இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்
2. இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசி-ருப்பாய்
இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்
குற்றவாளிகளாகிய வேறே இரண்டு பேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள் (லூக் 23:32,33).
இயேசுகிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளைக் குறித்து மத்தேயு, மாற்கு ஆகிய இரண்டு சுவிசேஷங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவை கொலைசெய்வதற்கு அவரோடேகூட குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரை கொண்டு போகிறார்கள். கல்வாரி என்னும் இடத்தில் இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைகிறார்கள். கல்வாரி என்னும் வார்த்தைக்கு கபாலஸ்தலம் என்று பொருள். இந்த இடம் மனுஷனுடைய மண்டை ஓடுபோல இருக்கும். இயேசுகிறிஸ்துவுக்கு மிகவும் வேதனையான மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது. வேதனையோடு நித்தையும் அவமானமும் கிறிஸ்துவின் மரணத்தில் கலந்திருக்கிறது. மனுக்குலத்தை இரட்சிப்பதற்காக இந்த பூமிக்கு வந்திருக்கும் தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து ஒரு குற்றவாளியைப்போல நடத்தப்படுகிறார். குற்றவாளிகளில் ஒருவராகவும் எண்ணப்படுகிறார்.
குற்றவாளிகள் என்பவர்கள் திருடர்கள், குற்றம் புரிந்தவர்கள், துன்மார்க்கர் ஆவார்கள். இயேசு கிறிஸ்துவோடு இரண்டு பேரைச் சிலுவையில் அறைந்தார்கள். சிறிது வேளைக்குப் பின்பு மேலும் இரண்டுபேரைச் சிலுவையில் அறைந்தார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்களுடைய கருத்தின்படி ஐந்துபேர்கள் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும்.
""கபாலஸ்தலம்'' என்பது எபிரெய மொழியில் கொல்கொதா என்று அழைக்கப்படுகிறது. இந்த மலை பார்ப்பதற்குக் கபாலம் அதாவது மண்டையோடு போலவே இருக்கும்.
குற்றவாளிகளில் ஒருவன்
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான் (லூக் 23:39).
இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையும்போது, அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைகிறார்கள். இவ்விரண்டு குற்றவாளிகளில் ஒருவன் மனந்திரும்பி இரட்சிக்கப்படுகிறான். மற்றொருவன் மனந்திரும்பாமல் ஆக்கினைத்தீர்ப்படைகிறான். இயேசுகிறிஸ்துவின் சிலுவை இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு ஜீவனைக்கொடுக்கும் சிலுவையாகவும், இரட்சிக்கப்படாமல் ஆக்கினைத்தீர்ப்படைகிறவர்களுக்கு மரணத்தைக்கொடுக்கும் சிலுவையாகவும் இருக்கிறது.
சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன், தன்னுடைய கடைசி மூச்சுவரையிலும் தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறான். இயேசுகிறிஸ்துவின் சிலுவைக்கு அருகாமையில் இவன் இருக்கிறபோதிலும், சிலுவையின் மூலமாக வரும் ஆத்தும இரட்சிப்பை இவன் பெற்றுக்கொள்ளவில்லை. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதை ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவரைப் பரியாசம்பண்ணுகிறார்கள். இந்தக் குற்றவாளி சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தாலும், இவனும் மற்றவர்களைப்போல சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் கிறிஸ்துவை வேடிக்கை பார்த்துக்கொண்டு, அவரைப் பரியாசம்பண்ணுகிறான்.
சிலுவையின் வேதனையையும், பாடுகளையும் இவன் அனுபவிக்கிறபோதிலும், தன்னுடைய பெருமையின் ஆவியை தாழ்த்தவில்லை. தன்னைப்போலவே பாடுகளை அனுபவிக்கும் இயேசுகிறிஸ்துவின்மீது இவன் பரிதாபப்படவில்லை. இயேசுவுக்கு ஆறுதலான வார்த்தையையும் சொல்லவில்லை. தங்களை நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் ஜனங்களைப்போலவே, இவனும் இயேசுகிறிஸ்துவை பரியாசம்பண்ணுகிறான், இகழ்கிறான். ""நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்'' என்று இயேசுகிறிஸ்துவிடம் ஆணவமாக பேசி அவரை இகழ்கிறான்.
