பெபேயாள்
கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு, எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள் (ரோம 16:1,2)
பவுல் இந்த வசனத்தில் பெபேயாள் என்னும் சகோதரியைப்பற்றிக் குறிப்பிடுகிறார். ஒருவேளை பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிருபம் இந்தச் சகோதரி மூலமாய், ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்குக் கொடுத்து அனுப்பப்பட்டிருக்கவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். பவுல் பெபேயாளை அறிமுகம் செய்து வைத்து, அவளைப்பற்றி நல்ல வார்த்தைகளையும் சொல்லுகிறார். பெபேயாள் நற்குணமுள்ளவள். பரிசுத்தவான்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியுள்ளவள்.
ஏதோ ஒரு வேலையாக பெபேயாள் ரோமாபுரிக்குப் போகிறாள். இதற்கு முன்பு அவள் அங்கு போனதில்லை. ரோமாபுரியில் பெபேயாள் ஒரு அந்நிய ஸ்திரீயைப்போல இருப்பாள். ஆகையினால் அங்குள்ள சகோதரர்கள் பெபேயாளை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று பவுல் இந்த நிருபத்தில் எழுதுகிறார். பிறரிடத்தில் அன்புகூருவதும், பிறருக்கு உதவிபுரிவதும் கிறிஸ்தவ உபதேசத்தின் முக்கிய அம்சங்களாகும்.
பவுல் பெபேயாளைப்பற்றிச் சொல்லும்போது ""நம்முடைய சகோதரி'' என்று குறிப்பிடுகிறார். இவள் பவுலுக்கு உடன்பிறந்த சகோதரியல்ல. கிறிஸ்துவுக்குள் இவள் ஒரு சகோதரி. தேவனுடைய கிருபையினால் இவள் விசுவாசிகளுக்கு சகோதரியாயிருக்கிறாள். இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காலத்தில் ஒரு சில ஸ்திரீகள் அவருக்கு ஆதரவாயிருந்து ஊழியம் செய்தார்கள். அப்போஸ்தலர்களுக்கும் ஒரு சில ஸ்திரீகள் ஊழியம் செய்திருக்கிறார்கள். பெபேயாள் அப்படிப்பட்ட ஊழியக்காரிகளில் ஒருத்தி.
பெபேயாள் கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகயிருக்கிறாள். ஆதித்திருச்சபையில் ஸ்திரீகள் விசுவாசிகளின் மத்தியில் பிரசங்கம்பண்ண அனுமதியில்லை. ஆகையினால் இவள் பிரசங்க ஊழியம் செய்திருப்பதற்கு வாய்ப்பில்லை. சபையின் மற்ற ஊழியக்காரியங்களில் பெபேயாள் பொறுப்பேற்றிருக்கவேண்டும். விருந்தினர்களை உபசரிப்பது, உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்வது ஆகிய ஊழியங்களை இந்தச் சகோதரி செய்திருக்கலாம்.
கெங்கிரேயாவில் பெபேயாள் ஒரு செல்வாக்குள்ள ஸ்திரீயாக இருந்திருக்கவேண்டும். ஒருவேளை இவள் ஐசுவரியமுள்ள ஸ்திரீயாகக்கூட இருந்திருக்கலாம். ஆனாலும் சபைக்கு ஊழியம் செய்ய இவளுடைய சமுதாய அந்தஸ்து தடையாகயில்லை. சபையில் உண்மையாய் ஊழியம் செய்கிறாள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமெல்லோருமே, நம்முடைய ஸ்தல சபைகளில் ஊழியக்காரர்களைப்போல ஊழியம் செய்யவேண்டும். சபைக்குச் செய்கிற ஊழியம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குச் செய்கிற ஊழியமாகவே இருக்கும். கெங்கிரேயா கொரிந்து தேசத்து கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டணம்.
