் சந்தோஷமும் சமாதானமும் உண்டாகும். அவர்கள் நித்திய ஜீவனையும் நித்திய சந்தோஷத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள். நம்முடைய கிரியைகளுக்குத்தக்கதாக தேவன் நமக்குப் பலனளிப்பார். நம்முடைய கிரியைகள் எல்லாவற்றையும் கர்த்தர் சோதித்துப் பார்ப்பார். நாம் இந்தப் பூமியில் எப்படிப்பட்ட பதவி வகிக்கிறோம் என்பது முக்கியமல்ல. நம்முடைய கடமையை எப்படி நிறைவேற்றுகிறோம் என்பதுதான் முக்கியம். நாம் என்ன ஊழியம் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்த ஊழியத்தை எப்படிச் செய்கிறோம் என்பதே முக்கியம்.
தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். அதுபோலவே தன் ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். ஒவ்வொரு மனுஷனும் தன்னுடைய முடிவிற்கு அவனே காரணமாக இருக்கிறான். மாம்சத்தை விதைத்து விட்டு, நித்திய ஜீவனை அறுப்போம் என்று எதிர்பார்க்கக்கூடாது. அதுபோலவே ஆவியை விதைத்து விட்டு விழுந்துபோவோம் என்றும் எதிர்பார்க்கக்கூடாது.
ஏற்ற காலத்தில் அறுப்போம்
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம் (கலா 6:9,10).
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமலிருக்கவேண்டும். நாமெல்லோருக்குமே சரீரத்தில் சோர்வும், ஆவியில் சோர்வும் உண்டாவதற்கு வாய்ப்பிருக்கிறது. கடினமாக உழைக்கும்போது சோர்வு உண்டாகும். சோர்வு உண்டானாலும், நாம் தொடர்ந்து நன்மை செய்யவேண்டும். தளர்ந்துபோய்விடக்கூடாது. சோர்ந்துபோகாமல் நன்மைசெய்து, தளர்ந்துபோகாமல் இருப்போமென்றால், நாம் ஏற்றக்காலத்தில் அறுவடை செய்வோம். நமக்காக ஒரு பெரிய அறுவடை நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறுவடை அறுப்புக்கு ஆயத்தமாயிருக்கிறது. சோர்ந்துபோகாமல், உண்மையாய் நன்மை செய்கிறவர்களுக்கு, இந்த அறுவடை நிச்சயம் உண்டு. ஒருவேளை நமக்குக் கிடைக்க வேண்டிய வெகுமதி தாமதமாகலாம். தாமதமானாலும் நிச்சயமாய் கிடைக்கும். ஏற்றக்காலத்தில் கிடைக்கும். ஏற்றகாலம் என்பது நாம் விரும்புகிற காலமல்ல. அது கர்த்தர் நியமித்திருக்கிற காலம்.
கர்த்தருடைய பிள்ளைகளெல்லோரும், தங்களுக்குக் கிடைக்கிற சமயத்திற்குத்தக்கதாக, தங்களுடைய இடங்களில் நன்மை செய்யவேண்டும். நமக்கு மாத்திரம் நன்மை செய்துகொண்டால் போதாது. பிறருக்கும் நன்மை செய்யவேண்டும். பொதுவாக யாவருக்கும் நாம் நன்மை செய்யவேண்டும். நாம் நன்மை செய்வதை குறுகிய வட்டத்திற்குள் வைத்துக்கொள்ளக்கூடாது. ஒரு குறிப்பிட்ட ஜனத்திற்கு மாத்திரம்தான் நன்மை செய்வோமென்று, நம்மைநாமே ஒரு கட்டுப்பாட்டிற்குள் அடைத்துப்போடக்கூடாது. நன்மை செய்யும்போது அதை எல்லோரும் பெற்றுக்கொள்வதற்கு, நம்முடைய வாசல் எப்போதும் திறந்திருக்கவேண்டும். அதை ஒரு குறிப்பிட்ட ஜனத்தாருக்கு மாத்திரம் திறந்து, மற்றவர்களுக்கெல்லாம் அந்த வாசலை அடைத்து, குறுகிய மனப்பாங்கோடு நன்மை செய்யக்கூடாது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக யாவருக்கும் நன்மை செய்யவேண்டும்.
