கலாத்தியர் 1ஆம் அதிகாரம் விளக்கம்
சுருக்கமான முன்னுரை (கலா 1:1-5). பவுல் கலாத்தியாவிலுள்ள சபைகளைக் கடிந்துகொள்கிறார் (கலா 1:6-9). தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்தை பவுல் உறுதிபண்ணுகிறார். பவுல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை உண்மையாய்ப் பிரசங்கம்பண்ணுகிறார். கிறிஸ்துவே தம்முடைய சுவிசேஷத்தை தனக்கு வெளிப்படுத்தியதாக பவுல் அறிவிக்கிறார் (கலா 1:11,12). பவுல் தன்னுடைய சரித்திரத்தை சுருக்கமாகச் சொல்லுகிறார். பவுல் யூதமார்க்கத்திலிருந்தபோது அவருடைய நடக்கைகளை இங்கு அறிவிக்கிறார் (கலா 1:13-14). பவுல் இரட்சிக்கப்பட்டபோதும், அதன்பின்பும் அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களைச் சுருக்கமாகச் சொல்லுகிறார் (கலா 1:15-24).
அப்போஸ்தலனாயிருக்கிற பவுல் கலா 1 : 1-5
கலா 1:1. மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரி-ருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,
கலா 1:2. என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:
கலா 1:3. பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக;
கலா 1:4. அவர் நம்மை இப்பொழுதிருக்கிறபொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;
கலா 1:5. அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
அப்போஸ்தலர் பவுலும், அவருடனே கூடயிருக்கிற சகோதரரெல்லாரும் இந்த நிருபத்தை எழுதுகிறார்கள். அப்போஸ்தலர் பவுல் தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்தை இந்த நிருபத்தில் பொதுவாகச் சொல்லுகிறார். அப்போஸ்தல ஊழியத்திற்குத் தான் அழைக்கப்பட்ட விதத்தையும் கலாத்தியருக்குத் தெளிவாக எடுத்துச்சொல்லுகிறார். மனுஷராலோ அல்லது மனுஷர் மூலமாகவோ பவுல் அப்போஸ்தல ஊழியத்திற்கு அழைக்கப்படவில்லை. இயேசுகிறிஸ்துவினாலும், பிதாவாகிய தேவனாலும் பவுல் அப்போஸ்தல ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
பவுலின் ஊழிய அழைப்பு மனுஷப்பிரகாரமாக ஏற்படுத்தப்பட்டதல்ல. தேவனுடைய சித்தத்தினால் பவுல் தெய்வீக அழைப்பைப்பெற்று, அப்போஸ்தல ஊழியத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே பவுலைஅப்போஸ்தல ஊழியத்திற்கு நியமித்திருக்கிறார். பிதாவாகிய தேவனும், குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் கிரியையை உறுதிசெய்து, பவுலை அப்போஸ்தல ஊழியத்திற்கு நியமித்திருக்கிறார்.
இயேசுகிறிஸ்து மரித்து, உயிரோடு எழுந்த பின்பே, பவுல் அப்போஸ்தல ஊழியத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சத்தியத்தைச் சொல்லும்போது, ""கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பின பிதாவாகிய தேவன்'' தன்னை அப்போஸ்தல ஊழியத்திற்கு அழைத்திருப்பதாகச் சொல்லுகிறார். இயேசுகிறிஸ்து பவுலை அப்போஸ்தல ஊழியத்திற்கு அழைத்தபோது, கிறிஸ்துவானவர் மரித்தோரிலிருந்து எழுந்து, பரலோகத்திலிருக்கிறார். பவுலுக்கு பரலோகத்திலிருந்து அப்போஸ்தல ஊழிய அழைப்பு உண்டாயிற்று.
பவுல் கலாத்தியருக்கு இந்த நிருபத்தை எழுதுகிறபோது, தன்னோடு சேர்த்து தன்னுடனேகூடயிருக்கிற சகோதரரெல்லாரும் இந்த நிருபத்தை எழுதுவதாகச் சொல்லுகிறார். இந்த நிருபத்தில் பவுல் எழுதுகிற சத்தியத்தை அவருடனே கூடயிருக்கிற சகோதரரெல்லாரும் அங்கீகரிக்கிறார்கள். பவுல் பிரசங்கிக்கிற சத்தியத்தை பரிசுத்தவான்களெல்லோரும் ஏற்றுக்கொண்டு, அதை உறுதிபண்ணுகிறார்கள்.
இந்த ƒநிருபம் கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதப்பட்டிருக்கிறது. பவுல் இந்த நிருபத்தை அவர்களுக்கு எழுதும்போது, அவர்களுடைய சபைகளில் உபதேசக் குழப்பமுண்டாயிற்று. விசுவாசிகள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திலிருந்து வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்பியிருக்கிறார்கள். கள்ளப்போதகர்கள் அவர்கள் மத்தியிலே பிரவேசித்து, அவர்களுக்கு வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள். யூதமார்க்கத்து உபதேசங்களை விசுவாசிகள் கடைப்பிடிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறார்கள். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் மாத்திரமே இவர்கள் நீதிமான்களாக முடியும் என்று யூதமார்க்கத்தின் உபதேசத்தையும் அவர்களுக்குச் சொல்லுகிறார்கள். சபையில் இவ்வாறு உபதேச குழப்பமுண்டாயிற்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், பவுலும் அவருடனே கூடயிருக்கிற சகோதரரெல்லாரும் இந்த நிருபத்தை கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறார்கள்.
