இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்3. அதோ உன் மகன் அதோ உன் தாய்

 




இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்


3. அதோ உன் மகன் அதோ உன் தாய் 


இயேசுவின் தாயார் யோவா 19 : 25#27


யோவா 19:25. இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.


யோவா 19:26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.


யோவா 19:27. பின்பு அந்த சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.


இயேசுவின் சிலுவையினருகே


 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள் (யோவா 19:25). 


    இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்துக்கொண்டிருக்கும்போது, அவருடைய சிலுவையினருகே, அவருடைய தாயாரும் நின்று கொண்டிருக்கிறாள். மரியாளோடு அவருடைய  உறவினரும் சிநேகிதரும் நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த வசனத்தில் குறிப்பிட்டிருக்கிற பிரகாரம், முதலாவதாக இந்த ஸ்திரீகள் இயேசுவின் சிலுவையின் அருகே நின்று கொண்டிருக்கிறார்கள். அதன்பின்பு அவர்கள் இயேசுவின் சிலுவைக்கு சற்று தூரத்தில் நின்று கொண்டிருப்பதாக மத்தேயு, மாற்கு ஆகிய சுவிசேஷங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஒருவேளை இயேசுகிறிஸ்துவின் சிலுவைக்கருகே இருந்த இவர்களை போர்ச்சேவர்கள் அங்கிருந்து துரத்திவிட்டிருக்கலாம். 


இந்த ஸ்திரீகள் இயேசுகிறிஸ்துவின்மீது அன்பாகவும் பக்தியாகவும் இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் யோவானைத்தவிர, மற்ற எல்லோருமே அவரைவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள். ஆனால் இந்த ஸ்திரீகளோ இயேசுகிறிஸ்துவோடு கூடவே இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவினுடைய சத்துருக்களைப் பார்த்து இந்த ஸ்திரீகள் பயப்படவில்லை. இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்துக்கொண்டிருக்கும் கோரகாட்சியை காண்பதற்கு இவர்கள் தயங்கவில்லை.  இயேசுகிறிஸ்துவை இவர்களால் சிலுவை மரணத்திலிருந்து விடுவிக்க முடியாது. ஆனாலும் அவருக்கு பணிவிடை செய்வதற்கு ஆயத்தமாக, அவர்கள் அவருக்கு அருகிலேயே நின்றுகொண்டிருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்து ஒரு பாவமும் செய்யாதவர்.  இயேசுவின் தாயாராகிய மரியாளுக்கு இயேசுவைப்பற்றி நன்றாகத் தெரியும். ஆனாலும்  யூதர்கள் அவர்மீது கோபங்கொண்டு, அவரைச் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். இதைக் காணும்போது இந்த ஸ்திரீகளின் உள்ளம் உடைந்துபோயிருக்கும்.  இயேசுகிறிஸ்து குழந்தையாக இருந்தபோது, சிமியோன் மரியாளிடத்தில் ""உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்'' (லூக் 2:35) என்று தீர்க்கதரிசனமாகக் கூறினான். அந்த முன்னறிவிப்பு இப்போது மரியாளிடத்தில் நிறைவேறுகிறது. இயேசுகிறிஸ்து சிலுவையில்  மரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, மரியாளுடைய இருதயம் பட்டயத்தால் குத்தப்பட்டதுபோன்று ஆயிற்று. 


இயேசுகிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்துகிறபோது, அதைப் பார்த்துக்கொண்டிருக்கிற மரியாளுடைய இருதயத்திலும் இரத்தம் சிந்துகிறது. இயேசுகிறிஸ்து சிலுவையில் அனுபவிக்கும் பாடுகளையும் வேதனைகளையும் காணும்போது  மரியாளுடைய உள்ளம் உடைந்துபோயிற்று. தேவனுடைய கிருபையில்லையென்றால் மரியாளால் இந்தக் காட்சியை பார்க்க அவளுக்கு ஜீவன் இருக்காது. பார்த்தவுடனேயே மரியாள் மரித்துப்போயிருப்பாள். தேவன் தம்முடைய கிருபையினால் மரியாளைப் பலப்படுத்துகிறார்.  இயேசுகிறிஸ்து ƒசிலுவையில் அறையப்பட்டு தொங்கிக்கொண்டிருப்பதை, இருதய பாரத்தோடு மரியாள் பார்த்துக்கொண்டிருக்கிறாள். 


இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, மரியாளோ அல்லது அவளோடு கூடயிருக்கும் ஸ்திரீகளோ  அழுது புலம்பினார்களென்று வேதத்தில் எழுதப்படவில்லை. அவர்கள் இயேசுவின் சிலுவையினருகே அமைதியாக நின்றுகொண்டிருக்கிறார்கள். தேவன் இவர்களுடைய இருதயத்தைப் பலப்படுத்தியதினால், இவர்களால் இந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடிகிறது. 


கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கும் சோதனைகளும் பாடுகளும் வரலாம். இவை வரும்போதுதான் இதன் வேதனை எப்படியிருக்கும் என்பது நமக்குத் தெரியும். அப்போது ""என் கிருபை உனக்குப் போதும்'' என்று சொன்ன இயேசுவின் வார்த்தையை நாம் நினைத்துக்கொள்ள வேண்டும். 


கிலெயோப்பா என்பதன் மறுபெயர் அல்பேயு  என்பதாகும்.  


இயேசு கிறிஸ்து கல்வாரிச் சிலுவையில் மரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உலகப் பிரகாரமான தந்தையாகிய யோசேப்பு, மரித்துவிட்டார். மரியாளின் வயிற்றில் பிறந்த இயேசுவின் சகோதரர்கள் அவரை மேசியாவாக இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. தாம் மரிக்கும் அந்த வேளையில்கூட தமது தாயாகிய மரியாளுக்கு ஒரு குறைவும் வரக்கூடாது என்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார். ஆகையினால், தமது தாயைப் பராமரிக்கும் பொறுப்பை தமக்கு அன்பான சீஷனாகிய யோவானிடம் ஒப்புக்கொடுக்கிறார். ""தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்த சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.'' இயேசு கிறிஸ்து யாரையும் கைவிடவே மாட்டார். 


அதோ உன் மகன் 


அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்  (யோவா 19:26). 


உலக இரட்சகராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய தாயாரிடத்தில் அன்பும் தயவுமுள்ளவராகயிருக்கிறார். மரியாளை அன்போடு பராமரிக்கிறார். மரியாளின் புருஷனாகிய யோசேப்பு இதற்கு முன்பே இறந்திருக்கவேண்டுமென்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். குடும்பத்தில் மூத்த மகனாகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய தாயாராகிய மரியாளைப் பராமரித்து ஆதரிக்கிறார். இப்போது அவர் சிலுவையில் மரித்துக்கொண்டிருப்பதினால், மரியாளுக்கு இருக்கும் ஒரே ஆதரவும் மரித்துக்கொண்டிருக்கிறது. 


இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி வேதனைகளை அனுபவித்துக்கொண்டிருந்தாலும், தம்முடைய சிலுவைக்கு அருகாமையில் நின்று கொண்டிருக்கும் தம்முடைய தாயாராகிய மரியாளை அன்போடு நோக்கிப் பார்க்கிறார். இயேசுவினுடைய சிலுவைக்கருகில் அவருடைய சீஷரில் ஒருவனாகிய யோவானும் நின்று கொண்டிருக்கிறான். தமக்கு அன்பான சீஷனுக்கும், அன்பான தாயாருக்கும் இடையே  இயேசுகிறிஸ்து ஒரு புதிய உறவை ஸ்தாபிக்கிறார். இயேசு தம்முடைய தாயை நோக்கி ""ஸ்திரீயே அதோ உன் மகன்'' என்று கூறுகிறார். அந்த சீஷனை நோக்கி ""அதோ உன் தாய்'' என்று கூறுகிறார். அந்நேரம் முதல் அந்த சீஷன் மரியாளை தன்னிடமாய் ஏற்றுக்கொள்கிறான். தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். இயேசுகிறிஸ்துவுக்குத் தாயாகயிருந்தவள், இப்போது அந்த சீஷனுக்கும் தாயாகயிருக்கிறாள். 