எல்லோருக்கும் நன்மை செய்தாலும், விசுவாசக் குடும்பத்தார்மீது விசேஷித்த கவனம் செலுத்தவேண்டும். அவர்கள்மீது விசேஷித்த அக்கரையும், விசேஷித்த கரிசனையும் காண்பிக்கவேண்டும். நன்மை செய்யும்போது யாரையும் ஒதுக்கித்தள்ளிவிடக்கூடாது. அதேவேளையில் விசுவாசக் குடும்பத்தாருக்கு விசேஷித்த வழிகளில் உதவிபுரியவேண்டும்.
நாம் எப்பொழுது நன்மை செய்யவேண்டுமென்று பவுல் இங்கு தெளிவுபடுத்துகிறார். நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாக நன்மை செய்யவேண்டும் என்று சொல்லுகிறார். நமக்கு சமயம் கிடைக்கும்போது நாம் கட்டாயம் நன்மை செய்யவேண்டும். நம்முடைய ஜீவனுள்ள காலம் வரைக்கும் நமக்கு சமயம் கிடைக்கும். ஆகையினால் நம்முடைய ஜீவியகாலம் முழுவதிலும், நாம் யாவருக்கும் நன்மை செய்யவேண்டும்.
ஒரு சிலர் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். மரிக்கும் தருவாயில், பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்னும் ஆர்வம் அவர்களுக்குள் உண்டாகும். இவர்கள் தங்கள் ஜீவியகாலத்தை நஷ்டப்படுத்தியவர்கள். இவர்களுக்கு வாழ்நாளெல்லாம் ஏராளமான சமயம் கிடைத்திருந்தாலும் அவற்றையெல்லாம் அசட்டை செய்து, பயன்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். இப்போதோ மரணப்படுக்கையில் இருக்கிறார்கள். சாகும் தருவாயில் இருக்கிறார்கள். நன்மை செய்தால்தான் பரலோகத்திற்குள் போகமுடியும் என்னும் பயம் இவர்களுக்குள் வந்துவிடும். ஆகையினால் இப்படிப்பட்டவர்கள், தங்கள் ஜீவியகாலத்தின் முடிவில், தங்கள் சுயஆதாயத்திற்காக நன்மை செய்வார்கள்.
ஒரு சிலர் உயிரோடிருக்கும்போதும் நன்மை செய்வார்கள். அவர்கள் மரித்தபின்பும் அவர்கள் பெயரில் நன்மை செய்வதற்கு சில காரியங்களைச் செய்து வைத்திருப்பார்கள். பிறருக்கு நன்மை செய்வதற்காக தங்களுடைய சொத்தின் ஒரு பகுதியை உயிலாக எழுதிவைத்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மூலமாய் எப்போதுமே நன்மையான காரியம் நடைபெறும். நாம் உயிரோடிருக்கும்போது மற்றவர்களுக்கு நன்மை செய்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். பிறருக்குப் பிரயோஜனமில்லாத வாழ்க்கை வாழ்வோமென்றால், நாம் உடனடியாக மனந்திரும்ப வேண்டும். மற்றவர்களுக்கு நன்மை செய்வதை நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாக அமைத்துக்கொள்ளவேண்டும்.
பிறருக்கு நன்மை செய்ய, தேவன் நமக்கு பல வாய்ப்புக்களைக் கொடுக்கிறார். எல்லா வாய்ப்புக்களையும் பயன்படுத்தி நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். கர்த்தர் நமக்கு வாய்ப்பைக் கொடுக்கும்போது, நாம் அந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நன்மை செய்கிறோமா என்பதை அவர் ஆராய்ந்து பார்க்கிறார். நாம் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாகயிருந்தால்தான், கர்த்தர் நம்மை அநேகத்தின்மேல் அதிகாரியாக்குவார். நாம் வாய்ப்புக்களைப் பயன்படுத்தும்போது, கர்த்தர் நமக்கு மேலும் பல வாய்ப்புக்களைக் கொடுப்பார். நம்முடைய திராணிக்குத்தக்கதாகவும், முடிந்தால் அதற்கு மேலும் நாம் பிறருக்கு நன்மை செய்யவேண்டும். உதவி தேவைப்படுவோரை நாம் பார்க்கும்போது, அவர்களைக் கண்டும் காணாதவர்கள்போல இருந்துவிடக்கூடாது. நம்மால் யாவருக்கும் உதவிசெய்ய முடியவில்லையென்றாலும், ஒரு சிலருக்காவது நன்மை செய்து, அவர்களை ஆசீர்வதிக்க ஆரம்பிக்கவேண்டும்.