அப்போஸ்தலர் பவுல் கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு இந்த நிருபத்தை எழுதும்போது, ஆரம்ப வார்த்தையாக, அவர்களுக்கு அப்போஸ்தல ஆசீர்வாதம் கூறி எழுதுகிறார். ""பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக'' என்று வாழ்த்துவது அப்போஸ்தல ஆசீர்வாதமாகும். இந்த ஆசீர்வாதத்தில் ""கிருபையும் சமாதானமும்'' இடம்பெற்றிருக்கிறது. தேவன் நம்மிடத்தில் காண்பிக்கிற அவருடைய நல்ல சித்தமும், அவர் நம்மிடத்தில் செய்கிற அவருடைய நல்ல கிரியைகளும் ""கிருபை'' என்று அழைக்கப்படுகிறது.
நம்முடைய உள்ளான மனுஷனில் உண்டாகக்கூடிய ஆறுதல் ""சமாதானம்'' என்று அழைக்கப்படுகிறது. நம்முடைய சரீரப்பிரகாரமான தேவைகள் சம்பூரணமாகச் சந்திக்கப்பட்டு, நம்முடைய வாழ்க்கையில் ஒரு செழிப்பு உண்டாகும்போது, நமக்குள் சமாதானம் அதிகரிக்கிறது. விசுவாசிகளுக்கு தேவனுடைய கிருபையும் சமாதானமும் நிரம்பியிருக்கவேண்டுமென்று அப்போஸ்தலர்கள் வாழ்த்துகிறார்கள்.
கிருபையில்லாமல் மெய்யான சமாதானம் இருக்க முடியாது. ஆகையினால்தான் அப்போஸ்தலர்கள் விசுவாசிகளை வாழ்த்தும்போது, முதலாவது கிருபையைப்பற்றிச் சொல்லுகிறார்கள். கிருபையைச் சொன்ன பின்புதான் சமாதானத்தைச் சொல்லுகிறார்கள். தேவனுடைய கிருபையைப் பற்றிச் சொல்லும்போது, அவருடைய அன்பைப் பற்றி சொல்லாமலிருக்க முடியாது. ஏனெனில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே, நம்முடைய பாவங்களுக்காக தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்து, அவர் நம்மீது வைத்துள்ள மெய்யான அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாம் ஜீவிக்கிற இந்தப் பிரபஞ்சம் துன்மார்க்கத்தில் நிறைந்திருக்கிறது. மனுஷருடைய பாவத்தினால் உலகத்தில் சாபம் வந்துவிட்டது. இந்தப் பிரபஞ்சம் பொல்லாததாகயிருக்கிறது. இப்பொழுதிருக்கிற இந்தப் பொல்லாத பிரபஞ்சத்திலிருந்து, நம்மை விடுவிக்கும்படி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, நம்முடைய பாவங்களுக்காக, தம்மைத்தாமே சிலுவையில் மரிப்பதற்கு ஒப்புக்கொடுத்தார். நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காக, இயேசுகிறிஸ்து தம்மையே பாவநிவாரண பலியாக செலுத்தினார்.
நாம் இப்பொழுதிருக்கிற இந்தப் பொல்லாத பிரபஞ்சத்தினின்று நம்மை விடுவிக்கவேண்டுமென்பது இயேசுகிறிஸ்துவின் சித்தம். இந்தப் பிரபஞ்சத்திலிருந்து கிறிஸ்துவானவர் தம்முடைய பிள்ளைகளையெல்லாம் வெளியேற்றி விடாமல், இந்தப் பிரபஞ்சத்தின் பொல்லாத வல்லமையிலிருந்து விடுவிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் விடுவிக்கும் கிரியை பிதாவாகிய தேவனுடைய சித்தத்தோடு ஒத்திருக்கிறது. ஆகையினால் நாம் தேவனை ""அப்பா பிதாவே'' என்று கூப்பிடுகிற சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். நாம் தேவனை நோக்கிப் பார்க்கும்போது, நம்முடைய பிதாவை நோக்கிப் பார்ப்பதுபோல, தைரியமாகப் பார்க்கலாம். தேவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குப் பிதாவாகயிருக்கிறார். ஆகையினால் இயேசுகிறிஸ்துவிலும், அவர் மூலமாகவும், தேவன் உண்மையான விசுவாசிகளெல்லோருக்கும் பிதாவாகயிருக்கிறார்.
அப்போஸ்தல ஆசீர்வாதத்தின் முடிவுரையாக, பவுல் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் துதிக்கிறார். ""அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக'' என்று சொல்லி, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஸ்தோத்திரிக்கிறார்.
கலாத்தியா ஆசியா மைனரிலுள்ள ஒரு பிரதேசம். இங்குள்ள எல்லாச் சபைகளுக்கும் இந்த நிருபம் எழுதப்பட்டிருக்கிறது. கலாத்தியா என்னும் பெயரில் எந்தப் பட்டணமும் இல்லை. இந்த நிருபம் எழுதப்பட்ட போது கலாத்தியாவில் எத்தனை சபைகள் இருந்தன என்பதும் தெரியவில்லை. கலாத்தியாவிலுள்ள எல்லாச் சபைகளிலும் பொதுவான பிரச்சனைகள் இருந்தன என்பது இந்த நிருபத்தின் மூலமாகத் தெரிய வருகிறது.