இந்தக் குற்றவாளியைப்போலவே இக்காலத்தில் ஏராளமான ஜனங்கள் இருக்கிறார்கள். தாங்கள் பாடுகளையும், வேதனைகளையும், துன்பங்களையும் அனுபவித்தாலும் மனந்திரும்ப மறுத்துவிடுகிறார்கள். தாங்கள் வேதனைப்பட்டாலும், தங்களைப்போல வேதனைப்படுகிற மற்றவர்களை தூஷிக்கிறார்கள். இவர்களும் மனந்திரும்ப மாட்டார்கள், மனந்திரும்புவதற்கு உதவிபுரிய முன்வருகிறவர்களின் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்களை தூஷிப்பார்கள்.
இயேசு கிறிஸ்துவோடு மேலும் நான்குபேர் சிலுவையில் அறையப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறவர்கள் இந்த வசனத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஏற்கெனவே இரண்டு கள்ளர்கள் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டார்கள். இப்போது குற்றவாளிகளில் ஒருவன் என்று வாசிக்கிறோம். ஒருவேளை இரண்டு கள்ளர்களும், இரண்டு குற்றவாளிகளும் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கலாம் என்பது இவர்களுடைய வியாக்கியானம். (மத் 27:44; மாற்கு 15:32).
குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவைப் பரியாசம் பண்ணினான். மற்றவனோ தனது குற்றத்தை உணர்ந்து, இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கோருகிறான்.
மற்றவன்
மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, (லூக் 23:40,41)
சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் மற்றொருவன், தான் மரிப்பதற்கு முன்பாக தன்னுடைய இருதயத்தை மென்மையாக்குகிறான். இவன் எரிகிற நெருப்பிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருக்கிறான். தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் பெற்றுக்கொள்வதற்கு இவன் ஒரு சிறந்த முன்மாதிரியாக செயல்படுகிறான்.
இவனைப்போலவே ஒரு சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் இரட்சிக்கப்படாமல், பாவத்தில் ஜீவித்துவிட்டு, தேவனுடைய இரட்சிக்கும் கிருபையினால், தங்களுடைய ஜீவியகாலத்தின் இறுதி நாட்களில் இரட்சிக்கப்படுகிறார்கள். நாம் எப்போது வேண்டுமானாலும் இரட்சிக்கப்படலாம். அதற்காக நம்முடைய இரட்சிப்பை காலதாமதம் பண்ணுவது விவேகமான செயலல்ல. இந்தக் குற்றவாளியின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாம் மரிக்கும்போது பாவஅறிக்கை செய்து இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்று காலதாமதம் பண்ணக்கூடாது. இவனுடைய இரட்சிப்பு தேவனுடைய இரட்சிக்கும் கிருபைக்கும் இரக்கத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக கூறப்பட்டிருக்கிறதே தவிர, இவன் நம்முடைய இரட்சிப்புக்கு முன்மாதிரியல்ல.
மனந்திரும்பிய இந்தக் குற்றவாளிக்கு, இதற்கு முன்பு இயேசுகிறிஸ்துவைப்பற்றி யாரும் உபதேசம் பண்ணியதில்லை. கிறிஸ்துவின் இரட்சிக்கும் கிருபையையும் இரக்கத்தையும் பெற்றுக்கொள்வதற்கு இவனுக்கு இதற்கு முன்பு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை தன்னுடைய ஆத்தும இரட்சிப்புக்கு சாதகமாக பயன்படுத்துகிறான். கிறிஸ்துவின் இரட்சிக்கும் கிருபைக்கும், இரட்சிக்கும் வல்லமைக்கும் இவன் ஒரு விசேஷித்த எடுத்துக்காட்டாக இருக்கிறான். தாம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறபோதிலும், இந்த உலகத்திற்கு தாம் வந்ததற்கான நோக்கத்தை, இயேசுகிறிஸ்து இந்த வேளையிலும் மறந்துவிடாமல் ஆத்தும ஆதாயம் செய்துகொண்டிருக்கிறார்.
சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவை நிந்திக்கிறான். மற்றவனோ இவனிடம் இயேசுகிறிஸ்துவைக்குறித்து உயர்வாக பேசுகிறான். தேவனுக்குப் பயப்பட வேண்டுமென்று வலியுறுத்துகிறான். இவன் குற்றவாளியாக இருந்தாலும் தேவனுக்கு பயப்படவேண்டும் என்னும் எண்ணம் இவனுடைய உள்ளத்தில் இருக்கிறது. இவன் சிலுவையில் அறையப்பட்ட மற்ற குற்றவாளியைப் பார்த்து ""நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்கு பயப்படுகிறதில்லையா'' என்று அவனைக் கடிந்து கூறுகிறான். ""உனக்கு உண்மையிலேயே மனிதாபிமானம் இருக்குமானால், உன்னைப்போலவே சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் இயேசுகிறிஸ்துவை நீ நிந்திக்கமாட்டாய்'' என்பது இவனுடைய வார்த்தையின் பொருளாகும்.
தான் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தாலும், தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை நியாயமானது என்று அங்கீகரிக்கிறான். தன்னைப்போலவே மற்ற குற்றவாளியும் நியாயமாக தண்டனை அனுபவிப்பதாக நினைக்கிறான். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஒரு தப்பிதமும் பண்ணவில்லை என்றாலும் அவர் பாடுகளை அனுபவிக்கிறார் என்று தன்னுடைய உள்ளத்தில் வேதனைப்படுகிறான். ""நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம். நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்கபலனை அடைகிறோம்'' என்று சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் மற்ற குற்றவாளியிடம் தங்களுடைய தண்டனையை நியாயப்படுத்துகிறான்.
உண்மையாக மனந்திரும்புகிறவர்கள் தங்கள்மீது வரும் தேவனுடைய நியாயத்தீர்ப்பை அங்கீகரிப்பார்கள். தங்களுடைய பாவத்தின் நிமித்தமாக தங்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை பொறுமையோடு சகித்துக்கொள்வார்கள். தாங்கள் துன்மார்க்கம் பண்ணியதாகவும், தாங்கள் அனுபவிக்கும் தண்டனை நியாயமானதுதான் என்றும் பொறுமையோடிருப்பார்கள். தங்களுடைய பாடுகளுக்கு தேவனைக் குற்றப்படுத்தாமல், தங்களுடைய துன்மார்க்கமான கிரியைகளே தங்களுடைய பாடுகளுக்கு காரணம் என்று அங்கீகரித்துக்கொள்வார்கள்.
இயேசுகிறிஸ்து ஒரு தப்பிதமும் செய்யவில்லை. ஆகையினால் அவரை சிலுவையில் அறைந்தது நியாயமானதல்ல என்றும், அவர் தேவையில்லாமல் சிலுவைப்பாடுகளை அனுபவிக்கிறார் என்றும் இந்தக் குற்றவாளி நினைக்கிறான். ""இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே'' என்று இயேசுகிறிஸ்துவின் பாடுகளைப்பற்றி கூறி, மற்ற குற்றவாளியை கடிந்துகொள்கிறான். தனக்குக் கொடுக்கப்படும் தண்டனையை இந்தக் குற்றவாளி அங்கீகரிக்கிறான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தகாததொன்றையும் செய்யவில்லை என்று அறிக்கை செய்கிறான்.