விசுவாசிகளுக்குக் கூறப்பட்டிருக்கும் கட்டளைகள்
1. ஆவிக்கேற்றபடி நடக்கக் கடவோம். (கலா 5:25).
2. வீண்புகழ்ச்சியை விரும்பாமல் இருக்கக் கடவோம். (கலா 5:26).
3. ஒருவரையொருவர் கோபமூட்டாமல் இருக்கக்கடவோம் (கலா 5:26).
4. ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமல் இருக்கக்கடவோம். (கலா 5:26).
5. குற்றத்தில் அகப்பட்டிருக்கும் சகோதரனை சீர்பொருந்தப் பண்ணக்கடவோம். (கலா 6:1)
6. சோதிக்கப்படாதபடிக்கு நம்மைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கக்கடவோம். (கலா 6:1).
7. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கக் கடவோம். (கலா 6:2).
8. நம்முடைய சுயகிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவோம். (கலா 6:4).
9. அவனவன் தன்தன் பாரத்தைச் சுமக்கக் கடவன். (கலா 6:5).
10. ஊழியத்திற்கு ஆதரவாக இருக்கக் கடவோம். (கலா 6:6).
11. மோசம்போகாதிருக்கக்கடவோம். (கலா 6:7).
12. நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. (கலா 6:9).
13. யாவருக்கும் நன்மை செய்யக் கடவோம். (கலா 6:10).
கள்ளப்போதகர்கள்
என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள். மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம்துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள். விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாம-ருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக் குறித்து மேன்மை பாராட்டும்படிக்குநீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள் (கலா 6:11-13).
அப்போஸ்தலர் பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தின் முடிவுரைக்கு வந்திருக்கிறார். பவுல் கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். இந்த நிருபம் நீளமான நிருபமாக இருந்தாலும், தன்னுடைய கையெழுத்தாய் இந்த நிருபம் முழுவதையும் எழுதியிருக்கிறார். தான் சொல்லச் சொல்ல வேறு யாராவது எழுதலாமென்று நினைத்து, யாரையும் எழுத்தராகப் பயன்படுத்தவில்லை. பவுல் கலாத்தியர்மீது மிகுந்த அன்பாகயிருப்பதினால், தன் கையெழுத்தாகவே இந்த நிருபம் முழுவதையும் எழுதியிருக்கிறார்.
கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகளுக்கு பவுலும் உபதேசம் செய்கிறார். கள்ளப்போதகர்களும் உபதேசம் செய்கிறார்கள். பவுல் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசங்கம் பண்ணுகிறார். கள்ளப்போதகர்களோ நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட கள்ளப்போதகர்களின் உண்மையான சுபாவத்தை, பவுல் கலாத்தியருக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்.
கள்ளப்போதர்கள் மாம்சத்தின்படி நல்வேஷமாய் காணப்பட விரும்புகிறவர்கள். புறம்பான மார்க்கக் காரியங்களில் அதிக வைராக்கியமாயிருக்கிறார்கள். அவர்களிடத்தில் உள்ளான பரிசுத்தமில்லை. மெய்யான பக்தியுமில்லை. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை நாம் கடைப்பிடிக்கவேண்டுமென்று அவர்கள் உபதேசம் பண்ணுகிறார்கள். ஆனால் அவர்களோ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள். மாம்சத்தின்படி நல்வேஷமாய் காணப்பட விரும்புகிறார்கள்.
அவர்கள் பக்தியுள்ளவர்களென்று மற்றவர்கள் நினைக்கவேண்டும். அதற்கேற்ற வகையில் அவர்கள் பக்தியின் வெளிவேஷத்தைத் தரித்திருக்கிறார்கள். யூதமார்க்கம் என்னும் போர்வையில் மறைந்துகொண்டு மாய்மாலம்பண்ணுகிறார்கள். வேஷம் போடுவதே அவர்களுடைய முழுநேர ஊழியமாயிற்று. புறஜாதி மார்க்கத்தார் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தாலும், அவர்களும் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று கட்டாயம் பண்ணுகிறார்கள். கள்ளப்போதர்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்பட ஆயத்தமாயில்லை. துன்பப்பட விரும்பவில்லை. உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள். கிறிஸ்துவின் சிலுவையைச் சுமந்து, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிவர அவர்களுக்கு விருப்பமில்லை.