கிறிஸ்து தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்ததற்குக் காரணங்கள்
1. நம்முடைய பாவங்களுக்காக (கலா 1:4; மத் 1:21; மத் 26:28; 1கொரி 15:3; 1பேதுரு 2:24)
2. இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று நம்மை விடுவிக்கும் படியாக (கலா 1:4; தீத்து 2:14)
3. சபைக்காக - கிறிஸ்து வேத வாக்கியத்தினால் சபையைப் பரிசுத்தப் படுத்தும்படியாக (எபே 5:25-26)
4. எல்லாரையும் மீட்கும் பொருளாக (1தீமோ 2:6)
5. நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக் கொள்ளும்படியாக (தீத்து 2:14)
கலாத்தியா நாட்டிலுள்ள சபைகள் கலா 1 : 6-9
கலா 1:6. உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
கலா 1:7. வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
கலா 1:8. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்தி-ருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலா 1:9. முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
கலாத்தியா நாட்டிலுள்ள சபையார் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விட்டு விலகிப்போயிருக்கிறார்கள். அவர்களுடைய ஆவிக்குரிய பின்மாற்றத்தைக் குறித்து பவுல் மிகுந்த கரிசனையோடிருக்கிறார். கிறிஸ்து தம்முடைய கிருபையினால் அவர்களை அழைத்திருக்கிறார். ஆனால் அவர்களோ கிறிஸ்துவை விட்டு விலக்கிபோய்விட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலர்களை விட்டு மாத்திரமல்ல, கிறிஸ்துவை விட்டே விலகிப்போய்விட்டார்கள். தேவன் தம்முடைய கிருபையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார். ஆனால் அவர்களோ தேவனுடைய கிருபையை அசட்டை செய்து, அந்தக் கிருபையை விட்டு விலகிப்போய்விட்டார்கள். தேவனுடைய இரக்கம் தங்களுக்குத் தேவையில்லையென்று தீர்மானித்து தேவனைவிட்டே விலகிப்போய்விட்டார்கள்.
தம்முடைய ஆசீர்வாதங்களிலும், சிலாக்கியங்களிலும் பங்குபெறுவதற்காகவே, தேவன் தம்முடைய கிருபையினால் அவர்களை அழைத்திருக்கிறார். இது அவர்களுக்குக் கிடைத்திருக்கிற பெரிய சிலாக்கியம். ஆனால் அவர்களோ கிறிஸ்துவின் ஆசீர்வாதத்தில் பங்குபெறாமல், கிறிஸ்துவை விட்டு விலகிப்போய்விட்டார்கள். கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களும், சிலாக்கியங்களும் மிகவும் அதிகம். கலாத்தியர்கள் இவற்றை இதுவரையிலும் அதிகமாய் அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் இப்போதோ தங்களுடைய பாவத்தினாலும், மதியீனத்தினாலும், தேவனுடைய கிருபையை விட்டு விலகி, அவருடைய ஆசீர்வாதங்களையும் சிலாக்கியங்களையும் இழந்து நிற்கிறார்கள்.
கிறிஸ்துவானவர் தம்முடைய கிருபையினால் கலாத்தியர்களைத் தம்முடைய ஆசீர்வாதங்களுக்கு பங்குள்ளவர்களாக அழைத்திருக்கிறார். ஆனால் அவர்களோ தங்களை அழைத்தவரை சீக்கிரமாய் விட்டு விலகிப்போய்விட்டார்கள். கொஞ்சக்கால மாத்திரமே அவர்கள் கிறிஸ்துவின் கிருபையில் இருந்திருக்கிறார்கள். கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களை கொஞ்சக்காலம் மாத்திரமே பெற்றிருக்கிறார்கள். அதன்பின்பு, அவர்கள் கிறிஸ்துவின் கிருபையில் நிலைத்திராமல், அதிசீக்கிரத்தில் அவருடைய கிருபையை விட்டும், அவரை விட்டும் விலகிப்போய்விட்டார்கள்.
கலாத்தியா நாட்டிலுள்ள சபையார் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் பலவீனமாகயிருக்கிறார்கள். விசுவாசத்திலும் பலவீனமாகயிருக்கிறார்கள். இதனால் கிறிஸ்துவின் கிருபையில் அவர்களால் நிலைத்திருக்க முடியவில்லை. சீக்கிரத்திலேயே அவரை விட்டு விலகிப்போய்விட்டார்கள். கிறிஸ்துவின் கிருபையில் நிலைத்திருந்தால் மாத்திரமே, அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். கள்ளப்போதகர்கள் தவறான சத்தியங்களை இவர்களுக்கு உபதேசம் செய்து, இவர்களுடைய விசுவாசத்தைப் பலவீனப்படுத்திவிட்டார்கள்.
கிறிஸ்துவை விட்டுப் பிரிந்துபோன இவர்கள், வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்பியிருக்கிறார்கள். ஆனால் வேறொரு சுவிசேஷம் என்று எதுவுமில்லை. கிறிஸ்துவின் சுவிசேஷம் மாத்திரமே மெய்யான சுவிசேஷம். கள்ளப்போதகர்கள் விசுவாசிகளை கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்டுகிறார்கள். கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் பரலோகத்திற்குப் போகவேண்டிய வழி தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கள்ளப்போதகர்களோ, பரலோகத்திற்குப் போக, வேறொரு வழி இருப்பதாகச் சொல்லி, கலாத்தியர்களை தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள்.