பிரதான ஆசாரியர்கள் இயேசுகிறிஸ்துவை இரண்டு குற்றவாளிகளுக்கு நடுவில் சிலுவையில் அறைகிறார்கள். அவர்களுடைய பார்வைக்கு இயேசுகிறிஸ்து குற்றவாளிகளில் ஒருவராகவே தெரிகிறார். சிலுவையில் அறையப்பட்டிருக்கும் குற்றவாளிகளில் ஒருவனுக்குக்கூட இயேசுகிறிஸ்து தன்னைப்போல ஒரு குற்றவாளியாகவே தெரிகிறார். ஆனால் மனந்திரும்பியிருக்கும் இந்தக் குற்றவாளிக்கோ, இயேசுகிறிஸ்து நிரபராதியாக தெரிகிறார். இவனுடைய மனக்கண்கள் திறக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய மனக்கண்கள் பிரகாசமுள்ளதாக இருந்தால் நம்முடைய சிந்தையும் தெளிவடையும்.
மனந்திருந்திய குற்றவாளியின் சுபாவங்கள்
1. தேவனுக்குப் பயந்தான் (லூக்கா 23:40)
2. மற்றவன் தேவனுக்குப் பயப்படாமல் இருந்ததினால் அவனைக் கடிந்து கொண்டான். (லூக்கா 23:40)
3. தன்னுடைய ஆக்கினையையும், தன்னுடைய பரிதாபமான நிலையையும் அங்கீகரிக்கிறான். (லூக்கா 23:40)
4. தான் நியாயப்படி தண்டிக்கப்படுவதாக அறிவிக்கிறான். (லூக்கா 23:41)
5. இயேசு கிறிஸ்து ஒரு குற்றமும் செய்யவில்லையென்று அறிக்கையிடுகிறான். (லூக்கா 23:41)
6. இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கையிடுகிறான். (லூக்கா 23:42)
7. இயேசுகிறிஸ்து தம்முடைய ராஜ்ஜியத்தில் வெற்றியோடு வருவார் என்று தன்னுடைய விசுவாசத்தை அறிக்கை செய்கிறான். (லூக்கா 23:42)
8. இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தையும், மன்னிப்பையும் கோருகிறான். (லூக்கா 23:42)
அடியேனை நினைத்தருளும்
இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான் (லூக் 23:42).
தன்னுடைய உள்ளத்தில் மனந்திரும்பியிருக்கும் குற்றவாளிகளில் ஒருவன், இயேசுவை நோக்கி ""ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்'' என்று கூறுகிறான். இந்தப் பாவியும் சிலுவையில் மரித்துக்கொண்டிருக்கிறான். இரட்சகரும் சிலுவையில் மரித்துக்கொண்டிருக்கிறார். இந்த ஜெபம் மரித்துக்கொண்டிருக்கும் ஒரு பாவி, மரித்துக்கொண்டிருக்கும் இரட்சகரிடம் ஏறெடுக்கப்படும் விண்ணப்பமாகும்.
இயேசுகிறிஸ்து மரித்துக்கொண்டிருக்கும் வேளையில்கூட, அவரிடத்தில் ஜெபம்பண்ணுவது அவருடைய கனத்தையும் மகிமையையும் வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற ஜெபத்தை இந்தக் குற்றவாளி இதற்கு முன்பு ஏறெடுத்திருக்கமாட்டான். ஒருவேளை இவனுடைய வாழ்க்கையில் இந்த ஜெபமே இவன் ஏறெடுத்த ஒரே ஒரு ஜெபமாகக் கூடயிருக்கலாம். பாவியாகிய இந்த மனுஷன் தன்னுடைய ஜெபத்தை விசுவாசத்தோடும், பயபக்தியோடும், சந்தோஷத்தோடும் ஏறெடுகிறான். இயேசுகிறிஸ்து இவனுடைய ஜெபத்திற்குப் பதில் கொடுக்கிறார். தாம் மரித்துக்கொண்டிருந்தாலும் தம்மிடத்தில் ஜெபம்பண்ணுகிற இந்தப் பாவிக்கு, அவனுடைய பாவங்களை மன்னித்து அவனுக்கு இரட்சிப்பு கொடுக்கிறார். பாவியாகிய இந்த மனுஷன் இன்னும் சிறிதுநேரத்தில் மரித்துவிடுவான். மரிப்பதற்கு ஒரு சில விநாடிகளுக்கு முன்பாக இவன் தன் ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறான்.