கள்ளப்போதர்கள் தங்கள் விசுவாசமென்னும் கப்பலை உடைத்துப்போட்டார்கள். அவர்களுடைய நல்மனச்சாட்சி மழுங்கிப்போயிற்று. அவர்கள் செய்கிறது தப்பிதம் என்று அவர்களுடைய மனச்சாட்சிகூட அவர்களுக்கு எச்சரித்துச் சொல்லவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் உலகப்பிரகாரமான காரியங்களில் மூழ்கிப்போயிருக்கிறார்கள். மாம்சத்தின்படி நல்வேஷமாய் காணப்பட்டால் போதுமென்று நினைக்கிறார்கள்.
கள்ளப்போதர்கள் புறஜாதியாரின் மாம்சத்தைக்குறித்து மேன்மை பாராட்ட விரும்புகிறார்கள். இதற்காக புறஜாதியாரும் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒருவர் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால், அவரை தங்கள் பக்கமாகச் சேர்த்துக்கொண்ட பெருமை கள்ளப்போதருக்கு உண்டாகும். கள்ளப்போதர்கள் இப்படிப்பட்ட பெருமையைத்தான் விரும்புகிறார்கள். மாம்சத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டுமென்பதே அவர்களுடைய ஆவல். ஆவியைக் குறித்தும், ஆவிக்குரிய பரிசுத்தத்தைக் குறித்தும் அவர்களுக்கு அக்கரையே இல்லை.
நல்வேஷம் என்பது விருத்தசேதனத்தையும், யூதமார்க்கத்தின் பாரம்பரிய பண்டிகைகளையும் குறிக்கும். இரட்சிக்கப்படாதவர்கள் இவைகளைக் கைக்கொள்கிறார்கள். பலவீனமான கிறிஸ்தவர்கள்கூட யூதமார்க்கத்திற்குத் திரும்பிச் செல்ல சோதிக்கப்படுகிறார்கள். இவர்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையின் நிமித்தம் வரும் துன்பங்களைச் சகித்து கொள்ள மனதில்லாதவர்கள்.
நானோ
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன் (கலா 6:14).
அப்போஸ்தலர் பவுல் கள்ளப்போதகர்களின் சுபாவத்தைச் சொல்லிவிட்டு, தன்னுடைய சுபாவத்தைப்பற்றியும் சொல்லுகிறார். பவுல் இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மாத்திரமே மேன்மை பாராட்டுகிறார். வேறொன்றையும் குறித்து அவர் மேன்மை பாராட்டவில்லை. இந்தச் சத்தியம்தான் யூதருக்கு தடைக்கல்லாக இருக்கிறது. கிரேக்கருக்கு பைத்தியமாக இருக்கிறது. யூதமார்க்கத்தமைந்த விசுவாசிகள், தங்கள் இரட்சிப்புக்கு இரண்டுமே முக்கியம் என்கிறார்கள். கிறிஸ்துவைப்பற்றிய விசுவாசமும் வேண்டும், அதோடு,நியாயப்பிரமாணத்தின் கிரியைகளையும் கைக்கொள்ளவேண்டும் என்பதுதான் யூதமார்க்கத்தமைந்த விசுவாசிகளின் நம்பிக்கை. ஆனால் பவுலோ, மனுஷருடைய ஆத்தும இரட்சிப்புக்கு நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் தேவையற்றவை என்றும், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசமே போதுமானது என்றும் உபதேசம்பண்ணுகிறார். கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மை பாராட்டுகிறார். வேறொன்றைக் குறித்தும் அவர் மேன்மை பாராட்டவில்லை.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசமே அடிப்படை ஆதாரம். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில், நாம் எப்படிப்பட்ட பாதையில் கடந்து வந்தாலும் கிறிஸ்துவையும் அவருடைய சிலுவையையும் குறித்து மேன்மை பாராட்டவேண்டும். சோதனைகளும், பாடுகளும், வேதனைகளும் வரும்போது சோர்ந்துபோகக்கூடாது. சோதனையிலும் நாம் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கவேண்டும். சோதனைகள் நம்மை மேற்கொள்ளக்கூடாது. நாம் இயேசுகிறிஸ்துவின் பலத்தினால் சோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.
நம்முடைய சந்தோஷம், நம்பிக்கை எல்லாமே கிறிஸ்துவின் சிலுவையில்தான் இருக்கிறது. ஆகையினால் விசுவாசிகளெல்லோரும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல், வேறொன்றையும் குறித்து, மேன்மை பாராட்டக்கூடாது.