இதுவரையிலும் கிறிஸ்துவின் கிருபையில் நிலைத்திருந்த கலாத்தியர்கள், கள்ளப்போதகர்களின் தவறான உபதேசத்தினால், திசைமாறி, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்பி, வேறொரு பாதையில் போகிறார்கள். கிறிஸ்துவின் பாதை நித்திய ஜீவன். மற்ற பாதைகளெல்லாம் நித்திய அழிவு. கலாத்தியர்கள் கிறிஸ்துவின் கிருபையைவிட்டு விலகிப்போனதினால், தங்களைக் கரம்பிடித்து வழிநடத்துகிற கிறிஸ்துவை விட்டும் விலகிப்போய்விடுகிறார்கள். பாதை தடுமாறி வேறொரு சுவிசேஷத்தைப் பற்றிக்கொள்கிறார்கள்.
அப்போஸ்தலர் பவுல் கலாத்தியருக்கு மெய்யான சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய்கிறார். வேறொரு சுவிசேஷம் எதுவுமில்லை. ஆனால் சிலர் கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்டுகிறார்கள். இப்படி வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களென்று பவுல் சொல்லுகிறார். அவர்கள் மனுஷனாகயிருந்தாலும், வானத்திலிருந்து வருகிற தூதனாகயிருந்தாலும், அவர்கள் சபிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
பவுலின் பெயரில், வேறு யாராவது, வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணினாலும், அவர்களும் சபிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். தேவதூதரின் போர்வையைத் தரித்துக்கொண்டு, வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணினாலும், அவர்களும் சபிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். கிறிஸ்துவின் மெய்யான சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால் ஆசீர்வாதமுண்டு. பொய்யான சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால் சாபமுண்டு.
கலாத்தியரிடம் காணப்பட்ட தவறுகள்
1. வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்பினார்கள். (கலா 1:6)
2. கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிற கள்ளப்போதகர்களை அனுமதித்தார்கள். (கலா 1:7; கலா 5: 8-12)
3. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாமல் மயக்கமடைந்திருந்தார்கள். (கலா 3:1; கலா 5:7)
4. இயேசு கிறிஸ்துவை மறுபடியுமாகச் சிலுவையில் அறைகிறார்கள். (கலா 3:1)
5. சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களை மோசேயின் பிரமாணத்தினால் வரும் ஆசீர்வாதங்கள் என்று கூறுகிறார்கள். (கலா 3:2)
6. ஆவியினால் ஆரம்பம் பண்ணினார்கள். இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப் போகிறார்கள். (கலா 3:3)
7. சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களை இழந்து போனதினால் சுவிசேஷத்திற்காக வீணாய்ப் பாடுகளைப்பட்டார்கள். (கலா 3:4)
8. நீதிமானாக்கப்படுவதற்குக் கிரியைகளின் பிரமாணத்திற்கு மறுபடியுமாகத் திரும்புகிறார்கள். (கலா 3:10-12; கலா 5:4)
9. பலனற்றதும், வெறுமையானதுமான வழிபாடுகளுக்கு மறுபடியும் திரும்புகிறார்கள். (கலா 4:9)
10. மறுபடியும் அடிமைப்படும்படி விரும்புகிறார்கள். (கலா 4:9,21)
11. மறுபடியும் ஓய்வுநாட்களையும், பிரமாணத்தின் பண்டிகைகளையும் ஆசரிக்குமாறு திரும்பிப் போகிறார்கள். (கலா 4:9-10)
12. பவுல் அவர்களுக்கு சத்தியத்தைச் சொன்னதினாலே அவரைச் சத்துருவாகக் காண்கிறார்கள். (கலா 4:16)
13. தவறான காரியங்களுக்கு வைராக்கியம் பாராட்டுகிறார்கள். (கலா 4:17-18)
14. பின்வாங்கிப் போய்விட்டார்கள். ஆகையினால் அவர்கள் மறுபடியும் பிறக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். (கலா 4:19)
15. மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். (கலா 5:1)
16. விருத்தசேதனம் பண்ண வேண்டுமென்று மறுபடியும் தீர்மானம் பண்ணுகிறார்கள். (கலா 5:2)
17. கிருபையினின்று விழுந்துபோனார்கள். (கலா 1:6; கலா 5:4)
18. சுயாதீனத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி சரீரத்தைப் பாவம் செய்வதற்கு ஒப்புக்கொடுத்தார்கள். (கலா 5:13)
19. ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தார்கள். (கலா 5:15,26)
20. கிறிஸ்துவின் சிலுவையினிமித்தம் வரும் பாடுகளுக்குத் தப்பித்து ஓட வழிதேடுகிறார்கள். (கலா 6:12)
வேறொரு சுவிசேஷமாகிய நியாயப் பிரமாணத்தினால் செய்ய முடியாத காரியங்கள்
1. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லை. (கலா 2:16; கலா 3:11; கலா 5:4)
2. நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள். (கலா 3:10)
3. நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற் குரியதல்ல. (கலா 3:12)
4. நியாயப்பிரமாணத்தினால் சுதந்தரமானது உண்டாகாது. (கலா 3:18)
5. நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். ஆகையினால் பாவத்தைப் பாவமானதாக ஆக்குவதற்கே நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. (கலா 3:19)
6. இயேசு கிறிஸ்து வரும்வரையிலும் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. (கலா 3:19, 23-25; எபி 7:28)
7. நியாயப்பிரமாணம் உயிரைக் கொடுக்காது. (கலா 3:21)
8. நியாயப்பிரமாணம் நீதியைக் கொடுக்காது. (கலா 3:21)
9. நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. (கலா 3:24-26; மத் 11:11; லூக்கா 16:16)
10. கிறிஸ்துவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல. (கலா 3:19-25)
11. நியாயப்பிரமாணம் நம்மை குமாரர்களாக்காமல் அடிமைப்பட்டவர்களாக்குகிறது. (கலா 4:1-3)
12. அடிமைத்தனத்தைக் கொடுக்கிறது. (கலா 4:9,24; கலா 5:1)
13. நியாயப்பிரமாணம் அக்காலத்து மார்க்கம். (கலா 4:10)
14. நியாயப்பிரமாணத்தினால் புதிய பிறப்பைக் கொடுக்க முடியாது. (கலா 4:28-30)
15. நியாயப்பிரமாணம் அகற்றப்பட்டு விட்டது. (கலா 4:21-31)
16. விருத்தசேதனம் தேவை என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது. (கலா 5:2-3)
17. நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தவர்கள். (கலா 5:4)
கிறிஸ்துவினுடைய சுவிசேஷம் கலாத்தியருக்குக் கூறப்பட்டிருக்கும் விதம்
1. கிறிஸ்துவின் கிருபை (கலா 1:8)
2. வெளிப்பாடு (கலா 1:11-12)
3. மனுஷனுடையதல்ல, மனுஷனிடமிருந்து வந்ததுமல்ல. (கலா 1:11)
4. நீதிமானாக்குகிறது. (கலா 2:16)
5. ஆவியை வழங்குகிறது. (கலா 3:2)
6. அற்புதங்களை நடப்பிக்கிறது. (கலா 3:5)
7. நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொள்கிறது. (கலா 3:13)
8. விசுவாசத்திற்குரியது. (கலா 3:22-25)
9. நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களை மீட்கிறது. (கலா 3:13)
10. நம்மை அடிமைகளாக்காமல், குமாரர்களாக்குகிறது. (கலா 4:6)
11. நம்மைச் சுயாதீனமுள்ளவர்களாக்குகிறது. (கலா 4:26; கலா 5:1,13)
12. புதிய பிறப்பைத் தருகிறது. (கலா 4:21-31)
13. விருத்தசேதனத்தை அழிக்கிறது. (கலா 5:2)
14. நியாயப்பிரமாணத்தை அகற்றுகிறது. (கலா 5:18)
15. சுவிசேஷம் கிறிஸ்துவின் பிரமாணமாகும். (கலா 6:2)
சுவிசேஷம் கலாத்தியருக்குப் பிரசங்கிக்கப்பட்டது. கலாத்தியர்கள் சுவிசேஷத்தையும், அதன் மூலமாக வரும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்கள். ஆகையினால் கிருபையிலிருந்து அகற்றப்படுவதும் கிருபையிலிருந்து விழுந்துபோவதும் சுவிசேஷத்திலிருந்து பின்வாங்கிப் போகும் காரியமாகும்.
கலாத்தியரில் போதிக்கப்பட்டிருக்கும் உபதேசங்கள்
1. கிறிஸ்தவர்கள் கிருபையிலிருந்து விழுந்து போகவும், கிறிஸ்துவினிடமிருந்து அகற்றப்படவும் முடியும். (கலா 1:6-8; கலா 2:21; கலா 3:1-5)
2. பவுலின் சுவிசேஷம் தேவனிடமிருந்து வந்த வெளிப்பாடு (கலா 1:11-2:14).
3. விசுவாசத்தினால் மட்டுமே ஒருவன் நீதிமானாக்கப்படுவான். கிரியைகளினால் யாரும் நீதிமானாக்கப்படுவதில்லை. (கலா 2:15-3:29)
4. கிறிஸ்தவர்களால் பாவத்திலிருந்து விலகி ஜெயஜீவியம் செய்ய முடியும். (கலா 2:20-3:5; கலா 5:16-6:8).
5. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் எல்லா விசுவாசிகளுக்கும் உரியது. (கலா 3:1-5,13-14).
6. மோசேயின் பிரமாணம் முழுவதுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. (கலா 3:10-29; கலா 4:21-31; கலா 5:1).
7. கிறிஸ்துவைவிட்டுப் பின்வாங்கிப் போனவர்கள் மறுபடியும் கிறிஸ்துவிற்குள் பிறந்து தேவனுடைய கிருபைக்குத் திரும்ப வேண்டும். (கலா 1:6-8; கலா 2:17-21)
8. நியாயப்பிரமாணத்திற்கு மறுபடியும் திரும்பிச் செல்கிறவர்கள் அதற்குப் பூரணமாகக் கீழ்ப்படிய வேண்டும். கீழ்ப்படியாதவர்கள் சபிக்கப் பட்டவர்களாகவே இருப்பார்கள். (கலா 3:1-5, 10-12; கலா 4:21-5:4).
பவுலின் சரித்திரம் கலா 1 : 10-24
கலா 1:10. இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
கலா 1:11. மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
கலா 1:12. நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
கலா 1:13. நான் யூதமார்க்கத்தி-ருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி;
கலா 1:14. என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
கலா 1:15. அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றி-ருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்ததேவன்,
கலா 1:16. தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;
கலா 1:17. எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுபோய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.