இயேசுகிறிஸ்து தமக்குப் பிரியமான தாயாரிடத்தில் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்.  அவளைப் பராமரிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள். தம்முடைய தாயாரை பராமரிக்க முடியதாவாறு இயேசுகிறிஸ்துவும் சிலுவையில் மரித்துக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தம்முடைய தாயாரைப் பராமரிப்பதற்கு, அவரைத் தமக்குப் பிரியமான ஒரு சீஷனுடைய கையில் ஒப்புக்கொடுப்பதுதான் நலமாகயிருக்குமென்று இயேசுகிறிஸ்து தீர்மானம்பண்ணுகிறார். 


இயேசுகிறிஸ்து மரியாளை அழைக்கும்போது, ""தாயே'' என்று அழைக்காமல், அவளை ""ஸ்திரீயே'' என்று அழைக்கிறார். மரியாளின் ஆத்துமாவை ஏற்கெனவே ஒரு பட்டயம் உருவக் குத்தியிருக்கிறது. அவள் மிகுந்த வேதனையிலும்  துயரத்திலுமிருக்கிறாள். இப்படிப்பட்ட வருத்தமான சூழ்நிலையில் இயேசுகிறிஸ்து அவளை, ""தாயே'' என்று அழைத்து, அவளுடைய வேதனையை அதிகரிக்கச் செய்ய விரும்பவில்லை. தம்முடைய சீஷரில் ஒருவனாகிய யோவானை, மரியாள் தன்னுடைய மகனாக அங்கீகரிக்குமாறு அவளிடத்தில் கூறுகிறார். தேவன் யாரையும் கைவிடாமல் தம்முடைய தெய்வீக அன்பினால் பராமரிக்கிறார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாகயிருக்கிறது. 


சில சமயங்களில் தேவன் நமக்கு ஆதரவாகயிருக்கும் சில காரியங்களை நம்மைவிட்டு நீக்கிப்போகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில்கூட இயேசு நம்மைக் கைவிட்டுவிடுவதில்லை. ஒரு ஆதரவு நம்மைவிட்டு எடுத்துக்கொள்ளப்பட்டாலும், தேவன் தம்முடைய கிருபையினால் நமக்கு வேறொரு ஆதரவைத் தருவார்.           ஒருவேளை இந்த ஆதரவை நாம் எதிர்பார்த்திருக்கமாட்டோம். அந்த ஆதரவு எப்படியிருக்குமென்றும், அது எங்கிருந்து வருமென்றும் நமக்குத் தெரியாமலிருக்கலாம். தேவனுக்குத் தெரியாத காரியம் ஒன்றுமேயில்லை. 


நம்முடைய வாழ்க்கையில் நாம் எல்லாவற்றையும் இழந்துபோனாலும்,  தேவன்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை மாத்திரம் இழந்துவிடக்கூடாது. நம்முடைய விசுவாசமே நமக்குப் பெலன். நமக்கு வந்துகொண்டிருக்கும் ஆசீர்வாதத்தின் ஒரு ஊற்று நின்றுபோனாலும், தேவன் நமக்கு வேறொரு ஊற்றைத் திறந்துகொடுப்பதற்கு சித்தமுள்ளவராகயிருக்கிறார். 


இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது தம்முடைய தாயாரைப்பற்றிச் சிந்தித்து, அவரைப் பராமரிப்பதற்கு யோவானிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார். இயேசுகிறிஸ்துவின் இந்தச் செய்கை கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு  ஒரு முன்மாதிரியாக எழுதப்பட்டிருக்கிறது. நாமும் நம்முடைய வயதான பெற்றோரை பராமரிக்கவேண்டும். நம்மால் முடிந்தவரையிலும் அவர்களுடைய ஆறுதலுக்குத் தேவையான எல்லா காரியங்களையும் செய்யவேண்டும். பெற்றோர் மரிக்கும் தருவாயிலிருக்கும்போது, நம்மால் முடிந்தவரையிலும் அவர்களிடத்தில்  அன்புகூர்ந்து, அவர்களுக்கு உதவிபுரியவேண்டும். நம்முடைய பெற்றோரை நாம் நேசிக்கிறோம் என்னும் உணர்வு அவர்களுடைய உள்ளத்தில் வரவேண்டும். எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம், நம்முடைய பெற்றோருக்கு விசேஷித்த உதவிகளைச் செய்து, அவர்களைச் சந்தோஷப்படுத்தவேண்டும். 


அதோ உன் தாய் 


பின்பு அந்த சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்  (யோவா 19:27).


இயேசுகிறிஸ்து தமக்கு அன்பான சீஷனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார். தாம் அவனிடத்தில் எதைச் சொன்னாலும், தம்முடைய வார்த்தையை அவன் தட்டிக் கழிக்கமாட்டானென்று இயேசு அவனை நம்புகிறார். அந்த நம்பிக்கையில்தான் இயேசு அந்தச் சீஷனை நோக்கி ""அதோ உன் தாய்'' என்று கூறுகிறார். அந்தச் சீஷன் யோவானே . இயேசுகிறிஸ்துவின் தாயாரை, தன்னுடைய தாயாராகப் பெற்றுக்கொள்வது யோவானுக்குக் கிடைத்திருக்கும் பெரிய சிலாக்கியமாகும். அவனுடைய பக்தியையும் விசுவாசத்தையும் இயேசுகிறிஸ்து அங்கீகரித்து, அவனுக்கு தம்முடைய தாயாரை பராமரிக்கும் ஆசீர்வாதத்தைப் பொறுப்பாக ஒப்புக்கொடுக்கிறார். 


இயேசுகிறிஸ்து நமக்குச் சொல்லும் ஊழியத்தைச் செய்வது நமக்குக் கொடுக்கப்படும் சிலாக்கியம். இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்து  தம்முடைய ஊழியத்தை நம்மிடம் நம்பி ஒப்புக்கொடுத்திருக்கிறார். அவருடைய நம்பிக்கைக்கு நாம் பாத்திரவான்களாகயிருப்பது நமக்கு உண்டாயிருக்கும் மேன்மை. கிறிஸ்துவுக்காக இந்த உலகத்தில் அவருடைய ஊழியத்தைச் செய்வது நம்முடைய பாக்கியம். இயேசுகிறிஸ்து யோவானிடம் ""அதோ உன் தாய்'' என்று  சொல்லுகிறார். தம்முடைய தாயாராகிய மரியாளை யோவானிடத்தில் பொறுப்பாக ஒப்புக்கொடுக்கிறார். யோவான் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்ப்படிகிறான். அந்நேரமுதல் யோவான் மரியாளைத் தன்னிடத்தில் ஏற்றுக்கொள்கிறான். தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான்.


நாம் இயேசுகிறிஸ்துவை மெய்யாகவே நேசிப்போமென்றால், இயேசுகிறிஸ்து நம்மை நேசிக்கிறார் என்னும் உணர்வு நமக்குள்ளிருக்குமென்றால், நாமும் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தைச்   செய்வதற்கு ஆயத்தமாயிருப்போம், சந்தோஷப்படுவோம். அப்படிப்பட்ட வாய்ப்புக்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்போம். 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.