அப்போஸ்தலர் பவுல் இந்தப் பிரபஞ்சத்திற்கு மரித்தவராகயிருக்கிறார். இந்த உலகம் இயேசுகிறிஸ்துவினால் அவருக்கு சிலுவையில் அறையுண்டிருக்கிறது. அவரும் உலகத்திற்கு சிலுவையில் அறையுண்டிருக்கிறார். மரித்துப்போனவர்களுக்கு சந்தோஷமும் வருத்தமும் இருக்காது. நகைப்பும் இருக்காது. அழுகையும் இருக்காது. அவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். பவுல் இந்த உலகத்திற்கு மரித்தவரைப்போல இருக்கிறார். இந்த உலகத்தினால் அவருக்கு சந்தோஷமோ, வருத்தமோ உண்டாகவில்லை. நாம் இந்தப் பிரபஞ்சத்தில் ஜீவிக்கிற ஒவ்வொரு நாளிலும், இயேசுகிறிஸ்து நம்முடைய இரட்சிப்புக்காக இந்த உலகத்தில் பட்ட பாடுகளையெல்லாம் நினைவுகூரவேண்டும். அப்போதுதான் நம்முடைய உள்ளத்தில் உலக சிநேகம் இருக்காது. கர்த்தரையும், அவருடைய சிலுவையையும் மாத்திரம் சிநேகிப்போம். உலகத்தை சிநேகிக்கமாட்டோம்.
ஒருசிலர் விருத்தசேதனத்திலும், பாரம்பரியங்களிலும், பண்டிகைகளிலும் திரளான ஜனங்கள் தங்கள் மார்க்கத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று கூறிக்கொள்வதிலும் மேன்மை பாராட்டுகிறார்கள். ஆனால் பவுலோ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தே மேன்மைபாராட்டுகிறார். விருத்தசேதனமோ, பாரம்பரியங்களோ, பண்டிகைகளோ வெறுமையானவை. பயனற்றவை. புதுசிருஷ்டியே காரியம்.
புருசிருஷ்டி
கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம் (கலா 6:15).
அப்போஸ்தலர் பவுல் கள்ளப்போதர்களின் துர்உபதேசத்திற்கு விரோதமாக விவாதம்பண்ணவில்லை. அவர்களுடைய உபதேசம் மாயையானது என்று நினைத்து, அது ஒன்றுமில்லையென்று தீர்மானித்துவிடுகிறார். கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை. விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை. நாம் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாயிருக்கவேண்டும். இதுதான் முக்கியம்.
கள்ளப்போதகர்கள் ஒன்றுமில்லாத விருத்தசேதனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்களுடைய வார்த்தையின்படி விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதினால் நமக்குஆசீர்வாதமோ, சாபமோ உண்டாகப்போவதில்லை. விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளாவிட்டாலும் நமக்கு ஒன்றுமுண்டாகாது. நாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சகராகவும், ஆண்டவராகவும் நம்முடைய இருதயத்தில் அங்கீகரிக்கவேண்டும். நாம் கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாயிருக்கவேண்டும்.
விருத்தசேதனத்தின் அஸ்திபாரத்தில் நம்முடைய விசுவாச ஜீவியத்தை கட்டியெழுப்ப முடியாது. அது நம்முடைய ஆத்துமாவை இரட்சிப்பதற்கோ, நமக்கு புதுஜீவனைக் கொடுப்பதற்கோ பலனற்றது. நாம் எப்படிப்பட்ட பாரம்பரிய பழக்க வழக்கங்களை கைக்கொள்கிறோம் என்பது முக்கியமல்ல. மோசேயின் பிரமாணத்தில் எத்தனை கற்பனைகளைக் கைக்கொள்கிறோம் என்பதும், எதையெல்லாம் கைக்கொள்ளவில்லை என்பதும் கர்த்தருக்கு முக்கியமல்ல. நாம் இயேசுகிறிஸ்துவில் புதுசிருஷ்டியாயிருக்கவேண்டும். புதுசிருஷ்டியே காரியம். நம்முடைய மனதும் இருதயமும் புதுப்பிக்கப்படவேண்டும். நம்முடைய இருதயத்தில் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற விசுவாசம் நிரம்பியிருக்கவேண்டும். நம்முடைய ஜீவியம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் உபதேசத்திற்கு கீழ்ப்படிகிற ஜீவியமாக இருக்கவேண்டும்.