கலா 1:18. மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன்.
கலா 1:19. கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.
கலா 1:20. நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
கலா 1:21. பின்பு, சீரியா சி-சியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.
கலா 1:22. மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.
கலா 1:23. முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து,
கலா 1:24. என்னைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
அப்போஸ்தலர் பவுல் இந்த நிருபத்தின் முன்னுரையில் சுருக்கமாக எழுதின சத்தியத்தை, இங்கு விரிவாக எழுதுகிறார். பவுல் தன்னை கிறிஸ்துவின் அப்போஸ்தலராக அறிக்கை செய்கிறார். மனுஷராலோ அல்லது மனுஷர் மூலமாகவோ பவுல் அப்போஸ்தலராக நியமிக்கப்படவில்லை. இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின பிதாவாகிய தேவனாலும் பவுல் அப்போஸ்தலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்தை பவுல் இங்கு மேலும் விவரிக்கிறார்.
அப்போஸ்தல ஊழியம் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவானவரே பவுலை அப்போஸ்தலராக நியமித்திருக்கிறார். தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென்பதும், பாவிகளை மனந்திரும்புவதற்கு நேராக வழிநடத்தி, அவர்களை கிறிஸ்துவுக்கு கீழ்படியச் செய்வதும் அப்போஸ்தல ஊழியத்தின் முக்கியமான பகுதியாகும். பாவத்திற்கு அடிமையாகயிருந்தவர்கள் இனிமேல் கிறிஸ்துவுக்கு அடிமைகளாக வேண்டும். அவருடைய சுவிசேஷத்திற்கு அடிமைகளாகவேண்டும்.
அப்போஸ்தலர்கள் மனுஷரை நாடியோ, மனுஷரைப் பிரியப்படுத்தியோ போதிக்கக்கூடாது. அவர்கள் தேவனையே நாடவேண்டும். தேவனையே பிரியப்படுத்தவேண்டும். தேவனை நாடி, தேவனைப் பிரியப்படுத்துகிறவர்கள் மாத்திரமே கிறிஸ்துவின் மெய்யான ஊழியக்காரர்கள். அப்போஸ்தலர் பவுல் மனுஷரை நாடவில்லையென்றும், மனுஷரைப் பிரியப்படுத்தவில்லையென்றும், அறிக்கை செய்கிறார். மேலும் அவர் தேவனையே நாடி, தேவனையே பிரியப்படுத்துவதாக பவுல் அறிக்கை செய்கிறார். இரண்டு எஜமானுக்கு யாராலும் உண்மையாய் ஊழியம் செய்யமுடியாது. ஒருவனைச் சிநேகித்து மற்றவனைப் பகைப்பான். அப்போஸ்தலர் பவுல் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்கிறவரல்ல. கிறிஸ்துவுக்கு மாத்திரமே ஊழியம் செய்கிறவர். ஆகையினால் அவர் மனுஷரைப் பிரியப்படுத்தாமல் தேவனை மாத்திரமே பிரியப்படுத்துகிறார்.
கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு ஊழியக்காரர்களாயிருக்கிறவர்கள், ஜனங்களை கிறிஸ்துவிடம் அழைத்து வரவேண்டும். மனுஷரைப் பிரியப்படுத்துகிறவர்கள், ஜனங்களை மனுஷரிடத்தில் அழைத்துப்போவார்கள். பவுலோ கிறிஸ்துவைப் பிரியப்படுத்துகிறவர். ஆகையினால் ஜனங்களை கிறிஸ்துவிடம் அழைத்து வருகிறார். மனுஷர் தங்களை அங்கீகரிக்கவேண்டுமென்று எதிர்பார்த்து, ஒரு சிலர் மனுஷரைப் பிரியப்படுத்தும் காரியங்களைச் செய்கிறார்கள். ஆனால் பவுலோ கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியக்காரராயிருந்து, கிறிஸ்துவை மாத்திரமே பிரியப்படுத்துகிறார்.
பவுல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார். தான் இந்த சுவிசேஷத்தைப் பெற்றுக்கொண்ட விதத்தை இங்கு தெளிவுபடுத்துகிறார். பவுல் பிரசங்கிக்கிற சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படி உண்டானதல்ல. பவுல் இந்தச் சுவிசேஷத்தை எந்த ஒரு மனுஷனாலும் பெற்றுக்கொள்ளவில்லை. எந்த ஒரு மனுஷன் மூலமாயும் கற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்துவானவரே தம்முடைய சுவிசேஷத்தை பவுலுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிறிஸ்துவே அப்போஸ்தலர்களை அப்போஸ்தல ஊழியத்திற்கு அழைக்கிறார். அவர்களுக்கு அப்போஸ்தல ஊழியத்தை எப்படி செய்யவேண்டுமென்று கற்றுத்தருகிறார். கிறிஸ்துவானவரே அவர்களை அப்போஸ்தல ஊழியத்திற்கு அபிஷேகம் பண்ணுகிறார். இதுவே அப்போஸ்தல ஊழியத்தின் குணாதிசயம். அப்போஸ்தல ஊழியம் மனுஷரால் ஏற்படுத்தப்பட்டதல்ல. அது தேவனால் ஏற்படுத்தப்பட்டது.