தன்னுடைய பாவத்தை அறிக்கை செய்யும்போது, தன்னோடுகூட சிலுவையில் அறையப்பட்டிருக்கும் மற்றொரு குற்றவாளியிடம் ""நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்'' என்று அறிவிக்கிறான். தன்னுடைய பாவத்தை அங்கீகரித்து, தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை நியாயமானதுதான் என்பதை அறிக்கை செய்கிறான். தன் பாவத்தை இவன் அறிக்கை செய்யும்போதே, இவனுடைய இருதயம் தேவனுக்கு நேராக மனந்திரும்புகிறது.
இயேசுகிறிஸ்துவிடம், ""ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்'' என்று ஜெபம்பண்ணும்போது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மீது தான் வைத்திருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறான். இவன் இயேசுகிறிஸ்துவை தன்னுடைய ஆண்டவராக அங்கீகரிக்கிறான். அவருக்கு ஒரு ராஜ்யம் இருப்பதையும், சிலுவையில் மரித்தபின்பு இயேசுகிறிஸ்து அந்த ராஜ்யத்திற்கு போகப்போகிறார் என்பதையும் இவன் விசுவாசிக்கிறான். இயேசுகிறிஸ்துவுக்கு சித்தமானால், அவர் விரும்பினால், அந்த ராஜ்யத்தில் தன்னையும் சேர்த்துக்கொள்ள அவருக்கு அதிகாரமுண்டு என்றும் இவன் விசுவாசிக்கிறான்.
ஒருவன் மரித்துக்கொண்டிருக்கும்போது, இதுபோல தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து, இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பது ஒரு விசேஷித்த சம்பவமாகும். சிலுவையில் தான் மரித்தாலும், மரித்தபின்பு தனக்கு மற்றும் ஒரு வாழ்வு இருக்கிறது என்பதை இவன் விசுவாசித்து, அந்த ஜீவனைப்பெற்றுக்கொள்ள விரும்புகிறான். அந்த ஜீவன் நித்திய ஜீவன் என்றும், அதில் பிரவேசிக்கிறவர்கள் நித்திய சந்தோஷத்தை பெற்றுக்கொள்வார்கள் என்றும் இவன் நம்புகிறான்.
சிலுவையில் அறையப்பட்ட மற்றொரு குற்றவாளியோ, இயேசுகிறிஸ்துவிடம் ""நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்'' என்று கூறி அவரை இகழ்கிறான். சிலுவையிலிருந்து விடுபடுவதுதான் இரட்சிப்பும் என்று இந்தக் குற்றவாளி நினைக்கிறான். இந்த சிலுவை மரணமோ இவனுக்கு நியாயப்படி கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனையாகும். தான் நடப்பித்த தகாத செய்கைகளுக்காக இவன் இந்த ஆக்கினைக்குட்பட்டவனாக இருக்கிறான். பாவம் செய்துவிட்டு இந்த ஆக்கினையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியுமா என்று இயேசுகிறிஸ்துவை ஏளனம் பண்ணுகிறான். சிலுவை மரணம் இவனுக்கு நியாயமாக கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனையாகும். மரிக்கும் வேளையில்கூட இந்தக் குற்றவாளிக்கு தன் பாவத்திலிருந்து மனந்திரும்ப மனதில்லை.
மனந்திரும்பிய குற்றவாளி மிகுந்த மனத்தாழ்மையோடு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் ஜெபம்பண்ணுகிறான். ""அடியேனை நினைத்தருளும்'' என்பது இவனுடைய பணிவான விண்ணப்பம். தன்னை அவர் எப்படி நினைத்தருளலாம் என்பதையும் இவன் தன் ஜெபத்தில் கூறுகிறான். ""ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்'' என்பது இவனுடைய பணிவான ஜெபம். இயேசுகிறிஸ்து மனந்திரும்பிய இந்தக் குற்றவாளியை நினைத்தருளுகிறார். இவனுடைய ஜெபத்தில் பணிவும், பக்தியும், விசுவாசமும் இருக்கிறது. ""ஆண்டவரே, அடியேனை நினைத்தருளும்'' என்று இவன் ஜெபிக்கிறபோது, இவனுடைய ஆத்துமாவிலுள்ள சுவாசத்தையெல்லாம் ஊதுகிறான். இவனுக்கு வேறு ஆசை ஒன்றுமேயில்லை. தன்னுடைய விண்ணப்பத்தை இயேசுவின் கரத்தில் ஒப்புவித்துவிட்டு மரித்துப்போகிறான்.