நாம் எப்படிப்பட்ட ஊழியம் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. சமுதாயத்தில் நம்முடைய பெயர் எப்படிப்பட்டது என்பது முக்கியமல்ல. ஸ்தாபனத்தில் நமக்கு என்னென்ன தலைமைப்பொறுப்புக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதும் முக்கியமல்ல. நம்முடைய பட்டமோ, பதவியோ முக்கியமல்ல. இவற்றை வைத்து நாம் தேவனுடைய சமுகத்திற்குள் பிரவேசிக்கிற சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கவேண்டும். அவரையே நம்முடைய கர்த்தராகவும் ஆண்டவராகவும் அங்கீகரிக்கவேண்டும். கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாகவேண்டும். புதுசிருஷ்டியே காரியம்.
சமாதானமும் இரக்கமும்
இந்தப் பிரமாணத்தின்படி நடந்து வருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக (கலா 6:16).
அப்போஸ்தலர் பவுல் கலாத்தியருக்கு ஆசீர்வாத வார்த்தைகளைக் கூறுகிறார். ஆனால் தன்னுடைய ஆசீர்வாதத்தை எல்லோருக்கும் சொல்லாமல், கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி நடந்து வருகிறவர்கள் எவர்களோ அவர்களுக்கு மாத்திரம் சொல்லுகிறார். அவர்களுக்கு சமாதானமும், இரக்கமும் உண்டாயிருப்பதாக என்று சொல்லி அவர்களை ஆசீர்வதிக்கிறார். கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி நடந்துகொள்கிறவர்கள், தங்களுக்கு கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக யாவருக்கும் நன்மை செய்கிறார்கள். இவர்களுக்கு விருத்தசேதனமும், விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை புதுசிருஷ்டியே காரியமாயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவினால் உலகம் இவர்களுக்கு சிலுவையில் அறையுண்டிருக்கிறது. இவர்களும் உலகத்திற்கு சிலுவையில் அறையுண்டிருக்கிறார்கள்.
அப்போஸ்தலர் பவுல் தன்னுடைய அப்போஸ்தல ஆசீர்வாதத்தைச் சொல்லும்போது, ""தேவனுடைய இஸ்ரவேலருக்கும்'' ஆசீர்வாதம் சொல்லுகிறார். தேவனுடைய இஸ்ரவேலர் என்னும் வார்த்தை உண்மையான எல்லா விசுவாசிகளையும் குறிக்கிறது. அவர்கள் யூதராகயிருந்தாலும், புறஜாதியாராகயிருந்தாலும், கிறிஸ்துவுக்குள் இஸ்ரவேலராகயிருக்கிறார்கள். யூதர்களும், யூதமார்க்கத்து கள்ளபோதகர்களும் ஆசீர்வாத வார்த்தைகளைச் சொல்லும்போது, விருத்தசேதனம் பண்ணிக்கொண்டவர்களுக்கு மாத்திரம் ஆசீர்வாதம் சொல்லுவார்கள். அவர்களுடைய ஆசீர்வாதம் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளாதவர்களுக்குக் கிடைக்காது.
மெய்யான விசுவாசிகள் இயேசுகிறிஸ்துவின் பிரமாணத்தின்படி நடக்கிறவர்கள். இவர்கள் தங்கள் சுயகற்பனையின் பிரகாரமோ, சுயபிரமாணத்தின் பிரகாரமோ நடப்பதில்லை. கர்த்தரே இவர்களை ஆட்கொண்டு ஆளுகை செய்கிறார். கர்த்தர் இவர்களுக்குக் கொடுத்திருக்கிற பிரமாணங்களை ஏற்றுக்கொண்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து ஜீவிக்கிறார்கள்.
நாம் கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி நடந்தாலும், நமக்கு தேவனுடைய சமாதானமும், இரக்கமும் தேவைப்படுகிறது. தேவகிருபையில்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. தேவனுடைய பிரமாணத்தின்படி நடக்கிறவர்களுக்கு, சமாதானமும் இரக்கமும் உண்டாயிருக்குமென்று கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார். தேவனோடு சமாதானமாயிருப்பதற்கு, அவருடைய பிரமாணத்தின்படி நடப்பதே மெய்யான வழி. தேவனுடைய சமாதானத்தையும் இரக்கத்தையும் நாம் இப்போது பெற்றுக்கொண்டால், அவற்றை இனிமேலும் பெற்றுக்கொள்ள முடியும் என்னும் நிச்சயம் நமக்குள் உண்டாகும். இயேசுகிறிஸ்துவின் பிரமாணத்தில் வழிவிலகாமல், தொடர்ந்து அதிலே நடக்கும்போது, நமக்கு தேவனோடு நீடித்த சமாதானமுண்டாகும். தேவனுடைய இரக்கம் நமக்கு எப்போதும் கிடைக்கும்.