இயேசுகிறிஸ்துவானவரே பவுலுக்கு தம்முடைய சுவிசேஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். பவுல் தனக்கு வெளிப்படுத்தப்பட்ட சுவிசேஷத்தை உண்மையாய்ப் பிரசங்கம் செய்கிறார். பவுலுக்கு சுவிசேஷத்தைப்பற்றி ஞானம் இருக்கிறது. சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணுகிற அதிகாரமுமிருக்கிறது. இந்த ஞானமும், இந்த அதிகாரமும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து அவருக்கு நேரடியாக வந்திருக்கிறது.
அப்போஸ்தலர் பவுல் தன்னுடைய கடந்தகால ஜீவியத்தைப்பற்றி இங்கு சுருக்கமாகச் சொல்லுகிறார். பவுலின் ஜீவியத்தில் மிகப்பெரிய மாற்றமுண்டாயிருக்கிறது. அவர் இயேசுகிறிஸ்துவை, தன்னுடைய இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, யூதமார்க்கத்திலிருந்தார். அவருடைய யூதமார்க்கத்து நடவடிக்கையைக் குறித்து கலாத்தியர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அப்போது பவுல் தேவனுடைய சபையை மிகவும் துன்பப்படுத்தி அதை பாழாக்கினார். யூதமார்க்கத்தில் தேறினவனாயிருந்தார். தன் பிதாக்களின் பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்தி வைராக்கியமுள்ளவராயிருந்தார். அப்படி இருந்தவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமுண்டாயிற்று. இந்த மாற்றம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாயிற்று. இதுவரையிலும் எந்த உபதேசத்தைப் பற்றிக்கொண்டிருந்தாரோ அதற்கு விரோதமாக இப்போது உபதேசம் செய்கிறார். இதுவரையிலும் எந்த உபதேசத்தை வெறுத்தாரோ, அந்த உபதேசத்தை இப்போது உண்மையாய்ப் பிரசங்கம்பண்ணுகிறார்.
கர்த்தருடைய கிருபையினால் அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவைப்பற்றிய அறிவைப் பெற்றுக்கொண்டார். அவருடைய கிருபையினால் பவுலுக்கு கிறிஸ்துவில் விசுவாசமுண்டாயிற்று. தேவனுடைய கிருபையினால், அவரே பவுலை அப்போஸ்தல ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார். அப்போஸ்தலர்களில் பவுல் மிகவும் விசேஷமானவர். அவருடைய மனமாற்றம் திடீரென்று உண்டாயிற்று. அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் மிகவும் பெரியது.
பவுல் தன் தாயின் வயிற்றிலிருந்தது முதல், கர்த்தர் தம்முடைய கிருபையினால் அவரைப் பிரித்தெடுத்து, தம்முடைய ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார். குமாரனாகிய இயேசுகிறிஸ்து தம்மைப் பவுலுக்குள் வெளிப்படுத்தியிருக்கிறார். நமக்குள் கிறிஸ்துவின் வெளிப்பாடு உண்டாகவேண்டும். இல்லையென்றால் கிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாடு நமக்கு நிறைவாகக் கிடைக்காது. நம்முடைய உள்ளத்தில், நமக்குள், கிறிஸ்து தம்மை வெளிப்படுத்த வேண்டுமென்று, நாம் கருத்தோடு ஜெபிக்கவேண்டும்.
தம்முடைய குமாரனை பவுலுக்குள் வெளிப்படுத்துவது பிதாவாகிய தேவனுக்கு பிரியமாக இருக்கிறது. புறஜாதிகளிடத்தில், தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவை, பவுல் சுவிசேஷமாய் அறிவிக்கவேண்டுமென்பது தேவனுடைய சித்தமும், தேவனுடைய விருப்பமும் பிரியமுமாகும். இவ்வாறாக பவுல் தேவனுடைய தெய்வீக வெளிப்பாட்டினால், ஒரு விசுவாசியாகவும், ஒரு அப்போஸ்தலராகவும் இருக்கிறார்.
பிதாவாகிய தேவன் பவுலுக்குள் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்குப் பிரியமாகயிருக்கிறார். பவுல் தேவனுடைய விருப்பத்தை அறிந்தபோது, அவர் தன் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணவில்லை. பவுல் தன்னுடைய மாம்சத்தினாலோ, தன்னுடைய இரத்தத்தினாலோ சிந்தித்து தீர்மானம் செய்து, கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவில்லை. கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க கர்த்தரே பவுலுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.
தேவன் பவுலை தம்முடைய ஊழியத்திற்குப் பிரித்தெடுத்தபோது, பவுல் தன் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணவில்லை. தேவனுடைய அழைப்பைப்பற்றி உறுதிபண்ணுவதற்கு மற்ற அப்போஸ்தலர்களிடத்தில் அவர் யோசனை கேட்கவுமில்லை. தன்னை கர்த்தர் பிரித்தெடுத்திருக்கிறார் என்றும், புறஜாதிகளிடத்தில் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தரே தன்னை நியமித்திருக்கிறார் என்றும் பவுல் உறுதியாக நம்புகிறார். பவுல் இந்தச் சத்தியத்தை கலாத்தியருக்கு எழுதும்போது, இவைகள் பொய்யல்லவென்றும், தேவனுக்கு முன்பாக தான் நிச்சயமாய்ச் சொல்வதாகவும் எழுதுகிறார் (கலா 1:20).