நாமும் ஜெபிக்கும்போது, மிகுந்த மனத்தாழ்மையோடு, பயபக்தியோடு, ஆண்டவரே உம்முடைய ராஜ்யத்தில் அடியேனை நினைத்தருளும் என்று ஜெபிக்க வேண்டும். நம்முடைய விருப்பமும் ஜெபமும் இதுவாகத்தான் இருக்கவேண்டும். கர்த்தருடைய ராஜ்யத்தில் நமக்கு நித்திய ஜீவன் கிடைக்குமென்றால், அதைவிட மேன்மையான ஆசீர்வாதம் வேறு எதுவுமில்லை. நாம் இந்த பிரபஞ்சத்தில் ஜீவிக்கும்போதும் நம்முடைய ஆண்டவர் நம்மை நினைத்தருளவேண்டும். நம்முடைய சரீரம் மரிக்கும்போதும் நம்மை அவர் நினைத்தருளவேண்டும்.
பரதீசிலிருப்பாய்
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசி-ருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக் 23:43).
இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்துக்கொண்டிருக்கிறார். அந்த வேளையில்கூட தம்மிடத்தில் ஜெபம்பண்ணுகிற குற்றவாளிக்கு ஆறுதலாக பதிலளிக்கிறார். ""இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்'' என்று அவனிடம் கூறுகிறார். குற்றவாளியின் ஜெபத்திற்கு இயேசுகிறிஸ்து ""ஆமென்'' என்று கூறுகிறார். அவன் கேட்டுக்கொண்டதைவிட அவனுக்கு அதிகமாக தருகிறார். ""ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்'' என்று அவன் ஜெபம்பண்ணுகிறான். இயேசுகிறிஸ்துவோ ""இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்'' என்று பதில் கூறுகிறார்.
மனந்திரும்பிய குற்றவாளியிடம் இயேசுகிறிஸ்து இந்த வார்த்தைகளைக் கூறுகிறார். இயேசு இந்த வார்த்தைகளைப் பேசும்போது, அவர் கல்வாரி சிலுவையில் மிகுந்த வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் வேதனையைக் குறைப்பதற்கு அவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூற அங்கு யாருமேயில்லை. ஆனால் இயேசுகிறிஸ்துவோ மனந்திரும்பிய இந்த குற்றவாளிக்கு ஆறுதலான வார்த்தையைக் கூறுகிறார். ஒருவன் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிட்டு, இயேசுகிறிஸ்துவை தன்னுயை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அவனுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்படும். அத்துடன் அவன் மரிக்கும்போது தேவனுடைய பரதீசில் அவனுக்கு ஒரு இடமும் கிடைக்கும்.
""இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்'' என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, கல்வாரி சிலுவையில் மரித்துக்கொண்டிருக்கும்போது, மனந்திரும்பிய குற்றவாளியிடம் கூறுகிறார். பாவிகளை மன்னிப்பதற்காகவே இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கிறார். நமக்கு பாவமன்னிப்பை உண்டுபண்ணுவதற்காக இயேசுகிறிஸ்து தம்முடைய சுயஇரத்தத்தை கிரயமாக செலுத்துகிறார். நமக்கு நித்திய ஜீவனை கொடுப்பதற்காகவும் அவர் கல்வாரி சிலுவையில் மரிக்கிறார். தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டிருக்கும் விசுவாசிகள் எல்லோரும் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதற்காக, இயேசுகிறிஸ்து தம்முடைய மரணத்தின் மூலமாக பரலோக ராஜ்யத்தின் வாசலை நமக்காக திறக்கிறார்.
""நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்'' என்று இயேசுகிறிஸ்து கூறுவதன் மூலமாக, கல்வாரி சிலுவையில் அவர் மரித்த பின்பு, அவர் பரதீசுக்கு போகப்போகிறார் என்பது நமக்குத் தெளிவுபடுத்தப்படுகிறது. சிலுவைப்பாதையின் வழியாக இயேசுகிறிஸ்து கிரீடத்தைப் பெற்றுக்கொள்கிறார். சிலுவையில்லாமல் சிங்காசனமில்லை என்பதை இயேசுகிறிஸ்துவினுடைய ஜீவியத்தின் மூலமாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாடுகளை அனுபவிக்காமல் மேன்மையடைய முடியாது. நம்முடைய கிரீடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு சிலுவைப்பாதை மாத்திரமே நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர வேறு பாதை எதுவுமில்லை. நாமும் வேறு குறுக்குப் பாதைகளை தேடி ஏமாந்துவிடக்கூடாது.
மனந்திரும்பிய பாவிகள் மரிக்கும்போது, அவர்கள் இயேசுகிறிஸ்துவோடு பரதீசிலிருப்பார்கள் என்னும் சத்தியம் இதன் மூலமாக தெளிவுபடுத்தப்படுகிறது. பரலோகத்தில் நித்திய சந்தோஷம் இருக்கும். பரதீசு என்பதற்கு சந்தோஷமான தோட்டம் என்று பொருள். இது தேவனுடைய பரதீசு. ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியில் இருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியை கர்த்தர் புசிக்கக்கொடுப்பார் (வெளி 2:7). பரதீசில் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் மாத்திரம் இயேசுகிறிஸ்துவோடு கூடயிருப்பார்கள். விசுவாசிகளுக்கு பரலோகத்தில் கர்த்தருடைய சமுகத்தில் இருப்பதே மிகப்பெரிய சந்தோஷம். விசுவாசிகள் மரித்தவுடனேயே, அவர்கள் பரதீசுக்குப்போகும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
மனந்திரும்பிய இந்தக் குற்றவாளி இன்று மரிக்கப்போகிறான். இயேசுகிறிஸ்து அவனைப்பார்த்து ""இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்'' என்று கூறுகிறார். நம்முடைய சரீர மரணத்திற்கும், நாம் பரதீசுக்கு போவதற்கும் இடையில் காலஇடைவெளி எதுவுமில்லை. இவ்விரண்டும் உடனடியாக, தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களாகும்.
இயேசு கிறிஸ்து பூமியின் பாதாளத்திற்குச் சென்று சிறைப்பட்டவர்களை விடுவித்து வந்தபோது, இவனுடைய ஆத்துமாவையும் விடுவித்து வந்தார். சிலுவையில் தொங்கிய மற்றொரு குற்றவாளி நரகத்திற்குப் போனான்.
இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பரதீசு பூமியின் ஆழத்தில் இருக்கிறது. மூன்றாம் வானத்தில் இந்தப் பரதீசு இல்லை. (2கொரி 12:1#3) இயேசு கிறிஸ்து மரிப்பதற்கு முன்பாக மரித்துப்போன பரிசுத்தவான்களின் ஆத்துமாக்கள் பரதீசியில் இருந்தது. இயேசுகிறிஸ்து மரித்த பின்பு, பரதீசு என்னப்படும் பாதாளத்திற்குச் சென்று, அங்கு சாத்தானால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பரிசுத்தவான்களை விடுவித்து மீட்டுக் கொண்டு வந்தார். அவர்களில் சிலுவையில் மரித்த மனந்திரும்பிய குற்றவாளிகளில் ஒருவனும் இருந்திருப்பான். அவன் இயேசுவோடு வானத்திலுள்ள பரதீசிற்கு மற்ற பரிசுத்தவான்களோடு போயிருப்பான்.