இயேசுவினுடைய அச்சடையாளங்கள்
இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன் (கலா 6:17).
அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவினிமித்தமாகவும், அவருடைய சுவிசேஷத்தினிமித்தமாகவும் அநேகப் பாடுகளையும், வேதனைகளையும், உபத்திரவங்களையும் அனுபவிக்கிறார். அவருடைய சரீரத்தில் உபத்திரவப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகிறது. காயத்தின் தழும்புகள் இருக்கிறது. இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதினாலும், அவருடைய சுவிசேஷத்தை உபதேசிப்பதினாலும், சத்துருக்கள் பவுலைத் துன்பப்படுத்தினார்கள். உபத்திரவத்திற்குட்படுத்தினார்கள். இதனால் பவுலின் சரீரத்தில் அநேகக்காயங்கள் உண்டாயிற்று. அந்தக் காயத்தின் அடிச்சுவடுகளெல்லாம் பவுலின் சரீரத்தில் தெரிகிறது. இந்தக் காயங்களை பவுல் கிறிஸ்துவினுடைய அச்சடையாளங்கள் என்று சொல்லி, அவற்றை தன்னுடைய சரீரத்தில் தரித்துக்கொண்டிருப்பதாகவும் சொல்லுகிறார்.
அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை உண்மையாய்ப் பிரசங்கிக்கிறவர். ஆத்துமாக்கள்மீது அதிகக் கரிசனையோடிருக்கிறவர். சுவிசேஷத்தினிமித்தமாய் பல பாடுகளை அனுபவித்தவர். அப்போஸ்தல அதிகாரத்தோடு விசுவாசிகளை ஆசீர்வதிக்கிற சிலாக்கியம் பெற்றிருக்கிறவர். அப்படிப்பட்ட தனக்கு இனிமேல் ஒருவனும் வருத்தம் உண்டாக்கக்கூடாது என்று சொல்லுகிறார். பவுல் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தின் உபதேசத்திற்கு யாரும் எதிர்த்துப் பேசக்கூடாது. பவுலின் அப்போஸ்தல அதிகாரத்திற்கு விரோதமாக யாரும் எதிர்த்து நிற்கக்கூடாது. பவுல் இதுவரையிலும் இப்படிப்பட்ட வருத்தங்களையெல்லாம் தன்மீது ஏற்றுக்கொண்டிருக்கிறார். இனிமேல் ஒருவனும் தனக்கு இப்படிப்பட்ட வருத்தத்தை உண்டாக்கக்கூடாது என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.
பவுல் ஏற்கெனவே கிறிஸ்துவினிமித்தமாக பல பாடுகளையும் வேதனைகளையும் அனுபவித்தவர். ஆனால் கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகளோ கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்திற்கு விலகிப்போய், பவுலுக்கு வருத்தத்தை உண்டாக்குகிறார்கள். பவுல் சுவிசேஷத்திற்காக பாடுபட ஆயத்தமாயிருக்கிறார். விசுவாசிகள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று எதிர்பார்க்கிறார். அவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து, கள்ளப்போதர்களின் நியாயப்பிரமாண உபதேசத்தை ஏற்றுக்கொண்டு, பவுலை வருத்தப்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட வருத்தத்தைத் தனக்கு இனிமேல் யாரும் உண்டாக்கக்கூடாது என்று அவர்களுக்குத் தெளிவாக எழுதுகிறார்.
அடிமைகளுக்கு அடையாளமாக அவர்களுடைய சரீரத்தில் அடையாளமிடுவார்கள். பவுல் தன்னை இயேசுகிறிஸ்துவின் அடிமையாகப் பாவிக்கிறார். தன்னுடைய அடிமை ஊழியத்திற்கு இயேசு கிறிஸ்துவின் அச்சடையாளங்களைத் தன்னுடைய சரீரத்தில் தரித்துக் கொண்டிருக்கிறார். ஒருசிலர் தங்களுடைய விருத்தசேதன அடையாளத்தில் மேன்மை பாராட்டுகிறார்கள். ஆனால் பவுலோ இயேசு கிறிஸ்துவிற்காகப் பாடுகளை அனுபவிப்பதினால் உண்டான அடையாளங்களில் மேன்மை பாராட்டுகிறார்.