தம்முடைய ஊழியத்தைச் செய்வதற்கு கர்த்தர் நமக்கு பல வாய்ப்புக்களைக் கொடுக்கிறார். கர்த்தருக்காக ஊழியம் செய்வது நம்முடைய கடமை. கர்த்தர் ஊழிய வாய்ப்பைக் கொடுக்கும்போது, ஊழியம் செய்வது கர்த்தருடைய சித்தமா என்று யோசித்துக் கொண்டிருக்கக்கூடாது. அது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கடமையென்று தீர்மானித்து கர்த்தருடைய ஊழியத்தைச் செய்யவேண்டும்.
கர்த்தருடைய ஊழியத்தைச் செய்வது நம்முடைய சிலாக்கியம். கர்த்தர் நமக்கு ஊழிய வாய்ப்புக்களைக் கொடுக்கும்போது, அதைப் பயன்படுத்த யோசிக்கக்கூடாது. யாரிடத்திலும் அது சம்பந்தமாக ஆலோசனை கேட்கவேண்டியதில்லை. கர்த்தருடைய அழைப்பு தெளிவாகயிருக்குமென்றால், அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றவேண்டும்.
கர்த்தர் பவுலை தம்முடைய ஊழியத்திற்கு அழைத்தபோது, எருசலேமிலுள்ள அப்போஸ்தலரிடத்தில் பவுலுக்கு அதிக பழக்கமில்லை. அவர்களைப்பற்றி பவுலுக்கு அதிகமாகத் தெரியாது. யூதேயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு பவுல் முகமறியாதவராக இருந்தார். ஆனால் யூதேயா தேசத்திலுள்ள சபையாரோ பவுலின் இரட்சிப்பைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். பவுல் தங்களைத் துன்பப்படுத்தினவர் என்பதும், கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசத்தை அழிக்கத் தேடினவர் என்பதும் யூதேயா தேசத்திலுள்ள சபையாருக்குத் தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்ட பவுல், தான் அழிக்கத் தேறின விசுவாசத்தை, இப்போது பிரசங்கிக்கிறார் என்பதை அவர்கள் கேள்விப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள்.
மூன்று வருஷங்களாக பவுல் எருசலேமுக்குப் போகாமல் அரபி தேசத்திலும், சீரியா, சிலிசியா நாடுகளின் புறங்களிலும் புறஜாதிகளிடத்தில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்தார். மூன்று வருஷம் சென்றபின்பு பவுல் பேதுருவைக் கண்டுகொள்ளும்படி எருசலேமுக்குப்போனார். அவரிடத்தில் பதினைந்து நாட்கள் தங்கினார். அப்போது கிறிஸ்துவின் சகோதரனாகிய யாக்கோபைச் சந்தித்தார். அப்போஸ்தலரில் வேறு யாரையும் பவுல் காணவில்லை. பவுலுக்கு அப்போஸ்தலரைவிட கர்த்தரே முக்கியமானவராக இருக்கிறார். அப்போஸ்தலருடைய சிநேகத்தையும் ஆலோசனையையும்விட கிறிஸ்துவின் அன்பும், ஆலோசனையுமே அவருக்கு மிகவும் முக்கியமானதாகயிருக்கிறது.
பவுல் கிறிஸ்தவர்களை அதிகமாகத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றுபோட்டார். இயேசு கிறிஸ்துவிற்கு எதிராக யுத்தம் பண்ணினார். இந்த நிகழ்ச்சிகளைப் பவுல் ஒருபோதும் மறக்காமல் பல வசனங்களில் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார். யூதருடைய பாரம்பரிய நியாயங்களில் பவுல் மிகவும் பக்திவைராக்கியம் உள்ளவராக இருந்தார். வேதத்தைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார்.
அரபி தேசம் என்பது தமஸ்குவிலிருந்து கிழக்கில் யோர்தான் வரையிலும், தெற்கில் ஏதோம் வரையிலும் உள்ள பிரதேசம் ஆகும். இதன் தலைநகரம் பெத்ரா. தமஸ்குவிற்கு வருவதற்கு முன்பாகப் பவுல் அரபி தேசத்தில் எவ்வளவு காலம் தங்கியிருந்தார் என்று தெரியவில்லை. அரபி தேசத்திலும், தமஸ்குவிலும் பவுல் மூன்று வருஷங்கள் தங்கியிருந்தார். அரபி தேசத்தில் பவுல் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்றிருக்க வேண்டுமென்று ஒருசிலர் கருதுகிறார்கள். இது மெய்யாகவும் இருக்கலாம். மற்ற அப்போஸ்தலர்களைப் பவுல் காணச்செல்வதற்கு முன்பாகவே அவர் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்றிருந்தார். பவுல் மனுஷரிடமிருந்து தேவ வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளவில்லை. பேதுருவோடு உபதேசக் காரியங்களை விவாதிக்கும் அளவிற்குப் பவுல் தேர்ச்சி பெற்றிருந்தார்.
பரிசுத்தவான்களைக் கைது பண்ணுவதற்காகப் பவுல் எருசலேமை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். அதன் பின்பு தமஸ்குவிலிருந்து தப்பிச் சென்று அரபி தேசத்திற்குச் சென்று திரும்பவும் தமஸ்குவிற்கு வந்தார். மூன்று வருஷங்களுக்குப் பின்பு பவுல் எருசலேமிற்குச் சென்றார். அதன் பின்பு சீரியா, சிலிசியா ஆகிய நாடுகளின் புறங்களிலே வந்து தர்ஷீஸிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்தார்.