அவள் அநேகருக்கு ஆதரவாயிருந்தவள். பவுலுக்கும் ஆதரவாயிருந்தவள். அநேகருக்கு உதவி தேவைப்பட்டபோது பெபேயாள் அவர்களுக்கு உதவிசெய்திருக்கிறாள். ஒருவேளை இவள் ஐசுவரியமுள்ள ஸ்திரீயாகயிருந்து, அநேகருக்கு பொருள் உதவி செய்திருக்கலாம். பலருக்கு போஜனம்கொடுத்து ஆதவாகயிருந்திருக்கலாம். பவுல் பெபேயாளைப்பற்றிச் சொல்லும்போது, ""அவள் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்'' என்று சொல்லுகிறார். பிறர் நமக்குச் செய்த உதவிகளை நாம் அங்கீகரிக்கவேண்டும். வாய்ப்பு வரும்போது நாமும் அவர்களுக்கு உதவிபுரியவேண்டும்.
பெபேயாளை கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பவுல் ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்குச் சொல்லுகிறார். ஒரு சாதாரண அந்நியரை ஏற்றுக்கொண்டு உபசரிப்பதுபோல பெபேயாளை உபசரிக்கக்கூடாது. கர்த்தருக்குள் பரிசுத்தவான்களை ஏற்றுக்கொண்டு, அவர்களை உபசரிப்பதுபோல, பெபேயாளை நன்றாய் உபசரிக்கவேண்டும்.
பரிசுத்தவான்கள் கர்த்தரை நேசிக்கிறார்கள். விசுவாசிகள் இயேசுகிறிஸ்துவினிமித்தம் பரிசுத்தவான்களை நேசிக்கவேண்டும். அவர்களுக்கு மரியாதை காண்பிக்கவேண்டும். பெபேயாளுக்கு எந்தெந்த காரியத்தில் அவர்களுடைய உதவி தேவையாயிருக்கிறதோ அதிலே அவர்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டும் என்று சொல்லி, பவுல் பெபேயாளை ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளிடத்தில் ஒப்புவிக்கிறார்.
பெபேயாள் ஒரு ஸ்திரீ. ரோமாபுரிக்கு அந்நியராயிருக்கிறாள். இவள் ஒரு கிறிஸ்தவ ஸ்திரீ. இவளுக்கு உதவி தேவைப்படுகிறது. இவளுக்குத் தேவையான உதவியைச் செய்யுமாறு பவுல் மற்ற விசுவாசிகளிடத்தில் கேட்டுக்கொள்கிறார். விசுவாசிகளாகிய நாம் ஒருவருக்கொருவர் உதவிபுரியவேண்டும். விசேஷமாய் அந்நியரை உபசரிக்கவேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச்செய்து அவர்களுக்கு ஆதரவாயிருக்கவேண்டும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமெல்லோருமே கிறிஸ்துவின் சரீரத்தில் அவயவங்களாயிருக்கிறோம். அநேகருக்கு உதவிசெய்தவர்களுக்கு நாமும் உதவிசெய்ய தயங்கக்கூடாது. இரக்கம் காண்பிக்கிறவர்கள் இரக்கம் பெறுவார்கள். உதவிசெய்கிறவர்கள் உதவிபெறுவார்கள்.
பெபேயாள் கெங்கிரேயா சபையிலிருந்த பெண் ஊழியக்காரி. இவள் பெண்கள் மத்தியில் ஊழியம் செய்து வந்தாள். ஸ்திரீகளை ஞானஸ்நானத்திற்கு ஆயத்தம் பண்ணுவது, வியாதியஸ்தரையும், சிறைச்சாலையில் இருப்போர்களையும் சந்திப்பது ஆகிய ஊழியங்களைச் செய்து வந்தாள். பெண்கள் மத்தியில் நடைபெற்ற எல்லா ஊழியங்களையும் இவள் செய்து வந்தாள் என்று கூறுகிறார்கள். ரோமருக்கு எழுதின நிருபத்தை பெபேயாளே எடுத்துச் சென்றிருக்க வேண்டுமென்று திருச்சபை வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
கெங்கிரேயா கொரிந்துவிற்கு அருகிலுள்ள கடற்கரையில் அமைந்துள்ள பட்டிணம். ஆதரவாயிருந்தவள் என்னும் வார்த்தை அந்நியர்களைத் தங்களுடைய இல்லங்களில் ஏற்றுக் கொண்டு உபசரிக்கிறவர்களை குறிப்பிடும். கெங்கிரேயா ஊருக்கு வந்த அப்போஸ்தலர்களையும், தேவஊழியர்களையும் பெபேயாள் ஏற்றுக் கொண்டு உபசரித்திருக்கலாம்.