இயேசுகிறிஸ்துவின் கிருபை
சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென் (கலா 6:18).
அப்போஸ்தலர் பவுல், கலாத்தியருக்கு தன்னுடைய அப்போஸ்தல ஆசீர்வாதத்தைச் சொல்லி, இந்த நிருபத்தை நிறைவு செய்கிறார். கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகளை, பவுல், ""சகோதரரே'' என்று கூப்பிடுகிறார். அவர்களுக்காக ஜெபிக்கிறார். ஜெபவார்த்தையைச் சொல்லி அவர்களை விட்டுக்கடந்து செல்கிறார். ""நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக'' என்று ஜெபித்து, அவர்களை ஆசீர்வதித்து, இந்த நிருபத்தை நிறைவு செய்கிறார். பொதுவாக அப்போஸ்தலர்கள் விசுவாசிகளிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்போது, இப்படிப்பட்ட ஆசிர்வாத வார்த்தைகளைச் சொல்வது வழக்கம்.
அப்போஸ்தலர் பவுல் கலாத்தியரிடமிருந்து விடைபெறும்போது அவர்களுக்காக ஜெபிக்கிறார். அவர்களுக்கு கிறிஸ்துவின் கிருபை கிடைக்கவேண்டுமென்று வாழ்த்துகிறார். அவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்குத் தேவையான தேவகிருபைகள் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு, அவர்கள் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேறிச்செல்லவேண்டும். அவர்கள் இப்பிரபஞ்சத்தில் தேவனோடு சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். தேவனுடைய இரக்கங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இந்த ஜீவியத்தில் அவர்களுக்கு எவ்வளவு சோதனைகளும், உபத்திரவங்களும் வந்தாலும், தேவகிருபை அவர்களோடு கூடயிருக்கவேண்டும். அவர்களுக்கு மரணமே நேரிடுவதாக இருந்தாலும், அவர்களுடைய ஜீவன் சரீரத்தைவிட்டுப் பிரிந்தாலும், இயேசுகிறிஸ்துவின் கிருபை அவர்களுடைய ஆவியோடு எப்போதும் கூடயிருக்கவேண்டும் என்று பவுல் அவர்களுக்காக ஜெபிக்கிறார். அவர்களை ஆசீர்வதிக்கிறார்.
கலாத்தியா தேசத்து சபையார் பவுலின் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கள்ளப்போதர்களுக்கு அவர்கள் சொல்லிக்கொடுத்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைக் கைக்கொள்கிறார்கள். அவர்கள் ஆதியிலே பவுல்மீது வைத்திருந்த அன்பு இப்போது அவர்களிடத்தில் இல்லை. அவர்கள் ஆவிக்குரிய பின்மாற்றத்திலிருக்கிறார்கள். ஆனாலும் பவுல் அவர்கள்மீது வைத்திருக்கிற அன்பு குறையவில்லை. அவர்களைக்குறித்த கரிசனையும் குறையவில்லை. அவர்கள் நன்றாயிருக்கவேண்டுமென்று அவர்களை ஆசீர்வதிக்கிறார். ""கிறிஸ்துவின் கிருபை அவர்களுடைய ஆவியுடனே கூடயிருப்பதாக'' என்று ஆசீர்வதிக்கிறார். தேவஆவியானவர் அவர்களுடைய ஆவியிலும் ஆத்துமாவிலும் தொடர்ந்து வாசம்பண்ணவேண்டுமென்று பவுல் விரும்புகிறார். பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். தங்களுக்குள்ளே வாசம்பண்ணுகிற ஆவியானவரின் சத்தத்திற்கு அவர்கள் செவிகொடுத்து, கீழ்ப்படியவேண்டும்.
கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நாமும் விசுவாசிகளை இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஆசீர்வதிக்கவேண்டும். கிறிஸ்துவின் கிருபை விசுவாசிகளுடைய ஆவியுடனே கூடயிருப்பதாக என்று சொல்லி அவர்களை உண்மையாய் ஆசீர்வதிக்கவேண்டும். அப்போஸ்தலர் பவுல் தன்னுடைய ஆசீர்வாத வார்த்தைகளைச் சொல்லி முடித்த பின்பு, ""ஆமென்'' என்று சொல்லி தன்னுடைய வாழ்த்துதலை நிறைவுசெய்கிறார். தன்னுடைய ஆசீர்வாத வார்த்தைகளை உறுதிபண்ணுகிறார்.